நடப்பாண்டின் மூன்றாம் காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.6 சதவீதம்

நடப்பாண்டின் மூன்றாம் காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.6 சதவீதம் 

India’s economic growth in the third quarter of the current year was 7.6 Percent

நாட்டின் பொருளாதாரத்தில் முக்கியமான மற்றும் வேகமாக வளரும் துறைகளாக சேவைகள், வர்த்தகம், உணவு மற்றும் தங்கும் விடுதிகள், போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு, நிதி, காப்பீடு மற்றும் வீட்டுமனை ஆகியவை உள்ளன. 

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சேவைத்துறையின்(Services Sector) பங்களிப்பு மட்டும் 60 சதவீதத்திற்கு மேலாக உள்ளது. உற்பத்தித் துறை 15 சதவீத பங்களிப்பையும், விவசாயத் துறை(விவசாயம், மீன் மற்றும் வனவியல்) 12 சதவீதமும், கட்டுமானம் 8 சதவீத பங்களிப்பையும் நாட்டின் உற்பத்தியில் கொண்டிருக்கிறது. விவசாயத் துறை 12 சதவீத பங்களிப்பை கொண்டிருந்தாலும், நாட்டின் மொத்த தொழிலாளர்களின் சக்தியில்(Employment) 50 சதவீத பங்களிப்பை இத்துறை தான் வழங்கி வருகிறது.

நடப்பாண்டின் மூன்றாம் காலண்டான ஜூலை முதல் செப்டம்பர் 2023 வரையிலான காலத்தில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP) வளர்ச்சி 7.6 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது. முன்னர் மத்திய ரிசர்வ் வங்கி நாட்டின் பொருளாதார வளர்ச்சி சொல்லப்பட்ட காலத்தில் 6.5 சதவீதமாக இருக்கும் என மதிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

சந்தை வல்லுநர்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.8 சதவீதமாக அமையலாம் என எதிர்பார்த்திருந்த நிலையில், தற்போது இது 7.6 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது. உற்பத்தித் துறை சுமார் 13.9 சதவீதம் உயர்ந்தும், கட்டுமானம் 13.3 சதவீதமாகவும், பயன்பாடுகள் 10.1% ஆகவும், நிதி, வீட்டுமனை மற்றும் தொழில்முறை சேவைகள் 6 சதவீதம் என அதிகரித்த நிலையில் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வலுசேர்த்துள்ளது.

அதே வேளையில் பருவ மழை மற்றும் காலநிலை மாற்றங்களால், விவசாயத் துறை சொல்லப்பட்ட காலத்தில் 1.2 சதவீதம் மட்டுமே வளர்ந்துள்ளது. செலவுகளை பொறுத்தவரை ஜூலை – செப்டம்பர் 2023 காலாண்டில் அரசின் செலவினம் 12.4 சதவீதம் அதிகரித்துள்ளது. நாட்டின் உட்கட்டமைப்பு செலவுகளுக்கு மத்திய மற்றும் மாநில அரசாங்கத்தின் நிதி பங்களிப்பின் மூலதன உருவாக்கம்(Gross Fixed Capital Formation) 8 சதவீதத்திலிருந்து தற்போது 11 சதவீதமாக அதிகரித்துள்ளது. 

மூன்றாம் காலாண்டில் நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சி 4.3 சதவீதமாகவும், இறக்குமதி 16.7 சதவீதமாக அதிகரித்தும் காணப்படுகிறது. அதே வேளையில் தனியார் நிறுவனங்களின் செலவு பங்களிப்பு 3.1 சதவீதமாக குறைந்துள்ளது. 

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.