Tag Archives: financial planning

இந்த ஐந்து வேலைகளை செய்யாமல் முதலீடு செய்ய வேண்டாமே !

இந்த ஐந்து வேலைகளை செய்யாமல் முதலீடு செய்ய வேண்டாமே !

Don’t invest without doing these Five Commitments – Financial Planning

‘ நீங்கள் பங்குச்சந்தையில் நித்தமும் பணம் சம்பாதிக்கலாம், வாருங்கள் ‘ 

‘ பங்குச்சந்தையின் மூலம் ஒரே வருடத்தில் கோடீஸ்வரராக மாறலாம் ‘

‘ எங்களிடம் முதலீடு செய்யுங்கள், நாங்கள் உங்களுக்கு மாதாமாதம் வட்டி தருகிறோம்,உங்கள் பணம் பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்படுகிறது ‘

‘ பங்குச்சந்தையில் பகுதி நேரமாக வர்த்தகம் செய்து சம்பாதியுங்கள் ‘

‘ பிட்காயின் முதலீடு, உங்களை கோடீஸ்வரராக்கும் பொன்னான முதலீடு ‘

  • இவ்வாறான வாசகங்கள் உங்களுக்கு பூரிப்பை ஏற்படுத்துகிறதா, இல்லையெனில் அயர்ச்சியை ஏற்படுத்துகிறதா ?

நான் எப்போதும் சொல்வது தான், பொருளாதார உலகில் கோடி கோடியாக பணம் சம்பாதிப்பதற்கும், செல்வ வளத்தை குவிப்பதற்கும் ஒரு குறுக்கு வழி கிடைக்கப்பெற்றால், அதனை முதலில் அடைய போவது நீங்கள் அல்ல. இவ்வுலகின் முதல் 100 பணக்காரர்கள் தான். ஒரு லட்ச ரூபாய் முதலீட்டை கொண்டு சில மாதங்களில் கோடிகளை அள்ளலாம் என்றால் ஏன் அமேசான் நிறுவனரும், அம்பானியும் தொழில் செய்ய வேண்டும் ? ஏன் பல கிளைகளையும், வேலைவாய்ப்புகளையும் ஏற்படுத்த வேண்டும் ?  பல தலைமுறை கோடீஸ்வரர்களுக்கும் இங்கே குறுக்கு வழி கண்டுபிடிக்கப்படவில்லை.

மாறாக முதலீடு செய்யும் காலமும், முதலீட்டு சாதனமும் தான் அவர்களை அந்த நிலையில் வைத்துள்ளது. ஒரு முதலீட்டு சாதனத்தை பற்றிய முறையான கல்வி வேண்டும், இல்லையெனில் கற்றவரை நாம் வேலைக்கு வைத்திருக்க வேண்டும். அப்படியிருக்கும் பட்சத்தில் மட்டுமே, எந்தவொரு பண முதலீடும் உங்களுக்காக உழைக்கும்.

பங்குச்சந்தை, பரஸ்பர நிதிகள், பிட் காயின் சார்ந்த புத்தகங்கள் சந்தையில் ஏராளம். ஆனால், எந்த புத்தகத்திலும் உங்களுக்கு குறுக்கு வழியை பற்றி சொல்லிக்கொடுக்கவில்லை. மாறாக அடிப்படை கற்றலை தான் உங்களுக்கு அந்த புத்தகத்தின்  ஆசிரியர் சொல்ல வருகிறார். பணம் சம்பாதிக்க, அந்த அடிப்படை கற்றலை கொண்டு நீங்கள் தான் சிந்திக்க வேண்டும், முதலீடு செய்ய வேண்டும் மற்றும் செல்வத்தை ஏற்படுத்த காத்திருக்க வேண்டும்.

பங்குச்சந்தையில் பணம் சம்பாதிக்க நீங்கள் செய்ய வேண்டிய முன்னெடுப்புகள் ஐந்து:

  • ஆயுள் காப்பீடு (Term Insurance)
  • மருத்துவ காப்பீடு
  • அவசர கால நிதி திட்டமிடல்
  • கடன்களை குறைத்தல்
  • ஓய்வுக்கால நிதி திட்டமிடல்

மேலே சொன்னவற்றை நீங்கள் செய்து விட்டு தான், உங்கள் முதலீட்டை தொடங்க வேண்டும். ஐந்து முன்னெடுப்புகளும் உங்களை பாதுகாக்கும் நிதி காப்பு ஆகும். உங்களுடைய நிதி ஆலோசகர் இதனை பற்றி உங்களிடம் சொல்லவில்லை என்றால் அவர் உங்கள் நிதி நலனில் அக்கறை கொள்பவரா என்பது சந்தேகமே. நிதி ஆலோசகர்(Personal Financial Advisor) என்பவர் பங்கு தரகர் அல்ல. இன்சூரன்ஸ் ஏஜென்ட் என்பவரும் முழுமையான நிதி ஆலோசகர் அல்ல. உங்களிடம் பரஸ்பர நிதிகளை மட்டும் விற்கும் விநியோகஸ்தரா, அவரும் நிதி ஆலோசகர் என்ற முழு நிலைக்கு வர மாட்டார்.

நிதி ஆலோசகர் என்பவர் உங்களது குடும்ப மருத்துவர் போன்று. மேலே சொன்ன ஐந்தையும் உங்களுக்காக அவர் திட்டமிட வேண்டும். உங்கள் குடும்ப நிதி நிலைமைகளை சரியாக புரிந்து கொண்டு முதலீட்டு முடிவுகளை எடுப்பவராக இருக்க வேண்டும். முடிந்தால், உங்கள் குடும்ப உறவுகளின் இரண்டாம் மற்றும் மூன்றாம் தலைமுறை நபர்களுக்கும் நிதி திட்டமிடலை செய்பவராக இருக்க வேண்டும். உயில், நாமினியை நியமிப்பது, உங்களுக்கான சொத்துக்களை வாரிசு தாரர்களுக்கு பகிர்ந்தளிப்பது போன்றவற்றிலும் அவருடைய உண்மையான அக்கறை இருக்க வேண்டும்.

ஆம், அவர் உங்களிடம் ஒரு கணிசமான கட்டணத்தை பெறுபவராக இருக்க வேண்டும். இலவசமாக அவர் செய்திட முடியாது. ஒருவர் உங்களிடம் நிதி சார்ந்த ஒரு பொருளை அல்லது சேவையை விற்கும் போது இலவசமாக (பொருளுக்கான விலை தவிர்த்து) விற்பவராக இருந்தால், அவர் உங்களிடம் தவறான பொருளை அல்லது உங்களுக்கு தேவையில்லாத ஒரு சேவையை விற்று விட்டு செல்கிறார் என அர்த்தம். இது தான் காப்பீடுகளில் பெரும்பாலும் நடைபெறுகிறது. நீங்கள் தவறான சேவையை தேர்ந்தெடுத்து, அதற்காக ஒரு ஏஜென்ட் கமிஷன் பெறுவதற்கு பதிலாக, அவரிடம் சேவை சார்ந்த ஆலோசனை கேளுங்கள். வெளிப்படைத்தன்மையை அறியுங்கள். பின்பு நீங்கள் தேர்ந்தெடுத்த சேவைக்கு அவருக்கு ஒரு கட்டணத்தையும் அளியுங்கள்.

நீண்ட காலத்திற்கான நிதி ஆலோசகரை கொண்டிருங்கள். அவரது ஆலோசனைகள் உங்களுக்கு புரியவில்லை என்றால், பலமுறை கேட்பதற்கு தயங்காதீர்கள். ஆலோசனை பலனளிக்கவில்லை என்றால், வேறு ஒரு ஆலோசகரை பெறுவதற்கும் தயாராக இருக்க வேண்டும். அதே வேளையில் அடிக்கடி குடும்ப நிதி ஆலோசகரை மாற்றுவதும் ஆரோக்கியமாக இருக்காது.

உங்கள் குடும்ப நிதி நிலையை பாதுகாக்க டேர்ம் பாலிசி(Term Plan) மற்றும் மருத்துவ காப்பீடு(Health Insurance) பெறுவது அவசியம். இன்றைய காலத்தில் எதிர்பாராது நிகழும் பாதிப்புகளால் தான் நமது சேமிப்பு குறைகிறது. சில சமயங்களில் அது நம்மை கடனாளியாக்கி விடும். அதனால் நமது வருவாய்க்கு தகுந்த மற்றும் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையை கவனத்தில் கொண்டு மேலே சொன்ன காப்பீடுகளை பெற வேண்டும்.

அவசர கால நிதியை(Emergency Fund) திட்டமிடுவது உங்கள் வாழ்வில் முக்கியத்துவம் வாய்ந்தது. இயற்கை சீற்றம் மற்றும் பஞ்ச காலங்களில் நமது உணவு தேவையை பூர்த்தி செய்வதற்காக கோயில் கோபுரங்களில் கலசங்கள் இருப்பதை நாம் பார்த்திருப்போம். கலசத்தில் சில உணவு தானியங்கள் சேமிக்கப்பட்டிருக்கும். அதனை போல தான் நமது அவசர கால நிதியும் இருக்க வேண்டும்.

கடனை அதிகமாக வைத்து கொண்டு, பங்குச்சந்தையில் சம்பாதித்து கடனை அடைத்து விடுவேன் என ஆர்வமாக செயல்பட கூடாது. பங்குச்சந்தை என்பது அதிக ரிஸ்க் கொண்ட, அதே வேளையில் செல்வ வளத்தை ஏற்படுத்தும் ஒரு முதலீட்டு சாதனமாகும். கடன் வாங்கி பங்குகளை வாங்குவது, கடனை குறைக்க பங்குகளில் முதலீடு செய்வதால் நமக்கு சுமையே அதிகம்.

‘ உங்கள் குழந்தைகளின் மேற்படிப்பு கல்வியை விட, உங்களது ஓய்வுக்காலம் மிக முக்கியம் ‘ என நிதி திட்டமிடலில் சொல்வது உண்டு. குழந்தைகளுக்கான வாழும் காலமும், அவர்கள் கற்க வேண்டிய கல்வியும் எப்போதும் இங்கு உள்ளது. ஆனால் உங்கள் ஓய்வுக்காலத்திற்கு அவர்களை நம்பி நீங்கள் இருத்தல் சரி வராது. அந்த ரிஸ்க்கை தான் நம்மில் பெரும்பாலோர் எடுத்து வருகின்றனர். உங்களது ஓய்வுக்காலத்திற்கான சேமிப்பை(Retirement Savings) நீங்கள் தான் உருவாக்க வேண்டும். குழந்தைகளை வளர்க்க வேண்டியது உங்கள் கடமை. அதற்கு கைமாறாக அவர்கள் உங்களை பார்க்க வேண்டும் என நிர்பந்தம் ஏற்படுத்தாதீர்கள்.

உங்களுக்கான நிதி இலக்கை நீங்கள் தான் திட்டமிட வேண்டும். வயதான காலத்தில் அவர்களிடம் நீங்கள் எதிர்பார்ப்பது உறவுகளாக(அன்பு) மட்டுமே இருக்க வேண்டும், நிதி அல்ல. உங்கள் குழந்தைகளுக்கான இலக்கு அடுத்த தலைமுறையில் தான் உள்ளது, நீங்கள் மட்டுமே அல்ல.

மேலே சொன்ன ஐந்து முன்னெடுப்புகளை திறம்பட செய்து விட்டு, பின்னர் பங்குச்சந்தைக்கு வாருங்கள்… உங்களுக்காக காத்திருக்கிறது செல்வ வளம்.

குறிப்பு:

என்னிடம், எனது ஆண்டு வருவாயினை போல 50-80 மடங்கு பணம் ரொக்கமாக உள்ளது என சொல்பவரா நீங்கள் ? உங்களுக்கு இந்த ஐந்து வேலைகளும் தேவையில்லை.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamdurai.com

Advertisement

நடுத்தர பட்ஜெட் திட்டமிடல் – பகுதி 2

நடுத்தர பட்ஜெட் திட்டமிடல் – பகுதி 2

Budget Planning for Middle Class Family – Part 2

 

பட்ஜெட் திட்டமிடல் குறுந்தொடருக்கு வரவேற்கிறோம்…

 

திரு. ராஜாக்கண்ணன் மதுரை – ராமேஸ்வரம் செல்லும் வழியில் உள்ள ஒரு கிராமத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். மாதச்சம்பளமாக ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாலும், நேரம் கிடைக்கும் போதெல்லாம் தனது விவசாய நிலத்திலும் ஈடுபாடு காட்டி வருகிறார். இரு மகன்கள் மற்றும் வயதான தன் பெற்றோர்களை கவனித்து கொள்ளும் பொறுப்பை, ராஜாக்கண்ணனின் மனைவி பார்த்து வருகிறார்.

 

மூத்த மகன் ஆறாவது வகுப்பும், இளைய மகன் மூன்றாவதும் படித்து கொண்டிருக்கிறார்கள். அழகான விவசாய தோட்டம், சொந்தமாக வீடு என்றிருக்கும் போது வேறென்ன வேண்டும் நமக்கு. இனி இவரது மாதாந்திர பட்ஜெட் திட்டமிடலை (Budget – Financial Planning) பார்ப்போம்.

 

Budget Financial Planning Part2

 

மாதம் ரூ. 22,000 சம்பளமாக பெறும் ராஜாக்கண்ணன் தனது ஓய்வு கால நிதியாக, சம்பளத்தில் பிடிக்கப்படும் தேசிய பென்ஷன் திட்டத்தை (National Pension System -NPS) மட்டுமே கொண்டுள்ளார். வீட்டு வாடகை செலவு ஏதும் இல்லாததால் அவரின் பட்ஜெட்டில் துண்டு விழவில்லை. மாநகருக்கு வெளியே வீடு அமைந்திருப்பதால் காற்றோட்டமான சூழ்நிலையும், விவசாய வாய்ப்பும் தனக்கு கிடைத்துள்ளதாக கூறுகிறார். வயதான தாய், தந்தை, மனைவி மற்றும் குழந்தைகள் உட்பட்ட இவரது குடும்பத்திற்கான மாத உணவுச்செலவு ரூ. 10,000 /- ஆகும்.

 

மருத்துவம் மற்றும் காப்பீட்டிற்காக இவர் மாதாமாதம் ரூ. 3500 ஒதுக்குகிறார். உடை, பொழுதுபோக்கு மற்றும் போக்குவரத்து செலவுகளை மேலே உள்ள அட்டவணையில் காணலாம். பிற செலவுகளுக்காக ரூ. 1500 வரை மாதத்திற்கு வைத்துள்ளார். இரு மகன்களின் கல்விச்செலவுகளுக்கு மாதம் ரூ. 11,000 வரை செலவிடுகிறார். இவரது செலவு பட்டியலில் கல்விச்செலவே முக்கிய பங்கு வகிக்கிறது 🙂

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 

நாம் ஏற்கனவே சொன்னது போல, ராஜாவின் மனதுக்கு பிடித்த விவசாய தொழில் மூலம் மாதம் ரூ. 5000 ஐ பிற வருமானமாக ஈட்டி வருகிறார். பருவ நிலை மாற்றங்களால் தான் எதிர்பார்த்த வருமானத்தை விவசாயத்தில் ஈட்ட முடியவில்லை என்றாலும், தனது நம்பிக்கையை கைவிடாமல் தோட்டத்தில் புதுமையான முறைகளை புகுத்தி வருகிறார். விரைவில் அவர் தனது விவசாயம் மூலம் நல்ல வருமானத்தை பெறுவார் என நம்பலாம். இவரின் வரவு-செலவை ஒப்பிடும் போது, மீதம் உபரித்தொகையாக ரூ. 1500 உள்ளது. இன்றைய நாட்களில், ஆறு பேர் கொண்ட ஒரு குடும்பத்தினை நிர்வகிப்பதில் இவரை போன்றவரை நாம் பாராட்டலாம்.

 

பரிந்துரைகள் / நினைவில் கொள்க:

 

  • ராஜாக்கண்ணன் தனது மாத உபரித்தொகையை இரு மகன்களின் எதிர்கால இலக்குகளுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். எதிர்கால இலக்குகளுக்கு பயன்படுத்த உள்ள தொகையை ஆர்.டி. யாகவோ (Bank / Post office RD) அல்லது பரஸ்பர நிதியின் எஸ்.ஐ.பி. முறையை (Mutual Fund -SIP) தேர்ந்தெடுப்பது நலம்.

 

  • குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை ஆறு நபர்கள் எனும் போது, அவரின் உணவில் பெரும்பாலும் இல்லை எனலாம். பிள்ளைகளுக்கு மற்றும் பெற்றோர்களுக்கான ஆரோக்கியமான உணவு தேவைப்படுகிறது. இருப்பினும், சில நேரங்களில் பெரிய குடும்பங்களுக்கு உணவு சார்ந்த மளிகை பொருட்களை மொத்தமாக வாங்கும் போதே உணவுச்செலவினை ஓரளவு குறைக்க முடியும். இதனை கொண்டும் பெற்றோர் மற்றும் குழந்தைகளின் இலக்குகளை நிர்ணயம் செய்யலாம்.

 

  • மருத்துவம் மற்றும் காப்பீடு என பார்க்கும் போது, அவர் பொதுவான எண்டோவ்மென்ட் (Endowment) பாலிசியை தான் எடுத்துள்ளார். மேலும் வயதான பெற்றோர்களுக்கான எதிர்பாராத மருத்துவ செலவுகளை நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

 

  • தான் ஒதுக்கும் ரூ. 3500 /- ல் (மருத்துவம் மற்றும் காப்பீடு) தனக்கான டேர்ம் இன்சூரன்ஸை எடுத்து கொள்வது நல்லது. இவருக்கான டேர்ம் பாலிசி கவரேஜ் ரூ. 45 லட்சத்திலிருந்து 50 லட்சம் வரை இருந்தால் போதும் (ஆண்டு வருமானத்தை போல 15-20 மடங்கு). இந்த கவரேஜிற்கு ஆண்டு பிரீமியம் ரூ. 7000 – 7500 வரை இருக்கும்.

 

  • எதிர்பாரா மருத்துவ செலவுகளை தவிர்க்க இவருடன் மனைவி மற்றும் இரு பிள்ளைகள் என ஒரு மருத்துவ பாலிசி, வயதான பெற்றோர்களுக்கென மற்றொரு பாலிசியை தேர்ந்தெடுத்து கொள்ளலாம். மூத்த குடிமக்கள் அல்லாமல் நான்கு பேருக்கான குடும்ப மருத்துவ காப்பீட்டு பிரீமியம் ஆண்டுக்கு ரூ. 15000-18000 /- ஆகும் ( 5 லட்சம் வரையிலான கவரேஜ்). மூத்த குடிமக்களுக்கான மருத்துவ காப்பீடு பிரீமியம் அதிகமாக இருக்கும் ( 2 Senior Citizens – Rs. 35,000 /- yearly for Upto 5 Lakh Sum Insured).

 

  • ஓய்வு கால நிதிக்கு தேசிய பென்ஷன் திட்டத்தை மட்டும் நம்பியிருக்காமல் அவ்வப்போது தனது சேமிப்பிலும் ஒரு தொகையை பிரித்து முதலீடு செய்ய வேண்டும். குழந்தைகளின் எதிர்கால கல்விச்செலவுகளை கருத்தில் கொண்டு, முன்கூட்டிய சேமிக்க பழகினால் சிரமப்பட தேவையில்லை. வெறும் சேமிப்பு என்று மட்டும் பாராமல், பிற வருமானத்தை ஏற்படுத்துவதும் ஒரு குடும்பத்திற்கு நிதி சார்ந்த அக்கறை உதவும்.

 

வருவாயில் துண்டு விழாமல் பார்த்து கொள்வதே சாலச்சிறந்தது.

வந்த பின் வருந்துவது அர்த்தமில்லையே 🙂

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

நீங்க நல்லவரா, கெட்டவரா – கடன் ?

 

நீங்க நல்லவரா, கெட்டவரா  – கடன் ?

Debt – is it good or bad ?

கடன் ” –  இந்த வார்த்தையை கேட்டாலே சிலருக்கு  அலர்ஜியாக (ஒவ்வாமை) இருக்கும். சிலர் சாமர்த்தியமாக கையாளுவர். (Debt /Loan)

 

கடன் அன்பை முறிக்கும் ‘ – அன்பு இருக்குமோ இல்லையோ, நமது தினசரி வாழ்க்கையை  கடன் பாதிக்காமல் இருந்தால் நல்லது. கடனில்லாமல் வாழ்வது ஒரு மோட்சம் தான்; ஆனால் ஏனோ எல்லோருக்கும் அது வாய்ப்பதில்லை. காரணம், கடனை பற்றிய நமது புரிதலை சரி செய்யாதது தான். பலர் கடனை வாங்கி விட்டு தங்கள் அற்புதமான வாழ்க்கையை மூழ்கடித்து விடுகின்றனர். சிலரோ வாங்கிய கடனை வாழ்நாள் முழுவதும் கட்டி விட்டு, ஏன் கடன் வாங்கினோம் என பெருமூச்சு விடுகின்றனர். வெகு சிலர் தான் அதனை சாமர்த்தியமாக பயன்படுத்துகின்றனர் (அ) கடனில்லாமல் வாழ பழகுகின்றனர். நாம் ஒவ்வொருவரும் நமது நிதி வாழ்க்கையில் ஏதோ ஒரு நிலையில் கடன் வாங்கி விட்டு தான் செல்கிறோம்.

 

கடன்கள் எத்தனை (Loans ?

 

  • தனி நபர் கடன்
  • வாகன கடன்
  • வீட்டுக்கடன்
  • கல்வி கடன்
  • நகை கடன்
  • தொழில் கடன்
  • கடன் அட்டை கடன் (Credit Card )

 

பெரும்பாலும் நம்மில் பலர் மேலே உள்ள ஏதேனும் ஒரு கடனை (அ) அனைத்து கடனையும் வாங்கும் போது, கடைப்பிடிக்க வேண்டிய அம்சங்களை விட்டு விட்டு தவணை காலத்தின் பாதியில் தான் அதனை புரிந்து கொள்ள முயல்கிறோம். நிறுவனங்கள் கடன் வாங்கி கட்ட முடியாமல் திவாலாகி தத்தளிப்பதை விட தனிநபர்களின் கடன்கள் சில சமயங்களில் வாழ்க்கையை பணயம் வைக்கின்றன. கடன் தற்கொலைகளும் அவ்வப்போது ஏற்பட்டு கொண்டு தான் இருக்கிறது.

 

நமக்கு ஒரு வீடு தேவையெனும் போது, அதற்கான வீட்டுக்கடனை நாம் வங்கியிடமோ (அ) நிதி நிறுவனங்களிடமோ பெறுகிறோம். நமது வருமானத்தில் பாதிக்கும் மேலாக கடன் தொகை ஆக்கிரமித்து உள்ளன. உண்மையில் நமது தேவைகளுக்கும், விருப்பங்களுக்கு இடையில் தான் கடன் செயல்பட்டு கொண்டிருக்கிறது. இன்று தனிநபர் கடனும், EMI (Equated Monthly Installment)  மூலம் நுகர்வோர் கடனும் வாங்குவது எளிதாகவும், சர்வ சாதாரணமாகவும் ஆகி விட்டது. இவற்றில் தான் பெரும்பாலோர் தங்கள் வருமானத்தை செலவிடுகின்றனர்.

 

Zero Interest EMI / No cost EMI என்னும் மாயை:

 

வீட்டு சாதனம், ஆடம்பர பொருட்களை நமது விருப்பப்படி வாங்கும் போது, நாம் முன்னரே சேமித்து வாங்க பழகுவதில்லை. மாறாக EMI எனும் மாத தவணைகளை தான் தேர்ந்தெடுக்கிறோம். இது நகை வாங்குவதிலும் சரி. நம்மில் பலர், ‘ நான் வட்டியில்லா தவணையில் பொருட்களை வாங்கினேன்; அதனால் எனக்கு எந்த கூடுதல் செலவும் இல்லை ‘ என்று எண்ணுகிறோம். உண்மையென்ன ?  

 

நீங்கள் ஒரு பொருளை உற்பத்தி செய்து எந்த லாபமும் இல்லாமல் மாத தவணையில் உங்கள் விற்பனையை தொடங்குவீர்களா ? எந்த நிதி நிறுவனம் உங்களுக்கு லாப நோக்கமில்லாமல் EMI கொடுக்க முன்வருகிறது. தவணை முடிவில் நாம் சரியாக பார்த்தால் Terms and Conditions apply – நிபந்தனைக்கு உட்பட்டது தான் வேலை செய்யும். Zero Interest EMI, ஆனால் பரிவர்த்தனை கட்டணம், பொருட்களின் விலையில் மறைமுகமாக சற்று அதிகம். எல்லாம் கூட்டி கழித்து பார்த்தால் கணக்கு சரியாக வரும் 🙂  முடிவில் நம்மை கடன் வாங்க தூண்டுவது, நமது Impulsive Buying எனும் ஆராய்வில்லாத விருப்பம் தான் !

 

கடன் வாங்க கூடாதா ?

 

அப்படியில்லை; நமது தேவைகளுக்கு நாம் கடன் வாங்கலாம், ஆனால் விருப்பங்களையும் சற்று தள்ளி வைத்து விட்டு பார்க்கவும். நமக்கு ஒரு சொந்த வீடு இல்லை எனும் போது முடிந்தவரை முன் பணத்தை சேமித்து / முதலீடு செய்து பழகி வீடு கட்டலாம் (அ) வாங்கலாம். நமக்கான சேமிக்கும் காலம் போதவில்லை என்றால் மட்டுமே நாம் வீட்டுக்கடனை எதிர்பார்க்கலாம். நமது மற்றுமொரு (இரண்டாவது வீடு) வீட்டுக்கு கடன் வாங்குவதை பற்றி சற்று யோசிக்க வேண்டும். அது உங்கள் சொத்தாக கருதினால், அதனால் வருமான வாய்ப்பு ஏதேனும் உள்ளதா என்பதை கணக்கிட வேண்டும்.

 

உதாரணத்திற்கு, உங்களிடம் 25 லட்சம் பணம் ரொக்கமாக உள்ளது (அ) அதன் மதிப்புள்ள வீடு(இரண்டாவது வீடு)  வாங்க வீட்டுக்கடனை எதிர்பார்க்கிறீர்கள் என வைத்து கொள்வோம். 25 லட்சம் மதிப்பிற்கு நீங்கள் வீடு வாங்கினால் அதன் முதலீட்டின் மீது நீங்கள் மாதாமாதம் எவ்வளவு வருமானம் பார்க்க முடியும் என்று கணக்கிட வேண்டும். அது போதிய வருமானம் தராத போது, அந்த  ரொக்க தொகையை நீங்கள் ஒரு வங்கியில் டெபாசிட் செய்து விட்டு வாடகையை விட சற்று அதிகமாக வட்டி வருமானம் பெறலாம். அதற்காக கடன் வாங்கி டெபாசிட் செய்வது நல்லதல்ல. எல்லாம் கணக்கு தான் – வருமானத்திற்கும், கடனுக்கும் ! சிலர் அவசியமில்லாமல் வாகன கடன் வாங்குகிறேன் என்ற பெயரில் வீட்டில் 4 (அ) 5 வாகனங்களை முடக்கி விடுகின்றனர். வாகன கடன் போக, அந்த வாகனத்திற்கு தேய்மான செலவு மற்றும் காப்பீடு செலவு உள்ளது என்பதை மறவாதீர்கள். இன்னும் சிலரோ EMI மூலம் சுற்றுலா செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இப்படியாக தனி நபர் கடன், கடன் அட்டை கடன் என கடன் பட்டியல் நீள்கிறது.

 

கடனை தவிர்க்க, கடனில்லாமல் இருக்க…(Debt Free)

 

  • வீட்டுக்கடன் வாங்கும் முன், வீடு கட்ட (அ) வாங்க தேவையான தொகையை முன்கூட்டியே சேமிக்க முயலுங்கள்; வீட்டுக்கனவையும் முன்னரே திட்டமிடுங்கள், முடிந்தால் தள்ளி போட முயற்சியுங்கள். அவசர முடிவில் கடன் வாங்க வேண்டாம்.
  • வாகன கடன் வாங்குவதற்கு பதில், முன்னரே திட்டமிட்டு வாகனம் வாங்க தேவையான பணத்தை ஒரு அஞ்சலக / வாங்கி RD ல் சேமித்து முதிர்வு தொகை மூலம் வாங்குங்கள். வாகனத்தை தேவையான இடத்திலும், அவசர உதவிக்கும் பயன்படுத்துங்கள். மற்ற நேரங்களில் உங்களுக்காக Call Taxi யும், பொது போக்குவரத்தும் உள்ளன.
  • கடன் அட்டை (Credit Card) மூலம் பெறும் கடனை முடிந்தவரை தவிருங்கள் (அ) புத்திசாலித்தனமாக பயன்படுத்துங்கள். கடன் அட்டைக்கான வட்டி விகிதம் அதிகம் என்பதை மறந்திருக்க வேண்டாம்.
  • கல்வி கடன் கிடைக்கிறது, வரிசலுகையும் உண்டு என்பதற்காக வாங்க வேண்டாம். உங்கள் குழந்தையின் எதிர்கால கல்விக்கு இப்போதே நிதிதிட்டமிடல் செய்யுங்கள் (Financial Planning for Education).
  • சுற்றுலா செல்வதை திட்டமிடுங்கள், அதற்காக உங்கள் வருமானத்தின் ஒரு பகுதியை சேமிக்க பழகுங்கள்.
  • அவசர கால நிதியை எப்போதும் தயார் செய்யுங்கள்.
  • உங்களுக்கு கடன் இல்லாவிட்டாலும் தேவையான Term Insurance – ஆயுள் காப்பீடை எடுத்து கொள்ளுங்கள். உங்கள் குடும்பம் உங்கள் வருமானத்தை எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள்.
  • நீங்கள் வாங்கும் கடன் எதிர்காலத்தில் வருமானம் ஏதேனும் தர வாய்ப்புள்ளதா, இருக்கும் செலவுகளை குறைக்குமா என்பதை சிந்தித்து முடிவெடுங்கள்.

உங்கள் கடன் (Debt to income Ratio) தன்மை விகிதத்தை கணக்கிட…

Total Debt / Total Income (or) Asset

* கிடைக்கும் மதிப்பை 1 க்கு கீழ் வைத்திருங்கள்.

 

கடனை ஆரோக்கியமாக பார்த்து கொள்ளுங்கள்; அது உங்களை கடனில்லாமல் பாதுகாக்கும்.

வாழ்க வளமுடன்,  வர்த்தக மதுரை

ஆரோக்கியமான நிதி திட்டமிடல்/Healthy Financial Planning

ஆரோக்கியமான நிதி திட்டமிடல்:

Prepare for Healthy Financial Planning

 

1. வரவு-செலவு மற்றும் சேமிப்பு அறிக்கையை உருவாக்குங்கள்
2. பணவீக்கத்தை தாண்டிய உண்மையான வருமானத்தை தேடுங்கள்; முதலீடு செய்யுங்கள்
3. முதலீட்டை பகிர்ந்து கொள்ளுங்கள் (Bank Deposits, Mutual Funds, Stocks,Realty, Gold, Knowledge)
4. காப்பீடு செய்து கொள்ளுங்கள் (Health and Life-Term)
5. பிளாஸ்டிக் பணத்தை பயன்படுத்துங்கள் (E-Payments, Save Tax); பிளாஸ்டிக்கை ஊக்குவிக்காதீர்கள்
6. ஓய்வை (Retirement plan) பற்றி சிந்தியுங்கள்
7. கடனை குறையுங்கள்/கடனில்லா (Debt Free) வாழ்க்கையை வாழுங்கள்
8. அவசர நிதியை (Emergency Fund) அவசரப்படுத்துங்கள்
9. மாடி தோட்டம் அமையுங்கள் /முடிந்தால் மரம் வளருங்கள்
10. உதவி செய்யுங்கள் /உங்கள் அறிவை பரிமாறுங்கள்

 

நன்றி – வர்த்தக மதுரை