Tag Archives: stock market returns

2023ம் ஆண்டில் உலக பங்குச்சந்தை குறியீடுகளின் வளர்ச்சி விகிதம் எப்படி ?

2023ம் ஆண்டில் உலக பங்குச்சந்தை குறியீடுகளின் வளர்ச்சி விகிதம் எப்படி ?

Global Market Indices in the year 2023 – Returns %

2023ம் ஆண்டை பொறுத்தவரை உலக பங்குச்சந்தையில் காணும் முக்கிய சந்தை குறியீடுகள் 20 சதவீதத்திற்கு மேலாக வருவாயை கொடுத்துள்ளன. குறிப்பாக அமெரிக்க பங்குச்சந்தை S&P 500 குறியீடு 24 சதவீதமும், ஜப்பானின் Nikkei 225 குறியீடு 30 சதவீதமும், ஐரோப்பாவின் Stoxx 50 குறியீடு 17.3 சதவீதம் என்ற அளவிலும் வளர்ச்சியடைந்துள்ளது.

இந்திய பங்குச்சந்தையின் முக்கிய குறியீடுகளான தேசிய பங்குச்சந்தையின்  நிப்டி50 குறியீடு 22.60 சதவீதமும், மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 21 சதவீதமும் உயர்ந்துள்ளது. ஆஸ்திரேலிய நாட்டின் பங்குச்சந்தை 7.8 சதவீதமும், தென் கொரியாவின் கோஸ்பி(Kospi) 18.7 சதவீதமும் அதிகரித்துள்ளது. இருப்பினும் சீனாவின் S&P China 500 குறியீடு 12.50 சதவீதம் மற்றும் ஹாங்காங் நாட்டின் Hang Seng 14 சதவீதம் என்ற அளவிலும் வீழ்ச்சியடைந்துள்ளது.

2023ம் ஆண்டில் காணப்பட்ட உலகளாவிய போர் பதற்ற சூழ்நிலை, பொருளாதார மந்தநிலை மற்றும் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்ட சிக்கல் ஆகியவற்றால் தங்கத்தின் தேவை அதிகரித்து சொல்லப்பட்ட வருடத்தில் தங்கம் 13 சதவீதம் அதிகரித்துள்ளது.

உலகளவில் வீட்டுமனைத் துறை(Real Estate – REITs) குறியீடும் 11.50 சதவீதம் என்ற அளவில் உயர்ந்துள்ளது. 2020 மற்றும் 2021ம் வருடங்களில் கொரோனா பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட ஊரடங்கிற்கு பிறகு, கடந்த 2023ம் ஆண்டில் நாட்டின் முக்கிய பெருநகரங்களில் வீட்டுமனை விற்பனை 25 முதல் 30 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. அமெரிக்காவின் Dow Jones Real Estate குறியீடு 7.8 சதவீதம் வளர்ந்துள்ளது. அதே வேளையில் கச்சா எண்ணெய் கடந்த ஆண்டு 11 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.    

அமெரிக்க கடன் பத்திரங்களின் வருவாய் 2023ம் ஆண்டில் 5.8 சதவீதம் அதிகரித்து காணப்படுகிறது. வளர்ந்த மற்றும் வேகமாக வளரும் நாடுகளில் கடந்த சில காலாண்டுகளாக பணவீக்க விகிதம் ஏற்ற-இறக்கமாக காணப்பட்ட நிலையில் வங்கி வட்டி விகிதமும் கணிசமான வருவாயை கடந்த ஆண்டு தந்துள்ளது. பரஸ்பர நிதியில் கிடைக்கப்பெறும் கடன் பண்டுகள்(Debt Mutual Funds) சராசரியாக 6 முதல் 7 சதவீதம் வரை வருவாயை அளித்துள்ளது.

நாணயச்சந்தையில் மெக்ஸிகோ நாட்டின் பெசோ(Peso) 15 சதவீதம் உயர்ந்துள்ளது. இது போல சுவிட்சர்லாந்து நாட்டின் பிரான்க் 10 சதவீதமும், பிரிட்டிஷ் பவுண்டு 5.30 சதவீதமும் மற்றும் யூரோ 3 சதவீதமும் அதிகரித்துள்ளது. அதே வேளையில் அமெரிக்க டாலர் 2 சதவீதமும், சீன யுவான் 2.80 சதவீதமும் மற்றும் ரசியாவின் ரூபெல் 17.50 சதவீதம் என்ற அளவிலும் வீழ்ச்சியடைந்துள்ளது. இந்திய ரூபாயும் 0.5 சதவீதம் என்ற அளவில் குறைந்து காணப்பட்டுள்ளது.   

வரக்கூடிய காலம் உலக பொருளாதாரத்திற்கு மிகவும் நெருக்கடியான கால நிலையாக இருப்பதால், தொடர்ச்சியாக ஏற்றத்தில் இருந்து வரும் பங்குச்சந்தையில் அதிக ஏற்ற-இறக்கத்தை எதிர்பார்க்கலாம். எந்தவொரு முதலீட்டுத் திட்டமும்(Shares, Gold, Bonds, Real Estate) நீண்டகாலம் தொடர்ச்சியாக பல வருடங்களுக்கு ஏற்றத்தை மட்டுமே சந்திக்கும் என்பது பொருளாதார வரலாற்றில் இல்லை. இது போன்ற சூழ்நிலையில் முதலீட்டை பரவலாக்கம்(Asset Allocation) செய்வது நல்லது. நீண்டகாலத்தில் பங்கு முதலீட்டை மேற்கொள்பவர்களுக்கு பொருளாதார மந்தநிலை, பங்கு முதலீட்டு வாய்ப்பை மேலும் அதிகப்படுத்தும்.

நேரடியான பங்கு முதலீட்டை(Direct Equity) சரியாக கையாளத் தெரியாதவர்கள் அல்லது நேரமில்லை என சொல்பவர்கள், பரஸ்பர நிதி திட்டங்களின்(Mutual Funds – Multi Asset, Asset Allocator, Hybrid, Flexi & Multicap) மூலம் தங்களது முதலீட்டை பரவலாக்கம் செய்யலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

2022ம் வருடத்தில் உலக பங்குச்சந்தை குறியீடுகளின் வளர்ச்சி விகிதம் எப்படி ?

2022ம் வருடத்தில் உலக பங்குச்சந்தை குறியீடுகளின் வளர்ச்சி விகிதம் எப்படி ? 

Global Market Indices in the year 2022 – Returns %

2022ம் ஆண்டில் பல்வகை முதலீடுகளின்(Asset Classes) வளர்ச்சி விகிதத்தை காணும் போது, உலகளவில் அதிகபட்சமாக தங்கத்தின் மீதான முதலீடு 11 சதவீதமும், பெரு நிறுவனங்களின் பங்கு முதலீடு(Large Cap Equity) 3 சதவீதமும், ரியல் எஸ்டேட் 1.5 சதவீதமும், தனியார் கடன் பத்திரங்கள் 2.7 சதவீதமும், அரசு பத்திரங்கள் 2.3 சதவீதமும் வளர்ச்சி அடைந்துள்ளது. மாறாக நடுத்தர மற்றும் குறு நிறுவனங்களின் பங்கு முதலீடு இறக்கத்தை சந்தித்துள்ளன.

கடந்த பத்து வருட காலத்தில் இந்திய பங்குச்சந்தை முதலீடு 2015ம் ஆண்டை தவிர்த்து(-4.1 %) பார்க்கையில், அனைத்து வருடமும் ஏற்றத்தில் தான் முடிந்துள்ளன. தங்கத்தின் மீதான முதலீடு 2019 மற்றும் 2020ம் வருடங்களில் ஆண்டுக்கு 20 சதவீதத்திற்கு மேல் ஏற்றம் பெற்றுள்ளன. உலக பொருளாதார மந்தநிலை மற்றும் கொரோனா ஊரடங்கு காலத்தில் தங்கத்தின் மீதான வருவாய் அதிகரித்துள்ளது.

பொதுவாக பொருளாதார மந்தநிலை காணப்படும் போது தங்கம் ஏற்றம் பெறுவதும், மீண்டெழும் பொருளாதாரத்தில் தங்கத்தின் வருவாய் குறைவதும் இயல்பே. பொருளாதாரம் வளர்ச்சியடையும் போது, பங்கு முதலீடு மற்றும் ரியல் எஸ்டேட் துறைக்கான ஏற்றம் காணப்படும்.   

2022ம் வருடத்தில் வளர்ந்த நாடுகளின் பங்குச்சந்தை முதலீடு பெரும்பாலும் இறக்கத்தையே சந்தித்துள்ளது. சொல்லப்பட்ட வருடத்தின் முடிவில் அமெரிக்காவின் நாஸ்டாக்(Nasdaq) குறியீடு 33 சதவீதம் சரிந்துள்ளது. இந்நாட்டின் தகவல் தொழில்நுட்ப குறியீடு(FAANG) மட்டும் 40 சதவீதத்திற்கு மேல் வீழ்ந்துள்ளது. ஜெர்மனியின் டாக்ஸ்(DAX) 12 சதவீதமும், ஜப்பானின் நிக்கி(Nikkei) 9 சதவீதமும், ஐரோப்பாவின் ஸ்டாக்ஸ்(Stoxx) 11 சதவீதமும் இறக்கத்தை சந்தித்துள்ளது.

வளர்ந்த நாடுகளின் பட்டியலில் ஐக்கிய ராச்சியத்தின் புட்சி(FTSE) குறியீடு மட்டும் ஒரு சதவீதம் என்ற அளவில் 2022ம் ஆண்டு ஏற்றம் பெற்றுள்ளது. வேகமாக வளரும் நாடுகளின் பட்டியலில் சீனா, தென் கொரியா, வியட்நாம் மற்றும் தைவான் ஆகிய நாடுகளின் குறியீடுகள் 14 சதவீதத்திற்கு மேல் சரிவடைந்துள்ளன. அதிகபட்சமாக ரஷ்ய நாட்டின் பங்குச்சந்தை குறியீடு 39 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது.

இந்தோனேசிய மற்றும் சிங்கப்பூர் நாட்டின் பங்குச்சந்தை குறியீடுகள் 4 சதவீதம் என்ற அளவில் ஏற்றமடைந்துள்ளது. வேகமாக வளரும் நாடுகளின் பட்டியலில் இந்திய பங்குச்சந்தை மட்டுமே 5 சதவீதம் என்ற அளவில் ஏற்றம் பெற்று முதலிடத்தில் உள்ளது. நிப்டி (Nifty) தேசிய பங்குச்சந்தையில் உலோகத்துறை, மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்கள்(CPSE) மற்றும் தனியார் வங்கிகளின் குறியீடுகள் 20 சதவீதத்திற்கு மேல் வருவாயை தந்துள்ளது. அதிகபட்சமாக பொதுத்துறை வங்கிகளின் குறியீடு 70 சதவீதம் ஏற்றம் பெற்றுள்ளது.

மாறாக, தகவல் தொழில்நுட்ப துறை 26 சதவீதமும், மருந்துத்துறை(Pharma) 11 சதவீதமும், ரியல் எஸ்டேட் குறியீடு 11 சதவீதமும் வீழ்ச்சியடைந்துள்ளது. மக்களிடையே அதிகமாக புழங்கும் எப்.எம்.சி.ஜி.(FMCG) துறை 17 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது. ஐ.டி.சி. நிறுவனம் 2022ம் ஆண்டில் 52 சதவீதமும், கோல் இந்தியா 54 சதவீதமும் ஏற்றமடைந்துள்ளது. தகவல் தொழில்நுட்ப துறையில் எச்.சி.எல். டெக்னாலஜிஸ், இன்போசிஸ், டெக் மஹிந்திரா மற்றும் விப்ரோ ஆகிய பங்குகளின் விலை 20 சதவீதத்திற்கு மேல் வீழ்ந்துள்ளன. 

வரக்கூடிய காலம் பொருளாதாரத்திற்கு மிகவும் நெருக்கடியான நிலையாக இருப்பதால், பங்கு முதலீட்டில் அதிக ஏற்ற-இறக்கத்தை எதிர்பார்க்கலாம். இது போன்ற சூழ்நிலையில் முதலீட்டை பரவலாக்கம்(Asset Allocation) செய்வது நல்லது. நீண்டகாலத்தில் பங்கு முதலீட்டை மேற்கொள்பவர்களுக்கு பொருளாதார மந்தநிலை, பங்கு முதலீட்டு வாய்ப்பை மேலும் அதிகப்படுத்தும். நேரடியான பங்கு முதலீட்டை(Direct Equity) சரியாக கையாள தெரியாதவர்கள் அல்லது நேரமில்லை என சொல்பவர்கள், பரஸ்பர நிதி திட்டங்களின்(Mutual Funds – Multi Asset, Asset Allocator, Hybrid, Flexi & Multicap) மூலம் தங்களது முதலீட்டை பரவலாக்கம் செய்யலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com