Tag Archives: fundamental analysis

ரூ.20,000 முதலீடு… இன்று ஒரு கோடி ரூபாய் – 15 ஆண்டுகளில் !

ரூ.20,000 முதலீடு… இன்று ஒரு கோடி ரூபாய் – 15 ஆண்டுகளில் !

20,000 rupees investing in 2006, Rs.1 Crore asset today – Fundamental Analysis

1980 களில் நீங்கள் விப்ரோ பங்குகளில் ரூ.10,000 முதலீடு செய்திருந்தால்… 1990 களில் நீங்கள் இன்போசிஸ் பங்குகளை வாங்கியிருந்தால்… என்ற ராகங்களை எல்லாம் இனி இங்கே வாசிக்க தேவையில்லை. மல்டிபேக்கர்(Multibagger) என சொல்லப்படும் பல மடங்கு லாபம் தரும் பங்குகள் சந்தையில் ஏராளம். வெறுமென பைசாவில் வர்த்தகமாகும், அடிப்படை பகுப்பாய்வை(Fundamentals) நிறைவு செய்யாத பங்குகளெல்லாம், பல மடங்கு லாபம் அளிக்கும் பங்குகளாக எப்போதும் இருப்பதில்லை. அவை சில சுழற்சி காலங்களில் ஏற்றமடையும், ஆனால் பெரும்பாலான சமயங்களில் விலை வீழ்ச்சியடையும்.

அடிப்படை பகுப்பாய்வை பூர்த்தி செய்து, நீண்டகாலத்தில் காத்திருந்து முதலீட்டாளர்களுக்கு பல மடங்கு லாபமளிக்கும் நிறுவனத்தினை தான் நாம் பார்க்க உள்ளோம். இதற்கான கடந்த கால முதலீட்டு வரலாற்றை காட்டிலும், எதிர்வரும் காலத்தில் தான் வாய்ப்புகள் பெரும்பாலும் உள்ளது. பொதுவாக ஸ்மால் கேப் மற்றும் மைக்ரோ கேப் பங்குகளில் முதலீடு செய்வது அவ்வளவு எளிதான காரியமல்ல. ஷெல் நிறுவனங்கள்(Shell Companies) என சொல்லப்படும் வணிக நடவடிக்கைகளை ஏதும் மேற்கொள்ளாத நிறுவனங்கள், போலி நிறுவனங்கள் மைக்ரோ மற்றும் ஸ்மால் கேப் பங்குகளில் உள்ளது கவனிக்கத்தக்கது. எனவே தொழிலை நாணயமாக நடத்தும், அடிப்படை பகுப்பாய்வை நிறைவு செய்யும் நிறுவனங்களை கண்டறிவது சற்று சவாலான காரியம் தான்.

பங்குச்சந்தையில் பங்குகளை வாங்கி வைத்து விட்டு, சும்மா உட்கார்ந்தால் அனைத்து பங்குகளும் உங்களுக்கு செல்வத்தை தந்து விட முடியாது. அதற்கான திறமான காரணிகளும் இருக்க வேண்டும். இதனால் தான் நிப்டி 50ல் உள்ள சில நிறுவனங்களும் தகிடுதத்தம் போட்ட காலங்களும் உண்டு. அடுத்த எச்.டி.எப்.சி. வங்கி என சொல்லப்பட்ட வங்கிகள் திவால் நிலைக்கு சென்றதும், நாட்டின் மிகப்பெரிய நிறுவனம் மற்றும் குழுமம் என ஒரு காலத்தில் சொல்லப்பட்ட பங்குகளும், பல காலங்களாக தொழிலில் லாபமீட்டாமல் நட்டத்தை மட்டுமே கொண்டிருப்பதும் சந்தையின் நிகழ்வு.

இருப்பினும் அடுத்த டாட்டா, இன்போசிஸ், ரிலையன்ஸ், பஜாஜ் போன்று இல்லாவிட்டாலும், நீண்டகாலத்தில் செல்வம் அளிக்கும் ஒரு நிறுவனத்தை கண்டுபிடிப்பதும் நமது பங்குச்சந்தை கற்றலுக்கான அடிப்படை தேடல் தான். அது போன்ற ஒரு நிறுவனத்தை தான் நாம் இங்கு பார்க்க உள்ளோம்.

கடந்த 1932ம் ஆண்டு திரு. செவ்வந்தி லால்(Sevantilal K Shah) அவர்களால் துவங்கப்பட்ட நிறுவனம் தான் எஸ்.கே.குழுமம் – SK Group. ஆரம்ப நிலையில் மும்பை மாநகரில் 500 சதுர அடியில் தனது ரசாயன தொழிலை துவக்கிய இவர் மருந்து துறைக்கு தேவையான மருந்துகளை தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனமாக மாற்றினார்.

பின்னொரு காலத்தில், எஸ்.கே. குழுமம் குடும்பத்தினர் வகிக்கும் தொழிலாகவும் மாறியது. ‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’ என்ற வாக்கிற்கு ஏற்றாற் போல், குழுமத்தில் பல நிறுவனங்களும் தோற்றுவிக்கப்பட்டது.  எஸ்.கே. குழுமத்தின் பல நிறுவனங்களில் மற்றொரு புதிய நிறுவனமாக அனுக் பார்மா(Anuh Pharma) எனும் மருந்து தயாரிப்பு நிறுவனம் 1960ம் ஆண்டு துவங்கப்பட்டது. துவங்கப்பட்ட வருடமே, மும்பை பங்குச்சந்தையிலும் பதிவு செய்யப்பட்டது.

குழும நிறுவனம் ரசாயனம், தளவாடங்கள், விநியோகம் மற்றும் மருந்து துறையில் சிறந்து விளங்கி வந்த நிலையில், அனுக் பார்மா பாக்டீரியா, மலேரியா, கார்டிகோஸ்டீராய்டுகள் மற்றும் காசநோய் ஆகியவற்றை எதிர்க்க தேவையான மருந்து பொருட்களை உற்பத்தி செய்து வந்தது. இது போல பல நுண்ணுயிர் எதிர்ப்பிகளையும் உற்பத்தி செய்து விற்பனையில் ஈடுபட்டது.

காச நோய்க்கு எதிரான மருந்து தயாரிப்பில் நாட்டின் முக்கிய நிறுவனங்களுள் அனுக் பார்மாவும் ஒன்று. மும்பை சந்தையில் மட்டுமே பங்குகளை வெளியிட்டுள்ள இந்நிறுவனத்திற்கு கடன்கள் எதுவும் பெரிதாக இல்லை. கடன்-பங்கு விகிதம் 0.07 ஆகவும், வட்டி பாதுகாப்பு விகிதம்(Interest Coverage Ratio) 16 மடங்குகளிலும் உள்ளது. 2021ம் நிதியாண்டின் முடிவில் நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு ரூ.166 கோடியாக உள்ளது. இது சந்தை மூலதன மதிப்பில் நான்கில் ஒரு பங்காக இருப்பது குறிப்பிடத்தக்கது.

நிறுவனர்களின் பங்களிப்பு 70 சதவீதமாக உள்ளது. நிறுவனர்கள் சார்பில் பங்குகள் அடமானம் எதுவும் வைக்கப்படவில்லை. கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 2020-21ம் நிதியாண்டில் நிறுவனத்தின் வருவாய் 432 கோடி ரூபாயாகவும், நிகர லாபம் ரூ.28 கோடியாகவும் இருந்துள்ளது.

2006ம் ஆண்டின் ஜூலை மாதத்தில் அனுக் பார்மா நிறுவனத்தின் முக மதிப்பு(Face value) 10 ரூபாயிலிருந்து ஐந்து ரூபாயாக மாற்றியமைக்கப்பட்டது. உதாரணமாக 2006 ஜனவரி மாதத்தில் பங்கு ஒன்றுக்கு ரூ.20 ஆக வர்த்தகமான நிலையில், நாம் 1000 பங்குகளை வாங்கியிருந்தால் நமது முதலீட்டு மதிப்பு அன்று 20,000 ரூபாயாக இருந்திருக்கும். முகமதிப்பு மாற்றியமைக்கப்பட்ட பின்பு நமது கையிருப்பு பங்குகள் 2,000 (முதலீட்டு மதிப்பில் மாற்றமில்லை).

அதே வருடத்தில் ஒன்றுக்கு ஒன்று போனஸ்(1:1 Bonus issue) பங்குகளும் அறிவிக்கப்பட்டிருந்தது. எனவே, நமது கையில் உள்ள 2,000 பங்குகள் 4,000 பங்குகளாக மாறியிருக்கும். பின்பு 2010ம் ஆண்டில் ஒரு பங்குக்கு இரண்டு பங்குகள்(2:1 Bonus issue) என்ற விகிதத்தில் போனஸ் பங்குகள் வெளியிடப்பட்டது. இப்போது நமது கையிருப்பு 12,000 பங்குகள்.

மீண்டும் 2015ம் ஆண்டில் ஒரு பங்குக்கு இரண்டு பங்குகள் என்ற அடிப்படையில்  போனஸ் பங்குகள். இந்த நிகழ்வுக்கு பின்பு நம்மிடம் 36,000 பங்குகளாக சொல்லப்பட்டிருக்கும். கடந்தாண்டு (செப்டம்பர் 2020) கொரோனா காலத்திலும் 1:1 போனஸ் பங்குகள் அறிவிக்கப்பட்டது. இதனையும் நாம் கணக்கில் கொண்டால் இப்போது 72,000 பங்குகள் நம் கைவசம் இருந்திருக்கும். நடப்பில்(30-07-2021) அனுக் பார்மா நிறுவனத்தின் பங்கு ஒன்று 146 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது. 15 வருடங்களுக்கு முன்பு இந்நிறுவனத்தில் 1000 பங்குகளை வாங்கியிருந்தால் நமது முதலீடு அப்போதைய நிலையில் ரூ.20,000 ஆக இருந்திருக்கும். தற்போதைய விலையில் நம்மிடம் ரூ.1.05 கோடியும், 72000 பங்குகளும் கைவசம் இருக்கும்(பங்குகளை இதுவரை விற்காமல் இருந்திருந்தால் !).

குறைந்தபட்சம் அன்று 100 பங்குகளை 20 ரூபாய் விலைக்கு வாங்கியிருந்தாலும், இன்று அதன் மதிப்பு ரூ.10 லட்சம் !  இது தான் நீண்டகால முதலீட்டின் ரகசியமும் கூட…

ஒரு பங்கு, முதலீட்டாளர்களுக்கு குறுகிய காலத்தில் வருவாயை கொட்டி கொடுத்தாலும், அந்நிறுவனம் நீண்டகாலத்தில் தொழிலை நன்றாக நடத்தி வருவதே முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய ஒன்று.

கவனிக்க: முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கும் முன் தகுந்த நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் முன்னிலையில் தங்களது முதலீட்டு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலே சொன்ன தகவல்கள் பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வுக்கான கற்றல் மட்டுமே.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

நம்ம மதுரையை சேர்ந்த பங்கு – விருதுநகர் டெக்ஸ்டைல் மில்ஸ்

நம்ம மதுரையை சேர்ந்த பங்கு – விருதுநகர் டெக்ஸ்டைல் மில்ஸ் 

VTM(Virudhunagar Textile Mills) Limited – Fundamental Analysis

கடந்த 1946ம் ஆண்டு விருதுநகர் மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு துவங்கப்பட்ட நிறுவனம் விருதுநகர் டெக்ஸ்டைல் மில்ஸ். நெசவு சார்ந்த உற்பத்தியை தனது தொழிலாக கொண்டிருக்கும் இந்நிறுவனம், தியாகராஜர் குழுவின்(Thiagarajar Mills Group) ஒரு அங்கமாகும். மதுரை மாவட்டம் கப்பலூரை சேர்ந்த தியாகராஜர் மில்ஸ் நிறுவனம், ஜவுளித்தொழிலில் புகழ் பெற்ற நிறுவனமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

திரு. கருமுத்து தியாகராஜ செட்டியார் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்நிறுவன குழுமம், தியாகராஜர் பொறியியல் கல்லூரி, தியாகராஜர் மேலாண்மை கல்வி நிறுவனம், கலை மற்றும் அறிவியல் கல்லூரி உட்பட சுமார் 19 கல்வி நிலையங்களை தமிழகத்தில் தோற்றுவித்துள்ளது.

துவக்க காலத்தில் உள்நாட்டுக்கு தேவையான உற்பத்தியை செய்து வந்த நிலையில், தற்போது பெரும்பாலும் ஏற்றுமதியை சார்ந்துள்ளது. நெசவு சார்ந்த உற்பத்தியில் நவீனமயமாக்கும் முயற்சியில் முதலீடுகளை ஒவ்வொரு காலத்திலும் செய்து வந்துள்ளது இந்நிறுவனம்.

உற்பத்தி பிரிவில் 258 அதிநவீன தறிகளை இந்நிறுவனம் கொண்டிருப்பது கவனிக்கத்தக்கது. சிறந்த துணி உற்பத்தியை எண்ணிக்கையிலும், சிக்கலான தன்மைகளை சரி செய்வதற்கான போதுமான உபகரணங்களையும் வி.டி.எம். நிறுவனம் கொண்டுள்ளது. பருத்தி நூல் வரம்பில் நூறு சதவீத நிபுணத்துவம் பெற்றுள்ளதாக நிறுவனம் கூறுகிறது. வாயு நூல்(Gassed yarn) செயலாக்கம் நிறுவனத்தின் சிறப்பம்சமாக உள்ளது.

வி.டி.எம். நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக திரு.கண்ணன் உள்ளார். நிறுவனர்கள் பங்களிப்பில் கண்ணன் மற்றும் அவரை சார்ந்த நிறுவனங்களிடம் 59 சதவீத பங்குகளும், தியாகராஜர் மில்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திடம் 7 சதவீத பங்குகளும், பிற நிதி நிறுவனம் சார்ந்து 9 சதவீத பங்குகளும் உள்ளது. ஒட்டுமொத்தமாக நிறுவனர்களின் பங்களிப்பு 75 சதவீதமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு ரூ.100 கோடி. புத்தக மதிப்பு 55 ரூபாயாகவும், கடன்-பங்கு விகிதம் 0.03 ஆகவும் உள்ளது. வட்டி பாதுகாப்பு விகிதம் 16 மடங்குகளில் இருக்கிறது. 2020-21ம் நிதியாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.143 கோடியாகவும், செலவினம் 126 கோடி ரூபாயாகவும் உள்ளது. சொல்லப்பட்ட வருடத்தில் நிகர லாபம் 10 கோடி ரூபாயாக இருந்துள்ளது.

கடந்த பத்து வருடங்களில் லாப வளர்ச்சி குறிப்பிடத்தக்க அளவில் இருந்து வந்தாலும், விற்பனை வளர்ச்சி சொல்லிக்கொள்ளும் படி இல்லை. நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு 215 கோடி ரூபாயாக உள்ளது. சிறு நிறுவன பங்குகளில் அதிக ஏற்ற-இறக்கத்திற்கு உட்படாத நிறுவனமாகவும், தொடர்ச்சியாக ஈவுத்தொகையை(Dividend) அளிக்கும் நிறுவனமாகவும் விருதுநகர் டெக்ஸ்டைல் மில்ஸ் நிறுவனம் உள்ளது.

கவனிக்க: முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கும் முன் தகுந்த நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் முன்னிலையில் தங்களது முதலீட்டு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலே சொன்ன தகவல்கள் பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வுக்கான கற்றல் மட்டுமே.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

அவந்தி பீட்ஸ் – பங்குச்சந்தை அலசல்

அவந்தி பீட்ஸ் – பங்குச்சந்தை அலசல் 

Avanti Feeds – Fundamental Analysis – Stocks

1994ம் ஆண்டு துவங்கப்பட்ட நிறுவனம் அவந்தி பீட்ஸ். ஆந்திர மாநிலத்தை சேர்ந்த திரு. அல்லூரி வெங்கடேசுவர ராவ் அவர்களால் துவங்கப்பட்ட இந்நிறுவனம், இன்று இறால், மீன் ஊட்டங்கள், இறால் செயலி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனமாக வலம் வருகிறது. ஆரம்ப காலத்தில் எஃகு, கரைப்பான்கள், உரம், பூச்சிக்கொல்லிகள் மற்றும் புகையிலை ஆகிய தொழில்களில் ஈடுபட்டு வந்த நிறுவனர் பின்னர் இறால் மீன் சார்ந்த தயாரிப்புகளில் களம் கண்டார்.

முக்கியமாக தாய் யூனியன்(Thai Union Group) நிறுவனத்துடன் கூட்டு முயற்சியில் இறால் தயாரிப்புகளில் ஈடுபட்டு வருவது அவந்தி பீட்ஸ் நிறுவனத்தின் வெற்றிக்கு சாதகமாக இருந்துள்ளது. 1977ம் ஆண்டு துவங்கப்பட்ட தாய் யூனியன் குழுமம் தாய்லாந்து நாட்டை சேர்ந்த இறால், மீன் ஊட்டங்கள் மற்றும் பதப்படுத்துதலில் முன்னணி நிறுவனமாக உள்ளது.

இறால் மற்றும் மீன் தீவனங்களில் தொழில் செய்து வரும் தாய் யூனியன் குழுமம், கடல் சார்ந்த உணவு துறையில் உலகின் மிகப்பெரிய நிறுவனமாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது. இறால் தீவனம் மற்றும் உறைந்த இறால் தயாரிப்புகளில்(Frozen Shrimp Producer) நாட்டின் மிகப்பெரிய நிறுவனமாகவும், முன்னணி ஏற்றுமதியாளராகவும் அவந்தி நிறுவனம் உள்ளது.

ஆண்டுக்கு சுமார் 6 லட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட தயாரிப்பு நிலையங்களை இந்நிறுவனம் கொண்டுள்ளது. உள்நாட்டு தீவன வணிகத்தில் சுமார் 45 சதவீத பங்களிப்பை அவந்தி பீட்ஸ் நிறுவனம் தன்னகத்தே வைத்துள்ளது. மீன் குஞ்சு பொரித்தல் மற்றும் இறால் பதப்படுத்துதலுக்காக முக்கிய நிலையங்களையும் இந்நிறுவனம் நிர்வகித்து வருகிறது.

இதன் தயாரிப்புகள் அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தீவனங்களுக்காக தனித்துவமான பிராண்டுகளையும் அவந்தி நிறுவனம் கொண்டுள்ளது.

கடல் சார்ந்த உணவுகளை அதிகம் இறக்குமதி செய்யும் நாடாக அமெரிக்கா உள்ளது. இது சுமார் 18 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் இறக்குமதி அளவை கொண்டிருப்பது கவனிக்கத்தக்கது. மீன் பிடித்தல் துறையில் நம் நாடு 2019-20ம் ஆண்டு முடிவில் சுமார் 141 லட்சம் டன் என்ற அளவில் தனது உற்பத்தியை கொண்டுள்ளது.

மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP) மதிப்பில் 1.2 சதவீத பங்களிப்பை மீன் பிடிப்பு துறை பெற்றுள்ளது. நீண்ட பரப்பளவு, புதிய உணவு வகைகள், பெருகி வரும் உணவு தேவைகள் ஆகியவை மீன் உணவுக்கான சந்தையை நிர்ணயிக்கிறது. மீன் உற்பத்தியில் முதல் ஐந்து இடங்களில் உள்ள மாநிலங்கள் – ஆந்திரா, மேற்கு வங்காளம், குஜராத், கேரளா மற்றும் தமிழகம். கடந்த 2019ம் ஆண்டு முதல் மீன் பிடிப்பு துறை உற்பத்தியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 1961ம் ஆண்டு வாக்கில் தனிநபர் ஒருவருக்கு, ஆண்டுக்கு 9 கிலோ என்ற அளவில் இருந்த நுகர்வு, 2018ம் ஆண்டில் 20.5 கிலோ என வளர்ச்சியடைந்துள்ளது. குறிப்பாக இறால் பண்ணைகள் சார்ந்த உணவுக்கான தேவை இன்று அதிகரித்து வருகிறது.

உலகளாவிய காலநிலை மாற்றம், கடல் சார்ந்த எல்லை பிரச்சனைகள், புதிய உணவு தேவைகள் ஆகியவை பண்ணைகள் மற்றும்  கடற் பண்ணைகளில் உற்பத்தி செய்யப்படும் உணவுகளுக்கு சாதகமாக அமைந்துள்ளது. இதன் காரணமாக இந்த துறையில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களுக்கு வர்த்தகம் சார்ந்த வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

அவந்தி பீட்ஸ்(Avanti Feeds) நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.6,600 கோடி. இதன் புத்தக மதிப்பு ரூ.119 ஆகவும், வட்டி பாதுகாப்பு விகிதம் 334 மடங்குகளாகவும் உள்ளது. நிறுவனத்திற்கு கடன்(Debt Free) எதுவும் பெரிதாக இல்லை. நிறுவனர்களின் பங்களிப்பு 44 சதவீதமாகவும், அன்னிய முதலீட்டாளர்களின் பங்களிப்பு 17 சதவீதமாகவும் உள்ளது. நிறுவனர்கள் சார்பில் பங்குகள் அடமானம் எதுவும் வைக்கப்படவில்லை. அன்னிய முதலீட்டாளர்களில் தாய் யூனியன் குழும நிறுவனம் 9 சதவீத பங்குகளை வைத்திருக்கிறது.

பொது பங்களிப்பில்(Public Holding) சுமார் 15 சதவீத பங்குகளையும் இந்நிறுவனம் தன்னகத்தே கொண்டுள்ளது. அரசு சார்பில், ஆந்திர அரசு சுமார் 3 சதவீத பங்குகளை(Andhra Pradesh Industrial Development Corporation) கொண்டுள்ளது கவனிக்கத்தக்கது. 2019-20ம் நிதியாண்டில் அவந்தி பீட்ஸ் நிறுவனம் ரூ.4,115 கோடியை வருவாயாகவும், 377 கோடி ரூபாயை நிகர லாபமாகவும் ஈட்டியுள்ளது. விற்பனை வளர்ச்சி கடந்த ஐந்து வருடங்களில் 19 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது.

லாப வளர்ச்சியும் கடந்த ஐந்து வருட கால அளவில் 24 சதவீதமாக உள்ளது. பங்கு மூலதனத்தின் மீதான வருவாய்(ROE) கடந்த ஐந்து வருடங்களில் 34 சதவீதமாகவும், 10 வருட கால அளவில் 35 சதவீதமாகவும் உள்ளது. இருப்புநிலை கையிருப்பு ரூ.1,603 கோடியாக சொல்லப்பட்டுள்ளது. நிறுவனத்தின் பணவரத்து(Cash flow Positive) நன்றாக உள்ளது.

இறால் இறக்குமதியில் அமெரிக்கா 26 சதவீதமும், ஐரோப்பிய யூனியன் 23 சதவீதமும், வியட்நாம் 12 சதவீதமும், ஜப்பான் 10 சதவீதம் மற்றும் சீனா 8 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளது. இறால் உற்பத்தியில் இந்தியா இரண்டாம் இடத்திலும், அதன் ஏற்றுமதியில் முதலிடத்திலும் உள்ளது. கொரோனா காலம் தவிர்த்து காணும் போது, இந்த துறைக்கான தேவையும், வாய்ப்புகளும் அதிகம்.

கவனிக்க: முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கும் முன் தகுந்த நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் முன்னிலையில் தங்களது முதலீட்டு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலே சொன்ன தகவல்கள் பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வுக்கான கற்றல் மட்டுமே.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

வேளாண்மை – கோழி – மீன் வளர்ப்பு நிறுவன பங்குகளில் முதலீடு செய்ய விருப்பமா ? பங்குச்சந்தை அலசல்

வேளாண்மை – கோழி – மீன் வளர்ப்பு நிறுவன பங்குகளில் முதலீடு செய்ய விருப்பமா ? பங்குச்சந்தை அலசல் 

Agriculture – Poultry – Aquaculture – It’s Stock Insights

பங்குச்சந்தையில் முதலீடு செய்பவர்கள் பொதுவாக பிரபல நிறுவனங்களிலும், அதிகம் அறியப்பட்ட துறைகளிலும் முதலீடு செய்வது வழக்கம். தேசிய பங்குச்சந்தையான நிப்டி(Nifty50) குறியீட்டில் அதிக பங்களிப்பை கொண்டிருக்கும் துறை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள். இதன் பங்களிப்பு 26.17 சதவீதமாக உள்ளது. தகவல் தொழில்நுட்பம் 21.50 சதவீதமும், எண்ணெய் மற்றும் எரிவாயு 14.83 சதவீத பங்களிப்பையும் கொண்டுள்ளது.

வாகன துறை 6.19 சதவீதமாகவும், நீடித்தது அல்லாத நுகர்வோர் துறை(Consumer Non-durables) 5 சதவீதமும் மற்றும் மருந்து துறை 3.37 சதவீதமாகவும் உள்ளது. தொலைத்தொடர்பு துறை(Telecom) 2.78 சதவீதத்தையும், பொறியியல் துறை 2.65 சதவீதத்தையும் கொண்டுள்ளது. இது போல உலோகங்கள் மற்றும் சுரங்க தொழில், ரசாயனம் ஆகிய துறைகள் முறையே 2.65 % மற்றும் 2.59 % பங்களிப்பை உள்ளடக்கியுள்ளது.

இதர பங்களிப்பில் புகையிலை(2.3 %), உணவு மற்றும் குளிர்பானங்கள்(2.27%), சிமெண்ட் மற்றும் கட்டுமானம்(2.17%), மற்ற பயன்பாடுகள்(Utilities) உள்ளன. பங்குச்சந்தை குறியீட்டில் அதிக பங்களிப்பை கொண்டிருக்கும் வங்கித்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பம் அனைத்து முதலீட்டாளர்களையும் ஈர்க்கும் துறைகளாக காணப்படுகிறது.

ஆனால் உண்மையில் அவை முதலீட்டாளர்களுக்கு, மற்ற துறைகளை காட்டிலும் நீண்டகாலத்தில் முதலீட்டு வருவாயை அளித்துள்ளதா ?

சுழற்சி முறை(Cyclical) மற்றும் பருவ கால தொழிலை செய்யும் துறைகள் ஏன் பெரும்பாலும் கண்டுகொள்ளப்படுவதில்லை ?

விவசாயம், விவசாயி, உணவு தேவை ஆகியவற்றை சொல்லும் பொது உலகம் வேளாண்மை, கால்நடை மற்றும் மீன் வளர்ப்பு தொழிலுக்கு போதுமான முதலீட்டை கொடுத்துள்ளதா ?

வேளாண்மை, கோழி வளர்ப்பு, மீன் வளர்ப்பு தொழில் செய்யும் நிறுவனங்களில் நீங்கள் முதலீடு செய்ததுண்டா, இவற்றில் நீண்டகாலத்தில் லாபம் பார்ப்பது எப்படி ?

வாருங்கள், வரும் சனிக்கிழமை(13-02-2021) மாலை 05:15 மணிக்கு இணையம் வழியாக பேசுவோம்…

பதிவுக்கு,

Stock Insights(Premium Investing) – Registration

மூன்று துறைகள், ஐந்து வாரங்கள்(சனிக்கிழமைகளில்), பத்து நிறுவன பங்குகள் – அடிப்படை அலசல்.

இங்கே எந்த பங்குகளுக்கான பரிந்துரையும் சொல்லப்படாது. (Disclaimer பிரிவை வாசிக்கவும்). இது பங்கு தொழில் சார்ந்த ஒரு அடிப்படை அலசல் மட்டுமே.

கட்டணம்: ரூ. 499 மட்டும் 

பதிவுக்கு பின், இணைப்பு(Webinar) சார்ந்த விவரங்கள் உங்கள் மின்னஞ்சல் மற்றும் வாட்சாப் செயலிக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

எஸ்.பி.ஐ. லைப் இன்சூரன்ஸ் – பங்குச்சந்தை அலசல்

எஸ்.பி.ஐ. லைப் இன்சூரன்ஸ் – பங்குச்சந்தை அலசல் 

SBI Life Insurance – Fundamental Analysis – Stock Market

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ.(State Bank of India) நிறுவனமும், பிரெஞ்சு நாட்டு வங்கி குழுமமான பி.என்.பி. பரிபாஸ்(BNP Paribas) நிறுவனமும் கூட்டாக சேர்ந்து துவக்கிய தனியார் நிறுவனம் தான் எஸ்.பி.ஐ. லைப் இன்சூரன்ஸ். உலகின் 43வது மிகப்பெரிய வங்கியாக நம் நாட்டின் எஸ்.பி.ஐ. உள்ளது. பி.என்.பி. பரிபாஸ் நிறுவனம் சொத்துக்கள் அடிப்படையில் உலகின் எட்டாவது மிகப்பெரிய வங்கியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2001ம் ஆண்டு துவங்கப்பட்ட எஸ்.பி.ஐ. லைப் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பாரத ஸ்டேட் வங்கி 55 சதவீத பங்குகளையும், பி.என்.பி. நிறுவனம் 5 சதவீத பங்குகளையும் கொண்டுள்ளது. பி.என்.பி. நிறுவனம் முன்னர் 22 சதவீத பங்குகளை கொண்டிருந்தது கவனிக்கத்தக்கது. அன்னிய முதலீட்டாளர்களிடம் சுமார் 26 சதவீத எஸ்.பி.ஐ. லைப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் உள்ளது.

காப்பீட்டு துறையில்(Insurance Sector) இயங்கும் இந்நிறுவனத்திற்கு நாடு முழுவதும் 947 நேரடி அலுவலகங்களும், 28,000 பங்களிப்பு கிளைகளும் உள்ளன. நிறுவனத்தில் சுமார் 17,000 பணியாளர்களும், 1,50,000 காப்பீட்டு ஏஜெண்டுகளும் சேவை செய்து வருகின்றனர். பல கார்ப்பரேட் நிறுவனங்களிலும், வங்கிகளிலும் இதன் காப்பீடு சேவை வழங்கப்பட்டு வருகிறது.

2017-18ம் ஆண்டு அறிக்கையின் படி, இந்த நிறுவனம் ரூ.1 லட்சம் கோடிக்கு  மேற்பட்ட சொத்துக்களை நிர்வகித்து வருகிறது. கடந்த 2019-20ம் நிதியாண்டின் முடிவில் நிறுவனத்தின் மொத்த எழுதப்பட்ட பிரீமியத்தின்(Gross written Premium) மதிப்பு 30,000 கோடி ரூபாய். தனியார் காப்பீட்டு துறையில் கடந்த ஆண்டின் சிறந்த நிறுவனமாகவும் எஸ்.பி.ஐ. லைப் இன்சூரன்ஸ் சொல்லப்பட்டுள்ளது.

எஸ்.பி.ஐ. லைப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.90,000 கோடி. காப்பீட்டு துறையில் சேவை புரிந்து வருவதால், நிறுவனத்திற்கான கடன் எதுவுமில்லை. நிறுவனர்களின் பங்களிப்பு 60 சதவீதமாகவும், நிறுவனர்கள் சார்பில் பங்குகள் எதுவும் அடமானம் வைக்கப்படவில்லை.

கடந்த ஐந்து வருடங்களில் நிறுவனத்தின் விற்பனை 13 சதவீதமாகவும், லாபம் 12 சதவீதமாகவும் வளர்ச்சி பெற்றுள்ளது. பங்கு மூலதனத்தின் மீதான வருவாய்(Return on Equity) ஐந்து வருட காலத்தில் 18 சதவீதமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. 2019-20ம் நிதியாண்டு முடிவில் நிறுவனத்தின் வருவாய் 43,798 கோடி ரூபாயாகவும், செலவினம் 42,438 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. சொல்லப்பட்ட காலத்தில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.1,422 கோடியாக உள்ளது.

நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு ரூ.8,663 கோடியாக சொல்லப்பட்டுள்ளது. மொத்த மூலதனத்தின் மீதான வருவாயும் இந்த நிறுவனத்திற்கு நன்றாக உள்ளது. பொதுவாக காப்பீட்டு துறையில் பொதுத்துறை நிறுவனங்களை விட, தனியார் நிறுவனங்களின் செயல்பாடு பங்கு முதலீட்டாளர்களுக்கு சாதகமான அம்சமாக உள்ளது. துரிதமான சேவை, காப்பீட்டுக்கான தேவை அதிகரித்து வருவது மற்றும் தொடர் வளர்ச்சி ஆகியவை எஸ்.பி.ஐ. லைப் நிறுவனத்திற்கு உள்ளது. பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வை பூர்த்தி செய்யும் இந்நிறுவனத்தின் தற்போதைய சந்தை விலை பங்கு ஒன்றுக்கு 900 ரூபாய் என்ற விலையில் வர்த்தகமாகி வருகிறது. பணப்பாய்வு முறைப்படி(DCF Valuation) இந்த பங்கு ஒன்றின் விலை ரூ.1000 என்ற மதிப்பை பெறுகிறது. பங்கு முதலீட்டை பரவலாக்கம்(Sector Diversification) செய்ய விரும்புவோர் இது போன்ற காப்பீட்டு துறையில் உள்ள நிறுவனங்களில் முதலீடு செய்வதை ஒரு உத்தியாக கையாளலாம். எதிர்காலத்தில் இந்த துறைக்கான தேவையும் அதிகமாக உள்ளது.

கவனிக்க: முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கும் முன் தகுந்த நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் முன்னிலையில் தங்களது முதலீட்டு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலே சொன்ன தகவல்கள் பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வுக்கான கற்றல் மட்டுமே.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை

www.varthagamadurai.com

கல்யாணி குழுமம் – பங்குச்சந்தை அலசல்

கல்யாணி குழுமம் – பங்குச்சந்தை அலசல் 

Kalyani Group – Conglomerate – Fundamental Analysis

கல்யாணி குழுமம் கடந்த 1960ம் ஆண்டு துவங்கப்பட்டது. தொழிலதிபர் திரு. நீல்காந்த் ராவ் கல்யாணி அவர்களின் புதல்வன் பாபா கல்யாணி(Babasaheb Kalyani) இந்த குழுமத்தின் தலைவராக உள்ளார். இந்திய பன்னாட்டு நிறுவனமாக விளங்கும் கல்யாணி குழுமம் தனது தொழிலை பொறியியல், எஃகு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, நகர்ப்புற உள்கட்டமைப்பு, மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் சிறப்பு ரசாயனம் என பரவலாக்கியுள்ளது. வாகனத்துறை மற்றும் ராணுவத்திற்கு தேவையான கூறுகளை உற்பத்தி செய்யும் பிரபல நிறுவனமான பாரத் போர்ஜ்(Bharat Forge), கல்யாணி குழுமத்தின் ஒரு அங்கம் தான்.

பில்லியன் டாலர்களில் வருவாயினை கொண்டிருக்கும் இந்த குழுமம் 10,000க்கும் மேற்பட்ட பணியாளர்களையும், பல வளர்ந்த நாடுகளில் தனது கிளைகளையும் அமைத்துள்ளது. உலக தொழில் சந்தையில் தலைமை வகிக்கும் பல நிறுவனங்களுடன் கூட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையிலும் கல்யாணி குழும நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது.

உலகின் மிகப்பெரிய போர்ஜிங்(Forging) நிறுவனம், போர்ஜிங் துறையில் நாட்டின் மிகப்பெரிய ஏற்றுமதி நிறுவனமாகவும், முன்னணி பொறியியல் எஃகு உற்பத்தியாளராகவும் இதன் குழும நிறுவனங்கள் உள்ளன. குழுமத்தின் முக்கிய நிறுவனங்களாக பாரத் போர்ஜ், கல்யாணி டெக்னோ போர்ஜ், கல்யாணி ஸ்டீல், கல்யாணி தெர்மல், கல்யாணி டெக்னாலஜிஸ், சி.டி.பி.(CDP) பாரத் போர்ஜ், கல்யாணி பிரேக்ஸ், கல்யாணி ஷார்ப் என இதன் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

பிரபல ஐ-லீக்(I-League) கால்பந்தாட்டத்தின் பாரத் எப்.சி.(Bharat FC) அணி, கல்யாணி குழுமத்தின் ஒரு அங்கமாகும். இந்திய பங்குச்சந்தையில் கல்யாணி குழுமத்தின் நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. பாரத் போர்ஜ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 25,000 கோடி ரூபாய். 50 வருடங்களுக்கு மேலான தொழில் அனுபவத்தை கொண்டிருக்கும் பாரத் போர்ஜ் வார்ப்புகள் மற்றும் போர்ஜிங்(Castings & Forging) பிரிவில் உள்ளது.

உயர்தர கார்பன் மற்றும் அலாய் ஸ்டீல் போர்ஜ், இயந்திர கூறுகளை உற்பத்தி செய்யும் பிரிவில் கல்யாணி டெக்னோபோர்ஜ் நிறுவனம் உள்ளது. ஆயிரம் கோடி ரூபாய் சந்தை மதிப்பை கொண்ட கல்யாணி ஸ்டீல்(Kalyani Steels) நிறுவனம் இரும்பு மற்றும் எஃகு தயாரிப்புகளின் உற்பத்தி மற்றும் விற்பனை வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது. கடனில்லா நிறுவனமாக காணப்படும் இந்த நிறுவனத்தில் பாரத் போர்ஜ் முதலீட்டு நிறுவனம் 39 சதவீத பங்குகளை வைத்துள்ளது. பொதுவாக ஸ்டீல் துறை உலகளாவிய காரணிகளால் பெரிதும் பாதிக்கப்படும் துறையாக காணப்படுகிறது.

கல்யாணி ஸ்டீல் நிறுவனத்தின் முக்கிய வாடிக்கையாளர்களாக டாட்டா, மஹிந்திரா, வால்வோ, மாருதி சுசூகி, நிசான், பெல்(BHEL), போர்ஸ் மோட்டார்ஸ், போர்டு, ஹூண்டாய், மெரிட்டார், ஐஷர் போன்ற நிறுவனங்கள் உள்ளன.

இருப்பினும், துறை சார்ந்த போட்டிகளை தன்னகத்தே கொண்டு கல்யாணி ஸ்டீல் நிறுவனம் இயங்கி வருகிறது. நிறுவனத்தின் கையிருப்பு 996 கோடி ரூபாயாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 605 கோடி ரூபாய் சந்தை மதிப்புடைய கல்யாணி இன்வெஸ்ட்மென்ட்(Kalyani Investment) நிறுவனம், குழும நிறுவனங்களுக்கு தேவையான முதலீட்டை அளிக்க தொழில் செய்து வருகிறது. கடனில்லா நிறுவனமாக உள்ள இந்த நிறுவனத்தின் விற்பனை மற்றும் லாப வளர்ச்சி கடந்த ஐந்து வருட காலத்தில் 20 சதவீதமாக உள்ளது. கல்யாணி  குழுமத்தில் உள்ள நிறுவனங்களை பின்னொரு பதிவில் ஆழமாக அலசலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

பங்குகளை மதிப்பீடு செய்யும் போது தவிர்க்க வேண்டிய நான்கு விஷயங்கள்

பங்குகளை மதிப்பீடு செய்யும் போது தவிர்க்க வேண்டிய நான்கு விஷயங்கள் 

Four things to avoid when valuing a Stock – Value Investing

பங்குச்சந்தையில் வர்த்தகமாகும் ஒரு நிறுவன பங்கை வாங்குவதற்கு இரு வகையான முறைகளில் மதிப்பீடு செய்யலாம். அடிப்படை முறையாக சொல்லப்படுவது பண்டமென்டல் அனாலிசிஸ், மற்றொரு முறை டெக்னிக்கல் அனாலிசிஸ். ஒரு நிறுவனத்தின் தொழில் சார்ந்த தன்மைகளை ஆராய்ந்து பங்குகளை அலசுவது பண்டமென்டல் அனாலிசிஸ். சந்தையில் வர்த்தகமாகும் பங்கின் கடந்த கால விலைகளை கொண்டு அலசுவது டெக்னிக்கல் அனாலிசிஸ் எனப்படும். இந்த இரண்டில் ஏதேனும் ஒன்றை சந்தையில் ஈடுபடுபவர்கள் தங்களது ஆயுதமாக கொள்வர்.

சொல்லப்பட்ட இரு முறைகளில் ஏதேனும் ஒன்றை கடைபிடிப்பது அவசியம். நீண்டகால முதலீட்டாளர்களுக்கு அடிப்படை பகுப்பாய்வு(Fundamental Analysis) என்பது முக்கியமான அம்சமாகும். குறுகிய காலத்தில் செயல்படுபவர்களுக்கு அடிப்படை பகுப்பாய்வும், தொழில்நுட்ப பகுப்பாய்வும் பயனளிக்கும். நாள் வணிகருக்கு தொழில்நுட்ப பகுப்பாய்வு(Technical Analysis) பயன்பட்டாலும், தொழில் சார்ந்த அடிப்படை தன்மைகளை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

நீங்கள் எந்த முறையில் அலசுவதாக இருந்தாலும், சொல்லப்போகும் நான்கு விஷயங்களை தவிர்த்து விட்டு பங்குகளை காண வேண்டும். அப்போது தான் உங்களது மதிப்பீடு தவறாக போகாது.

 • பங்குகளை நேசிக்க வேண்டாம் (Don’t love the Stock always):

பங்குச்சந்தையில் நீங்கள் வாங்க போகும் பங்கு மீது அதிக பற்று வைத்து நேசிக்க வேண்டாம். ‘நான் வேலை பார்க்கும் நிறுவனத்தின் பங்கு, எனக்கு அந்த நிறுவனத்தின் பெயர் ரொம்ப பிடிக்கும், நல்ல பிராண்டு’ என்ற காரணங்களை மட்டும் கொண்டு பங்குகளை வாங்க வேண்டாம். பங்குகளை வாங்குவதற்கு முன்னர், மதிப்பீடு(Valuation) செய்வதன் மீது கவனம் செலுத்துங்கள். பங்குச்சந்தையை பொறுத்தவரை நிறுவனத்தின் தொழில் நன்றாக நடைபெற்றால் மட்டுமே அது முதலீட்டாளர்களுக்கு லாபத்தை சம்பாதித்து கொடுக்கும். இல்லையெனில், கடந்த காலத்தில் ஜாம்பவானாக இருந்த நிறுவனங்களும், பிற்காலத்தில் காணாமல் போகலாம். எனவே பங்குகளின் மதிப்பீட்டை உற்று நோக்குங்கள்.

 • உங்களது சிந்தனையை பங்குகளின் மீது திணிக்காதீர்கள் (Don’t like your Idea on Stock):

நீங்கள் கடந்த காலங்களில் எந்தவொரு மதிப்பீட்டையும் செய்யாமல் பங்குகளை வாங்கி குவித்திருக்கலாம். சில பங்குகள் நல்ல லாபத்தை கொடுத்திருக்கும். இருப்பினும், அதனை ஒரு சிறந்த முறையாக நீங்கள் எடுத்து கொண்டு பங்குகளை வாங்காதீர்கள். உங்களது கடந்த கால பங்கு வாங்கும் தவறான சிந்தனையை, புதிய பங்குகளை வாங்கும் போது திணிக்க வேண்டாம்.

‘நான் வாங்கிய 2 ரூபாய் விலையுள்ள பங்கு 10 ரூபாய் சென்று விட்டது, பெருத்த லாபம் ‘ என எந்தவொரு அடிப்படை தொழில் சார்ந்த விஷயமும் இல்லாமல் சூதாட வேண்டாம்.

 • மந்தை கூட்ட மனப்பான்மையை தவிர்க்க வேண்டும் (Avoid Herd Mentality):

நண்பர்கள் சொன்னார்கள், தரகர் சொன்ன தகவலில் வந்தது, டி.வியில் பரிந்துரைத்தார்கள் என பங்குகளை வாங்க வேண்டாம். நீங்களாகவே ஒவ்வொரு பங்குகளையும் மதிப்பீடு செய்து, ஆராய்ந்து வாங்குங்கள். இது பங்குகளை விற்கும் போதும் தேவையான ஒன்று. உங்களுக்கு நேரம் இல்லையென்றால், பங்குகளை அலச நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் துணை கொண்டு முதலீட்டு முடிவை எடுங்கள்.

மற்றவர்கள் வாங்குகிறார்கள், குறிப்பிட்ட பங்கு ஒன்று சந்தையில் இன்று அதிக விலைக்கு வர்த்தகமாகிறது அல்லது ஊடக செய்தியில் வந்த தகவல் என அவசரப்பட்டு மந்த கூட்ட மனப்பான்மையில் பங்குகளை வாங்காதீர்கள். உங்களுக்கு லாபம் மட்டுமே சொந்தமல்ல, நட்டமும் தான்.

 • மதிப்பீட்டிற்கு முன்னுரிமை அளியுங்கள் (Don’t Compromise – Stock vs Valuation):

‘நான் இந்த பங்கினை பல காலங்களாக பார்த்து வருகிறேன், இது இப்படி தான் ஏறும், இறங்கும்’ என வெறும் விலைகளை மட்டும் பார்க்காமல் அதன் நிதி சார்ந்த தன்மைகளை கவனியுங்கள். நிறுவனத்தின் நிதி அறிக்கை எப்படி உள்ளது, கடன் ஏதும் உள்ளதா, பொருளாதார மந்தநிலை காலங்களில் நிறுவனம் எவ்வாறு செயல்படுகிறது, அதன் தொழில் போட்டி என்ன என்பதை அறிந்து வைத்திருப்பது அவசியம்.

பங்குச்சந்தையில் ஒரு நிறுவன பங்கு வர்த்தகமானாலும், உண்மையில் அந்த நிறுவனத்திற்கு தொழில் சரியாக நடைபெற்றாக வேண்டும். வெறுமென பங்கு விலையை மட்டும் கவனிக்காமல், மதிப்பீட்டுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். மதிப்பீடு சில சமயங்களில் தவறாக போனாலும், அதனால் வரக்கூடிய இழப்பு குறைவே, அது ஏற்றுக்கூடியதாகவும் இருக்கும்.

சில சமயங்களில் நல்ல நிறுவன பங்குகளும், மதிப்பீடு செய்யாமல் தவறான விலையில் வாங்கும் போது உங்களுக்கு நட்டத்தை ஏற்படுத்தலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

பினோலக்ஸ் கேபிள்ஸ் – பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வு அலசல்

பினோலக்ஸ் கேபிள்ஸ் – பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வு அலசல் 

Finolex Cables – Fundamental Analysis – Stock Market

1958ம் ஆண்டு சாப்ரியா சகோதரர்களால் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம் பினோலக்ஸ். துவக்கத்தில் மின் கேபிள்களை விற்கும் சிறிய கடையை அமைத்த இவர்கள் பின்பு தொழிற்துறை மற்றும் பாதுகாப்பு துறை சார்ந்த கேபிள்களை தயாரிக்க முடிவு செய்தனர். வாகன துறைக்கு தேவையான பி.வி.சி. காப்பிடப்பட்ட(PVC Insulated) கேபிள்களை தயாரித்து விற்பனை செய்து வந்தனர்.

நிறுவனத்தில் ஏற்பட்ட தொடர்ச்சியான விரிவாக்கம் மற்றும் நவீனமயமாக்கல் நிலையை வாய்ப்பாக பயன்படுத்தி பினோலக்ஸ் நல்ல வளர்ச்சியை கண்டது. 1980ம் ஆண்டுக்கு பிறகு நாட்டின் மிகப்பெரிய கேபிள் உற்பத்தியாளராக தன்னை வடிவமைத்து கொண்டது இந்த நிறுவனம். 1981ம் ஆண்டு பினோலக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்(FIL) நிறுவப்பட்டது. விவசாய துறைக்கு தேவையான பி.வி.சி. உயர்ரக குழாய்கள்(Pipes), பி.வி.சி. பிசின் உற்பத்தி(Resin) மையம், குறைந்த மின்னழுத்த கேபிள்கள் என தனது தயாரிப்பு நிலையை உயர்த்தி கொண்டது.

1983ம் வருடம் பினோலக்ஸ் கேபிள் நிறுவனம் பொது பட்டியலிடப்பட்ட நிறுவனமாக மாற்றப்பட்டு, பங்குச்சந்தைக்கு வந்தது. இந்த துறையில் காணப்பட்ட உலகின் பெரு நிறுவனங்களுடன் கூட்டாக இணைந்து ஜெல்லி நிரப்பப்பட்ட தொலைபேசி கேபிள்கள், ஒளியியல் இழை(Optical Fibre), செப்பு கம்பி(Copper Rod) ஆலை என தனது தொழிலை விரிவாக்கம் செய்து கொண்டது. 2000ம் ஆண்டுக்கு பிறகு ஒளியியல் இழை, கண்ணாடி இழை, விளக்குகள் மற்றும் மின் சுவிட்சுகள் தயாரிப்பில் தனக்கென முக்கிய இடத்தை பிடித்து கொண்டது பினோலக்ஸ்.

2011ம் ஆண்டில் ஜப்பானை சேர்ந்த சுமிட்டோமோ நிறுவனத்துடன் கூட்டு ஒப்பந்த அடிப்படையில் உற்பத்தி ஆலைகள், 2014ம் ஆண்டில் 5.5 மெகாவாட் திறன் சோலார் ஆலை, 2016ம் ஆண்டு வாக்கில் மின்விசிறி, நீர் சூடாக்கிகள்(Water Heaters), சுவிட்ச் கியர் என தனது உற்பத்தி ஆலைகளை பரவலாக்க செய்தது. இதன் பொருட்கள் பிரபலமான பிராண்டுகளாகவும் மாறின. மின் மற்றும் தொலைத்தொடர்பு சாதனங்கள் தயாரிப்பில் நாட்டின் தவிர்க்க முடியாத நிறுவனமாக பினோலக்ஸ் இருக்கிறது.

முதலீட்டாளர்களுக்கு செல்வத்தை அள்ளிக்கொடுத்த பங்குகளில் பினோலக்ஸ் குழுமம் உள்ளது. உலகின் மறைக்கப்பட்ட சாம்பியன்(Hidden Champion) நிறுவனங்களில் முதல் 150 இடங்களுக்குள் பினோலக்ஸ் நிறுவனம் அங்கம் வகிக்கிறது. நிறுவனத்தின் முக்கிய வாடிக்கையாளராக இந்திய ரயில்வே, பாதுகாப்பு துறை மற்றும் மெட்ரோ ரயில் நிறுவனங்கள் உள்ளது.

பினோலக்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.4,200 கோடி. புத்தக மதிப்பு 178 ரூபாயாகவும், வட்டி பாதுகாப்பு விகிதம் 288 மடங்குகளிலும் உள்ளது. கடனில்லா நிறுவனமாக(Debt free) இருக்கும் பினோலக்ஸ் நிறுவனர்களின் பங்களிப்பு 36 சதவீதமாக உள்ளது. பொதுவெளியில்(Public Holding) பினோலக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திடம் 15 சதவீத பங்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. நிறுவனர்கள் சார்பில் பங்குகள் அடமானம் வைக்கப்படவில்லை.

விற்பனை கடந்த ஐந்து வருடங்களில் 3 சதவீதம் மட்டுமே வளர்ந்துள்ளது. 10 வருட காலத்தில் காணும் போது இது 6 சதவீதமாக உள்ளது. லாபம், கடந்த ஐந்து வருடங்களில் 20 சதவீதமும், பத்து வருட காலத்தில் 14 சதவீதமாகவும் உள்ளது. நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பாக ரூ.2,688 கோடி சொல்லப்பட்டுள்ளது. பணவரத்தும், சொத்துக்களில் முதலீடு செய்வதும் கணிசமாக இருந்துள்ளது.

2019-20ம் நிதியாண்டு முடிவில் நிறுவனத்தின் விற்பனை ரூ.2,877 கோடியாகவும், செலவினம் 2,507 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. சொல்லப்பட்ட நிதியாண்டின் முடிவில் ரூ.402 கோடி நிகர லாபமாக உள்ளது. பங்கு மூலதனத்தின் மீதான வருவாய்(Return on Equity) கடந்த ஐந்து வருட காலத்தில் 16 சதவீதமாக இருக்கிறது.

பணப்பாய்வு முறைப்படி(DCF Valuation) இந்த பங்கின் விலை ரூ.220 – 275 (with Margin of Safety) என்ற பெறுமானத்தை அடைகிறது. நடப்பாண்டின் மார்ச் மாத சந்தை வீழ்ச்சியில் பினோலக்ஸ் நிறுவன பங்கின் விலை, பங்கு ஒன்றுக்கு 160 ரூபாய் வரை விலை இறக்கம் கண்டது. அடிப்படை பகுப்பாய்வை பூர்த்தி செய்யும் இந்த நிறுவனத்தை சந்தை வீழ்ச்சியில் கண்டு முதலீடு செய்திருந்தால், தற்போதைய விலையில் 60 சதவீத ஏற்றமாக அமைந்திருக்கும்.

சமீப காலங்களில் நிர்வாகம் மற்றும் போட்டியாளர் சார்ந்த சவால்களை பினோலக்ஸ் நிறுவனம் சந்தித்து வருகிறது. இதனை களையும் நிலையில், பினோலக்ஸ் நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு வாய்ப்பாக அமையும். சுமார் 30,000 டீலர்கள் மற்றும் 4000க்கும் மேற்பட்ட விநியோகஸ்தர்களை கொண்டிருக்கும் இந்நிறுவனம் இந்திய சந்தையில் முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாக பார்க்கப்படுகிறது.

கவனிக்க: முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கும் முன் தகுந்த நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் முன்னிலையில் தங்களது முதலீட்டு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலே சொன்ன தகவல்கள் பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வுக்கான கற்றல் மட்டுமே.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை

www.varthagamadurai.com

துறை சார்ந்த பங்குச்சந்தை அடிப்படை கற்றல்

துறை சார்ந்த பங்குச்சந்தை அடிப்படை கற்றல்

வர்த்தக மதுரை சார்பாக பங்குச்சந்தை சார்ந்த தொழில் அடிப்படை கற்றலுக்கு(இணைய வழி) வரவேற்கிறோம்…

பங்குச்சந்தையில் ஈடுபட்டு வரும் முதலீட்டாளர்களுக்கும், பங்குச்சந்தையில் புதிதாக முதலீடு செய்ய உள்ளவர்களுக்கும் இந்த அடிப்படை கற்றல் உதவும்.

வார இறுதி நாட்களில் (சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமை) துறை சார்ந்த அடிப்படை வகுப்புக்கள் நடத்தப்படும். தொடர்ச்சியாக ஐந்து வாரங்களின் இறுதி நாட்கள், நான்கு துறைகள் மற்றும் அதனை சார்ந்த 10 முக்கிய பங்குகள் என அடிப்படை அலசல்கள் அமையும்.

உங்களை சுற்றியுள்ள நுகர்வு பொருட்கள் மற்றும் சேவைகளின் வாயிலாக பங்குச்சந்தையில் உள்ள ஒரு நிறுவன பங்கினை எவ்வாறு புரிந்து கொள்வது, அவை அளிக்கும் எண்ணிலடங்கா வாய்ப்புகள் மற்றும் அதன் மூலம் முதலீட்டு பெருக்கத்தை ஏற்படுத்துவது என்பதை சொல்லி கொடுக்க உள்ளோம்.

நிகழ்வில் எந்த தனிப்பட்ட பங்குகளையும் வாங்குவதற்கோ அல்லது விற்பதற்கோ பரிந்துரைப்பதில்லை. மாறாக, கற்றலின் மூலம் நீங்களே நல்ல நிறுவன பங்குகளை கணடறிவதற்கான வழிகாட்டியாக இந்த நிகழ்வு அமையும்.

Stock Insights - Meet II

பங்குகளை எந்த விலையில் வாங்க வேண்டுமென தெரியவில்லையா ?

அதிக வருவாய் தரும் துறைகள் மற்றும் பங்குகளை கண்டறிவது எப்படி ?

உங்களை சுற்றி காணப்படும் பங்குச்சந்தை நிறுவனங்களின் வாய்ப்புகள் மற்றும் லாபம் பார்ப்பது எப்படி ?

பங்குச்சந்தையில் கிடைக்கப்பெறும் தகவல்களை சரியான நிலையில் பயன்படுத்தி நஷ்டத்தை தவிர்ப்பது எவ்வாறு ?

வருகை தாருங்கள்…

பதிவு செய்ய: Stock Insights – Registration

நிகழ்வு நடைபெறுவதற்கான தேதி மற்றும் நேரம் உங்களது மின்னஞ்சல் மற்றும் கைபேசிக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை,

www.varthagamadurai.com

Disclaimer: Not a SEBI Registered Investment Adviser (RIA), However we are engaging with the Share Broking services, Mutual Fund Distribution, Insurance and more on as a Financial Consultant in the Personal Finance.

பங்கு முதலீட்டில் வாசிக்க வேண்டிய பத்து காரணிகள்

பங்கு முதலீட்டில் வாசிக்க வேண்டிய பத்து காரணிகள் 

10 Factors to read in a Stock Market Investing

பங்குச்சந்தை முதலீட்டில் பணம் சம்பாதிக்க நீண்ட காலத்தில் பொறுமையுடன் அணுகுவது அவசியமானது. அதே வேளையில், ‘ ஏதோ ஒரு பங்கில் முதலீடு செய்து விட்டு, 10 வருடங்கள் காத்திருந்தேன். பங்கு விலை இப்போது சரிந்து விட்டதே. எனது முதலீட்டில் 70-80 சதவீத தொகையை இழந்து விட்டேன் ‘ என நம்மில் பலர் புலம்புவதை பார்த்திருப்போம். இது பொதுவாக முதலீட்டில் உள்ள அனைவருக்குமான விஷயம் தான்.

நீங்கள் 10 வெவ்வேறு நிறுவன பங்குகளை முதலீட்டில் வைத்திருந்தாலும், அனைத்து பங்குகளும் உங்களுக்கு உடனடியாக முதலீட்டு பெருக்கத்தை ஏற்படுத்தாது. 5-10 வருட சுழற்சி முறையில் ஒவ்வொரு பங்குகளும், வேறுபட்ட காலத்தில் தனது ஏற்ற-இறக்கத்தை காணும். நீண்டகாலத்தில் முதலீடு செய்து பண பெருக்கத்தை ஏற்படுத்த பெரிதாக மெனக்கெட தேவையில்லை எனலாம். இருப்பினும் சில அடிப்படை காரணிகளை நாம் வாங்கிய அல்லது வாங்க போகும் பங்கு நிறுவனத்தில் அலசி ஆராய்ந்து விட்டால், நமக்கான வேலை அவ்வளவு தான்.

நல்ல நிறுவன பங்குகளின் விலை குறுகிய காலத்தில் ஏறவில்லை என்றாலும், நீண்டகாலத்தில் முதலீட்டாளருக்கு பயன் தராமல் போகாது. நல்ல நிறுவன பங்குகள் எனும் போது கடனில்லா நிறுவனங்கள், நல்ல நிர்வாக திறமை, நிறுவனர்களின் தொழில் நாணயம், வருவாயில் சராசரி வளர்ச்சியாக இருப்பினும் நெடுங்காலமாக தொழில் செய்து வருவது ஆகியவற்றை சொல்லலாம்.

மேலே சொல்லப்பட்ட நல்ல நிறுவன பங்கின் தன்மையை மேலும் சில காரணிகளை கொண்டு நாம் அறியலாம். அது போன்ற பத்து காரணிகள் இங்கே,

 • இ.ஐ.சி. கட்டமைப்பு (EIC Framework) முறையில் ஒரு நிறுவன பங்கினை புரிந்து கொள்வது
 • நிர்வாகத்திறன் எப்படி என்பதனை அறிந்து கொள்வது அவசியம்
 • நிறுவனத்தின் நிதி அறிக்கையை அடிப்படையாக கற்று கொள்வது
 • விற்பனை மற்றும் லாப வளர்ச்சி எவ்வாறு உள்ளது ?
 • பங்கு முதலீட்டின் மீதான வருவாய் (Return on Equity)
 • மூலதனத்தின் மீதான வருமானம் (Return on Capital Employed)
 • ஒரு பங்கின் வருவாயை அதன் விலையுடன் ஒப்பிட்டு காண்பது (PE)
 • நிறுவனத்தின் கடன் எப்படி ? (கடன்-பங்கு விகிதம் – Debt to Equity)
 • நிறுவனர்களின் பங்கு பங்களிப்பு மற்றும் பங்கு அடமானம்(Holding & Pledging)
 • மதிப்பீடுகள் அவசியமானது, நீங்கள் வாங்க வேண்டிய பங்கு விலை என்ன ? (Price is what you pay, value is what you get)

இந்த பத்து காரணிகளை நாம் ஒரு நிறுவன பங்கில் தேட ஆரம்பித்தாலே நமக்கான நீண்டகால செல்வவளம் பெருக்கும் முதலீட்டை அறியலாம். தரகர் சொன்னார், நண்பர் பரிந்துரைத்தார், ஊடக செய்தியில் கண்டேன், வாட்சாப் அல்லது டெலிகிராமில் பகிரப்பட்டது என ஏதாவது ஒரு பங்கினை வாங்கி மாட்டிக்கொள்வதை விட, உங்களது முதலீட்டு சிந்தனையையும் சிறிது மெருகேற்றி கொள்ளுங்கள்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை

www.varthagamadurai.com