Tag Archives: retail cpi inflation

நாட்டின் ஜூலை மாத சில்லரை விலை பணவீக்கம் – 7.44 சதவீதம்

நாட்டின் ஜூலை மாத சில்லரை விலை பணவீக்கம் – 7.44 சதவீதம் 

India’s Retail Inflation Rate in the month of July 2023 – 7.44%

தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலை எகிறுவதும், பின் சரிவதும் அடிப்படை பொருளாதாரத்தில் தேவைக்கும், உற்பத்திக்குமான இடைவெளியின் காரணமாக தான். நாட்டின் நுகர்வோர் விலை(Consumer Price Index – CPI) என்றழைக்கப்படும் சில்லரை விலை பணவீக்கம் ஜூலை மாத முடிவில் 7.44 சதவீதமாக அதிகரித்துள்ளது. 

ஜூன் மாத முடிவில் இது 4.87 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. உணவுப்பொருட்களின் பணவீக்க விலை 11.51 சதவீதம் என்ற அளவில் அதிகரித்ததால், ஜூலை மாத சில்லரை விலை பணவீக்கம் உயர்ந்துள்ளது. இது கடந்த 15 மாதங்களில் காணப்பட்ட அதிகபட்ச அளவாகும். 

உணவுப்பொருட்களின் பணவீக்கத்தில் காய்கறிகளின் விலை 37.30 சதவீதமும், மசாலா பொருட்களின் விலை 21.60 சதவீதமும் மற்றும் பருப்பு வகைகளின் விலை 13.30 சதவீதம் என்ற அளவிலும் அதிகரித்து காணப்பட்டுள்ளது. இது போல தானியங்களின் விலை 13 சதவீதமாகவும், பால் பொருட்களின் விலை 8.3 சதவீதம் என்ற அளவிலும் அதிகரித்துள்ளது.

ஒளி மற்றும் எரிபொருட்களின்(Fuel and Light) விலை 3.7 சதவீதமும், வீட்டுமனை 4.5 சதவீதமும் ஜூலை மாதத்தில் உயர்ந்து காணப்படுகிறது. துணிமணிகள் மற்றும் காலணிகளின் விலையும் 5.6 சதவீதம் என்ற அளவில் உயர்ந்துள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த சில்லரை விலை பணவீக்க கணக்கீட்டில் உணவுப்பொருட்கள் மற்றும் குளிர்பானங்களின் பங்களிப்பு மட்டும் 46 சதவீதமாக உள்ளது.

india-inflation-cpi-Since 2012-2023

நடப்பு 2023-24ம் நிதியாண்டில் முதன்முறையாக ஜூலை மாத பணவீக்கம், மத்திய ரிசர்வ் வங்கியின் இலக்கினை கடந்து காணப்பட்டுள்ளது. நாட்டின் சில்லரை விலை பணவீக்கத்தை 2 சதவீதம் முதல் 6 சதவீதத்திற்குள்ளாக வைத்திருக்க மத்திய ரிசர்வ் வங்கி இலக்கு நிர்ணயித்துள்ளது கவனிக்கத்தக்கது. நாடு முழுவதும் ஒழுங்கற்ற மற்றும் தாமதமான பருவமழை முறை, உணவுப்பொருட்களின் விலை உயர்வுக்கு வழி வகுத்துள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

மீண்டும் அதிகரித்த நாட்டின் சில்லரை விலை பணவீக்கம் – பிப்ரவரி 2021

மீண்டும் அதிகரித்த நாட்டின் சில்லரை விலை பணவீக்கம் – பிப்ரவரி 2021

India’s Retail Inflation to 5.03 Percent in February 2021 – CPI

நாட்டின் சில்லரை விலை பணவீக்கம் கடந்த ஜனவரி மாதத்தில் 4.06 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது பிப்ரவரி மாதத்திற்கான பணவீக்க தகவல் வெளியிடப்பட்டுள்ளது. பிப்ரவரி 2021 மாதத்தில் நுகர்வோர் விலை பணவீக்கம்(Consumer price index) 5.03 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது. இது சந்தை எதிர்பார்த்த 4.83 சதவீதம் என்ற அளவை காட்டிலும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உணவு பொருட்களில் காணப்பட்ட விலை உயர்வால் கடந்த மாத பணவீக்கம் அதிகரித்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டின் மே மாதத்தில் 1.89 சதவீதம் என்ற அளவை கொண்டிருந்த உணவுப்பொருட்களின் பணவீக்க விகிதம், தற்போது 3.87 சதவீதமாக உள்ளது.

இது போல பருப்பு வகைகளின் பணவீக்க விகிதம் 12.54 சதவீதமாக அதிகரித்துள்ளது கவனிக்கத்தக்கது. அதே வேளையில் காய்கறிகளின் விலை சற்று குறைந்து 6.24 சதவீதமாக பிப்ரவரி மாதத்தில் நிறைவு பெற்றுள்ளது. துணிமணிகள் மற்றும் காலணிகள் 3.82 சதவீதத்திலிருந்து 4.21 சதவீதமாக அதிகரித்துள்ளது.

புகையிலை பொருட்கள் மற்றும் வீட்டுமனை பணவீக்க விகிதங்களில் பெரிதான ஏற்ற-இறக்கம் இல்லை எனலாம். ஒளி மற்றும் எரிபொருட்களின் விலைவாசி 3.87 சதவீதத்திலிருந்து 3.53 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த ஒரு வருட காலத்தில் பணவீக்க விகிதம் பெரும்பாலும் ஆறு சதவீதத்திற்கு மேலாக தான் இருந்துள்ளது. பாரத ரிசர்வ் வங்கியின் குறுகிய கால பணவீக்க விகித இலக்கு 2-6 சதவீதம் என்ற அளவிற்குள் சொல்லப்பட்டுள்ளது.

நாட்டின் பணவீக்க விகித அளவீட்டில் உணவு பொருட்கள் மற்றும் குளிர்பானங்கள் 45.86 சதவீத பங்களிப்பை கொண்டிருக்கின்றன. பால் பொருட்கள் 6.6 சதவீதமும், காய்கறிகள் 6.04 சதவீதமும், மாமிசம் மற்றும் மீன் வகைகள் 3.6 சதவீதத்தையும் கொண்டுள்ளது.

வீட்டுமனை 10 சதவீதத்தையும், கல்வி 4.46 சதவீதம் மற்றும் சுகாதாரம் 5.9 சதவீதத்தையும் பங்களிப்பாக பெற்றுள்ளது. எரிசக்தியில் பெரும்பாலும் இறக்குமதியை சார்ந்திருத்தல், பருவமழையின் நிச்சயமற்ற தன்மை, மோசமான சாலைகள் மற்றும் உட்கட்டமைப்பில் மேம்பாடு இல்லாதது, அதிக நிதி பற்றாக்குறை மற்றும் அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்வதில் உள்ள சிக்கல் ஆகியவை சில்லரை விலை பணவீக்க ஏற்ற-இறக்கத்திற்கு பெரும்பாலும் காரணமாக உள்ளன.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

நாட்டின் சில்லரை விலை பணவீக்கம் 3.21 சதவீதமாக உயர்வு

நாட்டின் சில்லரை விலை பணவீக்கம் 3.21 சதவீதமாக உயர்வு

India’s Retail Inflation rises to 3.21 Percent in August 2019

நாட்டின் நுகர்வோர் விலை பணவீக்கம் என்று சொல்லப்படும் சில்லரை பணவீக்கம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 3.21 சதவீதமாக இருந்துள்ளது. இது கடந்த ஜூலை மாதத்தில் 3.15 சதவீதமாகவும், கடந்த 2018ம் வருடம் இதே காலத்தில் 3.18 சதவீதமாகவும் இருந்தது.

இருப்பினும் சந்தை எதிர்பார்த்த 3.30 சதவீதம் என்ற அளவை எட்டவில்லை. அதே வேளையில் பாரத ரிசர்வ் வங்கியின்(RBI) நடுத்தர கால இலக்கான 4 சதவீத பணவீக்கம் என்ற அளவிற்குள் உள்ளது பொருளாதாரத்திற்கு சாதகமானது. கடந்த 13 மாத காலமாக நாட்டின் சில்லரை விலை பணவீக்கம் 4 சதவீதம் என்ற அளவை தாண்டவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

உணவு பொருட்களின்(Food Prices) விலை உயர்வால் தற்போது சொல்லப்பட்ட பணவீக்க அளவு அதிகரித்துள்ளது. மாமிசம் மற்றும் மீன் வகைகள் 8.51 சதவீதமும், காய்கறிகள் 6.90 சதவீதமும், பருப்பு வகைகள் 6.94 சதவீதம் என்ற அளவிலும் உயர்ந்துள்ளது. எண்ணெய் மற்றும் கொழுப்பு, பால் சார்ந்த பொருட்களின் விலையும் சிறிய அளவில் ஏற்றம் பெற்றுள்ளது.

அதே வேளையில் பழங்கள் மற்றும் சர்க்கரை வகைகளின் பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் சரிந்துள்ளது. கிராமப்புற பணவீக்கம்(Rural Inflation) 2.18 சதவீதமாகவும், நகர்புறத்தில்(Urban) 4.49 சதவீதம் என்ற அளவிலும் சொல்லப்பட்டுள்ளது. மாதாந்திர அடிப்படையில் நுகர்வோர் விலை 0.49 சதவீதம் அதிகரித்துள்ளது. இது கடந்த ஜூலை மாதம் 0.91 சதவீதமாக உயர்ந்துள்ளது.

நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம்(Unemployment rate) கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 8.19 சதவீதமாக அதிகரித்துள்ளது கவலை அளிக்கிறது. நகர்புறத்தில் 9.71 சதவீதமும், கிராமப்புறத்தில் 7.48 சதவீதம் என்ற அளவிலும் வேலைவாய்ப்பின்மை நிலவுகிறது. இருப்பினும், தொழிற்துறை உற்பத்தி குறியீடு(Industrial Production) கடந்த ஜூலை மாதத்தில் 4.3 சதவீதமாக கூறப்பட்டுள்ளது சாதகமான விஷயம்.

கடந்த ஜூன் மாத தொழிற்துறை உற்பத்தி குறியீடு(IIP) 1.2 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஒரு வருட காலத்தில் அதிகபட்சமாக 2018ம் வருடம் அக்டோபர் மாதத்தில் 8.4 சதவீதமாக இருந்துள்ளது.

நாட்டின் நுகர்வோர் விலை பணவீக்கம் கடந்த 2012ம் ஆண்டு முதல் சராசரியாக 6 சதவீதம் என்ற அளவில் இருந்துள்ளது. 2013ம் வருடம் நவம்பர் மாதத்தில் அதிகபட்சமாக 12.17 சதவீதமும், 2017ம் வருடத்தின் ஜூன் மாதத்தில் 1.54 சதவீதம் என்ற குறைந்த அளவிலும் இருந்தது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com