Tag Archives: personal finance

உலக இரத்தக்கொடை தினம் இன்று – உங்களுக்கான நிதி பாடங்கள் என்ன ?

உலக இரத்தக்கொடை தினம் இன்று – உங்களுக்கான நிதி பாடங்கள் என்ன ?

Blood Donors Day – June 14 – Ready for your Personal Finance

ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதத்தின் 14ம் நாள், உலக இரத்தக்கொடை தினமாக சிறப்பிக்கப்படுகிறது. இரத்த தானம் செய்வதால் கிடைக்கப்பெறும் பலன்கள் மற்றவர்களுக்கு மட்டுமல்ல, நமக்கும் தான். இரத்த தானம் செய்வதன் மூலம் நமது இதயத்தை பாதுகாப்பது, புற்றுநோய் ஏற்படுவதை பெரும்பாலும் தவிர்ப்பது, இரும்பு சத்தினை கட்டுக்குள் வைத்திருப்பது, உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்களை மேம்படுத்துதல், உடல் எடையை சரியான முறையில் பராமரித்தல் மற்றும் பக்கவாதம் ஏற்படுவதை குறைத்தல் போன்ற பல நன்மைகள் உண்டு.

நம்மிடம் உள்ள இரத்தத்தை நாம் சிறந்த முறையில் நிர்வகிப்பது போல, நாம் ஈட்டும் வருமானத்தையும் சிறப்பாக நிர்வகிக்க  கற்று கொண்டால், நாமும் செல்வந்தர்களை போன்று செல்வச்செழிப்புடன் வாழலாம். சரியான நிதித்திட்டமிடலை ஏற்படுத்துவதன் மூலம், பின்னாளில் மற்றவர்களின் நிதி ஆதாரத்தை எதிர்பார்க்க வேண்டியதில்லை. நம்மை ஆளும்(Governing) அரசையும் நாம் குறை கூற வேண்டிய நிலை இருக்காது.

நிதித்திட்டமிடலில் நாம் செய்ய வேண்டிய உடனடி வழிமுறைகள் இதோ…

 • நிதி பாதுகாப்பு:  நமக்கும், நமது குடும்பத்திற்கு தேவையான மருத்துவ காப்பீட்டை எடுத்து கொள்ளுதல், போதுமான டேர்ம் காப்பீட்டு தொகையை உறுதி செய்தல், விபத்து காப்பீட்டின் தேவையை அறிதல்.
 • உங்களது ‘ஆல் டைம் கிரெடிட் கார்டு’: அவசர கால நிதியை(Emergency Fund) ஏற்படுத்துதல், நிதி இலக்குகளை நிர்ணயித்து சேமிப்பு மற்றும் முதலீட்டை மேற்கொள்ளுதல். உங்களது நிதி இலக்குகள் குறுகிய காலம் முதல் நீண்டகாலம் வரை இருக்கலாம்.
 • தலைமுறைக்கான பெரும் செல்வம்: பங்கு முதலீட்டின் மூலம் அடுத்த தலைமுறைக்கான செல்வத்தை ஏற்படுத்தலாம். ரியல் எஸ்டேட் மற்றும் தங்கத்தில் முதலீடு செய்வது போல பங்குச்சந்தையிலும் நீண்டகாலத்தில் முதலீடு செய்து வருவதன் மூலம் பெரும் செல்வத்தை காணலாம். வெறுமனே நாள் வணிகத்தில் ஈடுபடுவதும், பங்குச்சந்தையை குறுகிய காலத்தில் அணுகுவதும் ஆபத்தான மற்றும் விரயமான ஒன்று.  
 • ‘உலக நாயகன்’ எனும் அஸெட் அலோகேஷன்(Asset Allocation): எந்தவொரு தனிப்பட்ட முதலீட்டு சாதனமும்(Investment product) எல்லா வருடமும் லாபத்தை மட்டுமே அளிக்காது. பொருளாதாரம் சரியில்லை என்றால், பங்குச்சந்தையும், ரியல் எஸ்டேட் துறையும் சுணக்கம் காணும். அதே வேளையில் தங்கம் போன்ற முதலீடுகள்(Hedging) ஏற்றத்தை பெறும். பொருளாதாரம் சீராகும் போது, தங்கத்தின் மீதான முதலீட்டு தேவை குறைந்து அவற்றின் வருவாயும் குறைந்து காணப்படும். ஆனால் நீண்டகாலத்தில் பெரும்பாலான சர்வதேச மற்றும் பொருளாதாரம் சார்ந்த முதலீடுகள் பணவீக்கத்தை தாண்டிய வருமானத்தை அளிக்கும். எனவே, எந்தவொரு முதலீட்டு சாதனத்திலும் அதன் எதிர்கால வருவாயை கணிக்க முற்படாமல், கலவையாக முதலீடு செய்து வருவதன் மூலம் கணிசமான வருவாய் விகிதத்தை நீண்டகாலத்தில் ஏற்படுத்தலாம்.
 • ரிஸ்க் புரொபைலிங்(Risk Profiling): சேமிப்பு மற்றும் முதலீடு சார்ந்த விழிப்புணர்வை நாம் எப்போதும் ஏற்படுத்தி கொள்வது அவசியம். நமக்கு தெரிந்த மற்றும் புரியக்கூடிய திட்டங்களில் மட்டும் முதலீடு செய்வது, புரியாத விஷயங்களை பற்றி, அதன் துறை சார்ந்த நபர்களிடம் கேட்டு தெரிந்து கொள்வது, நம்மால் எவ்வளவு தொகையை முதலீடு செய்ய முடியும் மற்றும் எந்தளவு இழப்பை தாங்க கூடிய திறன் நமக்கு உண்டு என்பதனை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். பணவளக்கலை சார்ந்த புத்தகங்களை படிப்பதன் மூலம், நாம் இவற்றை அறிந்து கொள்ளலாம். 

இளம்வயதில் உள்ள நல்ல வருமானம் ஈட்டும் ஒருவர், நிதி திட்டமிடலில் ரிஸ்க் எடுக்காமல் இருப்பது – தனது ஓய்வுக்காலத்தில் ஓய்வூதியத்தை மட்டுமே கொண்டு வாழும் ஒருவர், பங்குச்சந்தையில் அதிக ரிஸ்க் எடுத்து லாபமீட்டலாம் என எண்ணுவது – இரண்டும் தவறு தான்.

      

நிதி சார்ந்த விழிப்புணர்வு அவசியம் !

சேமிப்பு மற்றும் முதலீட்டை மேற்கொள்ளுவதன் மூலம், நாம் மட்டுமில்லாமல் நமது நாட்டின் பொருளாதாரமும் மேம்படும் !

சிறு துளி பெருவெள்ளம் – உயிர்த்துளி இரத்த தானம் !

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

Advertisement

கார்த்திக் குமார் கருப்பசாமி… உண்மை கதை… நீங்கள் எடுக்க வேண்டிய உடனடி முன்னெடுப்புகள் !

கார்த்திக் குமார் கருப்பசாமி… உண்மை கதை… நீங்கள் எடுக்க வேண்டிய உடனடி முன்னெடுப்புகள் ! 

True story not to inspire, Immediate steps you need to take – During this Emergency 

 

க. கார்த்திக் குமார் – எனது அருமை கல்லூரிக்கால நண்பன். நடப்பு 2021ம் வருடத்தின் மே மாதம் இரண்டாம் வாரத்தில் கொரோனா பெருந்தொற்று துயரத்தில் மறைந்தான். கல்லூரி காலத்தில் மட்டை பந்து(Cricket) விளையாட்டில் எங்கள் வகுப்பின் சார்பாக துவக்க ஆட்டக்காரராக களமிறங்குவான் கார்த்திக். பல ஊர்களில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளுக்கு அவனை பரிந்துரைப்பவர்கள் ஏராளம். 

 

கல்லூரிக்காலம் முடிந்த பின்னர் எங்களது துறைக்கு சம்மந்தமில்லாத காப்பீட்டு துறையில் வேலைக்கு சென்றிருந்தாலும், நீண்டகாலத்தில் ஒரே துறையில் பணி அனுபவம் கொண்டவனாக கார்த்தி இருந்தான். தனது இறுதி நாட்களின் போது, அவன் பிரபல காப்பீட்டு நிறுவனத்தின் நிர்வாக பிரிவில் வேலை செய்து வந்தது குறிப்பிடத்தக்கது. கார்த்திக்கு மனைவி மற்றும் இரு மகன்கள். கல்லூரி காலத்தில் தனது தந்தையை இழந்து, நிதி சார்ந்து சிரமப்பட்ட காரணத்தினால் தனது அடுத்த சந்ததியினர் அவற்றில் சிக்கி விடக்கூடாது என காப்பீட்டு விஷயத்திலும் மிகுந்த கவனத்துடன் இருப்பான்.

 

மனைவி, பிள்ளைகள் என வாழ்க்கை நன்றாக தான் ஓடி கொண்டிருந்தது. கூடவே கடனும்… பொதுவாக தனிநபர் ஒருவரின் வருவாயை கொண்டிருக்கும் குடும்பத்தில் கடன் என்பது அவரது பெரும்பாலான வாழ்நாட்களை ஆதிக்கம் செலுத்தும். நமக்கு பிடித்தவரை நாம் திருமணம் செய்து கொண்டு அரை நூற்றாண்டு வாழ்ந்தாலும், ஒருவருடைய பிரிவுக்கு பின்பு ஏற்படும் நிதி சிக்கலே பெரும்பாலான உறவுகளை அச்சப்படவும், கடந்த கால வாழ்க்கையை வெறுக்கவும் செய்யும்.

 

கணவன் தனது குடும்பத்தை நன்றாக பார்த்து கொண்டிருந்தாலும், தனது மறைவுக்கு பிறகு, குடும்பத்தினர் படும் நிதி சார்ந்த இன்னல்களை தவிர்க்க சில முன்னெடுப்புகளை எடுத்து தான் ஆக வேண்டும். கணவனின் வங்கி கணக்கு தகவல்கள், கடன் அட்டையின்(Debit & Credit Cards) நிலவரம், கடவுச்சொல்(Password), நிதி மற்றும் நிலம் சார்ந்த சொத்துக்களின் ஆவணங்கள், யாரிடமெல்லாம் கடன் வாங்கியிருக்கிறோம், யாருக்கெல்லாம் நாம் பணம் கொடுத்துள்ளோம், வங்கி டெபாசிட், நகை அடமானம், காப்பீடு, பங்குகள், பத்திரங்கள், நாமினேசன், இணைய வாலட்(Wallet), வேலை பார்த்த நிறுவனத்தில் உள்ள நிதி நிலவரம் – அப்பப்பா, இவ்வளவு விஷயங்களையும் தனது துணைவி கவனிக்க வேண்டுமா. 

 

“இருபது வயதினிலே தனக்கு பிடித்த ஒருவரை மணந்து, பிள்ளைகளையும் பெற்று, ஏதோவொரு தருணத்தில் தனது மன்னவனை இழந்து, பின்னர் அவன் சார்ந்த(மேலே சொன்ன அத்தனையும்) நிதி ஆதாரங்களை அவள் பெறுவதற்குள், ஏன் இந்த மனிதருடன் வாழ்ந்தோம், எதற்கு இவ்வளவு நிதிச்சிக்கல் என இளைப்பாறாமல் அலைக்கழிக்கப்பட்டால் ! அவள் தனது கடந்த கால மகிழ்வை இப்போது நினைவு கூறுவாளா ? “ 

 

மனைவிக்கு பிடிக்கவில்லை, புரிந்து கொள்ள முடியவில்லை என்றாலும், வருங்காலத்திற்காக பங்குகளிலும், காப்பீட்டிலும் தான் ஈட்டிய வருவாயை கொட்டி விட்டு, தான் மறைந்த பின்பு, தன் மனைவிக்கு புரிந்து விடுமா என்ன ? ‘நான் அப்போதே சொன்னேன், இந்த பங்குச்சந்தையெல்லாம் நமக்கு ஒத்து வராது என்று’ நடுத்தர வருவாய் கொண்ட கணவனிடம் கரிசனம் கொட்டி கொள்வாள் அவளது மனைவி. அதனால் தான் ஏனோ பணக்காரர்கள் ஏன் இன்னும் பணக்காரர்களாக இருக்கிறார்கள் என்று ! “ 

 

பொதுவெளியில் நிதி சார்ந்த தன்மைகளை(Personal Finance) நாம் புரிந்து கொள்ள மறுக்கிறோம். அதனை கற்றுக்கொள்ள துளியளவும் நாம் விரும்பவில்லை, ஆனால் பணத்தின் மீது தான் நமது அத்தனை ஆசையும். பக்கத்து வீட்டுக்காரர்களை போன்று வட்டமிட வேண்டும். ஆனால் இதற்காக நாம் வாங்கிய கடனை கட்ட வேண்டுமே. சேமித்தல், முதலீடு, கடன் வாங்கியது, கொடுத்தது – முடிந்தவரை அனைத்தையும் உங்களது துணைவருடன் பகிர்ந்து கொள்ளுங்கள், உங்கள் துணைவுக்கு பிடிக்காமல் இருந்தாலும். ஏனெனில் நீங்கள் பகிர்ந்து கொண்ட தகவலே, பின்னாளில் உங்களது மறைவுக்கு பின்பு அவர்களது நிதி ஆதாரத்தை பாதுகாக்கும். மேலும் அவர்களது மிச்சமிருக்கும் வாழ்வை பயனுள்ளதாக மாற்றும் !

 

நானும், கார்த்தியும் கடந்த 2014ம் ஆண்டு முதல் பங்குச்சந்தை சார்ந்த தகவல்களையும், புள்ளிவிவரங்களையும் பேசுவது வழக்கம். எங்களது பங்குச்சந்தை சார்ந்த உரையாடலுக்கு முன்னர், நாள் வணிகத்தில்(Intraday Trading) ஈடுபட்டு சில லட்சங்களை தான் இழந்ததாக கார்த்தி என்னிடம் சொல்லியிருந்தான். நான் அது சார்ந்த எச்சரிக்கையையும் அவனின் மனதில் செலுத்தினேன். முடிந்தவரை நீண்டகாலத்தில் முதலீடு செய்து பயன்பெறும்படி கூறி வந்தேன். ஆனால் அப்போது ஏற்பட்ட பங்குச்சந்தை இழப்பு, அவனது இழப்பை கடந்து இன்று அவனது குடும்பத்தினரிடம் கடனாக ! ஆம், கடனை அடைக்க மற்றொரு கடன் என்று சொல்வார்களே, அது தான்.

 

சில பங்குகளை அடிப்படை பகுப்பாய்வு(Fundamental Analysis) முறையில் ஆராய்ந்து எனது வாடிக்கையாளர்களுக்கு பரிந்துரைப்பது என்னுடைய வழக்கம். இதனை எனது நண்பன் என்ற முறையில் கார்த்திக்கும் பகிர்வேன். முதலீடு செய்தானா, இல்லையா என்பது இதுவரையிலும் தெரியாது. சில நாட்களுக்கு முன்பு, எனது மற்றுமொரு கல்லூரி நண்பர் திரு. சுப்பிரமணி மூலம் கார்த்தியின் பங்குச்சந்தை சார்ந்த கணக்குகள் பற்றி ஓரளவு தெரிய வந்தது. சுப்பிரமணி, கார்த்தியின் குடும்ப நண்பர் என்றே சொல்லலாம். கார்த்தியின் மறைவுக்கு பின்னர், அவனது குடும்பத்திற்கு சுப்ரமணியின் உதவி அளப்பரியது. கார்த்தியின் பள்ளிக்கால நண்பர்களும், எங்களது கல்லூரி நண்பர்களும் அவனது குடும்பத்தினருக்கு நிதி சார்ந்த உதவிகளை செய்ய முயற்சித்துள்ளோம்.

 

கார்த்தியின் பங்குச்சந்தை கணக்கு மூலம் தெரிய வந்தது, அவனது பங்கு முதலீட்டை காட்டிலும் பங்கு அடமானமும், அதனை சார்ந்த வட்டி அபராதமும் தான் அதிகம் இருந்தது. நீண்டகாலத்தில் அவன் முதலீடு செய்யாதது பெருத்த ஏமாற்றமே. இதனை தான் நம்மில் பெரும்பாலோர் செய்து கொண்டிருக்கிறோம். நல்ல வேலை மற்றும் சம்பளம் இருக்கையில், பங்குச்சந்தையில் பகுதி நேரமாக சம்பாதிக்கிறேன், ஈட்டும் வருவாயை காட்டிலும் பல மடங்கு பங்குச்சந்தையில் சில மாதங்களில் ஈட்டி விடுவேன் என்று இருக்கும் காசை இழப்பவர்கள் இங்கு ஏராளம். நாள் வர்த்தகத்தில்(Intraday Trading) மட்டுமே பணமீட்ட முடியும் என்ற மாயையில் பலர் மாட்டி கொள்கின்றனர். அரசு சார்பில் எவ்வளவு விழிப்புணர்வு அளிக்கப்பட்டாலும், நாமாக கற்று கொள்ளாமல் எதுவும் சிறந்ததாகி விடாது.

 

வங்கி டெபாசிட் வட்டி விகிதத்தை காட்டிலும் ஓரிரெண்டு சதவீதம் அதிகம் கிடைத்தால் போதும் என பண பெருமுதலைகள் இருக்கும் நிலையில், நடுத்தர வருவாய் கொண்டவர்கள் பேராசை கொண்டு பணத்தையும், நிம்மதியையும் இழக்கின்றனர். தனிநபர் நிதி திட்டமிடலில் பணப்பாதுகாப்பும், பணவீக்கத்தை தாண்டிய வருவாயும் தேவையே தவிர கொள்ளை லாபமல்ல. இது தான் கார்த்தியின் நிதி வாழ்விலும் ஏற்பட்டுள்ளது.

 

வருத்தப்படக்கூடிய நிலை என்னவென்றால், தனது இரு குழந்தைகளுக்காக எந்தவொரு நிதி இலக்கும் நிர்ணயிக்காமல் இருப்பதும், முதலீடு செய்யாமல் இருப்பதும் தான். காப்பீடு துறையில் வேலை பார்த்ததால், எண்டோவ்மென்ட் மற்றும் மணி பேக் திட்டங்களில் சிறிதளவு பணத்தை போட்டு வைத்துள்ளான். தனக்கும், தனது மனைவிக்குமான ஓய்வுகால திட்டமிடல் எதுவுமில்லை. அவசர தேவைக்கு பெரும்பாலும் நகை அடமானம், நண்பர்களிடம் வாங்குவது மற்றும் தனிநபர் கடனை(Personal Loan) சார்ந்திருப்பது.

 

இதனை நாம் ஒரு குறையாக சொல்ல முடியாது. மாறாக, அடுத்த தலைமுறைக்கான கற்றலாக தான் எடுத்து கொள்ள வேண்டும். நேர்மறையான விஷயம் என்னவென்றால் டேர்ம் காப்பீட்டை எடுத்திருந்தது தான். இப்போது அவனது சில லட்சங்களில் உள்ள கடனை அடைப்பதும், அவர்களது குடும்பத்திற்கான எதிர்கால பாதுகாப்பாகவும் வலம் வருவது இந்த டேர்ம் காப்பீட்டின் மூலம் கிடைக்கக்கூடிய தொகை தான். இருப்பினும் அவற்றில் நிலத்தை வாங்குகிறேன், ஆடம்பர பொருட்களை வாங்குகிறேன் அல்லது தவறான ஆலோசனையை யாரிடமும் கேட்காமல், பொறுமையாக திட்டமிடுவது சிறந்தது.

 

தேவையெனில் தகுந்த நிதி ஆலோசகரை நியமித்து கொள்வது நன்று. சரியான திட்டமிடல் மூலம் இரு குழந்தைகளின் எதிர்கால தேவைகளையும், துணைவியின் ஓய்வு கால கார்பஸ் தொகையையும் ஏற்படுத்தி கொள்ளலாம். இங்கே கார்த்தியின் தாயாரை பற்றியும் பேச வேண்டும். ஓய்வூதியதாரராக இருக்கும் கார்த்தியின் தாயார், இவர்களது குடும்பத்தில் அரவணைக்கும் போது அனைவரது நிதி நலனும் பாதுகாக்கப்படும். இது அந்த குடும்பத்தின் தனிநபர் நலனை பொறுத்து உள்ளது. 

 

இங்கே ஒரு நிதி ஆலோசகராக(Financial Consultant) நான் சொல்ல வேண்டிய பகிர்வு – உடனடி முன்னெடுப்புகள்: 

 

உனக்கு வந்தா ரத்தம், எனக்கு வந்தா தக்காளி சட்னியா ?

 • பிறரது பொருளாதார வாழ்க்கையோடு ஒப்பிட்டு குறைபட்டு கொள்ளாதீர்கள். உங்களது வாழ்வை எப்போதும் மனநிறைவாக வைத்திருக்க வேண்டிய விஷயங்களை கற்று கொள்ளுங்கள்.

 

 • பணத்தின் மீது ஆசைப்படுங்கள், கூடுமானவரை அவற்றை நிர்வகிக்க கற்று கொள்ளுங்கள்.

 

 

 • வரவுக்குள் செலவு என்பதனை விட, வரவுக்குள் சேமிப்பை ஏற்படுத்தி விட்டு பின்னர் செலவு செய்யுங்கள். சேமிக்க முடியவில்லை என உங்களை நீங்களே ஏமாற்றி கொள்ள வேண்டாம். மோசடி பேர்வழிகளிடம் பணத்தை இழக்க மட்டும் பணமிருக்கும் போது, உங்களுக்காக மற்றும் உங்களது குடும்பத்தினரின் நலனுக்காக நேர்மையாக சேமிக்கலாமே.

 

 • நிதி சார்ந்த தகவல்களை எப்போதும் உங்கள் துணையிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். அவர்களுக்கு புரியவில்லை என்றால், அதனை புரியவைக்கும் முயற்சியை எடுங்கள். இல்லையெனில், அவர்களுக்கான கருப்பு பெட்டி(Plane’s Black Box) எங்குள்ளது என்பதனையாவது சொல்லி வையுங்கள்.

 

 • நீங்கள் நம்பும் மற்றும் நெருங்கிய உறவுகளிடம் உங்களது நிதி சார்ந்த விவரங்களை பகிர்ந்து கொள்ள தயாராகுங்கள். அவசர காலத்தில், உங்கள் குடும்பத்தினருக்கு அவர்கள் உதவக்கூடும். நெருங்கிய உறவுகள் ரத்த சொந்தங்கள், உங்கள் பெற்றோரால் அறிமுகமானவர்கள், நண்பர், உடன் வேலை பார்ப்பவர்கள் என யார் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், உங்கள் நம்பகத்தன்மை அவசியம் !

 

 • உயில்(Will) எழுத பழகுங்கள்; வயதான காலத்தில் தான் உயில் எழுத வேண்டுமென்ற அவசியமில்லை. 18 வயது நிரம்பிய யாவரும் எழுதலாம் உயில்.

 

 • நாமினேஷன், சொத்துக்களை பகிர்தல், கூட்டு கணக்கு(Joint holding), நிதி சொத்துக்களை வாங்குவது மற்றும் விற்பதில் மற்றவருக்கு அதிகாரம் அளிப்பது(Power of Attorney), பெயர் மாற்றம் ஆகியவற்றை சரியாக திட்டமிடுங்கள். ஆவணங்களை பராமரிப்பதும் அவசியம்.

 

 • மின்னணு சார்ந்த அட்டைகள்(Credit, Debit Cards, UPI Payment app, Wallets), அறிக்கைகள் போன்றவற்றிற்கான கடவுச்சொல்லை(Passwords, Pattern & PIN) உங்கள் குடும்பத்தினரிடம் பாதுகாப்பாக சொல்லி வையுங்கள். பொதுவெளியில் அனைவருக்கும் தெரியும் படி எழுத அல்லது தெரியப்படுத்த வேண்டாம் என்று தான் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் கூறுகிறது. உங்கள் துணையிடம் பகிருங்கள். 

 

 • கைபேசி, மின்னஞ்சல், கணினியில் உள்ள ஆவணங்களை(Documents on Mobile, Email, Computer) குடும்பத்தினர் படிப்பதற்கான ரகசிய குறியீடுகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.

 

 • போதுமான டேர்ம் காப்பீட்டு(Term Insurance) தொகையை எடுங்கள். பிரீமியம் தொகையில் வாக்குவாதம் செய்ய வேண்டாம். உங்களுக்கு பிறகான தொகை தான் இங்கே அவசியம். உங்களது குடும்பத்தினரை பாதுகாக்க அது மட்டுமே அப்போது உதவும். உயிரோடு இருந்தால் எனக்கு பணம் ஏதும் வராதே என கவலை கொள்ள வேண்டாம். நீங்கள் பாலிசி காலம் முடியும் வரையில் உயிரோடு இருந்தால் அதனை விட வேறென்ன மகிழ்ச்சி !

 

 • தேவையான அளவு மருத்துவ காப்பீடு, அவசர கால நிதி(Emergency Fund), விபத்து காப்பீடு ஆகியவற்றை உறுதிப்படுத்துங்கள். குழந்தைகளுக்கான நிதி திட்டமிடல், ஓய்வுகால திட்டமிடல் ஆகியவற்றுக்கு தேவையான கார்பஸ் தொகையை சரியாக கணக்கிடுங்கள்.

 

 • எதிர்கால தேவைக்கு இன்சூரன்ஸ் திட்டத்தில் சேமித்து வருகிறேன் என தவறான கணக்கினை செய்து கொள்ள வேண்டாம். உங்களது வாழ்நாள் எதிரி – பணவீக்கம்(Inflation) உள்ளது. மறக்காதீர்கள், இதனை கருத்தில் கொண்டு சரியான முதலீட்டு திட்டத்தை தேர்ந்தெடுங்கள். 

 

 • மேலே சொன்னவற்றுக்கு பணம் நிறைய வேண்டுமே, என் சம்பளத்தில் இதனை செய்ய முடியாது, இவ்வளவு தேவையற்ற செலவா என அலுத்து கொள்ளாதீர்கள். காப்பீடு, பங்குகள், பரஸ்பர நிதிகள், பத்திரங்கள், வங்கிகள் எல்லாம் கார்ப்பரேட் சதி, இல்லுமினாட்டி என சொல்லி கொண்டே உங்களை நீங்களே ஏமாற்றி கொள்ள வேண்டாம்.

 

 • நீங்கள் பயன்படுத்தும் கைபேசி, நெட் பிளிக்ஸ், விவசாய உரம், இயற்கை வாழ்வு, துரித உணவு(Fast food), முகநூல், வாட்சப், யூடியூப், என்னுடைய தளம் உட்பட எல்லாம் கார்ப்பரேட் சதி தான். இதற்கு செலவு செய்யும் நாம், நேசிக்கும் குடும்பத்தை பாதுகாக்க, இந்த இல்லுமினாட்டி பயல்களிடம் இருந்து பாதுகாக்க உங்கள் இறப்பிற்கு பிறகான பாதுகாப்பை எடுத்து தான் ஆக வேண்டும். எனவே நிதி பாதுகாப்பை உறுதி செய்து விட்டு, அப்புறம் கார்ப்பரேட் சதியை முறியடிப்போம்.

 

 • உங்களுக்கு தெரியாத அல்லது புரிந்து கொள்ள முடியாத திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டாம். முடிந்தால் கற்று கொள்ள முயற்சி செய்யுங்கள். இல்லையெனில் விலகியிருங்கள். தவறான அணுகுமுறையை கொண்டிருக்க வேண்டாம்.

 

 • வரக்கூடிய காலம் மெய்நிகர் நாணயம்(Virtual or Digital Currency), செயற்கை நுண்ணறிவு(Artificial Intelligence), தகவல் தளம்(Data) மற்றும் தானியங்கி சேவையை அதிகமாக கொண்டிருக்கும். எனவே அதனை பற்றிய அறிவை உங்களது குடும்ப உறுப்பினர்களிடம் சிறிய வகையில் பகிருங்கள். மின்னணு முறையிலான பரிமாற்றத்தை ஏற்படுத்துவதற்கும் உங்கள் குடும்ப உறவுகளுக்கு சொல்லி கொடுங்கள். இணைய வழியிலான திருட்டுகளிடம் இருந்து எப்படி நமது பணத்தை மற்றும் தகவலை பாதுகாப்பது என்பதனை அறிந்து கொள்ளுங்கள்.

 

 • உடல்நலம் பேணுங்கள். நிகழ்காலத்தில் இருக்க கூடிய மிகப்பெரிய சொத்து அது தான். சுவர் இருந்தால் தான் சித்திரம் !

  

 • மோட்டிவேஷன் ஸ்டோரீஸ் அதிகம் வேண்டாம். சிரிக்க பழகுங்கள்; நல்ல நட்பு வட்டத்தை ஏற்படுத்தி கொள்ளுங்கள்; நல்ல உணவுகளை பகிருங்கள், குடும்பத்தின் அவசியம் உணருங்கள்; குழந்தைகளுக்கு நிதி சார்ந்த விளையாட்டுகளை கற்று கொடுங்கள், இயல்பாக இருங்கள். விஞ்ஞானமும், மெய்ஞ்ஞானமும் உங்கள் வாழ்வை மெருகேற்றும்.

 

எங்கும் எனது கண்டுபிடிப்பையும், சேவையையும் கொண்டு சேர்ப்பேன் என்றிருந்த நாடு, இன்று வல்லரசாக. எல்லாம் கிடைக்கப்பெற்றும் அடுத்த தலைமுறைக்கு சொல்லி கொடுக்காமல் மறைந்த உண்மைகள் பல, மற்றொரு நாட்டில்.

 

குடும்பத்தில் வெளிப்படைத்தன்மையுடன் இருங்கள் – குறைந்தபட்சம் நிதி சார்ந்து !

 

நாம் இந்த பூவுலகில் நிரந்தரமாக இருக்க போவதில்லை. இருப்பினும், வரும் முன் காப்பதே நலம் என நம் முன்னோர்கள் செய்து விட்டு சென்ற காரியங்கள் பல. நாமும் அதை தொடர்வோம், பின்வரும் சந்ததிகள் வருத்தப்படாமல் இருக்க…

 

#RIPKarthik

 

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com

                    

பொருளாதார சிக்கலில் இருந்து தப்பிக்க இந்த ஆறு விஷயங்களை கற்று கொள்ளுங்கள்

பொருளாதார சிக்கலில் இருந்து தப்பிக்க இந்த ஆறு விஷயங்களை கற்று கொள்ளுங்கள் 

6 Things to Learn on Personal Finance – Escape from the Economic Crisis

தனிநபர் நிதி சார்ந்த கற்றல் என்பது நம் நாட்டை பொறுத்தவரை தற்போதைய நிலையில் குறைவு தான். அதே வேளையில் சேமிப்பு என்ற ஒற்றை வார்த்தை நமக்கு பல காலமாக நம்முடைய குடும்பத்தில் இருந்துள்ளது. நுகர்வோர் சந்தையில் வெறுமென சம்பாதித்த பணத்தை செலவழிப்பது, எதற்கெடுத்தாலும் கடன் வாங்குவது, தேவையில்லாத பொருட்களை வீட்டில் வாங்கி குவிப்பது, எதிர்காலத்தில் இது தேவைப்படும் என உபயோகமில்லாத விஷயங்களை செய்வது என நாம் பொதுவாக நேரத்தையும், பணத்தையும் விரயமாக்கி வருகிறோம்.

ஒரு மனிதனின் அத்தியாவசிய தேவையென்றால் நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான் – உணவு, உடை மற்றும் உறைவிடம். நவீன யுகத்தில் அடிப்படை கல்வியும், பொருளாதாரம் சார்ந்த சில நிதி பாதுகாப்புகளும் மட்டுமே கூடுதல் தேவையாக இருக்கும். ஆனால் நாம் நிதி பாதுகாப்புகளை செய்வதை விட்டு விட்டு எண்ணிலடங்கா பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்கி குவித்து வருகிறோம். என் தாத்தா-பாட்டி காலத்தில் இருந்த சாமான்கள் இன்றும் என் வீட்டில் ஒரு ஓரத்தில் உள்ளது என சொல்வதை கேட்டிருப்போம்.

நம்மை சுற்றிய பொருட்கள் மற்றும் சேவைகள் ஒன்றும் கண்காட்சி பொருட்கள் அல்ல. அது பெருமையாக பேசக்கூடிய விஷயமும் அல்ல. தனிநபர் ஒருவர் தனக்கு தேவையில்லாத ஒரு பொருள் அல்லது சேவையை வாங்கும் போது , தேவைப்படும் ஒருவருக்கு அது கிடைக்காமல் செய்கிறது அல்லது அதன் விலை அதிகமாக கூடும்.

எனவே தேவையறிந்து, வாங்க கூடிய ஒவ்வொரு விஷயங்களையும் பயன்படுத்தும் நோக்கில் இருக்க வேண்டும். அப்படி சொல்லும் போது, தனிநபர் நிதி விஷயத்தில் ஆறு விஷயங்களை அடிப்படை நிகழ்வாக கற்று கொள்ளலாம்.

 • சேமிப்புக்கும், முதலீட்டிற்கும் இடையேயான புரிதல் 
 • பணவீக்கம்
 • நிதி இலக்குகளை திட்டமிடுதல்
 • காத்திருக்கும் ரகசியம்
 • கூட்டு வட்டியின் மகிமை – பள்ளிக்கால பணக்கார பாடம்
 • எந்தவொரு முதலீட்டையும் தொழில் போல அணுக கற்று கொள்ளுங்கள் 

பொதுவாக நம்மில் பெரும்பாலானோர் சேமிப்புக்கும், முதலீட்டிற்குமான வித்தியாசத்தை புரிந்து கொள்வதில் சிரமப்படுவர். எல்.ஐ.சி. நிறுவனத்தில் காப்பீடு திட்டத்தை வாங்கி கொண்டு நான் சேமிக்கிறேன் அல்லது முதலீடு செய்கிறேன் என நினைத்து கொள்வர். சேமிப்பு என்பது பெரிதாக வளரும் வாய்ப்பு இல்லாதது. அது பணவீக்கத்தை விட குறைவான வட்டி வருவாயை தான் கொண்டிருக்கும். உதாரணமாக, அஞ்சலகம், வங்கி, சீட்டு, தங்கம், ரொக்கம் ஆகியவற்றை சொல்லலாம். அஞ்சலகத்தில் கிடைப்பதை சிறு சேமிப்பு திட்டம் என்று தான் சொல்வர். அதனை முதலீடு என சொல்லப்படவில்லை.

முதலீடு(Investing) என்பது இரண்டு விஷயங்களை நிறைவு செய்பவை. ஒன்று தொடர் வருமானத்தை(Regular income or Cash Flow) ஏற்படுத்துவது, மற்றொன்று நீண்டகாலத்தில் அதனை வைத்து கொண்டு பின்னர் ஒரு நல்ல விலைக்கு விற்பதன் மூலம் லாபம்(Capital Appreciation) ஏற்படுத்துவது. ரியல் எஸ்டேட், பங்குகள், தொழில்கள் ஆகியவை முதலீடு என சொல்லப்படுவதுண்டு. ஏனெனில் அவை இரு வகையான வருமானங்களை தர கூடியவை. வெறுமென வீட்டு மனைகளை மட்டும் விற்காமல், வீட்டு வாடகை, வணிக வளாகங்கள் மூலம் கிடைக்க பெறும் தொடர் வருமானம், பங்குகளில் கிடைக்கும் டிவிடெண்ட் தொகை, தொழில்களில் கிடைக்கக்கூடிய வருமானம் ஆகியவற்றை சொல்லலாம். எதிர்காலத்தில் இந்த மூன்றையும் விற்றால் அதற்கும் லாபம் கிடைக்கும். எனவே சேமிப்பும், முதலீடும் ஒன்று அல்ல.

நினைவில் கொள்ளுங்கள், தங்கம் என்பது பணவீக்கத்தை ஒட்டியும், எதிர்பாராத பொருளாதார வீழ்ச்சி காலங்களில் மட்டுமே அதன் செயல்பாடுகள். அது ஒரு பெரிய முதலீட்டு வாய்ப்பு என சொல்லமுடியாது. நீங்கள் வாங்கக்கூடிய தங்கம் உங்கள் வாழ்நாளில் ஓரிரு நாட்களுக்கு மட்டுமே பயன்படும். அதுவும் தவிர்க்க முடியாத சூழ்நிலையில். உங்களுக்கு அது அடிக்கடி பயன்படக்கூடியது என நீங்கள் நினைத்தால், உண்மையில் உங்கள் நிதி நலனில் சில பிரச்சனைகள் உள்ளது என அர்த்தம்.

தங்கத்தின் மூலம் தொடர் வருமானத்தை ஏற்படுத்த முடியாது என்பதனால் தான் அது சேமிப்பு பிரிவில் உள்ளது. தங்கம் கடந்த 20 வருடங்களில் வங்கி டெபாசிட்டுக்கான வட்டி வருவாயை ஒட்டி தான் உள்ளது. டாலர் மதிப்பில் அது வர்த்தகமாவதன் காரணமாகவே தங்கத்தின் விலை அதிகரிப்பது போல தோன்றுகிறது. நாணயம் என்ற தொட்டுணரக்கூடிய விஷயம் இல்லையென்றால், தங்கத்திற்கும் மதிப்பு கிடையாது. இது தான் கடந்த வரலாற்றில் அலுமினியத்தில் நடந்தது.

மாத முதலீட்டிற்கும், மாத தவணைக்கும்(SIP vs EMI) உள்ள வேறுபாட்டை புரிந்து கொள்ளுங்கள். மாதாமாதம் சேமித்து அல்லது முதலீடு செய்து, முதிர்வில் ஒரு பொருளை வாங்க வேண்டுமா அல்லது இ.எம்.ஐ.(EMI) என கடன் வாங்கி ஒரு பொருளை வாங்க வேண்டுமா ? நீங்கள் கடன் மூலம் ஒரு பொருளை உடனே வாங்கி விட்டாலும், அந்த கடனை அடைக்கும் வரை அதற்கு நீங்கள் உரிமையாளர் கிடையாது. இது கடன் மூலம் பெற்ற வீடு, வாகனம், கைபேசி, குளிர்சாதனம் என அனைத்துக்கும் பொருந்தும். சேமித்த பணத்தை கொண்டு ஒரு பொருளை வாங்கினாலும் அதற்கு முழு உரிமையாளர் நீங்களே.

கிரெடிட் கார்டுகளில் கவனம் தேவை. உண்மையில் தொழில் செய்பவர்களுக்காக  அறிமுகப்படுத்தபட்ட கடன் அட்டைகள் தான் அவை. ஆனால் இன்று தொழில் புரிபவர்கள் அதனை தவிர்த்து மாத சம்பளக்காரர்கள் கடன் அட்டையை அதிகமாக பயன்படுத்துவது ஆரோக்கியமானதல்ல. தேவையில்லாமல் கடன் வாங்க கூடாது, கடனில்லா வாழ்வும் ஒரு சுகமே. வல்லரசான அமெரிக்காவில் தங்கள் வாழ்நாள் முழுவதும் கடன் அட்டையிலும், கடனிலும் தத்தளிப்பவர்களின் எண்ணிக்கை மட்டுமே 80 சதவீதத்திற்கு மேல். அமெரிக்காவில் தனிநபர் ஒருவரின் கடன் மட்டும் சராசரியாக 90,500 டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 68 லட்சம் ரூபாய்) !

பணவீக்கத்தை பற்றிய புரிதல் ஒவ்வொருவருக்கும் தேவை. தேவையில்லாத பதுக்கல், எதிர்பாராத கூடுதல் தேவைகள் தான் ஒரு பொருள் அல்லது சேவையின் விலையை நிர்ணயிக்கின்றன. அதிகமான உற்பத்தி இருக்கும் நிலையில், தேவை குறைவாக இருப்பின் அதன் விலை அதிகமாக இருக்காது. நீண்டகாலத்தில் பணவீக்கம் மோசமான விளைவை ஏற்படுத்த கூடிய ஒன்று.

நிதி இலக்குகளை திட்டமிடுதலின்(Financial Goals) அவசியம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தேவை. அவை குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால இலக்குகளாக இருக்கலாம். குடும்பத்திற்கான தேவையான அளவு காப்பீடு, மருத்துவம் சார்ந்த பாதுகாப்பு, அவசரகால நிதி போன்றவற்றை ஏற்படுத்தி விட்டு தான் நிதி இலக்குகளை திட்டமிட வேண்டும்.

பணத்தின் மூலம் பணம் பண்ணும் கலை காத்திருத்தல்(Delayed Gratification) மூலமே கிடைக்கும். உலகின் பெரும்பாலான பணக்காரர்கள் எளிமையான வாழ்க்கையை கொண்டிருப்பவர்கள் தான். தேவையில்லாத செலவுகளை தவிர்த்து, நீண்டகாலத்தில் முதலீடு செய்து அதனை அறுவடை செய்வது தான் அவர்களின் வேலை. நீண்டகால முதலீட்டிற்கு மட்டுமே அரசு சார்பில் வரி சலுகையும் கிடைக்கப்பெறுகிறது, குறுகிய கால லாபத்திற்கு அல்ல.

கூட்டு வட்டியின் மகிமை நமது பள்ளிக்கால பாடத்தில் இருந்த ஒரு பக்கம் தான். ஆனால், உண்மையில் நாம் கல்வியை முடித்து விட்டு வேலைக்கு சென்றவுடன் அதனை மறந்து விட்டோம். அதிகமாக சம்பாதிப்பது ஒன்றும் ஒருவரை உயர்த்தி விடாது. கடனில்லாமல், அளவாக சம்பாதித்தாலும் நல்ல ஒழுக்கத்தை ஏற்படுத்தி கொண்டு எளிமையாக வாழ பழகினால் அதுவே உயர்வாகும். இதனை தான் பெரும் பணக்காரர்கள் செய்து கொண்டிருக்கின்றனர். இளமை காலம் முதல் செய்யப்படும் தொடர் முதலீடு தான் ஒருவரின் செல்வத்தை உயர்த்துகிறது.

நீங்கள் ஹீரோவா, ஜீரோவா ? EMI VS SIP

முதலீட்டை மேற்கொள்ளும் முன்னர், ஒவ்வொரு விஷயத்தையும் ஆராய்ந்த பின்னர் தான் அதற்கான முதலீட்டு முடிவை எடுக்க வேண்டும். வெறுமென போன்சி  (மோசடி திட்டம் – வட்டிக்கு பெரும் வட்டி) பேர்வழிகளிடம் மாட்டிக்கொண்டு எனக்கு மாதாமாதம் பணம் வருகிறது என சொல்லிக்கொண்டு ஏமாற வேண்டாம். உண்மையில் நம் முதலீட்டை கொண்டு ஒருவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதனை அறிவது அவசியமாகும். உங்கள் பணத்தை கொண்டு ஒருவர் நேர்மையாக தொழில் செய்தால் மட்டும் தான், உங்களுக்கான வருவாய் நிச்சயம். இல்லையென்றால், அது திவால் தான்.

சொல்லப்பட்ட கற்றலின் மூலம் நமது நிதி சிந்தனை மேம்படும். அளவான வாழ்க்கையை வாழ இயலும், அளவில்லா மகிழ்ச்சியை பெற முடியும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை

www.varthagamadurai.com

வர்த்தக மதுரையின் நிதி அறிவு துளிகள் – பாகம் 4 விடைகள்

வர்த்தக மதுரையின் நிதி அறிவு துளிகள் – பாகம் 4 விடைகள்

Personal Finance – Survey / Polling

 

நமது வர்த்தக மதுரை தளத்தின் சார்பாக நிதி அறிவு துளிகள் என்ற தலைப்பில் நிதி சார்ந்த கேள்விகளும், அதற்கான பதில்களும் பெறப்படும். இது ஒரு வாக்கு பதிவு முறையில் அமையப்பெற்றது. உங்களுக்கான நிதி அறிவை நீங்கள் தற்சோதனை செய்து கொள்ள ஒரு தமிழ் களம்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

நான்காம் பாகத்திற்கான கேள்விகளும், அதற்கான விடைகளும் இங்கே…

 

 • பங்குச்சந்தையில் தினசரி வர்த்தகத்தின்(Intra Day) மூலம் விரைவாக செல்வம் சேர்க்கலாம் ?

 

விடை:   இல்லை.

 

விளக்கம்:  பொதுவாக பங்குச்சந்தை மற்றும் பங்கு சார்ந்த முதலீடுகள் ரிஸ்க் நிறைந்தவை. சந்தையில் வர்த்தகத்தின் போது ஏற்ற-இறக்கம்(Volatility) எப்போதும் காணப்படும். பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் ஒருவர் நீண்ட கால நோக்கத்தில் முதலீடு செய்யும் பட்சத்தில் பணவீக்கத்தை தாண்டிய வருமானத்தை நிச்சயம் பெறலாம்.

 

பங்குச்சந்தையில் நாம் பங்குகளை தினமும் வாங்கி விற்கலாம்(Intra day), குறுகிய காலத்தில்(Short term) வர்த்தகம் செய்யலாம் மற்றும் நீண்ட கால முதலீடாகவும் கொள்ளலாம். இது ஒவ்வொருவரின் தனிப்பட்ட முடிவே ஆகும். சந்தையில் தினசரி வர்த்தகத்தில் சிறிய முதலீட்டில் நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்ற வாய்ப்பு இருந்தாலும், எப்போதும் இது சாத்தியமில்லை. உதாரணத்திற்கு நாம் தினமும் பங்குச்சந்தையில் 5000 ரூபாய் சம்பாதிக்கலாம் என்பது நமது ரிஸ்க் திறனை பொறுத்தது. ஐயாயிரம் ரூபாய் லாபம் என்பது போல, அதற்கு நேரெதிரான நஷ்டத்திற்கும் வாய்ப்பு உள்ளது. ஆதலால் தினசரி வர்த்தகத்தின் மூலம் நாம் விரைவாக செல்வம் சேர்ப்பதற்கு வாய்ப்பு குறைவே. குறுகிய காலத்தில் பங்குச்சந்தையின் மூலம் பல மடங்கு லாபம் சம்பாதிக்கலாம் என்று யாரவது உங்களிடம் சொன்னால், எச்சரிக்கை தேவை – இது ஏமாற்று பேர்வழிகளின் போன்சி திட்டங்களாக(Ponzi Schemes) இருக்கலாம்.

 

 • வங்கிகளில் கிடைக்கும் வட்டி தொகைக்கு வரி செலுத்த தேவையில்லை ?

 

விடை: இல்லை (தவறு).

 

விளக்கம்: வங்கியில் கிடைக்கும் வட்டி வருமானம் வரி செலுத்துதலுக்கு

உட்பட்டது. சேமிப்பு கணக்கு மற்றும் வைப்பு நிதிகளுக்கு(Fixed Deposit) வழங்கப்படும் வட்டி, தனி நபர் ஒருவரின் வருமான வரம்பிற்கு உட்பட்டு வரி விதிக்கப்படும். வருமான வரிச்சட்டம் பிரிவு 80TTA ன் கீழ் ஒருவரின் சேமிப்பு கணக்கில் உள்ள வட்டி தொகை வருடத்திற்கு ரூ.10,000 க்கு மிகாமல் இருக்க வேண்டும். அதற்கு மேலாக கிடைக்கும் வட்டி தொகைக்கு வரி உண்டு.

 

வைப்பு நிதிக்கு கிடைக்கப்பெறும் வட்டி தொகைக்கு வங்கிகள் பொதுவாக டி.டி.எஸ்.(TDS) பிடித்தம் செய்யப்படும். வருமான வரி வரம்புக்குள் வராதவர்கள் வங்கிகள் பிடித்த தொகையை திரும்ப பெற சிறப்பு படிவத்தை(Form 15G & 15H) பூர்த்தி செய்யலாம். நடப்பு வருட பட்ஜெட் தாக்கலின் படி, உங்களின் வைப்பு நிதியில் உள்ள வட்டி தொகை(Interest Income) ரூ. 40,000 மற்றும் அதற்கு குறைவாக இருக்கும் நிலையில், வங்கிகள் உங்களிடம் பிடித்தம் செய்யாது. அதே வேளையில் நீங்கள் வருமான வரி செலுத்துபவராக இருந்தால், வரி தாக்கல் செய்யும் போது உங்களது வட்டி வருமானம் மற்றும் டி.டி.எஸ். பிடித்தம் பதிவு செய்யப்படும்.

 

 • நிதி சார்ந்த கல்வியை கற்பதற்கு நீங்கள் நேரம் ஒதுக்குவது உண்டா ?

 

நாம் கற்கும் எந்தவொரு கல்வியும் நமக்கும், நமது சமுதாயத்திற்கும் பயன்படுமாறு இருத்தல் வேண்டும். அது பண்பாடு அல்லது தொழில்நுட்பமாக இருந்தாலும் சரி. நாம் ஒரு நிறுவனத்தில் வேலைக்கு செல்வதற்கோ அல்லது தொழிலை தொடங்குவதற்கோ நம்மிடம் தேவையான அடிப்படை திறன்(Basic Skills) இருத்தல் வேண்டும். இதனை நாம் கற்ற கல்வி அல்லது வேலைப்பயிற்சி மூலமாகவோ நாம் பெற்றிருக்கலாம்.

 

நமக்கான வேலை அல்லது தொழிலை செய்வதற்கு முன், நாம் பல வருடங்கள் பள்ளி மற்றும் கல்லூரி கற்றலில் அனுபவம் பெறுகிறோம். பின்னர் ஒரு நிறுவனத்தில் ஆரம்பகட்ட நிலையில் வேலை செய்கிறோம். ஐந்து முதல் பத்து வருட தொழில் அனுபவத்திற்கு பிறகே, நாம் அந்த தொழிலை 50 சதவீதம் புரிந்து கொள்ளும் பக்குவம் நமக்கு வருகிறது.

 

பெரும்பாலோருக்கு ஒரே நிறுவனத்தில் தங்கள் வாழ்நாள் முழுவதும் வேலை செய்ய வேண்டிய சூழல் ஏற்படுகிறது. நாம் சம்பாதிப்பதற்காகவே நம் வாழ்நாள் முழுவதையும் செலவு செய்யும் போது, பொருளாதாரம் அல்லது நிதி சார்ந்த அறிவை(Financial Education) கற்பதற்கு நாம் எவ்வளவு நேரத்தை ஒதுக்குகிறோம் ?

 

நமது குடும்பத்திற்கான மாத வரவு-செலவு, குழந்தைகளுக்கான எதிர்கால நிதி திட்டமிடல், நமக்கான ஓய்வு கால திட்டமிடல், அவசர காலங்களுக்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்கிறோமா என்பதனை நாம் சிறிது நேரத்தை ஒதுக்கி தான் திட்டமிட வேண்டும்.

.

உலகின் மாபெரும் முதலீட்டாளர் மற்றும் பணக்காரர் வாரன் பப்பெட், பில் கேட்ஸ் போன்றோர் புத்தக வாசிப்புக்கு மட்டும் தினமும் ஆறு மணிநேரம் செலவிடுகின்றனர். நமக்கு நேரமில்லாமலா போகும் !

 

அட, நம்ம பேஸ்புக் நிறுவனர் மார்க்(Mark Zuckerberg) இரண்டு வாரத்துக்குள் ஒரு புத்தகத்தை படித்து முடித்து விடுகிறாராமே 🙂

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 • அவசர கால நிதி(Emergency Fund) என்ன என்பது உங்களுக்கு தெரியுமா ?

 

விளக்கம்: அவசர கால நிதி (Emergency Fund) என்றால் என்ன மற்றும் அதனை எவ்வாறு செயல்படுத்துவது என்பதை நாம் ஏற்கனவே கீழ்காணும் கட்டுரையில் பதிவிட்டுள்ளோம்.

 

அவசர கால நிதிக்கான திட்டமிடல்

 

அவசரகால நிதியை உருவாக்குவது எப்படி ?

 

 • உங்களுக்கு ஒரு விலையுர்ந்த கைபேசி(Smart Phone) வாங்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. உடனே EMI முறையில் வாங்குவீர்களா அல்லது அதற்கான பணத்தை சேர்த்து வைத்த பின் வாங்க முயல்வீர்களா ?

 

விளக்கம்: அவசரத்திற்கு தவணை திட்டம்(Equated Monthly Installment -EMI) உதவலாம். வருமுன் காப்பது நல்லதா, வந்த பின் வருந்துவதா ? மூளையை யோசிக்க விடுங்கள். கீழே உள்ள சிறு பதிவை படியுங்கள். பின்னர் நீங்களே சாமர்த்தியமாக முடிவெடுப்பீர்கள்.

 

நீங்கள் ஹீரோவா, ஜீரோவா ? EMI VS SIP

 

நிறைவு பெறுகிறது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

வர்த்தக மதுரையின் நிதி அறிவு துளிகள் – பாகம் 4

வர்த்தக மதுரையின் நிதி அறிவு துளிகள் – பாகம் 4

Personal Finance – Survey / Polling

 

மூன்றாம் பாகத்திற்கான கேள்விகளும், அதற்கான விடைகளும் இங்கே…

 

 • நீங்கள் ஒரு வங்கியில் ஒரு லட்ச ரூபாயை முதலீடு செய்கிறீர்கள். உங்களுக்கான வட்டி விகிதம் 8 சதவீதம். உங்களது முதலீடு எத்தனை வருடங்களில் இரட்டிப்பாகும் ?

 

விடை:       9 வருடங்கள்

 

விளக்கம்:  பணத்தை சேர்த்து வைப்பது என்னவோ பலருக்கு கஷ்டமான காரியமாக இருக்கலாம். ஆனால் நம்மில் பலருக்கு நாம் வைத்திருக்கும் பணம் இரண்டு மடங்காக மாறினால், மிகவும் சந்தோசப்படுவோம். நிதி கல்வியில் கூட்டு வட்டியின் பலன்(Compound Interest) முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அதே நேரத்தில், கூட்டு வட்டியின் தன்மை இல்லாமல் நமது பணம் குறிப்பிட்ட காலத்தில் இரட்டிப்பாவதற்கு வாய்ப்பு எங்கும் இல்லை.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

போன்சி திட்டங்களில்(Ponzi Schemes) நமது பணத்தை செலவு செய்து ஏமாற்றம் அடையாமல், பணம் எவ்வாறு இரு மடங்காகிறது என்பதை நாம் கற்று கொண்டாலே, நமக்கான முதலீட்டு வாய்ப்பை நாம் தேட செல்வோம். (Rule 72)விதி எண் – 72 என்ற எளிமையான கணக்கு நமது பணம் எத்தனை வருடங்களில் இரண்டு மடங்காக மாறும் என சொல்லிவிடும்.

Rule No. 72  = 72 / கிடைக்கக்கூடிய வட்டி விகிதம்

 

உதாரணத்திற்கு உங்களிடம் உள்ள ரூ. 1 லட்சம் எத்தனை வருடங்களில் இரு மடங்காகும் என்பதை அறிய, நமக்கு தேவையான தகவல் நமது பணத்தின் மதிப்பு மற்றும் கிடைக்கக்கூடிய வட்டி விகிதம். நீங்கள் ஒரு வங்கியில் ஒரு லட்ச ரூபாயை 8 சதவீத வட்டியில் முதலீடு செய்தால், 9 வருடங்களுக்கு பிறகு அது இரண்டு லட்ச ரூபாயாக (72/8 =9 Years) மாறும். இது ஒரு மனக்கணக்கு போல செயல்படும். இதே போன்று நமது பணம் மூன்று மடங்காக வேண்டுமானால், அதற்கான சூத்திரம்:

 

115 / கிடைக்கக்கூடிய வட்டி விகிதம்

 

 • நம் நாடு சுதந்திரம் பெற்ற வருடத்தில் ஒரு டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு எவ்வளவு ?

 

விடை:  4.16 ரூபாய்

 

விளக்கம்: 1947ம் ஆண்டு சுதந்திரம் பெறுவதற்கு முன், நம் நாடு பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்துள்ளதை நாம் அனைவரும் அறிவோம். அப்போதைய காலத்தில் நம் நாட்டின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி ரூபாய் – பவுண்ட்(Rupee – Pound) மதிப்பில் தான் வர்த்தகமாகி கொண்டிருந்தது. 1927ம் ஆண்டு முதல் 1966ம் ஆண்டு வரை நமது வர்த்தகம் ரூபாய் – பவுண்ட் மாற்றத்தில் நடந்துள்ளது கவனிக்கத்தக்கது. அப்போது ஒரு பவுண்ட் மதிப்பு 13 ரூபாய் (13.37) என்ற அளவில் இருந்தது.

 

அப்படியிருக்கும் சமயத்தில், ஒரு பவுண்டுக்கு நிகரான டாலர் மதிப்பு 4 டாலர் என்ற அளவில் இருந்து வந்துள்ளது. அதாவது ஒரு டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு – மூன்று ரூபாய்க்கும் மேலாக இருக்கிறது. எனவே நாம் சுதந்திரம் பெற்ற தருணத்தில்(இந்திய அரசியலமைப்பு துவக்கத்தின் போது), ஒரு டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 4.16 ரூபாய் என்ற அளவில் தான் உள்ளது. நாம் நினைப்பது போல ஒரு டாலர் – ஒரு ரூபாய் என்ற மதிப்பில் இல்லை. 1913ம் ஆண்டு வாக்கில் ஒரு டாலரின் மதிப்பு, இந்திய ரூபாயில் 9 காசுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 • லிக்விட் பண்ட்(Liquid Fund)  ___________ ?

 

விடை: ரிஸ்க் இல்லை

 

விளக்கம்: லிக்விட் பண்ட் என்பது பரஸ்பர நிதிகள் வழங்கும் கடன் சார்ந்த திட்டங்களாகும்(Debt Mutual Funds). இதில் பெறப்படும் முதலீடு அரசாங்க பத்திரங்கள், கருவூல மசோதா(Treasury Bills), வணிக ஆவணங்கள் மற்றும் வைப்பு சான்றிதழ்(Certificate of Deposit) போன்றவற்றில் முதலீடு செய்யப்படும். இவை பொதுவாக 91 நாட்களுக்குள் முதிர்வடையும் சாதனம்(Maturity) ஆகும். இவற்றில் ரிஸ்க் என்பது மிக குறைவு மற்றும் வங்கிகளில் உள்ள ரிஸ்க் தன்மையே லிக்விட் பண்டிலும் இருக்கும். எனவே இந்த பண்ட் வகைகளை ரிஸ்க் இல்லா முதலீடு(Risk Free) என்றே சொல்லலாம்.

 

லிக்விட் பண்டுகள் பொதுவாக வங்கி சேமிப்பு கணக்கு வட்டி விகிதத்தை விட அதிக வட்டி கொடுக்கும் குறுகிய கால முதலீட்டு சாதனமாக பயன்படும். வங்கியில் டெபாசிட்டுக்கான வட்டி விகிதம் குறையும் போதும், லிக்விட் பண்டுகளில் வட்டி விகிதம் சற்று அதிகமாக தான் காணப்படும்.

 • உங்களுக்கான நிதி இலக்குகள்(Financial Goals) என்ன என்பது உங்களுக்கு தெரியுமா ?

விளக்கம்: எந்தவொரு முதலீட்டையும் நாம் மேற்கொள்ளும் முன், அவற்றில் முதலீடு செய்வதற்கான காரணத்தை நாம் தெரிந்து வைத்திருப்பது அவசியம். என்னிடம் இவ்வளவு பணம் உள்ளது, எனக்கு இவ்வளவு மடங்குகள் பணம் வேண்டும் என நாம் பொதுவாக சொல்லிவிட முடியாது.

 

நாம் கற்க போகும் கல்விக்கு, ஒரு அடிப்படை நோக்கம் இருப்பது போல முதலீட்டிற்கும் நோக்கம் இருந்தாக வேண்டும். இதனை தான் நாம் நிதி இலக்குகள்(Financial Goals) என சொல்கிறோம். உதாரணத்திற்கு, 5 வருட கல்வி செலவு, குழந்தைகளின் மேற்படிப்பு மற்றும் திருமண செலவு, நான்கு சக்கர வாகனம் வாங்கும் திட்டம், ஓய்வு கால தொகை(Retirement Corpus), புதிய வீடு வாங்குதல் ஆகியவை நிதி இலக்குகள் என சொல்லலாம்.

 

நிதி இலக்குகளுக்கு முதலீடு செய்ய நம்மிடம் தேவையான பணம், காலம் மற்றும் தோராயமான வட்டியை அளிக்கும் முதலீட்டு சாதனம் அமைய பெற வேண்டும்.

 

குமார் என்பவருக்கு அடுத்த 15 வருடங்களில் தனது மகளின் மேற்படிப்புக்காக 10 லட்சம் ரூபாய் (இன்றைய மதிப்பில்) தேவை உள்ளது. 15 வருடங்களில் அவரது நிதி இலக்கினை அடைய தேவைப்படும் முதலீட்டு வாய்ப்பு – பங்குகள் / பரஸ்பர நிதிகள் / வங்கி வைப்பு நிதி / நிலம் / தங்கம். பொருத்தமான முதலீட்டு சாதனத்தை தேர்ந்தெடுப்பது நம் கடமை.

 

 • DICGC முறைப்படி உங்களது வங்கி சேமிப்பில் எவ்வளவு தொகைக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது ?

 

விடை:  ரூ. 1 லட்சம்  

 

விளக்கம்: பொதுவாக நம்மிடம் உள்ள காலங்காலமாக இருந்த நம்பிக்கை வங்கியில் பணம் போட்டால் அது பாதுகாப்பாக இருக்கும் என்பது. தற்போது அந்த நம்பிக்கையும் நம்மிடம் இல்லை எனலாம். வங்கிகளின் வாராக்கடன் சிக்கலுக்கு பின், வங்கிகளின் மேல் மக்களின் நம்பிக்கையும் குறைந்து விட்டது எனலாம்.

 

பாரத ரிசர்வ் வங்கியின் கீழ் இயங்கும் துணை நிறுவனம் தான் DICGC(Deposit Insurance and Credit Guarantee Corporation) எனப்படும் வைப்புத்தொகை காப்புறுதி மற்றும் கடன் உத்தரவாத கூட்டுஸ்தாபனம். இந்த நிறுவனம் நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளில் செய்யப்பட்ட வைப்பு தொகை, சேமிப்பு மற்றும் தொடர் கணக்கு தொகை, தொடர் வைப்பு தொகை(Recurring) ஆகியவற்றுக்கு காப்பீடு செய்யப்படும். சொல்லப்பட்ட கணக்கில் உள்ள தொகை அல்லது முதலீட்டிற்கு அதிகபட்சமாக ரூ. 1 லட்சம் வரை காப்பீடு எடுக்கப்படும். ஏதேனும் ஒரு காரணத்தால் வங்கியில் உள்ள நமது பணத்தை இழக்க நேரிட்டால், நமக்கு அதிகபட்சமாக ரூ. 1 லட்சம் வரை மட்டுமே கிடைக்கும்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

தனிநபர் ஒருவர் ஒரு வங்கியின் கீழ் பல்வேறு கிளைகளில் கணக்கு வைத்திருந்தாலும், அவருக்கு கிடைக்கக்கூடிய அதிகபட்ச காப்பீட்டு தொகை 1 லட்சம் ரூபாய் மட்டுமே. வெவ்வேறு வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் ஒருவருக்கு ஒவ்வொரு வங்கிகளின் கீழும் ஒரு லட்ச ரூபாய் வரை இழப்பீடு கிடைக்கும். காப்பீடு செய்யப்பட்ட தொகைக்கான ப்ரீமியத்தை குறிப்பிட்ட வங்கிகளே செலுத்த வேண்டும். வங்கிகள் சொல்லப்பட்ட ப்ரீமியத்தை செலுத்த தவறினால், வங்கியின் பதிவு மற்றும் காப்பீட்டை ரத்து செய்யும் அதிகாரம் DICGC க்கு உண்டு. எனவே வங்கிகளில் நீங்கள் வைத்திருக்கும் தொகைக்கு ஒரு லட்ச ரூபாய் வரை மட்டுமே இழப்பீடு(Rs.1 Lakh Insurance) தொகை கிடைக்கும் என்பதை மறவாதீர்கள்.

 

இந்த வார கேள்விகள்:

 

 • பங்குச்சந்தையில் தினசரி வர்த்தகத்தின்(Intra day) மூலம் விரைவாக செல்வம் சேர்க்கலாம் ?
 • வங்கிகளில் கிடைக்கும் வட்டி தொகைக்கு(Interest Income) வரி செலுத்த தேவையில்லை ?
 • நிதி சார்ந்த கல்வியை கற்பதற்கு நீங்கள் நேரம் ஒதுக்குவது உண்டா ?
 • அவசர கால நிதி(Emergency Fund) என்ன என்பது உங்களுக்கு தெரியுமா ?
 • உங்களுக்கு ஒரு விலையுர்ந்த கைபேசி(Smart Phone) வாங்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. உடனே EMI முறையில் வாங்குவீர்களா அல்லது அதற்கான பணத்தை சேர்த்து வைத்த பின் வாங்க முயல்வீர்களா ?

 

குறிப்பு:

 

நீங்கள் வாக்கு பதிவு செய்வதற்கான இணைப்பை காண முடியவில்லை என்றால், கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பதிவிடவும்.

 

https://www.surveymonkey.com/r/8QLXFGZ

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

வர்த்தக மதுரையின் நிதி அறிவு துளிகள் – பாகம் 3

வர்த்தக மதுரையின் நிதி அறிவு துளிகள் – பாகம் 3

Personal Finance – Survey / Polling

 

நமது வர்த்தக மதுரை தளத்தின் சார்பாக நிதி அறிவு துளிகள் என்ற தலைப்பில் நிதி சார்ந்த கேள்விகளும், அதற்கான பதில்களும் பெறப்படும். இது ஒரு வாக்கு பதிவு முறையில் அமையப்பெற்றது. உங்களுக்கான நிதி அறிவை நீங்கள் தற்சோதனை செய்து கொள்ள ஒரு தமிழ் களம்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

இரண்டாம் பாகத்திற்கான கேள்விகளும், அதற்கான விடைகளும் இங்கே…

 

 • வருமான வரியை சேமிக்க இன்சூரன்ஸ்(காப்பீடு) என்ற திட்டம் மட்டுமே உள்ளது ?

 

விடை:       இல்லை

 

விளக்கம்:  வருமான வரியை சேமிக்க இன்சூரன்ஸ் என்ற திட்டத்தை தவிர பல வழிகளில் நாம் வரி சேமிப்பினை பெறலாம். வருமான வரிச்சட்டம் பிரிவுகள் 80C, 80D, 80E, 80G, 80U மற்றும் மேலும் பல வகைகளில் வருமான வரியை சேமிக்கலாம். வரி சேமிப்பை அறிய,

 

வருமான வரி சேமிப்பு வழிகள்

 

வருமான வரி சேமிப்பிற்கு காப்பீடு திட்டத்தை மட்டுமே பயன்படுத்துவது சரியான அணுகுமுறை அல்ல.

 • நமது நாட்டில் தங்கத்தின் விலை மதிப்பு எதனை சார்ந்து மாறுகிறது ?

 

விடை: டாலர் மதிப்பு (Dollar)

 

விளக்கம்: பொதுவாக ஒரு நாட்டில் உள்ள நுகர்வோர் பயன்படுத்தும் பொருட்களுக்கு அல்லது சேவைகளுக்கு, உற்பத்தி மற்றும் தேவைக்கு உள்ள இடைவெளியே(Demand-Supply) அதன் விலை மதிப்பை நிர்ணயிக்கும். உற்பத்தி பெருகி தேவை குறைந்திருப்பின், பொருள் அல்லது சேவைக்கான விலை குறைவாகவே இருக்கும். மாறாக தேவைகள் அதிகமாகவும், அதற்கான உற்பத்தி குறைவாக இருக்கும்பட்சத்தில் விலைத்தன்மை அதிகமாக இருக்கும்.

 

நம் நாட்டில் தங்கத்தின் தேவை இறக்குமதி மூலமாக(Gold Imports) தான் பூர்த்தி செய்யப்படுகிறது. ஆகையால் உற்பத்தி என்பது நம் நாட்டை சார்ந்ததல்ல. விழாக்காலங்களில் நகைக்கடைகளில் தங்கம் விலை அதிகமாக இருக்கும் என்பது உள்ளூர் சந்தையில் ஆபரண தங்கத்தின் விலை மதிப்பு அதிகரிப்பதையே காட்டுகிறது. மாறாக தங்கம் மற்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதும், அதன் மதிப்பு அமெரிக்க டாலர்களில் தான் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பை பொறுத்தே தங்கத்தின் விலையும் பெறப்படும். ஆக தங்கத்தின் விலை தினமும் மாற்றம் பெறுவது பெரும்பாலும் டாலர் மதிப்பின் மாற்றமே.

 

 • பங்குச்சந்தையும், பரஸ்பர நிதிகளும்(Mutual Funds) ஒன்றா ?

 

விடை: இல்லை

 

விளக்கம்: பங்குச்சந்தையும், பரஸ்பர நிதிகளும் வெவ்வேறானவை. பங்குச்சந்தை சார்ந்த முதலீடுகள் பரஸ்பர நிதி திட்டங்களில்(Mutual Fund Schemes) உள்ளன. ஆனால் பரஸ்பர நிதிகளில் உள்ள அனைத்து முதலீட்டு வகைகளும் பங்குச்சந்தையில் நாம் காண முடிவதில்லை. இரண்டுமே செபி(SEBI) என்ற ஒழுங்குமுறை அமைப்பின் கீழ் நிர்வகிக்கப்பட்டாலும், அதற்கான வழிமுறைகள் வேறுபாடுகள் கொண்டவை.

 

பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் தங்களது முதலீடுகளை திரட்ட பொதுவெளியில் வருகின்றன. நிறுவனத்தின் வருவாயும், நிர்வாக திறனும் ஒரு முதலீட்டாளராக கவனிக்க வேண்டியது அவசியம். நாம் வாங்கிய பங்குகளின் நிறுவனம் சரியில்லை என்றால், நமது முதலீட்டிற்கு ரிஸ்க் அதிகம் தான். ஆதலால் தான் பங்குச்சந்தை ஒரு தொழில் சார்ந்த விஷயம் என்கிறோம்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

பரஸ்பர நிதிகள் என்பது டிரஸ்ட்(Sponsor or Trust) என்று சொல்லக்கூடிய அறக்கட்டளை அமைப்பு முறையில் இயங்கி வருவது. பரஸ்பர நிதிகளுக்கு பொதுவாக பங்குச்சந்தை நிறுவனங்கள் போன்று எந்த முதலீடும் தேவையில்லை. பரஸ்பர நிதிகள் வங்கிகள் போன்ற செயல்பாட்டு முறையை கொண்டிருக்கிறது. பரஸ்பர நிதிகளில் நீங்கள் சேமிப்பு கணக்கு, வைப்பு நிதி, ஆர்.டி. டெபாசிட்(Recurring Deposit), கடன் பத்திரங்கள், தங்கத்தில் முதலீடு, ரியல் எஸ்டேட் முதலீடு, அரசாங்க பத்திரங்கள் மற்றும் பங்குச்சந்தை சார்ந்த  முதலீடுகள் என பல வகை திட்டங்களை காணலாம்.

 

இங்கே சேமிப்பு கணக்கு என்பது லிக்விட் பண்ட்(Savings -Liquid Fund) எனவும், வைப்பு நிதி என்பது Lumpsum முதலீடு எனவும், ஆர்.டி. முறை SIP(Systematic Investment Plan) முதலீடு எனவும் பெயர் மாற்றம் பெறுகிறது, அவ்வளவே. வங்கி சேமிப்புகள் பாதுகாப்பானவை  என நாம் நினைத்தால், பரஸ்பர நிதி திட்டங்களும் பாதுகாப்பானவை தான், திட்டங்களை சரியாக தேர்ந்தெடுப்பது அவசியம்.

 • நிதி சார்ந்த கல்வியினை பெற நீங்கள் எவ்வளவு தொகையை செலவிட தயாராக உள்ளீர்கள் ?

விளக்கம்: நம் நாட்டில் சேமிப்பு என்ற பழக்கம் தொன்றுதொட்டு இருந்து வந்தாலும், முதலீடு என்ற சாதனத்தில் சிலர் மட்டுமே பங்குபெறுவது வருந்தத்தக்க விஷயம். உண்மையில் நாம் சொல்லும் வளர்ந்த நாடுகளில் வேலை வாய்ப்புகளோ, பணக்காரர்களோ அதிகமில்லை. மாறாக அங்கே தொழில் சார்ந்த விஷயங்களும், முதலீடு பற்றிய விழிப்புணர்வும் தான் தாக்கத்தை பெறுகிறது.

 

பொதுவாக நாம் முதலீடு செய்வதில் அக்கறை காட்டுவதில்லை என்றாலும், மிகவும் ரிஸ்க் எடுக்கும் தன்மை நம்மிடம் உள்ளது எனலாம். இன்றும் போன்சி திட்டங்கள்(Ponzi Schemes) என்னும் சதுரங்க வேட்டைகள், தங்க முதலீடு(Gold Scam), பிட் காயின்(Bitcoin) முதலீடு, இன்னும் நமக்கு தெரியாத என்னென்னவோ விஷயங்களை செய்து வருகிறோம். பின்பு சில காலங்களுக்கு அவை மறைந்து விடும். நம்மிடம் உள்ள குறுகிய கால அணுகுமுறை தான் நம்மை தவறான வழிகளில் பணத்தை முதலீடு செய்ய முனைகிறது. பெரும்பாலும் நாம் ஏமாற்றப்படுவது நம்முடைய பணத்தை இரட்டிப்பாக்கும் முயற்சியில் தான். புரிந்து கொள்ளுங்கள், வங்கி மற்றும் அஞ்சலக சேமிப்புகளில் உங்கள் பணம் இரட்டிப்பாக பத்து வருடங்களாகும். பங்குச்சந்தை மற்றும் தொழில்களில் நீங்கள் முதலீடு செய்தாலும் உங்கள் பணம் ஐந்து முதல் ஆறு வருடங்களுக்கு பின்னரே இரண்டு மடங்காகும். பங்குச்சந்தையில் நீண்டகால சராசரி வருமானம் 12-15 சதவீதம் மட்டுமே என்பதை மறந்து விடாதீர்கள்.

 

அப்படியிருக்க, போன்சி திட்டங்கள் என்றும் சொல்லப்படும் ஏமாற்று முறைகளில் ஒரு வருடம் முதல் மூன்று வருடங்களில் உங்கள் பணம் இரட்டிப்பாவது எவ்வாறு சாத்தியம் என்பதை சிந்தியுங்கள். உண்மையில் அப்படி ஒரு முதலீடு இருந்திருந்தால், ஏன் நம் நாட்டின் அம்பானியும், அதானியும், டாடா மற்றும் டி.வி.எஸ். நிறுவனமும் காலங்காலமாக தொழில் புரிய வேண்டும். அவர்களிடம் இல்லாத பணமா, முதலீடு செய்வதற்கு. அவர்கள் நினைத்திருந்தால் இது போன்ற ஏமாற்று திட்டங்களில் முதலீடு செய்து பல்லாயிரம் கோடிகளை பல மடங்காக மாற்றியிருக்கலாமே. மீண்டும் சிந்தியுங்கள்.

 

நாம் கற்ற கல்வி நமக்கு பல வருடங்களுக்கு பிறகே அதன் பயனை தருகிறது. நாம் நமக்கான கல்விக்கு செலவழித்த பணத்தை திரும்ப பெற, நம்மால் உடனே முடிவதில்லை. நமது மேற்படிப்பு கல்வி மூன்று முதல் ஐந்து ஆண்டு காலம் வரை உள்ளன. பின்பு நாம் அந்த துறையில் புதிய மனிதராக வேலை செய்கிறோம். ஐந்து வருட அனுபவத்திற்கு பிறகே நம்மால் அந்த துறையை பற்றிய ஒரு புரிதல் வருகிறது. அப்படியிருக்க முதலீடு என்ற விஷயத்திற்குள் நாம் நுழையும் போது, நாம் அதற்கான கல்வியை கற்கிறோமா, முதலீட்டை கற்று கொள்வதற்கு எவ்வளவு நேரத்தை செலவிடுகிறோம், அதற்கான செலவின விகிதம் ஆகியவை மிகவும் அவசியமான ஒன்று.

 

பொறியியல் படிப்பு முதல் மருத்துவ படிப்பு வரையிலான கல்விச்செலவை நாம் திரும்ப பெற, பல வருட காலங்களாகும்.

 

 • பங்குச்சந்தை(Share Market) ஒரு ___________ ?

 

விடை: தொழில்

 

விளக்கம்: பங்குச்சந்தை என்பது ஒரு சூதாட்டம் என்று சொல்லிக்கொண்டாலும், அது ஒரு தொழில் சார்ந்த விஷயமே. ஏன், பணக்காரர்கள் பணக்காரர்களாகவே இருக்கிறார்கள், ஏழைகள் ஏழைகளாகவே வாழ்ந்து வருகிறார்கள் என்பதற்கு திரு. ராபர்ட் கியோசகி(Robert Kiyosaki) அவர்களின், ‘ பணக்கார தந்தை, ஏழை தந்தை ‘ புத்தகமே சிறந்த உதாரணம்.

 

பணத்தை பற்றிய நமது கல்வி தான் பெரும்பாலும் நமது நிதி வாழ்க்கையையும் நிர்ணயிக்கிறது. ஐந்தாம் வகுப்பை தாண்டாத ஒருவர் மாபெரும் தொழிலதிபராக வருவதும், மெத்தபடித்தவர் வாழ்நாள் முழுவதும் வேலை செய்வதும் இதன் பின்னணியில் தான். பணம் மட்டுமே நம் வாழ்க்கையில்லை என நாம் சொல்லிக்கொண்டாலும், அதன் பின்பு தான் நாம் வாழ்நாள் முழுவதும் அலைந்து கொண்டிருக்கிறோம். மாறாக, பணத்தை நிர்வகிக்க தெரிந்தவர்கள் உண்மையில் தங்களுக்கு தேவையான விஷயங்களை மட்டுமே செய்து கொண்டிருக்கிறார்கள். இது அவர்களை மகிழ்வாகவும் வைத்து கொள்கிறது.

 

ஒரு மரக்கன்றை தண்ணீர் ஊற்றி, அதனை பாதுகாத்து மரமாக்க பல வருடங்கள் ஆகும். இதனை போன்று தான் ஒரு தொழிலும், பங்குச்சந்தையும். உண்மையில் பங்குச்சந்தையிலும், எந்தவொரு தொழிலிலும் குறுகிய காலத்தில் நாம் வேகமாக வளர்ந்ததாக வரலாறு சொல்லவில்லை. அது நீண்டகால பயணம் மட்டுமே. ஒரு துறையை பற்றி நாம் எந்த அடிப்படை விஷயங்களையும் கற்காமல், அதனை பற்றிய கருத்துக்கு நாம் எப்படி செவிசாய்க்க முடியும்.

 

உங்கள் ஐந்து வயது குழந்தையின் இயல்பான குணம், போட்டிகளை எதிர்கொள்ளும் திறன் மற்றும் கல்வி அறிவை அதன் இருபது வயதில் எவ்வாறு இருக்கும் என உங்களால் இப்போதே உறுதியாக கணித்து சொல்ல முடியுமா ?

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

ஒவ்வொரு பாகத்திலும் ஐந்து கேள்விகள் கேட்கப்படும், அதற்கான பதில்கள் கருத்து கணிப்பின் வடிவில் அமையப்பெறும். கேள்விகளின் சரியான பதில்கள் நமது இணைய தளத்தில் வாக்கு பதிவு நாள் முடிந்தவுடன் வெளியிடப்படும். கருத்து கணிப்பின் முடிவில் வாசகர்கள் தங்கள் நிதி சார்ந்த அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளலாம்.

 

இந்த வார கேள்விகள்:

 

 1. நீங்கள் ஒரு வங்கியில் ஒரு லட்ச ரூபாயை முதலீடு செய்கிறீர்கள். உங்களுக்கான வட்டி விகிதம் 8 சதவீதம். உங்களது முதலீடு எத்தனை வருடங்களில் இரட்டிப்பாகும் ?
 2. நம் நாடு சுதந்திரம் பெற்ற வருடத்தில் ஒரு டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு எவ்வளவு ?
 3. லிக்விட் பண்ட்(Liquid Fund)  ___________ ?
 4. உங்களுக்கான நிதி இலக்குகள்(Financial Goals) என்ன என்பது உங்களுக்கு தெரியுமா ?
 5. DICGC முறைப்படி உங்களது வங்கி சேமிப்பில் எவ்வளவு தொகைக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது ?

 

குறிப்பு:

 

நீங்கள் வாக்கு பதிவு செய்வதற்கான இணைப்பை காண முடியவில்லை என்றால், கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பதிவிடவும்.

 

Personal Finance – Survey 3

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com