Tag Archives: stock valuation

பனாமா பெட்ரோகெம் லிமிடெட் – பங்குச்சந்தை அலசல்

பனாமா பெட்ரோகெம் லிமிடெட் – பங்குச்சந்தை அலசல் 

Panama Petrochem Limited – Fundamental Analysis – Stocks

கடந்த 1982ம் ஆண்டு தனியார் நிறுவனமாக துவக்கப்பட்ட பனாமா பெட்ரோகெம் பிரைவேட் லிமிடெட், பல்வேறு வகையான பெட்ரோலியம் சார்ந்த பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை மற்றும் ஏற்றுமதியில் ஈடுபட்டு வருகிறது. நிறுவனத்தின் தயாரிப்பில் திரவ பாரஃபின் எண்ணெய்கள், பெட்ரோலியம் ஜெல்லி, மை எண்ணெய்கள், ஆன்டிஸ்டேடிக் கோனிங் எண்ணெய், ரப்பர் செயல்முறை எண்ணெய்கள், மின்மாற்றி எண்ணெய்கள், கேபிள் நிரப்புதல் கலவைகள் மற்றும் பாரஃபின் மெழுகு ஆகியவை அடங்கும்.

பெட்ரோலிய சிறப்பு தயாரிப்பு(Petroleum Specialty Products) பிரிவில் 80க்கும் மேற்பட்ட பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை மற்றும் ஏற்றுமதியில் தொழில் புரிந்து வருகிறது. இவை மைகள் மற்றும் பிசின்கள், ஜவுளி, ரப்பர், மருந்துகள், அழகுசாதனப் பொருட்கள், வாகனம், மின்சாரம், கேபிள்கள் மற்றும் பிற தொழில்துறைகளுக்கு இன்றியமையாதவை. 

1993ம் ஆண்டில் நிறுவனம் பொது நிறுவனமாக(Public Limited) பதிவு செய்யப்பட்டு 1994ம் ஆண்டு வாக்கில் மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது. 2011ம் ஆண்டில் தேசிய பங்குச்சந்தையில்(NSE) பட்டியலிடப்பட்ட இந்நிறுவனத்திற்கு தற்போது உள்நாட்டில் 4 உற்பத்தி ஆலைகள் உள்ளது. 

வருவாயை பொறுத்தவரை நிறுவனம் கடந்த 2022-23ம் நிதியாண்டில் அழகுசாதனம் மற்றும் மருந்துத்துறை பிரிவுகளில் 24 சதவீதமும், மைகள் / பூச்சுகள் பிரிவில் 21 சதவீதமும், ரப்பர் செயல்முறை பிரிவில் 19 சதவீதமும், ஜவுளித்துறையில் 19 சதவீத வருவாய் பங்களிப்பையும் கொண்டுள்ளது. உற்பத்தி செய்து விற்பனை செய்யப்படும் பொருட்களில் 51 சதவீதம் ஏற்றுமதியில் மட்டுமே உள்ளது.

அமெரிக்கா, லத்தீன் அமெரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்க துணைக் கண்டம், தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய பிராந்தியங்களுக்கு நிறுவனம் தனது பொருட்களை ஏற்றுமதி செய்து வருகிறது. நிறுவனத்தின் முக்கிய வாடிக்கையாளர்களாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டாபர் இந்தியா, ஹூபர் குழுமம், ஏடிசி(ATC) டயர் ஆகியவை உள்ளன. 

நிறுவனம் சமீபத்தில் நான்கு புதிய தயாரிப்பு பொருட்களாக: மை மற்றும் பூச்சு தொழிலுக்கான அரோமா ஃப்ரீ டிஸ்டில்லேட்ஸ்(Aroma Free Distillates), பெயிண்ட் தொழிலுக்கான நறுமண இலவச கரைப்பான்கள், துளையிடுதல் மற்றும் எண்ணெய் ஆய்வுக்கான மக்கும் எண்ணெய்கள் மற்றும் ரப்பர் தொழில்துறைக்கான நறுமணமற்ற புதிய எண்ணெய்கள் ஆகியவற்றை சந்தையில் வெளியிட்டுள்ளது. 

வருங்காலத்தில் பெரும்பாலும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதே தங்களது இலக்கு என நிறுவனம் சார்பில் கூறப்பட்டுள்ளது. இதன் முயற்சியாக கடந்த 2022-23ம் நிதியாண்டில் சுமார் 30,000 டன் திறன் கொண்ட இயந்திரத்தை நிறுவியுள்ளது. இவற்றில் தற்போது 50 சதவீதத்திற்கும் அதிகமானவை வணிகமயமாக்கப்பட்டுள்ளது.

பனாமா பெட்ரோகெம் நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு(Market Cap) 1,953 கோடி ரூபாய். நிறுவனத்தின் புத்தக மதிப்பு பங்கு ஒன்றுக்கு ரூ.157 ஆகவும், வட்டி பாதுகாப்பு விகிதம்(ICR) 21 மடங்குகளிலும் உள்ளது. நிறுவனத்திற்கு குறுகிய கால மற்றும் நீண்டகால கடன் என பெரிதாக எதுவுமில்லை. நிறுவனர்களின் பங்களிப்பு 69 சதவீதமாக இருக்கிறது. நிறுவனர்கள் சார்பாக பங்கு அடமானம் எதுவும் வைக்கப்படவில்லை.

2022-23ம் நிதியாண்டில் நிறுவனத்தின் வருவாய் 2,249 கோடி ரூபாயாகவும், செலவினம் ரூ.1,940 கோடியாகவும் இருந்துள்ளது. இயக்க லாப விகிதம்(OPM) விகிதம் கடந்த பல வருடங்களாக சற்று ஏற்ற-இறக்கமாக இருந்திருந்தாலும், 2021ம் ஆண்டு முதல் ஆண்டுக்கு சராசரியாக 10 சதவீதத்திற்கும் மேலாக இருந்துள்ளது. சொல்லப்பட்ட நிதியாண்டில் நிறுவனத்தின் வரிக்கு முந்தைய லாபம்(PBT) ரூ. 295 கோடியாகவும், நிகர லாபம் 233 கோடி ரூபாயாகவும் சொல்லப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு ரூ.940 கோடி(மார்ச் 2023). கடந்த 10 ஆண்டுகளில் நிறுவனத்தின் விற்பனை வருவாய் வளர்ச்சி சராசரியாக 13 சதவீதமும், கூட்டு லாப வளர்ச்சி 35 சதவீதமுமாக இருந்துள்ளது. பங்கு மூலதனம் மீதான வருவாய்(Return on Equity) கடந்த 5 வருடங்களில் 24 சதவீதமும், இதுவே பத்து வருட காலத்தில் சராசரியாக 20 சதவீத வளர்ச்சியையும் பெற்றிருக்கிறது. 

நிறுவனத்தை பொறுத்தவரை பாதகமான நிலையாக மூலப்பொருட்களின் விலை மாற்றம்(கச்சா எண்ணெய்), சுற்றுச்சூழல் அபாயங்கள், டாலர் விலை மாற்றம், துறையில் ஈடுபடும் போட்டி மற்றும் பெரு நிறுவனங்கள், அரசு கொள்கைகள் ஆகியவை. சாதகமான நிலை என காணுகையில் நிறுவனத்தின் தனித்துவமான தயாரிப்பு பொருட்கள், வலுவான வாடிக்கையாளர்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு(R&D) ஆகியவற்றில் கவனம் செலுத்துதல், தொடர்ச்சியாக வருவாய் ஈட்டுதல், ஏற்றுமதி சந்தையில் காணப்படும் வாய்ப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல்களுக்கான உலகளாவிய தேவை.

2022-23ம் நிதியாண்டின் முடிவில் நிறுவனம் ரொக்க கையிருப்பாக(Cash Equivalents) 222 கோடி ரூபாயை வைத்துள்ளது. கடந்த சில வருடங்களாக நிறுவனத்தின் பணப்பாய்வு(Cash Flow) தொகையும் மேம்பட்டுள்ளது. 

கவனிக்க: முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கும் முன் தகுந்த நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் முன்னிலையில் தங்களது முதலீட்டு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலே சொன்ன தகவல்கள் பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வுக்கான கற்றல் மட்டுமே.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

 

கதை சொல்லி – பாகம் 2 – பங்குகளும், அதன் மதிப்பீடுகளும்

கதை சொல்லி – பாகம் 2 – பங்குகளும், அதன் மதிப்பீடுகளும் 

Story Teller 2 – Stocks & Valuation – Webinar Meet

பங்குச்சந்தையின் வரலாற்றை படிப்பதை விட, பங்குச்சந்தையில் வர்த்தகமாகும் ஒரு நிறுவனத்தின் கதையை ஒரு மணிநேரம் படித்தாலே போதும், நாம் பங்குச்சந்தையில் பணம் சம்பாதிக்கும் சூட்சுமத்தை அறிந்து கொள்ளலாம். பங்குகள் வெறும் எண்கள் அல்ல, அவை தொழிலின் மூலதனம்.

நம்மை சுற்றி, நாம் தினம் தினம் பயன்படுத்தும் பொருட்கள் மற்றும் சேவையினை அளிக்கும் நிறுவனங்கள் பெரும்பாலும் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டவை. மக்களின் மூலதனம் மற்றும் நுகர்வு தன்மையால் அந்த நிறுவனங்கள் லாபம் காண்கின்றன. அதே வேளையில் நுகர்வோராக மட்டுமே இருப்பதில் நமக்கு என்ன பலன் பெரிதாக இருக்க போகிறது ?

இந்த வார ஞாயிற்றுக்கிழமை(31-05-2020) அன்று பங்குகளின் கதைகளை பற்றி பேச உள்ளோம். வாருங்கள், பங்குகளின் தரத்தை எவ்வாறு மதிப்பீடு செய்ய வேண்டும், பங்குகளில் சூதாட நினைத்தால் அதன் விளைவு என்ன, பங்குச்சந்தையில் அடிப்படை கற்றலை பெறுவது எப்படி, நிறுவனங்களின் நிதி நிலை அறிக்கைகளை எவ்வாறு கையாள வேண்டும் என்பதனை பற்றி விவாதிக்க உள்ளோம்.

Story Teller II Online Meet

நடப்பில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி எந்தவிதமான சாதகம் மற்றும் பாதகங்களை ஏற்படுத்தும், பங்குச்சந்தை எண்களின் அடுத்த இரண்டு வருட முன்னெடுப்பு என்ன ஆகியவற்றை பற்றியும் பேச உள்ளோம்.

பண முதலீட்டை கொண்டு பணம் பண்ணும் கலை எவ்வாறு வெற்றி பெறுகிறது, புதிய பங்கு தொகுப்புகள்(Stock Portfolio) சார்ந்த செய்தியும் வெளியிடப்பட உள்ளது. நிகழ்ச்சி நிரலுக்கான பதிவுக்கு…

Registration – Stocks & Valuation (Story Teller II)  

பதிவுக்கு பின்பு, நிகழ்ச்சி நிரலுக்கான இணைப்பு உங்கள் மின்னஞ்சல் மற்றும் கைபேசிக்கு அனுப்பி வைக்கப்படும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

இந்த 3 விஷயங்கள் இல்லையென்றால் பங்குச்சந்தையில் பங்குகளை வாங்காதீர்கள் !

இந்த 3 விஷயங்கள் இல்லையென்றால் பங்குச்சந்தையில் பங்குகளை வாங்காதீர்கள் !

Don’t buy a Stock or Share, before Considering these 3 Factors

பங்குகளில் முதலீடு செய்வது சிலருக்கு ஆரோக்கியமான விஷயமாக இருக்கும். சிலருக்கோ அது கவலை கொள்ளும் நிகழ்வாக இருக்கலாம். எப்படியிருந்தாலும், பங்குகளில் முதலீடு செய்வது என்பது நமது குடும்பத்திற்கான பொருளாதார வளத்தை சேர்ப்பதாகும்.

சிறு முதலீட்டாளர்களால் ஒரு நிறுவனத்தை நடத்த முடியாமல் இருக்கலாம். பட்டியலிடப்பட்ட நிறுவனத்தினை(Listed Companies) நிர்வகிக்கும் பலம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் நிறுவனத்தின் சிறு பங்குகளும் நீண்ட காலத்தில் வளம் சேர்க்கும்.

வேகமாக வளர்ச்சியடைவதை விட, நல்ல நிறுவன பங்குகளை கண்டறிந்து நீண்ட காலத்தில் கூட்டு வட்டியின் பலனை பெறுவதே சிறு முதலீட்டாளர்களுக்கு சாதகமான அம்சமாக இருக்கும். எனவே நாம் பெரிய விஷயத்தை செய்வதை விட்டு விட்டு, நமக்கு தெரிந்த மற்றும் நம்மால்  கண்டறிய முடியும் காரணிகளை கொண்டு முதலீட்டினை மட்டும் மேற்கொண்டால் போதும். நிறுவன வளர்ச்சியை அந்த நிறுவனமே பார்த்து கொள்ளட்டும்.

நல்ல நிறுவன பங்குகளை கண்டறிய ஏராளமான அடிப்படை காரணிகள் இருப்பினும், நாம் இங்கே சொல்ல வருகிற மூன்று அடிப்படை காரணிகள் எந்தவொரு தொழிலுக்கும் பொருந்தும். ஆகையால் முதலீட்டாளர்கள் இதனை மட்டும் கருத்தில் கொள்வது அவசியம். மற்ற காரணிகள் எல்லாம், பின்பு தான் செயல்பட கூடும்.

பங்குச்சந்தையில் பங்குகளை வாங்கும் முன் கவனிக்க வேண்டிய 3 முக்கிய அம்சங்கள்:

  • Promoters (நிறுவனர்கள்)
  • Management & Corporate Governance (நிர்வாகம்)
  • Financial Statements (நிதி அறிக்கைகள்)

ஒரு நிறுவனத்தின் நிறுவனர் அல்லது நிறுவனர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அவர்களுடைய நிறுவனத்தின் மீதான அக்கறையே ஒரு முதலீட்டாளருக்கு  தேவைப்படுகிறது. நிறுவனர்கள் தங்களது நிறுவனத்தை நியாயமாக நடத்துவதும், ஊழியர்கள் மற்றும் பங்குதார்களின்(Employees & Shareholders) அடிப்படை உரிமைகளை பேணிக்காப்பது தான் அவர்களது முதல் கடமை.

நிறுவனர்கள் தங்களது பங்குகளை கொண்டு என்ன செய்கின்றனர் என்பது நாம் பார்க்க வேண்டிய விஷயம். அதே போல, பொதுவாக நிறுவனர்களின் பங்குகள் மீதான பங்களிப்பு அதிகமாக இருக்கும் போது, அது அந்த நிறுவனத்தின் மீதான நம்பிக்கையை குறிக்கும்.

நிறுவனத்தின் நிர்வாகம் சரியாக கையாளப்படுகிறது என்பது இரண்டாவது முக்கிய விஷயம். நிறுவன ஊழியர்களின் திறன் மற்றும் அவர்களுக்கு நிறுவனம் மூலம் கிடைக்கும் மதிப்பு போன்றவை முதலீட்டாளர்களுக்கு நன்மை அளிக்கக்கூடியது. நிறுவனத்தை ஊக்குவிக்க கூடியவர்கள், அந்த நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்கள் தான். அதே போல அதன் பொருட்களும், வாடிக்கையாளர் நலனும் பாதுகாக்கப்படுகிறது என்பதை உறுதி செய்ய வேண்டும்.

ஊழியர்கள்  மற்றும் பங்குதாரர்கள் நலனில் நிறுவனம் அக்கறைப்படுகிறதா என்பது அவசியமாகும். இவர்களை அலட்சியப்படுத்தும் நிலையில், அவை நிறுவனத்தின் வளர்ச்சியிலும், பங்குகளின் விலையிலும் மாற்றத்தை ஏற்படுத்தும்.நிறுவனம் சட்டத்திற்கு புறம்பாக, முதலீட்டாளர்களை ஏமாற்றும் நோக்கில் செயல்படுகிறதா என்பதனை அறிவது அவசியம்.

மூன்றாவதாக நிறுவனத்தின் நிதி அறிக்கைகளை(Financial Statements) எளிமையான முறையில் அலசுவது அவசியமாகும். நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி லாபத்தில் எவ்வாறு காண்பிக்கப்பட்டுள்ளது, லாபம் நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு துணைபுரிகிறதா என்பதை கவனிக்க வேண்டும். நிறுவனம் காலாண்டு முடிவுகளில் சொன்ன லாபம் உண்மையில் லாபம் தானா, அவை முதலீட்டாளர்களுக்கு பயன் தரக்கூடியதாக உள்ளதா என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

பொதுவாக நிறுவனத்தின் லாபம் பங்குகளின் விலையிலும், முதலீட்டாளர்கள் பெறக்கூடிய போனஸ்(Bonus), Buyback மற்றும் டிவிடெண்ட்(Dividend) தொகையில் தெரிய வரும். எனவே நாம் சொன்ன மூன்று அடிப்படை விஷயங்களை எந்த சமரசமும் இல்லாமல் கண்டறிந்து பங்குகளை தேர்வு செய்ய வேண்டும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com