Tag Archives: quarterly results

தணிக்கை செய்யப்பட்ட மற்றும் தணிக்கை செய்யப்படாத நிதி அறிக்கைகளுக்கு இடையிலான வேறுபாடு

தணிக்கை செய்யப்பட்ட மற்றும் தணிக்கை செய்யப்படாத நிதி அறிக்கைகளுக்கு இடையிலான வேறுபாடு 

 

Difference between Audited and Unaudited Company Financial Reports – Fundamental Analysis

பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட ஒரு நிறுவனத்தின் தொழில் வளர்ச்சி மற்றும் நிர்வாகத்திறன் ஆகிய செயல்பாடுகளை அறிய அந்நிறுவனத்தின் மூன்று முக்கியமான நிதி அறிக்கைகளை அலச வேண்டும். இந்த மூன்று அறிக்கைகளும் ஒரு முதலீட்டாளர் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியமான அடிப்படை அறிக்கைகளாகும்.

 

  • லாப-நட்ட அறிக்கை (Profit & Loss Statement or Net Income Statement)

  • இருப்புநிலை அறிக்கை (Balance Sheet)

  • பணப்பாய்வு அறிக்கை (Cash Flow Statement)

 

இந்த அறிக்கைகளின் மூலம் ஒரு நிறுவனத்தின் விற்பனை வருவாய், செலவுகள், கடன் தன்மை, லாபம் மற்றும் லாப வளர்ச்சி, வருமான வரி, ரொக்க கையிருப்பு, அசையும் மற்றும் அசையா சொத்துக்கள், குறுகிய மற்றும் நீண்ட கால கடன், தொழிலுக்கான மூலதனம் மற்றும் பங்குதாரர்கள் பங்களிப்பு என பல்வேறு தகவல்களை பெறலாம்.

 

ஒரு நிறுவனம் உண்மையில் வளர்ச்சியை நோக்கி தான் செல்கிறதா, நிறுவனம் சார்பாக ஏற்கனவே சொல்லப்பட்ட இலக்கு சரியானதா, சந்தையில் நிறுவனத்தின் நிதித்திறன் அதன் பங்கு விலையில் தெரிகிறதா, நிறுவனம் திவால் நிலைக்கு செல்லுமா, தொழிலுக்கான எதிர்கால வாய்ப்பு என ஆராய்வதற்கு இந்த அறிக்கைகள் உதவும்.  

 

உண்மையில் ஒரு நிறுவனம் நாளை திவால் நிலைக்கு செல்லும் என அந்நிறுவனத்தின் குடும்பத்தினருக்கு கூட தெரியுமா என நாம் யூகித்தும் பார்க்க முடியாது. ஆனால் இந்த மூன்று முக்கிய அறிக்கைகளை கொண்டு ஒரு நிறுவனம் தொழிலில் சிறந்து விளங்குமா, எதிர்காலத்தில் தாக்குப்பிடிக்குமா, நிறுவனமே கைமாறினாலும் தொழில் தொடர்ந்து நடப்பதற்கு வாய்ப்புள்ளதா என்பதனை முதலீட்டாளரான நாம் அறியலாம். இதற்கு உதாரணமாக சத்யம் கம்ப்யூட்டர், யெஸ் வங்கி, ஜெய்ப்ரகாஷ் அசோஸியேட்ஸ் ஆகிய நிறுவனங்களின் நிகழ்வுகளை சொல்லலாம்.

 

மேற்சொன்ன நிதி அறிக்கைகளை ஒரு நிறுவனம் காலாண்டுக்கு ஒரு முறையோ, அரையாண்டுக்கு ஒரு முறையோ அல்லது ஆண்டுக்கு ஒரு முறையோ பொதுவெளியில் முதலீட்டாளர்கள் அணுகும் படி வெளியிடுவது சட்டமாகும். தொழில்நுட்பம் வளராத காலகட்டத்திலும், இன்றும் பங்குச்சந்தை முதலீட்டாளர்களால் நிறுவனம் சார்ந்த தகவல்களை அறிந்து கொள்ள இந்த நிதி அறிக்கைகள் மட்டுமே எளிதாக கிடைக்கப்பெறுகிறது. 

 

பொதுவெளியில், நமக்கு கிடைத்த தகவல்களை கொண்டே நாம் ஆராய முடியும். பங்குச்சந்தையில் மற்றவையெல்லாம் வெறும் யூகமே !  

 

நிறுவனம் பொதுவெளியில் வெளியிடும் இந்த நிதி அறிக்கைகள் பெரும்பாலும் தணிக்கை செய்யப்பட்ட(Audited Financial Statements) அல்லது தணிக்கை செய்யப்படாத(Unaudited Financial Statements) அறிக்கைகளாக இருக்கும். பொதுவாக தணிக்கை அல்லது தணிக்கை செய்யப்படாத அறிக்கைகள் வணிகப்பயன்பாட்டில் பயன்படுத்தப்படும் கணக்கியல் செயல்முறையாகும்.

 

ஒரு தொழில் அல்லது வணிகத்தின் நிதி பரிவர்த்தனைகளை சரியாக ஒழுங்குபடுத்தி, குறிப்பிட்ட கால இடைவெளியில், அதனை ஒரு அறிக்கையாக நிறுவனம் தயார் செய்யும். அந்த அறிக்கையின் துல்லியத்தன்மை (உண்மைத்தன்மை) எந்தளவில் உள்ளது என்பதனை நாம் மேற்சொன்ன கணக்கியல் பயன்பாடு மூலம் அறியலாம்.

 

தணிக்கை செய்யப்படாத(unaudited) அறிக்கைகள் என்பது ஒரு நிறுவனத்தால் நிதி அறிக்கையாக தயார் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இதுவே தணிக்கை செய்யப்பட்ட(Audited) அறிக்கைகள் என்பது ஒரு நிறுவனத்தால் நிதி அறிக்கை தயார் செய்யப்பட்டிருக்கும். ஆனால் அதன் உண்மைத்தன்மையை அறிய, அந்நிறுவனம் சாராத வேறொருவர் ஆராய்ந்து மதிப்பிடுவதுண்டு. இந்த மதிப்பீட்டிற்கு பின்பு வெளியிடப்படும் அறிக்கை தான் பொதுவெளியில் வரும். இதனை தான் நாம் தணிக்கை செய்யப்பட்ட அறிக்கையாக காண்கிறோம்.

 

இந்த இரு அறிக்கைகளிலும் கிடைக்கப்பெறும் தகவல்கள் பெரும்பாலும் தொடர்புடையதாக மற்றும் சரியாக இருந்தாலும், தணிக்கை செய்யப்படாத அறிக்கையை காட்டிலும் தணிக்கை செய்யப்பட்ட அறிக்கையின் மூலம் ஒரு நிறுவனத்தின் முதலீட்டாளர்களுக்கும், அதன் பங்குதாரர்களுக்கும்  நம்பிக்கையை ஏற்படுத்தலாம். 

 

பொதுவாக பட்டியிலப்பட்ட ஒரு நிறுவனத்தின் வருடாந்திர நிதி அறிக்கைகள் மட்டுமே தணிக்கை(Audited) செய்யப்படுகின்றன. மற்ற கால நிதி அறிக்கைகள் பெரும்பாலும் தணிக்கை செய்யப்படுவதில்லை. பெரும்பாலான நிறுவனங்கள் தணிக்கை செய்யப்பட்ட அறிக்கைகளை அதன் ஆண்டு அறிக்கையில்(Annual Report) மட்டுமே உள்ளடக்கியுள்ளது. எனவே முழு ஆண்டு நிதி அறிக்கைகள் ஒரு முதலீட்டாளருக்கு பெரிதும் உதவும்.

 

தணிக்கை செய்யப்படாத(unaudited) அறிக்கைகள் காலாண்டு மற்றும் அரையாண்டுக்கு ஒரு முறை பொதுவெளியில் நிறுவனத்தால் வெளியிடப்படுகிறது. ஒரு முதலீட்டாளருக்கு நம்பிக்கையை ஏற்படுத்தவும், ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிக்காகவும்(Regulations) இது போன்ற கால அறிக்கைகள் வெளியிடப்படுகிறது. சுருக்கமாக நிறுவனம் நடப்பில் செயல்பட்டு கொண்டிருக்கிறது என்பதனை தணிக்கை செய்யப்படாத அறிக்கையின் மூலம் நிறுவனம் நமக்கு சொல்கிறது.

 

தணிக்கை செய்யப்பட்ட அறிக்கைகளை காட்டிலும், தணிக்கை செய்யப்படாத அறிக்கைகளை(unaudited) தயார் செய்வதற்கு நிறுவனத்திற்கு பெரிதாக செலவினம் இல்லை. நிறுவனத்தின் நிரந்தர ஊழியர்களை கொண்டு, அதன் விருப்பத்தின் பெயரில் இதனை தயார் செய்து கொள்ளலாம். அதே வேளையில் தணிக்கை எனும் போது நிறுவனத்தின் அனைத்து பரிவர்த்தனைகளும் கணக்கில் வர வேண்டும், அதற்கான ஆதாரமும் இருக்க வேண்டும் மற்றும் தணிக்கையாளருக்கான கட்டணம் சற்று அதிகமே !

 

ஒரு நிறுவனத்திற்கு தணிக்கை செய்யப்பட்ட அறிக்கைகளை தயார் செய்ய மற்றும் வெளியிட அதிகக் கட்டணம் மற்றும் நேரம் அதிகம் எடுத்து கொண்டாலும், நிறுவனம் சாராத வேறொருவர் மூலம் மதிப்பிடப்படும் போது நீண்டகால முதலீட்டாளர்களுக்கு, நிறுவனத்தின் மீது உண்மைத்தன்மையையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தும்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com

 

இன்போசிஸ் நிறுவனத்தின் முதலாம் காலாண்டு நிகர லாபம் – ரூ. 5,945 கோடி

இன்போசிஸ் நிறுவனத்தின் முதலாம் காலாண்டு நிகர லாபம் – ரூ. 5,945 கோடி 

Infosys reported a net profit of Rs.5,945 Crore in Q1FY24

நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் லிமிடெட் தனது 2023-24ம் நிதியாண்டின் முதலாம் காலாண்டு முடிவுகளை இன்று வெளியிட்டிருந்தது. சொல்லப்பட்ட ஏப்ரல்-ஜூன்  காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் 37,933 கோடி ரூபாயாகவும், செலவினம் ரூ. 28,869 கோடியாகவும் இருந்துள்ளது.

நிறுவனத்தின் இயக்க லாபம் 9,064 கோடி ரூபாய் மற்றும் இயக்க லாப விகிதம்(OPM) 24 சதவீதமாக உள்ளது. இதர வருமானமாக ஜூன் காலாண்டில் 561 கோடி ரூபாயை நிறுவனம் ஈட்டியுள்ளது. வரிக்கு முந்தைய லாபம் ரூ.8,362 கோடியாகவும், நிகர லாபம் ரூ.5,945 கோடியாகவும் சொல்லப்பட்டுள்ளது.

கடந்த 2022-23ம் நிதியாண்டின் முதலாம் காலாண்டுடன் ஒப்பிடுகையில், தற்போது சொல்லப்பட்ட வருவாய் 10 சதவீதமும், நிகர லாபம் 11 சதவீதமுமாக வளர்ச்சியடைந்துள்ளது. ஜூன் 2022ல் ஒரு பங்கு மீதான வருவாய்(EPS) ரூ. 12.74 ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.14.32 ஆக உள்ளது.

இன்போசிஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.6.01 லட்சம் கோடி. நிறுவனத்திற்கு கடன் பெரிதாக எதுவுமில்லை. மார்ச் 2023ம் நிதியாண்டின் முடிவில் நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு(Reserves) 73,338 கோடி ரூபாய். இன்போசிஸ் நிறுவனத்தின் வருவாய் பெரும்பாலும் நிதித்துறை சார்ந்த சேவைகளிலிருந்து பெறப்படுகிறது. 

இன்போசிஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு ஜூன் காலாண்டின் படி 1,883 வாடிக்கையாளர்கள்(நிறுவனங்கள்) உள்ளனர். நூறு மில்லியன் டாலர்களுக்கு மேலாக வருவாய் அளிக்கும் வாடிக்கையாளர்கள் மட்டும் 38 பேர். 940 நிறுவன வாடிக்கையாளர்கள் சுமார் ஒரு மில்லியன் டாலர்களுக்கு மேலான வருவாயை இன்போசிஸ் நிறுவனத்திற்கு அளிக்கின்றனர்.

முதல் 25 நிறுவன வாடிக்கையாளர்கள்(Top 25 Clients) மட்டும், நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாயில் 35 சதவீத பங்களிப்பை வழங்கியுள்ளனர். ஜூன் காலாண்டு முடிவில் நிறுவனத்தின் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 3.36 லட்சம். இவற்றில் 3.17 லட்சம் ஊழியர்கள் தகவல் தொழில்நுட்ப வல்லுனர்களாகவும், மற்றவர்கள் விற்பனை மற்றும் அதற்கு பிறகான சேவையை வழங்குவதிலும் உள்ளனர். 

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

கேஸ்ட்ரால் இந்தியாவின் மார்ச் காலாண்டு நிகர லாபம் – ரூ. 228 கோடி

கேஸ்ட்ரால் இந்தியாவின் மார்ச் காலாண்டு நிகர லாபம் – ரூ. 228 கோடி 

Castrol India reported a Net profit of Rs.228 Crore – Q1CY22 Quarterly results

லண்டனை தலைமையிடமாக கொண்ட பிரிட்டிஷ் பெட்ரோலிய(BP) நிறுவனத்தின் துணை நிறுவனமான கேஸ்ட்ரால் இந்தியா, கடந்த 1910ம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்தியாவின் வாகன மற்றும் தொழிற்துறைக்கு தேவையான  மசகு எண்ணெய்(Lubricant) உற்பத்தியில், நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நிறுவனமாக கேஸ்ட்ரால் இந்தியா உள்ளது.

ஐந்து உற்பத்தி ஆலைகள், 270 விநியோகதாரர்கள் மற்றும் 70,000 க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை நிலையங்களுடன் தனது சேவையை விரிவடைய செய்துள்ளது இந்நிறுவனம். 1982ம் ஆண்டு மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட கேஸ்ட்ரால் இந்தியாவின் இன்றைய சந்தை மூலதன மதிப்பு ரூ.10,750 கோடி.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் பிரிட்டிஷ் பெட்ரோலியம் கூட்டு ஒப்பந்தத்தின் படி, நாட்டில் புதிய எரிபொருள் விற்பனை நிலையங்களை அமைத்து கேஸ்ட்ரால் இந்தியா நிறுவனத்தின் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்வதற்கான பேச்சுவார்த்தையும் கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்றது. இதன் மூலம் பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனம், ரிலையன்ஸ் நிறுவனத்திடமிருந்து சுமார் 1 பில்லியன் டாலர் மதிப்பிலான 49 சதவீத பங்குகளை வாங்கியிருந்தது. 

இவற்றில் 1,400 பெட்ரோல் பம்புகளையும், விமான போக்குவரத்துக்கு தேவையான 31 எரிபொருள் நிலையங்களையும் பிரிட்டிஷ் பெட்ரோலியம் கூட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் கையகப்படுத்தியுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு, ரிலையன்ஸ்-பிரிட்டிஷ் பெட்ரோலியம்(Jio-Bp) மற்றும் டி.வி.எஸ். மோட்டார் ஆகிய நிறுவனங்கள் கூட்டு சேர்ந்து இரு சக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கான மின்னணு சார்ஜிங் உட்கட்டமைப்பை(EV Charging Infrastructure) ஏற்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

மார்ச் 2022 காலாண்டில் கேஸ்ட்ரால் இந்தியா நிறுவனத்தின் வருவாய் ரூ.1,236 கோடியாகவும், செலவினம் 918 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. சொல்லப்பட்ட காலாண்டில் இயக்க லாபம்(Operating profit) 317 கோடி ரூபாயாகவும், இயக்க லாப விகிதம் 26 சதவீதமாகவும் உள்ளது. மார்ச் காலாண்டின் முடிவில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.228 கோடி.

2021ம் ஆண்டின்(Calendar Year) முடிவில் நிறுவனத்தின் வருவாய் ரூ.4,192 கோடியாகவும், நிகர லாபம் 758 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. சொல்லப்பட்ட ஆண்டின் வருவாய், கடந்த பத்து வருடங்களில் இல்லாத வளர்ச்சி அளவாகும். 

கடனில்லா நிறுவனமாக வலம் வரும் கேஸ்ட்ரால் இந்தியா நிறுவனத்தின் நிறுவனர்கள் பங்களிப்பு 51 சதவீதமாக உள்ளது. அன்னிய முதலீட்டாளர்களிடம் 11 சதவீத பங்குகளும், உள்ளூர் நிறுவனங்களிடம் 16 சதவீத பங்குகளும் உள்ளது. இவற்றில் எல்.ஐ.சி.(LIC India) நிறுவனம் 11 சதவீத பங்குகளை வைத்திருப்பது கவனிக்கத்தக்கது. 

கேஸ்ட்ரால்(Castrol Ltd UK) நிறுவனத்தின் உற்பத்தி பொருட்கள் 150 நாடுகளுக்கும் மேலாக விற்பனையில் உள்ளது. போக்ஸ்வேகன், ஆடி(Audi), பி.எம்.டபுள்யூ(BMW) ஆகியவை இதன் முக்கிய வாடிக்கையாளர்கள். இந்திய பங்குச்சந்தையில் வர்த்தகமாகும் கேஸ்ட்ரால் இந்தியா நிறுவனத்தின் விலை, பங்கு ஒன்றுக்கு 108 ரூபாயாக உள்ளது. இதன் உள்ளார்ந்த மதிப்பு(Intrinsic value with MoS) பங்கு ஒன்றுக்கு ரூ.140 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.      

கவனிக்க: முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கும் முன் தகுந்த நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் முன்னிலையில் தங்களது முதலீட்டு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலே சொன்ன தகவல்கள் பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வுக்கான கற்றல்(Fundamental Analysis) மட்டுமே. 

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

ஐ.டி.சி. காலாண்டு முடிவுகள் – நிகர லாபம் –  ரூ.4,156 கோடி

ஐ.டி.சி. காலாண்டு முடிவுகள் – நிகர லாபம் –  ரூ.4,156 கோடி 

ITC reported a Net Profit of Rs.4,156 Crore – Q3FY22 Results

2.89 லட்சம் கோடி ரூபாய் சந்தை மூலதன மதிப்பை கொண்டிருக்கும் ஐ.டி.சி. நிறுவனம் தனது 2021-22ம் நிதியாண்டுக்கான மூன்றாம் காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது. மூன்றாம் காலாண்டின் முடிவில் நிறுவனத்தின் வருவாய் 16,634 கோடி ரூபாயாகவும், வரிக்கு முந்தைய லாபம் ரூ.5,492 கோடியாகவும் இருந்துள்ளது.

சொல்லப்பட்ட காலாண்டில் நிறுவனம் நிகர லாபமாக ரூ.4,156 கோடியை ஈட்டியுள்ளது. 2020-21ம் நிதியாண்டின் மூன்றாம் காலாண்டுடன் ஒப்பிடுகையில் தற்போதைய வருவாய் 31 சதவீதமும், நிகர லாபம் 12.7 சதவீதமுமாக வளர்ந்துள்ளது. சிகரெட்டு, நுகர்வோர் உணவு பொருட்கள், விவசாயம் சார்ந்த தொழில், பேப்பர் பொருட்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் காணப்பட்ட வருவாய் வளர்ச்சி இதன் ஒட்டுமொத்த வருவாயை அதிகரித்துள்ளது.

எப்.எம்.சி.ஜி.(FMCG) துறையின் கீழ் சுமார் 45 பிரிவுகளில் 700க்கும் மேற்பட்ட பொருட்களை உற்பத்தி செய்து விற்பனையில் ஈடுபட்டு வருகிறது ஐ.டி.சி. நிறுவனம். உணவுப்பொருட்களில் ஆசிர்வாத் கோதுமை, ITC Master Chef, Sunfeast, Bingo, Yippee, Fabelle, Candyman, சன்ரைஸ் மசாலா, டார்க் பேண்டஸி ஆகியவை இந்நிறுவனத்தின் பிரபல பிராண்டுகள்.

Classmate Notebooks, Mangaldeep, Fiama, Vivel, B Natural, Nimyle, Engage, Shower to Shower, Mom;s Magic, Paperkraft, AIM தீப்பெட்டிகள், Charmis, Dermafique, Savlon ஆகியவை நிறுவனத்தின் மற்ற துறை சார்ந்த பிராண்டுகள். ஐ.டி.சி. நிறுவனத்தின் ஹோட்டல் பிரிவில் கிராண்ட் சோழா, விண்ட்சார், கார்டெனியா மிகவும் பிரபலமானவை.

நீர் மேலாண்மை, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பிளாஸ்டிக் மறுசுழற்சி ஆகியவற்றில் நிறுவனம் திறம்பட நிர்வகித்து வருவதாக தெரிவித்துள்ளது. கார்பன் இல்லாத சுற்றுச்சூழலை ஏற்படுத்தும் நோக்கில் நிறுவனத்தின் தொழில் மேம்பட்டு வருகிறது.

நிறுவனத்திற்கு கடன் எதுவும்(Debt to Equity) பெரிதாக இல்லை. செப்டம்பர் 2021 காலாண்டு முடிவின் படி நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு ரூ.57,955 கோடி. நிறுவனர்கள்(Promoter Holding) சார்பாக பங்குகள் எதுவும் நேரடியாக இல்லை. இருப்பினும் பொதுவெளியில் அவர்களிடம் குறிப்பிடத்தக்க பங்குகள் இருப்பது கவனிக்கத்தக்கது. அந்நிய முதலீட்டாளர்கள் சார்பில் சுமார் 44 சதவீத பங்குகள் உள்ளது. எல்.ஐ.சி. காப்பீட்டு(LIC India) நிறுவனத்திடம் சுமார் 16 சதவீத பங்குகளும் உள்ளன.

நூறு வருடத்திற்கு மேலான தொழில் அனுபவம் கொண்டிருக்கும் இந்நிறுவனத்தின் தற்போதைய தலைவராக திரு. சஞ்சீவ் பூரி உள்ளார். 1910ம் ஆண்டு W.D & H.O. Wills நிறுவனத்தால் துவங்கப்பட்ட இம்பீரியல் டொபாகோ கம்பெனி(Imperial Tobacco Company of India) தான் பின்னொரு காலத்தில் ஐ.டி.சி. லிமிடெட் என மாற்றம் பெற்றுள்ளது. புகையிலை தொழிலை ஆரம்ப நிலையாக கொண்டிருந்தாலும், தற்போது நுகர்வோர் உணவுப்பொருட்கள் துறையில் நாட்டின் தவிர்க்க முடியாத நிறுவனமாக ஐ.டி.சி. உருவாகியுள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

எச்.சி.எல். டெக்னாலஜிஸ் காலாண்டு நிகர லாபம் – ரூ. 3,259 கோடி

எச்.சி.எல். டெக்னாலஜிஸ் காலாண்டு நிகர லாபம் – ரூ. 3,259 கோடி 

HCL Technologies reported a net profit of Rs.3,259 Crore – Q2FY22 results

3.40 லட்சம் கோடி ரூபாய் சந்தை மூலதனத்தை கொண்ட எச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவனம் தகவல் தொழில்நுட்ப சேவையை தனது தொழிலாக கொண்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த திரு. சிவ நாடார் அவர்களால், கடந்த 1976ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்நிறுவனம் இன்று பில்லியன் டாலர் வருவாயை கொண்டிருக்கும் இந்தியாவின் முக்கிய நிறுவனங்களுள் ஒன்றாகும்.

2021ம் நிதியாண்டின் முடிவில் நிறுவனத்தின் வருவாய் 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மற்றும் லாபம் மட்டுமே 1.5 பில்லியன் டாலர். சுமார் இரண்டு லட்சம் பணியாளர்களை கொண்டு 50க்கும் மேற்பட்ட நாடுகளில் தனது கிளைகளை பரவியுள்ளது. நிறுவனத்தின் தற்போதைய தலைவராக சிவ நாடார் அவர்களின் புதல்வி திருமதி. ரோஷ்ணி உள்ளார். இவர் ஐ.டி. நிறுவனத்தை(Listed Company) வழிநடத்தும் நாட்டின் முதல் பெண் தலைவராகவும் பார்க்கப்படுகிறார்.

உலகின் மிகவும் சக்தி வாய்ந்த 100 பெண்மணிகளில்(நடப்பு 2021) ரோஷ்ணியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. நிறுவனத்தின் மொத்த வருவாய் பங்களிப்பில் அமெரிக்கா 58 சதவீதமும், ஐரோப்பா 27 சதவீதமும் கொண்டுள்ளது. உள்நாட்டில் ஈட்டப்படும் வருவாய் மூன்று சதவீதம் மட்டுமே.

நிதிச்சேவை, உற்பத்தி, சில்லறை வணிகம், தொலைத்தொடர்பு, ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், வாழ்வியல் மற்றும் ஆரோக்கியம் என பல துறைகளுக்கு தேவையான தகவல் தொழில்நுட்ப சேவையை இந்நிறுவனம் வழங்கி வருகிறது.

நடப்பு நிதியாண்டுக்கான இரண்டாம் காலாண்டு முடிவுகளை(Quarterly results) எச்.சி.எல். நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டது. செப்டம்பர் 2021 காலாண்டு முடிவில் நிறுவனத்தின் வருவாய் 20,655 கோடி ரூபாயாகவும், செலவினம் ரூ.15,633 கோடியாகவும் இருந்துள்ளது. சொல்லப்பட்ட காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.3,259 கோடி.

இயக்க லாப விகிதம்(OPM) சராசரியாக ஒவ்வொரு காலாண்டிலும் 25 சதவீதம் என்ற அளவை பெற்றுள்ளது கவனிக்கத்தக்கது. நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு(Reserves) ரூ.60,133 கோடியாகவும், விற்பனை வளர்ச்சி கடந்த பத்து ஆண்டுகளில் 20 சதவீதமாகவும் உள்ளது. நிறுவனர்களின் பங்களிப்பு 60 சதவீதமாகவும், கடன்-பங்கு விகிதம் 0.10 ஆகவும் இருக்கிறது.

நிறுவனர் சார்பில் பங்கு அடமானம் எதுவும் வைக்கப்படவில்லை. வட்டி பாதுகாப்பு விகிதம் 42 மடங்குகளிலும், பங்கு முதலீட்டின் மீதான வருவாய்(Return on Equity) கடந்த 10 வருடங்களில் 25 சதவீதம் வளர்ந்துள்ளது. 2020ம் ஆண்டின் ஏப்ரல் மாத துவக்கத்தில் பங்கு ஒன்றுக்கு 400 ரூபாய்க்கு கீழ் வர்த்தகமாகி கொண்டிருந்த நிலையில்(உள்ளார்ந்த மதிப்புக்கு கீழ் – Undervalued), தற்போது 1,250 ரூபாய் என்ற விலையில் உள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

அமர ராஜா பேட்டரிஸ் – முதலாம் காலாண்டு நிகர லாபம் ரூ.124 கோடி

அமர ராஜா பேட்டரிஸ் – முதலாம் காலாண்டு நிகர லாபம் ரூ.124 கோடி 

Amara Raja Batteries reported a Net Profit of Rs.124 Crore – Q1FY22 results

ஆந்திர மாநிலம் திருப்பதியை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இந்திய பன்னாட்டு குழும நிறுவனம், அமர ராஜா பேட்டரிஸ். பில்லியன் டாலர் வருவாயை கொண்டிருக்கும் இந்நிறுவனம் எலக்ட்ரானிக்ஸ், பேட்டரி, சோலார்,  உட்கட்டமைப்பு, பதப்படுத்தப்பட்ட உணவு, பொழுதுபோக்கு மற்றும் ஊடகம் என பல துறைகளில் தொழில் புரிந்து வருகிறது. அயர்லாந்து நாட்டின் மிகப்பெரிய நிறுவனமான ஜான்சன் கண்ட்ரோல்(Johnson Controls) நிறுவனத்துடன் இணைந்து கூட்டு முயற்சியில் தனது சேவையை விரிவாக்கம் செய்துள்ளது அமர ராஜா.

வாகனத்துறைக்கு தேவையான பேட்டரி தயாரிப்பில், எக்சைட் இண்டஸ்ட்ரீஸ்(Exide) நிறுவனத்திற்கு அடுத்தாற்போல் நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நிறுவனமாக அமர ராஜா பேட்டரிஸ் உள்ளது. 15,000 க்கும் மேற்பட்ட பணியாளர்களை கொண்டு, உலகெங்கும் தனது சேவைகளை பரவலாக்கியுள்ளது இந்நிறுவனம்.

அமரான்(Amaron), குவாண்டா, கல்லா(Galla), பவர் ஜோன்(Powerzone) என பல பிராண்டுகளில் இதன் தயாரிப்பு பொருட்கள் சந்தையில் விற்பனையாகின்றன. நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு ரூ.12,300 கோடி. புத்தக மதிப்பு பங்கு ஒன்றுக்கு 246 ரூபாய் விலையிலும், சந்தை விலை பங்கு ஒன்றுக்கு ரூ.720 என்ற விலையிலும் வர்த்தகமாகி வருகிறது.

நிறுவனத்தின் கடன்-பங்கு(Debt to Equity) 0.02 என்ற விகிதத்திலும், வட்டி பாதுகாப்பு விகிதம் 88 மடங்குகளிலும் உள்ளது. நிறுவனர்களின் பங்களிப்பு 28 சதவீதமாக உள்ளது. நிறுவனர்கள் சார்பில் பங்கு அடமானம் எதுவும் வைக்கப்படவில்லை. கடந்த 2018ம் ஆண்டு ஜான்சன் கண்ட்ரோல் நிறுவனம் தனது 26 சதவீத பங்குகளை விற்ற பின்னர், அமர ராஜா நிறுவனர்களின் பங்களிப்பு 28 சதவீதமாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், அன்னிய முதலீட்டாளர்களிடம் 22 சதவீத பங்குகளும், உள்ளூர் முதலீட்டு மற்றும் நிதி நிறுவனங்களிடம் 15 சதவீத பங்குகளும் கையிருப்பில் உள்ளது. ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் 1,886 கோடி ரூபாயாகவும், செலவினம் 1,636 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது.

சொல்லப்பட்ட காலாண்டில்(Quarterly results) நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.124 கோடி. மார்ச் 2021 ஆண்டு முடிவில் நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு ரூ.4,193 கோடி. இதர வருமானமாக ஜூன் காலாண்டில் 17 கோடி ரூபாய் சொல்லப்பட்டுள்ளது. முக்கிய நிறுவன முதலீட்டாளர்களின் பங்கு விற்பனைக்கு பிறகு, இந்நிறுவனத்தின் பங்கு விலை பெரிய ஏற்றம் பெறவில்லை. இருப்பினும் தனது துறையின் தவிர்க்க முடியாத நிறுவனமாக அமர ராஜா பேட்டரிஸ் உள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

நால்கோ நான்காம் காலாண்டு நிகர லாபம் – ரூ.936 கோடி

நால்கோ நான்காம் காலாண்டு நிகர லாபம் – ரூ.936 கோடி 

National Aluminium Company(NALCO) reported a net profit of Rs.936 Cr – Q4FY21

அரசு பொதுத்துறை நிறுவனமான தேசிய அலுமினிய நிறுவனம் – நால்கோ, அலுமினிய உற்பத்தி சார்ந்த தொழிலை செய்து வருகிறது. பாக்சைட் சுரங்கம், அலுமினிய சுத்திகரிப்பு, அலுமினியத்தை உருக்குதல் மற்றும் வார்ப்பு, மின் உற்பத்தி, ரயில் மற்றும் துறைமுக வேலைகளை தனது தொழிலாக கொண்டுள்ளது.

நாட்டின் பில்லியன் டாலர் வருவாயை ஈட்டும் நிறுவனமாகவும், அரசின், ‘நவரத்னா’ மதிப்பையும் கொண்ட நிறுவனமாகவும் நால்கோ திகழ்கிறது. இந்நிறுவனம் தனது 2020-21ம் நிதியாண்டுக்கான நான்காம் காலாண்டு முடிவுகளை(Quarterly results) வெளியிட்டுள்ளது.

மார்ச் மாதத்தில் முடிவடைந்த நான்காம் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.2,821 கோடியாகவும், செலவினம் 1877 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. இயக்க லாபம் ரூ.944 கோடியாக சொல்லப்பட்டுள்ளது. இதர வருமானமாக 53 கோடி ரூபாயும், சொல்லப்பட்ட காலாண்டின் நிகர லாபமாக 936 கோடி ரூபாய் உள்ளது. இது கடந்த பத்து காலாண்டில் காண முடியாத வளர்ச்சியாக இருந்துள்ளது.

இதற்கு முந்தைய ஆண்டின்(2019-20) மார்ச் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.1,936 கோடியாகவும், நிகர லாபம் 101 கோடி ரூபாயாக இருந்துள்ளது கவனிக்கத்தக்கது. மார்ச் 2021 முடிவின் படி, நிறுவனத்தின் இருப்புநிலை(Reserves) கையிருப்பு ரூ. 9,761 கோடி.

நால்கோவின் சந்தை மதிப்பு ரூ.14,100 கோடி மற்றும் புத்தக மதிப்பு பங்கு ஒன்றுக்கு 58 ரூபாயாக உள்ளது. கடனில்லா நிறுவனமாக வலம் வரும் நால்கோ, 51 சதவீத நிறுவனர் பங்களிப்பை கொண்டுள்ளது. இதுவரை பங்கு அடமானம் எதுவும் நிறுவனத்தின் சார்பாக வைக்கப்படவில்லை.

2020-21ம் நிதியாண்டில் நிறுவனம் ஒட்டுமொத்தமாக 8,956 கோடி ரூபாயை வருவாயாக கொண்டுள்ளது. சொல்லப்பட்ட வருடத்தில் நிகர லாபம் ரூ.1,299 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி கடந்த ஐந்து வருடங்களில் ஆறு சதவீதமாகவும், லாப வளர்ச்சி 12 சதவீதமாகவும் இருக்கிறது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

பிரின்ஸ் பைப்ஸ் நான்காம் காலாண்டு முடிவுகள் – ரூ.97 கோடி நிகர லாபம்

பிரின்ஸ் பைப்ஸ் நான்காம் காலாண்டு முடிவுகள் – ரூ.97 கோடி நிகர லாபம் 

Prince pipes reported a Net Profit of Rs.97 Crore – Q4FY21

1987ம் ஆண்டு துவங்கப்பட்ட பிரின்ஸ் பைப்ஸ் நிறுவனம் பாலிமர் குழாய்கள் உற்பத்தியில் தொழில் செய்து வருகிறது. பி.வி.சி. பைப்புகளில் முன்னணி நிறுவனமாகவும், பாலிமர் பிரிவில் 30 வருடங்களுக்கு மேலான அனுபவத்தையும் கொண்டிருக்கிறது பிரின்ஸ் பைப்ஸ். யூ.பி.வி.சி.(UPVC), சி.பி.வி.சி., பி.பி.ஆர். மற்றும் பி.பி.(PP) ரக பிரிவில் குழாய்கள் உற்பத்தி மற்றும் பொருத்துதலை முக்கிய பணியாக கொண்டுள்ளது.

பிரின்ஸ் பைப்ஸ் நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு ரூ.6,300 கோடி. கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பங்கு ஒன்றுக்கு 75 ரூபாய் விலையில் வர்த்தகமாகி கொண்டிருந்த இந்த பங்கு, தற்போது பங்கு ஒன்றுக்கு 600 ரூபாய்க்கு அருகில் வர்த்தகமாகி வருகிறது. நிறுவனத்தின் கடன்-பங்கு விகிதம் 0.08 ஆகவும், வட்டி பாதுகாப்பு விகிதம்(Interest Coverage Ratio – ICR) 16 மடங்குகளிலும் உள்ளது.

நிறுவனர்களின் பங்களிப்பு 63 சதவீதமாகவும், நிறுவனர்கள் சார்பில் பங்குகள் அடமானம் எதுவும் வைக்கப்படவில்லை. 2020-21ம் நிதியாண்டின் மார்ச் மாத நான்காம் காலாண்டில்(Quarterly results) வருவாய் 761 கோடி ரூபாயாகவும், செலவினம் 615 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. சொல்லப்பட்ட காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.97 கோடி.

நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு 933 கோடி ரூபாயாக சொல்லப்பட்டுள்ளது. 2020-21ம் நிதியாண்டில் ஒட்டுமொத்தமாக வருவாய் 2,072 கோடி ரூபாயாகவும், செலவினம் ரூ.1,710 கோடியாக உள்ளது. மார்ச் 2021ம் ஆண்டின் முடிவில் நிறுவனம் 222 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இதற்கு முந்தைய வருடத்துடன் ஒப்பிடுகையில், தற்போதைய லாபம் இரு மடங்கு உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஐந்து வருட காலத்தில் நிறுவனத்தின் விற்பனை 16 சதவீதமும், லாபம் 49 சதவீதமும் வளர்ச்சி பெற்றுள்ளது. பிளம்பிங், நிலத்தடி, கழிவுநீர், விவசாய போர்வெல், நீரேற்றம், கேபிள் குழாய் மற்றும் பிற தொழிற்துறைக்கான தேவையையும் பிரின்ஸ் பைப்ஸ் செய்து வருகிறது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

தைரோகேர் டெக்னாலஜிஸ் நிறுவன காலாண்டு லாபம் – ரூ. 38 கோடி

தைரோகேர் டெக்னாலஜிஸ் நிறுவன காலாண்டு லாபம் – ரூ. 38 கோடி 

Thyrocare Technologies Q4FY21 – Net profit of Rs.38 Crore

கோவை அப்பநாயக்கன்பட்டி புதூரை சேர்ந்த திரு. வேலுமணி அவர்களால் துவங்கப்பட்ட நிறுவனம் தான் தைரோகேர் டெக்னாலஜிஸ். சுகாதார துறையில் தொழில் செய்து வரும் இந்நிறுவனம், நாட்டில் உள்ள நோயாளிகள், ஆய்வகங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு மலிவான விலையில் தரமான நோயறிதல் சேவைகளை வழங்குவதில்(Diagnostic Services) முதன்மை நிறுவனமாக திகழ்ந்து வருகிறது.

நிறுவனத்தின் நிறுவனரான திரு. வேலுமணி அவர்கள் பாபா அணு ஆராய்ச்சி நிலையத்தின் முன்னாள் விஞ்ஞானி என்பது குறிப்பிடத்தக்கது. தைரோகேர் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தற்போதைய சந்தை மூலதன மதிப்பு 5,600 கோடி ரூபாய். நிறுவனத்திற்கு கடன் எதுவும் பெரிதாக இல்லை. கடன்-பங்கு விகிதம் 0.02 ஆகவும், வட்டி பாதுகாப்பு விகிதம் 176 மடங்குகளிலும் இருப்பது முதலீட்டாளர்களுக்கு சாதகமானது.

நிறுவனர்கள் சார்பில் 66 சதவீத பங்குகளும், பங்கு அடமானம் எதுவும் நிறுவனர்கள் தரப்பாக வைக்கப்படவில்லை. 2020-21ம் நிதியாண்டின் நான்காம் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.147 கோடியாகவும், செலவினம் 95 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. இதர வருமானமாக ரூ.4 கோடியும், சொல்லப்பட்ட காலாண்டின் நிகர லாபம் 38 கோடி ரூபாயாக உள்ளது.

ஒட்டுமொத்தமாக 2021ம் நிதியாண்டில் வருவாய் ரூ. 495 கோடியாகவும், நிகர லாபம் 113 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. இதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் வருவாய் 14 சதவீதமும், நிகர லாபம் 28 சதவீதமாகவும் வளர்ந்துள்ளது.

நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு 374 கோடி ரூபாயாக சொல்லப்பட்டுள்ளது. கடந்த ஐந்து வருடங்களில் நிறுவனத்தின் விற்பனை 15 சதவீதமும், லாபம் 17 சதவீதமும் வளர்ச்சி பெற்றுள்ளது. பங்கு மூலதனத்தின் மீதான வருவாய்(Return on Equity) கடந்த 5 வருட காலத்தில் 21 சதவீதமாக இருந்துள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

இந்துஸ்தான் யூனிலீவர் நான்காம் காலாண்டில் ரூ.2,186 கோடி நிகர லாபம்

இந்துஸ்தான் யூனிலீவர் நான்காம் காலாண்டில் ரூ.2,186 கோடி நிகர லாபம்  

HUL(Hindustan Unilever Ltd) reported a Net Profit of Rs.2,186 Crore in Q4FY21

1931ம் ஆண்டு இந்துஸ்தான் வனஸ்பதி உற்பத்தி நிறுவனமாக துவங்கப்பட்டது தான் பின்னாளில் இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனமாக மாறியது. இதன் தாய் நிறுவனம் லண்டனை தலைமையிடமாக கொண்ட யூனிலீவர்(Unilever). பில்லியன் டாலர் வருவாயை கொண்டிருக்கும் யூனிலீவர் குழுமம் தனது தொழிலை 190 நாடுகளிலும், 400க்கும் மேற்பட்ட பிராண்டுகளையும் கொண்டு இயங்குகிறது.

இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் உணவு, தனிநபர் மற்றும் வீட்டு பராமரிப்பு, குடிநீர் சுத்திகரிப்பு போன்றவற்றில் தனது தொழிலை செய்து வருகிறது. இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு 5.65 லட்சம் கோடி ரூபாய். கடனில்லா நிறுவனமாக வலம் வரும் இந்துஸ்தான் யூனிலீவர் 62 சதவீத நிறுவனர்கள் பங்களிப்பை கொண்டிருக்கிறது.

சரும(Skincare) பராமரிப்பில் 54 சதவீத சந்தை பங்களிப்பையும், சலவை(Dish washing Detergent) பிரிவில் 55 சதவீதமும், சாம்பூ(Shampoo) பிரிவில் 47 சதவீதம், தனிநபர் பிரிவில் 37 சதவீதமும் மற்றும் பற்பசை பிரிவில் 17 சதவீத சந்தை பங்களிப்பையும் இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் கொண்டுள்ளது.

2020-21ம் நிதியாண்டின் நான்காம் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் 12,433 கோடி ரூபாயாகவும், செலவினம் ரூ.9,391 கோடியாகவும் இருந்துள்ளது. இயக்க லாப விகிதம் 24 சதவீதமாகவும், நிகர லாபம் 2,186 கோடி ரூபாயாகவும் உள்ளது. கடந்த 2019-20ம் நிதியாண்டின் மார்ச் காலாண்டுடன் ஒப்பிடுகையில் தற்போதைய நிகர லாபம் 44 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது.

கடந்த பத்து வருட கால அளவில் காணும் போது நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி 9 சதவீதமும், லாபம் 15 சதவீதமாகவும் உள்ளது. மார்ச் 2020ம் வருட முடிவின் படி, இருப்புநிலை கையிருப்பு 8,013 கோடி ரூபாயாக இருந்துள்ளது. இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தில், எல்.ஐ.சி. இந்தியா நிறுவனம் சுமார் 4 சதவீத பங்குகளை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com