தேசிய பங்குச்சந்தை முடக்கம், அதிர்ச்சியளித்த அன்னிய முதலீடு, மத்திய அரசின் புதிய முடிவு
NSE Shut down – Suspected FII Trading activity – No Business for the Govt
நேற்றைய இந்திய பங்குச்சந்தையில் பரபரப்புக்கு பஞ்சமில்லை எனலாம். எப்போதும் போல காலை ஒன்பது மணிக்கு துவங்கிய இந்திய பங்குச்சந்தை வர்த்தகத்தில் காலை 11:40 மணி வேளை தேசிய பங்குச்சந்தை அமைப்பிடம் இருந்து ஒரு அறிவிப்பு வெளியாகிறது. தொலைத்தொடர்பு இணைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் காலை 10:08 மணி முதல் சந்தை குறியீடுகள் மற்றும் நிறுவனங்களின் விலை மதிப்புகள் சரியான நேரத்திற்கு புதுப்பிக்கப்படவில்லை(Update) எனவும், இதன் காரணமாக 11:40 மணி முதல் தேசிய பங்குச்சந்தை குறியீடுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக சொல்லப்பட்டது.
பின்னர் மதியம் ஒரு மணிக்கு செயல்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முடக்கம் மீண்டும் மூன்று மணி வரை நீட்டிக்கப்பட்டது. பொதுவாக சந்தை மாலை 03:30 மணிக்கு முடியும். ஆனால் நேற்றைய தற்காலிக முடக்கத்தால் தேசிய பங்குச்சந்தை மாலை 03:45 மணிக்கு மீண்டும் துவங்கியது. மாலை ஐந்து மணி வரை வர்த்தகமான தேசிய பங்குச்சந்தை குறியீடு நிப்டி(Nifty50) 274 புள்ளிகள் உயர்ந்து, 14982 புள்ளிகள் என்ற அளவில் முடிவடைந்தது. மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ் சுமார் 1030 புள்ளிகள் உயர்ந்து, 50781 புள்ளிகள் என்ற அளவில் தனது வர்த்தகத்தை முடித்து கொண்டது.
தொழில்நுட்ப கோளாறு என சொல்லப்பட்டிருந்தாலும், ஒழுங்குமுறை அமைப்பான செபி(SEBI) இது சார்ந்த அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு தேசிய பங்குச்சந்தையிடம் கேட்டு கொண்டுள்ளது. வரக்கூடிய காலங்களில் பங்குச்சந்தை வர்த்தக நேரம் அதிகரிக்கப்படலாம், அதனை ஒட்டியே இது போன்ற நிகழ்வுகள் அமைக்கப்பட்டுள்ளது என்ற சலசலப்பும் சந்தை வர்த்தகர்களிடையே பேசப்பட்டது. ஆனால் இது சார்ந்த விவரங்கள் பங்குச்சந்தை அமைப்பிடம் தற்போது சொல்லப்படவில்லை.
நேற்றைய பங்குச்சந்தை நேரத்தில், மற்றொரு கூடுதல் தகவலாக அன்னிய முதலீட்டாளர்கள் ஒரே நாளில் 28,739 கோடி ரூபாயை இந்திய பங்குச்சந்தையில் முதலீடு செய்துள்ளனர். இதுவரை இல்லாத அளவாக அன்னிய முதலீட்டாளர்களின் வர்த்தக மதிப்பு சொல்லப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறின் காரணமாக, ஊக(Futures & Options trading) வணிகத்தில் பங்கு விற்பனையை மேற்கொண்டிருந்த பலர் தங்கள் பணத்தை நேற்று இழந்திருக்கலாம்.
நேற்றைய தேசிய பங்குச்சந்தையின் வர்த்தக மதிப்பு(Cash Turnover) ரூ.45,837 கோடி. கடந்த ஆறு மாதங்களின் சராசரி வர்த்தக மதிப்பு ரூ.64,796 கோடியாக இருப்பது கவனிக்கத்தக்கது. ஊக வணிகத்தின் ஆறு மாத சராசரி வர்த்தக மதிப்பு ரூ.30 லட்சம் கோடியாக இருந்த நிலையில், நேற்றைய ஊக வணிகத்தின் வர்த்தக மதிப்பு மட்டும் 30.6 லட்சம் கோடி ரூபாயாக நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரிப்பதற்கான வாய்ப்பு, உலகளாவிய மத்திய வங்கிகளின் அடுத்தகட்ட வட்டி விகித அணுகுமுறை, வளரும் மற்றும் வளர்ந்த நாடுகளில் மீண்டும் ஒரு பொருளாதார ஊக்குவிப்பு, அதனை சார்ந்த கடன் தன்மை அதிகரிப்பு ஆகியவை உலக பங்குச்சந்தை குறியீடுகளில் வரும் நாட்களில் தெரிய வரும்.
உலக சந்தையில் டாலர் மதிப்பு கடந்த மூன்று வருடங்களில் காணப்படாத குறைந்த அளவில் வர்த்தகமாகி கொண்டிருக்கிறது. அதே வேளையில் அமெரிக்க பங்குச்சந்தை குறியீடுகள் உச்சத்தில் வர்த்தகமாகி வருகிறது. ரிஸ்க் தன்மை அதிகம் கொண்ட மற்றும் புரிந்து கொள்ள முடியாத பரிவர்த்தனைகளிலும் நடப்பு கால முதலீடுகள் சென்று கொண்டிருப்பதாக அமெரிக்க மத்திய வங்கி கூறியுள்ளது. வரும் நாட்களில் பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம்.
நாட்டில் உள்ள தனியார் வங்கிகள், அரசின் அனைத்து விதமான தொழில்களிலும் பங்கேற்கலாம். மத்திய அரசு நிறுவனங்களையும், தொழில்களையும் நடத்த தேவையில்லை எனவும், இனி தனியார் நிறுவனங்கள், நாட்டில் உள்ள தொழில்களையும், அது சார்ந்த நிறுவனங்களையும் நடத்தலாம் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கூறுகையில், அரசு நிறுவனங்களில் அரசு மட்டுமே உரிமையாளராக இருக்க வேண்டுமென்ற அவசியம் இனி இல்லை எனவும், அரசின் கவனம் மக்களின் நலத்திட்டங்கள் மற்றும் மேம்பாட்டு திட்டங்களில் மட்டுமே இனி இருக்கும் எனவும் சொல்லப்பட்டுள்ளது. நேற்றைய பங்குச்சந்தை ஏற்றத்திற்கு இந்த செய்தியும் சாதகமாக அமைந்திருந்தது.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை