Category Archives: Guest Posts

தண்ணீர்… தண்ணீர்… பஞ்சாயத்து

தண்ணீர்… தண்ணீர்… பஞ்சாயத்து 

The Story of Water Crisis – Chapter 1

இது ஒரு விருந்தினர் இடுகை. தண்ணீர் சார்ந்த மேலாண்மை, அதன் கடந்த வரலாறு மற்றும் அதனை ஒட்டி நடப்பில் உள்ள பிரச்சனைகளை பேசும் குறுந்தொடர் இதுவாகும். வர்த்தக மதுரை வாசகர்கள் தங்கள் தண்ணீர் மேலாண்மை சார்ந்த கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்.

 

தண்ணிப்பஞ்சாயத்து அத்தியாயம் – 1 

 

 ‘ நீரின்றி அமையாது உலகு ‘  – இது வள்ளுவனின் வாக்கு 

 

தமிழர்களின் பாரம்பரிய பழக்கவழக்கம், தங்கள்  வீட்டிற்கு வரும் விருந்தினரை, முதலில் தண்ணீர் கொடுத்து வரவேற்பர். தண்ணீர் இல்லாத மனிதனின் வாழ்க்கை எவ்வாறு இருக்கும் என நினைத்து பார்த்தால், வள்ளுவரின் குரல் தான் எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது, ‘ புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை வாய்மையால் காணப் படும் ‘. 

 

ஆதலால் மனிதனின் புறத்தூய்மை தண்ணீரால் மட்டுமே தூய்மையடையும். அப்படியெனில், தண்ணீர் என்பது உலகத்தில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் ஜீவகாருண்யம். ஓ, மனிதனே ! தண்ணீரை உனக்கு மட்டும்  சொந்தம் கொண்டாடாதே. நீ அடிப்படையில் ஒரு விலங்கு என்பதை மறவாதே. தண்ணீரின் பயன்பாடு கடந்த நூற்றாண்டுகளில் தமிழரின் வாழ்வில் எவ்வாறு இருந்தது என்பதை சற்று பின் நோக்கி பார்ப்போம். 

 

ஆழ்துளை கிணறு இல்லாத முப்போக விளைச்சல், பூச்சிக்கொல்லிகள் இல்லாத இயற்கை விளைச்சல், கடைமடைக்கும் தண்ணீர் செல்ல வழிவகுத்த தொழில்நுட்பம் இல்லாத நீர் மேலாண்மை, காட்டு விலங்குகள் நீரை தேடி, நாட்டுக்குள் வராத வண்ணம் நீரின் தேவை விலங்குகளுக்கும் உண்டு என்று உணர்ந்த பண்பாடுள்ள சமூகம் கடந்த நூற்றாண்டுகளில் வாழ்ந்தது. 

 

ஒரு சிறு எடுத்துக்காட்டு: மன்னர் முறை இந்தியாவில் ஒழிக்கப்பட்ட பிறகு, மன்னர்களுக்கென்றே சமையல் செய்யக்கூடிய சமையல் கலைஞர்கள், அடுத்து யாருக்கு சமையல் செய்வது என்பது தெரியாமல் இருந்தனர். ஆதலால் அவர்கள் உணவகம் அமைத்து மன்னர்களுக்கு சமைத்த உணவை, சாமானியர்களுக்கு உணவகம் வைத்து விற்க ஆரம்பித்தனர். ஆகையினாலே மன்னர்களின் உணவு முறையும், சாதாரண மனிதனின் நாவை தொட்டது. இன்றும் பழைய டில்லியில் மொகலாய மன்னர்களுக்கு சமையல் செய்த சமையல் கலைஞர்களின் வாரிசுகள் பாரம்பரியமாக உணவாக விடுதி நடத்தி வருகின்றனர். இந்த கூற்றில் நாம் அறியப்பட வேண்டியது என்னவென்றால், சமையல் நுட்பங்களை பாரம்பரியமாக கடத்தி வந்தது. 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

எல்லோருக்குள்ளும் இந்த கேள்வி உள்ளதா, இல்லை எனக்கும் மட்டும் தோன்றுகிறதா என தெரியவில்லை… 

 

அது என்ன கேள்வியென்றால், ‘ முன்னோர்கள் பின்பற்றிய நீர் மேலாண்மை நிர்வாகம் ஏன் இன்று உள்ள விவசாயிகள் வரை கடந்து வரவில்லை ? 

 

தஞ்சை கோயிலை கட்டிய கட்டிட கலைஞனின் தொழில்நுட்பம் ஏன் இன்று வரை கடத்தி வரப்படவில்லை. இப்படியாக தமிழர்களின் உயரிய மேலாண்மை நுட்பங்கள் எந்த தலைமுறையில் அறுந்து போனது என்பதே ‘ அது. 

 

தண்ணீரை பூமியில் தேடாதே, வானில் இருந்து வர வை ‘ என ஐயா நம்மாழ்வார் கூறுகிறார். நீர்நிலைகளே இல்லை, குளங்கள் எல்லாம் காலி மனைகளானது. நீராவி இல்லாமல் மழை எப்படி வானிலிருந்து வரும் ? விவசாயத்திற்கு பயன்படுத்தும் தண்ணீரை விட, வியாபாரத்திற்கு பயன்படும் தண்ணீரே அதிகம். 

 

தண்ணீர், எப்பொழுது வியாபாரமாக தொடங்கியது ?

 

தண்ணீருக்கு புனிதம் கற்பிக்கும் போது…

 

எனக்கு இப்போது வரையும் தெரியவில்லை, சுத்தமான தண்ணீர் என்பது எது ? 

 

 மழை நீரா…  நிலத்தடி நீரா… ?  இல்லையெனில், தாதுக்கள் மற்றும் சத்துக்கள் நீக்கப்பட்ட பன்னாட்டு நிறுவனங்கள் விற்கும் நீரா ? 

 

வியாபார பொருளாக தண்ணீர் மாற்றப்பெற்ற பின்னணியின் சிறு ஆய்வு:

 

அந்த காலத்தில், மன்னர் என்பவருக்கு மட்டுமே அனைத்து வளங்களையும் அனுபவிக்கும் உரிமை உண்டு. அடுத்ததாக அமைச்சர்கள், படைத்தளபதிகள், பெரும் வியாபாரிகள் இருந்தனர். மக்கள் எந்த இடத்தில் இருந்தார்கள் என்றால் ?

 

அவர்களுக்கு இடம் ஏதும் வழங்கப்படவில்லை. மன்னர் முறை ஒழிக்கப்பட்ட பிறகு, யாவரும் இந்நாட்டு மன்னர்கள் என ஆன பிறகு, சாமானியனும் மன்னராக வாழ ஆசைப்பட்டதால் (பணக்காரனாக) சுயநலமாக, தேவைக்கு அதிகமாக சொத்து சேர்க்கும் பழக்கம் ஏற்பட்டது. மற்றவர்களிடம் இல்லாத பொருள் ஒன்று இருப்பின், அதனை தனிமனிதன் கவுரமாக நினைக்க ஆரம்பித்தான். சமூகமே இதற்கு ஒரு முக்கிய காரணம். ஏனென்றால் இந்த சமூகம், இருப்பவனுக்கு ஒரு மரியாதையும், இல்லாதவனுக்கு ஒரு மரியாதையும் நூற்றாண்டு காலமாக தந்து வந்துள்ளது, இப்பொழுதும் தருகிறது.

 

அம்பானிக்கும், சாதாரண குடிமகனுக்கும் ஒரே மரியாதையை இந்த சமூகம் தருமா ?

 

எனக்கு தெரிந்தவரை வாய்ப்பு என்பதே இல்லை. கும்பிடுகிறேன் சாமி என்ற கேள்விக்குறியிலிருந்து, வணக்கம் முதலாளி என்ற சொல்லை கேட்க நடுத்தர வர்க்கம் மிக அதிகமாக மெனக்கெடுகிறது. ஏனென்றால், நடுத்தர வர்த்தகத்தினரிடமே விரைவில் பணக்காரனாக வேண்டுமென்ற எண்ணம் மேலோங்கி உள்ளது. இவர்களே அதிகமான குறுக்கு வழிகளை கையாளுகின்றனர். அதனால் தான் புது பணக்காரர்கள் நம் நாட்டில் அதிகம் உருவாகிறார்கள். இவர்களின் வந்த வழியை ஆராய்ந்து பார்த்தால், உண்மையற்றவர்களாக இருப்பார்கள். மேலும் உண்மையை பார்த்திராதவர்களாக கூட இருக்கக்கூடும். 

 

இவ்வளவு தூரம் நம் சமூகத்தை பற்றி கூற வேண்டிய காரணம் என்னவென்றால், இயற்கை எவ்வாறு அழிக்கப்படுகிறது, அதற்கு சமூகத்தில் நிலவும் பொருளாதார ஏற்ற தாழ்வுகள் எவ்வாறு முக்கிய காரணியாக விளக்குவதற்கே மேற்கொண்ட பத்திகள். 

 

நாட்டில் நிகழும் முக்கியமான கொள்ளைகளில் எது முதன்மை என்று நீங்கள் கருதுவீர்கள் ?

 

பண கொள்ளையா… நகை கொள்ளையா… ?  தகவல் தொழில்நுட்ப திருட்டா ? கற்பு கொள்ளையா 🙂   இதனை விட மேலானது, மனிதனின் வாழ்வில் இன்றியமையாததாக இருக்க கூடிய நீர் வளம் மற்றும் நில வள கொள்ளையே !

 

மண் எப்படி உருவாகிறது என்று உங்களுக்கு தெரியுமா ?  

 

அதற்கு மலை உருவானது எப்படி என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். 

 

பூமி உருவான சமயத்தில், பூமியின் ஆழத்தில் உள்ள எரிமலை குழம்புகள் அவ்வப்போது சிறிதும், பெரிதுமாக வெடித்து கிளம்பும். பூமியின் மேற்பரப்புக்கு மேலே வெடித்து வந்து, குளிர்ந்து நிலையானதே மலையானது. பூமியின் மேற்பரப்பு வரை வெடித்து வந்து, குளிர்ந்து நிலையானதே கல்குவாரியானது – இப்போது அது வியாபாரமானது. 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

மலையின் மேலே பட்ட மழை நீர், அதனை சிறிது சிறிதாக உருக்கி, சிறு பாறைகளாக்கி, அருவி வழியாக கூலாங்கற்களாகி, ஆற்று வழியாக மணலானது. ஆக ஒரு கைப்பிடி மண் உருவாவதற்கு பல நூறு வருடங்கள் கூட ஆகலாம். இன்றைய அதிநவீன தொழில்நுட்பத்தில் ஒரு கைப்பிடி மண்ணை உருவாக்குவதற்கு வாய்ப்பிருக்கிறதா ?

 

அதை உலக வல்லரசுகளால் உருவாக்க முடியுமா ?

 

மழை உருவாகும் விதம் பற்றி நாம் சிறுவயது முதலே அறிந்திருந்த காரணத்தினால், இங்கு மண் வளம் பற்றி பேசியிருக்கிறோம். 

 

இதனை மனித இனம் இனி மேலாவது காப்பாற்றாமல் விட்டால், என்னவாகும் ? 

 

சமீப காலமாக, அடிக்கடி நிலச்சரிவு, சுனாமி, பூகம்பங்கள், மற்ற இயற்கை சீற்றங்கள் ஏன் ஏற்படுகிறது என்பதை பற்றி எப்போதாவது நாம் சிந்தித்தது உண்டா ?

பூமி தன் சமநிலையை எப்போதெல்லாம் இழக்கிறதா, அப்போதெல்லாம் தனது எதிர்ப்பை மேற்கொண்ட வழிகளில் பதிவு செய்கிறது. ஆனால் மனிதனோ, அந்த சமிக்கையை புரிந்து கொள்ளாமல், ஆறு அறிவிலிருந்து ஐந்து அறிவாக மாறி, மூர்க்கத்தனமாக மேலும் மேலும் பூமியின் சமநிலையை குலைக்கின்றான். 

 

இயற்கையின் பேரழிவிற்கு முன், மனித சக்தியால் ஒன்றும் செய்ய இயலாது என்பதனை மனிதா நீ என்று உணர்வாய் !

 

மனிதா, உன் மேலாதிக்கத்திலிருந்து கீழ் இறங்கு, தான் மட்டுமே உயர்ந்தவன் என்ற எண்ணத்தை கைவிடு. பூமி அனைத்து உயிரினங்களுக்கும் உரிமையானது என்பதை உணர்த்திடு, இயற்கை வளத்தை காத்திடு. 

 

இல்லையேல், பூமி என்றொரு கோளினை நீ மறந்திடு. 

இன்னும் எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது, எனது சிறு வயதில் டிராக்டரில் பெரிய தொட்டி வைத்து தனியார் நிறுவனம் ஒன்று, ஒரு குடம் தண்ணீருக்கு ஒரு ரூபாய் என எங்கள் பகுதியில் விற்பனை செய்துள்ளது. நான் யோசித்து பார்த்ததுண்டு. மக்கள் ஏன் குடிநீரை விலை கொடுத்து வாங்கும் நிலை ஏற்பட்டது என்று. ஏனென்றால் நாங்கள் இருந்த பகுதி ஊரின் வெளியே வளரும் பகுதியாக இருந்தது. அதனால் அரசாங்கத்தால் ஊராட்சி குடிநீரை வழங்க இயலவில்லை.

 

இதன் மூலம் எனக்கு தெளிவானது, ‘ வளர்ச்சி என்ற பெயரில் நகர் விரிவாக்கம் செய்யும் போது, தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுமென்று ‘. மேலும், சிறிது காலம் கழித்து அந்த தனியார் நிறுவன குடிநீர் சேவையை என்னால் காண முடியவில்லை. நான் மகிழ்ந்தேன், தண்ணீர் விற்பனை செய்வது நின்று விட்டதென்று. ஆனால் மீண்டும் தற்போது சுத்திகரிக்கப்பட்ட நீர் என்ற போர்வையில் பன்னாட்டு நிறுவனங்கள் முதல் சிறு நிறுவனங்கள் வரை நீராலை அமைத்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகம் செய்வதை காண முடிகிறது. ஏன், அரசாங்கம் உட்பட…

 

ஆக, குடிநீர் விற்பனை என்பது சாகாவரம் பெற்றது போல. எங்கள் பகுதியில் ஒரு சொல்லடை உண்டு. ‘ ஒருவன் விரைவாக பணக்காரனாக வேண்டுமென்றால், மூன்று வழியே எளிய வழி என கூறுவார்கள். மண், பெண் மற்றும் பொன். மண் என்றால் பூமியிலிருந்து கிடைக்கக்கூடிய இயற்கை வளங்கள். நிலக்கரி, கல்குவாரி, தண்ணீர் வியாபாரம், தோப்புகள் மற்றும் இது போன்ற மற்ற மண் சார்ந்த வளங்கள். 

 

பெண் வழி என்றால் திருமணம் செய்து பெண் வீட்டாரிடம் இருந்து வரும் சொத்துக்கள் மூலமாக. கடைசியாக பொன் என்றால் தங்கம், வைரம், மற்றும் பூமிக்கு அடியில் கிடைக்கும் விலையுர்ந்த பொருட்கள் மூலமாக. 

 

பூமியின் உயிர்நாடியான தண்ணீரை விவசாயம், மற்ற உயிரினங்களின் வாழ்வாதாரமாக அல்லாமல் வணிக நோக்கில் விற்பது, விதை நெல்லை விற்று உண்பதற்கு ஈடானது. இப்பொழுது யார் யாரெல்லாம் இயற்கை வளங்களை அழித்து பொருள் ஈட்டுகிறார்களோ, அவர்களெல்லாம் பின்னாட்களில் இவற்றை பெறுவதற்கு அதிக விலை கொடுக்க நேரிடும். 

 

இயற்கை தனி மனிதனுக்கு என்று எதையும் கொடுத்தது இல்லை. இயற்கை வளங்கள் அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவானது.  

 

 

 இன்னும் பஞ்சாயத்தை கூட்டுவோம்…

 

திரு. பா. பாண்டித்தங்கம் (வர்த்தக மதுரை தளத்திற்காக)

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com

Advertisement