Tag Archives: Economic Crisis

ஜெர்மனியின் பொருளாதார மந்தநிலை, உக்ரைன்-ரஷ்யா போர், ஓங்கும் பணவீக்கம் – முதலீட்டாளராக என்ன செய்ய வேண்டும் ?

ஜெர்மனியின் பொருளாதார மந்தநிலை, உக்ரைன்-ரஷ்யா போர், ஓங்கும் பணவீக்கம் – முதலீட்டாளராக என்ன செய்ய வேண்டும் ?

Things to do as an Investor in the Economic or War Crisis 

2020ம் ஆண்டின் கொரோனா பெருந்தொற்று காரணமாக உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக உலக பொருளாதார வீழ்ச்சி, தேவைக்கும்-உற்பத்திக்குமான இடைவெளி அதிகரித்தல், பொருட்கள் மற்றும் சேவையை பெறுவதில் இடையூறு, வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரிப்பு ஆகியவை ஏற்பட்டது. இதன் மூலம் நாம் புதியதொரு இயல்பு வாழ்க்கையை(New Normal) தொடர வேண்டிய மாற்றம் நிகழ்ந்தது.

கடந்த ஓராண்டாக பொருளாதார நிலை ஓரளவு மேம்பட்டு வந்திருந்தாலும், 2020ம் ஆண்டு உலகளவில் வீழ்ந்த உலக பங்குச்சந்தை குறியீடுகள் வேகமாக மீண்டெழுந்தது. வரலாற்றில் மிகவும் குறுகிய காலத்தில் மீட்டெடுக்கப்பட்ட சந்தை காலமாக இவை சொல்லப்படுகிறது. புதிய உச்சத்தை அடைந்த நிலையில், கடந்த சில வாரங்களாக அதிக ஏற்ற-இறக்கத்துடன் பக்கவாட்டில் வர்த்தகமாகும் பங்குச்சந்தை குறியீடுகள் பணவீக்க விகிதம் மற்றும் வங்கி வட்டி விகித மாற்றத்தை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் தற்போது உக்ரைன்-ரஷ்ய போர் நிலையும் தொற்றி கொண்டன. ஒவ்வொரு நாள் வர்த்தகத்தின் ஏற்ற-இறக்கத்திற்கு காரணமாக ஒவ்வொரு தகவலும் சொல்லப்படுவதுண்டு. நடப்பு சந்தை இறக்கத்திற்கு உக்ரைன்-ரஷ்ய போர் மட்டுமே இப்போது காரணமாக அமைந்து விட்டது.

பொதுவாக நாட்டின் பொருளாதாரம் நன்றாக இருப்பதற்கான குறியீடாக அந்நாட்டின் பங்குச்சந்தை, தொழிற்துறை மற்றும் வீட்டுமனை(Realty) வளர்ச்சியை கொண்டிருக்கும். இதுவே பொருளாதார மந்தநிலையில் இருக்கும் போது, மேலே சொல்லப்பட்டவை இறக்கத்திலும், இதற்கு மாறாக தங்கம் மற்றும் கடன் பத்திரங்களின் தேவை அதிகரிக்கும். அதாவது சுருக்கமாக சந்தை வீழும் போது தங்கம் ஏற்றம் பெறுவதும், வங்கி வட்டி விகிதங்கள் குறையும் போது கடன் பத்திரங்களின் தேவை அதிகரிப்பதும் பொருளாதார உலகின் இயல்பு.

எனவே பொருளாதாரத்தில் தேவைக்கும்-இருப்புக்குமான இடைவெளியே பெரும்பாலும் அடுத்த கட்ட நகர்வை தீர்மானிக்கிறது. முதலாம் உலக போருக்கு பின்பு, அடுத்தவொரு நிகழ்வு இது போன்று நடைபெறாது என நினைத்திருந்த நிலையில் இரண்டாம் உலகப்போரை இவ்வுலகம் சந்திக்கும் சூழ்நிலையும் ஏற்பட்டது. ஜெர்மனி மீண்டும் ஒரு பொருளாதார மந்தநிலைக்கு(Recession) செல்ல உள்ளதாக அந்நாட்டின் சமீபத்திய தரவுகள் தெரிவிக்கிறது. உக்ரைன்-ரஷ்ய போர் ஒரு வாரத்தில் முடியுமா, இல்லையெனில் இன்னும் பல காலம் எடுத்து கொள்ளுமா என்பதனை நம்மால் கணிக்க இயலாத ஒன்று.

அதே வேளையில், ஒவ்வொரு நாட்டில் ஏற்பட்டுள்ள கடன் அதிகரிப்பும் அதனை சார்ந்த பணவீக்க விகிதமும் தான் வரக்கூடிய நாட்களில் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும். இவற்றையும் நாம் எதுவும் செய்து விட முடியாது. பணவீக்கத்தை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டிய வேலை மத்திய வங்கிக்கும், அரசுக்கும் தான்.

வரக்கூடிய காலகட்டங்கள் நமக்கு மீண்டும் புதியதொரு இயல்பு நிலையை அறிவுறுத்தலாம். குறுகிய காலத்தில் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவையின் விலை அதிகரிக்கலாம். பணவீக்க விகிதம் அதிகரிக்கும் நிலையில், வங்கிகளின் வட்டி விகிதமும் உயர்த்தப்படலாம். நீண்டகாலத்தில் பொருளாதாரம் ஏற்றமடைய கூடிய வாய்ப்பு தென்பட்டாலும், குறுகிய மற்றும் நடுத்தர காலத்தில் ரிஸ்க் தன்மை அதிகமாக உள்ளது.

இருப்பினும், முதலீட்டாளராக நாம் நம்மால் முடிந்த சில முன்னெடுப்புகளை செய்ய முடியும். 

 • எதிர்வரும் சவால்களை சந்திக்க: உங்களுக்கும், உங்களது குடும்பத்துக்குமான நிதி பாதுகாப்பை(Financial Protection) உறுதி செய்து கொள்ளுங்கள். குடும்பத்தில் வருமானம் ஈட்டக்கூடிய நபரின் பேரில் போதுமான டேர்ம் காப்பீடு தொகை, விபத்து காப்பீடு மற்றும் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் தேவையான மருத்துவ காப்பீட்டை உறுதி செய்துள்ளீர்களா ?
 • வேலையிழப்பு அல்லது தொழிலில் மந்தநிலை ஏற்படக்கூடிய காலத்தை சமாளிக்க குறைந்தது ஆறு மாதம் முதல் இரண்டு வருடத்திற்கு தேவையான அவசர கால நிதியை(உங்களது மாத வருமானத்தின் மடங்குகளில்) தயார் செய்து விட்டீர்களா ?
 • நிதி இலக்குகளுக்கான(Financial Goals) சேமிப்பு மற்றும் முதலீட்டு தொகை தடையேதும் இல்லாமல் செல்கின்றனவா ?
 • பொதுவாக உங்களது நிதி இலக்குகளுக்கு பரஸ்பர நிதி திட்டங்களை(Mutual Funds) பயன்படுத்துங்கள். அடுத்த தலைமுறைக்கு தேவையான செல்வவளத்தை ஏற்படுத்த நேரடி பங்குகளை(Direct Equity) கவனியுங்கள். குறுகிய கால தேவைகளுக்கு பங்குச்சந்தையை பயன்படுத்த வேண்டாம்.
 • பங்குச்சந்தை இறங்கினால் அதனை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி கொள்ளுங்கள். அதே வேளையில் சிறு துளி பெரு வெள்ளம் போல, சிறுக சிறுக முதலீடு செய்து வாருங்கள். ஒரே நாளில் பணக்காரராக வேண்டும் என்று பங்குச்சந்தையில் உங்களது கைவிரல்களை சுட்டு கொள்ள வேண்டாம்.
 •  எதனையும் நாம் நேர்மறையாக அணுக வேண்டுமென்றாலும், பங்குச்சந்தையில் மட்டும் பங்கு நிறுவனங்களை கண்டறியும் போது சற்று கவனமாக இருக்க வேண்டும். பைசாவில் இருந்து பத்து ரூபாய்க்கும், நூறு ரூபாயிலிருந்து ஆயிரம் ரூபாய்க்கும் குறுகிய காலத்தில் ஏற்றமடையும் பங்குகள் அனைத்தும் நல்ல நிறுவன பங்குகள் என்று சொல்லி விட முடியாது.
 • பங்குச்சந்தை வரலாற்றில் ஒரே நாளில் ஏற்பட்ட அதிகபட்ச இறக்கம் கண்டிருக்கும் நாட்களில் பெரும்பாலும் கடந்த இரண்டு வருடங்களில் தான் நடைபெற்றுள்ளது. எனவே நாம் இதனை ஒரு வாய்ப்பாக அமைத்து கொள்ள, நல்ல நிறுவன பங்குகளை அலசி ஆராய்ந்து தயார் நிலையில் இருக்க வேண்டும்.
 • பங்குகளை அவசரமாக வாங்க வேண்டும் என்ற நிலையை எப்போதும் ஏற்படுத்தி கொள்ளாதீர்கள். அதற்கென கிடைக்கும் உள்ளார்ந்த விலையை(Intrinsic or Fair Value) எப்போதும் பரிந்துரையுங்கள். சில நேரங்களில் நல்ல நிறுவன பங்குகள் நாம் நினைக்கக்கூடிய விலையில் கிடைக்கப்பெறாது.
 • இனிவரும் காலங்கள் மிகவும் கவனமாக செயல்பட வேண்டிய காலம் என்பதனை மனதில் நிறுத்தி, அஸெட் அலோகேஷன் முறையை கடைபிடியுங்கள். வருடத்தின் எல்லா நாட்களிலும் பங்குச்சந்தை மட்டுமே ஏற்றம் பெறும், தங்கம் எப்போதும் விலையேறும் என எண்ணி விட வேண்டாம். பல முதலீட்டு சாதனங்களில் பிரித்து முதலீடு செய்வது, நட்டத்தை குறைத்து லாபத்தை அதிகப்படுத்தும்.
 •  சந்தை உச்சத்தில் இருக்கும் போது அனைத்து பங்குகளையும் விற்று விட்டு, இறக்கத்தில் வாங்கி வைக்கிறேன் என உங்களால் எப்போதும் சரியாக கணிக்க இயலாது. அஸெட் அலோகேஷன்(Asset Allocation) செய்வதன் மூலம் மட்டுமே, நீங்கள் பெரும்பாலான வாய்ப்புகளை பயன்படுத்த முடியும்.
 • பங்குச்சந்தை அடுத்த சில வருடங்களுக்கு பெரும் வீழ்ச்சியை கண்டால் உங்களது முதலீட்டு உத்தி என்ன ? (நீண்டகாலத்தில் பொருளாதார வளர்ச்சி நன்றாக இருந்தும்)
 • போன்சி(Ponzi) போன்ற ஏமாற்று வழிகளின் மூலம் நீங்கள் மிக விரைவாக பணம் சேர்த்து விட முடியும் என நம்புகிறீர்களா, மேலும் அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை தவிர்த்து விட முடியமா என்ன  ?
 • இறுதியாக உங்களது உயிலை(Will) தயார் செய்ய மறவாதீர்கள். இதற்கு வயது வரம்பு பெரிதாக இல்லை. 18 வயது நிரம்பியிருந்து சுயநிலையில் உங்களது உயிலை எழுதலாம். உங்களது காலத்திற்கு பின்பு ஏற்படும் நிதிச்சிக்கலை உயில் எழுதுவதன் மூலம் தவிர்க்கலாம். உலக பொருளாதார மந்தநிலையையோ, பணவீக்கத்தையோ நம்மால் கணிக்கவும், கட்டுப்படுத்தவும் முடியாது. ஆனால் நமக்கான பாதுகாப்பையும், நிதி மேம்பாட்டையும் செய்து கொள்ளலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

Advertisement

அன்னிய செலாவணி கையிருப்பில் நான்காவது மிகப்பெரிய நாடு – இந்தியா

அன்னிய செலாவணி கையிருப்பில் நான்காவது மிகப்பெரிய நாடு – இந்தியா 

India’s Foreign Exchange Reserves – Billion Dollar Currency Holding

வளரும் நாடு மற்றும் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் நாடொன்றுக்கு அன்னிய செலாவணி கையிருப்பு என்பது மிகவும் அவசியமான ஒன்று. இதனை அந்த நாட்டின் மத்திய வங்கி கவனித்து கொள்ளும். பொதுவாக அன்னிய செலாவணி கையிருப்பு(Foreign Exchange Reserves) என்பது மற்றொரு நாட்டின் பணத்தை அல்லது பண மதிப்பை வாங்கி கையிருப்பாக வைப்பது. சொல்லப்பட்ட பணம், உலகளாவிய நாணயமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட, ‘அமெரிக்க டாலர்’ தான் தற்போதைய பொது நாணயமாக சொல்லப்பட்டுள்ளது.

அமெரிக்க டாலரை தான் பாரத ரிசர்வ் வங்கி என சொல்லப்படும் மத்திய வங்கி(Reserve Bank of India) தனது கையிருப்பாக வைத்து கொள்ளும். இதற்கான காரணங்கள் பல – ஒரு நாட்டினுடைய ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் காணப்படும் இரு நாடுகளின் வேறுபட்ட பண மதிப்பை கட்டுப்படுத்த, அன்னிய செலாவணி கையிருப்பு உதவும். உதாரணமாக நம் நாட்டிலிருந்து ஒரு பொருள் அல்லது சேவை பிரிட்டனுக்கு அனுப்பி வைக்கப்படுவதாக வைத்து கொள்வோம். இப்போது இந்த இரு நாடுகளிடையே ஏற்பட்ட வர்த்தகம், பொது நாணயமான டாலர் மதிப்பில் தான் நடந்திருக்கும். சில சமயங்களில் அவை யூரோ அல்லது வேறொரு அங்கீகரிக்கப்பட்ட பொது நாணயமாக இருந்திருக்கலாம்.

வர்த்தகத்தை ஏற்றுமதி செய்த நாடு, தனது வருவாயினை டாலர் மதிப்பில் தான் பெறக்கூடும். வர்த்தகத்தை ஏற்படுத்தியவர்(தனிநபர் அல்லது நிறுவனம்) இதற்கான டாலர் வருவாயை அவரது வங்கி கணக்கில் தான் பெறுவார். டாலர் பணத்தை உள்ளூர் ரூபாய் மதிப்பிற்கு மாற்றுவதற்கு வங்கிகள் சில கட்டணங்களை எடுத்து கொள்ளும். அதே வேளையில் டாலர் பணத்தை அந்நாட்டின் மத்திய வங்கியிடம், வங்கிகள் பரிமாற்றம் செய்து கொள்ளும். பொதுவாக வங்கிகள், மத்திய வங்கியிடமிருந்து அரசு கடன் பத்திரங்களை வாங்குவதற்கு இது போன்ற ஏற்றுமதி வர்த்தகத்தின் மூலம் பெறப்பட்ட டாலர் பணத்தை செலவழிக்கும்.

வங்கிகளை பொறுத்தவரை அரசு கடன் பத்திரங்களை வாங்குவதன் மூலம் வட்டி வருவாயை பெறும். ஆனால் மத்திய வங்கி இதனை(டாலர்) அன்னிய செலாவணி கையிருப்பாக கொண்டு, பல பொருளாதார நிகழ்வுகளுக்கு பயன்படுத்தும். டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பை, அதிக ஏற்ற-இறக்கத்திற்கு உட்படாமல் இருக்க ரிசர்வ் வங்கி தனது கையிருப்பை எச்சரிக்கையாக கையாளும். பொருளாதார வீழ்ச்சி, போர் பதற்றம், வெளிநாட்டு கடன், அதிக இறக்குமதியின் மூலம் ஏற்படும் நிதி பற்றாக்குறை போன்ற காலங்களை சமாளிக்க அன்னிய செலாவணி கையிருப்பை அதிகரிப்பது ஒரு நாட்டிற்கு சாதகமான தன்மையாகும்.

அன்னிய செலாவணி கையிருப்பு எனும் போது, ‘டாலர் பண ரொக்கமாக’ மட்டுமே இருந்து விடாது. அவை ரொக்கம், பொருட்கள் மற்றும் சேவையின் மதிப்பு, தங்கம், கடன் பத்திரங்கள், சர்வேதச நாணய நிதியம்(IMF) அனுமதிக்கும் வைப்பு தொகை என பல்வேறு சாதனங்களில் வைக்கப்படும்.

1991ம் ஆண்டு வாக்கில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் போது, நாட்டின் இறக்குமதி அதிக சிக்கலை சந்தித்தது. இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு அடுத்த மூன்று வாரங்களுக்கு தேவையான இறக்குமதி அளவை மட்டுமே பெற்றிருக்கும் என்ற நிலைமைக்கு தள்ளப்பட்டது. உலக தர குறியீட்டு நிறுவனங்கள், நாட்டின் கடன் பத்திரங்களின் தன்மையை குறைந்து மதிப்பிட்டிருந்தன. குறைவான அன்னிய செலாவணி கையிருப்பு காரணமாக, உலக வர்த்தகத்தில் இந்தியா திவால் நிலைக்கு செல்லும் நிலை உருவானது.

அன்றைய தேதியில், வளைகுடா போரும்(Gulf War) சேர்ந்து கொண்டது. வெளிநாடுகளுக்கு செலுத்த வேண்டிய கடனுக்கு போதிய தொகை இல்லாமல், அரசு சார்பில் இருந்த தங்க கையிருப்பு அடகு வைக்கப்பட்டன. பின்னர் நிதி பற்றாக்குறையிலிருந்து மீண்ட நாடு, பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கைக்கு வித்திட அந்த நிகழ்வே காரணமாக அமைந்தது.

இவற்றிலிருந்து நாம் தெரிந்து கொள்ளலாம், அன்னிய செலாவணி கையிருப்பு வளரும் நாடொன்றுக்கு எவ்வளவு முக்கியமென்று. 1991ம் ஆண்டு ஜனவரி மாத முடிவில் நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு சுமார் 1.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இது அதே வருடத்தின் ஜூன் மாத முடிவில் 0.6 பில்லியனுக்கு குறைவாக சென்றது குறிப்பிடத்தக்கது. பொருளாதாரத்தை மீட்க, சர்வேதச நாணய நிதியத்திடம் 67 டன் தங்கத்தை அடமானம் வைத்தது இந்தியா. இதன் வாயிலாக சுமார் 2.2 பில்லியன் அமெரிக்க டாலர்களை அடமான கடனாக பெற்றது இந்தியா. அவை இங்கிலாந்து மற்றும் ஸ்விட்ஸர்லாந்து நாடுகளின் மத்திய வங்கிகள் மூலம் பெறப்பட்டன.

அந்தவொரு நிகழ்வுக்கு பிறகு, தனது அன்னிய செலாவணி கையிருப்பை நமது நாடு கவனமாக கையாண்டு வருகிறது. 2009ம் ஆண்டு வாக்கில் சர்வேதச நாணய நிதியத்திடமிருந்து 200 டன் மதிப்பிலான தங்கத்தை வாங்க பாரத ரிசர்வ் வங்கி முடிவு செய்ததும் அன்னிய செலாவணி கையிருப்பின் ஒரு பகுதியே. இன்று (12, மார்ச் 2021) நம் நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு 580.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள். (1991ம் ஆண்டு ஜனவரி – 1.2 பில்லியன் டாலர்கள் !)   

சில வாரங்களுக்கு முன்பு, ரஷ்யாவை பின்னுக்கு தள்ளி, உலகளவில் அன்னிய செலாவணி கையிருப்பில் நான்காம் இடத்திற்கு நகர்ந்தது இந்தியா. முதலிடத்தில் சீனா(3,336 பில்லியன் டாலர்கள்), இரண்டாம் இடத்தில் ஜப்பான்(1,379 பில்லியன் டாலர்கள்) மற்றும் மூன்றாமிடத்தில் சுவிட்ஸர்லாந்து(1,080 பில்லியன் டாலர்கள்) உள்ளன. உலக அன்னிய செலாவணி கையிருப்பில் அமெரிக்க டாலர், யூரோ, ஜப்பான் யென், பிரிட்டன் பவுண்ட் மற்றும் சீன பண மதிப்புகள் முன்னிலையில் உள்ளன.

கடந்த 30 வருட காலத்தில் இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு 10,000 சதவீதத்திற்கு மேல் ஏற்றம் பெற்றுள்ளது. இது போல நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி – GDP மதிப்பு 266 பில்லியன் டாலர்(1991ம் ஆண்டு) மதிப்பிலிருந்து 3 டிரில்லியன் டாலர்(2019) மதிப்பளவில் வளர்ந்துள்ளது. இது 1100 சதவீத வளர்ச்சியாகும். 

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

பொருளாதார மந்தநிலையை உறுதி செய்யும் ஐந்து காரணிகள்

பொருளாதார மந்தநிலையை உறுதி செய்யும் ஐந்து காரணிகள் 

Five key factors that confirm the Recession – Economic Crisis

யாரை கேட்டாலும், நாட்டின் பொருளாதாரம் சரியாக இல்லையாம். உலக பொருளாதாரம் மோசமாக உள்ளது, வளர்ந்த நாடுகளில் வளர்ச்சி குறைந்து வருகிறதாம் என்ற பேச்சுக்களை நடைமுறையில் கேட்டு வந்திருப்போம்.

அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் பொருளாதாரம் மிக மோசமான நிலைக்கு சென்றுள்ளதாமே ?  இந்தியாவின் 5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடைவதில் தற்போது சிரமம் ஏற்பட்டுள்ளதாம். கடந்த இரண்டு வருடங்களாக நாட்டில் பொருளாதார மந்தநிலை நிலவுகிறதாம்.

ஐக்கிய ராஜ்ஜியம்(United Kingdom) நடப்பாண்டில் ஏப்ரல்-ஜூன் காலாண்டுக்கான பொருளாதாரத்தில் 20 சதவீத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. கடந்த 100 ஆண்டுகளில் காணப்படாத வீழ்ச்சிக்கு சென்று கொண்டிருப்பதாகவும் அந்த நாட்டின் பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். அமெரிக்காவும் இரண்டாம் காலாண்டில் 33 சதவீத பொருளாதார வீழ்ச்சியை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அது என்ன பொருளாதார வீழ்ச்சி அல்லது பொருளாதார மந்தநிலை ?

தொழிற்துறை மற்றும் வர்த்தகத்தில் தற்காலிகமாக வளர்ச்சி குறைவது அல்லது வீழ்ச்சியடைவதை தான் பொருளாதார மந்தநிலை என்கிறோம். பொதுவாக நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP) தொடர்ச்சியான இரண்டு காலாண்டுகளில் எதிர்மறை மதிப்பை(Negative Growth) பெறுவதை தான் பொருளாதார மந்தநிலை சுட்டி காட்டுகிறது. இது போன்ற காலங்களில் தொழில் துறை பெரிய வளர்ச்சியை கொண்டிருக்காது. பெரும்பாலான நிறுவனங்கள் வருவாய் குறைவு மற்றும் நஷ்டத்தை சந்திக்கும் நிலை ஏற்படும்.

இதன் காரணமாக நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் மந்தநிலை ஏற்படுவதுண்டு. அதே வேளையில், பொருளாதார மந்தநிலை அல்லது வீழ்ச்சி என்பதற்கான காலம் சரியாக வரையறுக்கப்படவில்லை. சில மாதங்கள் முதல் பல வருடங்கள் வரை இந்த தன்மை நீடிக்கலாம். எப்போது இந்த நிலை சரியாகும் என நம்மால் அறுதியிட்டு சொல்ல முடியாது. ஆனால் இது நிரந்தரமானதுமல்ல.

பொருளாதார மந்தநிலை பல வடிவங்களை(Recession Types) கொண்டுள்ளது. இதனை பற்றி நாம் ஏற்கனவே மற்றொரு பதிவில் சொல்லியிருந்தோம். வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கும் ஒரு நாடு, பொருளாதார மந்தநிலையை அறவே நீக்கவும் முடியாது. உலக பொருளாதாரத்தில் இதுவும் கடந்த போக கூடிய நிலை தான். இருப்பினும் பொருளாதார மந்தநிலை ஏற்பட போவதை அல்லது ஏற்பட்டுள்ளதை சில காரணிகள் கொண்டு நாம் உறுதி செய்து கொள்ளலாம்.

இதற்கு பெரிய ஆராய்ச்சி எல்லாம் தேவையில்லை. பொருளாதார வல்லுனர்களும், அரசு வெளியிடும் நிதி அறிக்கைகளும்(Economic Numbers) இதற்கான விளக்கத்தை எளிமையாக சொல்லும். அது போன்ற ஐந்து காரணிகளை நாம் இங்கே கொடுத்துள்ளோம்.

 • No Demand or Weak Demand Consumption (பலவீனமான நுகர்வு அல்லது தேவை குறைவு)
 • Negative growth on Industrial Production (தொழிற்துறை உற்பத்தியில் வளர்ச்சி இல்லாமை)
 • Declining Interest Rates & Availing Low rates (குறைவான வட்டி விகிதம்)
 • Negative GDP for two consecutive Quarters (மொத்த உள்நாட்டு உற்பத்தியில் எதிர்மறை)
 • Business Earnings are not good, Rising Unemployment Rate (நிறுவனங்களின் வருவாய் குறைவு, அதிகரிக்கும் வேலைவாய்ப்பின்மை விகிதம்)
 • Stagflation and Slow down period of more than 6 Months (விலைவாசியில் ஆறு மாதங்களுக்கு மேலான தேக்கநிலை)

பொருளாதார மந்தநிலை என்பது நிதி உலகில் ஏற்படும் ஒரு இயல்பான மாற்றமே. இதனை ஒரு சுழற்சி முறை என்றும் சொல்லலாம். தேவைக்கும்-உற்பத்திக்குமான(Demand and Supply) இடைவெளியை போல தான் இதுவும். பொருளாதார வீழ்ச்சியும் சில சமயங்களில் நல்ல விஷயம் தான். இது போன்ற காலங்களில் தொழில் சார்ந்த மதிப்பீடுகள் மறுசீராய்வு செய்யப்படும். புதிய வேலைவாய்ப்புகளும், பொருளாதார கொள்கைகளும் திறம்பட ஏற்படுத்தப்படும்.

மேலே சொன்ன ஐந்து காரணிகளை கொண்டு தற்போதைய நாட்டின் பொருளாதாரம் மற்றும் உலக பொருளாதார வளர்ச்சியை, உங்களது தரவுகளை கொண்டு மதிப்பிட்டு கொள்ளுங்கள்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

பொருளாதார சிக்கலில் இருந்து தப்பிக்க இந்த ஆறு விஷயங்களை கற்று கொள்ளுங்கள்

பொருளாதார சிக்கலில் இருந்து தப்பிக்க இந்த ஆறு விஷயங்களை கற்று கொள்ளுங்கள் 

6 Things to Learn on Personal Finance – Escape from the Economic Crisis

தனிநபர் நிதி சார்ந்த கற்றல் என்பது நம் நாட்டை பொறுத்தவரை தற்போதைய நிலையில் குறைவு தான். அதே வேளையில் சேமிப்பு என்ற ஒற்றை வார்த்தை நமக்கு பல காலமாக நம்முடைய குடும்பத்தில் இருந்துள்ளது. நுகர்வோர் சந்தையில் வெறுமென சம்பாதித்த பணத்தை செலவழிப்பது, எதற்கெடுத்தாலும் கடன் வாங்குவது, தேவையில்லாத பொருட்களை வீட்டில் வாங்கி குவிப்பது, எதிர்காலத்தில் இது தேவைப்படும் என உபயோகமில்லாத விஷயங்களை செய்வது என நாம் பொதுவாக நேரத்தையும், பணத்தையும் விரயமாக்கி வருகிறோம்.

ஒரு மனிதனின் அத்தியாவசிய தேவையென்றால் நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான் – உணவு, உடை மற்றும் உறைவிடம். நவீன யுகத்தில் அடிப்படை கல்வியும், பொருளாதாரம் சார்ந்த சில நிதி பாதுகாப்புகளும் மட்டுமே கூடுதல் தேவையாக இருக்கும். ஆனால் நாம் நிதி பாதுகாப்புகளை செய்வதை விட்டு விட்டு எண்ணிலடங்கா பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்கி குவித்து வருகிறோம். என் தாத்தா-பாட்டி காலத்தில் இருந்த சாமான்கள் இன்றும் என் வீட்டில் ஒரு ஓரத்தில் உள்ளது என சொல்வதை கேட்டிருப்போம்.

நம்மை சுற்றிய பொருட்கள் மற்றும் சேவைகள் ஒன்றும் கண்காட்சி பொருட்கள் அல்ல. அது பெருமையாக பேசக்கூடிய விஷயமும் அல்ல. தனிநபர் ஒருவர் தனக்கு தேவையில்லாத ஒரு பொருள் அல்லது சேவையை வாங்கும் போது , தேவைப்படும் ஒருவருக்கு அது கிடைக்காமல் செய்கிறது அல்லது அதன் விலை அதிகமாக கூடும்.

எனவே தேவையறிந்து, வாங்க கூடிய ஒவ்வொரு விஷயங்களையும் பயன்படுத்தும் நோக்கில் இருக்க வேண்டும். அப்படி சொல்லும் போது, தனிநபர் நிதி விஷயத்தில் ஆறு விஷயங்களை அடிப்படை நிகழ்வாக கற்று கொள்ளலாம்.

 • சேமிப்புக்கும், முதலீட்டிற்கும் இடையேயான புரிதல் 
 • பணவீக்கம்
 • நிதி இலக்குகளை திட்டமிடுதல்
 • காத்திருக்கும் ரகசியம்
 • கூட்டு வட்டியின் மகிமை – பள்ளிக்கால பணக்கார பாடம்
 • எந்தவொரு முதலீட்டையும் தொழில் போல அணுக கற்று கொள்ளுங்கள் 

பொதுவாக நம்மில் பெரும்பாலானோர் சேமிப்புக்கும், முதலீட்டிற்குமான வித்தியாசத்தை புரிந்து கொள்வதில் சிரமப்படுவர். எல்.ஐ.சி. நிறுவனத்தில் காப்பீடு திட்டத்தை வாங்கி கொண்டு நான் சேமிக்கிறேன் அல்லது முதலீடு செய்கிறேன் என நினைத்து கொள்வர். சேமிப்பு என்பது பெரிதாக வளரும் வாய்ப்பு இல்லாதது. அது பணவீக்கத்தை விட குறைவான வட்டி வருவாயை தான் கொண்டிருக்கும். உதாரணமாக, அஞ்சலகம், வங்கி, சீட்டு, தங்கம், ரொக்கம் ஆகியவற்றை சொல்லலாம். அஞ்சலகத்தில் கிடைப்பதை சிறு சேமிப்பு திட்டம் என்று தான் சொல்வர். அதனை முதலீடு என சொல்லப்படவில்லை.

முதலீடு(Investing) என்பது இரண்டு விஷயங்களை நிறைவு செய்பவை. ஒன்று தொடர் வருமானத்தை(Regular income or Cash Flow) ஏற்படுத்துவது, மற்றொன்று நீண்டகாலத்தில் அதனை வைத்து கொண்டு பின்னர் ஒரு நல்ல விலைக்கு விற்பதன் மூலம் லாபம்(Capital Appreciation) ஏற்படுத்துவது. ரியல் எஸ்டேட், பங்குகள், தொழில்கள் ஆகியவை முதலீடு என சொல்லப்படுவதுண்டு. ஏனெனில் அவை இரு வகையான வருமானங்களை தர கூடியவை. வெறுமென வீட்டு மனைகளை மட்டும் விற்காமல், வீட்டு வாடகை, வணிக வளாகங்கள் மூலம் கிடைக்க பெறும் தொடர் வருமானம், பங்குகளில் கிடைக்கும் டிவிடெண்ட் தொகை, தொழில்களில் கிடைக்கக்கூடிய வருமானம் ஆகியவற்றை சொல்லலாம். எதிர்காலத்தில் இந்த மூன்றையும் விற்றால் அதற்கும் லாபம் கிடைக்கும். எனவே சேமிப்பும், முதலீடும் ஒன்று அல்ல.

நினைவில் கொள்ளுங்கள், தங்கம் என்பது பணவீக்கத்தை ஒட்டியும், எதிர்பாராத பொருளாதார வீழ்ச்சி காலங்களில் மட்டுமே அதன் செயல்பாடுகள். அது ஒரு பெரிய முதலீட்டு வாய்ப்பு என சொல்லமுடியாது. நீங்கள் வாங்கக்கூடிய தங்கம் உங்கள் வாழ்நாளில் ஓரிரு நாட்களுக்கு மட்டுமே பயன்படும். அதுவும் தவிர்க்க முடியாத சூழ்நிலையில். உங்களுக்கு அது அடிக்கடி பயன்படக்கூடியது என நீங்கள் நினைத்தால், உண்மையில் உங்கள் நிதி நலனில் சில பிரச்சனைகள் உள்ளது என அர்த்தம்.

தங்கத்தின் மூலம் தொடர் வருமானத்தை ஏற்படுத்த முடியாது என்பதனால் தான் அது சேமிப்பு பிரிவில் உள்ளது. தங்கம் கடந்த 20 வருடங்களில் வங்கி டெபாசிட்டுக்கான வட்டி வருவாயை ஒட்டி தான் உள்ளது. டாலர் மதிப்பில் அது வர்த்தகமாவதன் காரணமாகவே தங்கத்தின் விலை அதிகரிப்பது போல தோன்றுகிறது. நாணயம் என்ற தொட்டுணரக்கூடிய விஷயம் இல்லையென்றால், தங்கத்திற்கும் மதிப்பு கிடையாது. இது தான் கடந்த வரலாற்றில் அலுமினியத்தில் நடந்தது.

மாத முதலீட்டிற்கும், மாத தவணைக்கும்(SIP vs EMI) உள்ள வேறுபாட்டை புரிந்து கொள்ளுங்கள். மாதாமாதம் சேமித்து அல்லது முதலீடு செய்து, முதிர்வில் ஒரு பொருளை வாங்க வேண்டுமா அல்லது இ.எம்.ஐ.(EMI) என கடன் வாங்கி ஒரு பொருளை வாங்க வேண்டுமா ? நீங்கள் கடன் மூலம் ஒரு பொருளை உடனே வாங்கி விட்டாலும், அந்த கடனை அடைக்கும் வரை அதற்கு நீங்கள் உரிமையாளர் கிடையாது. இது கடன் மூலம் பெற்ற வீடு, வாகனம், கைபேசி, குளிர்சாதனம் என அனைத்துக்கும் பொருந்தும். சேமித்த பணத்தை கொண்டு ஒரு பொருளை வாங்கினாலும் அதற்கு முழு உரிமையாளர் நீங்களே.

கிரெடிட் கார்டுகளில் கவனம் தேவை. உண்மையில் தொழில் செய்பவர்களுக்காக  அறிமுகப்படுத்தபட்ட கடன் அட்டைகள் தான் அவை. ஆனால் இன்று தொழில் புரிபவர்கள் அதனை தவிர்த்து மாத சம்பளக்காரர்கள் கடன் அட்டையை அதிகமாக பயன்படுத்துவது ஆரோக்கியமானதல்ல. தேவையில்லாமல் கடன் வாங்க கூடாது, கடனில்லா வாழ்வும் ஒரு சுகமே. வல்லரசான அமெரிக்காவில் தங்கள் வாழ்நாள் முழுவதும் கடன் அட்டையிலும், கடனிலும் தத்தளிப்பவர்களின் எண்ணிக்கை மட்டுமே 80 சதவீதத்திற்கு மேல். அமெரிக்காவில் தனிநபர் ஒருவரின் கடன் மட்டும் சராசரியாக 90,500 டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 68 லட்சம் ரூபாய்) !

பணவீக்கத்தை பற்றிய புரிதல் ஒவ்வொருவருக்கும் தேவை. தேவையில்லாத பதுக்கல், எதிர்பாராத கூடுதல் தேவைகள் தான் ஒரு பொருள் அல்லது சேவையின் விலையை நிர்ணயிக்கின்றன. அதிகமான உற்பத்தி இருக்கும் நிலையில், தேவை குறைவாக இருப்பின் அதன் விலை அதிகமாக இருக்காது. நீண்டகாலத்தில் பணவீக்கம் மோசமான விளைவை ஏற்படுத்த கூடிய ஒன்று.

நிதி இலக்குகளை திட்டமிடுதலின்(Financial Goals) அவசியம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தேவை. அவை குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால இலக்குகளாக இருக்கலாம். குடும்பத்திற்கான தேவையான அளவு காப்பீடு, மருத்துவம் சார்ந்த பாதுகாப்பு, அவசரகால நிதி போன்றவற்றை ஏற்படுத்தி விட்டு தான் நிதி இலக்குகளை திட்டமிட வேண்டும்.

பணத்தின் மூலம் பணம் பண்ணும் கலை காத்திருத்தல்(Delayed Gratification) மூலமே கிடைக்கும். உலகின் பெரும்பாலான பணக்காரர்கள் எளிமையான வாழ்க்கையை கொண்டிருப்பவர்கள் தான். தேவையில்லாத செலவுகளை தவிர்த்து, நீண்டகாலத்தில் முதலீடு செய்து அதனை அறுவடை செய்வது தான் அவர்களின் வேலை. நீண்டகால முதலீட்டிற்கு மட்டுமே அரசு சார்பில் வரி சலுகையும் கிடைக்கப்பெறுகிறது, குறுகிய கால லாபத்திற்கு அல்ல.

கூட்டு வட்டியின் மகிமை நமது பள்ளிக்கால பாடத்தில் இருந்த ஒரு பக்கம் தான். ஆனால், உண்மையில் நாம் கல்வியை முடித்து விட்டு வேலைக்கு சென்றவுடன் அதனை மறந்து விட்டோம். அதிகமாக சம்பாதிப்பது ஒன்றும் ஒருவரை உயர்த்தி விடாது. கடனில்லாமல், அளவாக சம்பாதித்தாலும் நல்ல ஒழுக்கத்தை ஏற்படுத்தி கொண்டு எளிமையாக வாழ பழகினால் அதுவே உயர்வாகும். இதனை தான் பெரும் பணக்காரர்கள் செய்து கொண்டிருக்கின்றனர். இளமை காலம் முதல் செய்யப்படும் தொடர் முதலீடு தான் ஒருவரின் செல்வத்தை உயர்த்துகிறது.

நீங்கள் ஹீரோவா, ஜீரோவா ? EMI VS SIP

முதலீட்டை மேற்கொள்ளும் முன்னர், ஒவ்வொரு விஷயத்தையும் ஆராய்ந்த பின்னர் தான் அதற்கான முதலீட்டு முடிவை எடுக்க வேண்டும். வெறுமென போன்சி  (மோசடி திட்டம் – வட்டிக்கு பெரும் வட்டி) பேர்வழிகளிடம் மாட்டிக்கொண்டு எனக்கு மாதாமாதம் பணம் வருகிறது என சொல்லிக்கொண்டு ஏமாற வேண்டாம். உண்மையில் நம் முதலீட்டை கொண்டு ஒருவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதனை அறிவது அவசியமாகும். உங்கள் பணத்தை கொண்டு ஒருவர் நேர்மையாக தொழில் செய்தால் மட்டும் தான், உங்களுக்கான வருவாய் நிச்சயம். இல்லையென்றால், அது திவால் தான்.

சொல்லப்பட்ட கற்றலின் மூலம் நமது நிதி சிந்தனை மேம்படும். அளவான வாழ்க்கையை வாழ இயலும், அளவில்லா மகிழ்ச்சியை பெற முடியும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை

www.varthagamadurai.com