நாட்டின் விலைவாசி உயர்வு(பணவீக்கம்) 2022 – சிறு பார்வை
India’s rising Retail Inflation 2022 – Economy Insights
நாட்டின் ஏப்ரல் மாத நுகர்வோர் விலை பணவீக்கம் கடந்த எட்டு வருடங்களில் காணப்பட்ட அதிகபட்ச அளவாக 7.79 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது. கடந்த ஏழு மாதங்களாக பணவீக்க விகிதம் தொடர்ச்சியாக உயர்ந்து வருவது கவனிக்கத்தக்கது. ஏப்ரல் மாத பணவீக்கம், சந்தை வல்லுநர்கள் எதிர்பார்த்த அளவை காட்டிலும் அதிகமாக சென்றுள்ளது.
உணவுப்பொருட்கள் மற்றும் எரிபொருட்களின் விலையில் ஏற்பட்ட மாற்றத்தால், பணவீக்க விகிதம் அதிகரித்து வந்துள்ளது. எண்ணெய் மற்றும் கொழுப்பு வகைகள் 17.28 சதவீதமும், காய்கறிகள் 15.41 சதவீதமும் உயர்ந்துள்ளது. இது போல மசாலா பொருட்களின்(Spices) விலை எதிர்பாராத விதமாக 10.56 சதவீதம் என அதிகரித்து காணப்படுகிறது.
பாரத ரிசர்வ் வங்கியின் குறுகிய கால இலக்காக பணவீக்க விகிதம், இரண்டு சதவீதம் முதல் ஆறு சதவீதம் வரை சொல்லப்பட்டுள்ளது. ஆனால், கடந்த நான்கு மாதங்களாக இந்த இலக்கை கடந்து தான் பணவீக்க விகிதம் இருந்துள்ளது.
நாட்டின் நுகர்வோர் விலை பணவீக்க விகிதத்தில்(Consumer Price Index) உணவுப்பொருட்களின் பங்களிப்பு மட்டும் 45.86 சதவீதமாக உள்ளது. இதற்கடுத்தாற் போல் வீட்டுமனை 10.07 சதவீத பங்களிப்பையும், போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு 8.59 சதவீத பங்களிப்பையும், சுகாதாரம் 5.89 சதவீதமும், ஒளி மற்றும் எரிபொருட்கள் 6.84 சதவீதமாக உள்ளது.
பொதுவாக எரிசக்தியில் இறக்குமதியை சார்ந்து இருப்பது, பருவமழையின் நிச்சயமற்ற தன்மை, உட்கட்டமைப்பு சார்ந்த மேம்பாடு நிகழாதிருத்தல், உணவுப்பொருட்கள் விநியோக சங்கிலியில் அத்தியாவசியமான பொருட்களை கொண்டு செல்வதில் சிரமம் மற்றும் நிதி பற்றாக்குறை ஆகியவை நாட்டின் பணவீக்க விகித மாற்றத்திற்கு காரணமாக அமைந்துள்ளன.
இதற்கு முன்பு சில்லரை விலை பணவீக்கம் அதிகமாக காணப்பட்ட காலமாக 2013ம் வருடத்தின் நவம்பர் மாதம் இருந்துள்ளது. சொல்லப்பட்ட வருடத்தின் மே மாதத்தில் 9.38 சதவீதமாக இருந்த பணவீக்க விகிதம் தொடர்ச்சியாக அதிகரித்து நவம்பர் மாதத்தில் 12.17 சதவீதமாக முடிவடைந்தது. 2013ம் ஆண்டு முதல் சில்லரை விலை பணவீக்கம் கடைபிடிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு, மொத்த விலை(Wholesale price index -WPI) அடிப்படையில் தான் நாட்டின் பணவீக்கம் கணக்கிடப்பட்டு வந்தது.

நடப்பில் மொத்த விலை பணவீக்கம் மற்றும் சில்லரை விலை பணவீக்கம் என இரு கணக்கீடுகளும் இருக்கும் நிலையில், சில்லரை விலை பணவீக்க விகிதம் தான் பொருளாதார முன்னுதாரணத்திற்கு எடுத்து கொள்ளப்படுகிறது.
ஒரு நாட்டின் பணவீக்கம் அதிகரிக்கும் போது, வங்கி வட்டி விகிதங்கள் உயர்த்தப்படுவது பொருளாதாரத்தின் அடிப்படை நிகழ்வு. அதாவது உயரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த வட்டி விகிதங்களில் மாற்றம் செய்யப்படும். இது தொழில் சார்ந்த பங்குச்சந்தைக்கு பாதகமாகவும், வங்கிகளில் டெபாசிட் செய்பவர்களுக்கு சற்று சாதகமாகவும் அமையும். எப்போதெல்லாம் அரசு கடன் பத்திரங்களின் வருவாய்(தேவை) குறைகிறதோ, அப்போது வங்கி டெபாசிட்க்கான வருவாய் அதிகரித்துள்ளது எனலாம்.
2013-14ம் ஆண்டு காலத்தில் கடனுக்கான வங்கி வட்டி விகிதம் பத்து சதவீதத்திற்கு மேல் இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த வட்டி விகிதம் ஒன்பது சதவீதத்திற்கு குறைவாக உள்ளது. 2013ம் ஆண்டில் நாட்டின் பொருளாதாரத்திற்கு அரசின் கடன்(Debt to GDP) 67 சதவீதமாக இருந்த நிலையில், நடப்பில் இது 74 சதவீதமாக உள்ளது. வளர்ந்த நாடுகளை ஒப்பிடுகையில், நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி-கடன் விகிதம் சற்று குறைவாக இருப்பது சாதகமான ஒன்று.
இருப்பினும் நாட்டின் வர்த்தக பற்றாக்குறை அதிகமாக உள்ளது. ஏப்ரல் 2022 கால நிலவரப்படி, நாட்டின் வர்த்தக பற்றாக்குறை 20.11 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. ஏற்றுமதியை காட்டிலும், இறக்குமதி அளவு அதிகரித்து காணப்படுகிறது. நாட்டின் இறக்குமதியில் கனிம எரிபொருட்கள், எண்ணெய், முத்துக்கள், விலை உயர்ந்த கற்கள் மற்றும் நகைகளின் பங்களிப்பு பெரும்பான்மையாக உள்ளது.
சீனா, சவுதி அரேபியா, ஈராக், இந்தோனேஷியா மற்றும் ஸ்விட்சர்லாந்து நாடுகளிடம் வர்த்தக பற்றாக்குறையும், அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம்(UAE), இங்கிலாந்து மற்றும் வியட்நாம் நாடுகளிடம் உபரியாகவும் உள்ளது கவனிக்கத்தக்கது.
மிதமான பணவீக்க விகிதம், ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு கைகொடுக்கும். பணவாட்டத்தை(Deflation) காட்டிலும் பணவீக்கம் பெரும்பாலும் நாட்டின் பொருளாதாரத்திற்கு நல்லது. அதே வேளையில், அதிகப்படியான பணவீக்க விகிதம் சேமிப்பையும், வாங்கும் திறனையும் குறைத்து விடும்.
பணவீக்க விகிதம் அதிகரிக்க அதிகரிக்க, அதனை சமாளிக்கும் வகையில் வருவாய் மற்றும் முதலீடுகள் இருந்தால் பரவாயில்லை. ஆனால், விலைவாசி உயர்வு பொதுவாக சந்தையில் போட்டியை மழுங்க செய்யும். இதன் மூலம் முதலீட்டின் அளவும் குறைந்து, பொருளாதார மந்தநிலையை ஏற்படுத்த நேரிடும்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை
www.varthagamadurai.com