Tag Archives: best funds in 2024

2024ம் ஆண்டில் முதலீடு செய்ய சிறந்த ஐந்து மியூச்சுவல் பண்ட் திட்டங்கள் – உங்களுக்காக !

2024ம் ஆண்டில் முதலீடு செய்ய சிறந்த ஐந்து மியூச்சுவல் பண்ட் திட்டங்கள் – உங்களுக்காக !

Top 5 Funds for you to invest in 2024 – Mutual Fund Investments

ஆசியாவின் மிகப் பழமையான பங்குச்சந்தையான மும்பை பங்குச்சந்தை(Bombay Stock Exchange – BSE) 70,000 புள்ளிகளை இன்று(11-12-2023) எட்டியது. மும்பை பங்குச்சந்தையின் முக்கிய குறியீடான சென்செக்ஸ்(BSE Sensex) கடந்த 1979ம் ஆண்டு வாக்கில், ‘100’ என்ற அடிப்படை புள்ளிகளை கொண்டு வர்த்தகமாக துவங்கியது. ஜூலை 2023 மாத நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தையின் சந்தை மூலதன மதிப்பு 3.8 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய ரூபாயில் 302 லட்சம் கோடி).

கடந்த 2006ம் ஆண்டில் சென்செக்ஸ் தனது 10,000 புள்ளிகளையும், 2007ம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் 20,000 புள்ளிகள் என்ற இலக்கையும், 2017ம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் 30,000 என்ற புள்ளிகளையும் கடந்தது. அடுத்த ஆறு வருடங்களில் இரு மடங்காக மாறிய இந்த குறியீடு தற்போது 70,000 புள்ளிகள் என்ற நிலையையும் அடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

முன்னொரு காலத்தில் இந்திய பங்குச்சந்தைக்கு தேவையான முதலீடு, பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்து மட்டுமே வர வேண்டிய நிலை இருந்தது. ஆனால் இன்று உள்ளூர் நிறுவன முதலீடுகள் மட்டுமே அளப்பரியது. குறிப்பாக பரஸ்பர நிதிகள் என்றழைக்கப்படும் மியூச்சுவல் பண்ட் வாயிலாக இந்திய பங்குச்சந்தைக்கு வந்த முதலீடுகள் லட்சம் கோடிகளில்.

செபி(SEBI) ஒழுங்குமுறை ஆணையத்தின் கீழ் கடந்த 1995ம் ஆண்டு துவங்கப்பட்ட ஆம்பி / ஆம்ஃபை(AMFI – Association of Mutual Funds in India) என்ற லாப நோக்கமில்லா நிறுவனத்தால் தான் இந்தியாவில் மியூச்சுவல் பண்ட் வரையறைகளும், அதன் சொத்து மேலாண்மை நிறுவனங்களும்(Asset Management Companies) நிர்வகிக்கப்படுகிறது. 

தற்போது உள்நாட்டில் 40க்கும் மேற்பட்ட மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள்(AMC) பரஸ்பர நிதித்திட்டங்களின் வாயிலாக முதலீடுகளை பெறுகிறது. இந்த முதலீடுகள் பங்குகள், கடன் பத்திரங்கள், தங்கம், ரியல் எஸ்டேட் துறை, இன்னபிற பிரிவுகளிலும் பிரித்து முதலீடு செய்யப்படுகிறது. சமீபத்திய ஆம்ஃபை தரவின் படி, இந்திய மியூச்சுவல் பண்ட் துறை நிர்வகிக்கும் சொத்து மதிப்பு 49.04 லட்சம் கோடி ரூபாய் (நவம்பர், 2023). மியூச்சுவல் பண்ட் திட்டத்தின் கீழ் கணக்கு துவங்கியவர்களின் எண்ணிக்கை மட்டும் 16.18 கோடி (Folios). இவற்றில் சிறு முதலீட்டாளர்களின் சார்பாக துவங்கப்பட்ட கணக்குகளின் எண்ணிக்கை 12.92 கோடி.

பங்குச்சந்தையில் நேரடியாக முதலீடு செய்து கண்காணிக்க நேரமில்லை என்பவர்கள், பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்டுகளை தேர்ந்தெடுக்கலாம். இருப்பினும் பரஸ்பர நிதிகளில்(Mutual Funds) செய்யப்படும் முதலீடு உங்களது நிதி சார்ந்த இலக்குகளுக்கு துணை புரிய கால அளவுகளை(Goal Period) ஏற்படுத்தி கொள்ளுங்கள். குறுகிய கால இலக்குகளுக்கு லிக்விட் மற்றும் கடன் பண்டுகள்(Liquid and Debt Mutual Funds), நடுத்தர கால தேவைகளுக்கு ஹைபிரிட் மற்றும் மல்டி அஸெட் பண்டுகள்(Hybrid and Multi Asset), நீண்ட காலத்திற்கு பங்கு சார்ந்த பண்டுகள்(Equity oriented) என பிரித்து முதலீடு செய்யலாம்.

அஸெட் அலோகேஷன் முறையில் பிரித்து முதலீடு செய்யும் போது சந்தை ஏற்ற-இறக்கத்தை பற்றிய கவலையில்லை. தங்கம் மற்றும் வங்கி வட்டி விகிதங்களில் மாற்றம் ஏற்பட்டாலும் நமது முதலீட்டை பெரிதாக பாதிக்காது. அது போன்ற கலவையுடன் உள்ள ஐந்து பண்டுகள் உங்களுக்காக. கடந்த காலங்களில் இந்த பண்டுகள் அளித்த வருவாய், பண்டு நிர்வகிக்கும் சொத்து மதிப்பு, அதன் ரிஸ்க் தன்மை ஆகியவை படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. 

  • ICICI Prudential Nifty50 Index Fund
  • Parag Parikh Flexi Cap Fund
  • Mirae Asset Tax Saver
  • SBI Gold Fund
  • HDFC Balanced Advantage Fund

Best - Top 5 Funds to invest in 2024

படத்தில் குறிப்பிடப்பட்ட கடந்த கால வருவாய், எதிர்காலத்திலும் கிடைக்கும் என்பதில் எந்த உத்தரவாதமும் இல்லை. இருப்பினும் இவை பணவீக்கத்தை தாண்டிய வருவாயை அளிக்கும். சொல்லப்பட்ட பண்டுகள் அனைத்தும் பணப்புழக்கம்(Liquidity), முதலீட்டு பரவலாக்கம் மற்றும் பல்வகைப்படுத்துதல்(Diversification & Asset Allocation), வரி சேமிப்பு, உலகளாவிய பங்கு முதலீட்டு வாய்ப்பு(Global Equity exposure) ஆகியவற்றை கருத்தில் கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பு: மேலே உள்ள பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு செய்ய தகுந்த நிதி ஆலோசகர் அல்லது மியூச்சுவல் பண்ட் விநியோகஸ்தர்(MF Distributor) முன்னிலையில் முதலீட்டு முடிவை எடுப்பது சிறந்தது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com