நாட்டின் பொருளாதார வளர்ச்சி – 7.5 சதவீத வீழ்ச்சி
India technically enters into Recession – Q2FY21 – GDP
கொரோனா பெருந்தொற்றுக்கு பின் உலகளவில் பெரும்பாலான வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சி பின்னடைவை சந்தித்திருந்தது. நம் நாட்டில் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக இருந்து வந்த மந்தநிலை, மார்ச் 2020 க்கு பிறகு மிகவும் பாதிப்படைந்தது.
ஊரடங்கின் காரணமாக வேலைவாய்ப்பு இல்லாமை, உற்பத்தி குறைவு, ஏற்றுமதி-இறக்குமதியில் ஏற்பட்ட தடை ஆகியவை பொருளாதாரத்திற்கு பாதகமாக இருந்தது. எனினும் அரசு சார்பில் பல ஊக்கமளிக்கும் நிதி சலுகைகள் கொரோனா காலத்தில் அறிவிக்கப்பட்டது. 2020-21ம் நிதியாண்டின் முதலாம் காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 23.9 சதவீதம் வீழ்ச்சி கண்டது.
நேற்று(27-11-2020) நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி குறியீடு சார்ந்த தகவல்கள் வெளியிடப்பட்டது. சொல்லப்பட்ட காலத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP) 7.5 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. எனினும் சந்தை எதிர்பார்த்த 8.8 சதவீத வீழ்ச்சி என்ற அளவை விட இது குறைவாக உள்ளது.
ஜூன் மாதத்திற்கு பிறகான ஊரடங்கில் தளர்வு, வேலைவாய்ப்பு சற்று மீண்டது மற்றும் பண்டிகை காலத்தை ஒட்டி நாட்டின் பொருளாதாரம் மீண்டு வருகிறது. எனினும் பொருளாதாரத்தை முழுவதுமாக மீட்க இன்னும் சில மாதங்கள் ஆகலாம் என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இரண்டு வாரங்களுக்கு முன்பு பாரத ரிசர்வ் வங்கி(RBI) சார்பில் நாட்டின் பொருளாதார வீழ்ச்சி சார்ந்த குறிப்பு சொல்லப்பட்டிருந்தது. இதனை உறுதி செய்யும் வகையில் இரண்டாம் காலாண்டில் 7.5 சதவீத வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில், வரலாற்றின் முதல் பொருளாதார மந்தநிலையாகவும்(First Recession) தற்போது சொல்லப்பட்டுள்ளது.
2013ம் ஆண்டுக்கு பின்னர் ஏற்பட்ட மிகப்பெரிய தொய்வு நிலையாக நடப்பாண்டு இருந்துள்ளது. பொருளாதாரத்தை மீட்க பெரும்பாலான நாடுகள் பணத்தை அச்சடித்து பண புழக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. இதன் காரணமாக பொருளாதார வளர்ச்சி விரைவில் எட்டப்படும் என ஒவ்வொரு அரசும் எதிர்பார்த்து கொண்டிருக்கிறது. நாட்டின் பொருளாதாரம், முதலாம் காலாண்டு வீழ்ச்சியை காட்டிலும் இரண்டாம் காலாண்டில் சிறிய அளவில் வீழ்ச்சியை சந்தித்துள்ளது கவனிக்கத்தக்கது. பண்டிகை காலத்திற்கு பிறகு ஏற்படும் நுகர்வு தன்மை(Consumption) தான் சந்தைக்கு அடுத்தகட்ட நகர்வை ஏற்படுத்தும்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை