ரிஸ்க் தன்மைக்கான மதிப்பீடு(Risk Profiling)

ரிஸ்க் தன்மைக்கான மதிப்பீடு(Risk Profiling)

எந்தவொரு முதலீட்டை துவக்கும் முன், உங்களை நீங்களே பரிசோதனை செய்து கொள்வது நல்லது. ரிஸ்க் புரொபைலிங்(Risk Profiling) என்று சொல்லக்கூடிய சுய பரிசோதனை மூன்று நிலையை கொண்டது.

  • தேவை(Risk Required)
  • திறன்(Risk Capacity)
  • சகிப்புத்தன்மை(Risk Tolerance)

உதாரணமாக நீங்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய உள்ளீர்கள் என வைத்து கொள்வோம். பங்குச்சந்தை என்பது ரிஸ்க் தன்மை அதிகம் கொண்ட முதலீட்டு சாதனம் என்பதனை நாம் அறிவோம். சந்தையில் ஏற்ற-இறக்கம் என்பது குறுகிய காலத்தில் அதிகமாகவும், நடுத்தர காலத்தில் மிதமாகவும் மற்றும் நீண்ட காலத்தில் முதலீடு செய்யும் நிலையில் குறைவாகவும் இருக்கும். இதனை நாம் தவிர்க்க இயலாது. இதனை தான் நாம் சந்தைக்கான ரிஸ்க் தேவை என்கிறோம். இந்த தேவையை புரிந்து கொண்டு தான் பங்குச்சந்தை முதலீட்டை மேற்கொள்ள வேண்டும்.

இரண்டாவதாக சொல்லப்படுவது உங்களது ரிஸ்க் திறன். சந்தையில் முதலீடு செய்யும் போது ஏற்படும் ரிஸ்க் அல்லது ஆபத்தை கையாள உங்களிடம் போதுமான திறன் உள்ளதா என்பதனை இந்த நிலை கூறும். உங்களுடைய வருவாய் எவ்வளவு, சந்தையில் நீங்கள் எவ்வளவு தொகையை முதலீடு செய்ய உள்ளீர்கள், சந்தையில் நட்டம் ஏற்பட்டால், நீங்கள் மற்றும் உங்களது குடும்பம் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுமா என்ற விஷயங்களை நாம் இங்கே கண்டறியலாம்.

ரிஸ்க் சகிப்புத்தன்மை என்பது நீங்கள் சந்தைக்கு தேவையான ரிஸ்க் தன்மையை அறிவீர்கள், உங்களிடம் போதுமான ரிஸ்க் திறனும் உள்ளது. அதே வேளையில் உங்களது ரிஸ்க் திறனுக்கு ஏற்றாற் போல முதலீடு செய்கிறீர்களா என்பதனை அறிவது. உதாரணமாக சிலருக்கு போதுமான திறன் இல்லாத போதும், அதிக ரிஸ்க் எடுத்து முதலீட்டை மேற்கொண்டு பின்னர் பணம் முழுவதையும் இழந்து விடுவதுண்டு. இன்னும் சிலர் பணமிருந்தும், போதுமான ரிஸ்க் திறன் அறிந்தும் பயத்தின் காரணமாக குறைந்த அளவிலான ரிஸ்க் தன்மையை கொண்டிருப்பர். அதன் விளைவாக ரிஸ்க் எடுக்காமல் முதலீடு செய்பவர்களும் உண்டு. மேற்சொன்ன இரண்டு நபர்களும் தங்களுக்கான ரிஸ்க் திறனை சரியாக அளவிடாமல் தவறான முதலீட்டு முடிவை எடுப்பர். இதனை தான் அவர்களது சகிப்புத்தன்மை அல்லது விருப்பம்(Risk Tolerance) என்கிறோம்.

பொதுவாக இளம்வயது உடையவர் பங்குச்சந்தையில் ரிஸ்க் அதிகம் எடுத்தாலும், நீண்ட காலத்தில் அவர் வருவாய் ஈட்டக்கூடிய வாய்ப்பு இருப்பதால், சந்தையில் பணம் பண்ணும் வாய்ப்பு அதிகம். ஓய்வுகாலத்தை நெருங்கக்கூடியவர் பங்குச்சந்தை முதலீட்டை குறைத்து பாதுகாப்பான சேமிப்பு திட்டங்களை தேர்ந்தெடுப்பது நல்லது(வங்கி டெபாசிட், அஞ்சலக சேமிப்பு, கடன் பத்திரங்கள் மற்றும் பரஸ்பர நிதிகளின் ரிஸ்க் குறைந்த திட்டங்கள்). ஆனால் நடைமுறையில் இளம்தலைமுறையினர் சிறு சேமிப்பு திட்டங்களை நோக்கி செல்வதும், ஓய்வு பெற்றவர்கள் தங்களது ஓய்வூதிய பணபலன்களை கொண்டு பங்குச்சந்தையில் அதிக ரிஸ்க் கொண்ட வர்த்தகத்தில் ஈடுபடுவதும் நாட்டின் பொருளாதாரத்திற்கு நல்லதல்ல. (அதிக பணமிருந்து, ஓய்வூதிய காலத்தை சமாளிக்கக்கூடிய செல்வவளம் உள்ளவர்கள் எந்த வயதிலும் பங்குச்சந்தை போன்ற ரிஸ்க் தன்மை கொண்ட முதலீட்டை மேற்கொள்ளலாம்).

ரிஸ்க் புரொபைலிங் சார்ந்த சில கேள்விகள் உங்களுக்காக:
  • உங்களது முதலீட்டு நோக்கம்(Primary Investment Objective):  நீங்கள் ஏன் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய உள்ளீர்கள் ? (பணப்பாதுகாப்பு, நீண்ட  காலத்தில் செல்வவளத்தை  ஏற்படுத்துதல், விரைவாக பணம் பண்ண வேண்டும், பணத்தை இழப்பது, பணவீக்கத்தை தாண்டிய நிதி இலக்குகளுக்கான தொகையை பெற, பகுதிநேர வருவாய்) – ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுங்கள்
  • சந்தையில் நீங்கள் எதிர்பார்க்கும் வருவாய் அல்லது லாபம் (ஆண்டுக்கு சதவீதத்தில்) ?
  •   உங்களுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசாக கிடைத்துள்ளது. உங்களது ஒரு கோடி ரூபாய்க்கான திட்டம் என்ன ?
  • உங்களுக்கு ரூ.10 லட்சம் வங்கிக்கடனாக  உள்ளது. இப்போது உங்களுக்கு நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனத்திடமிருந்து இந்த வருடத்திற்கான போனஸ் தொகை ரூ.5 லட்சம் கிடைக்கிறது என கொள்வோம். நீங்கள் உங்கள் கடனை குறைக்க உள்ளீர்களா, இல்லையெனில் ஏதேனும் ஒரு முதலீட்டு திட்டத்தில் இந்த பணத்தை போட போகிறீர்களா ?
  • பங்குச்சந்தையில் நீங்கள் பணத்தை இழந்தால் அதற்கு யார் காரணம் ? (என் நண்பர், தரகர், ஊடகம், என் மனைவி அல்லது கணவர், எனது இன்டர்நெட் இணைப்பு, நான் மட்டுமே)
  • நீங்கள் வாங்கிய பங்கு ஒன்று, இப்போது 20 சதவீத வீழ்ச்சியை கண்டுள்ளது. இப்போது உங்களது முடிவு என்ன ?
  • உங்களுக்கு பிடித்த மற்றும் ஆராய்ந்த நிறுவன பங்கு ஒன்று நடப்பாண்டில் மட்டும் 40 சதவீத வீழ்ச்சி கண்டுள்ளது. நீங்கள் இதுவரை அந்த பங்கினை வாங்கியதில்லை. இப்போது உங்களது முதலீட்டு முடிவு என்ன ? (உடனே வாங்குவேன், விலை இறங்கியதால் வாங்க மாட்டேன், பங்கினை மறு ஆய்வுக்கு உட்படுத்தி முதலீட்டு முடிவை எடுப்பேன்)

ரிஸ்க் புரொபைலிங் முறையை சரியாக பரிசோதனை செய்து கொள்ள தகுந்த நிதி ஆலோசகரின் முன்னிலையில் முதலீட்டு முடிவுகளை எடுக்கலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

மெய்நிகர் நாணயங்களின் பரிவர்த்தனைகள் – தகவல்களை கேட்கும் மத்திய அரசு

மெய்நிகர் நாணயங்களின் பரிவர்த்தனைகள் – தகவல்களை கேட்கும் மத்திய அரசு 

Disclosure of Cryptocurrency Holdings and Transactions – India’s Cryptocurrency Regulations

‘கிரிப்டோ கரன்சி’ எனப்படும் மெய்நிகர் நாணயங்களின் மீதான முதலீடு மற்றும் வர்த்தகம், நடப்பு காலத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. டிஜிட்டல் நாணயம் சார்ந்த சிந்தனைகள் பல வருடங்களாகவே பேசப்பட்டு வந்த நிலையில், மெய்நிகர் நாணயங்களில் முதலீடு செய்யும் ஆர்வம் உலகெங்கிலும் பரவலாக காணப்படுகிறது. இதற்கான காரணம், மெய்நிகர் நாணயங்களில் காணப்படும் ‘பிளாக் செயின்(Blockchain)’ தொழில்நுட்பத்தின் பாதுகாக்கப்பட்ட பரிவர்த்தனைகளும், எந்தவொரு நாட்டின் மத்திய வங்கிகளின் தலையீடும் இல்லாமல் நடைபெறும் வர்த்தகம் தான்.

மெய்நிகர் நாணய சந்தையில் முதன்மை நாணயமாக கருதப்படும் ‘பிட்காயின்(Bitcoin)’, கடந்த 2014ம் ஆண்டு வாக்கில் ஒரு பிட்காயினுடைய மதிப்பு 500 அமெரிக்க டாலர்கள் என்ற அளவில் இருந்தது. இது அதிகபட்சமாக நடப்பு 2021ம் ஆண்டில் 61,500 அமெரிக்க டாலர்கள் வரை சென்றது குறிப்பிடத்தக்கது. தற்போது வர்த்தகமாகும் ஒரு பிட்காயினின் விலை இந்திய ரூபாய் மதிப்பில் 38 லட்சம் ரூபாய் (52,190 அமெரிக்க டாலர்கள்). கடந்த மூன்று மாதங்களில் மட்டும் சுமார் 80 சதவீத விலை ஏற்றத்தை பெற்றுள்ளன.

பிட்காயின் 2014ம் ஆண்டிலிருந்து ஏற்றத்தில் மட்டுமே சென்றதா என கேட்டால், அது தான் இல்லை. 2017ம் ஆண்டில் அதிகபட்சமாக 18,000 டாலர்கள் வரை சென்றிருந்த இந்த மெய்நிகர் நாணயம், 2018ம் ஆண்டில் 3,000 டாலருக்கு குறைவாக இறங்கியது கவனிக்கத்தக்கது. பொதுவாக மெய்நிகர் நாணயங்கள் அதிக ஏற்ற-இறக்கத்திற்கு உட்பட்டது. இதற்கான காரணம் மெய்நிகர் நாணயங்களின் எண்ணிக்கை குறைவான நிலையில் இருப்பதும், அதனை சார்ந்த வர்த்தகமும் தான்.

இருப்பினும் தனிநபர் ஒருவர் ஒரு முழு மெய்நிகர் நாணயத்தை வாங்க வேண்டுமென்ற அவசியமில்லை. உதாரணமாக ஒரு பிட்காயின் நாணயத்தின் சிறு துண்டுகளையும்(Pieces) வாங்கி கொள்ளலாம். மெய்நிகர் நாணயத்தை பல நாடுகள் வரவேற்றாலும், இன்னும் அதனை ஒழுங்குமுறைப்படுத்த பல நாடுகள் திணறி வருகின்றன. உலகெங்கிலும் நடைபெறும் கடத்தல், பயங்கரவாதம் மற்றும் பிற குற்றங்களுக்கு ஒரு சதவீதத்திற்கும் குறைவாக அமெரிக்க டாலர்கள் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், மெய்நிகர் நாணயங்கள் வழியாக சுமார் 5 சதவீதம் என்ற அளவில் நடைபெற்று வருவது கவனத்தில் கொள்ள வேண்டியது.

இதன் காரணமாகவே சில நாடுகள் அதன் பரிவர்த்தனைகளை கண்காணிக்க முடியாமல், தனியார் சந்தை நிறுவனங்களிடமே விட்டு விட்டன. ஆனால் முன்னேறிய மற்றும் வளரும் நாடுகள் இதனை ஒழுங்குமுறைப்படுத்தி சட்டமாக்க முயற்சி செய்து வருகின்றன. அவற்றில் நம் நாடும் ஒன்று. நடப்பு வருடத்தின் பட்ஜெட் தாக்கலின் போது, மெய்நிகர் நாணயங்களுக்கான ஒழுங்குமுறை மற்றும் அதனை சார்ந்த சட்டங்கள் ஏற்படுத்தப்படும் என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 2018ம் ஆண்டு மெய்நிகர் நாணயம் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது என பாரத ரிசர்வ் வங்கியால் அறிவிக்கப்பட்ட நிலையில், 2020ம் வருடம் உச்ச நீதிமன்றத்தால் இதற்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், இதற்கான சட்டம் மற்றும் வரி சிக்கல்கள் இன்னும் நீடித்து வருகிறது.

சமீபத்திய அரசு அறிவிப்பின் படி, கம்பெனி சட்டம் 2013ன் கீழ் நாட்டில் உள்ள நிறுவனங்கள், மெய்நிகர் நாணயங்களில் பரிவர்த்தனை மேற்கொண்டிருந்தால் அதற்கான லாப-நட்ட அறிக்கை, முதலீட்டு தொகை மற்றும் கையிருப்பு ஆகிய விவரங்களை அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும். இந்த நடைமுறை வரக்கூடிய ஏப்ரல் 1, 2021 முதல் அமலுக்கு வருகிறது. மெய்நிகர் நாணயங்களில் ஏற்பட்டுள்ள தனிநபர் சார்ந்த பரிவர்த்தனைகளையும் நிறுவனங்கள் தெரிவிக்க வேண்டுமென மத்திய அரசு கூறியுள்ளது.

இதன் மூலம் மெய்நிகர் நாணய வர்த்தகத்தில் வெளிப்படைத்தன்மை ஏற்படும் என அரசு எண்ணுகிறது. இதுவரை மெய்நிகர் நாணயத்தில் இந்தியா சார்பாக(தனிநபர் மற்றும் நிறுவனங்கள் சேர்த்து) சுமார் ஒரு கோடி முதலீட்டாளர்களும், 15,000 கோடி அமெரிக்க டாலர்கள் முதலீடும் ஈர்க்கப்பட்டுள்ளது. மெய்நிகர் நாணயத்தில் தனிநபர் மற்றும் நிறுவனங்கள் மேற்கொள்ளும் வர்த்தகம், ஊக வணிகம் அல்லது முதலீடு எதுவாக இருப்பினும் அதற்கான தெளிவான பரிவர்த்தனை விவரங்களை தற்போது அரசு கேட்டுள்ளது.

இதன் மூலம் அவற்றை மூலதன ஆதாயம் அல்லது இழப்பாக எடுத்து கொள்ளலாமா, இல்லையெனில் வணிக வருவாயாக கணக்கிடுவதா என்பதனை அரசு முடிவெடுக்கும். இதன் பின்பு அதற்கான வருமான வரி வரம்புகளும் ஏற்படுத்தப்படும். தற்போதைய நிலையில், மெய்நிகர் நாணயம் மூலம் கிடைக்கப்பெறும் லாபம் அல்லது நட்டம், கடன் பத்திரங்களின் மூலதன ஆதாய வரியை மேற்கோள் காட்டி செலுத்தப்படுகிறது(சில நிறுவனங்களால்). மெய்நிகர் நாணய பரிவர்த்தனைகளுக்கு அதன் சந்தை நிறுவனங்கள் பரிவர்த்தனை கட்டணங்களை வசூலிக்கின்றன. மெய்நிகர் நாணயம் மூலம் ஈட்டப்படும் லாபம் அல்லது நட்டத்தை தெரிவிக்க வேண்டும் என மத்திய நேரடி வரிகள் வாரியம்(CBDT) ஏற்கனவே கூறியுள்ளது.

அமெரிக்க டாலர் மற்றும் தங்கத்திற்கு மாற்றாக சொல்லப்படும் மெய்நிகர் நாணயம்(Cryptocurrency), வருங்காலத்தில் ஒரு முதலீட்டு சொத்தாக கருதப்படுமா, இல்லையெனில் வெறும் டிஜிட்டல் பரிவர்த்தனையாக மட்டுமே மேற்கொள்ளப்படுமா என்பது தெரிய வரும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

மறவாதீர்கள்: ஆதார் – பான் எண் இணைப்புக்கான காலக்கெடு – மார்ச் 31, 2021

மறவாதீர்கள்: ஆதார் – பான் எண் இணைப்புக்கான காலக்கெடு – மார்ச் 31, 2021

Deadline for Aadhaar – PAN Linking – 31st March, 2021

ஆதார்-பான் இணைப்புக்கான காலக்கெடு, கடந்த இரண்டு வருடங்களாக நீட்டிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் ஆதார்-பான் எண் இணைப்புக்கான கடைசி தேதி வரும் மார்ச் 31,2021 தேதியுடன் முடிவடைகிறது. இந்த இரண்டையும் இணைக்காத நிலையில் வருமான வரி தாக்கல் செய்ய முடியாது என வருமான வரி அலுவலகம் ஏற்கனவே சொல்லியிருந்தது.

தனிநபர் ஒருவர் வருமான வரி தாக்கல் செய்யாத நிலையிலும், ஆதார்-பான் எண் இணைப்பு கட்டாயமாகும். எனவே, உங்கள் வீட்டில் உள்ள நபர் ஒருவர் பான் மற்றும் ஆதார் எண்ணை வைத்திருக்கும் நிலையில், அதனை இணைத்து விடுவது வரும் நாட்களில் ஏற்படும் சிரமத்தை தவிர்க்க உதவும்.

மார்ச் 31, 2021 காலக்கெடுவுக்கு பிறகான பான் எண் செயல்படாது எனவும் ஏற்கனவே எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இன்றைய சமயத்தில் புதிய வங்கிக்கணக்கு துவக்கம்(பெரும்பாலான வங்கிகளில்), ரூ.50,000க்கும் மேலான ரொக்க பரிவர்த்தனை மற்றும் பிற நிதி சார்ந்த கணக்கு, பரிமாற்றங்களுக்கு பான் எண் அவசியமாகிறது.

பான் மற்றும் ஆதார் எண்களை காலக்கெடு தேதிக்கு முன்பு இணைக்காமல், பின்னொரு நாளில் இணைக்க முற்பட்டு வருமான வரி தாக்கல் செய்யும் நிலை ஏற்பட்டால், வருமான வரிச்சட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.

பங்குகள், பரஸ்பர நிதிகள் மற்றும் கடன் பத்திரங்களில் முதலீடு செய்வதற்கு, காப்பீடு பெறுவதற்கு மற்றும் வங்கியில் கடனுக்கான விண்ணப்பத்திற்கு பான் எண்ணை சமர்ப்பிப்பது கட்டாயம். சில திட்டங்களில் மட்டும் ரூ.50,000க்கு குறைவான முதலீட்டிற்கு பான் எண்ணிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. எனினும் கே.ஒய்.சி.(KYC) முறையில் பெரும்பாலான பரிவர்த்தனைகளுக்கு பான் எண் கட்டாயமாகும்.

ஆதார – பான் எண் இணைப்பது எளிமையான நடைமுறையில் தான் உள்ளது. அதற்கான இணைப்பு இங்கே,

PAN – Aadhaar Linking – Income Tax Website

உங்களுடைய  பான் மற்றும் ஆதார் அட்டையில் உள்ள தகவல்(பெயர், பிறந்த காலம், முகவரி, கைபேசி எண்)  சரியான பொருந்துகிறதா என பார்த்து கொள்ளுங்கள். சரியான தகவல் இல்லையெனில் சில சமயம் பான் – ஆதார் எண் இணைப்பு சாத்தியமாகாது. ஆதார் அட்டையில் உள்ள தகவல் சரிவர இல்லையென்றால், உங்களுக்கு அருகில் உள்ள இ – சேவை மையத்தை தொடர்பு கொண்டு அதனை திருத்தம் செய்யலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

அன்னிய செலாவணி கையிருப்பில் நான்காவது மிகப்பெரிய நாடு – இந்தியா

அன்னிய செலாவணி கையிருப்பில் நான்காவது மிகப்பெரிய நாடு – இந்தியா 

India’s Foreign Exchange Reserves – Billion Dollar Currency Holding

வளரும் நாடு மற்றும் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் நாடொன்றுக்கு அன்னிய செலாவணி கையிருப்பு என்பது மிகவும் அவசியமான ஒன்று. இதனை அந்த நாட்டின் மத்திய வங்கி கவனித்து கொள்ளும். பொதுவாக அன்னிய செலாவணி கையிருப்பு(Foreign Exchange Reserves) என்பது மற்றொரு நாட்டின் பணத்தை அல்லது பண மதிப்பை வாங்கி கையிருப்பாக வைப்பது. சொல்லப்பட்ட பணம், உலகளாவிய நாணயமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட, ‘அமெரிக்க டாலர்’ தான் தற்போதைய பொது நாணயமாக சொல்லப்பட்டுள்ளது.

அமெரிக்க டாலரை தான் பாரத ரிசர்வ் வங்கி என சொல்லப்படும் மத்திய வங்கி(Reserve Bank of India) தனது கையிருப்பாக வைத்து கொள்ளும். இதற்கான காரணங்கள் பல – ஒரு நாட்டினுடைய ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் காணப்படும் இரு நாடுகளின் வேறுபட்ட பண மதிப்பை கட்டுப்படுத்த, அன்னிய செலாவணி கையிருப்பு உதவும். உதாரணமாக நம் நாட்டிலிருந்து ஒரு பொருள் அல்லது சேவை பிரிட்டனுக்கு அனுப்பி வைக்கப்படுவதாக வைத்து கொள்வோம். இப்போது இந்த இரு நாடுகளிடையே ஏற்பட்ட வர்த்தகம், பொது நாணயமான டாலர் மதிப்பில் தான் நடந்திருக்கும். சில சமயங்களில் அவை யூரோ அல்லது வேறொரு அங்கீகரிக்கப்பட்ட பொது நாணயமாக இருந்திருக்கலாம்.

வர்த்தகத்தை ஏற்றுமதி செய்த நாடு, தனது வருவாயினை டாலர் மதிப்பில் தான் பெறக்கூடும். வர்த்தகத்தை ஏற்படுத்தியவர்(தனிநபர் அல்லது நிறுவனம்) இதற்கான டாலர் வருவாயை அவரது வங்கி கணக்கில் தான் பெறுவார். டாலர் பணத்தை உள்ளூர் ரூபாய் மதிப்பிற்கு மாற்றுவதற்கு வங்கிகள் சில கட்டணங்களை எடுத்து கொள்ளும். அதே வேளையில் டாலர் பணத்தை அந்நாட்டின் மத்திய வங்கியிடம், வங்கிகள் பரிமாற்றம் செய்து கொள்ளும். பொதுவாக வங்கிகள், மத்திய வங்கியிடமிருந்து அரசு கடன் பத்திரங்களை வாங்குவதற்கு இது போன்ற ஏற்றுமதி வர்த்தகத்தின் மூலம் பெறப்பட்ட டாலர் பணத்தை செலவழிக்கும்.

வங்கிகளை பொறுத்தவரை அரசு கடன் பத்திரங்களை வாங்குவதன் மூலம் வட்டி வருவாயை பெறும். ஆனால் மத்திய வங்கி இதனை(டாலர்) அன்னிய செலாவணி கையிருப்பாக கொண்டு, பல பொருளாதார நிகழ்வுகளுக்கு பயன்படுத்தும். டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பை, அதிக ஏற்ற-இறக்கத்திற்கு உட்படாமல் இருக்க ரிசர்வ் வங்கி தனது கையிருப்பை எச்சரிக்கையாக கையாளும். பொருளாதார வீழ்ச்சி, போர் பதற்றம், வெளிநாட்டு கடன், அதிக இறக்குமதியின் மூலம் ஏற்படும் நிதி பற்றாக்குறை போன்ற காலங்களை சமாளிக்க அன்னிய செலாவணி கையிருப்பை அதிகரிப்பது ஒரு நாட்டிற்கு சாதகமான தன்மையாகும்.

அன்னிய செலாவணி கையிருப்பு எனும் போது, ‘டாலர் பண ரொக்கமாக’ மட்டுமே இருந்து விடாது. அவை ரொக்கம், பொருட்கள் மற்றும் சேவையின் மதிப்பு, தங்கம், கடன் பத்திரங்கள், சர்வேதச நாணய நிதியம்(IMF) அனுமதிக்கும் வைப்பு தொகை என பல்வேறு சாதனங்களில் வைக்கப்படும்.

1991ம் ஆண்டு வாக்கில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் போது, நாட்டின் இறக்குமதி அதிக சிக்கலை சந்தித்தது. இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு அடுத்த மூன்று வாரங்களுக்கு தேவையான இறக்குமதி அளவை மட்டுமே பெற்றிருக்கும் என்ற நிலைமைக்கு தள்ளப்பட்டது. உலக தர குறியீட்டு நிறுவனங்கள், நாட்டின் கடன் பத்திரங்களின் தன்மையை குறைந்து மதிப்பிட்டிருந்தன. குறைவான அன்னிய செலாவணி கையிருப்பு காரணமாக, உலக வர்த்தகத்தில் இந்தியா திவால் நிலைக்கு செல்லும் நிலை உருவானது.

அன்றைய தேதியில், வளைகுடா போரும்(Gulf War) சேர்ந்து கொண்டது. வெளிநாடுகளுக்கு செலுத்த வேண்டிய கடனுக்கு போதிய தொகை இல்லாமல், அரசு சார்பில் இருந்த தங்க கையிருப்பு அடகு வைக்கப்பட்டன. பின்னர் நிதி பற்றாக்குறையிலிருந்து மீண்ட நாடு, பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கைக்கு வித்திட அந்த நிகழ்வே காரணமாக அமைந்தது.

இவற்றிலிருந்து நாம் தெரிந்து கொள்ளலாம், அன்னிய செலாவணி கையிருப்பு வளரும் நாடொன்றுக்கு எவ்வளவு முக்கியமென்று. 1991ம் ஆண்டு ஜனவரி மாத முடிவில் நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு சுமார் 1.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இது அதே வருடத்தின் ஜூன் மாத முடிவில் 0.6 பில்லியனுக்கு குறைவாக சென்றது குறிப்பிடத்தக்கது. பொருளாதாரத்தை மீட்க, சர்வேதச நாணய நிதியத்திடம் 67 டன் தங்கத்தை அடமானம் வைத்தது இந்தியா. இதன் வாயிலாக சுமார் 2.2 பில்லியன் அமெரிக்க டாலர்களை அடமான கடனாக பெற்றது இந்தியா. அவை இங்கிலாந்து மற்றும் ஸ்விட்ஸர்லாந்து நாடுகளின் மத்திய வங்கிகள் மூலம் பெறப்பட்டன.

அந்தவொரு நிகழ்வுக்கு பிறகு, தனது அன்னிய செலாவணி கையிருப்பை நமது நாடு கவனமாக கையாண்டு வருகிறது. 2009ம் ஆண்டு வாக்கில் சர்வேதச நாணய நிதியத்திடமிருந்து 200 டன் மதிப்பிலான தங்கத்தை வாங்க பாரத ரிசர்வ் வங்கி முடிவு செய்ததும் அன்னிய செலாவணி கையிருப்பின் ஒரு பகுதியே. இன்று (12, மார்ச் 2021) நம் நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு 580.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள். (1991ம் ஆண்டு ஜனவரி – 1.2 பில்லியன் டாலர்கள் !)   

சில வாரங்களுக்கு முன்பு, ரஷ்யாவை பின்னுக்கு தள்ளி, உலகளவில் அன்னிய செலாவணி கையிருப்பில் நான்காம் இடத்திற்கு நகர்ந்தது இந்தியா. முதலிடத்தில் சீனா(3,336 பில்லியன் டாலர்கள்), இரண்டாம் இடத்தில் ஜப்பான்(1,379 பில்லியன் டாலர்கள்) மற்றும் மூன்றாமிடத்தில் சுவிட்ஸர்லாந்து(1,080 பில்லியன் டாலர்கள்) உள்ளன. உலக அன்னிய செலாவணி கையிருப்பில் அமெரிக்க டாலர், யூரோ, ஜப்பான் யென், பிரிட்டன் பவுண்ட் மற்றும் சீன பண மதிப்புகள் முன்னிலையில் உள்ளன.

கடந்த 30 வருட காலத்தில் இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு 10,000 சதவீதத்திற்கு மேல் ஏற்றம் பெற்றுள்ளது. இது போல நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி – GDP மதிப்பு 266 பில்லியன் டாலர்(1991ம் ஆண்டு) மதிப்பிலிருந்து 3 டிரில்லியன் டாலர்(2019) மதிப்பளவில் வளர்ந்துள்ளது. இது 1100 சதவீத வளர்ச்சியாகும். 

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

மீண்டும் அதிகரித்த நாட்டின் சில்லரை விலை பணவீக்கம் – பிப்ரவரி 2021

மீண்டும் அதிகரித்த நாட்டின் சில்லரை விலை பணவீக்கம் – பிப்ரவரி 2021

India’s Retail Inflation to 5.03 Percent in February 2021 – CPI

நாட்டின் சில்லரை விலை பணவீக்கம் கடந்த ஜனவரி மாதத்தில் 4.06 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது பிப்ரவரி மாதத்திற்கான பணவீக்க தகவல் வெளியிடப்பட்டுள்ளது. பிப்ரவரி 2021 மாதத்தில் நுகர்வோர் விலை பணவீக்கம்(Consumer price index) 5.03 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது. இது சந்தை எதிர்பார்த்த 4.83 சதவீதம் என்ற அளவை காட்டிலும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உணவு பொருட்களில் காணப்பட்ட விலை உயர்வால் கடந்த மாத பணவீக்கம் அதிகரித்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டின் மே மாதத்தில் 1.89 சதவீதம் என்ற அளவை கொண்டிருந்த உணவுப்பொருட்களின் பணவீக்க விகிதம், தற்போது 3.87 சதவீதமாக உள்ளது.

இது போல பருப்பு வகைகளின் பணவீக்க விகிதம் 12.54 சதவீதமாக அதிகரித்துள்ளது கவனிக்கத்தக்கது. அதே வேளையில் காய்கறிகளின் விலை சற்று குறைந்து 6.24 சதவீதமாக பிப்ரவரி மாதத்தில் நிறைவு பெற்றுள்ளது. துணிமணிகள் மற்றும் காலணிகள் 3.82 சதவீதத்திலிருந்து 4.21 சதவீதமாக அதிகரித்துள்ளது.

புகையிலை பொருட்கள் மற்றும் வீட்டுமனை பணவீக்க விகிதங்களில் பெரிதான ஏற்ற-இறக்கம் இல்லை எனலாம். ஒளி மற்றும் எரிபொருட்களின் விலைவாசி 3.87 சதவீதத்திலிருந்து 3.53 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த ஒரு வருட காலத்தில் பணவீக்க விகிதம் பெரும்பாலும் ஆறு சதவீதத்திற்கு மேலாக தான் இருந்துள்ளது. பாரத ரிசர்வ் வங்கியின் குறுகிய கால பணவீக்க விகித இலக்கு 2-6 சதவீதம் என்ற அளவிற்குள் சொல்லப்பட்டுள்ளது.

நாட்டின் பணவீக்க விகித அளவீட்டில் உணவு பொருட்கள் மற்றும் குளிர்பானங்கள் 45.86 சதவீத பங்களிப்பை கொண்டிருக்கின்றன. பால் பொருட்கள் 6.6 சதவீதமும், காய்கறிகள் 6.04 சதவீதமும், மாமிசம் மற்றும் மீன் வகைகள் 3.6 சதவீதத்தையும் கொண்டுள்ளது.

வீட்டுமனை 10 சதவீதத்தையும், கல்வி 4.46 சதவீதம் மற்றும் சுகாதாரம் 5.9 சதவீதத்தையும் பங்களிப்பாக பெற்றுள்ளது. எரிசக்தியில் பெரும்பாலும் இறக்குமதியை சார்ந்திருத்தல், பருவமழையின் நிச்சயமற்ற தன்மை, மோசமான சாலைகள் மற்றும் உட்கட்டமைப்பில் மேம்பாடு இல்லாதது, அதிக நிதி பற்றாக்குறை மற்றும் அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்வதில் உள்ள சிக்கல் ஆகியவை சில்லரை விலை பணவீக்க ஏற்ற-இறக்கத்திற்கு பெரும்பாலும் காரணமாக உள்ளன.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

அவந்தி பீட்ஸ் – பங்குச்சந்தை அலசல்

அவந்தி பீட்ஸ் – பங்குச்சந்தை அலசல் 

Avanti Feeds – Fundamental Analysis – Stocks

1994ம் ஆண்டு துவங்கப்பட்ட நிறுவனம் அவந்தி பீட்ஸ். ஆந்திர மாநிலத்தை சேர்ந்த திரு. அல்லூரி வெங்கடேசுவர ராவ் அவர்களால் துவங்கப்பட்ட இந்நிறுவனம், இன்று இறால், மீன் ஊட்டங்கள், இறால் செயலி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனமாக வலம் வருகிறது. ஆரம்ப காலத்தில் எஃகு, கரைப்பான்கள், உரம், பூச்சிக்கொல்லிகள் மற்றும் புகையிலை ஆகிய தொழில்களில் ஈடுபட்டு வந்த நிறுவனர் பின்னர் இறால் மீன் சார்ந்த தயாரிப்புகளில் களம் கண்டார்.

முக்கியமாக தாய் யூனியன்(Thai Union Group) நிறுவனத்துடன் கூட்டு முயற்சியில் இறால் தயாரிப்புகளில் ஈடுபட்டு வருவது அவந்தி பீட்ஸ் நிறுவனத்தின் வெற்றிக்கு சாதகமாக இருந்துள்ளது. 1977ம் ஆண்டு துவங்கப்பட்ட தாய் யூனியன் குழுமம் தாய்லாந்து நாட்டை சேர்ந்த இறால், மீன் ஊட்டங்கள் மற்றும் பதப்படுத்துதலில் முன்னணி நிறுவனமாக உள்ளது.

இறால் மற்றும் மீன் தீவனங்களில் தொழில் செய்து வரும் தாய் யூனியன் குழுமம், கடல் சார்ந்த உணவு துறையில் உலகின் மிகப்பெரிய நிறுவனமாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது. இறால் தீவனம் மற்றும் உறைந்த இறால் தயாரிப்புகளில்(Frozen Shrimp Producer) நாட்டின் மிகப்பெரிய நிறுவனமாகவும், முன்னணி ஏற்றுமதியாளராகவும் அவந்தி நிறுவனம் உள்ளது.

ஆண்டுக்கு சுமார் 6 லட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட தயாரிப்பு நிலையங்களை இந்நிறுவனம் கொண்டுள்ளது. உள்நாட்டு தீவன வணிகத்தில் சுமார் 45 சதவீத பங்களிப்பை அவந்தி பீட்ஸ் நிறுவனம் தன்னகத்தே வைத்துள்ளது. மீன் குஞ்சு பொரித்தல் மற்றும் இறால் பதப்படுத்துதலுக்காக முக்கிய நிலையங்களையும் இந்நிறுவனம் நிர்வகித்து வருகிறது.

இதன் தயாரிப்புகள் அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தீவனங்களுக்காக தனித்துவமான பிராண்டுகளையும் அவந்தி நிறுவனம் கொண்டுள்ளது.

கடல் சார்ந்த உணவுகளை அதிகம் இறக்குமதி செய்யும் நாடாக அமெரிக்கா உள்ளது. இது சுமார் 18 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் இறக்குமதி அளவை கொண்டிருப்பது கவனிக்கத்தக்கது. மீன் பிடித்தல் துறையில் நம் நாடு 2019-20ம் ஆண்டு முடிவில் சுமார் 141 லட்சம் டன் என்ற அளவில் தனது உற்பத்தியை கொண்டுள்ளது.

மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP) மதிப்பில் 1.2 சதவீத பங்களிப்பை மீன் பிடிப்பு துறை பெற்றுள்ளது. நீண்ட பரப்பளவு, புதிய உணவு வகைகள், பெருகி வரும் உணவு தேவைகள் ஆகியவை மீன் உணவுக்கான சந்தையை நிர்ணயிக்கிறது. மீன் உற்பத்தியில் முதல் ஐந்து இடங்களில் உள்ள மாநிலங்கள் – ஆந்திரா, மேற்கு வங்காளம், குஜராத், கேரளா மற்றும் தமிழகம். கடந்த 2019ம் ஆண்டு முதல் மீன் பிடிப்பு துறை உற்பத்தியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 1961ம் ஆண்டு வாக்கில் தனிநபர் ஒருவருக்கு, ஆண்டுக்கு 9 கிலோ என்ற அளவில் இருந்த நுகர்வு, 2018ம் ஆண்டில் 20.5 கிலோ என வளர்ச்சியடைந்துள்ளது. குறிப்பாக இறால் பண்ணைகள் சார்ந்த உணவுக்கான தேவை இன்று அதிகரித்து வருகிறது.

உலகளாவிய காலநிலை மாற்றம், கடல் சார்ந்த எல்லை பிரச்சனைகள், புதிய உணவு தேவைகள் ஆகியவை பண்ணைகள் மற்றும்  கடற் பண்ணைகளில் உற்பத்தி செய்யப்படும் உணவுகளுக்கு சாதகமாக அமைந்துள்ளது. இதன் காரணமாக இந்த துறையில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களுக்கு வர்த்தகம் சார்ந்த வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

அவந்தி பீட்ஸ்(Avanti Feeds) நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.6,600 கோடி. இதன் புத்தக மதிப்பு ரூ.119 ஆகவும், வட்டி பாதுகாப்பு விகிதம் 334 மடங்குகளாகவும் உள்ளது. நிறுவனத்திற்கு கடன்(Debt Free) எதுவும் பெரிதாக இல்லை. நிறுவனர்களின் பங்களிப்பு 44 சதவீதமாகவும், அன்னிய முதலீட்டாளர்களின் பங்களிப்பு 17 சதவீதமாகவும் உள்ளது. நிறுவனர்கள் சார்பில் பங்குகள் அடமானம் எதுவும் வைக்கப்படவில்லை. அன்னிய முதலீட்டாளர்களில் தாய் யூனியன் குழும நிறுவனம் 9 சதவீத பங்குகளை வைத்திருக்கிறது.

பொது பங்களிப்பில்(Public Holding) சுமார் 15 சதவீத பங்குகளையும் இந்நிறுவனம் தன்னகத்தே கொண்டுள்ளது. அரசு சார்பில், ஆந்திர அரசு சுமார் 3 சதவீத பங்குகளை(Andhra Pradesh Industrial Development Corporation) கொண்டுள்ளது கவனிக்கத்தக்கது. 2019-20ம் நிதியாண்டில் அவந்தி பீட்ஸ் நிறுவனம் ரூ.4,115 கோடியை வருவாயாகவும், 377 கோடி ரூபாயை நிகர லாபமாகவும் ஈட்டியுள்ளது. விற்பனை வளர்ச்சி கடந்த ஐந்து வருடங்களில் 19 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது.

லாப வளர்ச்சியும் கடந்த ஐந்து வருட கால அளவில் 24 சதவீதமாக உள்ளது. பங்கு மூலதனத்தின் மீதான வருவாய்(ROE) கடந்த ஐந்து வருடங்களில் 34 சதவீதமாகவும், 10 வருட கால அளவில் 35 சதவீதமாகவும் உள்ளது. இருப்புநிலை கையிருப்பு ரூ.1,603 கோடியாக சொல்லப்பட்டுள்ளது. நிறுவனத்தின் பணவரத்து(Cash flow Positive) நன்றாக உள்ளது.

இறால் இறக்குமதியில் அமெரிக்கா 26 சதவீதமும், ஐரோப்பிய யூனியன் 23 சதவீதமும், வியட்நாம் 12 சதவீதமும், ஜப்பான் 10 சதவீதம் மற்றும் சீனா 8 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளது. இறால் உற்பத்தியில் இந்தியா இரண்டாம் இடத்திலும், அதன் ஏற்றுமதியில் முதலிடத்திலும் உள்ளது. கொரோனா காலம் தவிர்த்து காணும் போது, இந்த துறைக்கான தேவையும், வாய்ப்புகளும் அதிகம்.

கவனிக்க: முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கும் முன் தகுந்த நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் முன்னிலையில் தங்களது முதலீட்டு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலே சொன்ன தகவல்கள் பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வுக்கான கற்றல் மட்டுமே.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

நாட்டின் கடந்த 50 வருட பொருளாதார வளர்ச்சி – இந்தியா 2021

நாட்டின் கடந்த 50 வருட பொருளாதார வளர்ச்சி – இந்தியா 2021

India’s 50 years of Economic Growth – GDP India 2021

2020-21ம் நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP growth) வளர்ச்சி 0.4 சதவீதமாக சொல்லப்பட்டிருந்தது. கொரோனா ஊரடங்குக்கு பின்னர் நேர்மறையான வளர்ச்சி சொல்லப்பட்டது இந்த முறை தான். நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் (-24.4) சதவீதமும், இரண்டாம் காலாண்டில் (-7.3) சதவீதமும் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டது.

2013ம் ஆண்டுக்கு பிறகான மிகப்பெரிய தொய்வு நிலை மற்றும் வீழ்ச்சியாகவும் இது கூறப்பட்டது. பொருளாதார ஊக்குவிப்பு மற்றும் தற்காலிகமாக ஏற்பட்ட பெரும் நுகர்வு தன்மையால் அக்டோபர் – டிசம்பர் காலத்தில் பொருளாதார வளர்ச்சி 0.4 சதவீதமாக நிறைவு பெற்றுள்ளது. எனினும், நடப்பு நிதியாண்டில் ஒட்டு மொத்தமாக நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி எதிர்மறை மதிப்பில் முடிவடையும்.

கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகான காலத்தில் விலைவாசி அதிகரித்து கொண்டிருந்தாலும், ஜனவரி மாத பணவீக்கம் 4.06 சதவீதம் என்ற குறைந்த அளவில் இருந்தது. இது கடந்த 16 மாதங்களில் காணப்படாத குறைவான அளவாக உள்ளது. நாட்டின் சில்லரை விலை பணவீக்கம் சராசரியாக 6-8 சதவீதம் என்ற அளவில் உள்ளது. மத்திய ரிசர்வ் வங்கியின் குறுகிய கால இலக்காக சில்லரை விலை பணவீக்கம்(Retail Inflation – CPI) 2-6 சதவீதம் என்ற அளவில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

பொதுவாக பொருளாதார வீழ்ச்சி(Economic Recession) என்பது ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, தொடர்ச்சியாக இரு காலாண்டுகள் எதிர்மறை வளர்ச்சியை(Negative growth) கொண்டிருந்தால் அது பொருளாதார வீழ்ச்சியாக உறுதி செய்யப்படும். அப்படி காணும் போது 2020-21ம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டும், ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டும் எதிர்மறை பொருளாதார சதவீதத்தை அடைந்தது. இதன் காரணமாக இந்திய பொருளாதாரம் வீழ்ச்சியடைந்ததாக சொல்லப்பட்டிருந்தது.

எனினும் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட தகவலில் அக்டோபர் முதல் டிசம்பர் 2020 வரையிலான காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் நேர்மறை வளர்ச்சியை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அதே வேளையில் சந்தை எதிர்பார்த்த அளவை இது எட்டவில்லை. கடந்த 50 வருட காலத்தில் மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சியாக கொரோனா கால ஊரடங்கு பொருளாதாரம் சொல்லப்படுகிறது. 1951-2020 வரையிலான காலத்தை கணக்கில் கொள்ளும் போது, இந்திய பொருளாதாரம் அதிகபட்சமாக 11.40 சதவீத பொருளாதார உயர்வும்(மார்ச் 2010 காலாண்டு), மிகப்பெரிய வீழ்ச்சியாக (-24.40 ஜூன் 2020) சதவீதமும் இருந்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை அன்று(04-03-2021) அரசு கடன் பத்திரங்களின் வருவாய்(10 Years Govt Bond yield) 6.21 சதவீதமாக உள்ளது. 2024-25ம் ஆண்டில் ஐந்து டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை அடைய மத்திய அரசு ஏற்கனவே நிர்ணயித்துள்ளது. இதனை அடையக்கூடிய நிலையில், உலகின் மிகப்பெரிய மூன்றாவது பொருளாதார நாடாக இந்தியா திகழும்.

உலக பொருளாதாரத்தில் முதல் இடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் சீனாவும் உள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்த இரு நாடுகளையும் அடுத்த 25 வருடங்களில் முந்த முடியவில்லை என்றாலும், நுகர்வு தன்மை அடிப்படையில் இந்தியா அடுத்த 10-20 வருடங்களில் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி பெற்றிருக்கும்.

நடப்பில் நமது நாடு, பெரும்பாலும் சேவை துறை சார்ந்த நாடாகவே உள்ளது. கொரோனாவுக்கு பிறகான காலத்தில், உற்பத்தியை பெருக்க அரசு திட்டம் கொண்டுள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சேவை துறை 54.77 சதவீதமும், தொழிற்துறை  27.47 சதவீதமும் மற்றும் விவசாய துறை 17.76 சதவீத பங்களிப்பையும் கொண்டுள்ளது.

சேவைத்துறையில் அரசு நிர்வாகம், ராணுவம் மற்றும் பிற துறைகள் 15.74 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளது. நிதி, வீட்டுமனை மற்றும் தொழில்முறை 20.95 சதவீத பங்களிப்பையும், வர்த்தகம், உணவக விடுதிகள், போக்குவரத்து, தொலைத்தொடர்பு மற்றும் ஒளிபரப்பு ஆகியவை 18.08 சதவீத பங்களிப்பையும் சேவை துறையின் கீழ் பெற்றுள்ளது.

விவசாய துறையில் விவசாயம், வனவியல் மற்றும் மீன் பிடித்தல் 17.76 சதவீத பங்களிப்பை அளித்து வருகின்றன. தொழிற்துறையில் உற்பத்தி 15.13 சதவீதமும், சுரங்கம் மற்றும் குவாரி 2.14 சதவீதமும், மின்சாரம், எரிவாயு, குடிநீர் மற்றும் இதர பயன்பாடு 2.65 சதவீதமும், கட்டுமானம் 7.55 சதவீத பங்களிப்பையும் கொண்டுள்ளது.

கடந்த 1950-51ம் ஆண்டில் இந்தியா 52 சதவீதம் விவசாயத்தை சார்ந்தும், சேவையில் 33 சதவீதத்தையும் மற்றும் தொழில்துறையில் 15 சதவீதத்தையும் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. சுருக்கமாக சொன்னால், இந்தியா நடுத்தர வருமானத்தை அதிகமாக கொண்ட வேகமாக வளரும் சந்தை பொருளாதார நாடாகும்(Middle income Developing market economy).

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

தேசிய பங்குச்சந்தை முடக்கம், அதிர்ச்சியளித்த அன்னிய முதலீடு, மத்திய அரசின் புதிய முடிவு

தேசிய பங்குச்சந்தை முடக்கம், அதிர்ச்சியளித்த அன்னிய முதலீடு, மத்திய அரசின் புதிய முடிவு 

NSE Shut down – Suspected FII Trading activity – No Business for the Govt

நேற்றைய இந்திய பங்குச்சந்தையில் பரபரப்புக்கு பஞ்சமில்லை எனலாம். எப்போதும் போல காலை ஒன்பது மணிக்கு துவங்கிய இந்திய பங்குச்சந்தை வர்த்தகத்தில் காலை 11:40 மணி வேளை தேசிய பங்குச்சந்தை அமைப்பிடம் இருந்து ஒரு அறிவிப்பு வெளியாகிறது. தொலைத்தொடர்பு இணைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் காலை 10:08 மணி முதல் சந்தை குறியீடுகள் மற்றும் நிறுவனங்களின் விலை மதிப்புகள் சரியான நேரத்திற்கு புதுப்பிக்கப்படவில்லை(Update) எனவும், இதன் காரணமாக 11:40 மணி முதல் தேசிய பங்குச்சந்தை குறியீடுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக சொல்லப்பட்டது.

பின்னர் மதியம் ஒரு மணிக்கு செயல்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முடக்கம் மீண்டும் மூன்று மணி வரை நீட்டிக்கப்பட்டது. பொதுவாக சந்தை மாலை 03:30 மணிக்கு முடியும். ஆனால் நேற்றைய தற்காலிக முடக்கத்தால் தேசிய பங்குச்சந்தை மாலை 03:45 மணிக்கு மீண்டும் துவங்கியது. மாலை ஐந்து மணி வரை வர்த்தகமான தேசிய பங்குச்சந்தை குறியீடு நிப்டி(Nifty50) 274 புள்ளிகள் உயர்ந்து, 14982 புள்ளிகள் என்ற அளவில் முடிவடைந்தது. மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ் சுமார் 1030 புள்ளிகள் உயர்ந்து, 50781 புள்ளிகள் என்ற அளவில் தனது வர்த்தகத்தை முடித்து கொண்டது.

தொழில்நுட்ப கோளாறு என சொல்லப்பட்டிருந்தாலும், ஒழுங்குமுறை அமைப்பான செபி(SEBI) இது சார்ந்த அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு தேசிய பங்குச்சந்தையிடம் கேட்டு கொண்டுள்ளது. வரக்கூடிய காலங்களில் பங்குச்சந்தை வர்த்தக நேரம் அதிகரிக்கப்படலாம், அதனை ஒட்டியே இது போன்ற நிகழ்வுகள் அமைக்கப்பட்டுள்ளது என்ற சலசலப்பும் சந்தை வர்த்தகர்களிடையே பேசப்பட்டது. ஆனால் இது சார்ந்த விவரங்கள் பங்குச்சந்தை அமைப்பிடம் தற்போது சொல்லப்படவில்லை.

நேற்றைய பங்குச்சந்தை நேரத்தில், மற்றொரு கூடுதல் தகவலாக அன்னிய முதலீட்டாளர்கள் ஒரே நாளில் 28,739 கோடி ரூபாயை இந்திய பங்குச்சந்தையில் முதலீடு செய்துள்ளனர். இதுவரை இல்லாத அளவாக அன்னிய முதலீட்டாளர்களின் வர்த்தக மதிப்பு சொல்லப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறின் காரணமாக, ஊக(Futures & Options trading) வணிகத்தில் பங்கு விற்பனையை மேற்கொண்டிருந்த பலர் தங்கள் பணத்தை நேற்று இழந்திருக்கலாம்.

நேற்றைய தேசிய பங்குச்சந்தையின் வர்த்தக மதிப்பு(Cash Turnover) ரூ.45,837 கோடி. கடந்த ஆறு மாதங்களின் சராசரி வர்த்தக மதிப்பு ரூ.64,796 கோடியாக இருப்பது கவனிக்கத்தக்கது. ஊக வணிகத்தின் ஆறு மாத சராசரி வர்த்தக மதிப்பு ரூ.30 லட்சம் கோடியாக இருந்த நிலையில், நேற்றைய ஊக வணிகத்தின் வர்த்தக மதிப்பு மட்டும் 30.6 லட்சம் கோடி ரூபாயாக நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரிப்பதற்கான வாய்ப்பு, உலகளாவிய மத்திய வங்கிகளின் அடுத்தகட்ட வட்டி விகித அணுகுமுறை, வளரும் மற்றும் வளர்ந்த நாடுகளில் மீண்டும் ஒரு பொருளாதார ஊக்குவிப்பு, அதனை சார்ந்த கடன் தன்மை அதிகரிப்பு ஆகியவை உலக பங்குச்சந்தை குறியீடுகளில் வரும் நாட்களில் தெரிய வரும்.

உலக சந்தையில் டாலர் மதிப்பு கடந்த மூன்று வருடங்களில் காணப்படாத குறைந்த அளவில் வர்த்தகமாகி கொண்டிருக்கிறது. அதே வேளையில் அமெரிக்க பங்குச்சந்தை குறியீடுகள் உச்சத்தில் வர்த்தகமாகி வருகிறது. ரிஸ்க் தன்மை அதிகம் கொண்ட மற்றும் புரிந்து கொள்ள முடியாத பரிவர்த்தனைகளிலும்  நடப்பு கால முதலீடுகள் சென்று கொண்டிருப்பதாக அமெரிக்க மத்திய வங்கி கூறியுள்ளது. வரும் நாட்களில் பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம்.

நாட்டில் உள்ள தனியார் வங்கிகள், அரசின் அனைத்து விதமான தொழில்களிலும் பங்கேற்கலாம். மத்திய அரசு நிறுவனங்களையும், தொழில்களையும் நடத்த தேவையில்லை எனவும், இனி தனியார் நிறுவனங்கள், நாட்டில் உள்ள தொழில்களையும், அது சார்ந்த நிறுவனங்களையும் நடத்தலாம் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கூறுகையில், அரசு நிறுவனங்களில் அரசு மட்டுமே உரிமையாளராக இருக்க வேண்டுமென்ற அவசியம் இனி இல்லை எனவும், அரசின் கவனம் மக்களின் நலத்திட்டங்கள் மற்றும் மேம்பாட்டு திட்டங்களில் மட்டுமே இனி இருக்கும் எனவும் சொல்லப்பட்டுள்ளது. நேற்றைய பங்குச்சந்தை ஏற்றத்திற்கு இந்த செய்தியும் சாதகமாக அமைந்திருந்தது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

மத்திய வங்கியின் சமீபத்திய வட்டி விகிதம் – சிறு பார்வை

மத்திய வங்கியின் சமீபத்திய வட்டி விகிதம் – சிறு பார்வை 

Recent Bank Interest rates – RBI Policy review

நாட்டின் ஜனவரி மாத சில்லரை விலை பணவீக்கம் 4.06 சதவீதமாக இருந்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டின் அக்டோபர் மாதத்தில் அதிகபட்சமாக 7.61 சதவீதமாக பணவீக்க விகிதம் இருந்தது. பாரத ரிசர்வ் வங்கியின் குறுகிய கால இலக்காக 2-6 சதவீதம் என்ற அளவில் சில்லரை விலை பணவீக்கம் சொல்லப்பட்டுள்ளது.

பணவீக்கத்தை அடிப்படையாக கொண்டு தான் பாரத ரிசர்வ் வங்கியின் வட்டி விகித மாற்றமும் அறிவிக்கப்படுகிறது. சமீபத்திய மத்திய நிதிக்கொள்கை குழு கூட்டம்(RBI Monetary Policy) இரு வாரங்களுக்கு முன்பு நடைபெற்றிருந்தது. வட்டி விகிதங்களில் எந்த மாற்றமுமில்லை எனவும், அதற்கு முந்தைய காலத்தில்  சொல்லப்பட்ட வட்டி விகிதங்கள் தொடரும் எனவும் ரிசர்வ் வங்கி சார்பில் சொல்லப்பட்டிருந்தது.

வங்கிகளுக்கான ரெப்போ(REPO) வட்டி விகிதம் தற்போது 4 சதவீதமாக உள்ளது. பாரத ரிசர்வ் வங்கியிடமிருந்து, நாட்டில் உள்ள வணிக வங்கிகள் கடன் பெறும் விகிதம் தான் ரெப்போ வட்டி விகிதமாக சொல்லப்படுகிறது. பொதுவாக நாட்டில் நிலவும் பணவீக்கத்தை(விலைவாசி) கட்டுப்படுத்த, ரெப்போ வட்டி விகிதத்தை மத்திய வங்கி ஒரு கருவியாக பயன்படுத்தும்.

ரிவர்ஸ் ரெப்போ(Reverse REPO) வட்டி விகிதம் 3.35 சதவீதமாக உள்ளது. நாட்டில் உள்ள வங்கிகளிடம்  இருந்து மத்திய வங்கி கடன் வாங்கும் விகிதத்தை, ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் என்கிறோம். விளிம்பு நிலை விகிதம்(Marginal Standing Facility Rate) 4.25 சதவீதமாகவும், வங்கி விகிதம் 4.25 சதவீதமாகவும் உள்ளது.

வங்கிகள், மத்திய ரிசர்வ் வங்கியிடம் வைத்திருக்க வேண்டிய ரொக்க கையிருப்பு விகிதம்(Cash Reserve Ratio – CRR) 3 சதவீதமாகவும், எஸ்.எல்.ஆர்.(SLR) விகிதம் 18 சதவீதமாகவும் உள்ளது. ரொக்கம், தங்கம், பத்திரங்கள் மற்றும் பிற அங்கீகரிக்கப்பட்ட வடிவில் வங்கிகள் பராமரிக்க வேண்டிய குறைந்தபட்ச வைப்புத்தொகை விகிதம் தான் எஸ்.எல்.ஆர். விகிதம்.

இது வங்கிகளின் செயல்பாட்டை மட்டுமில்லாமல், நாட்டின் கடன் வளர்ச்சியை ஒழுங்குபடுத்த உதவும். வங்கிகளின் அடிப்படை வட்டி விகிதம்(Base Rate – Lending / Deposit) 7.30% – 8.80% என்ற அளவில் சொல்லப்பட்டுள்ளது. வங்கி சேமிப்பு கணக்குக்கான வட்டி விகிதம் 2.70% – 3.00% என்ற அளவில் உள்ளது. ஒரு வருடத்திற்கு மேலான வைப்பு நிதி திட்டத்திற்கான வட்டி விகிதம் 4.90 சதவீதத்திலிருந்து 5.50 சதவீதம் வரை சொல்லப்பட்டிருக்கிறது.

2030ம் ஆண்டுடன் முடிவடையும் அரசு கடன் பத்திரங்களின் வருவாய்(5.85% GS 2030) ஆறு சதவீதத்திற்கு அருகாமையில் வர்த்தகமாகி வருகிறது. பணவீக்கம் மற்றும் பாரத ரிசர்வ் வங்கியின் கொள்கை குழு முடிவின் அடிப்படையில் தான் சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதமும், வங்கிகளின் வட்டி விகிதமும் மாறுபடும். பணவீக்கம் உயர்ந்தால் வங்கிகளின் வட்டி விகிதமும் உயர்த்தப்படும். எனவே, மத்திய வங்கி இதனை எச்சரிக்கையாக கையாளும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

2020ம் ஆண்டில் நாட்டின் பொருளாதார குறியீடுகள் எவ்வாறு இருந்தது ?

2020ம் ஆண்டில் நாட்டின் பொருளாதார குறியீடுகள் எவ்வாறு இருந்தது ?

Economic Indicators in India – 2020 Review

கடந்த 2020ம் ஆண்டில் கொரோனா பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட ஊரடங்கால் உலக பொருளாதாரம்  வெகுவாக பாதிக்கப்பட்டது. குறிப்பாக அத்தியாவசிய உணவு பொருட்களின் தேவை தவிர்த்து மற்ற துறைகள் அனைத்தும் பெரும்பாலும் எதிர்மறை நிலையை தான் சந்தித்தன. மார்ச் மாத(2020) ஊரடங்கு துவக்கத்தில் வீழ்ச்சியடைந்த பங்குச்சந்தை குறியீடுகள் மட்டும், வருடத்தின் முடிவில் எதிர்பாராத அளவில் ஏற்றத்தில் முடிவடைந்தன.

சமீபத்திய பங்குச்சந்தை குறியீடுகள் உயர்வு, எதிர்வரும் காலத்தில் பொருளாதாரம் மீட்டெடுக்கப்படும் என்ற நம்பிக்கையில் அதிகமாகவே உயர்ந்தது குறிப்பிடத்தக்கது. அதே வேளை உண்மையில் பொருளாதாரம் மீண்டெழுந்ததா ? இல்லையெனில் அதற்கான வாய்ப்பு எவ்வாறு உள்ளது என்பதனை அறிய கடந்த வருடத்தின் முழுமையான பொருளாதார குறியீடுகளை பார்த்தாக வேண்டும்.

நாட்டின் ஏற்றுமதி(Exports) கடந்த வருடத்தின் மார்ச் முதல் ஆகஸ்ட் வரையிலான காலத்தில் வீழ்ச்சியை மட்டுமே சந்தித்துள்ளன. ஏற்றுமதியில் அதிகபட்சமாக செப்டம்பர் மாதத்தில் 6 சதவீதமாக இருந்துள்ளது. வீழ்ச்சியின் பக்கம் காணும் பொழுது, ஏப்ரல் மாதத்தில் (-61) சதவீதமும், மே மாதத்தில் (-35.7) சதவீதமும் மற்றும் ஜூன் மாதத்தில் (-12.2) சதவீதமாகவும் உள்ளது. இது போல இறக்குமதி(Imports) அளவு 12 மாத காலத்தில் இரண்டு மாதங்கள் மட்டுமே நேர்மறையாக இருந்துள்ளது. பிப்ரவரி மற்றும் டிசம்பர் 2020 காலத்தில் மட்டுமே இறக்குமதி அளவு வீழ்ச்சியை சந்திக்கவில்லை.

வாகனத்துறை:

உள்நாட்டு டிராக்டர் விற்பனை பிரிவில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 50 சதவீதத்திற்கு மேல் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இருப்பினும், ஜூன் மாதத்திற்கு பிறகான தேவையின் காரணமாக இதன் விற்பனை அளவு கணிசமாக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக ஆகஸ்ட் மாதம் 74 சதவீதமாக காணப்பட்டுள்ளது.

வாகனத்துறை பிரிவில் அதிகம் பாதிக்கப்பட்ட துறை என்றால், அது உள்ளூர் விமான போக்குவரத்தும், மூன்று சக்கர வாகன விற்பனையும் தான். மூன்று சக்கர வாகன விற்பனை அளவு ஜனவரி மாதம் தவிர்த்து, மற்ற அனைத்து மாதங்களிலும் எதிர்மறையாக தான் இருந்துள்ளது. விமான போக்குவரத்து ஏப்ரல் மாதத்தில் முழுமையாக இயங்கவில்லை.

Economic indicators India 2020

இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் விற்பனை கடந்த 2020ம் ஆண்டின் ஜனவரி மாதம் முதலே சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 2019ம் ஆண்டில் காணப்பட்ட வாகனத்துறை மந்தநிலை தான் காரணமாக அமைந்துள்ளது. இருப்பினும், ஆகஸ்ட் 2020 பிறகான காலத்தில், பொது போக்குவரத்து செயல்படாத நிலையில் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் தேவை அதிகரித்தது. நான்கு சக்கர வாகனம் அதிகபட்சமாக செப்டம்பர் மாதத்தில் 29 சதவீதமும், இரு சக்கர வாகன விற்பனை அதிகபட்சமாக அக்டோபர் மாதத்தில் 17 சதவீதமாகவும் காணப்பட்டுள்ளது.

ரயில் சரக்கு(Freight Traffic) போக்குவரத்து மார்ச் முதல் ஜூலை வரையிலான காலத்தில் வீழ்ச்சி அடைந்திருந்தாலும், பின்னர் அத்தியாவசிய தேவையின் காரணமாக உயர்ந்து வந்தது கவனிக்கத்தக்கது.

வரி வருவாய்:

ஜி.எஸ்.டி.(GST) வருவாய் மார்ச் முதல் ஆகஸ்ட் வரையிலான காலத்தில் எதிர்மறை அளவாக இருந்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் அதிகபட்சமாக 72 சதவீதம் இழப்பு ஏற்பட்டுள்ளது. செப்டம்பர் 2020க்கு பின்னர் இதன் வருவாய் ஓரளவு அதிகரித்து வந்துள்ளது. அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வருவாய் அளவு 10 சதவீதத்திற்கு மேல் இருந்துள்ளது.

தொழிற்துறை உற்பத்தி குறியீடு(IIP):

தொழில் துறையில் உள்ள நுகர்வோர் சாதனங்களின் விற்பனை கொரோனா ஊரடங்கு காலத்தில் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 50 சதவீதத்திற்கு மேல் வீழ்ச்சியடைந்துள்ளது. அதே வேளையில் நுகர்வோர் அல்லாத சாதனங்கள் பிரிவில் பெரிய அளவில் சரிவு ஏற்படவில்லை. ஏப்ரல் மாதத்தில் மட்டுமே அதிகபட்சமாக 36 சதவீதம் குறைந்துள்ளது.

ஏப்ரல் மாதத்தில் ஸ்டீல்(எஃகு) உற்பத்தி 83 சதவீதமும், சிமெண்ட் உற்பத்தி 85 சதவீதமும் இழப்பாக சந்தித்துள்ளது. ஸ்டீல் மற்றும் சிமெண்ட் துறைகள் பெரும்பாலும் மந்தநிலையில் தான் 2020ம் ஆண்டு முழுவதும் இருந்துள்ளது.

நிலக்கரி மற்றும் உரங்கள் ஓரளவு ஏற்ற-இறக்கத்தில் தான் வர்த்தகமாகியுள்ளது. ஜூன் காலாண்டு தவிர்த்து நிலக்கரி தேவை ஓரளவு அதிகரித்து வந்துள்ளது. அதே நேரத்தில் உரங்கள் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் மட்டுமே வீழ்ச்சியடைந்துள்ளது.

சொல்லப்பட்ட வருடம் முழுவதும் இயற்கை எரிவாயு துறை இறக்கத்தில் மட்டுமே இருந்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் அதிகபட்சமாக எரிவாயு 20 சதவீதம் இழப்பு ஏற்பட்டுள்ளது.

பணவீக்க விகிதம்:

2020ம் ஆண்டின் ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் நாட்டின் சில்லரை விலை பணவீக்க(Retail Inflation) விகிதம் சராசரியாக 6-8 சதவீதம் என்ற அளவில் இருந்துள்ளது. அதிகபட்சமாக ஜனவரி மற்றும் அக்டோபர் மாதங்களில் 7.6 சதவீதமும், குறைந்த அளவாக டிசம்பர் மாதத்தில் 4.6 சதவீதமும் உள்ளது. உணவுப்பொருட்கள் மற்றும் குளிர்பானங்களின் விலைவாசி கணிசமாக உயர்ந்து காணப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் ஏற்பட்ட எதிர்பாராத தேவையால் உணவு பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. இதன் அளவு சராசரியாக 8 சதவீதத்திற்கு மேல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

Financial Blog in Tamil