Category Archives: investor awareness

சனிக்கிழமை எச்சரிக்கை(Saturday Warning) – 09-03-2024

சனிக்கிழமை எச்சரிக்கை(Saturday Warning) – 09-03-2024

Investor awareness Arena

கடந்த சில வாரங்களாக நமது வாசகர்களும், சில வாடிக்கையாளர்களும் (குறிப்பாக நெருங்கிய நண்பர்களும்) தாங்கள் ஏற்கனவே நீண்டகாலத்திற்கு முதலீடு செய்திருந்த பண்டுகளை சந்தையில் உள்ள மற்ற பண்டுகளுடன் ஒப்பிட்டு, அந்த பண்டு கடந்த ஒரு வருடத்தில் 50 சதவீதத்திற்கும் மேல் வருவாயை அளித்துள்ளது. நாம் ஏற்கனவே செய்துள்ள முதலீட்டை, இந்த பண்டில் மாற்றலாமே என கேட்கிறார்கள்.   

  • பங்குச்சந்தை உச்சத்தில் இருக்கும் போது, குறுகிய மற்றும் நடுத்தர காலத்தில் பெரும்பாலான பண்டுகள்(Mutual Funds) நிறைய வருவாயை கொடுக்கும். ஆனால், நீண்டகாலத்தில் இது சாத்தியமில்லை. 
  • ஒவ்வொரு காலத்திலும் வெவ்வேறு பண்டுகள் ராஜநடை போடும். இதனை மட்டுமே நாம் கணக்கில் எடுத்துக்கொண்டால் நீண்டகாலத்தில் நல்ல வருமானத்தை பெற இயலாது.
  • பொதுவாக அதிக வருவாயை கொடுக்கும் பண்டுகள், பின்னொரு காலத்தில் சரிவை சந்திக்கும். எனவே எச்சரிக்கையுடன் நமது முதலீட்டு நோக்கம், நம் குழந்தைகளுக்கான மற்றும் சந்ததிக்கான செல்வத்தை சேர்க்க முயல வேண்டும் ! 
  • பண்டுகளை அடிக்கடி மாற்றுகையில் அதற்கான செலவினமும், வரியும் உண்டு. சிறுதுளி பெரு வெள்ளம் என்பதனை கவனத்தில் கொண்டு, நீண்டகாலத்தில் பொறுமையாக முதலீடு செய்வதே நன்று. 
  • பண்டுகளை ஒவ்வொரு வருடமும் மதிப்பீடு செய்வது அவசியம். பண்டுகளை மாற்ற வேண்டுமா, கூடுதலாக முதலீடு செய்யலாமா அல்லது இந்த பண்டில் முதலீட்டில் குறைக்கலாமா என்பதனை உங்களது நிதி ஆலோசகரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். அவருக்கான வேலையை நீங்கள் கொடுக்கும் போது, உங்களுக்கான குழப்பம் தீரும்.
  • எந்தவொரு ஆலோசகரின் உதவியின்றி நீங்களாவே பங்குச்சந்தை அல்லது மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்ய நினைத்தால், சந்தை மற்றும் மியூச்சுவல் பண்ட் முதலீட்டுக்கான அடிப்படை காரணிகள் மற்றும் படிப்புகளை கற்பது அவசியம். கற்ற பின், முதலீடு செய்ய துவங்கலாம், தவறுகள் குறையலாம்.
  • பக்கத்து வீட்டுக்காரர் அந்த கார் மாடல் வைத்துள்ளார், எதிர் வீட்டுக்காரர் இந்த கைபேசி வைத்துள்ளார், மச்சான் இந்த பிரேஸ்லெட் அணிந்துள்ளார் என ஒவ்வொருடன் நாம் ஒப்பிட்டு கொண்டிருந்தால், நாம் நமக்கான இலக்கை அடைய முடியாது. நமக்கென்ன தேவை, நமக்கான நிதி இலக்குக்கான தொகை மற்றும் காலம் எவ்வளவு, அதனை அடைய நாம் என்ன செய்ய வேண்டும் என்பது தான் அவசியம். 
  • 11 வயதில் முதலீடு செய்ய ஆரம்பித்த, திருவாளர் வாரன் பப்பெட்(Warren Buffett) அவர்கள் தனது 55 வயதிற்கு பின்னரே உலகளவில் பிரபலமானார். குறுகிய காலத்திலோ, குறுக்கு வழியிலோ யாரும் நிரந்தர செல்வங்களை முடியாது.  
  • இந்திய பங்குச்சந்தை மற்றும் மியூச்சுவல் பண்டை பொறுத்தவரையில் அடுத்த 20-30 வருடங்கள் மட்டுமே பிரகாசமான காலம்(பொருளாதாரம் சார்ந்து வாய்ப்புகள் கொட்டிக் கிடைக்கும் காலம்). அதற்கு பிறகு, உங்களுக்கு வங்கி வட்டி விகிதத்திற்கு மேல் ஒரு சதவீதம் கிடைத்தாலே பெருமை தான். இது தான் வல்லரசான அமெரிக்காவிலும், ஐக்கிய ராச்சியத்திலும், ஜப்பானிலும் நடந்துள்ளது.

முதலீட்டாளர், முதலீடு செய்யும் முன் கவனிக்க:

* முதலீடு செய்வதற்கான நோக்கம்(ஓய்வுக்கால நிதி, குழந்தைகளுக்கான கல்விச் செலவு, திருமணச்செலவு, வீடு கட்டுவது / வாங்குவது, வாகனம் வாங்குவது, சுற்றுலா, பிடித்த வேலையை செய்ய, தொழில் புரிய, அப்படி ஒண்ணுமில்லைங்க)

* முதலீடு செய்ய உள்ள தொகை 

* முதலீடு செய்யும் காலம் 

* எதிர்பார்க்கும் வருவாய் (கார்பஸ் தொகையை கணக்கிடுவது அவசியம்)

* மேலே சொல்லப்பட்டவைக்கான சரியான முதலீட்டு திட்டம் (முதலீட்டு ஆலோசகரின் உதவியுடன் அணுகுதல்)

நிதி சார்ந்த அக்கறையுடன், வர்த்தக மதுரை 

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com