மெய்நிகர் நாணயங்களின் பரிவர்த்தனைகள் – தகவல்களை கேட்கும் மத்திய அரசு
Disclosure of Cryptocurrency Holdings and Transactions – India’s Cryptocurrency Regulations
‘கிரிப்டோ கரன்சி’ எனப்படும் மெய்நிகர் நாணயங்களின் மீதான முதலீடு மற்றும் வர்த்தகம், நடப்பு காலத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. டிஜிட்டல் நாணயம் சார்ந்த சிந்தனைகள் பல வருடங்களாகவே பேசப்பட்டு வந்த நிலையில், மெய்நிகர் நாணயங்களில் முதலீடு செய்யும் ஆர்வம் உலகெங்கிலும் பரவலாக காணப்படுகிறது. இதற்கான காரணம், மெய்நிகர் நாணயங்களில் காணப்படும் ‘பிளாக் செயின்(Blockchain)’ தொழில்நுட்பத்தின் பாதுகாக்கப்பட்ட பரிவர்த்தனைகளும், எந்தவொரு நாட்டின் மத்திய வங்கிகளின் தலையீடும் இல்லாமல் நடைபெறும் வர்த்தகம் தான்.
மெய்நிகர் நாணய சந்தையில் முதன்மை நாணயமாக கருதப்படும் ‘பிட்காயின்(Bitcoin)’, கடந்த 2014ம் ஆண்டு வாக்கில் ஒரு பிட்காயினுடைய மதிப்பு 500 அமெரிக்க டாலர்கள் என்ற அளவில் இருந்தது. இது அதிகபட்சமாக நடப்பு 2021ம் ஆண்டில் 61,500 அமெரிக்க டாலர்கள் வரை சென்றது குறிப்பிடத்தக்கது. தற்போது வர்த்தகமாகும் ஒரு பிட்காயினின் விலை இந்திய ரூபாய் மதிப்பில் 38 லட்சம் ரூபாய் (52,190 அமெரிக்க டாலர்கள்). கடந்த மூன்று மாதங்களில் மட்டும் சுமார் 80 சதவீத விலை ஏற்றத்தை பெற்றுள்ளன.
பிட்காயின் 2014ம் ஆண்டிலிருந்து ஏற்றத்தில் மட்டுமே சென்றதா என கேட்டால், அது தான் இல்லை. 2017ம் ஆண்டில் அதிகபட்சமாக 18,000 டாலர்கள் வரை சென்றிருந்த இந்த மெய்நிகர் நாணயம், 2018ம் ஆண்டில் 3,000 டாலருக்கு குறைவாக இறங்கியது கவனிக்கத்தக்கது. பொதுவாக மெய்நிகர் நாணயங்கள் அதிக ஏற்ற-இறக்கத்திற்கு உட்பட்டது. இதற்கான காரணம் மெய்நிகர் நாணயங்களின் எண்ணிக்கை குறைவான நிலையில் இருப்பதும், அதனை சார்ந்த வர்த்தகமும் தான்.
இருப்பினும் தனிநபர் ஒருவர் ஒரு முழு மெய்நிகர் நாணயத்தை வாங்க வேண்டுமென்ற அவசியமில்லை. உதாரணமாக ஒரு பிட்காயின் நாணயத்தின் சிறு துண்டுகளையும்(Pieces) வாங்கி கொள்ளலாம். மெய்நிகர் நாணயத்தை பல நாடுகள் வரவேற்றாலும், இன்னும் அதனை ஒழுங்குமுறைப்படுத்த பல நாடுகள் திணறி வருகின்றன. உலகெங்கிலும் நடைபெறும் கடத்தல், பயங்கரவாதம் மற்றும் பிற குற்றங்களுக்கு ஒரு சதவீதத்திற்கும் குறைவாக அமெரிக்க டாலர்கள் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், மெய்நிகர் நாணயங்கள் வழியாக சுமார் 5 சதவீதம் என்ற அளவில் நடைபெற்று வருவது கவனத்தில் கொள்ள வேண்டியது.
இதன் காரணமாகவே சில நாடுகள் அதன் பரிவர்த்தனைகளை கண்காணிக்க முடியாமல், தனியார் சந்தை நிறுவனங்களிடமே விட்டு விட்டன. ஆனால் முன்னேறிய மற்றும் வளரும் நாடுகள் இதனை ஒழுங்குமுறைப்படுத்தி சட்டமாக்க முயற்சி செய்து வருகின்றன. அவற்றில் நம் நாடும் ஒன்று. நடப்பு வருடத்தின் பட்ஜெட் தாக்கலின் போது, மெய்நிகர் நாணயங்களுக்கான ஒழுங்குமுறை மற்றும் அதனை சார்ந்த சட்டங்கள் ஏற்படுத்தப்படும் என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 2018ம் ஆண்டு மெய்நிகர் நாணயம் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது என பாரத ரிசர்வ் வங்கியால் அறிவிக்கப்பட்ட நிலையில், 2020ம் வருடம் உச்ச நீதிமன்றத்தால் இதற்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், இதற்கான சட்டம் மற்றும் வரி சிக்கல்கள் இன்னும் நீடித்து வருகிறது.
சமீபத்திய அரசு அறிவிப்பின் படி, கம்பெனி சட்டம் 2013ன் கீழ் நாட்டில் உள்ள நிறுவனங்கள், மெய்நிகர் நாணயங்களில் பரிவர்த்தனை மேற்கொண்டிருந்தால் அதற்கான லாப-நட்ட அறிக்கை, முதலீட்டு தொகை மற்றும் கையிருப்பு ஆகிய விவரங்களை அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும். இந்த நடைமுறை வரக்கூடிய ஏப்ரல் 1, 2021 முதல் அமலுக்கு வருகிறது. மெய்நிகர் நாணயங்களில் ஏற்பட்டுள்ள தனிநபர் சார்ந்த பரிவர்த்தனைகளையும் நிறுவனங்கள் தெரிவிக்க வேண்டுமென மத்திய அரசு கூறியுள்ளது.
இதன் மூலம் மெய்நிகர் நாணய வர்த்தகத்தில் வெளிப்படைத்தன்மை ஏற்படும் என அரசு எண்ணுகிறது. இதுவரை மெய்நிகர் நாணயத்தில் இந்தியா சார்பாக(தனிநபர் மற்றும் நிறுவனங்கள் சேர்த்து) சுமார் ஒரு கோடி முதலீட்டாளர்களும், 15,000 கோடி அமெரிக்க டாலர்கள் முதலீடும் ஈர்க்கப்பட்டுள்ளது. மெய்நிகர் நாணயத்தில் தனிநபர் மற்றும் நிறுவனங்கள் மேற்கொள்ளும் வர்த்தகம், ஊக வணிகம் அல்லது முதலீடு எதுவாக இருப்பினும் அதற்கான தெளிவான பரிவர்த்தனை விவரங்களை தற்போது அரசு கேட்டுள்ளது.
இதன் மூலம் அவற்றை மூலதன ஆதாயம் அல்லது இழப்பாக எடுத்து கொள்ளலாமா, இல்லையெனில் வணிக வருவாயாக கணக்கிடுவதா என்பதனை அரசு முடிவெடுக்கும். இதன் பின்பு அதற்கான வருமான வரி வரம்புகளும் ஏற்படுத்தப்படும். தற்போதைய நிலையில், மெய்நிகர் நாணயம் மூலம் கிடைக்கப்பெறும் லாபம் அல்லது நட்டம், கடன் பத்திரங்களின் மூலதன ஆதாய வரியை மேற்கோள் காட்டி செலுத்தப்படுகிறது(சில நிறுவனங்களால்). மெய்நிகர் நாணய பரிவர்த்தனைகளுக்கு அதன் சந்தை நிறுவனங்கள் பரிவர்த்தனை கட்டணங்களை வசூலிக்கின்றன. மெய்நிகர் நாணயம் மூலம் ஈட்டப்படும் லாபம் அல்லது நட்டத்தை தெரிவிக்க வேண்டும் என மத்திய நேரடி வரிகள் வாரியம்(CBDT) ஏற்கனவே கூறியுள்ளது.
அமெரிக்க டாலர் மற்றும் தங்கத்திற்கு மாற்றாக சொல்லப்படும் மெய்நிகர் நாணயம்(Cryptocurrency), வருங்காலத்தில் ஒரு முதலீட்டு சொத்தாக கருதப்படுமா, இல்லையெனில் வெறும் டிஜிட்டல் பரிவர்த்தனையாக மட்டுமே மேற்கொள்ளப்படுமா என்பது தெரிய வரும்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை