Tag Archives: rbi policy

நாட்டின் பொருளாதாரத்தில் அடுத்தகட்ட நிலை என்ன ? மத்திய ரிசர்வ் வங்கி

நாட்டின் பொருளாதாரத்தில் அடுத்தகட்ட நிலை என்ன ? மத்திய ரிசர்வ் வங்கி 

REPO Rate unchanged, the next step on Nation’s Growth – RBI Monetary Policy

 

கடந்த திங்கட்கிழமை(05-04-2021) மத்திய நிதிக்கொள்கை குழு சார்பில் நடைபெற்ற கூட்டம் இன்றுடன் முடிவடைந்தது. கூட்டத்தின் முடிவில் வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் சார்ந்த தகவலும், நாட்டின் பொருளாதார வளர்ச்சி சார்ந்த அறிக்கைகளும் பாரத ரிசர்வ் வங்கி சார்பில் வெளியிடப்பட்டது.

 

தொடர்ச்சியாக ஐந்தாவது முறை வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என மத்திய ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. நடப்பில் ரெப்போ வட்டி விகிதம் 4 சதவீதமாக உள்ளது. இது போல ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதத்திலும்(Reverse REPO) எந்த மாற்றமுமின்றி 3.35 சதவீதமாக தொடரும் என சொல்லப்பட்டுள்ளது.

 

நீடித்த அடிப்படையில் வளர்ச்சியை தக்கவைக்க தேவையான அளவிற்கு நிலைப்பாட்டை தொடரவும், பணவீக்கத்தை கட்டுக்குள் வைத்திருக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறுகிய காலத்தில் நாட்டின் பணவீக்கம் ஏற்ற-இறக்கத்திற்கு உட்படலாம் எனவும், அதனை சார்ந்து தான் தற்போதைய வங்கி வட்டி விகித முடிவு எடுக்கப்பட்டுள்ளது என பாரத ரிசர்வ் வங்கி(RBI) கூறியுள்ளது.

 

நடப்பில் காணப்படும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை அதிகமாகி வரும் நிலையில், தடுப்பூசி திட்டம் சற்று சாதகமாக உள்ளது. எனினும் வரும் காலங்களை எச்சரிக்கை தன்மையாக கொண்டு பொருளாதார வளர்ச்சி மற்றும் பணவீக்கம் சார்ந்த அறிக்கைகள் மதிப்பிடப்பட்டுள்ளது.

 

பிப்ரவரி மாத சில்லரை விலை பணவீக்கம்(CPI Retail Inflation) 5.03 சதவீதமாக சொல்லப்பட்டிருந்த நிலையில், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில்(ஏப்ரல்-ஜூன்) 5.2 சதவீதமாக இருக்கும் எனவும், ஜூலை-செப்டம்பர் காலாண்டிலும் இதே அளவு தொடரும் எனவும் சொல்லப்பட்டிருக்கிறது.

 

2021-22ம் நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் சற்று குறைந்து 4.4 சதவீதமாகவும், நான்காம் காலாண்டில் இது 5.1 சதவீதமாக அதிகரிக்கலாம் என பாரத ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 2025-26ம் நிதி ஆண்டின் மார்ச் மாதம் வரை பணவீக்க இலக்கு 2-6 சதவீதம் என்ற அளவில் இருக்கும் என நிதிக்கொள்கை குழு கூட்ட முடிவில் சொல்லப்பட்டுள்ளது.

 

Consumer Confidence - CI - RBI Policy April 2021

 

வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் பணவீக்க விகிதம், நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை விட சற்று அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. உலகளவில் காணப்படும் சந்தை பொருட்களின் விலை அதிகரிக்க தொடங்கியதும் இதற்கு காரணமாக உள்ளது. கடந்த ஆண்டினை ஒப்பிடும் போது, நடப்பில் உலக பங்குச்சந்தைகளும், அரசு பத்திரங்களுக்கான வட்டி விகிதமும் அதிகரித்து வருவது கவனிக்கத்தக்கது. உலகளவில் காணப்படும் ஒருவித நிலையற்ற தன்மையும், சந்தை மதிப்பு ஏற்றமும் தற்போது விற்பனை அழுத்தத்தினை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பெரும்பாலான சந்தையில் பங்குகள் விற்பனை அதிகரித்து வருகிறது. 

 

கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகான பொருளாதார ஊக்குவிப்பு காரணமாக, வரக்கூடிய காலத்தில் நாட்டின் வளர்ச்சி சாதகமான தன்மையை கொண்டிருக்கும் என மத்திய வங்கி கூறியுள்ளது. இரண்டாவது அலை  காரணமாக பெரும்பாலான மாநிலங்களில் நுகர்வோர்களின் நம்பிக்கை குறைந்துள்ளது. இதனையும் கருத்தில் கொண்டு, 2021-22ம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 10.5 சதவீதமாக இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

 

அதாவது ஏப்ரல்-ஜூன் 2021 காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி(GDP growth) 26.2 சதவீதமாகவும், இது இரண்டாம் மற்றும் மூன்றாம் காலாண்டுகள் முறையே 8.3 சதவீதம் மற்றும் 5.4 சதவீதமாக இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டின் நான்காம் காலாண்டில்(ஜனவரி-மார்ச் 2022) 6.2 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ளது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com

 

Advertisement

மத்திய வங்கியின் சமீபத்திய வட்டி விகிதம் – சிறு பார்வை

மத்திய வங்கியின் சமீபத்திய வட்டி விகிதம் – சிறு பார்வை 

Recent Bank Interest rates – RBI Policy review

நாட்டின் ஜனவரி மாத சில்லரை விலை பணவீக்கம் 4.06 சதவீதமாக இருந்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டின் அக்டோபர் மாதத்தில் அதிகபட்சமாக 7.61 சதவீதமாக பணவீக்க விகிதம் இருந்தது. பாரத ரிசர்வ் வங்கியின் குறுகிய கால இலக்காக 2-6 சதவீதம் என்ற அளவில் சில்லரை விலை பணவீக்கம் சொல்லப்பட்டுள்ளது.

பணவீக்கத்தை அடிப்படையாக கொண்டு தான் பாரத ரிசர்வ் வங்கியின் வட்டி விகித மாற்றமும் அறிவிக்கப்படுகிறது. சமீபத்திய மத்திய நிதிக்கொள்கை குழு கூட்டம்(RBI Monetary Policy) இரு வாரங்களுக்கு முன்பு நடைபெற்றிருந்தது. வட்டி விகிதங்களில் எந்த மாற்றமுமில்லை எனவும், அதற்கு முந்தைய காலத்தில்  சொல்லப்பட்ட வட்டி விகிதங்கள் தொடரும் எனவும் ரிசர்வ் வங்கி சார்பில் சொல்லப்பட்டிருந்தது.

வங்கிகளுக்கான ரெப்போ(REPO) வட்டி விகிதம் தற்போது 4 சதவீதமாக உள்ளது. பாரத ரிசர்வ் வங்கியிடமிருந்து, நாட்டில் உள்ள வணிக வங்கிகள் கடன் பெறும் விகிதம் தான் ரெப்போ வட்டி விகிதமாக சொல்லப்படுகிறது. பொதுவாக நாட்டில் நிலவும் பணவீக்கத்தை(விலைவாசி) கட்டுப்படுத்த, ரெப்போ வட்டி விகிதத்தை மத்திய வங்கி ஒரு கருவியாக பயன்படுத்தும்.

ரிவர்ஸ் ரெப்போ(Reverse REPO) வட்டி விகிதம் 3.35 சதவீதமாக உள்ளது. நாட்டில் உள்ள வங்கிகளிடம்  இருந்து மத்திய வங்கி கடன் வாங்கும் விகிதத்தை, ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் என்கிறோம். விளிம்பு நிலை விகிதம்(Marginal Standing Facility Rate) 4.25 சதவீதமாகவும், வங்கி விகிதம் 4.25 சதவீதமாகவும் உள்ளது.

வங்கிகள், மத்திய ரிசர்வ் வங்கியிடம் வைத்திருக்க வேண்டிய ரொக்க கையிருப்பு விகிதம்(Cash Reserve Ratio – CRR) 3 சதவீதமாகவும், எஸ்.எல்.ஆர்.(SLR) விகிதம் 18 சதவீதமாகவும் உள்ளது. ரொக்கம், தங்கம், பத்திரங்கள் மற்றும் பிற அங்கீகரிக்கப்பட்ட வடிவில் வங்கிகள் பராமரிக்க வேண்டிய குறைந்தபட்ச வைப்புத்தொகை விகிதம் தான் எஸ்.எல்.ஆர். விகிதம்.

இது வங்கிகளின் செயல்பாட்டை மட்டுமில்லாமல், நாட்டின் கடன் வளர்ச்சியை ஒழுங்குபடுத்த உதவும். வங்கிகளின் அடிப்படை வட்டி விகிதம்(Base Rate – Lending / Deposit) 7.30% – 8.80% என்ற அளவில் சொல்லப்பட்டுள்ளது. வங்கி சேமிப்பு கணக்குக்கான வட்டி விகிதம் 2.70% – 3.00% என்ற அளவில் உள்ளது. ஒரு வருடத்திற்கு மேலான வைப்பு நிதி திட்டத்திற்கான வட்டி விகிதம் 4.90 சதவீதத்திலிருந்து 5.50 சதவீதம் வரை சொல்லப்பட்டிருக்கிறது.

2030ம் ஆண்டுடன் முடிவடையும் அரசு கடன் பத்திரங்களின் வருவாய்(5.85% GS 2030) ஆறு சதவீதத்திற்கு அருகாமையில் வர்த்தகமாகி வருகிறது. பணவீக்கம் மற்றும் பாரத ரிசர்வ் வங்கியின் கொள்கை குழு முடிவின் அடிப்படையில் தான் சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதமும், வங்கிகளின் வட்டி விகிதமும் மாறுபடும். பணவீக்கம் உயர்ந்தால் வங்கிகளின் வட்டி விகிதமும் உயர்த்தப்படும். எனவே, மத்திய வங்கி இதனை எச்சரிக்கையாக கையாளும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத வாராக்கடன் சிக்கல் – ரிசர்வ் வங்கி எச்சரிக்கை

கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத வாராக்கடன் சிக்கல் – ரிசர்வ் வங்கி எச்சரிக்கை  

Bad loans issue not seen in last 20 years – RBI Financial Stability Report 2021

கடந்த வெள்ளிக்கிழமை(08-01-2021) அன்று பாரத ரிசர்வ் வங்கி சார்பில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், கொரோனா பெருந்தொற்று ஊரடங்கின் போது நிதி சந்தையில் அனுமதிக்கப்பட்ட பணப்புழக்கத்தை திரும்ப பெற போவதாக பாரத ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. பணப்புழக்க மேலாண்மை கட்டமைப்பின்(Revised Liquidity Management Framework) கீழ் ஜனவரி 29,2021 அன்று வங்கிகளிடம் இருந்து ரூ.2,00,000 கோடியை ரிவர்ஸ் ரெப்போ விகிதத்தில் மத்திய வங்கி வாங்க உள்ளது.

இதன் காரணமாக சந்தையில் உள்ள பணப்புழக்கம் சற்று குறையும். மேலும் கொரோனாவுக்கு முன்னர் இருந்த சாதாரண பணப்புழக்கத்தை ஏற்படுத்த உள்ளதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. ரிவர்ஸ் ரெப்போ(Reverse REPO) விகிதம் என்பது நாட்டில் உள்ள வங்கிகளிடம் இருந்து ரிசர்வ் வங்கி பணம் பெறுவது அல்லது கடன் பெறும் நடவடிக்கையாகும்.

சொல்லப்பட்ட நிகழ்வின் தொடர்ச்சியாக நேற்று(11-01-2021) வெளியிடப்பட்ட நிதி நிலைத்தன்மை அறிக்கையில்(Financial Stability Report) சில பொருளாதார விஷயங்கள் அலசப்பட்டன. பெருந்தொற்று காலத்தில், மத்திய வங்கியின் கொள்கை செயல்பாடுகள் பொருளாதார சரிவை குறைத்ததாகவும், தொழில் மற்றும் தனிநபர் வருவாயில் ஏற்பட்ட சிக்கலை மீட்டெடுப்பதற்கும் உதவியதாக ரிசர்வ் வங்கி சொல்லியுள்ளது.

தடுப்பூசி வளர்ச்சி நேர்மறையான செய்தியாக இருந்தாலும், இரண்டாம் அலை அதிகப்படும் நிலையில் அது பொருளாதாரத்தை மேலும் பாதிக்கலாம். வங்கிகளின் கடன் வளர்ச்சி அடக்கமாக உள்ளதாகவும், ஒழுங்குமுறை விநியோகங்களின் உதவியுடன் வங்கிகளின் செயல்திறன் மேம்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

அதே வேளையில் செப்டம்பர் 2020 முடிவின் படி, நாட்டில் உள்ள வணிக வங்கிகளின் ஒட்டுமொத்த வாராக்கடன் விகிதம்(GNPA) 7.5 சதவீதமாக இருந்துள்ளது. இது வரும் செப்டம்பர் 2021க்குள் 13.5 சதவீதமாக உயரக்கூடும் எனவும் பாரத ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. வரக்கூடிய காலங்களில் உலக பொருளாதாரம் கடும் மந்தநிலையை அடையும் நிலையில், இந்த வாராக்கடன் விகிதம் 14.8 சதவீதம் வரை செல்லக்கூடும் எனவும் மத்திய வங்கி எச்சரித்துள்ளது.

கடந்தாண்டின் செப்டம்பர் காலத்தின் படி, பொதுத்துறை வங்கிகளின் மொத்த வாராக்கடன் விகிதம் 9.7 சதவீதமாக உள்ளது. அடிப்படை நிலையில்(Base Scenario) இந்த விகிதம் 2021ம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் 16.2 சதவீதம் வரை செல்லலாம் என சொல்லப்பட்டுள்ளது. இது தனியார் வங்கிகளில் 4.6 சதவீதத்திலிருந்து 7.9 சதவீதமாகவும், அன்னிய வங்கிகளில் 2.5 சதவீதத்திலிருந்து 5.4 சதவீதமாக செல்லும் என கூறப்பட்டுள்ளது.

கடுமையான பொருளாதார மந்தநிலையில் பொதுத்துறை வங்கிகளின் மொத்த வாராக்கடன் விகிதம் 17.6 சதவீதம், தனியார் வங்கிகளில் 8.8 சதவீதம் மற்றும் அன்னிய வங்கிகளில் 6.5 சதவீதமாக இருக்கலாம் என பாரத ரிசர்வ் தெரிவித்துள்ளது.

இது போன்ற நிலை கடந்த 20 வருடங்களில் காணப்படாத வாராக்கடன்  விகிதமாக இருக்கலாம். கடந்த சில வருடங்களாக மத்திய வங்கி சார்பில், நாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகளிலும், வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களிலும் பணப்புழக்கத்தை ஏற்படுத்துவதற்காக மூலதன உட்செலுத்தல்(Capital Infusion) நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

மத்திய நிதிக்கொள்கை குழு கூட்டம் – மத்திய ரிசர்வ் வங்கியின் நிதித்துளிகள்

மத்திய நிதிக்கொள்கை குழு கூட்டம் – மத்திய ரிசர்வ் வங்கியின் நிதித்துளிகள் 

RBI’s Monetary Policy Committee – Highlights – August 2020

நடப்பு ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி முதல் 6ம் தேதி வரை நடைபெற்ற மத்திய நிதிக்கொள்கை குழு கூட்டத்தில்(MPC) சில முடிவுகள் சொல்லப்பட்டது. ஆறு உறுப்பினர்கள் கொண்ட இந்த குழு கூட்டம் நாட்டின் நிதி சார்ந்த விஷயங்களை விவாதிக்கும். பின்பு அதன் மூலம் எட்டப்பட்ட முடிவுகளை பொதுவெளியில் வெளியிடும்.

நேற்று முடிவுக்கு வந்த நிதிக்கொள்கை குழு கூட்டத்தில் வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில்(REPO Rate) எந்த மாற்றமுமில்லை எனவும், முன்னர் சொல்லப்பட்ட 4 சதவீத வட்டி விகிதம் தொடரும் எனவும் சொல்லப்பட்டுள்ளது. இது போல ரிவர்ஸ் ரெப்போ விகிதத்திலும்(Reverse REPO) எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

வங்கிகளின் வட்டி விகிதமும் 4.25 சதவீதத்தில் தொடரும் என பாரத ரிசர்வ் வங்கி சார்பில் கூறப்பட்டுள்ளது. குறுகிய காலத்தில் நாட்டின் பணவீக்கம் 4 சதவீதம் என்ற இலக்கை (+/- 2) ஒட்டி இருக்கும் எனவும், இதனை சார்ந்தே பொருளாதார வளர்ச்சியும் இருப்பதாக மத்திய வங்கி கூறியுள்ளது.

நடப்பாண்டின் முதல் காலாண்டை காட்டிலும், இரண்டாவது காலாண்டில் தான் உலக பொருளாதாரம் சுணக்கம் அடைந்துள்ளதாகவும் சொல்லியுள்ளது. இரண்டாம் காலாண்டில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா பிராந்தியங்களில் பொருளாதார வளர்ச்சி எதிர்மறையாக சென்றுள்ளது.

உள்நாட்டில் மே மாதத்திற்கு பிறகு தொழில்கள் ஓரளவு நடைபெற்று வந்தாலும், கொரோனா தாக்கத்தால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக முழுமையான தொழில் இன்னும் நடைபெறவில்லை. தொழிற்துறை உற்பத்தி குறியீடும் கடந்த சில மாதங்களாக தொய்வு நிலையில் உள்ளது.

இருப்பினும், இந்த நிலை 2020ம் ஆண்டின் இரண்டாம் பாதியில் சரிசெய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேளாண்மை துறை நல்ல வளர்ச்சி பாதையில் உள்ளது. இருப்பினும் வரும் நாட்களில் தேவை அதிகரிப்பதன் மூலம் இதற்கான விலை அதிகரிக்க கூடும். டிராக்டர்கள், உரங்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் அத்தியாவசிய  உணவுப்பொருட்கள் நல்ல விற்பனை வளர்ச்சியை சமீபத்தில் பெற்றுள்ளது.

நிதி சந்தைகளில் காணப்படும் ஏற்ற-இறக்கங்கள் மற்றும் உயரும் சொத்து மதிப்புகள்(Asset Prices) எதிர்பாராத அபாயங்களை ஏற்படுத்தி வருகிறது குறிப்பிடத்தக்கது. கடந்த 2019ம் ஆண்டின் பிப்ரவரி மாதத்திற்கு பிறகு, இதுவரை 2.5 சதவீதம் அளவில் வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறாக முக்கிய விஷயங்களை பாரத ரிசர்வ் வங்கி நேற்றைய கூட்டத்தின் முடிவில் கூறியுள்ளது. அடுத்த கூட்டம் வரும் செப்டம்பர் மாத இறுதியில் நடைபெற உள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

வங்கி ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை – பாரத ரிசர்வ் வங்கி

வங்கி ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை – பாரத ரிசர்வ் வங்கி 

RBI keeps REPO Rate Unchanged – Monetary Policy Committee(MPC)

பாரத ரிசர்வ் வங்கியின் சார்பில் நடப்பு நிதியாண்டின் ஆறாவது நிதிக்கொள்கை குழு கூட்டம் நடைபெற்றது. நேற்று(06-02-2020) வெளியிடப்பட்ட இந்த கூட்டத்தின் முடிவில் வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் ஏதுமில்லை என கூறப்பட்டுள்ளது. இதனால் கடந்த முறை இருந்த 5.15 சதவீதமே இம்முறையும் தொடரும்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

ரிவர்ஸ் ரெப்போ விகிதம்(Reverse Repo) 4.90 சதவீதமாகவும், வங்கி விகிதம் 5.40 சதவீதமாகவும் உள்ளது. இந்த முடிவு குறுகிய கால பணவீக்க இலக்கை சார்ந்து தான் நிர்ணயிக்கப்பட்டதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. குறுகிய கால சில்லரை பணவீக்க அடிப்படை இலக்கு 4 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது. இந்த அடிப்படை இலக்கிலிருந்து 2 சதவீதம் கூடுதலாகவோ அல்லது 2 % குறைவாகவோ இருக்கலாம்.

சேமிப்பு கணக்கிற்கான வட்டி விகிதம் 3.25 % – 3.50 % என்ற அளவில் உள்ளது. ஒரு வருடத்திற்கான வங்கி டெபாசிட் வட்டி விகிதம் 6.10 % – 6.40 % என சொல்லப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் பணவீக்க விகிதத்தை கட்டுப்படுத்த மற்றும் வளர்ச்சியை ஆதரிப்பதற்காக இடவசதி நிலைப்பாட்டை பாரத ரிசர்வ் வங்கி கையாண்டு வருகிறது. இதன் காரணமாகவே தற்போதைய ரெப்போ விகிதத்தில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.

நடப்பு நிதியாண்டின் நான்காம் காலாண்டில் பணவீக்க விகிதம்(CPI Inflation) 6.5 சதவீதமாக இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் 5.1 – 4.7சதவீதமாக இருக்கலாம் என சொல்லப்பட்டிருந்தது. 2020-21ம் நிதியாண்டுக்கான நாட்டின் பொருளாதார வளர்ச்சி(GDP Growth) 6 சதவீதமாக இருக்கலாம் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் மாத சில்லரை விலை பணவீக்கம் 7.35 சதவீதமாக இருந்தது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியும் கடந்த செப்டம்பர் 2019 காலாண்டில் 4.5 சதவீதமாக இருந்தது. இது போன்ற சூழ்நிலையில், ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தினால் அது பொருளாதார மந்தநிலையை மேலும் அதிகப்படுத்தும்.

ரெப்போ விகிதம் குறைக்கப்பட்டிருந்தால், அது வங்கி வட்டி விகிதத்தில் எதிர்மறையான நிலையை கொண்டிருக்கலாம். இருப்பினும், வருங்காலத்தில் வங்கி ரெப்போ விகிதத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு உள்ளதாக பாரத ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. தற்போதைய வங்கி வட்டி விகித நிலை கடன் பெறும் நிறுவனங்களுக்கும், தனிநபர்களுக்கும் பயன்பட கூடும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthamadurai.com

நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமே : பாரத ரிசர்வ் வங்கி – பொருளாதார மந்தநிலை

நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமே : பாரத ரிசர்வ் வங்கி – பொருளாதார மந்தநிலை 

Unchanged in REPO rate, Cut in GDP growth  – RBI Policy – Economy Slowdown 

வியாழக்கிழமை (05-12-2019) அன்று நடைபெற்ற மத்திய நிதி கொள்கை குழு கூட்டத்தின்(Monetary Policy Committee) முடிவில் வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை என பாரத ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கடந்த ஐந்து காலாண்டுகளாக குறைக்கப்பட்டு வந்த ரெப்போ வட்டி விகிதம் இம்முறை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

நடப்பில் இதுவரை 135 அடிப்படை புள்ளிகள் வரை ரெப்போ விகிதம்(REPO Rate) குறைக்கப்பட்டுள்ளது. கடந்த காலாண்டில் நாட்டின் சில்லரை விலை பணவீக்கம், பாரத ரிசர்வ் வங்கியின் குறுகிய கால இலக்கான 4 சதவீதத்தை தாண்டி 4.62 சதவீதமாக இருந்தது.

தற்போது காணப்படும் விலை உயர்வு மேலும் அதிகரிக்கும் சூழ்நிலையில், டிசம்பர் காலத்திற்கு 5 சதவீத பணவீக்கத்தை கடக்கலாம். இவ்வாறான நிலையில், பாரத ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை குறைத்திருந்தால் பணவீக்கத்திற்கு குறைவான வட்டி விகிதம் காணப்படலாம்.

ஆனால் ரெப்போ வட்டி விகிதத்தில் சந்தை எதிர்பார்த்த 25 புள்ளிகள் குறைப்பு இம்முறை நடக்கவில்லை. மாறாக ஏற்கனவே இருந்த 5.15 சதவீத ரெப்போ விகிதம் தொடரும் எனவும் சொல்லப்பட்டுள்ளது. வருங்காலங்களில் ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு இருக்கலாம் எனவும் பாரத ரிசர்வ் வங்கி சுட்டி காட்டியுள்ளது.

நிதி கொள்கை குழு கூட்டத்தில் சொல்லப்பட்ட தகவல் : ரெப்போ விகிதம் 5.15 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 4.90 சதவீதமாகவும் தொடரும். 2019-20ம் நிதியாண்டின் இரண்டாம் அரையாண்டில் நாட்டின் பணவீக்கம்(Inflation) 4.70 % – 5.10 % என்ற நிலையில் இருக்கலாம். நடப்பு நிதியாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது முன்னர் 6.10 சதவீதமாக சொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி கடந்த சில காலாண்டுகளாக குறைந்து வருவதும், அதே வேளையில் சமீப கால விலைவாசி உயர்வும், வேலைவாய்ப்பின்மை விகிதமும் பொருளாதார மந்தநிலையை அதிகப்படுத்துகிறது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் 5.40 சதவீதமாக குறைப்பு

வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் 5.40 சதவீதமாக குறைப்பு 

REPO rate cut to 5.40 Percent – RBI

 

நேற்று (07-08-2019) நடைபெற்ற மத்திய நிதி கொள்கை குழு கூட்டத்தின்(Monetary Policy Committee) முடிவில் வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் 35 அடிப்படை புள்ளிகள் வரை குறைக்கப்பட்டுள்ளது. இதனால் புதிய ரெப்போ வட்டி விகிதம் 5.75 சதவீதத்திலிருந்து 5.40 சதவீதமாக குறைந்துள்ளது.

 

ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 5.15 சதவீதமாகவும், வங்கி விகிதம் மற்றும் விளிம்பு நிலை(MCLR) விகிதம் 5.65 சதவீதமாகவும் மாற்றப்பட்டுள்ளது. ரொக்க கையிருப்பு 4 சதவீதம் என்ற நிலையிலும், எஸ்.எல்.ஆர்.(SLR) விகிதம் 18.75 சதவீதமாகவும் உள்ளது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

பொருளாதார மந்த நிலை காரணமாகவும், அதே சூழ்நிலையில் பணவீக்க விகிதத்தை கவனத்தில் கொண்டும், இந்த வட்டி விகித குறைப்பு அறிவிக்கப்பட்டதாக பாரத ரிசர்வ் வங்கி(Reserve Bank of India) சார்பில் கூறப்பட்டுள்ளது. இரு நாடுகளிடையே ஏற்பட்டுள்ள வர்த்தக போர், அமெரிக்காவில் தொழில் முதலீடு பலவீனமாக இருப்பது, பிரிட்டனின் பிரெக்ஸிட்(Brexit) நிகழ்வால் உற்பத்தி துறைக்கு சாதகம் இல்லாமை போன்றவை உலகளாவிய பாதிக்கும் காரணிகளாக சொல்லப்பட்டுள்ளன.

 

ஜப்பானின் தொழில்துறை புள்ளி விவரங்கள், வரும் இரண்டாம் காலாண்டிலும் பொருளாதாரம் மந்தமடைய கூடும் என்ற செய்தியை தெரிவிக்கிறது. வேகமாக வளரும் நாடுகளில் பொருளாதார புள்ளி விவரங்கள் சாதகமாக இல்லை என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

 

சீனா, ரஷ்யா மற்றும் பிரேசில் போன்ற நாடுகளில் உற்பத்தி துறை மற்றும் விற்பனை வளர்ச்சி வெகுவாக குறைந்துள்ளது. இந்த நிலை அடுத்த காலாண்டிலும் நீடிக்கலாம் என சொல்லப்பட்டுள்ளது. வாகன துறையில்(Automotive Sector) ஏற்பட்டுள்ள சுணக்கம் சரி செய்யப்பட்டால் தான் அது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்குவிக்கும்.

 

பணப்புழக்கத்துக்கான உபரி தொகை(Liquidity Surplus) போதுமான அளவு இருப்பதாக மத்திய ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. ஜூன் மாத முடிவில் இது 51,710 கோடி ரூபாயாகவும், ஜூலையில் ரூ. 1,30,931 கோடியாகவும் இருந்துள்ளது. நடப்பு ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி வரை உள்ள உபரி தொகை, ரூ. 2,04,921 கோடி.

 

உள்நாட்டில் மழைப்பொழிவு, உற்பத்தி துறை மற்றும் வீட்டு மனை துறை தொய்வு நிலையில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. தனியார் முதலீடும் தேவையான அளவு வரவில்லை.  நடப்பு நிதி வருடத்தில் நாட்டின் பணவீக்க விகிதம்(Inflation) 4 சதவீதத்திற்குள் இருக்கும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இது போல நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதத்திற்கு கீழ் இருக்கும் எனவும், தற்போது குறைக்கப்பட்ட வட்டி விகிதம் கடந்த ஒன்பது வருடங்களில் இல்லாத அளவாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com

ரிசர்வ் வங்கியிலிருந்து வெளியேறும் துணை கவர்னர் – மீண்டும் ஒரு சர்ச்சை ?

ரிசர்வ் வங்கியிலிருந்து வெளியேறும் துணை கவர்னர் – மீண்டும் ஒரு சர்ச்சை ?

RBI’s Deputy Governor Viral Acharya’s exit – Hot Controversies

 

மத்திய ரிசர்வ் வங்கிக்கும், மத்தியில் அங்கம் வகிக்கும் எந்தவொரு அரசுக்கும் இடையே பல காலங்களாக முரண்பாடு இருந்து கொண்டே தான் வருகிறது. சில காலங்களுக்கு முன் கவர்னராக இருந்த திரு. ரகுராம் ராஜன் ரிசர்வ் வங்கியை விட்டு வெளியேறிய பிறகு, அது பல விவாதங்களாக மாறியது. பின்பு கவர்னராக அமர்ந்த திரு. உர்ஜித் படேலுக்கும்(Urjit Patel), மத்திய அரசுக்கும் இடையே நிதி சார்ந்த முரண்பாடுகள் ஏற்பட்டன.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

நெருக்கடியான சூழ்நிலையில் உர்ஜித் பட்டேல் தனது கவர்னர் பதவியை ராஜினாமா செய்தார். இது மாதிரியான நிலையில் தற்போது துணை கவர்னர்(Deputy Governor) பொறுப்பில் இருந்த திரு. விரல் ஆச்சார்யா தனது பதவியை விட்டு விலகியுள்ளார். இன்னும் அவருக்கான பதவிக்காலம் ஆறு மாதம் எஞ்சியுள்ள நிலையில், மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

 

பாரத ரிசர்வ் வங்கி(RBI) கவர்னருக்கும், மத்திய அரசுக்கும் இடையேயான இடைவெளி, தற்போது இருக்கும் அரசில் மட்டுமல்ல. இது போன்ற நிலை நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பும் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது. பாரத ரிசர்வ் வங்கியின் முக்கிய பொறுப்பாக பணவீக்கத்தை கட்டுக்குள்(Inflation) வைத்திருப்பதும், வங்கிகளின் நிதி நிலையை(Banking Regulations) கவனிப்பதும் தான் நடைமுறை செயலாக இருந்து வருகிறது.

 

சமீப காலமாக வங்கிகள் மற்றும் வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களின் கடன் அளிக்கும் சேவையில் சிக்கல்கள் இருந்து வருகின்றன. வங்கிகளின் வாராக்கடனும்(Bad loans) அதிகரித்த வண்ணம் உள்ள நிலையில், வங்கிகளின் இணைப்பும் நடந்து வருவது தவிர்க்க முடியாததாக மாறி விட்டது. சமீபத்திய மத்திய நிதிக்கொள்கை குழு(Monetary Policy Committee) முடிவுகளில் கவர்னருக்கும், துணை கவர்னருக்குமான தீர்மானம் வேறுபட்டு வருகிறது.

 

ரெப்போ வட்டி விகித(Repo rate) அறிவிப்பில் துணை கவர்னர் விரல் ஆச்சார்யாவுக்கு திருப்தி இல்லை என்பதும் தெரிய வந்துள்ளது. தற்போது ரிசர்வ் வங்கியின் கவர்னராக திரு. சக்திகாந்த தாஸ் உள்ளார். நாட்டின் 25வது கவர்னராக பதவியேற்ற சக்திகாந்த தாஸ்(Shaktikanta Das) ஓய்வு பெற்ற முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவார்.

 

விரல் ஆச்சார்யா கடந்த 2017ம் ஆண்டு முதல் பாரத ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் பதவியில் இருந்து வருகிறார். நடைமுறை நிதி தீர்மானத்தில் இவருக்கு திருப்தி இல்லை என்று செய்தி வந்திருப்பினும், சொந்த காரணங்களுக்காக தனது பதவியை ராஜினாமா செய்வதாக விரல் கூறியுள்ளார். மத்திய வங்கியில் இவரது செயல்பாடுகள் சிறப்பாக இருந்துள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கூறுகினறனர்.

 

பாரத ரிசர்வ் வங்கியில் தன்னிச்சையான முடிவுகளை எடுக்க முடியாமை, மத்திய அரசின் ஒத்துழைப்பு ரிசர்வ் வங்கிக்கு கிடைக்க பெறாதது என பல காரணங்கள் சொல்லப்பட்டு வருகிற சூழ்நிலையில், இவருக்கு பதிலாக புதிய துணை கவர்னர் யார் என்பது பற்றி இன்னும் முடிவெடுக்கப்படவில்லை.

 

உலகளவில் காணப்படும் பொருளாதார மந்த நிலை மற்றும் நாட்டில் ஏற்பட்டு கொண்டிருக்கும் வங்கிகளின் நிதி சிக்கலை, நடப்பில் இருக்கும் மத்திய அரசு எவ்வாறு தீர்வு காணப்போகிறது என்பதில் தான் அடுத்தகட்ட பொருளாதார நகர்வு அமையும். மத்திய அரசும், மத்திய வங்கியும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே, அது நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com

 

வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் 5.75 சதவீதமாக குறைப்பு

வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் 5.75 சதவீதமாக குறைப்பு

Bank’s Repo rate cuts to 5.75 percent by 25 bps – Monetary Policy Committee

 

நேற்று(06-06-2019) நடைபெற்ற மத்திய நிதிக்கொள்கை குழு(Monetary Policy Committee – MPC) முடிவில் வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் 25 அடிப்படை புள்ளிகள் வரை குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் முன்னர் இருந்த 6 சதவீதத்திலிருந்து தற்போது 5.75 சதவீதமாக மாற்றமடைந்துள்ளது. ரெப்போ வட்டி விகிதம்(Repo Rate) என்பது மத்திய ரிசர்வ் வங்கி, நாட்டில் உள்ள வங்கிகளுக்கு குறுகிய கால கடனாக அளிக்கும் தொகைக்கு நிர்ணயிக்கப்படும் வட்டி விகிதமாகும்.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

ரிவர்ஸ் ரெப்போ வட்டி(Reverse Repo) விகிதம் 5.50 சதவீதமாகவும், வங்கி வட்டி விகிதம் 6 சதவீதமாகவும் மற்றும் ரொக்க இருப்பு விகிதம்(CRR) 4 சதவீதமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக வங்கிகள் தங்களிடம் உள்ள உபரித்தொகையை, மத்திய ரிசர்வ் வங்கியிடம் டெபாசிட் செய்வார்கள். இந்த உபரி தொகைக்கு வழங்கப்படும் வட்டி விகிதம் தான் ரிவர்ஸ் ரெப்போ விகிதம் என்றழைக்கப்படுகிறது.

 

நடப்பு வருடத்தில் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக ரெப்போ விகிதம் குறைக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. தற்போது அறிவிக்கப்பட்ட வட்டி விகித குறைப்பு கடந்த ஒன்பது வருடங்களில் காணப்பட்ட குறைவான ரெப்போ விகிதமாகும்.

 

நுகர்வோர் பணவீக்கம்(CPI Inflation) நடப்பு 2019-20ம் நிதியாண்டின் முதல் அரையாண்டில் 3.1 சதவீதத்திற்குள் இருக்கும் எனவும், இரண்டாம் அரையாண்டில் 3.7 சதவீதத்திற்குள் இருக்கும் எனவும் மத்திய நிதிக்கொள்கை குழு மதிப்பிட்டுள்ளது. மேலும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2019-20ம்  நிதியாண்டின் முடிவில் 7 சதவீதமாக இருக்கும் என கூறியுள்ளது. இதற்கு முந்தைய மதிப்பீட்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம்(GDP) 7.2 சதவீதமாக இருக்கலாம் என கூறப்பட்டிருந்தது.

 

மத்திய நிதிக்கொள்கை குழுவில் இம்முறை பங்கேற்ற ஆறு உறுப்பினர்களும் ரெப்போ வட்டி விகிதத்தை 25 புள்ளிகள் வரை குறைப்பதை ஆதரித்துள்ளனர். ரெப்போ வட்டி விகித குறைப்பு(RBI Policy) சாதகமான அம்சமாக அமைந்திருந்தும், நாட்டின் பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு குறைக்கப்பட்டதால் நேற்று இந்திய பங்குச்சந்தை ஒரு சதவீதத்திற்கு மேல் இறக்கத்தை கண்டிருந்தது.

 

ஏற்கனவே வங்கிகளின் வாராக்கடன் அளவு மற்றும் நிதி நெருக்கடி(Liquidity crunch) அதிகமாகியுள்ள நேரத்தில், தற்போது அறிவிக்கப்பட்ட வட்டி விகித சலுகை வங்கிகளுக்கும், நிறுவனங்களுக்கும் எவ்வாறு சாதகமாக அமையும் என்பது வரும் நாட்களில் தெரிய வரும். அடுத்த மத்திய நிதிக்கொள்கை குழு கூட்டம் வரும் ஆகஸ்ட் மாதத்தின் முதல் வாரத்தில் நடைபெற உள்ளது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 % உயர்த்தியது ரிசர்வ் வங்கி

ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 % உயர்த்தியது ரிசர்வ் வங்கி

RBI hikes repo rate by 0.25 percent – July 2018

 

புதன் கிழமை (01-08-2018) நடைபெற்ற மத்திய நிதி கொள்கை குழு கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் உயர்த்தியது (25 basis points) பாரத ரிசர்வ் வங்கி. பாரத ரிசர்வ் வங்கி, இந்த வருடத்தில் இரண்டாவது முறையாக ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

ரெப்போ விகிதம் அதிகரிப்பால், தற்போது 6.25 சதவீதம் என்ற அளவிலிருந்து 6.50 சதவீதம்(Repo Rate) என்ற நிலையை கொண்டுள்ளது. இதே நேரத்தில் ரிவெர்ஸ் ரெப்போ விகிதமும்(Reverse Repo Rate) 0.25 சதவீதம் அதிகரித்து 6.25 % ஆக உள்ளது. Reverse Repo விகிதம் என்பது வணிக வங்கிகளிடம் இருந்து பாரத ரிசர்வ் வங்கி பெறும் தொகைக்கான விகிதம் ஆகும்.

 

ரிசர்வ் வங்கியின் இந்த முடிவால், வங்கிகளில் வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் உயரும். பொதுவாக வங்கிகளுக்கு பண வரவு நன்றாக இருக்கும் போது, வாடிக்கையாளர்களுக்கு கடன்கள் சலுகை விகிதத்தில் தரப்படலாம். ஆனால் தற்போதைய நிலையில், கடந்த சில காலங்களாக வங்கி டெபாசிட் வட்டி விகிதம் குறைவாக இருந்ததால், முதலீட்டாளர்கள் பரஸ்பர நிதி முதலீடுகளை தேர்ந்தெடுத்துள்ளனர். அதனால் வங்கியின் வட்டி விகித உயர்வை எதிர்பார்க்கலாம்.

 

இந்த உயர்வால்(RBI Monetary Policy), வீட்டுக்கடன், வாகன கடன், மற்றும் தொழில் புரிய கடன் வாங்குவோர் பாதிக்கப்படலாம். வங்கி டெபாசிட்தாரர்களும் தங்கள் சேமிப்புக்கான வட்டி விகிதம் உயர்த்தப்படுமா என்ற கோணத்திலும் எதிர்பார்க்கின்றனர்.

 

2018-19 நிதியாண்டுக்கான (2வது அரையாண்டு) பணவீக்க மதிப்பீடையும்  ரிசர்வ் வங்கி 4.7 சதவீதத்திலிருந்து 4.8 சதவீதமாக -Inflation இருக்கும் என கூறியுள்ளது. பணவீக்கம் உயரும் என்ற நிலைப்பாட்டை கொண்டே இந்த ரெப்போ விகிதம் உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 2019-20 ம் நிதியாண்டில் (முதல் அரையாண்டு) பணவீக்கம் 5 % ஆக இருக்கும் எனவும், நாட்டின் பொருளாதார வளர்ச்சி(GDP) 2018-19 ல் 7.4 சதவீதமாக நீடிக்கும் எனவும் ரிசர்வ் வங்கி மதிப்பிட்டுள்ளது.

 

உலகளவில் நடைபெறும் வர்த்தக போரும், கச்சா எண்ணெய் விலை மாற்றமும் நாட்டின் பொருளாதாரத்திற்கு பாதகமாக உள்ளதாக மத்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட மற்றொரு அறிக்கையில், சரக்கு மற்றும் சேவை வரி (GST) வருமானம் ஜூலை மாத முடிவில் ரூ. 96,483 கோடியாக உள்ளது. இது கடந்த ஜூன் மாதத்தில் ரூ.95,610 கோடியாக இருந்தது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com