ஆண்டுக்கு 10 மில்லியன் எலெக்ட்ரிக் வாகனங்கள், பரோடா வங்கியில் 100 மில்லியன் டாலர் கடன் – உலக சாதனையில் ஓலா நிறுவனம்

ஆண்டுக்கு 10 மில்லியன் எலெக்ட்ரிக் வாகனங்கள், பரோடா வங்கியில் 100 மில்லியன் டாலர் கடன் – உலக சாதனையில் ஓலா நிறுவனம்  

10 Million EVs & USD 100 Million Long Term Debt – India’s Ridesharing MNC Ola Cabs

கடந்த 2010ம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தின் லூதியானா நகரத்தை சேர்ந்த 25 வயதான திரு. பவிசு அகர்வால் தனது நண்பர் திரு. அன்கிட் பங்களிப்புடன் ஓலா நிறுவனத்தை துவங்கினார். ஐ.ஐ.டி. மும்பையில் படித்த இவர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணிபுரிந்தார். பின்பு, தனது பயணக்காலத்தின்  போது ஏற்பட்ட மோசமான அனுபவத்தால் ஓலா நிறுவனத்தை துவக்க முடிந்தது.

பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு ஓலா நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும், ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளில் தனது கிளைகளை பரவியுள்ளது. 250 நாடுகளுக்கு மேலாகவும், 25,000 டிரைவர்களுக்கு அதிகமாக தனது சேவையை கொண்டிருக்கும் ஓலா, இன்று 6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பு கொண்ட இந்திய பன்னாட்டு நிறுவனமாக வலம் வருகிறது.

பல முதலீட்டாளர்களையும், வாடிக்கையாளர்களையும் ஈர்த்துள்ள இந்நிறுவனம் வாகன சவாரி, வாடகை வண்டி மற்றும் உணவு விநியோக சேவையில் தனது தொழிலை விரிவாக்கி உள்ளது. சமீபத்தில் ஓலா எலக்ட்ரிக் வாகன தயாரிப்பிலும் இந்நிறுவனம் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ஓலா மின்னணு இயக்கம்(OLA Electric Mobility) என்ற முயற்சியை எடுத்திருக்கும் இந்த நிறுவனம் கடந்த 2019ம் ஆண்டில் சுமார் 59 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடாக ஈர்த்தது. டாட்டா குழுமத்தின் தலைவர் திரு. ரத்தன் டாட்டா அவர்களும் ஓலா எலக்ட்ரிக் தொழிலில் முதலீடு செய்துள்ளதாக நிறுவனம் கூறியிருந்தது.

பின்பு ஜப்பானின் முதலீட்டு நிறுவனமான சாப்ட் பேங்கும்(SoftBank) 250 மில்லியன் டாலர்களை ஓலா நிறுவனத்தில் முதலீடு செய்திருந்தது. ஆண்டுக்கு ஒரு கோடி(10 மில்லியன்) மின்னணு வாகனங்களை தயாரிக்க உள்ளதாக ஓலா நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் முதற்கட்டமாக நடப்பு 2021ம் ஆண்டுக்குள் 10 லட்சம் மின்னணு வாகனங்களை தயாரித்து சந்தைக்கு கொண்டு வர நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

ஓலா எலக்ட்ரிக் முயற்சியின் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஓசூர் பகுதியில் 500 ஏக்கர் பரப்பளவில் தொழிற்சாலை ஒன்றை அமைத்துள்ளது. இங்கு இரு சக்கர வாகனங்களை பெருமளவில் உற்பத்தி செய்ய நிறுவனம் முனைந்துள்ளது. இதன் காரணமாக ஆண்டுக்கு 10 மில்லியன் எலக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தி இலக்காக நிர்ணயித்து உலக சாதனை பட்டியலை ஏற்படுத்தியுள்ளது ஓலா நிறுவனம்.

உலகின் மிகப்பெரிய உற்பத்தி ஆலையாக இது இருக்கும் எனவும், உற்பத்திக்கு தேவையான முதலீடாக, பேங்க் ஆப் பரோடா வங்கியில் நீண்டகால கடனாக சுமார் 100 மில்லியன் டாலர்கள் பெறுவதற்கான ஒப்பந்தம் நிறைவடைந்துள்ளது. இது இந்திய மதிப்பில் சுமார் 700 கோடி ரூபாய் என சொல்லப்படுகிறது.

சில நாட்களுக்கு முன்பு, ஓலா எலக்ட்ரிக் இரு சக்கர வாகனத்தை வாங்குவதற்கான இணையதளமும் வெளியிடப்பட்டது. ரூ.499 மட்டும் செலுத்தி வாகன முன்பதிவை செய்து கொள்ளலாம் என நிறுவனம் கூறியிருந்த நிலையில், ஒரே நாளில் மட்டும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகள் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் மதிப்பு 85 ஆயிரம் ரூபாயிலிருந்து 1.10 லட்சம் ரூபாய் வரை இருக்கலாம்(on road price) என சொல்லப்படுகிறது. எலக்ட்ரிக் வாகனத்துக்கான சார்ஜிங் நிலையங்களை ஏற்படுத்துவதிலும் ஓலா தீவிரம் காட்டி வருகிறது. இதன் ஒரு பகுதியாக 400க்கும் மேற்பட்ட நகரங்களில் சார்ஜிங் நிலையங்களை ஏற்படுத்தும் திட்டமும் உள்ளது.

எனினும் மின்சாரத்திற்கான கட்டணம் எவ்வாறு நிர்ணயிக்கப்படும் என்பதனை பற்றி சொல்லப்படவில்லை. ஓலா நிறுவனத்தில் 60க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் இருக்கும் நிலையில், இந்நிறுவனம் இதுவரை லாபத்தை ஈட்டவில்லை. 2019ம் ஆண்டின் முடிவில் இந்நிறுவனம் ரூ.2,600 கோடியை நட்டமாக கொண்டிருக்கிறது. கடந்தாண்டு கொரோனா ஊரடங்கின் காரணமாக 1000க்கும் மேற்பட்ட பணியாளர்களை பணிநீக்கம் செய்தது ஓலா நிறுவனம். ஓலா நிறுவனத்திடம் வாடகைக்கு வாகனம் ஓட்டுபவர்களும் சொல்லப்பட்ட காலத்தில் வருவாய் இன்றி சிரமப்பட்டனர். நிறுவனத்தின் வருவாய் அளவு அதிகரித்து வந்தாலும், பொதுவாக இது போன்ற ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் லாபம் ஈட்டுவதற்கு வெகு காலமாகிறது. சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்க முதலீட்டு நிறுவனமொன்று ஓலா நிறுவனத்தின் மதிப்பை 50 சதவீதம் வரை குறைத்து, நிறுவனம் 3 பில்லியன் டாலர் மதிப்பை தான் பெறும் என சொல்லியிருந்தது.

சமீபத்தில் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட ஜொமோட்டோ(Zomato) நிறுவனமும் இதுவரை லாபமீட்ட முடியவில்லை. இது பேடிஎம்(Paytm) நிறுவனத்திற்கும் பொருந்தும். புதுமைகளை கொண்டிருக்கும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் நீண்டகால வளர்ச்சி அடிப்படையில் பல முதலீடுகளை ஈர்க்கும். ஆனால் அவை லாப நோக்கத்திற்கு வர பல வருடங்கள் எடுத்து கொள்ளும். பங்குச்சந்தையில் ஈடுபடும் முதலீட்டாளர்களை பொறுத்தவரை லாபமீட்டும்  மற்றும் கடனில்லா நிறுவனங்கள் தான் நீண்டகாலத்தில் செல்வவளத்தை அளிக்கும் என்பது கவனிக்கத்தக்கது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

இன்போசிஸ் முதலாம் காலாண்டு நிகர லாபம் – ரூ.5,195 கோடி

இன்போசிஸ் முதலாம் காலாண்டு நிகர லாபம் – ரூ.5,195 கோடி

Infosys reported a Net Profit of Rs.5,195 Crore in Q1FY22

நாற்பது வருடங்களுக்கு முன்பு துவங்கப்பட்ட இன்போசிஸ், இன்று பில்லியன் டாலர் வருவாயை கொடுக்கும் இந்திய பன்னாட்டு(MNC) தொழில்நுட்ப நிறுவனமாக வலம் வருகிறது. அவுட்சோர்சிங், கன்சல்டிங் மற்றும் நிர்வகிக்கப்பட்ட ஐ.டி. சேவைகளை அளித்து வரும் இந்நிறுவனம், உலகம் முழுவதும் சுமார் 123 மையங்களின் மூலம் தனது கிளைகளை பரவலாக்கி உள்ளது.

இன்போசிஸ் நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு 6.72 லட்சம் கோடி ரூபாய். நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக திரு. சலீல் பரேக் உள்ளார். 2020-21ம் நிதியாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.1,00,472 கோடியாகவும், நிகர லாபம் 19,351 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது.

சொல்லப்பட்ட வருடத்தின் முடிவில், நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு மட்டும் ரூ.74,227 கோடி. நடப்பு நிதியாண்டின் முதலாம் காலாண்டுக்கான முடிவுகளை நேற்று(14-07-2021) இன்போசிஸ் வெளியிட்டது. ஏப்ரல்-ஜூன் 2021 காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.27,896 கோடியாகவும், செலவினம் 20,464 கோடி ரூபாயாகவும் உள்ளது. இதர வருமானமாக 622 கோடி ரூபாய் சொல்லப்பட்டுள்ளது.

முதலாம் காலாண்டில்(Quarterly results) நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.5,195 கோடி. அதாவது பங்கு ஒன்றுக்கு நிறுவனம் 12 ரூபாயை லாபமாக ஈட்டியுள்ளது. இன்போசிஸ் நிறுவனத்தில் 426 கோடி பங்குகள்(அனைத்து பங்குதாரர்களையும் சேர்த்து) இருப்பது குறிப்பிடத்தக்கது.

நிறுவனத்தின் கடன்-பங்கு விகிதம்(Debt to Equity) 0.07 ஆக உள்ளது. நிறுவனர்கள் சார்பில் சுமார் 13 சதவீத பங்குகள் உள்ளன. பங்கு அடமானம் எதுவும் நிறுவனர்கள் சார்பில் வைக்கப்படவில்லை. அன்னிய முதலீட்டாளர்களிடம் 33 சதவீத பங்குகளும், உள்ளூர் முதலீட்டு மற்றும் நிதி நிறுவனங்களிடம் 22 சதவீத பங்குகளும் உள்ளன.

நாட்டின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி.(LIC India) யிடம் 5.50 சதவீத இன்போசிஸ் பங்குகள் இருப்பது கவனிக்கத்தக்கது. இது போல தேசிய பென்சன் திட்ட(NPS Trust) அமைப்பிடம் சுமார் 1.2 சதவீத பங்குகளும் உள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

டி.சி.எஸ். முதலாம் காலாண்டு நிகர லாபம் – ரூ.9008 கோடி

டி.சி.எஸ். முதலாம் காலாண்டு நிகர லாபம் – ரூ.9008 கோடி 

TCS Q1FY22 quarterly results – Net Profit of Rs.9008 Crore

நாட்டின் மிகப்பெரிய ஐ.டி. நிறுவனமான டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ்(TCS) தகவல் தொழில்நுட்ப துறையில் 50 வருடங்களுக்கும் மேலான தொழில் அனுபவத்தை கொண்டிருக்கிறது. ரூ.12.05 லட்சம் கோடி சந்தை மதிப்பை கொண்டிருக்கும் இந்நிறுவனத்தின் தலைவராக நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த திரு.நடராஜன் சந்திரசேகரன் பொறுப்பு வகிக்கிறார்.

டி.சி.எஸ். நிறுவனம் டாட்டா குழுமத்தின் ஒரு அங்கம் என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் 46 நாடுகளில் ஐ.டி. சேவையை கொண்டிருக்கும் டி.சி.எஸ். நிறுவனத்தில் 37 சதவீதம் பெண்கள் வேலை பார்த்து வருகின்றனர். நாட்டில் இந்திய ரயில்வே, இந்திய ராணுவம் மற்றும் அஞ்சலகத்துறைக்கு அடுத்தாற்போல், அதிக பணியாளர்களை கொண்டிருக்கும் நிறுவனம் டி.சி.எஸ். தான்.

நிறுவனத்தின் முக்கிய வாடிக்கையாளர்களாக அமேசான், கூகுள், அடோப், இன்டெல், ஐ.பி.எம்., போஸ்ச்(Bosch), ஆப்பிள், அசுர்(Azure), சிமாண்டெக் ஆகிய நிறுவனங்கள் உள்ளன. 100 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் செலுத்தும் வாடிக்கையாளர்களாக சுமார் 50 நிறுவனங்கள் உள்ளன.

2020ம் ஆண்டில் நிறுவனத்தின் வருவாய் 23 பில்லியன் அமெரிக்க டாலர்களாகவும்(1.61 லட்சம் கோடி ரூபாய்), நிகர லாபம் 4.5 பில்லியன் டாலர்களாகவும் இருந்துள்ளது. நிறுவனத்தின் 2021-22ம் நிதியாண்டுக்கான முதலாம் காலாண்டு முடிவுகள் நேற்று(08-07-2021) வெளியிடப்பட்டது.

ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதலாம் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.45,411 கோடியாகவும், செலவினம் 32,748 கோடி ரூபாயாகவும் சொல்லப்பட்டுள்ளது. இதர வருமானமாக ரூ.721 கோடி மற்றும் சொல்லப்பட்ட காலாண்டில் நிகர லாபம் ரூ.9008 கோடியாக உள்ளது.

நிறுவனத்தின் கடன்-பங்கு விகிதம் 0.09 ஆகவும், வட்டி பாதுகாப்பு விகிதம் 75 மடங்குகளாகவும் உள்ளது. நிறுவனர்கள் சார்பில் 72 சதவீத பங்குகள் கைவசம் உள்ளது. நிறுவனர்களின் பங்கு அடமானம் 0.50 சதவீதமாக உள்ளது கவனிக்கத்தக்கது. மார்ச் 2021 முடிவில், இருப்புநிலை கையிருப்பு(Balance Sheet Reserves) ரூ.86,063 கோடியாக சொல்லப்பட்டுள்ளது.

டி.சி.எஸ். பங்குகளில் அன்னிய முதலீட்டாளர்களிடம் 15 சதவீத பங்குகளும், எல்.ஐ.சி. நிறுவனத்திடம் 4 சதவீத பங்குகளும் உள்ளது. முதலாம் காலாண்டு முடிவில் பங்கு ஒன்றுக்கு ஏழு ரூபாயை ஈவுத்தொகையாக(Dividend) அறிவித்துள்ளது நிறுவனம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் – ஜூலை – செப்டம்பர் 2021

சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் – ஜூலை – செப்டம்பர் 2021

Small savings scheme interest rate for the Period – July – September 2021

2021-22ம் நிதியாண்டின் இரண்டாம் காலாண்டுக்கான(ஜூலை முதல் செப்டம்பர் வரை) சிறு சேமிப்பு வட்டி விகிதங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் காலாண்டுக்கு ஒரு முறை அறிவிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

கடந்த முறை(ஏப்ரல் – ஜூன்) சொல்லப்பட்டிருந்த வட்டி விகிதமே இம்முறையும் தொடரும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சேமிப்பு கணக்கு, வைப்பு கால நிதி, மாத வருவாய் திட்டம், மாதாந்திர சேமிப்பு திட்டம், வரி சேமிப்பு சார்ந்த தேசிய சேமிப்பு பத்திரம்(NSC), பொது வருங்கால வைப்பு நிதி(PPF) ஆகியவை சிறு சேமிப்பு திட்டங்களின் கீழ் வருபவை.

மேலும் கிசான் விகாஸ் பத்திரம், மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம், பெண் குழந்தைகளுக்கான சுகன்யா சம்ரிதி திட்டம் ஆகியவையும் சிறு சேமிப்பு திட்டங்களில் வருபவை தான்.

அஞ்சலகங்கள் மற்றும் வங்கிகளில் காணப்படும் சேமிப்பு திட்டங்கள் பெரும்பாலும் சிறு சேமிப்பு திட்டங்களின் கீழ் தான் வருகிறது. கடந்த சில வருடங்களாக சிறு சேமிப்புக்கான வட்டி விகிதம் குறைந்து வருவது கவனிக்கத்தக்கது.

Small savings interest rate july 2021

பொது வருங்கால வைப்பு நிதிக்கு 7.10 சதவீதமும், செல்வ மகள்(Sukanya Samriddhi) திட்டத்திற்கு 7.60 சதவீதமும் மற்றும் கிசான் விகாஸ் பத்திரத்திற்கு 6.90 சதவீதமும் வட்டி சொல்லப்பட்டுள்ளது. மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டத்திற்கு 7.40 சதவீத வட்டி விகிதம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு வருட, இரண்டு வருட மற்றும் மூன்று வருட வைப்பு கால நிதிக்கு(Term Deposit) 5.50 சதவீத வட்டி விகிதமாகும். அதே வேளையில் ஐந்து வருட கால நிதிக்கு 6.70 சதவீதம் சொல்லப்பட்டுள்ளது. ஐந்து வருட மாத வருவாய் திட்டத்திற்கு(Monthly Income Scheme) 6.60 சதவீதமும், தேசிய சேமிப்பு பத்திரத்திற்கு 6.80 சதவீதமும் மற்றும் ஐந்து வருட தொடர் வைப்பு திட்டத்திற்கு(Recurring Deposit) 5.80 சதவீதமாக உள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

நால்கோ நான்காம் காலாண்டு நிகர லாபம் – ரூ.936 கோடி

நால்கோ நான்காம் காலாண்டு நிகர லாபம் – ரூ.936 கோடி 

National Aluminium Company(NALCO) reported a net profit of Rs.936 Cr – Q4FY21

அரசு பொதுத்துறை நிறுவனமான தேசிய அலுமினிய நிறுவனம் – நால்கோ, அலுமினிய உற்பத்தி சார்ந்த தொழிலை செய்து வருகிறது. பாக்சைட் சுரங்கம், அலுமினிய சுத்திகரிப்பு, அலுமினியத்தை உருக்குதல் மற்றும் வார்ப்பு, மின் உற்பத்தி, ரயில் மற்றும் துறைமுக வேலைகளை தனது தொழிலாக கொண்டுள்ளது.

நாட்டின் பில்லியன் டாலர் வருவாயை ஈட்டும் நிறுவனமாகவும், அரசின், ‘நவரத்னா’ மதிப்பையும் கொண்ட நிறுவனமாகவும் நால்கோ திகழ்கிறது. இந்நிறுவனம் தனது 2020-21ம் நிதியாண்டுக்கான நான்காம் காலாண்டு முடிவுகளை(Quarterly results) வெளியிட்டுள்ளது.

மார்ச் மாதத்தில் முடிவடைந்த நான்காம் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.2,821 கோடியாகவும், செலவினம் 1877 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. இயக்க லாபம் ரூ.944 கோடியாக சொல்லப்பட்டுள்ளது. இதர வருமானமாக 53 கோடி ரூபாயும், சொல்லப்பட்ட காலாண்டின் நிகர லாபமாக 936 கோடி ரூபாய் உள்ளது. இது கடந்த பத்து காலாண்டில் காண முடியாத வளர்ச்சியாக இருந்துள்ளது.

இதற்கு முந்தைய ஆண்டின்(2019-20) மார்ச் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.1,936 கோடியாகவும், நிகர லாபம் 101 கோடி ரூபாயாக இருந்துள்ளது கவனிக்கத்தக்கது. மார்ச் 2021 முடிவின் படி, நிறுவனத்தின் இருப்புநிலை(Reserves) கையிருப்பு ரூ. 9,761 கோடி.

நால்கோவின் சந்தை மதிப்பு ரூ.14,100 கோடி மற்றும் புத்தக மதிப்பு பங்கு ஒன்றுக்கு 58 ரூபாயாக உள்ளது. கடனில்லா நிறுவனமாக வலம் வரும் நால்கோ, 51 சதவீத நிறுவனர் பங்களிப்பை கொண்டுள்ளது. இதுவரை பங்கு அடமானம் எதுவும் நிறுவனத்தின் சார்பாக வைக்கப்படவில்லை.

2020-21ம் நிதியாண்டில் நிறுவனம் ஒட்டுமொத்தமாக 8,956 கோடி ரூபாயை வருவாயாக கொண்டுள்ளது. சொல்லப்பட்ட வருடத்தில் நிகர லாபம் ரூ.1,299 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி கடந்த ஐந்து வருடங்களில் ஆறு சதவீதமாகவும், லாப வளர்ச்சி 12 சதவீதமாகவும் இருக்கிறது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

மியூச்சுவல் பண்டு முதலீட்டை தொடர இனி பான் – ஆதார் இணைப்பு அவசியம்

மியூச்சுவல் பண்டு முதலீட்டை தொடர இனி பான் – ஆதார் இணைப்பு அவசியம் 

PAN – Aadhaar linking is mandatory for Mutual Fund Transactions – From 1st July

மியூச்சுவல் பண்டு என சொல்லப்படும் பரஸ்பர நிதி திட்டங்கள், கடந்த சில வருடங்களாக பிரபலமடைந்து வருகிறது. மே மாத முடிவின் படி, சுமார் 33 லட்சம் கோடி ரூபாய் சொத்துக்களை நிர்வகித்து வரும் இந்த துறை, முதலீட்டுக்கான பல்வேறு திட்டங்களை வழங்கி வருகிறது.

செபியின்(Securities and Exchange Board of India) கீழ் வரும் மியூச்சுவல் பண்டு துறை, ஆம்பி(AMFI) துணை மூலம் திட்டங்களை வெளியிட்டு வருகிறது. இந்தியாவில் 40க்கும் மேற்பட்ட பரஸ்பர நிதி நிறுவனங்கள் இருந்தாலும், மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்ய கே.ஒய்.சி.(KYC) நடைமுறையை பதிவு செய்வது அவசியம்.

பரஸ்பர நிதிகளில் தங்கம், அரசு மற்றும் தனியார் கடன் பத்திரங்கள், ரியல் எஸ்டேட், வெளிநாட்டு நிறுவன முதலீடு மற்றும் பங்குச்சந்தை என பல கலவை திட்டங்கள் உள்ளன. குறுகிய காலம் முதல் நீண்டகாலம் வரை, முதலீடு செய்யும் ஒருவருக்கு தேவையான தனித்துவமான திட்டங்களை வழங்கி வருகிறது. பங்குச்சந்தையில் நேரடியாக முதலீடு செய்ய தயக்கம் உள்ளவர்கள், மியூச்சுவல் பண்டுகளில் கிடைக்கப்பெறும் திட்டங்களை எளிமையாக பயன்படுத்தி வருகின்றனர்.

சமீபத்தில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், மியூச்சுவல் பண்டில் ஏற்கனவே முதலீடு செய்து வருபவர்கள் மற்றும் புதிதாக கணக்கு துவங்க உள்ளவர்கள், தங்களது பான் – ஆதார்(PAN – Aadhaar) எண்ணை இணைப்பது அவசியம் என சொல்லப்பட்டுள்ளது. இந்த நடைமுறை வரும் ஜூலை ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. (பான் – ஆதார் இணைப்புக்கான காலக்கெடு செப்டம்பர் 30ம் தேதியாக நீட்டிக்கப்பட்டுள்ளது)

சொல்லப்பட்ட காலத்திற்குள் இணைப்பை ஏற்படுத்தாதவர்கள், தாங்கள் ஏற்கனவே முதலீடு செய்த பணத்தை வெளியே எடுக்கவும், புதிதாக முதலீட்டை தொடரவும் சிக்கல் ஏற்படலாம். பொதுவான முறையில், பான் – ஆதார் இணைப்புக்கான காலக்கெடுவும் வரும் ஜூன், 30ம் தேதியுடன் முடிவடைகிறது. (பான் – ஆதார் இணைப்புக்கான காலக்கெடு செப்டம்பர் 30ம் தேதியாக நீட்டிக்கப்பட்டுள்ளது)

இணைப்புக்கான காலக்கெடுவுக்குள் பதிவு செய்யாதவர்களின் பான் எண் செல்லாதவையாக சொல்லப்படும் எனவும், வருமான வரி தாக்கல் செய்யும் நிலையில் அபராதம் விதிக்கப்படும் எனவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 1ம் தேதி முதல் எந்தவொரு முதலீட்டை உள்நாட்டில் தொடர, பான் – ஆதார் எண் இணைப்பு அவசியமாகிறது. (பான் – ஆதார் இணைப்புக்கான காலக்கெடு செப்டம்பர் 30ம் தேதியாக நீட்டிக்கப்பட்டுள்ளது)

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

நாட்டில் காப்பீட்டுக்கான தேவை அதிகரித்து வரும் நிலை

நாட்டில் காப்பீட்டுக்கான தேவை அதிகரித்து வரும் நிலை

Increasing Demand for Insurance in the Current Scenario – Covid-19 impact

சேமிப்பும், முதலீடும் ஒரு குடும்பத்திற்கு எந்தளவு முக்கியமோ, அதே போன்று நிதி பாதுகாப்பும்(Financial Protection) அவசியம். நிதி பாதுகாப்பு எனும் போது டேர்ம் இன்சூரன்ஸ், மருத்துவ காப்பீடு, விபத்து காப்பீடு மற்றும் அவசர கால நிதி ஆகியவற்றை சொல்லலாம். நமது சேமிப்பை எதிர்பாராத வேலையிழப்பு, தொழில் மந்தம் மற்றும் விபத்து காலங்களில் விரயம் செய்ய விடாமல் தடுக்க இந்த நிதி பாதுகாப்பு உதவும்.

டேர்ம் காப்பீடு எனில் குடும்பத்தில் வருவாய் ஈட்டும் நபருக்கு தான்(Breadwinner) எடுக்க வேண்டும். அதுவும் அவரது வருவாயை சார்ந்து மற்ற குடும்ப உறுப்பினர்கள் இருக்கும் போது, ஏதோவொரு சூழ்நிலையில் வருவாய் ஈட்டும் நபர் மறைந்து விட்டால் குடும்ப உறுப்பினர்களின் நிதி நலனை பாதுகாக்க டேர்ம் காப்பீடு பலனளிக்கும். பொதுவாக டேர்ம் காப்பீடு(Term Insurance) ஒருவரது ஆண்டு வருமானத்தை போல குறைந்தபட்சம் 10-15 மடங்கில் இருப்பது நல்லது.

மருத்துவ காப்பீடு எனும் போது நடைமுறையில் காணப்படும் கொரோனா பெருந்தொற்றினால் ஏற்படும் மருத்துவ செலவுகளை நாம் கேட்டிருப்போம் அல்லது கண்டிருப்போம், மருத்துவ காப்பீடு எவ்வளவு அவசியமென்று. ஆனால், உண்மையில் கொரோனா பெருந்தொற்றை காட்டிலும் மற்ற நாள்பட்ட நோய்களுக்கான மருத்துவ செலவுகள் தான் அதிகம். கொரோனா பெருந்தொற்று மூலம் உடல்நலம் பேணுவது, இயற்கையை பாதுகாப்பது மற்றும் மருத்துவ காப்பீட்டின்(Health Insurance) தேவையை நாம் உணர்ந்துள்ளோம்.

நகரமயமாக்கல் துவங்கிய பின்பு, வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வந்துள்ளது. இன்று கிராமப்புறங்களிலும் நாம் குறிப்பிடத்தக்க வாகன போக்குவரத்தை காணலாம். குறிப்பிட்ட நேரத்தில் ஒரு இடத்திற்கு செல்லலாம் என்றாலும், இன்று வாகன விபத்துகளை தவிர்ப்பது எளிதான காரியமல்ல. விபத்தினால் ஏற்படும் மரணங்கள் நம்மை போன்ற மக்கள் தொகை அதிகம் கொண்ட நாட்டில் சற்று அதிகமே. எனவே, விபத்துகளினால் ஏற்படும் இறப்புகள் மூலம் பல குடும்பங்கள் நிதி சிக்கலில் மாட்டி கொள்கின்றன. இதனை தவிர்க்க விபத்து காப்பீடும்(Standalone Accidental Policy) அவசியம். விபத்து காப்பீட்டை பொறுத்தவரை ரைடர் பாலிசியாக(Rider) எடுத்து கொள்ளாமல், தனிநபர் விபத்து காப்பீடு திட்டமாக எடுத்து கொள்வது சிறந்தது.

வேலையிழப்பு, வேலையிலிருந்து தொழில் முனைவுக்கு செல்லுதல், நிதி நெருக்கடி காலங்கள் என அவசர காலத்திற்கு தேவையான நிதியை உருவாக்கி வைத்து கொள்வது இன்று அவசியமாக உள்ளது. உங்களது மாத வருமானத்தை போல குறைந்தபட்சம் ஆறு முதல் 12 மாதங்களுக்கான தொகையை இருப்பாக வைத்து கொள்வது நல்லது. இந்த தொகையை ஒரு குறிப்பிட்ட வங்கி சேமிப்பு கணக்கு அல்லது பரஸ்பர நிதிகளின் லிக்விட் பண்டு(Liquid Funds) திட்டங்களில் சேமித்து வரலாம். உண்மையில் அவசர கால தேவை மற்றும் நிதி நெருக்கடி என்றால் மட்டுமே இந்த தொகையை எடுக்க வேண்டும். திருவிழா, திருமணம், வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்க அல்லது சுற்றுலா என செலவுகளுக்கு அவசர கால நிதியை பயன்படுத்த கூடாது.

கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை, காப்பீட்டின் அவசியத்தை அதிகமாகவே உணர்த்தியுள்ளது எனலாம். கடந்த சில மாதங்களாக ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவ காப்பீட்டு திட்டங்களை பெறுவோர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக காப்பீட்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ளது. குறிப்பாக 35 வயதிற்கு குறைவாக உள்ளவர்கள் டேர்ம் காப்பீடு மற்றும் மருத்துவ காப்பீட்டு திட்டங்களை வாங்குவதில் ஆர்வமாக இருந்துள்ளனர்.

முதலாம் அலைக்கு பின்னர் சில காப்பீட்டு திட்டங்களின் பிரீமிய தொகை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கப்படலாம். டேர்ம் காப்பீட்டு திட்டங்களை பெறுவதற்கு கொரோனா தடுப்பூசி(Vaccine) போட்டிருக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டையும் சில காப்பீட்டு நிறுவனங்கள் விதித்துள்ளது.

நடப்பாண்டில் காப்பீட்டு திட்டங்களை பெற்றுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் அதே வேளையில் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் உரிமை கோரல் தீர்வும்(Claim Settlement) அதிகரித்து வருகிறது. இறப்பு விகிதத்தில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக இன்சூரன்ஸ் நிறுவனங்களின் லாபமும் குறைந்துள்ளது.

சமீபத்தில் கோடக் காப்பீட்டு நிறுவனம் வெளியிட்ட ஒரு அறிக்கையில், இரண்டாம் அலை காரணமாக ஏற்பட்ட அதிகப்படியான இறப்பு விகிதத்தால்  ஜூன் 2021 காலாண்டில் நிறுவனம் சுமார் 275 கோடி ரூபாய் வரை நஷ்டமாக கொண்டிருக்கும் என கூறியுள்ளது.

இந்தியாவில் மக்களிடையே காணப்படும் ஆயுள் காப்பீட்டின் பங்களிப்பு 2.82 சதவீதம் மட்டுமே. மருத்துவம் மற்றும் சுகாதாரத்திலும் அரசின் பங்களிப்பு, நாட்டின் பொருளாதாரத்தில் இரண்டு சதவீதத்திற்கு குறைவாக தான் உள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

இந்த வார நிகழ்ச்சி நிரல் – கேள்விகளும், பதில்களும்

இந்த வார நிகழ்ச்சி நிரல் – கேள்விகளும், பதில்களும்

The iDEA of asking questions – Q&A Meet

வர்த்தக மதுரை தளத்தின் சார்பாக முதன்முறையாக நேரடி கேள்விகளும், பதில்களுக்குமான நிகழ்வு நாளை(19-06-2021) மாலை நடைபெற உள்ளது. நமது சமூக வலைதள பக்கங்களை கடந்த சில வருடங்களாக பின்பற்றி வரும் அனைத்து சந்தாதாரர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் இது ஒரு அரிய வாய்ப்பாகும்.

சுமார் 6000க்கும் மேற்பட்ட சந்தாதாரர்கள் நமது தளத்தை பின் தொடர்ந்து வருவது கவனிக்கத்தக்கது. இதுவரை வர்த்தக மதுரை இணையதள பக்கத்தில் தனிநபர் நிதி சார்ந்த பல கட்டுரைகளை (650க்கும் மேற்பட்ட பதிவுகள்) நீங்கள் படித்திருப்பீர்கள். தற்போது இணைய வழி நேரடி தொடர்பில்(Webinar) உங்களுக்கான நிதி சார்ந்த கேள்விகள் மற்றும் சந்தேகங்களை நீங்கள் கேட்கலாம்.

காப்பீடு(டேர்ம் இன்சூரன்ஸ், மருத்துவ காப்பீடு), பரஸ்பர நிதி முதலீடுகள், பங்குச்சந்தை முதலீடு, தனிநபர் வருமான வரி, நீண்டகால செல்வமீட்டுதல், பணக்காரர்களின் பண ரகசியங்கள், போன்சி(Ponzi) மோசடிகளை தவிர்த்தல், சேமிப்புக்கும், முதலீட்டுக்குமான வேறுபாடு என நிதி சார்ந்த பல கேள்விகளை நீங்கள் எழுப்பலாம். பதில்களுடன் நாங்கள் உங்களுக்காக காத்திருக்கிறோம்.

மேலும் பிளாக் செயின் தொழில்நுட்பம்(Blockchain Technology) எவ்வாறு இயங்குகிறது மற்றும் அதன் அறிமுக தகவலை பற்றி பேச உள்ளோம். இங்கே, மெய்நிகர் நாணயம் சார்ந்த முதலீட்டை பற்றி நாம் பேசவில்லை என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.

நிகழ்ச்சி நிரல் தேதி மற்றும் நேரம்:  19-06-2021, சனிக்கிழமை மாலை 05:30 மணி முதல் 06:30 மணி வரை.

இணைய வழியிலான இந்த நிகழ்வில் கலந்து கொள்ள கட்டணம்: ரூ. 100 மட்டும்.

Register for the Q&A Meet

குறிப்பு: வர்த்தக மதுரை வாடிக்கையாளர்கள், இந்த நிகழ்ச்சிக்கான கட்டணத்தை செலுத்த தேவையில்லை.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

) நீங்கள் படித்திருப்பீர்கள். தற்போது இணைய வழி நேரடி தொடர்பில்(Webinar) உங்களுக்கான நிதி சார்ந்த கேள்விகள் மற்றும் சந்தேகங்களை நீங்கள் கேட்கலாம்.

காப்பீடு(டேர்ம் இன்சூரன்ஸ், மருத்துவ காப்பீடு), பரஸ்பர நிதி முதலீடுகள், பங்குச்சந்தை முதலீடு, தனிநபர் வருமான வரி, நீண்டகால செல்வமீட்டுதல், பணக்காரர்களின் பண ரகசியங்கள், போன்சி(Ponzi) மோசடிகளை தவிர்த்தல், சேமிப்புக்கும், முதலீட்டுக்குமான வேறுபாடு என நிதி சார்ந்த பல கேள்விகளை நீங்கள் எழுப்பலாம். பதில்களுடன் நாங்கள் உங்களுக்காக காத்திருக்கிறோம்.

மேலும் பிளாக் செயின் தொழில்நுட்பம்(Blockchain Technology) எவ்வாறு இயங்குகிறது மற்றும் அதன் அறிமுக தகவலை பற்றி பேச உள்ளோம். இங்கே, மெய்நிகர் நாணயம் சார்ந்த முதலீட்டை பற்றி நாம் பேசவில்லை என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.

நிகழ்ச்சி நிரல் தேதி மற்றும் நேரம்:  19-06-2021, சனிக்கிழமை மாலை 05:30 மணி முதல் 06:30 மணி வரை.

இணைய வழியிலான இந்த நிகழ்வில் கலந்து கொள்ள கட்டணம்: ரூ. 100 மட்டும்.

Register for the Q&A Meet

குறிப்பு: வர்த்தக மதுரை வாடிக்கையாளர்கள், இந்த நிகழ்ச்சிக்கான கட்டணத்தை செலுத்த தேவையில்லை.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

ஆறு மாத உயர்வாக நாட்டின் சில்லரை விலை பணவீக்கம்

ஆறு மாத உயர்வாக நாட்டின் சில்லரை விலை பணவீக்கம் 

India’s Retail Inflation increased to 6.3 Percent in May 2021

நுகர்வோர் விலை பணவீக்கம் என சொல்லப்படும் சில்லரை விலை பணவீக்கம்(CPI – Consumer Price Index) நாட்டின் பொருளாதார காரணிகளில் முக்கியமானவையாக பார்க்கப்படுகிறது. 2020ம் ஆண்டின் டிசம்பர் மாதத்திலிருந்து 6 சதவீதத்திற்கு குறைவாக பணவீக்கம் இருந்த நிலையில், கடந்த மே மாதம் சந்தை வல்லுநர்கள் எதிர்பார்த்த அளவை விட பணவீக்கம் அதிகரித்துள்ளது கவனிக்கத்தக்கது.

நடப்பாண்டின் மே மாதத்தில் நாட்டின் சில்லரை விலை பணவீக்கம் 6.3 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது. இது ஏப்ரல் மாதத்தில் 4.23 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. உணவுப்பொருட்களின் விலை அதிகரிப்பால் சொல்லப்பட்ட பணவீக்கம் அதிகரித்து காணப்படுகிறது.

மே மாதத்தில் எண்ணெய் மற்றும் கொழுப்பு வகைகள் 31 சதவீதமும், பழவகைகள் 12 சதவீதமும், பருப்பு வகைகள் 9.39 சதவீதம் என்ற அளவிலும் விலை அதிகரித்துள்ளது. இது போக ஒளி மற்றும் எரிபொருட்களின்(Fuel & Lights) விலையும் 11.58 சதவீதமாக அதிகரித்து காணப்பட்டுள்ளது.

புகையிலை பொருட்கள் 10 சதவீதமும், துணிமணி மற்றும் காலணிகள் 5.32 சதவீதமாக உள்ளது. 2021-22ம் நிதியாண்டுக்கான நாட்டின் சில்லரை விலை பணவீக்கம்(Retail Inflation) சராசரியாக 5.1 சதவீதமாக இருக்கலாம் என பாரத ரிசர்வ் வங்கி மதிப்பிட்டுள்ளது.

கடந்த சில காலங்களாக கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருட்களின் விலை அதிகரித்து வருவது, பணவீக்கம் அதிகரிப்பதற்கான காரணமாக இருந்து வருகிறது. சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த இரண்டு வருடங்களில் காணப்படாத அளவாக தற்போது உள்ளது.

அமெரிக்கா போன்ற வளர்ந்த மற்றும் பிற வளரும் நாடுகளில் பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில், வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டால் அது பங்குச்சந்தைக்கு பாதகமாக அமையும். எனினும் இது சார்ந்த விஷயங்களில் அமெரிக்காவின் மத்திய வங்கி(US Fed) மிகுந்த எச்சரிக்கையை கொண்டுள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

இந்த வார நிகழ்ச்சி நிரல் – கதை சொல்லி பாகம் – மூன்று

இந்த வார நிகழ்ச்சி நிரல் – கதை சொல்லி பாகம் – மூன்று 

Story Teller 3.0 – Gold and Bold – Webinar

நவீனமயத்திலிருந்து, அதிவேக தொழில்நுட்பத்திற்கு தயாராகும் நாம் சேமிப்பிலும், முதலீட்டிலும் அவ்வாறான செயல்முறையை மேற்கொண்டால் பின்னாளில் நிதி ஆதாரத்தை எளிமையாக கையாளலாம். வங்கிக்கு சென்று உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் பணத்தை செலுத்திய காலம் போய் இன்று இணைய வழியிலான யூ.பி.ஐ.(Unified Payments Interface) வரை, நாம் அடைந்திருப்பது அளவில்லா தொழில்நுட்ப முன்னேற்றம் தான்.

இனி வரும் காலங்களில் பெரும்பாலும் நாம் டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் தான் சுழல போகிறோம். நம்முடைய ஒவ்வொரு நாள் நடவடிக்கையும் இதனை சார்ந்தே இருக்கும். இந்த வேளையில் முதலீட்டை தொழில்நுட்பத்துடன் இணைக்கும் போது, பெரும்பாலும் நம்முடைய பணம் சார்ந்த கொள்கை வலிமை அடையும் மற்றும் பாதுகாப்பும் மேம்படும்.

பொதுவாக நமது நாடு தங்கத்தில் முதலீடு செய்வதை குடும்பத்தின் சுயமரியாதையாக கொண்டுள்ளது. சேமிப்பும் நமது பழக்கவழக்கத்தில் ஒன்றாகி விட்டது எனலாம். நாம் இதுவரை செய்த தங்கத்தில் முதலீடு, தொழில்நுட்பம் வாயிலாக எவ்வளவு எளிமை அடைந்துள்ளது, தங்கத்தின் மீதான லாபத்திற்கு வரி உண்டு என்பது நம்மில் பலருக்கு தெரியாது.

வாங்க, இந்த வார நிகழ்ச்சிக்கு… இணையம் வழியாக

Story teller III - Gold and Bold

  • இணையம் வழியாக தங்கத்தில் முதலீடு செய்வது எப்படி, என்னென்ன வகைகள் உள்ளன தங்க முதலீட்டில் ?
  • தங்கத்தின் மீதான லாபத்திற்கு அரசின் வரி விதிப்புகள் எப்படி ?
  • பங்கு முதலீட்டில் நட்டத்தை முழுவதுமாக தவிர்க்க என்ன செய்ய வேண்டும் ?
  • நிதி ஆதாரத்தில் நீங்கள் எடுக்க வேண்டிய அவசர முன்னெடுப்புகள்
  • தங்கம் – வங்கி சேமிப்பு – பங்குகள்: இதுவரை அளித்த வருவாய் விகிதங்கள் விவரம்
  • ஆயிரத்திலிருந்து லட்சம் கோடி ரூபாய்களை வருமானமாக ஈட்டியது எப்படி ? – இந்தியாவின் மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனம் – அலசல்

தேதி & நேரம்:  12-06-2021 | மாலை 05:30 மணி முதல் 06:30 மணி வரை 

கட்டணம்: ரூ. 100 மட்டும் 

பதிவு செய்ய:  https://imjo.in/WyCjDX

பதிவுக்கு பின்னர், உங்களுக்கான இணைய வழியிலான நிகழ்ச்சி நிரல் இணைப்பு, குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் வழியாக அனுப்பி வைக்கப்படும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

Financial Blog in Tamil