All posts by skatzsaravana

Value Investor, Entrepreneur and Founder of Varthaga Madurai, Rich Investing iDEAS

2022-23ம் நிதியாண்டில் ஐ.டி.சி. நிறுவனத்தின் நிகர லாபம் – ரூ.19,477 கோடி

2022-23ம் நிதியாண்டில் ஐ.டி.சி. நிறுவனத்தின் நிகர லாபம் – ரூ.19,477 கோடி 

ITC Ltd reported a net profit of Rs.19,477 Crore in FY 2022-23

112 வருட தொழில் அனுபவம் கொண்ட ஐ.டி.சி. லிமிடெட் நிறுவனம் தனது 2022-23ம் நிதியாண்டுக்கான நிதி அறிக்கையை வெளியிட்டுள்ளது. பில்லியன் டாலர் வருவாயை கொண்ட இந்நிறுவனம் பத்துக்கும் மேற்பட்ட துறைகளில் பொருட்களை உற்பத்தி செய்து விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. 90 நாடுகளுக்கும் மேலாக இதன் பொருட்கள் ஏற்றுமதியிலும், சுமார் 60 லட்சம் சில்லறை விற்பனை நிலையங்களையும் இந்நிறுவனம் கொண்டிருக்கிறது.

புகையிலை, விவசாயம் மற்றும் உணவுப்பொருட்கள், காகிதம் மற்றும் பேக்கேஜிங், நட்சத்திர தங்கும் விடுதிகள், தகவல் தொழில்நுட்பம் ஆகியவை நிறுவனத்தின் முக்கிய துறைகளாக உள்ளது. ஐ.டி.சி. நிறுவனத்தின் இந்திய சந்தை மதிப்பு ரூ. 5.21 லட்சம் கோடி. நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாயில், புகையிலை பொருட்களின் மூலம் கிடைக்கப்பெறும் வருவாய் 37 சதவீதமாக உள்ளது.

2022-23ம் நிதியாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.70,937 கோடியாகவும், செலவினம் 45,272 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. இயக்க லாப விகிதம்(OPM) 36 சதவீதமாகவும், இதர வருமானமாக ரூ.2,053 கோடியை ஈட்டியுள்ளது. வரிக்கு முந்தைய லாபம் 25,866 கோடி ரூபாய் மற்றும் நிகர லாபம் ரூ.19,477 கோடி.

2021-22ம் நிதியாண்டினை ஒப்பிடுகையில் தற்போது சொல்லப்பட்ட வருவாய் 17.6 சதவீத வளர்ச்சியையும், நிகர லாபம் 24.5 சதவீத வளர்ச்சியையும் பெற்றுள்ளது. 2022-23ம் நிதியாண்டில் பங்குதாரர்களுக்கான ஈவுத்தொகை(Dividend) பங்கு ஒன்றுக்கு ரூ.15.50 ஆக சொல்லப்பட்டுள்ளது(ஏற்கனவே அளிக்கப்பட்ட ரூ.6/பங்கு சேர்த்து).

எப்.எம்.சி.ஜி(FMCG) துறையின் வருவாய் 20 சதவீதமும், விவசாயம் 12 சதவீதமும், காகிதம் மற்றும் பேக்கேஜிங் 19 சதவீதமும் மற்றும் புகையிலை பொருட்களின் வருவாய் 20 சதவீதமுமாக வளர்ச்சி அடைந்துள்ளது. Aashirvaad, Sunfeast, Yippee, Dark Fantasy, Classmate Notebooks, Mangaldeep, Fiama, Vivel, B Natural, Nimyle, Engage, Shower to Shower, Savlon, Fabelle, Mom’s Magic, Sunrise Foods, Paperkraft, AIM தீப்பெட்டிகள், Charmis, Dermafique ஆகியவை நிறுவனத்தின் பிரபல பிராண்டுகளாகும்.

பங்குச்சந்தை – பண்டமென்டல் அனாலிசிஸ் – இலவச வகுப்புகள் – 14 நாட்கள் 

2023ம் ஆண்டின் மார்ச் மாத முடிவில் நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு(Reserves) 67,912 கோடி ரூபாய். நிறுவனத்திற்கு நீண்டகால கடன்கள் எதுவுமில்லை. புத்தக மதிப்பு பங்கு ஒன்றுக்கு 56 ரூபாயாகவும், பங்கு விலைக்கும், விற்பனைக்குமான இடைவெளி 7.35 மடங்குகளிலும் உள்ளது. 

கடந்த ஐந்து வருட காலத்தில் நிறுவனத்தின் விற்பனை வருவாய் வளர்ச்சி 10 சதவீதமாகவும், லாப வளர்ச்சி 12 சதவீதமாகவும் இருந்துள்ளது. நிறுவனத்தின் பங்கு முதலீடு மீதான வருவாய்(Return on Equity) கடந்த பத்து வருட காலத்தில் சராசரியாக 25 சதவீதம் தந்துள்ளது. பங்கு விலை கடந்த ஒரு வருடத்தில் 57 சதவீதம் ஏற்றம் பெற்றுள்ளது. நிறுவனத்தின் ஒட்டுமொத்த லாபத்தில் புகையிலை பொருட்களின்(Cigarettes) பங்களிப்பு மட்டும் 60 சதவீதமாக இருப்பது கவனிக்கத்தக்கது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

Advertisement

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முதலீடு செய்யலாமா ?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முதலீடு செய்யலாமா ?

Can you invest in Chennai Super Kings – CSK – Unlisted Equity(Pre-IPO) ?

கடந்த 2007ம் ஆண்டில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் துவங்கப்பட்டது தான் இந்தியன் பிரீமியர் லீக்(IPL). உரிமையாளர்(Franchise) சார்ந்து கிரிக்கெட் அணிகள் உருவாக்கப்பட்டு 2008ம் ஆண்டு முதல் இன்று வரை வருடந்தோறும் ஐ.பி.எல். போட்டிகள் நடந்து வருகின்றன. 

இதுவரை நடைபெற்ற 15 வருட ஐ.பி.எல். போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணி அதிகபட்சமாக ஐந்து முறையும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நான்கு முறையும் கோப்பையை வென்றுள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2012 மற்றும் 2014 என இரண்டு முறை கோப்பையை கைப்பற்றியுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், டெக்கான் சார்ஜர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் தலா ஒரு முறை கோப்பையை வென்றுள்ளது.

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் ரசிகர்களின் நம்பிக்கை அணிகளாக மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பல வருடங்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு காரணமாக சொல்லப்படுவது, மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆரம்ப காலங்களில் மாஸ்டர் பிளாஸ்டர்(Master Blaster) என அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் இருந்ததும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, முன்னாள் இந்திய கேப்டன் எம்.எஸ். தோனி தலைமையின் கீழ் அமைந்தது தான்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளராக இந்தியா வின்ஸ் ஸ்போர்ட்ஸ் நிறுவனமும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளராக முன்னாள் ஐ.சி.சி. தலைவர் மற்றும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் திரு. சீனிவாசன் இருக்கிறார். இந்தியா வின்ஸ ஸ்போர்ட்ஸ் நிறுவனம், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் ஒரு அங்கமாகும். 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தற்போதைய கேப்டனாக எம்.எஸ். தோனியே இருந்து வருகிறார். பயிற்சியாளராக நியூஸிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீபன் பிளெமிங் உள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நாட்டின் முதல் யுனிகார்ன் விளையாட்டு நிறுவனமாகும். 100 கோடி அமெரிக்க டாலர் மதிப்பை(USD One Billion – Unicorn) கொண்ட நிறுவனத்தை தான் யுனிகார்ன் நிறுவனம் என கூறுவதுண்டு.

கடந்த 15 வருட ஐ.பி.எல். வரலாற்றில் நான்கு முறை கோப்பையை இந்நிறுவனம் வென்றிருந்தாலும், 2013ம் ஆண்டில் நடைபெற்ற கிரிக்கெட் சூதாட்ட நிகழ்வில் சிக்கி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2016, 2017 என இரண்டு வருடங்கள் ஐ.பி.எல். போட்டிகளில் விளையாட தடை செய்யப்பட்டது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் இந்நிகழ்வில் சிக்கியது குறிப்பிடத்தக்கது. 

2013ம் ஆண்டில் லண்டனை சேர்ந்த பிராண்ட் பினான்ஸ் நிறுவனம், உலகின் மதிப்புமிக்க 150 விளையாட்டு அணிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தேர்ந்தெடுத்தது இதன் சிறப்பம்சம். ஐ.பி.எல். வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ்(Mumbai Indians) அணியும் அதிக போட்டிகளை நேருக்கு நேர் எதிர்கொண்ட அணிகளாக உள்ளது. கிரிக்கெட் வீரர்களை ஏலத்தில் வாங்கும் முதலீட்டு செலவிலும் இவ்விரு அணிகள் தான் முன்னிலையில் உள்ளது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் மற்றும் தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் கூட்டாக ஏற்படுத்திய சாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் இரு முறை கோப்பைகளை வென்ற அணிகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மட்டுமே உள்ளன. 

பொதுவாக பங்குச்சந்தையில் ஒரு நிறுவனத்தை பட்டியலிட, இந்திய கம்பனிகள் சட்டப்படி, அந்நிறுவனத்தை பொது பட்டியலிடப்பட்ட நிறுவனமாக(Public Limited / Listed) பதிவு செய்ய வேண்டும். பின்னர் தான் அந்த நிறுவனம் சந்தையில் ஐ.பி.ஓ. முறையில் பங்குகளை வெளியிடும். அப்போது தான் பொதுவெளியில் சாமானிய மக்களும் ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்க இயலும். 

இதே முறையில், பொதுவெளியில் பங்குகளை வெளியிடாமல் ஆனால் குறிப்பிட்ட பங்குதாரர்கள் மட்டும் முதலீடு செய்யும் பொருட்டு வந்த நிறுவனங்கள் தான் இன்று பெரும்பாலும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களாக வலம் வருகின்றன. உதாரணமாக ஜொமாடோ(Zomato), ஒயோ, ஸ்விக்கி, பைஜூ, போட்(boAt) ஆகிய நிறுவனங்கள்.

இது போன்ற ஸ்டார்ட்-அப் நிறுவனமாகவும், தனியார் முதலீட்டை பெறக்கூடிய பங்குகளை கொண்ட நிறுவனமாகவும் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஏறக்குறைய அனைவரும் முதலீடும் செய்யலாம். அதே வேளையில் அந்த நிறுவனம் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படவில்லை(Unlisted Equity). 

2014ம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தமிழ்நாட்டை தலைமையிடமாக கொண்டு சந்தையில் பட்டியலிடப்படாத(Unlisted) பங்கு முதலீட்டை கொண்ட நிறுவனமாக பதிவு செய்யப்பட்டது. அதாவது இந்த பங்கு பொதுவெளி சந்தையில் வர்த்தகமாகாது. ஆனால், இந்த பங்குகளை ஏற்கனவே வைத்திருக்கும் குறிப்பிட்ட முதலீட்டாளர்களிடம் அவர்கள் விற்கும் விலையில் வாங்கி கொள்ளலாம்.

2021-22ம் நிதியாண்டின் படி, சென்னை சூப்பர் கிங்ஸ் நிறுவனத்தின் மதிப்பு 1.15 பில்லியன் அமெரிக்க டாலர்களாக சொல்லப்பட்டுள்ளது. பங்குதாரர்களின் பங்களிப்பில் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம்(India Cements Shareholders Trust) 30 சதவீத பங்குகளையும், ஸ்ரீ சாரதா லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம் 7 சதவீத பங்குகளையும், எல்.ஐ.சி.(LIC India) நிறுவனம் 6 சதவீத பங்குகளையும் கொண்டுள்ளது. ரிலையன்ஸ் கேப்பிடல் டிரஸ்ட் நிறுவனம் 2.50 சதவீத பங்குகளையும், டி மார்ட்(DMart) நிறுவனத்தின் தலைவர் திரு. ராதா கிஷன் தமானி 2.40 சதவீத பங்குகளையும் வைத்துள்ளார். இன்னபிற தனியார் நிறுவனங்கள், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பங்குகளை வைத்துள்ளது. நிறுவனத்தில் உள்ள மொத்த பங்குகளின் எண்ணிக்கை சுமார் 30.81 கோடி(Equity Shares). நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக திரு. கல்லிடைக்குறிச்சி விஸ்வநாதன் சுப்பிரமணியம் உள்ளார். 

சென்னை சூப்பர் கிங்ஸ் நிறுவனத்தின் பட்டியலிடப்படாத சந்தை மதிப்பு சுமார் ரூ. 5,100 கோடி. பங்கு ஒன்றின் விலை 180 ரூபாயாக வர்த்தகமாகியுள்ளது. குறைந்தபட்சம் ஒரு முதலீட்டாளராக நூறு பங்குகளை வாங்க வேண்டியது அவசியம். 2021-22ம் நிதியாண்டில் இந்நிறுவனத்தின் வருவாய் 341 கோடி ரூபாயாகவும், வருவாய் வளர்ச்சி 38 சதவீதமாகவும் இருந்துள்ளது.

CSK - Profit and loss - FY22

சொல்லப்பட்ட காலத்தில் நிறுவனத்தின் செலவினம் 308 கோடி ரூபாயாகவும், நிகர லாபம்(Net Profit) ரூ. 32 கோடியாக உள்ளது. கடன்-பங்கு விகிதம் 0.25 என்ற அளவிலும், ஒரு பங்கு மீதான வருமானம்(EPS) 95 பைசாவாகவும் இருந்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் நிறுவனத்தின் எட்டாம் ஆண்டு பொதுக்கூட்டம் இணைய வழியில் நடைபெற்றுள்ளது. மார்ச் 2022 முடிவில் நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு(Reserves & Surplus) 245 கோடி ரூபாயாக உள்ளது. 

நிறுவனத்தின் அசையா சொத்துக்களின் மதிப்பு ரூ. 130 கோடி (மார்ச் 2022). 2021-22ம் நிதியாண்டில் நிறுவனம் சார்பில் ஈவுத்தொகை(Dividend) எதுவும் அறிவிக்கப்படவில்லை. சொல்லப்பட்ட காலத்தில் பெறப்பட்ட லாபத்திலிருந்து நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்புக்கு தொகை எதுவும் ஒதுக்கப்படவில்லை. 

சென்னை சூப்பர் கிங்ஸ் நிறுவனம், பங்குச்சந்தைக்கு வருவதற்கான வாய்ப்பை பற்றி தற்போது வெளியிடவில்லை. அதே வேளையில் நிறுவனத்தின் வருமான வாய்ப்புகளாக ஊடக உரிமைகள்(Media Rights), ஸ்பான்சர்சிப், விளம்பரங்கள், போட்டிகளுக்கான டிக்கெட்டுகள், கடிகாரங்கள், டி-சர்ட்டுகள் மற்றும் பிற பொருட்கள் உள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் நிறுவனத்திற்கு, சூப்பர்கிங்ஸ் வென்ச்சர்ஸ் என்ற துணை நிறுவனமும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

CSK நிறுவனத்தில் தற்போது முதலீடு செய்யலாமா ?

  • பொதுவாக பங்குச்சந்தையில், பொதுவெளியில் வெளியிடப்படும் நிறுவன பங்குகளில் ரிஸ்க் தன்மை அதிகமாக இருக்கும் நிலையில், பட்டியலிடப்படாத இது போன்ற நிறுவன பங்குகளிலும் ரிஸ்க் தன்மை மிகவும் அதிகமே. பங்குச்சந்தையில் வர்த்தகமாகும் பங்குகளில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால், அதனை களைய செபி(SEBI) எனும் ஒழுங்குமுறை ஆணையம் உள்ளது. ஆனால் பட்டியலிடப்படாத பங்குகளில் இதனை நாம் காண முடியாது. 
  • பங்குச்சந்தையில் காணப்படும் அதிக ஏற்ற-இறக்கங்கள், பட்டியலிடப்படாத நிறுவன பங்குகளில் பொதுவாக நடைபெறாது. இதற்கான காரணம் மிகக்குறைந்த பங்குகள் மட்டும் இங்கே வர்த்தகமாகும். சில நேரங்களில்(மாதங்கள் அல்லது வருடங்கள்) பங்கு வர்த்தகமே ஆகாது. வாங்குவதற்கும், விற்பதற்கும் நித்தமும் ஆட்கள் இருக்க வேண்டுமே !
  • பங்குச்சந்தையில் ஏற்கனவே அளப்பரிய அளவில் முதலீடு செய்து விட்டு, தனியார் நிறுவனங்களில், இது போன்ற பட்டியலிடப்படாத நிறுவன பங்குகளில் முதலீடு செய்ய விரும்புவோர் இதனை ஒரு வாய்ப்பாக கருதலாம். ஒரு வேளை, இது போன்ற நிறுவனங்கள் பின்னொரு காலத்தில் பங்குச்சந்தைக்கு(IPO Listed) வரும் போது, ஏற்கனவே முதலீட்டு செய்திருக்கும் நிலையில் அதிக விலையில் பங்குகளை விற்று வெளியேறலாம். ஆனால் இதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கையும், திறமையான நிர்வாகமும் இதனை வெளிக்காட்டும்.
  • பட்டியலிடப்படாத நிறுவன பங்குகளை, தற்போதைய நிலையில் வெகு சில தளங்களே வாங்கும்-விற்பனை வசதிகளை ஏற்படுத்தியுள்ளது. அத்தளங்களின் நம்பகத்தன்மையையும் நாம் சரிபார்த்து கொள்ள வேண்டும். பங்குச்சந்தையில் கைதேர்ந்தவர்களுக்கும்(25 வருடங்களுக்கு மேல் முதலீட்டு அனுபவம்), அச்சந்தையில் அதிக முதலீடு செய்து கோடிகளில் லாபத்தை ஈட்டியவர்களுக்கும், சென்னை சூப்பர் கிங்ஸ் போன்ற பட்டியலிடப்படாத பங்குகள் ஒரு அரிய முதலீட்டு வாய்ப்பாகும். மற்ற கத்துக்குட்டிகளுக்கு இவற்றிலிருந்து விலகியிருப்பதே நன்மை பயக்கும் !

“Unlisted equity is an opportunity to build wealth, but it’s always risky than listed”

கவனிக்க: முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கும் முன் தகுந்த நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் முன்னிலையில் தங்களது முதலீட்டு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலே சொன்ன தகவல்கள் பங்கு முதலீடு அடிப்படை பகுப்பாய்வுக்கான(Fundamental Analysis) கற்றல் மட்டுமே.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

2022-23ம் நிதியாண்டில் இன்போசிஸ் நிறுவனத்தின் நிகர லாபம் – ரூ. 24,108 கோடி

2022-23ம் நிதியாண்டில் இன்போசிஸ் நிறுவனத்தின் நிகர லாபம் – ரூ. 24,108 கோடி 

Infosys reported a net profit of Rs.24,108 Crore in the Financial year 2022-23 – Results

நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் லிமிடெட், கடந்த வார முடிவில் தனது 2022-23ம் நிதியாண்டுக்கான நான்காம் காலாண்டு முடிவு மற்றும் ஒட்டுமொத்த ஆண்டுக்கான நிதி அறிக்கையையும் வெளியிட்டிருந்தது. 

மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காம் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் 37,441 கோடி ரூபாயாகவும், செலவினம் ரூ. 28,443 கோடியாகவும் இருந்துள்ளது. சொல்லப்பட்ட காலாண்டில் இயக்க லாப விகிதம்(OPM %) 24 சதவீதமாக உள்ளது. நான்காம் காலாண்டின் முடிவில் நிறுவனம் ரூ. 6,134 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. 

இதற்கு முந்தைய ஆண்டின்(2021-22) நான்காம் காலாண்டுடன் ஒப்பிடுகையில், தற்போது சொல்லப்பட்டிருக்கும் வருவாய் 16 சதவீதமும், நிகர லாபம் 8 சதவீதமுமாக வளர்ந்துள்ளது. 2022-23ம் நிதியாண்டினை ஒட்டுமொத்தமாக காணும் போது, நிறுவனத்தின் வருவாய் ரூ. 1,46,767 கோடியாகவும், செலவினம் 1,11,637 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. 

சொல்லப்பட்ட நிதியாண்டின் முடிவில் நிறுவனம் 24,108 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. நிறுவனத்தின் பங்கு மீதான வருவாய்(EPS) 58 ரூபாயாக உள்ளது. 2011-12ம் நிதியாண்டில் இது 18 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. நிறுவனத்தின் பெரும்பாலான வருவாய் டிஜிட்டல் சேவையை சார்ந்தும், நிதித்துறை(Financial Services) சார்ந்த சேவைகளிலிருந்தும் பெறப்படுகிறது.  

புவியியல் சார்ந்து காணும் போது, நிறுவனத்தின் 62 சதவீத வருவாய் வட அமெரிக்காவிலிருந்து கிடைக்கப்பெறுகிறது. ஐரோப்பாவில் 25 சதவீதமும், உள்நாட்டில் 3 சதவீதத்திற்கும் குறைவாகவே வருவாய் ஈட்டப்படுகிறது. உலகின் சிறப்பான 500 நிறுவனங்களில் இன்போசிஸ் நிறுவனமும் இருப்பது கவனிக்கத்தக்கது.

இன்போசிஸ் நிறுவனத்தின்(Infosys Limited) முக்கிய வாடிக்கையாளர்களாக மெர்சிடஸ்-பென்ஸ், எச்.எஸ்.பி.சி. வங்கி, லாக்கீட் மார்ட்டின், அமெரிக்க ராணுவம், அமெரிக்க கடற்படை, ஐ.பி.எம், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, கோல்ட்மேன் சாக்ஸ் மற்றும் டச்சு வங்கி ஆகிய நிறுவனங்கள் உள்ளன. இன்போசிஸ் நிறுவனத்தின் இந்திய சந்தை மதிப்பு ரூ. 5.22 லட்சம் கோடி. 

கடந்த நிதியாண்டில் எதிர்பார்த்த வருவாய் மற்றும் லாப மதிப்பீட்டை காட்டிலும் குறைவாக இருந்ததும், நடப்பு நிதியாண்டுக்கான வருவாய் வழிகாட்டல்(Financial Guidance) நிறுவனத்தின் சார்பில் குறைவாக மதிப்பிடப்பட்டிருந்ததால், திங்கள் கிழமை அன்று (17-04-2023) இந்த பங்கின் விலை 10 சதவீதத்திற்கும் மேல் வீழ்ச்சியை சந்தித்தது. நீண்டகால முதலீட்டாளர்களிடையே இது எந்த சலசலப்பையும் ஏற்படுத்தாது, விலை வீழ்ச்சியால் பங்கு வாங்குவதற்கான வாய்ப்பையும் இது போன்ற நிகழ்வு வழங்குகிறது.

உலக அளவில் காணப்படும் பொருளாதார மந்தநிலை அச்சம் மற்றும் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு மாற்றம் ஆகியவற்றால் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்கு விலை சரிவது எதிர்பார்க்கப்பட்ட ஒன்று. இன்போசிஸ் நிறுவனத்திற்கு கடன் பெரிதாக எதுவுமில்லை. அதன் கடன்-பங்கு விகிதம் 0.11 என்ற அளவில் உள்ளது. மார்ச் 2023 முடிவின் படி, நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு ரூ. 73,338 கோடியாக உள்ளது.

கடந்த பத்து ஆண்டுகளில் நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சி சராசரியாக 14 சதவீதமும், லாப வளர்ச்சி 10 சதவீதமாகவும் இருந்துள்ளது. கடந்த ஐந்து வருடங்களில் இன்போசிஸ் நிறுவனத்தின் பங்கு விலை 17 சதவீதம் (கூட்டு வட்டியில்) ஏற்றம் பெற்றுள்ளது. ஒரு வருட காலத்தில் 28 சதவீதம் இறக்கமடைந்துள்ளது. அடிப்படை பகுப்பாய்வின் படி(Cash Flow – Fundamental Analysis), இன்போசிஸ் பங்கின் விலை ரூ. 900 – ரூ. 1,100 என்ற அளவில் அமைந்துள்ளது.

கவனிக்க: முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கும் முன் தகுந்த நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் முன்னிலையில் தங்களது முதலீட்டு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலே சொன்ன தகவல்கள் பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வுக்கான கற்றல் மட்டுமே.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம் – 7.80 சதவீதம் – மார்ச் 2023

நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம் – 7.80 சதவீதம் – மார்ச் 2023

India’s unemployment rate(CMIE Data) – 7.8 Percent in March 2023

நாட்டில் உள்ள 15 வயதுக்கு மேற்பட்ட சுமார் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான நபர்களை கொண்டு, அவர்களை நேரடியாக சந்தித்து கடந்த 30 நாட்களின் சராசரி அடிப்படையில், வேலைவாய்ப்பின்மை விகிதம் கணக்கிடப்படுகிறது. மாதந்தோறும் வெளியிடப்படும் இந்த அறிக்கையில் மாநிலங்கள் வாரியாகவும், நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் காணப்படும் வேலைவாய்ப்பின்மை விகிதத்தையும் எடுத்துரைக்கிறது. 

ஏற்கனவே வேலையிழந்தோர் தற்போதைய நிலையில் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனரா, வேலைக்கு செல்வதற்கான ஆர்வம் அவர்களிடம் காணப்படுகிறதா மற்றும் வேலை கிடைக்காததற்கான காரணம் என்ன போன்ற விவரங்களையும்(Consumer Pyramids Panel) இம்மதிப்பீடு கணக்கில் எடுத்து கொள்கிறது. 

நடப்பு 2023ம் ஆண்டின் மார்ச் மாத முடிவில் நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம்(Unemployment rate) 7.8 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது. நகர்ப்புறங்களில் 8.51 சதவீதமாகவும், இதுவே கிராமப்புறங்களில் 7.47 சதவீதமாகவும் வேலைவாய்ப்பின்மை விகிதம் உள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்தில் நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம் 7.45 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

2022-23ம் நிதியாண்டில் நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகபட்சமாக டிசம்பர் மாதத்தில் 8.30 சதவீதமாக இருந்துள்ளது. மிகக்குறைவான அளவாக செப்டம்பர் மாதத்தில் 6.43 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது. மார்ச் மாத விகிதத்தில் மாநிலங்கள் வாரியாக காணும் போது, ராஜஸ்தான், சிக்கிம், அரியானா, பீகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகமாக உள்ளது.

வளர்ந்த மாநிலங்களில் வேலைவாய்ப்பின்மை விகிதத்தை காணும் போது, தமிழ்நாடு, குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, உத்திரப்பிரதேசம், தெலுங்கானா, கேரளா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் 7 சதவீதத்திற்கு குறைவாக காணப்படுகிறது. 

நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தில்(GDP) மாநிலம் வாரியாக மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. இரண்டாம் மற்றும் மூன்றாமிடம் முறையே தமிழ்நாடு மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்கள் உள்ளது. நான்காம் மற்றும் ஐந்தாம் இடத்தில் கர்நாடகா மற்றும் உத்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் உள்ளது. ஆந்திரா மற்றும் தெலுங்கானா இரண்டு மாநிலங்களாக பிரிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ன்றி, வர்த்தக மதுரை 

வாழ்க வளமுடன்,

www.varthagamadurai.com

2022-23ம் நிதியாண்டுக்கான மியூச்சுவல் பண்ட் தனிநபர் வரி விகிதங்கள் எப்படி ?

2022-23ம் நிதியாண்டுக்கான மியூச்சுவல் பண்ட் தனிநபர் வரி விகிதங்கள் எப்படி ?

Income Tax rates for Mutual Fund Investments – Individuals – FY 2022-23 (AY 2023-24)

கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற நாட்டின் பட்ஜெட் தாக்கலில் வருமான வரி விகிதங்கள் சார்ந்த மாற்றங்கள் நிறைய சொல்லப்பட்டிருந்தது. நடப்பு 2022-23ம் நிதியாண்டுக்கான வரி விகிதத்தில் பரஸ்பர நிதி திட்டங்களின்(Mutual Funds) மூலம் கிடைக்கப்பெறும் வருவாய்க்கான வரி விகிதங்களும் அறிக்கையாக வெளியிடப்பட்டது.

மியூச்சுவல் பண்ட் திட்டங்களை பொறுத்தவரை உள்ளூர் முதலீட்டாளர்கள்(Resident) மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள்(NRI) என வரி விதிப்பு முறை தனித்தனியாக அமைந்துள்ளது. திட்டங்களின் அடிப்படையில் காணும் போது பங்கு சார்ந்த திட்டங்களுக்கும், பங்கு சாராத திட்டங்கள் என வரி விதிப்பு முறையும் வேறுபட்டுள்ளது.

2022-23ம் நிதியாண்டுக்கான, அதாவது 2023-24ம் மதிப்பீட்டு ஆண்டுக்கான வரி விகிதங்கள் குறுகிய கால மூலதன ஆதாயம்(Short term Capital Gains) மற்றும் நீண்டகால மூலதன ஆதாயம்(Long term Capital Gains) என இரண்டாக பிரிக்கப்படுகிறது. இங்கே சொல்லப்படும் காலம்(Short or long term) என்பது வருமான வரி விகிதங்களுக்கான கணக்கீட்டு காலம் மட்டுமே, அவை ஒரு குறிப்பிட்ட திட்டங்களில் மேற்கொள்ளப்படும் காலமல்ல. எனவே நாம் அடுத்த 30 வருடங்களுக்கு முதலீடு செய்யவிருந்தாலும், மூலதன ஆதாய  வரி என்பது நாம் நம் முதலீட்டை விற்பனை செய்யும் காலத்தினை பொறுத்து வரி விகிதங்கள் மாறுபடும்.

பொதுவாக பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் முதலீடு செய்த ஒரு வருடத்திற்குள் நாம் அதனை விற்கும் நிலையில், அவை குறுகிய கால மூலதன ஆதாயமாகவும், ஒரு வருடத்திற்கு மேலான விற்பனை நீண்டகால மூலதன ஆதாயமாகவும் சொல்லப்பட்டு வரி விதிக்கப்படும். இதுவே பங்கு சாராத திட்டங்களுக்கு(Debt Mutual Funds or other than Equity oriented schemes) முதலீடு செய்த மூன்று வருடத்திற்குள் விற்கும் நிலையில், அவை குறுகிய கால மூலதன ஆதாயமாகவும், மூன்று வருடத்திற்கு மேலான விற்பனை நீண்டகால மூலதன ஆதாயமாகவும் கணக்கிடப்பட்டு வரி விதிக்கப்படும்.

எஸ்.ஐ.பி.(SIP) முறையில் முதலீடு செய்கையில் ஒவ்வொரு மாதாந்திர அல்லது வாராந்திர முதலீடும், வரி விகிதத்தை பொறுத்தவரை தனித்தனி முதலீடாக கருதப்படும். உதாரணமாக ஜனவரி மாதத்தில் 5ம் தேதி செய்யப்பட்ட முதலீடு பின்னொரு காலத்தில் விற்கப்படும் போது, சொல்லப்பட்ட முதலீட்டு தேதியிலிருந்து(ஜனவரி 5) கணக்கிடப்படும். இதுவே பிப்ரவரி மாதம் 5ம் தேதி செய்யப்பட்ட முதலீடு, தனி முதலீடாக கருதப்பட்டு அவை பின்னொரு காலத்தில் விற்கப்படும் போது, காலத்தை சார்ந்து வரி விகிதங்கள் மாறுபடும். இந்த குழப்பங்கள் பெரும்பாலும் வரி சேமிப்பு சார்ந்த மியூச்சுவல் பண்ட் திட்டங்களில்(ELSS) முதலீடு செய்வோருக்கு ஏற்படும்.

 ஒரு முறை அல்லது ஆண்டுக்கொரு முறை மட்டும்(Lumpsum investment) செய்யப்படும் முதலீடாக இருக்கும் நிலையில், முதலீடு செய்யப்பட்ட தேதியிலிருந்து விற்பனை தேதியை கணக்கிடுகையில் சிரமம் இருக்காது. எஸ்.ஐ.பி. முறையில் செய்யப்படும் முதலீட்டிற்கு மட்டும் இந்த கவனம் தேவை. எனினும், வரி கணக்கீட்டினை பொறுத்தமட்டில் இன்றைய நிலையில் பெரும்பாலான மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் இந்த கணக்கீட்டு அறிக்கையை முதலீட்டாளர்களுக்கு இலவசமாக வழங்குகின்றன. எனவே வருமான வரி தாக்கல் செய்யும் போது இந்த அறிக்கையை பயன்படுத்தி கொள்ளலாம்.

2018ம் ஆண்டுக்கு முன்பிருந்து, நீங்கள் பங்குகள் அல்லது பங்கு சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்து வருகிறீர்களா ? (உங்களுக்கான பதிவு தான் இது)

உள்ளூர் முதலீட்டாளர்களுக்கு, பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில் குறுகிய கால மூலதன ஆதாய வரியாக 15 சதவீதமும், நீண்டகால மூலதன ஆதாய வரியாக 10 சதவீதமும் விதிக்கப்படும். நீண்டகால மூலதன ஆதாயத்தில் கிடைக்கப்பெறும் முதல் ரூ. 1 லட்சத்திற்கு வரி எதுவும் இல்லை என்பது கவனிக்கத்தக்கது. ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட நீண்டகால மூலதன ஆதாயத்திற்கு மட்டுமே 10 சதவீத வரியாகும்.

மியூச்சுவல் பண்ட் – தனிநபர் வரி விகிதங்கள் – நிதியாண்டு 2022-23 (மதிப்பீட்டு ஆண்டு 2023-24)

முதலீட்டு பிரிவு

தனிநபர் – உள்ளூர் முதலீட்டாளர் 

வெளிநாடு வாழ் இந்தியர் 

பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்கள் 
குறுகிய கால மூலதன ஆதாயம் 

15%

15%

நீண்டகால மூலதன ஆதாயம் 

10%*

10%*

பங்கு சாராத பரஸ்பர நிதி திட்டங்கள் 
குறுகிய கால மூலதன ஆதாயம் 

தனிநபர் வருமான வரி வரம்பின் அடிப்படையில் 

தனிநபர் வருமான வரி வரம்பின் அடிப்படையில் 

நீண்டகால மூலதன ஆதாயம் 

பணவீக்க விகித சரிக்கட்டலுக்கு பிறகு 20%

10% – (பட்டியலிடப்படாத)

20% – (பட்டியலிடப்பட்ட மற்றும் பணவீக்க விகித சரிக்கட்டலுடன்)

வர்த்தக மதுரை | www.varthagamadurai.com

* ஒரு லட்சம் ரூபாய் வரையிலான(குறிப்பிட்ட நிதியாண்டில்) லாபத்திற்கு வரி எதுவும் செலுத்த தேவையில்லை. ஒரு லட்சத்திற்கும் மேலான லாபத்திற்கு மட்டுமே 10 சதவீத வரி. 

இதுவே பங்கு சாராத பரஸ்பர நிதி திட்டங்களில் குறுகிய கால மூலதன ஆதாய  வரி, தனிநபர் ஒருவரின் வருமான வரி வரம்பின் அடிப்படையில்(Individual’s Income Tax Slab) அமைகிறது. நீண்டகால மூலதன ஆதாய வரியாக, பணவீக்க விகித சரிக்கட்டலுக்கு பிறகு (Indexation Benefit) 20 சதவீத வரி விதிக்கப்படுகிறது. பணவீக்க விகிதத்திற்கான சரிக்கட்டல் மதிப்பை(Cost Inflation Index) ஒவ்வொரு ஆண்டும் மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டு வருகிறது.  

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு, பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் குறுகிய கால மூலதன ஆதாய வரி 15 சதவீதமாகவும், நீண்டகால மூலதன ஆதாய வரி 10 சதவீதமாகவும் (ஒரு லட்சம் லாபத்திற்கு பிறகான தொகைக்கு) சொல்லப்பட்டுள்ளது. பங்கு சாராத திட்டங்களில் குறுகிய கால மூலதன ஆதாய வரி, தனிநபர் ஒருவரின் வருமான வரி வரம்பு அடிப்படையில் உள்ளது. நீண்டகால மூலதன ஆதாய வரியாக 10 சதவீதம் (பட்டியலிடப்படாத – Unlisted, No indexation benefit) மற்றும் 20 சதவீதமாக (Listed, With Indexation Benefit) சொல்லப்பட்டுள்ளது. 

முதலீட்டில் கிடைக்கப்பெறும் லாபத்திற்கு எவ்வளவு தொகையை வரியாக செலுத்த வேண்டுமென்பதை வரி ஆலோசகர் அல்லது பட்டய கணக்காளர்(Chartered Accountant) ஒருவரின் துணையுடன் கணக்கிடுவது நல்லது. 

கவனிக்க:

  • 2023ம் ஆண்டின் பிப்ரவரி மாத பட்ஜெட் அறிக்கையில், பங்கு சாராத பரஸ்பர நிதி திட்டங்களின் வரி முறையில் சில மாற்றங்களை மத்திய நிதியமைச்சகம் செய்துள்ளது. இந்த புதிய முறை வரும் ஏப்ரல் 1ம் தேதி, 2023 முதல் நடைமுறைக்கு வர உள்ளது.      
  • பங்கு சாராத பரஸ்பர நிதி திட்டங்கள் எனும் போது, சிறிய பங்களிப்பில் பங்குகளை கொண்டிருந்தாலும் அவ்வகையான திட்டங்கள்  வரிச்சட்டத்தில் பங்கு சாராத திட்டமாகவே சொல்லப்படுகிறது. வரும் ஏப்ரல் 1, 2023 முதல் பங்கு சாராத திட்டங்களில், பங்குகளின் பங்களிப்பு 35 சதவீதத்திற்கு குறைவாக இருந்தால், குறுகிய மற்றும் நீண்டகால மூலதன ஆதாய வரி, தனிநபர் ஒருவரின் வருமான வரம்பில் அமையும் என சொல்லப்பட்டுள்ளது.
  • இதுவே அத்திட்டத்தில் பங்குகளின் பங்களிப்பு 36 சதவீதம் முதல் 64 சதவீதம் வரை இருக்கும் பட்சத்தில், குறுகிய கால மூலதன ஆதாய வரியாக, தனிநபர் ஒருவரின் வருமான வரி வரம்பிலும், நீண்டகால மூலதன ஆதாய வரி என்பது பணவீக்க விகித சரிக்கட்டலுக்கு பிறகு 20 சதவீதமாகவும் கூறப்பட்டுள்ளது. 
  • 65 சதவீதத்திற்கும் மேல் பங்குகளின் பங்களிப்பை கொண்டிருக்கும் திட்டங்கள், பங்கு சார்ந்த திட்டங்களின் வரி விதிப்பு மற்றும் முதலீட்டு கால முறையை(Holding period) போலவே கொண்டிருக்கும். அதாவது ஒரு வருடத்திற்குள்ளான குறுகிய கால மூலதன ஆதாய வரி 15 சதவீதமாகவும், ஒரு வருடத்திற்கு மேற்பட்ட நீண்டகால மூலதன ஆதாய வரி 10 சதவீதமாகவும்(ஒரு லட்சம் லாபத்திற்கு பிறகான) இருக்கும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

நம்ம ‘சொட்டு நீலம்’ நிறுவனம் – ஜோதி லேப்ஸ் லிமிடெட்(உஜாலா)

நம்ம ‘சொட்டு நீலம்’ நிறுவனம் – ஜோதி லேப்ஸ் லிமிடெட்(உஜாலா)

Jyothy Labs Limited – Fundamental Analysis – Stocks

கேரள மாநிலத்தை சேர்ந்த திரு. எம்.பி. ராமச்சந்திரன் அவர்களால், கேரளாவை தலைமையிடமாக கொண்டு 1983ம் ஆண்டில் துவங்கப்பட்டது தான் ஜோதி லேப்ஸ் நிறுவனம் (Jyothy Laboratories). எப்.எம்.சி.ஜி.(FMCG) துறையில் தொழில் புரிந்து வரும் இந்நிறுவனம் ஆரம்பநிலையில் ஒரே ஒரு பொருளை மட்டும் உற்பத்தி செய்யும் நிறுவனமாக இருந்தது. இன்று ஆண்டுக்கு பில்லியன் ரூபாய் மதிப்பிலான வருவாயை கொண்டும், சுமார் 6,900 கோடி ரூபாய் சந்தை மதிப்பையும் கொண்ட நிறுவனமாக வளர்ச்சி பெற்றுள்ளது.

வீட்டு பராமரிப்பு, துணிமணிகள் மற்றும் தனிநபர் பராமரிப்பு ஆகிய பிரிவுகளில் தேவையான பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை மற்றும் ஏற்றுமதியில் ஈடுபட்டு வருகிறது. நாட்டின் பிரபல சொட்டு நீலமான, ‘உஜாலா’ உற்பத்திக்காக 1992ம் ஆண்டு சென்னையில் ஒரு உற்பத்தி ஆலையை துவக்கியது. துணிமணி பராமரிப்பில், ‘ Ujala, Henko, Mr.White மற்றும் More Light’ இதன் முக்கிய பிராண்டுகள். நாட்டின் துணிமணி பராமரிப்புக்கான பொருட்கள் பிரிவில், 81 சதவீத சந்தை மதிப்பை இந்நிறுவனம் மட்டுமே கொண்டுள்ளது.

நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாயில் துணிமணி பராமரிப்பு பிரிவு மட்டும் 37 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளது. பாத்திரம் கழுவும் பிரிவில்(Dish Wash) இதன் ஒட்டுமொத்த வருவாயில் 38 சதவீதத்தையும், தனிநபர் பராமரிப்பு பிரிவில் 10 சதவீத பங்களிப்பையும் கொண்டுள்ளது. பாத்திரம் கழுவும் பிரிவில், ‘Exo, Prill’ இதன் முக்கிய பிராண்டுகள். இந்த துறையில் 11 சதவீத பங்களிப்பை ஜோதி லேப்ஸ் நிறுவனம் தன்னகத்தே வைத்துள்ளது. இந்த பிரிவில் நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நிறுவனமாகவும் ஜோதி லேப்ஸ் வலம் வருகிறது.

தனிநபர் பராமரிப்பு பிரிவில், ‘Margo, Neem Active மற்றும் Fa’ இதன் பிரபல பிராண்டு பொருட்கள். வீட்டு பூச்சிக்கொல்லி சார்ந்த பொருட்களையும் இந்நிறுவனம் உற்பத்தி செய்து விற்பனை செய்கிறது. இந்த பிரிவில் 21 சதவீத பங்களிப்பை ஜோதி லேப்ஸ் வைத்துள்ளது. ‘Maxo கொசுவர்த்தி, T-Shine Cleaner, Maya ஊதுபத்திகள்’ ஆகியவை இதன் பிராண்டுகளாக உள்ளன. 

நிறுவனத்தின் உற்பத்தி பொருட்கள் வாடிக்கையாளர்களுக்கு உடனடியாக சேர, சரக்கு மேலாண்மை அமைப்பையும்(Freight Management System) இந்நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது. தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் நான்காம் தொழில் புரட்சியின் கீழ் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களையும் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக ஜோதி லேப்ஸ் முதலீடு செய்துள்ளது. 

2007ம் ஆண்டு மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தையில் ஜோதி லேப்ஸ் லிமிடெட் நிறுவனம் பொது நிறுவனமாக பட்டியலிடப்பட்டது. தற்போது நிறுவனத்தின் தலைமையிடமாக மும்பை உள்ளது. இத்துறையில் புதிதாக நுழையும் மற்றும் ஏற்கனவே சந்தையில் சிறந்து விளங்கும் துறை சார் நிறுவனங்களை இந்நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது. 2011ம் ஆண்டில் கென்கேல் இந்தியா(Henkel India) நிறுவனத்தை ஜோதி லேப்ஸ் நிறுவனம் வாங்கியது குறிப்பிடத்தக்கது.     

ஜோதி லேப்ஸ் நிறுவனத்தின் பிராண்டு பொருட்களுக்கு, பிரபல கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கர், திரைப்பட துறையில் உள்ள நடிகைகள் ஷில்பா  ஷெட்டி மற்றும் மாதுரி தீக்சித் ஆகியோர் விளம்பர தூதர்களாக இருந்துள்ளனர். நிறுவனத்தின் தற்போதைய தலைவராக திரு. ரா. லட்சுமி நாராயணன் அவர்களும், நிர்வாக இயக்குனராக எம்.ஆர். ஜோதி அவர்களும் உள்ளனர். நாட்டின் நம்பிக்கைக்குரிய பிராண்டுகளில் ஜோதி லேப்ஸ் நிறுவனத்தின் பொருட்கள் இன்றளவும் இருப்பது கவனிக்கத்தக்கது.

2021-22ம் நிதியாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.2,196 கோடியாகவும், இயக்க லாபம்(Operating Profit) 248 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. இயக்க லாப விகிதம் சராசரியாக வருடத்திற்கு 12-15 சதவீதம் என்ற அளவில் உள்ளது. சொல்லப்பட்ட ஆண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ. 159 கோடி. செப்டம்பர் 2022 காலாண்டின் படி, நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு ரூ.1,428 கோடி. 

ஜோதி லேப்ஸ் நிறுவனர்களின் பங்களிப்பு 63 சதவீதமாக பங்குச்சந்தையில் உள்ளது. உள்ளூர் நிறுவன முதலீட்டாளர்களிடம் 17 சதவீத பங்குகளும், அந்நிய நிறுவன முதலீட்டாளர்களிடம் 13 சதவீத பங்குகளும் உள்ளது. கடன் தன்மை குறைவாகவும், பங்கு மூலதனம் மீதான வருவாய் 14 சதவீதமாக(5 வருட காலத்தில்) இருப்பதும் சாதகமான நிலையாக பார்க்கப்படுகிறது.     

ஜோதி லேப்ஸ் நிறுவன பங்கின் விலை கடந்த ஒரு வருட காலத்தில் குறைந்தபட்ச விலையாக பங்கு ஒன்றுக்கு ரூ.134 ஆகவும், அதிகபட்ச விலையாக 223 ரூபாய் வரையிலும் வர்த்தகமாகியுள்ளது. 2020ம் ஆண்டின் கொரோனா ஊரடங்கு துவக்கத்தில் இந்த பங்கின் விலை 100 ரூபாய்க்கும் கீழ் வர்த்தகமானது குறிப்பிடத்தக்கது. பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வு மற்றும் பணப்பாய்வு(Discounted Cash Flow) முறையில் மதிப்பிடும் போது, ஜோதி லேப்ஸ் நிறுவனத்தின் பங்கு ஒன்றின் விலை ரூ. 130-160 என்ற சராசரியை பெறும்.

கவனிக்க: முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கும் முன் தகுந்த நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் முன்னிலையில் தங்களது முதலீட்டு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலே சொன்ன தகவல்கள் பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வுக்கான கற்றல் மட்டுமே.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

2022ம் ஆண்டின் நான்காம் காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி –  4.4 சதவீதம்

2022ம் ஆண்டின் நான்காம் காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி –  4.4 சதவீதம் 

India’s GDP growth of 4.4 Percent in Q4 (December Quarter) 2022

2022ம் ஆண்டின் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான நான்காம் காலாண்டில்(Q3FY23) நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 4.4 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய செப்டம்பர் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 6.3 சதவீதமாக இருந்துள்ளது. 2022-23ம் நிதியாண்டுக்கான ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் காலாண்டில் நாட்டின் முதலீடு 8.3 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி பெற்றுள்ளது. இவற்றில் தனியார் முதலீட்டு செலவினம் 61.6 சதவீதமாக இருக்கிறது. இது 2021-22ம் ஆண்டின் டிசம்பர் காலாண்டினை காட்டிலும் குறைவே. அதிகரித்து வரும் பணவீக்க விகிதத்தால், வங்கிகளின் வட்டி விகிதமும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாகவே தனியார் பங்களிப்பிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

அதே வேளையில் அரசு தரப்பில் இம்முறையும் முதலீட்டு செலவினம் பெரிதாக இல்லை. கொரோனா பெருந்தொற்று காரணமாக ஊரடங்கு காலத்தில் அரசின் பங்களிப்பு அதிகமாக இருந்தததை அடுத்து, கடந்த சில காலாண்டுகளாக அதனை குறைத்து வந்துள்ளது. நாட்டின் ஏற்றுமதி 11.3 சதவீதமும், இறக்குமதி 10.9 சதவீதம் என்ற அளவிலும் வளர்ச்சி பெற்றுள்ளது. இருப்பினும், இதற்கு முந்தைய காலாண்டில் ஏற்றுமதி 12.3 சதவீதமாகவும், இறக்குமதி 25.9 சதவீதமாகவும் வளர்ச்சி பெற்றிருந்தது.

உற்பத்தி துறை இரண்டாவது முறையாக இறக்கத்திலும், நிதி மற்றும் வீட்டுமனை துறை ஓரளவு வளர்ச்சி பெற்றிருந்த போதிலும், சற்று சுணக்கமாகவே காணப்பட்டுள்ளது. இது போன்ற மந்தநிலை போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு துறையிலும் ஏற்பட்டுள்ளது. விவசாயம் மற்றும் கட்டுமானம் ஆகிய துறைகள் ஏற்றம் பெற்று குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்துள்ளது.

நாட்டின் நுகர்வோர் செலவினம்(Consumer spending) டிசம்பர் 2022 காலாண்டில் ரூ. 24.77 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. நாட்டின் நிதி பற்றாக்குறை(Fiscal Deficit) நடப்பு  ஜனவரி மாத முடிவில் 11.91 லட்சம் கோடி ரூபாயாக இருந்துள்ளது. இது பட்ஜெட் மதிப்பில் 68 சதவீதமாகும். 2022-23ம் நிதியாண்டுக்கான நாட்டின் நிதி பற்றாக்குறை இலக்கு 17.55 லட்சம் கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. 

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

நாட்டின் ஜனவரி மாத நுகர்வோர் விலை பணவீக்கம் – 6.52 சதவீதம்

நாட்டின் ஜனவரி மாத நுகர்வோர் விலை பணவீக்கம் – 6.52 சதவீதம் 

India’s CPI Inflation rose to 6.52 Percent in the month of January 2023

கடந்த 2022ம் ஆண்டின் செப்டம்பர் மாதத்திற்கு பிறகு, தொடர்ச்சியாக மூன்று மாதங்கள் குறைந்து வந்த நாட்டின் சில்லரை விலை பணவீக்கம்(Consumer Price Index – CPI) நடப்பாண்டின் ஜனவரி மாதத்தில் 6.52 சதவீதமாக அதிகரித்துள்ளது. எனினும் சொல்லப்பட்ட பணவீக்க விகித அதிகரிப்பு கடந்த ஏப்ரல் 2022ல் (7.79%) காணப்பட்ட அளவை விட குறைவே. 2022ம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் நாட்டின் சில்லரை விலை பணவீக்க விகிதம் 6.01 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

நாட்டின் சில்லரை விலை அல்லது நுகர்வோர் விலை பணவீக்கத்தில் உணவுப்பொருட்களின் பங்களிப்பு மட்டும் 45.86 சதவீதமாக இருக்கிறது. போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு 8.59 சதவீத பங்களிப்பையும், சுகாதாரம் 5.89 சதவீதமும், கல்வி 4.46 சதவீத பங்களிப்பையும் கொண்டுள்ளது. வீட்டுமனை துறை 10.07 சதவீதத்தையும், ஒளி மற்றும் எரிபொருட்கள் 6.84 சதவீதத்தையும், துணிமணிகள் மற்றும் காலணிகள் 6.53 சதவீத பங்களிப்பையும் நுகர்வோர் விலை பணவீக்கத்தில் கொண்டுள்ளது.

ஜனவரி 2022ம் மாதத்தில் உணவுப்பொருட்களின் விலை 5.94 சதவீதமாக அதிகரித்துள்ளதன் காரணமாக சொல்லப்பட்ட மாதத்தின் நுகர்வோர் விலை பணவீக்கமும் உயர்ந்துள்ளது. இது போல வீட்டுமனை 4.62 சதவீதமும், புகையிலை சார்ந்த பொருட்கள் 3.07 சதவீதமும் அதிகரித்துள்ளது. அதே வேளையில் ஒளி மற்றும் எரிபொருட்கள், துணிமணிகள் மற்றும் காலணிகளின் விலையில் பெருமளவில் மாற்றமில்லாமல் சற்று குறைந்துள்ளது.

சொல்லப்பட்ட ஜனவரி மாத பணவீக்க விகிதம், சந்தை வல்லுநர்கள் எதிர்பார்த்த அளவினை காட்டிலும் சற்று உயர்ந்துள்ளது. இதே மாதத்தில் நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம்(Unemployment rate) கடந்த நான்கு மாதங்களில் இல்லாத அளவாக குறைந்துள்ளது. ஜனவரி மாத வேலைவாய்ப்பின்மை விகிதம் 7.14 சதவீதமாக இருந்துள்ளது. இது கிராமப்புறங்களில் 6.48 சதவீதமாகவும், நகர்ப்புறங்களில் 8.55 சதவீதமாகவும் இருக்கிறது.

நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம், மாநிலங்கள் வாரியாக காணும் போது அரியானா, ராஜஸ்தான், ஜம்மு-காஸ்மீர், டெல்லி, அசாம், திரிபுரா மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் அதிகபட்சமாக உள்ளது. குறைவான அளவாக மத்திய பிரதேசம், ஒடிசா, தமிழ்நாடு மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் காணப்படுகிறது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

ஊக வணிகத்தில் நட்டமடையும் இந்திய பங்கு வர்த்தகர்கள் – செபியின் 2022ம் ஆண்டின் சிறப்பு அறிக்கை

ஊக வணிகத்தில் நட்டமடையும் இந்திய பங்கு வர்த்தகர்கள் – செபியின் 2022ம் ஆண்டின் சிறப்பு அறிக்கை 

Individual Traders engaged in Equity F&O Segment – SEBI Analysis Report 

பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி(Securities and Exchange Board of India) கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, மத்திய பொருளாதார மற்றும் கொள்கை பகுப்பாய்வு துறையின் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. ஊக வணிக(Futures and Options) பிரிவில் 2022ம் நிதியாண்டில் தனிநபர் வர்த்தகர்கள் அடைந்த லாப-நட்ட புள்ளிவிவரங்களை மேற்கோள் காட்டியிருந்தது.

2022ம் நிதியாண்டில் சுமார் 45 லட்சம் தனிநபர் வர்த்தகர்கள் இந்திய பங்குச்சந்தை ஊக வணிகத்தில் ஈடுபட்டுள்ளனர். இது 2019ம் நிதியாண்டினை ஒப்பிடுகையில் 500 சதவீத வளர்ச்சி என்றும், 30 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்களின் எண்ணிக்கை 39 சதவீதம் எனவும் சொல்லப்பட்டுள்ளது. 20 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்களின் எண்ணிக்கை 36 சதவீதமாக இருந்துள்ளது.

வர்த்தகத்தில் ஈடுபட்ட தனிநபர் பிரிவில் 80 சதவீதத்திற்கு மேல் ஆண்கள் என்றும், ஊக வணிகத்தில் ஈடுபடும் 10 நபர்களில் 9 பேர் நட்டமடைவதாகவும் குறிப்பிட்டுள்ளது. அதாவது ஊக வணிகத்தில் ஈடுபடும் வர்த்தகர்களில் 89 சதவீதம் பேர் தங்களது முதலீட்டை இழந்துள்ளனர். இவர்களது முதலீட்டு இழப்பு சராசரியாக 50,000 ரூபாய் வரை இருந்துள்ளது. 

2022ம் நிதியாண்டில் ஊக வணிகத்தில் லாபமீட்டியவர்களின் எண்ணிக்கை 11 சதவீதமாக இருந்த போதிலும், அவர்களது அதிகபட்ச சராசரி லாபம் ரூ.1.5 லட்சம் வரை இருந்துள்ளது. ஊக வணிகத்தில் Index Options பிரிவில் 89 சதவீதம் பேரும், Index Futures பிரிவில் 11 சதவீதம் பேரும் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இவர்களின் வயது பெரும்பாலும் 20-30 வயது வரம்பில் இருந்துள்ளது.

அதே வேளையில் Index Options பிரிவில் ஈடுபட்டிருந்த 89 சதவீதம் பேரில் 82 சதவீதம் பேர் தங்களது முதலீட்டை இழந்துள்ளனர். இந்த பிரிவில் வர்த்தகம் செய்பவர்களின் எண்ணிக்கை 2019ம் ஆண்டை ஒப்பிடும் போது 2022ம் ஆண்டு எட்டு மடங்கு உயர்ந்துள்ளது. Index Futures பிரிவில் ஈடுபட்டிருந்தவர்களில் 74 சதவீதம் பேரும்(சராசரி இழப்பு: ரூ. 1 லட்சம்), Stock Futures பிரிவில் 67 சதவீதம் பேரும்(சராசரி இழப்பு: ரூ. 2.1 லட்சம்) முதலீட்டில் இழப்பை சந்தித்துள்ளனர். இந்த பிரிவில் லாபம் ஈட்டியவர்களின் சராசரி தொகை ரூ. 2.4 லட்சமாகும். இவர்களும் முதல் 5 சதவீத நிலையில் உள்ள Active Traders ஆவர்.

ஊக வணிகத்தில் லாபம் ஈட்டியவர்களில் பெரும்பாலானோர் தங்களது லாபத்தில் 15 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை பரிவர்த்தனை கட்டணங்களுக்காக(Transaction cost) செலவளித்துள்ளனர். சொல்லப்பட்ட தனிநபர் வர்த்தகர்களில் இந்து கூட்டு குடும்பம் மற்றும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களும் அடங்குவர். ஊக வணிகத்தில் 2022ம் ஆண்டில் ஈடுபட்ட 45 லட்சம் வர்த்தகர்களில் பெருநகரங்களை சாராதோர்(Except Tier I & Tier II) எண்ணிக்கை மட்டும் 81 சதவீதமாக உள்ளது. திரட்டப்பட்ட தகவல்கள் அனைத்தும் நாட்டின் முன்னிலையில் உள்ள முதல் 10 பங்கு தரகர்களிடம்(Brokers) இருந்து என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

டேர்ம் இன்சூரன்ஸ்க்கான காப்பீட்டு அளவு (HLV) எவ்வாறு கணக்கிடப்படுகிறது ?

டேர்ம் இன்சூரன்ஸ்க்கான காப்பீட்டு அளவு (HLV) எவ்வாறு கணக்கிடப்படுகிறது ?

How is the Sum assured(HLV) calculated for Term Insurance Plans ?

நாட்டில் இருபதுக்கும் மேற்பட்ட ஆயுள் காப்பீட்டு(Life Insurance) நிறுவனங்கள் தற்போது உள்ளன. எல்.ஐ.சி. இந்தியா நிறுவனம் தவிர அனைத்து ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களும் தனியார் நிறுவனங்களாகும். இன்றைய பொருளாதார வாழ்வில் காப்பீட்டின் தேவை குறித்து பலர் புரிந்து கொண்டிருந்தாலும், 2022ம் ஆண்டின் பொருளாதார ஆய்வறிக்கை படி, 100ல் மூன்று பேர் மட்டுமே காப்பீட்டை எடுத்துள்ளனர். இந்த மூன்று பேர்களும் தங்களது வருமானத்திற்கு ஏற்ப(Income Replacement) காப்பீட்டு அளவை எடுத்துள்ளார்களா என கேட்டால், அது தான் இல்லை.

நம்மில் பெரும்பாலோர் காப்பீட்டு திட்டத்தை சேமிப்பாக கருதுவதால் தான், தங்களது வருமானத்தை போல பல மடங்குகளில் காப்பீட்டு அளவை தேர்ந்தெடுப்பதில்லை. குறைந்த தொகையில்(Premium) அதிக காப்பீட்டு அளவை ஏற்படுத்த இன்றைய நிலையில் டேர்ம் காப்பீட்டு திட்டத்தை தவிர்த்து வேறு எந்த திட்டமும் அமையவில்லை எனலாம். 

காப்பீடு என்பது ஒரு சேமிப்பல்ல, அது ஒரு செலவு. நமது வாகனத்திற்கு, வீட்டிற்கு, தொழிலுக்கு எடுக்கப்படும் காப்பீட்டை போல தான் டேர்ம் காப்பீடு திட்டமும். “நான் கட்டிய ப்ரீமியத்தொகைக்கு முடிவில் என்ன கொடுப்பீர்கள் என டேர்ம் காப்பீட்டை நீங்கள் கேட்டால், நீங்கள் இல்லாத நிலையில் உங்களது வருமானத்திற்கு மாற்றாக உங்களது குடும்பத்தை பொருளாதார ரீதியாக நான் பாதுகாப்பேன்” என்பது தான்.

டேர்ம் இன்சூரன்ஸ்(Term Insurance) நாம் நினைப்பது போல அவ்வளவு எளிதில் கிடைக்கப்பெறுவதில்லை. கொரோனா பெருந்தொற்றுக்கு பின்பு டேர்ம் காப்பீடு திட்டத்தின் ப்ரீமியத்தொகையும் அதிகரித்து விட்டது, டேர்ம் காப்பீட்டை பெறுவதற்கான நிபந்தனைகளும் கடுமையாக்கப்பட்டது. இருப்பினும், அதன் தேவையை நாம் புரிந்து கொண்டு நமது வருமானத்திற்கு ஏற்றாற் போல, தேவையான காப்பீட்டு அளவை பெறுவது அவசியம். 

சமீபத்திய தரவின் படி, ஆயுள் காப்பீட்டை பெறுவோரில் மூன்றில் ஒருவர் மட்டுமே டேர்ம் காப்பீட்டு திட்டத்தை எடுத்துள்ளனர். டேர்ம் காப்பீடு திட்டத்தை எந்தளவில் பெறலாம் என்பதை காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையத்தின்(IRDAI) ஒப்புதல் படி, இன்சூரன்ஸ் நிறுவனங்கள் நிர்ணயித்துள்ளது. பொதுவாக நமது வயது மற்றும் ஆண்டு வருமானத்தின் அடிப்படையில் இது அமையும்.

வருமானத்திற்கான மாற்று முறை – Human Life Value(HLV):

ஒரு தனிநபரின் எதிர்கால வருவாயின் தற்போதைய மதிப்பு தான் HLV(Human Life Value). எதிர்காலத்தில் ஒரு தனிநபர் ஆண்டுக்கு எவ்வளவு சம்பாதிக்கலாம் மற்றும் அவர் இல்லாத காலத்தில் தனது குடும்பத்தில் உள்ளோரை பொருளாதாரம் சார்ந்து பாதுகாக்க தேவையான தொகையை இன்றைய மதிப்பில் கணக்கிட வேண்டும். 

HLV = (1 + Investment rate) / (1 + Increment or Income growth rate) – 1

Alternative and Simple in terms, HLV = (Annual Income of an Individual) / (ROI in the Market)

*ROI – Rate of Interest 

இதனை சுருக்கமாக, அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் ஒருவரின் தற்போதைய ஆண்டு வருமானத்தின் மடங்குகளில் சொல்லப்படுகிறது. இதனை டேர்ம் காப்பீட்டை வழங்கும் நிறுவனங்களும் தங்களது தரவு அறிக்கையில் வெளியிட்டுள்ளது. மடங்குகளின் எண்ணிக்கை நிறுவனத்திற்கு நிறுவனம் மாறுபடலாம். ஆனால் பெரும்பாலும் அவை ஒத்த அளவில் தான் இருந்துள்ளது. 

டேர்ம் காப்பீட்டு அளவை பெற தேவையான இரண்டு முக்கிய காரணிகள்:

  • ஒருவரின் வயது 
  • ஆண்டு வருமானம் (சில நேரங்களில் கடந்த மூன்று ஆண்டுகளின் சராசரி வருமானம்)
  • இதர காரணிகள் – கடனையும் சேர்த்து ஆகும் ஆண்டு செலவு, முன்னர் எடுத்திருக்கும் காப்பீட்டின் அளவு(Existing Life Cover)

உதாரணத்திற்கு 30 வயது நிரம்பிய குமார் என்பவர் ஆண்டுக்கு 8 லட்ச ரூபாயை வருமானமாக கொண்டுள்ளார். 55 வயதில் பணியிலிருந்து ஓய்வு பெற விரும்பும் குமார், ஓய்வுக்கு முன்னரே தான் இறந்து விட்டால் தனது வருமானத்திற்கு நிகரான காப்பீட்டு அளவை தனது குடும்பத்திற்கு அளிக்க விரும்புகிறார். அப்படியெனில் தோராயமாக அவர் எடுத்து கொள்ள வேண்டிய டேர்ம் காப்பீட்டின் அளவு 1.15 கோடி ரூபாய்(Sum Assured or Coverage).

இங்கே நாம் குமாருக்கான கடன் தொகை எவ்வளவு, தனது குடும்ப உறுப்பினர்களின் நிதி இலக்குகளுக்கான எதிர்கால தொகை எவ்வளவு என்பதனை கணக்கில் கொள்ளவில்லை. இதனை கணக்கில் எடுக்கும் போது, காப்பீட்டு அளவு அதிகரிக்கலாம். 

HLV முறையை கொண்டு நாம் கணக்கிட்டாலும், காப்பீட்டு நிறுவனங்கள் தங்களுக்கென ஒருவருக்கு அதிகபட்சம் அனுமதிக்கப்பட வேண்டிய தொகையை கூறியுள்ளது. இந்த தொகை தனிநபர் ஒருவரின் வயது மற்றும் வருமானத்திற்கு தகுந்தாற் போல மாறுபடும்.

டேர்ம் காப்பீட்டுக்கு அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச அளவு (மடங்குகளில்):

வயது வரம்பு  மடங்குகள்* 
18 முதல் 35 வயது வரை  25
36 முதல் 40 வயது வரை  20
41 முதல் 45 வயது வரை  15
46 முதல் 50 வயது வரை  12
51 முதல் 55 வயது வரை  10
56 முதல் 65 வயது வரை  5

 

(* ஒவ்வொரு இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கும் மாறுபடலாம்)

மேலே உள்ள தரவின் படி, குமாருக்கு அதிகபட்சமாக அவரது ஆண்டு வருமானத்தை போல, 25 மடங்குகளின் அளவில் காப்பீடு கிடைக்க கூடும். ( ரூ. 8 லட்சம் X 25 மடங்குகள் = 2 கோடி ரூபாய்)

கவனிக்க:

  • டேர்ம் காப்பீட்டை பெற இன்று பெரும்பாலான இன்சூரன்ஸ் நிறுவனங்கள், தனிநபர் ஒருவரின் வருமான ஆதாரத்தை அவசியமான ஒன்றாக பார்க்கிறது. இதற்கான முக்கிய ஆவணமாக கடந்த சில வருடங்களின் வருமான வரி தாக்கல்(Income Tax Returns) ஆவணங்கள், கடந்த சில மாதங்களின் சம்பள விவரங்கள்(Pay Slips) மற்றும் கடந்த ஒரு வருடத்திற்கான வங்கி அறிக்கை(Bank Statement).
  • புகைப்பிடித்தல் / மதுப்பழக்கம் இருக்கும் நிலையில் அதற்கான ப்ரீமியத்தொகை அதிகரிக்கலாம். சில சமயங்களில் காப்பீட்டை பெறுவதில் சிக்கல் ஏற்படலாம்.
  • டேர்ம் காப்பீட்டை பெறுவதற்கு மருத்துவ பரிசோதனை அவசியமாகிறது. உடல்நலத்தில் ஏதேனும் சிக்கல் இருந்தால் ப்ரீமியத்தொகை அதிகரிக்கப்படலாம் அல்லது காப்பீடு நிராகரிக்கப்படலாம்.
  • ஏற்கனவே வேறொரு இன்சூரன்ஸ் நிறுவனத்தில் டேர்ம் காப்பீட்டை பெற்றிருந்தாலோ அல்லது காப்பீடு நிராகரிக்கப்பட்டிருந்தாலோ, தற்போதைய இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பரிசீலனைக்கு பின்பு தான் காப்பீடு வழங்கலாமா, வேண்டாமா என்பதனை முடிவெடுக்கும்.
  • இன்று மாத சம்பளதாரர்களை விட, பெரும்பாலும் சுய தொழில் செய்பவர்களுக்கே டேர்ம் காப்பீடு நிராகரிக்கப்படுகிறது. இதற்கான காரணமாக சொல்லப்படுவது வருமானத்தின் விவரங்களை சரியாக பராமரிக்காமை அல்லது அதிக வருவாய் இருந்தும் முறையாக வருமான வரி தாக்கல் செய்யாதிருப்பது. 
  • டேர்ம் காப்பீட்டை இளவயதில்(சம்பாதிக்க ஆரம்பித்த சில வருடங்களில்) எடுக்கும் போது, அதற்கான ப்ரீமியத்தொகையும் அதிகரிக்கும். சரியான காப்பீட்டு அளவை சரியான நேரத்தில் அதிகரித்து கொள்வது அவசியம். தாமதமாக எடுக்கும் போது, உடல்நலம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படும் நிலையில் நமக்கான காப்பீட்டு அளவு கிடைக்காமல் போகலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com