வருமான வரி தாக்கல் செய்து விட்டீர்களா ? தாக்கலுக்கான கடைசி தேதி டிசம்பர் 31, 2021

வருமான வரி தாக்கல் செய்து விட்டீர்களா ? தாக்கலுக்கான கடைசி தேதி டிசம்பர் 31, 2021

Income Tax Return Filing for AY 2021-22 Deadline: 31st December, 2021

2020-21ம் நிதியாண்டுக்கான (2021-22 மதிப்பீட்டு ஆண்டு) வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஜூலை 2021 என்றிருந்த நிலையில் கொரோனா பெருந்தொற்று மற்றும் புதிய மென்பொருள் தொழில்நுட்ப கோளாறு ஆகியவற்றால் டிசம்பர் 31, 2021 ஆக நீட்டிக்கப்பட்டிருந்தது.

சமீபத்தில் நிதி அமைச்சகத்தின் சார்பில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், டிசம்பர் 3, 2021 தேதியின் படி, 2021-22 மதிப்பீட்டு ஆண்டுக்கான(Assessment Year) வருமான வரி தாக்கலை இதுவரை மூன்று கோடிக்கும் மேற்பட்டவர்கள் செய்துள்ளதாகவும், தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் வரும் டிசம்பர் 31ம் தேதியுடன் முடிவடைய உள்ளதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

நடப்பில் நாள்தோறும் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட வரி தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இவற்றில் 52 சதவீதம் பேர் இணையம் வழியாக வரி தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. சுமார் 59 சதவீதம் பேர் ஐ.டி.ஆர் – 1 (ITR – 1) படிவத்தையும், 9 சதவீதம் ஐ.டி.ஆர் – 3 படிவத்தையும், 8 சதவீதம் பேர் ஐ.டி.ஆர் – 2 படிவத்தையும் பயன்படுத்தி வரி தாக்கல் செய்துள்ளனர்.

இதர படிவங்களான ITR-4, 5, 6, 7 ஆகியவற்றை சுமார் 23 சதவீதம் பேர் வருமான வரி தாக்கல் செய்ய பயன்படுத்தி உள்ளனர். மூன்று கோடிக்கும் மேற்பட்ட வருமான வரி தாக்கல் நடைபெற்றிருந்தாலும், E-Verification என்ற முழுமையான வரி தாக்கல் நிறைவை இதுவரை 2.69 கோடி பேர் மட்டுமே செய்துள்ளதாக வருமான வரி துறை கூறியுள்ளது.

வரி தாக்கலை Verification மூலம் உறுதி செய்வது, பான் – ஆதார் இணைப்பை ஏற்படுத்துதல், ஆதார் கார்டு தகவலில் கைபேசி எண்ணை பதிவு செய்தல், வங்கிக்கணக்கை சரியான முறையில் இணைப்பது ஆகியவற்றை செய்வதால் வருமான வரி தாக்கல் செய்யும் போது சிரமம் ஏற்படாமல் இருக்கும். வருமான வரி தாக்கல் செய்யும் முன் படிவம் 16(Form 16),  படிவம் – 26 ஏ.எஸ். (Form 26AS & AIS, TIS) மற்றும் வருடாந்திர வரித்தகவல் அறிக்கையை சரி பார்த்து கொள்வது அவசியம்.

நீங்கள் வாங்கிய மற்றும் விற்ற பங்குகள், பரஸ்பர நிதிகள், வங்கி சேமிப்பு மற்றும் டெபாசிட்டுக்கான வட்டி வருவாய், வீட்டுமனை பண பரிவர்த்தனை மற்றும் இதர நிதி சார்ந்த தகவல்கள் மேலே சொல்லப்பட்ட படிவங்களில் கொடுக்கப்பட்டிருக்கும். இதனை சரி பார்த்து மற்றும் உறுதி செய்து தாக்கல் செய்யும் போது, பின்னாளில் ஏற்படும் சிக்கல்களை தவிர்க்கலாம். வரக்கூடிய காலக்கட்டங்களில் கடன்கள், காப்பீடுகள், புதிய நிதி சொத்துக்களில் செய்யப்படும் முதலீடுகள் ஆகிய விவரங்களும் இது போன்ற படிவங்களில் புதுப்பிக்கப்படலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

இரண்டாம் காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8.4 சதவீதம்

இரண்டாம் காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8.4 சதவீதம் 

India’s GDP of 8.4 Percent in September Quarter – Q2FY22

கடந்த 2020-21ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் கொரோனா பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட ஊரடங்கால் பொருளாதாரம் பெருத்த சரிவை கண்டிருந்தது. 2021ம் நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் (-24.4) சதவீத வீழ்ச்சியை சந்தித்தது. இதன் தொடர்ச்சியாக அடுத்த காலாண்டிலும் (-7.4) சதவீத வீழ்ச்சி ஏற்பட்டிருந்தது.

பெரும்பாலான வளர்ச்சியடைந்த மற்றும் வேகமாக வளரும் நாடுகளில் இது போன்ற தாக்கம் இருந்தது குறிப்பிடத்தக்கது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஓரளவு குறைய குறைய பொருளாதாரமும் மீண்டெழுந்தது. கடந்தாண்டின் டிசம்பர் காலாண்டில் 0.5 சதவீதமும், மார்ச் காலாண்டில் 1.6 சதவீதமுமாக வளர்ச்சி இருந்தது.

நடப்பு நிதியாண்டின் முதல் காலண்டான ஏப்ரல்-ஜூன் காலத்தில் 20.1 சதவீதம் வளர்ச்சி பெற்றிருந்த நிலையில், தற்போது ஜூலை-செப்டம்பர் இரண்டாம் காலாண்டின் வளர்ச்சி 8.4 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது. இந்த 8.4 சதவீத வளர்ச்சி என்பது கடந்தாண்டு செப்டம்பர் 2020 காலத்துடன் ஒப்பிடப்பட்ட வளர்ச்சியாகும்.

சேவைத்துறை, நிதி மற்றும் வீட்டுமனை, அரசு நிர்வாகம், உற்பத்தி ஆகியவற்றின் வளர்ச்சியால் இரண்டாம் காலாண்டின் வளர்ச்சி சாத்தியப்பட்டுள்ளது. 2021-22ம் நிதியாண்டில் ஒட்டுமொத்தமாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9.5 சதவீதமாக இருக்கும் என பாரத ரிசர்வ் வங்கி மதிப்பிட்டுள்ளது.

1950ம் ஆண்டு காலகட்டங்களில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி பங்களிப்பில் விவசாய துறை 52 சதவீதத்தை கொண்டிருந்த நிலையில், இன்றைக்கு 12 சதவீதமாக உள்ளது. 2021ம் ஆண்டின் பொருளாதார பங்களிப்பில் சேவைத்துறை 60 சதவீதமும், உற்பத்தி 15 சதவீதமும், விவசாயம் 12 சதவீதமும், கட்டுமானம் 8 சதவீதம், குடிநீர் மற்றும் எரிசக்தி 5 சதவீதமுமாக உள்ளது.

விவசாயத்தின் பங்களிப்பு குறைந்திருந்தாலும், தற்போது நாட்டின் 50 சதவீத வேலைவாய்ப்பை விவசாயத்துறை உருவாக்கி தந்துள்ளது குறிப்பிடத்தக்கது. விவசாயத்துறையின் கீழ் விவசாயம், வனவியல் மற்றும் மீன் பிடித்தல் ஆகியவை உள்ளன.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

டைம் லூப்(Time loop): மொபைல் ரீசார்ஜ் விலை அதிகரிப்பு, டேர்ம் இன்சூரன்ஸ் பிரீமியம் அதிகரிக்க உள்ளது – என்ன செய்ய போகிறீர்கள் ?

டைம் லூப்(Time loop): மொபைல் ரீசார்ஜ் விலை அதிகரிப்பு, டேர்ம் இன்சூரன்ஸ் பிரீமியம் அதிகரிக்க உள்ளது – என்ன செய்ய போகிறீர்கள் ?

Learn the Time loop insights for the Personal Finance

உலகளவில் டைம் லூப், டைம் மெஷின் அல்லது கால பயணம்(Time Travel – Sci-fi) சார்ந்த திரைப்படங்களின் எண்ணிக்கை அதிகமிருந்தாலும், நம் நாட்டில் சற்று குறைவு தான். சமீப காலத்தில் கால பயணம் குறித்த படங்கள் இங்கே வந்து கொண்டிருக்கின்றன. இது போன்ற கதைகள் பொதுவாக கற்பனையாவையாக இருந்தாலும், உளவியல் சார்ந்த விஷயங்களை இவை பேசும்.

வீட்டிலிருந்து கல்லூரிக்கோ அல்லது அலுவலகத்திற்கோ செல்லும் நிலையில், வீட்டு நுழைவாயிலில் சிறிய தடுமாற்றம் ஏற்பட்டு விட்டால், அம்மா சிறிது தண்ணீர் அருந்தி விட்டு செல்லும்படி கூறுவதுண்டு. இதனை அலட்சியப்படுத்தலாம் அல்லது பயத்தினாலோ, பணிவின் காரணமாகவோ அவர் சொன்னதை செய்து விட்டு போகலாம். பலருக்கு அன்றைய தினம் டைம் லூப் தான் (கற்பனை தான்)

முக்கிய நிறுவனம் ஒன்றிற்கு இன்டெர்வியூ செல்லுகையில் பூனை குறுக்கே வந்து விட்டது, இரு சக்கர வாகனம் பஞ்சர், பஸ் பிரேக் டவுன் – 12 பி படத்தின் டைம் லூப் ஆக தான் தோன்றும்.

‘நான் தான் அப்பவே சொன்னேனே அங்கே போகாதன்னு”

“எனக்கு தெரியும் இப்படி தான் நடக்கும்முன்னு”

“அவங்க சொன்னதை நான் தான் கேட்கல”

இது போன்ற கண்ணுல வந்து போகும் டயலாக்குகள் எல்லாம் Decision Making S(K)ills தான்.

#maanaadu

மீண்டும் ஒரு ஊரடங்கு வருமா எனும் அச்சம் உங்களுக்கு ஏற்பட்டால், உங்களது டைம் லூப்பில் கடந்த கால சிந்தனைகள் தென்படும். இவை வருத்தம் தரக்கூடியதாகவோ, இல்லையெனில் வாய்ப்பளித்த மகிழ்ச்சியாகவோ உங்களுக்கு இருந்திருக்கலாம்.

சரி, நிதி சார்ந்த கால பயணத்திற்கு வருவோம். நாமும் ஒவ்வொரு வருடமும் இலக்குகளை குறித்து வைத்து தான் வருகிறோம். கம்யூனிசத்துக்கும், கேபிடலிசத்திற்கும் இடையே அல்லல்பட்டு வருகிறோம். ஆனால் நமது தனிநபர் நிதி திட்டமிடலை சரியாக நிறைவு செய்தோமா என்றால் அது நமக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.

கொரோனா காலத்தில் நமது நெருங்கிய உறவினர்கள் மற்றும் நட்பு வட்டங்களில் சில உயிர்களை இழந்திருப்போம். பிரபலமானவர்களின் இரங்கலை செய்தியாக கேட்டிருப்போம். ஊரடங்கு காரணமாக ஏற்பட்டிருந்த பொருளாதார மந்தநிலையில் பலர் வேலை இழந்தனர், தங்களது தொழிலை மேற்கொள்ள முடியாமல் சிரமப்பட்டனர், சிலர் இணைய வழி வருமானத்தை வாய்ப்பாக உருவாக்கினர், பெருந்தொற்று காரணமாக எதிர்பாராத வகையில் அதிக மருத்துவ செலவு, வருமானம் ஈட்டும் நபரின் இழப்பால் குடும்பத்தின் நிதி பாதிப்பு ஆகியவற்றை நாம் அறிந்திருப்போம். இவையெல்லாம் நமது நினைவலைகளாக எப்போதும் இருக்கும். சரியான நிதி பாதுகாப்பை உறுதி செய்தவர்களுக்கு ஓரளவு சிரமம் ஏற்பட்டிருக்காது. அது போன்ற குடும்பத்தில் நிதிச்சிக்கலும் குறைவு தான். டேர்ம் இன்சூரன்ஸ், மருத்துவ காப்பீடு மற்றும் அவசர கால நிதி(Emergency Fund) ஓரளவு நமக்கு புரிந்திருக்கும்.

ஒவ்வொரு வருடமும் டேர்ம் இன்சூரன்ஸ் எடுப்பதை காலம் தாழ்த்தி வருகிறோம். அவசர கால நிதிக்கு பெரும்பாலும் நாம் மற்றவர்களை சார்ந்து  தான்(Parents, Neighborhood, Loans, Credit cards) இருக்கிறோம். ‘நான் நன்றாக தான் இருக்கிறேன், நமக்கு எதுக்கு மருத்துவ காப்பீடு – வீண் செலவு’ என்று அலட்சியம் செய்கிறோம். இருப்பினும் நமது கால பயணத்தில்(Time Travel) மீண்டும் மீண்டும் ஒரு நெருங்கிய உறவுகளின் இழப்பு, பொருளாதார ரீதியாக கஷ்டப்படும் குடும்பம், காப்பீடு எடுக்காமல் லட்சங்களில் மருத்துவ செலவு.

இப்போது தொலைத்தொடர்பு நிறுவனங்களின் மொபைல் ரீசார்ஜ் விலை அதிகரித்து விட்டது என புலம்புகிறோம். ‘5ஜி தொழில்நுட்பம் வந்த பிறகு என்ன செய்வது, விலை ஏறுமா அல்லது குறையுமா ?’

டேர்ம் காப்பீடுக்கான பிரீமியம் தொகையும் அதிகரிக்க போகிறது. கொரோனா காலத்திற்கு முந்தைய பிரீமியம் ஓரளவு பரவாயில்லை. புதிய நோய்கள் கண்டறிய கண்டறிய ரிஸ்க்குக்கான பிரீமியமும் அதிகமாக உள்ளது. முன்னொரு காலத்தில் தேவையும் பெரிதாக இல்லை, தொழில்நுட்பமும் வளர்ச்சி அடையவில்லை. வரவுக்குள் செலவு எளிதாக அமைந்தது. இப்போது அப்படியல்ல, நமது தேவைகளும், விருப்பங்களும் அதிகரித்துள்ளது. நிதி சார்ந்த விழிப்புணர்வு இனிவரும் காலங்களில் நமக்கு நிறைய தேவைப்படுகிறது.

மொபைல் ரீசார்ஜ் கட்டணங்கள் மற்றும் டேர்ம் பிரீமியம் அதிகரித்தாலும் நமக்கு கவலையில்லை, அதிகமாக சம்பாதித்தால் ! தேவைகளும், விருப்பங்களும் அதிகரிக்கும் போது பெரும்பாலும் விலைவாசி உயர்வு நம் கையில் இல்லை.

ஆனால், நிதி பாதுகாப்பை(Financial Protection) உறுதி செய்யாமல் காலம் தாழ்த்துவது நமது டைம் லூப்பை உண்மை நிலையாக மாற்ற செய்யும். அவற்றில் நமது கவனம் எப்போதும் தேவை. ‘ ஓய்வு காலத்திற்கு இன்னும் 30 வருடங்கள் உள்ளது, நமக்கு என்ன அவசரம்’ என 30 வயது இளைஞன் எண்ணினால் நமது பெற்றோருக்கு கிடைத்த வாழ்க்கை(உடல் மற்றும் மன நலமும்) கூட நமக்கு பின்னாளில் கிடைக்கப்பெறாது.

‘வரும் முன் காப்பது நலம்’

‘பருவத்தே பயிர் செய்’

‘காற்றுள்ள போதே தூற்றிக்கொள்’

இவையனைத்தும் டைம் லூப்பை சார்ந்தவை தான்.

இப்போதே நீங்கள் செய்ய வேண்டிய நிதி திட்டமிடல்:

  • டேர்ம் காப்பீடு (Term Insurance)
  • விபத்து காப்பீடு (Accident care) 
  • மருத்துவ காப்பீடு (Health Insurance)
  • அவசர கால நிதி (Emergency Fund)
  • நிதி இலக்குகளுக்கான முதலீடு (Invest for Financial Goals) 
  • நாமினியை நியமிப்பது மற்றும் உயில் எழுதுவது (Nomination & Will)
  • உங்களது குடும்ப உறுப்பினர்களுக்கு நிதி சார்ந்த கல்வி மற்றும் தேவையை உணர வைப்பது (Financial Literacy)

மேலே சொன்னவற்றை நாம் செய்யாவிட்டால், நமக்கு மட்டும் இழப்பல்ல… நம்மை நேசித்தவர்களுக்கு, நம்மை பொருளாதாரம் சார்ந்து நம்பியவர்களுக்கும் தான். விளைவை தெரிந்தும் காலம் தாழ்த்துவது தான் கால பயணத்தின் கிளைமாக்ஸ்.

டைம் மெஷினில் மீண்டும் வருவோம் !

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

தேசிய பங்குச்சந்தைக்கு தயாராகும் அனுக் பார்மா நிறுவனம்

தேசிய பங்குச்சந்தைக்கு தயாராகும் அனுக் பார்மா நிறுவனம் 

Anuh Pharma will be listed soon in NSE(National Stock Exchange)

எஸ்.கே. குழுமத்தின் அங்கமான அனுக் பார்மா நிறுவனம் மருந்து தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டு வருகிறது. 61 வருடங்களுக்கு முன்பு துவங்கப்பட்ட இந்நிறுவனம் காசநோய்க்கு எதிரான மருந்து தயாரிப்பில் நாட்டின் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றாகவும் திகழ்கிறது. அனுக் பார்மா பாக்டீரியா, மலேரியா, கார்டிகோஸ்டீராய்டுகள் ஆகியவற்றை எதிர்க்க தேவையான மருந்து பொருட்களை உற்பத்தி செய்து வருகிறது. இது போல பல நுண்ணுயிர் எதிர்ப்பிகளையும் உற்பத்தி செய்து விற்பனையில் ஈடுபட்டு வருகிறது.

530 கோடி ரூபாய் சந்தை மதிப்பை கொண்ட ஸ்மால் கேப் நிறுவனமாக இருந்தாலும், கடந்த 50 வருடங்களுக்கு மேலாக மும்பை பங்குச்சந்தையில் மட்டுமே பட்டியலிடப்பட்டு வர்த்தகமாகி வருகிறது. நிறுவனத்தின் கடன்-பங்கு விகிதம் 0.23 என்ற விகிதத்திலும், நிறுவனர்களின் பங்களிப்பு 70 சதவீதமாக உள்ளது.

செப்டம்பர் 2021 காலாண்டின் முடிவில் நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு(Reserves) 172 கோடி ரூபாயாக இருந்துள்ளது. இது சந்தை மூலதன மதிப்பில் மூன்றில் ஒரு பங்காக இருப்பது குறிப்பிடத்தக்கது. 2006ம் ஆண்டின் ஜூலை மாதத்தில் அனுக் பார்மா நிறுவனத்தின் முக மதிப்பு(Face value) 10 ரூபாயிலிருந்து ஐந்து ரூபாயாக மாற்றியமைக்கப்பட்டது.

2006ம் வருடத்தின் ஜனவரி மாதத்தில் பங்கு ஒன்றுக்கு ரூ.20 ஆக வர்த்தகமான நிலையில், நாம் 1000 பங்குகளை வாங்கியிருந்தால் நமது முதலீட்டு மதிப்பு அப்போது 20,000 ரூபாயாக இருந்திருக்கும். முகமதிப்பு மாற்றியமைக்கப்பட்ட பின்பு நமது கையிருப்பு பங்குகள் 2,000 (முதலீட்டு மதிப்பில் மாற்றமில்லை).

அதே வருடத்தில் ஒன்றுக்கு ஒன்று போனஸ்(1:1 Bonus issue) பங்குகளும் அறிவிக்கப்பட்டிருந்தது. எனவே, நமது கையில் உள்ள 2,000 பங்குகள் 4,000 பங்குகளாக மாறியிருக்கும். பின்பு 2010ம் ஆண்டில் ஒரு பங்குக்கு இரண்டு பங்குகள்(2:1 Bonus issue) என்ற விகிதத்தில் போனஸ் பங்குகள் வெளியிடப்பட்டது. இப்போது நமது கையிருப்பு 12,000 பங்குகள்.

மீண்டும் 2015ம் ஆண்டில் ஒரு பங்குக்கு இரண்டு பங்குகள் என்ற அடிப்படையில்  போனஸ் பங்குகள். இந்த நிகழ்வுக்கு பின்பு நம்மிடம் 36,000 பங்குகளாக சொல்லப்பட்டிருக்கும். கடந்தாண்டு (செப்டம்பர் 2020) கொரோனா காலத்திலும் 1:1 போனஸ் பங்குகள் அறிவிக்கப்பட்டது. இதனையும் நாம் கணக்கில் கொண்டால் இப்போது 72,000 பங்குகள் நம் கைவசம் இருந்திருக்கும். நடப்பில்(03-08-2021) அனுக் பார்மா நிறுவனத்தின் பங்கு ஒன்று அதிகபட்சமாக 150 ரூபாய்க்கு வர்த்தகமானது. 15 வருடங்களுக்கு முன்பு இந்நிறுவனத்தில் 1000 பங்குகளை வாங்கியிருந்தால் நமது முதலீடு அப்போதைய நிலையில் ரூ.20,000 ஆக இருந்திருக்கும். சொல்லப்பட்ட ஆகஸ்ட் 2021 விலையில் நம்மிடம் ரூ.1.08 கோடியும், 72000 பங்குகளும் கைவசம் இருக்கும்(பங்குகளை இதுவரை விற்காமல் இருந்திருந்தால் !). தற்போது இந்த பங்கு ரூ.105 என்ற விலையில் வர்த்தகமாகி வருகிறது.

மும்பை பங்குச்சந்தையில் மட்டுமே வர்த்தகமாகும் இந்நிறுவன பங்கு, கடந்த நவம்பர் 6ம் தேதி நடைபெற்ற இயக்குனர் குழு கூட்டத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிறுவனத்தை பட்டியலிடுவதற்கான முடிவை பங்குதாரர்களிடம் இருந்து பெற்றது. இதன் தொடர்ச்சியாக சமீபத்தில் நடைபெற்ற நிறுவனத்தின் இரண்டாம் காலாண்டு(Q2FY22 results) முடிவுகளின் நிகழ்விலும் உறுதி செய்யப்பட்டது. அடுத்த இரு மாதங்களுக்குள் அனுக் பார்மா நிறுவனம், தேசிய பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும் என நிறுவனமும் கூறியுள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி,  வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

அக்டோபர் மாதத்தில் அன்னிய முதலீட்டாளர்கள் என்ன செய்து விட்டார்கள் ?

அக்டோபர் மாதத்தில் அன்னிய முதலீட்டாளர்கள் என்ன செய்து விட்டார்கள் ?

Trading activity of Foreign Institutional Investors(FII) in the Indian Equity Market 

மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ்(BSE Sensex) கடந்த ஒரு வருடத்தில் 50 சதவீதமும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி(Nifty50) குறியீடு 52 சதவீதமும் ஏற்றம் பெற்றுள்ளது. நடப்பு வருடத்தில் சொல்லப்பட்ட இரண்டு குறியீடுகளும் இதுவரை 20 சதவீதத்திற்கு மேல் ஏற்றமடைந்துள்ளது. சமீபத்தில் இந்திய பங்குச்சந்தையின் முக்கிய குறியீடுகளான நிப்டி மற்றும் சென்செக்ஸ் தனது வாழ்நாள் உச்சபட்ச விலையில் வர்த்தகமானது.

தற்போது உச்சநிலையிலிருந்து, இந்த இரண்டு குறியீடுகளும் 5 சதவீதம் இறக்கம் கண்டு வர்த்தகமாகி வருகிறது. எனினும் இதனை மிகப்பெரிய இறக்கம் என நாம் சொல்லிவிட முடியாது. நடப்பு அக்டோபர் மாதம் 29ம் தேதியுடன் முடிவடைந்த வர்த்தகத்தில் சென்செக்ஸ் 59,307 புள்ளிகளுடனும், நிப்டி 17,672 புள்ளிகளுடனும் உள்ளது.

கடந்தாண்டின் கொரோனா பெருந்தொற்றுக்கு(Covid-19) பிறகான காலத்தில் பங்குச்சந்தை முதலீடும், டீமேட் கணக்கு துவங்கும் எண்ணிக்கைகளும் அதிகரித்து வருவது கவனிக்கத்தக்கது. பெருந்தொற்றுக்கு முந்தைய காலமான 2018 மற்றும் 2019ம் ஆண்டுகளில் காணப்பட்ட உலக பொருளாதார மந்தநிலை, நாடுகளிடையேயான வர்த்தக போர், போர் பதற்றம், காலநிலை மாற்றங்கள் மீண்டும் விவாதிக்கப்பட்டு வருகிறது.

வங்கிகளில் காணப்படும் வட்டி விகித குறைவு, பணவீக்க விகிதம் மற்றும் வீட்டுமனை துறையில் உள்ள சுணக்க நிலை ஆகியவற்றால் பங்குச்சந்தை மற்றும் மெய்நிகர் நாணய(அரசு அங்கீகரிக்கப்படாத – Unregulated) முதலீடு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. வரும் நாட்களில் பணவீக்க விகிதம் அதிகரிக்கும் நிலையில், இது போன்ற முதலீடுகளில் மாற்றத்தை ஏற்படுத்தும். சந்தை இறக்கம் காணும் போது தங்கம் போன்ற முதலீடுகளின் வருவாய் அதிகரிக்க கூடும்.

இந்திய பங்குச்சந்தையை பொறுத்தவரை பெரும்பாலும் அன்னிய முதலீட்டாளர்களின் கை ஓங்கி தான் இருக்கும். பங்குச்சந்தைக்கும், கடன் பத்திரங்களுக்கும் அன்னிய முதலீட்டாளர்களிடம் இருந்து கிடைக்கப்பெறும் முதலீடு கணிசமாக இருக்கும். கடந்த ஒன்றரை வருடத்தில் காணப்பட்ட பங்குச்சந்தை ஏற்றத்தால், தற்போது அன்னிய முதலீட்டாளர்களின் விற்பனை அதிகரித்து வருகிறது.

நடப்பு நிதியாண்டில் அன்னிய முதலீட்டாளர்கள் இதுவரை(அக்டோபர் மாத முடிவில்) ரூ.68,500 கோடி என்ற அளவில் இந்திய பங்குச்சந்தையில் பங்குகளை விற்றுள்ளனர். இதற்கு நேர்மாறாக உள்நாட்டு முதலீடு(Domestic Institutional Investors) 56,179 கோடி ரூபாய் சந்தைக்கு வந்துள்ளது. சமீபத்தில் மதிப்பீட்டு மற்றும் முதலீட்டு நிறுவனங்கள் சில, இந்திய பங்குச்சந்தையின் தற்போதைய மதிப்பு ஏற்றக்கொள்ளக்கூடியாத இல்லை என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

FII & DII Trading Activity

அக்டோபர் மாதத்துடன் முடிவடைந்த, கடந்த ஏழு மாதங்களில் அன்னிய முதலீட்டாளர்கள் 11.75 லட்சம் கோடி ரூபாய்க்கு பங்குகளை வாங்கியும், ரூ.12.43 லட்சம் கோடி மதிப்பில் பங்குகளை விற்றும் உள்ளனர். நிகர விற்பனையாக 68,500 கோடி ரூபாய் இருந்துள்ளது. சொல்லப்பட்ட காலத்தில், உள்ளூர் முதலீட்டாளர்கள் 8.62 லட்சம் கோடி ரூபாய்க்கு பங்குகளை வாங்கியும், 8.06 லட்சம் கோடி ரூபாய்க்கு பங்குகளை விற்றும் உள்ளனர். இதன் காரணமாக அவர்களது நிகர கொள்முதல்(Net Purchase) ரூ.56,179 கோடியாக உள்ளது.

அதிகபட்சமாக அக்டோபர் மாதத்தில் மட்டும் அன்னிய முதலீட்டாளர்கள் 25,572 கோடி ரூபாயை நிகர விற்பனையாக கொண்டுள்ளனர். இதே மாதத்தில் உள்ளூர் முதலீட்டாளர்கள் 4,470 கோடி ரூபாயை நிகர கொள்முதலாக கொண்டுள்ளனர். சந்தையில் உள்ள பல நிறுவன பங்குகளின் விலை, அதன் வருவாயுடன் எந்த தொடர்பும் இல்லாமல் அதிகபட்ச விலையில் வர்த்தகமாகி வருகிறது. இருப்பினும், அடிப்படை பகுப்பாய்வை(Fundamental Analysis) நிறைவு செய்யும் நல்ல நிறுவன பங்குகள் மலிவான விலையில் கிடைக்கப்பெறுவதும் தற்சமயம் உள்ளது.

சந்தை புதிய உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில், தரமான நிறுவனங்களை தள்ளுபடி விலையில்(Discounted Value) வாங்கவில்லையென்றால், முதலீட்டில் அதிகப்படியான சரிவை சந்திக்கும் காலமாக தற்போது நிலவுகிறது. சந்தையில் புதிதாக பட்டியலிடப்படும் நிறுவனங்கள் தங்களுக்கான முதலீட்டை விரைவாக பெற வேண்டிய நிலையில், புதிய முதலீட்டாளர்கள் சற்று பொறுமை காத்து, பங்குகளை ஆராய்ந்து நீண்டகால முதலீட்டிற்கு தயாராக வேண்டியது அவசியம். முதலீட்டை எப்போதும் பரவலாக்கம்(Asset Allocation & Diversification) செய்வதன் காரணமாக, நட்டத்தை தவிர்க்கலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

ஐ.டி.சி. நிறுவன இரண்டாம் காலாண்டு நிகர லாபம் – ரூ.3,714 கோடி

ஐ.டி.சி. நிறுவன இரண்டாம் காலாண்டு நிகர லாபம் – ரூ.3,714 கோடி

ITC reported a Net Profit of Rs.3,714 Crore – Q2FY22 results

பில்லியன் டாலர் வருவாயை கொண்டிருக்கும் ஐ.டி.சி. நிறுவனம், புகையிலையை தனது முதன்மை தொழிலாக கொண்டிருந்தாலும், இன்று நுகர்வோர் பொருட்கள், ஆடைகள், நட்சத்திர விடுதிகள், பேப்பர் பொருட்கள், பேக்கேஜிங்(Packaging), விவசாயம் சார்ந்த பொருட்கள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் கல்வித்துறை என தனது தொழிலை விரிவடைய செய்துள்ளது.

இந்திய பங்குச்சந்தையில் சுமார் 2.94 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பை கொண்டிருக்கும் இந்நிறுவனம் கடனில்லா நிறுவனமாகவும்(Debt Free) இருப்பது குறிப்பிடத்தக்கது. நிறுவனத்தின் வட்டி பாதுகாப்பு விகிதம் 564 மடங்குகளில் இருப்பது முதலீட்டாளர்களுக்கு சாதகமானது.

2020-21ம் நிதியாண்டின் முடிவில் நிறுவனத்தின் வருவாய் 49,257 கோடி ரூபாயாகவும், நிகர லாபம் ரூ.13,161 கோடியாகவும் இருந்துள்ளது. ஐ.டி.சி. நிறுவனத்தின் இயக்க லாப விகிதம்(OPM) ஆண்டுக்கு சராசரியாக 35 சதவீதம் என்ற அளவில் உள்ளது. நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு மார்ச் 2021 முடிவில் ரூ.59,100 கோடி.

நடப்பு நிதியாண்டுக்கான இரண்டாம் காலாண்டு(ஜூலை – செப்டம்பர் Quarterly results) முடிவுகளை நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாய் ரூ.13,751 கோடியாகவும், செலவினம் 8,740 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. இதர வருமானமாக 469 கோடி ரூபாய் சொல்லப்பட்டுள்ளது.

சொல்லப்பட்ட காலாண்டின் நிகர லாபமாக ரூ.3,714 கோடி இருந்துள்ளது. வரிக்கு முந்தைய லாபம் ரூ.5,055 கோடி. கடந்த ஜூலை 2021 காலாண்டுடன் ஒப்பிடுகையில், தற்போதைய வருவாய் 4 சதவீதமும், நிகர லாபம் 13 சதவீதமும் வளர்ச்சியடைந்துள்ளது.

முந்தைய வருடத்தின்(2020-21) இரண்டாம் காலாண்டுடன் ஒப்பிடும் போது, நிறுவனத்தின் வருவாய் தற்போது 14 சதவீதமும், நிகர லாபம் 10 சதவீதமும் உயர்ந்துள்ளது. எனினும் கடந்தாண்டு கொரோனா பெருந்தொற்று காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தது கவனிக்கத்தக்கது. இதன் காரணமாக பெரும்பாலான நிறுவனங்களின் வருவாய், கடந்த நிதியாண்டை காட்டிலும் நடப்பில் அதிகரித்து காணப்படலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

எச்.சி.எல். டெக்னாலஜிஸ் காலாண்டு நிகர லாபம் – ரூ. 3,259 கோடி

எச்.சி.எல். டெக்னாலஜிஸ் காலாண்டு நிகர லாபம் – ரூ. 3,259 கோடி 

HCL Technologies reported a net profit of Rs.3,259 Crore – Q2FY22 results

3.40 லட்சம் கோடி ரூபாய் சந்தை மூலதனத்தை கொண்ட எச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவனம் தகவல் தொழில்நுட்ப சேவையை தனது தொழிலாக கொண்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த திரு. சிவ நாடார் அவர்களால், கடந்த 1976ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்நிறுவனம் இன்று பில்லியன் டாலர் வருவாயை கொண்டிருக்கும் இந்தியாவின் முக்கிய நிறுவனங்களுள் ஒன்றாகும்.

2021ம் நிதியாண்டின் முடிவில் நிறுவனத்தின் வருவாய் 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மற்றும் லாபம் மட்டுமே 1.5 பில்லியன் டாலர். சுமார் இரண்டு லட்சம் பணியாளர்களை கொண்டு 50க்கும் மேற்பட்ட நாடுகளில் தனது கிளைகளை பரவியுள்ளது. நிறுவனத்தின் தற்போதைய தலைவராக சிவ நாடார் அவர்களின் புதல்வி திருமதி. ரோஷ்ணி உள்ளார். இவர் ஐ.டி. நிறுவனத்தை(Listed Company) வழிநடத்தும் நாட்டின் முதல் பெண் தலைவராகவும் பார்க்கப்படுகிறார்.

உலகின் மிகவும் சக்தி வாய்ந்த 100 பெண்மணிகளில்(நடப்பு 2021) ரோஷ்ணியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. நிறுவனத்தின் மொத்த வருவாய் பங்களிப்பில் அமெரிக்கா 58 சதவீதமும், ஐரோப்பா 27 சதவீதமும் கொண்டுள்ளது. உள்நாட்டில் ஈட்டப்படும் வருவாய் மூன்று சதவீதம் மட்டுமே.

நிதிச்சேவை, உற்பத்தி, சில்லறை வணிகம், தொலைத்தொடர்பு, ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், வாழ்வியல் மற்றும் ஆரோக்கியம் என பல துறைகளுக்கு தேவையான தகவல் தொழில்நுட்ப சேவையை இந்நிறுவனம் வழங்கி வருகிறது.

நடப்பு நிதியாண்டுக்கான இரண்டாம் காலாண்டு முடிவுகளை(Quarterly results) எச்.சி.எல். நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டது. செப்டம்பர் 2021 காலாண்டு முடிவில் நிறுவனத்தின் வருவாய் 20,655 கோடி ரூபாயாகவும், செலவினம் ரூ.15,633 கோடியாகவும் இருந்துள்ளது. சொல்லப்பட்ட காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.3,259 கோடி.

இயக்க லாப விகிதம்(OPM) சராசரியாக ஒவ்வொரு காலாண்டிலும் 25 சதவீதம் என்ற அளவை பெற்றுள்ளது கவனிக்கத்தக்கது. நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு(Reserves) ரூ.60,133 கோடியாகவும், விற்பனை வளர்ச்சி கடந்த பத்து ஆண்டுகளில் 20 சதவீதமாகவும் உள்ளது. நிறுவனர்களின் பங்களிப்பு 60 சதவீதமாகவும், கடன்-பங்கு விகிதம் 0.10 ஆகவும் இருக்கிறது.

நிறுவனர் சார்பில் பங்கு அடமானம் எதுவும் வைக்கப்படவில்லை. வட்டி பாதுகாப்பு விகிதம் 42 மடங்குகளிலும், பங்கு முதலீட்டின் மீதான வருவாய்(Return on Equity) கடந்த 10 வருடங்களில் 25 சதவீதம் வளர்ந்துள்ளது. 2020ம் ஆண்டின் ஏப்ரல் மாத துவக்கத்தில் பங்கு ஒன்றுக்கு 400 ரூபாய்க்கு கீழ் வர்த்தகமாகி கொண்டிருந்த நிலையில்(உள்ளார்ந்த மதிப்புக்கு கீழ் – Undervalued), தற்போது 1,250 ரூபாய் என்ற விலையில் உள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் – அக்டோபர் – டிசம்பர் 2021

சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் – அக்டோபர் – டிசம்பர் 2021

Small savings scheme interest rate for the Period – October – December 2021

நடப்பு 2021-22ம் நிதியாண்டுக்கான மூன்றாம் காலாண்டின் சிறு சேமிப்புக்கான வட்டி விகிதங்கள் சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. காலாண்டுக்கு ஒரு முறை சிறு சேமிப்புக்கான வட்டி விகிதங்கள் மாற்றத்திற்கு உட்பட்டது. தற்போது அக்டோபர் முதல் டிசம்பர் 2021 வரையிலான காலாண்டுக்கு வட்டி விகிதம் சொல்லப்பட்டுள்ளது.

ஜூலை – செப்டம்பர் 2021 காலாண்டில் சொல்லப்பட்டிருந்த வட்டி விகிதம் இம்முறையும் தொடரும் என நிதி அமைச்சகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள அஞ்சலகங்கள் மற்றும் வங்கிகளில் கிடைக்கப்பெறும் திட்டங்கள், பெரும்பாலும் சிறு சேமிப்பு திட்டத்தின் கீழ் தான் வருகிறது.

ஒரு வருட, இரண்டு வருட மற்றும் மூன்று வருட கால வைப்பு நிதிக்கு(Term Deposit) 5.5 சதவீத வட்டி விகிதம் சொல்லப்பட்டுள்ளது. இதுவே ஐந்து வருட டெபாசிட் திட்டத்திற்கு 6.7 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கான 5 வருட சேமிப்பு திட்டத்திற்கு 7.4 சதவீதமாக உள்ளது.

ஐந்து வருட தொடர் வைப்பு(RD – Recurring Deposit) திட்டத்திற்கான வட்டி விகிதம் 5.80 சதவீதமாகவும், மாத வருவாய் அளிக்கும் 5 வருட சேமிப்பு(Monthly Income Scheme) திட்டத்திற்கு 6.6 சதவீதமாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. வரி சேமிப்பு அளிக்கும் திட்டமான தேசிய சேமிப்பு பத்திர திட்டம் – NSC 6.8 சதவீதம் வட்டியை(5 வருடம்) கொண்டுள்ளது.

small-savings-scheme-interest-rates-oct-2021

பொது வருங்கால வைப்பு நிதிக்கு(Public Provident Fund – PPF) 7.10 சதவீதமும், பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் திட்டத்திற்கு 7.6 சதவீதமும் உள்ளது. இரண்டரை வருடங்களுக்கு முன்பு செல்வமகள் திட்டத்திற்கான வட்டி விகிதம் 8.5 சதவீதமாக இருந்தது கவனிக்கத்தக்கது.

கிசான் விகாஸ் பத்திரத்திற்கு 6.9 சதவீத வட்டி விகிதம் சொல்லப்பட்டுள்ளது. பணவீக்க விகிதம் கட்டுக்குள் இருப்பதை கருத்தில் கொண்டு, சிறு சேமிப்புக்கான வட்டி விகிதம் கடந்த சில வருடங்களாக குறைந்து வருகிறது. எனினும், இவை பெரும்பாலும் பணவீக்க விகிதத்தை தாண்டிய வருவாயை அளிக்க முடிவதில்லை. ஏழை மக்களுக்கான மற்றும் பாதுகாப்பான சேமிப்பாக, சிறு சேமிப்பு திட்டங்கள் உள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

நாட்டின் வங்கி வட்டி விகிதம் 2021 – சிறு பார்வை

நாட்டின் வங்கி வட்டி விகிதம் 2021 – சிறு பார்வை 

India’s Interest Rate 2021 – Little Insights

கடந்த சில நாட்களுக்கு முன்பு, மத்திய ரிசர்வ் வங்கி சார்பில் நடைபெற்ற நிதிக்கொள்கை குழு கூட்டத்தில் வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என சொல்லப்பட்டிருந்தது. தொடர்ச்சியாக எட்டாவது முறையாக ரெப்போ வட்டி விகிதத்தில் 4 சதவீதம் என்ற அளவு மாற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காகவும், கொரோனா பெருந்தொற்றினால் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியை சரி செய்யும் முயற்சியாகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ரெப்போ வட்டி விகிதம்(Repo Rate) என்பது மத்திய ரிசர்வ் வங்கி, நாட்டில் உள்ள வங்கிகளுக்கு கடன் அளிக்கும் போது வசூலிக்கப்படும் வட்டி விகிதமாகும். இதுவே வங்கிகளிடம் இருந்து ரிசர்வ் வங்கி கடன் பெற்றால், அதற்கான வட்டி விகிதம் தான் ரிவர்ஸ் ரெப்போ விகிதம்(Reverse Repo Rate).

வங்கிகளில் கடன் மற்றும் டெபாசிட்டுக்கான அடிப்படை வட்டி விகிதம் 7.30 % முதல் 8.80 % வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு வருடத்திற்கு மேற்பட்ட டெபாசிட்டுக்கான வட்டி விகிதம் 4.90 % – 5.50 % என்ற அளவில் உள்ளது. இருப்பினும் நடைமுறை வட்டி விகிதம் ஒவ்வொரு வங்கிக்கும் மாறுபடும். பணவீக்கம் ஓரளவு கட்டுக்குள் இருப்பதும் வங்கி வட்டி விகிதத்தை குறைத்துள்ளது எனலாம்.

ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு வங்கி வட்டி விகிதங்கள் முக்கியத்துவம் வாய்ந்தது. வங்கி வட்டி விகிதங்கள் குறைவாக இருக்கும் நிலையில், தனிநபர் மற்றும் தொழில் புரியும் நிறுவனம் குறைவான வட்டி விகிதத்தில் தங்களது தேவைகளை நிறைவேற்றி கொள்ளலாம். இதற்கு மாறாக பணவீக்கம் அதிகரிக்கும் போது, அதனை கட்டுப்படுத்த வங்கி வட்டி விகிதங்களும் அதிகரிக்கக்கூடும். இது பொருளாதாரத்திற்கும், பங்குச்சந்தை முதலீட்டிற்கும் சாதகமாக இருக்காது.

பொதுவாக வங்கி வட்டி விகிதங்கள் குறைவாக இருந்து தொழிலுக்கு சாதகமாக அமையும் போது வேலைவாய்ப்புகளும், நாட்டின் பொருளாதாரமும் வேகமெடுக்கும். இது முதலீட்டு சந்தைக்கு நேர்மறையாக அமையும். அதே வேளையில் தங்கம், கடன் பத்திரங்கள், வங்கி டெபாசிட் மற்றும் இதர சேமிப்பு திட்டத்தில் வருவாய் குறைவாக காணப்படும். நடப்பில் காணப்படும் உலக பங்குச்சந்தை ஏற்றத்திற்கு வட்டி விகித குறைவும் ஒரு காரணம்.

பொருளாதார வீழ்ச்சி காலங்களில் பங்குச்சந்தை முதலீடு இறக்கத்தையும், தங்கம் போன்ற முதலீடு ஏற்றத்தையும் பெறும். நடப்பாண்டின் அக்டோபர் – டிசம்பர் காலத்திற்கான சிறு சேமிப்பு திட்டத்தில் வழங்கப்படும் வட்டி விகிதத்திலும் மாற்றம் ஏதுமில்லை. மூத்த குடிமக்களுக்கான ஐந்து வருட டெபாசிட்(Senior Citizen Savings Scheme) திட்டத்தில் 7.4 சதவீதமும், பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் திட்டத்தில் 7.6 சதவீதம் என்ற வட்டி விகிதமும் தொடரும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக குறைந்து வரும் வங்கி வட்டி விகிதம், சேமிப்பை ஏற்படுத்துபவர்களுக்கு சாதகமான நிலையில் இல்லை. பணவீக்கத்தை தாண்டிய வருவாயை பொதுவாக வங்கிகள் அளிப்பதில்லை. தற்போதைய வட்டி விகித குறைவு நிலையில் தங்கம், ரியல் எஸ்டேட், பரஸ்பர நிதிகள், பங்குகள், துணிகர முதலீடு என முதலீட்டாளர்கள் தங்களது தேர்வை மாற்றும் நிலை அதிகரித்துள்ளது. புரிந்து கொள்ள முடியாத முதலீடு மற்றும் மோசடி திட்டங்களில் ஏமாற்றப்படும் நிலையும் தற்போது அதிகரித்து வருவது கவனிக்கத்தக்கது.

வங்கி வட்டி விகிதங்கள் குறைந்து வரும் நிலையில், இதற்கு மாற்றாக பரஸ்பர நிதிகளில் காணப்படும் கடன் பத்திரங்களின் வருவாய் சற்று ஆறுதல் அளிக்கும். வரும் மாதங்களில் பணவீக்கம் அதிகரித்தால் மட்டுமே, அதனை சார்ந்து வட்டி விகிதமும் உயர்த்தப்படும். அதுவரை பங்குச்சந்தை போன்ற முதலீட்டு சந்தைக்கு பணவரவில் தடை ஏதும் இருக்காது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

மீண்டும் பான் – ஆதார் இணைப்புக்கான காலக்கெடு நீட்டிப்பு

மீண்டும் பான் – ஆதார் இணைப்புக்கான காலக்கெடு நீட்டிப்பு 

PAN-Aadhaar linking deadline extended to March 31, 2022

நடப்பில் எந்தவொரு நிதி சார்ந்த தேவைகளுக்கும், அரசின் உதவிகளை பெறுவதற்கும் ஆதார் எண்ணை கொண்டிருப்பது அவசியமாக உள்ளது. ரேசன் கடை முதல் வருமான வரி தாக்கல் செய்வது வரை ஆதார் எண் பதிவு செய்யப்படுகிறது. இவற்றில் நம்மிடம் உள்ள பான்(PAN) எண்ணுடன் ஆதார்(Aadhaar) எண்ணை இணைப்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பான் எண்ணை பெறுவதற்கு வருமான வரி செலுத்துபவர்கள் மட்டும் தான் வைத்திருக்க வேண்டும் என்று நடைமுறையில் இல்லை. வங்கியில் புதிய கணக்கை துவங்குதல், ஒரு பரிவர்த்தனை(Transaction) 50,000 ரூபாய்க்கு மிகும் போது, தொழில் நிறுவனத்தினை பதிவு செய்கையில், சொத்துக்களை வாங்க மற்றும் விற்க, அன்னிய செலாவணி(வெளிநாட்டு வருவாய்) போன்றவற்றுக்கும் பான் எண்ணை கொண்டிருப்பது அவசியமாகிறது.

பான் எண்ணை பெறுவதற்கு எந்த வயது வரம்பும் இல்லை. 5 வயது குழந்தைக்கும் பான் கார்டு எண்ணை பெறலாம். நமக்கான அடையாள சான்றாகவும் சில சமயங்களில் பான் கார்டு எண் பயன்படுகிறது. சில வருடங்களுக்கு முன்பு பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான அறிவிப்பு அரசின் சார்பில் வெளியிடப்பட்டது. வரி ஏய்ப்பை தடுக்கும் ஏற்பாடாகவும் இது பார்க்கப்படுகிறது.

பான் – ஆதார் இணைப்பில் பொது மக்களுக்கு அவ்வப்போது ஏற்படும் சிக்கல்களால் இதற்கான காலக்கெடு ஒவ்வொரு வருடமும் நீட்டிக்கப்பட்டு வருகிறது. பான் மற்றும் ஆதார் எண்களில் உள்ள தரவுகள் சரியாக பொருந்தினால் மட்டுமே அவை இணைக்கப்படுவது சாத்தியமாகிறது. இல்லையெனில், அவை இணைக்கப்படாத நிலையாகவே எடுத்து கொள்ளப்படுகிறது.

பெயரில் உள்ள பிழை, ஆதார் மற்றும் பான் எண்ணை இணைப்பதில் சிரமத்தை ஏற்படுத்துகிறது. பான் எண்ணில் பெயர் பிழைகளை சரி செய்வது அவ்வளவு எளிதாக இல்லை. அவற்றுக்கு சரியான அடையாள ஆவணம் நம்மிடம் இருக்க வேண்டும். எனவே, ஆதார் கார்டில் உள்ள தகவல் சரிசெய்யப்பட வேண்டிய நிலையும் ஏற்படுகிறது.

மத்திய நேரடி வரிகள் வாரியம் சார்பாக சமீபத்தில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில் பான் – ஆதார் எண்ணுக்கான இணைப்பு காலக்கெடு 2022ம் ஆண்டின் மார்ச் 31ம் தேதியாக சொல்லப்பட்டுள்ளது. இதற்கு முன்பு செப்டம்பர்  30, 2021 என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இதன் காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. வருமான வரி தளத்தில் ஏற்பட்டிருக்கும் கோளாறுகளும் இதற்கு காரணமாக அமைந்துள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

Financial Blog in Tamil