Tag Archives: debt free

கடனில்லா பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் என்றால் என்ன ?

கடனில்லா பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் என்றால் என்ன ?

What means a Debt Free Listed Company in the Stock Market ?

கடனில்லா நிறுவனங்கள் என்பது பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட ஒரு நிறுவனத்திற்கு அதன் இருப்புநிலை அறிக்கையில்(Balance Sheet) கடன் எதுவும் இருக்க கூடாது. பொதுவாக ஒரு நிறுவனம் தனது தொழிலை விரிவாக்கம் செய்ய அல்லது தொடர்ந்து தொழில் புரிய கடன் வாங்கலாம். இந்த கடன் பங்குகளாகவோ அல்லது கடன் பத்திரங்களாகவோ(Debt Securities) இருக்கலாம். 

பங்குகளாக கடன் பெறப்பட்டிருந்தால், பின்னாளில் நிறுவனத்தின் லாபத்தில் பங்குதாரர்களுக்கும் பங்குண்டு. அதே வேளையில் கடன் பத்திரங்களின் மூலம்  பெறப்படும் கடன் தொகைக்கு, பின்னாளில் வட்டியுடன் சேர்த்து அசல் தொகையை நிறுவனம், முதலீடு செய்தவர்களுக்கு திரும்ப அளிக்க வேண்டும்.

நிறுவனத்தின் கடன் பொதுவாக குறுகிய கால கடனாகவோ அல்லது நீண்ட கால கடனாகவோ இருக்கலாம். நிகர கடன்(Net Debt) எனும் போது, ஒரு நிறுவனத்திற்கு கடன் இருக்கலாம். அவை குறுகிய கால அல்லது நீண்ட கால கடனாக இருக்கக்கூடும். அந்த கடனை நிறுவனம் இன்றே செலுத்த வேண்டும் என்ற நிலை வந்தால், நிறுவனத்திடம் அதனை செலுத்துவதற்கான ரொக்க தொகை(Cash & Cash Equivalents) உள்ளதா என்பதை ஆராய்வது, நிகர கடனாகும்.

உதாரணமாக, ஒரு நிறுவனத்திற்கு ஒரு குறிப்பிட்ட நிதியாண்டின் முடிவில் அதன் இருப்புநிலை அறிக்கையின் படி, ரூ.50 கோடி கடன் உள்ளதாக எடுத்து கொள்வோம். இப்போது, சொல்லப்பட்ட ஆண்டின் முடிவில் அந்த நிறுவனத்திடம் ரூ.25 கோடி ரொக்கமாக இருக்கும் நிலையில், அந்த நிறுவனம் தனது கடனை குறைக்கும் பட்சத்தில், மீதமிருக்கும் கடன் ரூ.25 கோடி மட்டுமே.

Net Debt = Borrowings(Short Term Debt + Long Term Debt) – Cash & Cash Equivalents

இதுவே நிறுவனத்திடம் ரொக்க தொகை ரூ.50 கோடியாக இருந்து கடனை அடைக்கும் நிலையில், நிறுவனத்திடம் தற்போது கடன் எதுவும் இருக்காது. இதனை தான் நாம், ‘நிகர கடனில்லா தன்மை(Net Debt Free)’ என்கிறோம். இங்கே நிறுவனம் அந்த கடனை உடனடியாக உண்மையில் செலுத்தியிருக்க வேண்டிய அவசியமில்லை. கடனை திரும்ப செலுத்த கூடிய நிலை ஏற்பட்டால் என்ற தன்மையை மட்டுமே இந்த விதிமுறை கூறுகிறது.

நிறுவனத்தின் கடன் தன்மையை புரிந்து கொள்ள மற்றொரு முறையை நாம் காணலாம். அதாவது நிறுவனத்தின் மொத்த கடனை, அதன் பங்குதாரர்களின் பங்கு மதிப்பை கொண்டு ஒப்பிடுவது. இதனை கடன்-பங்கு(Debt to Equity) விகிதம் என்கிறோம்.

Debt to Equity Ratio = Total Liabilities / Shareholder’s Equity

(Simple Way to Calculate from the Balance Sheet: Borrowings / (Equity Share Capital + Reserves))

நிறுவனத்தின் கடன்-பங்கு தன்மை ஒன்று(1.0) என வந்தால், நிறுவனத்தின் கடனும், பங்கு மதிப்பும் சரிசமமாக உள்ளது. இதன் காரணமாக நிறுவனம் பின்னாளில் தனது கடனை அதிகரிப்பதற்கான சூழல் ஏற்படலாம். இது நிறுவனத்திற்கும், பங்குதாரர்களுக்கு நல்லதல்ல. இதுவே 0.5 என விகிதம் இருந்தால், நிறுவனத்தின் கடன் தன்மை, பங்குகளின் மதிப்பில் பாதியாக உள்ளது என பொருளுண்டு. 

சுருக்கமாக சொன்னால், ஒருவருடைய வருவாய் ரூ.1 என கொள்ளும் போது, அதற்குள்ளாகவே அதன் செலவுகளும் இருக்க வேண்டும். மீறினால், கடன் தன்மை அதிகரித்து நிர்வாகம் சீர்கெடும், தொழிலும் பாதிப்படையலாம். இதுவே ஒரு ரூபாய் வருவாய் இருக்கையில், செலவு 50 பைசா அல்லது அதற்கு கீழாக இருக்கும் போது, அவர் பின்னாளில் கடன் வாங்கினாலும் அதனை திரும்ப செலுத்துவதற்கான திறன் உள்ளது. வருவாயை காட்டிலும் செலவு குறைவாக இருக்கும் நிலையில், தொழிலை விரிவாக்கம் செய்வதில் சிக்கல் ஏதுமிருக்காது.

மேலே சொல்லப்பட்ட இரு நிலைகளையும் அறிந்து வைத்திருப்பது, பங்குச்சந்தையில் நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு அவசியம். ஒரு நிறுவனத்திற்கு நிகர கடன் நன்றாக இருந்தாலும் சரி, கடன்-பங்கு தன்மை 0.5 விகிதத்துக்கு குறைவாக இருந்தாலும் சரி – அவை கடனில்லா நிறுவனங்களாக கருதப்படும்.

ஒரு நிறுவனம் கடனில்லா தன்மையாக இருப்பதில் சாதகமும், பாதகமும் உள்ளது. கடனில்லாமல் இருக்கும் போது, நிறுவனத்தின் லாபத்திலிருந்து கடனுக்கான வட்டி தொகைக்கு ஒதுக்க தேவையில்லை. தொழிலை விரிவாக்கம் செய்ய போதுமான தொகை கையிருப்பில் இருக்கும். லாபத்தில் பங்குதாரர்களுக்கு பங்களிப்பை(Dividend, Buyback) அளிக்கலாம். 

பொதுவாக பொருளாதார மந்தநிலை மற்றும் துறை சார்ந்த நிதிச்சிக்கல் ஏற்படும் போது, கடனில்லா நிறுவனங்கள் தப்பி பிழைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். திவால் நிலையை தவிர்ப்பது கடனில்லா நிறுவனங்களுக்கு எளிது. 

பாதகமான நிலையென்றால், ஒரு நிறுவனம் பங்குகள் மூலம் தனது முதலீட்டை அதிகம் ஈர்க்கையில், அது அந்த நிறுவனத்திற்கு நீண்ட காலத்தில் சாதகமாக அமையாது. ஏனெனில், பொதுவாக கடன் பத்திரங்களின் மூலம் பெறப்படும் கடனுக்கு, பங்குகளை காட்டிலும் செலவு விகிதம் மிக குறைவே. பங்குகள் எனில், லாபத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியை அதன் பங்குதாரர்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டிய அவசியம் ஏற்படலாம். கடன் பத்திரங்கள்(Debt Funds) எனில், நிலையான வட்டியுடன் அசலை செலுத்தினால் போதுமானது. இதன் காரணமாக தான் பெரும்பாலான நிறுவனங்கள், வங்கிக்கடனை குறைந்த வட்டி விகிதத்தில் வாங்கி கொள்கிறது.  

இந்திய பங்குச்சந்தையில் கடனில்லா நிறுவனங்கள்:

  • கடன்-பங்கு(Debt to Equity Ratio) விகிதம் ஒன்றுக்கு குறைவாக இருக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை 3,166
  •  கடன்-பங்கு விகிதம் 0.5 க்கு குறைவாக இருக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை 2,550
  • பங்கு மூலதன மதிப்பு(Market Cap) 5000 கோடி ரூபாய்க்கு மேலாகவும், கடன்-பங்கு விகிதம் 0.5 க்கு குறைவாக இருக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை 366
  •  பங்கு மூலதன மதிப்பு(Market Cap) 5000 கோடி ரூபாய்க்கு மேலாகவும், நிறுவனர்களின் பங்களிப்பு(Promoter Holding) 50 சதவீதத்திற்கு மேலாகவும், கடன்-பங்கு விகிதம் 0.5 க்கு குறைவாக இருக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை 257
  • பங்கு மூலதன மதிப்பு 5000 கோடி ரூபாய்க்கு மேலாகவும், ரொக்க கையிருப்பு(Cash Equivalents) நிறுவனத்தின் கடனை காட்டிலும் அதிகமாகவும், நிறுவனர்களின் பங்களிப்பு 50 சதவீதத்திற்கு மேலாக மற்றும் கடன்-பங்கு விகிதம் 0.5 க்கு குறைவாக இருக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை 147.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

ஆரோக்கியமான நிதி திட்டமிடல்/Healthy Financial Planning

ஆரோக்கியமான நிதி திட்டமிடல்:

Prepare for Healthy Financial Planning

 

1. வரவு-செலவு மற்றும் சேமிப்பு அறிக்கையை உருவாக்குங்கள்
2. பணவீக்கத்தை தாண்டிய உண்மையான வருமானத்தை தேடுங்கள்; முதலீடு செய்யுங்கள்
3. முதலீட்டை பகிர்ந்து கொள்ளுங்கள் (Bank Deposits, Mutual Funds, Stocks,Realty, Gold, Knowledge)
4. காப்பீடு செய்து கொள்ளுங்கள் (Health and Life-Term)
5. பிளாஸ்டிக் பணத்தை பயன்படுத்துங்கள் (E-Payments, Save Tax); பிளாஸ்டிக்கை ஊக்குவிக்காதீர்கள்
6. ஓய்வை (Retirement plan) பற்றி சிந்தியுங்கள்
7. கடனை குறையுங்கள்/கடனில்லா (Debt Free) வாழ்க்கையை வாழுங்கள்
8. அவசர நிதியை (Emergency Fund) அவசரப்படுத்துங்கள்
9. மாடி தோட்டம் அமையுங்கள் /முடிந்தால் மரம் வளருங்கள்
10. உதவி செய்யுங்கள் /உங்கள் அறிவை பரிமாறுங்கள்

 

நன்றி – வர்த்தக மதுரை