2020ம் ஆண்டில் நாட்டின் பொருளாதார குறியீடுகள் எவ்வாறு இருந்தது ?
Economic Indicators in India – 2020 Review
கடந்த 2020ம் ஆண்டில் கொரோனா பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட ஊரடங்கால் உலக பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டது. குறிப்பாக அத்தியாவசிய உணவு பொருட்களின் தேவை தவிர்த்து மற்ற துறைகள் அனைத்தும் பெரும்பாலும் எதிர்மறை நிலையை தான் சந்தித்தன. மார்ச் மாத(2020) ஊரடங்கு துவக்கத்தில் வீழ்ச்சியடைந்த பங்குச்சந்தை குறியீடுகள் மட்டும், வருடத்தின் முடிவில் எதிர்பாராத அளவில் ஏற்றத்தில் முடிவடைந்தன.
சமீபத்திய பங்குச்சந்தை குறியீடுகள் உயர்வு, எதிர்வரும் காலத்தில் பொருளாதாரம் மீட்டெடுக்கப்படும் என்ற நம்பிக்கையில் அதிகமாகவே உயர்ந்தது குறிப்பிடத்தக்கது. அதே வேளை உண்மையில் பொருளாதாரம் மீண்டெழுந்ததா ? இல்லையெனில் அதற்கான வாய்ப்பு எவ்வாறு உள்ளது என்பதனை அறிய கடந்த வருடத்தின் முழுமையான பொருளாதார குறியீடுகளை பார்த்தாக வேண்டும்.
நாட்டின் ஏற்றுமதி(Exports) கடந்த வருடத்தின் மார்ச் முதல் ஆகஸ்ட் வரையிலான காலத்தில் வீழ்ச்சியை மட்டுமே சந்தித்துள்ளன. ஏற்றுமதியில் அதிகபட்சமாக செப்டம்பர் மாதத்தில் 6 சதவீதமாக இருந்துள்ளது. வீழ்ச்சியின் பக்கம் காணும் பொழுது, ஏப்ரல் மாதத்தில் (-61) சதவீதமும், மே மாதத்தில் (-35.7) சதவீதமும் மற்றும் ஜூன் மாதத்தில் (-12.2) சதவீதமாகவும் உள்ளது. இது போல இறக்குமதி(Imports) அளவு 12 மாத காலத்தில் இரண்டு மாதங்கள் மட்டுமே நேர்மறையாக இருந்துள்ளது. பிப்ரவரி மற்றும் டிசம்பர் 2020 காலத்தில் மட்டுமே இறக்குமதி அளவு வீழ்ச்சியை சந்திக்கவில்லை.
வாகனத்துறை:
உள்நாட்டு டிராக்டர் விற்பனை பிரிவில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 50 சதவீதத்திற்கு மேல் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இருப்பினும், ஜூன் மாதத்திற்கு பிறகான தேவையின் காரணமாக இதன் விற்பனை அளவு கணிசமாக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக ஆகஸ்ட் மாதம் 74 சதவீதமாக காணப்பட்டுள்ளது.
வாகனத்துறை பிரிவில் அதிகம் பாதிக்கப்பட்ட துறை என்றால், அது உள்ளூர் விமான போக்குவரத்தும், மூன்று சக்கர வாகன விற்பனையும் தான். மூன்று சக்கர வாகன விற்பனை அளவு ஜனவரி மாதம் தவிர்த்து, மற்ற அனைத்து மாதங்களிலும் எதிர்மறையாக தான் இருந்துள்ளது. விமான போக்குவரத்து ஏப்ரல் மாதத்தில் முழுமையாக இயங்கவில்லை.
இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் விற்பனை கடந்த 2020ம் ஆண்டின் ஜனவரி மாதம் முதலே சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 2019ம் ஆண்டில் காணப்பட்ட வாகனத்துறை மந்தநிலை தான் காரணமாக அமைந்துள்ளது. இருப்பினும், ஆகஸ்ட் 2020 பிறகான காலத்தில், பொது போக்குவரத்து செயல்படாத நிலையில் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் தேவை அதிகரித்தது. நான்கு சக்கர வாகனம் அதிகபட்சமாக செப்டம்பர் மாதத்தில் 29 சதவீதமும், இரு சக்கர வாகன விற்பனை அதிகபட்சமாக அக்டோபர் மாதத்தில் 17 சதவீதமாகவும் காணப்பட்டுள்ளது.
ரயில் சரக்கு(Freight Traffic) போக்குவரத்து மார்ச் முதல் ஜூலை வரையிலான காலத்தில் வீழ்ச்சி அடைந்திருந்தாலும், பின்னர் அத்தியாவசிய தேவையின் காரணமாக உயர்ந்து வந்தது கவனிக்கத்தக்கது.
வரி வருவாய்:
ஜி.எஸ்.டி.(GST) வருவாய் மார்ச் முதல் ஆகஸ்ட் வரையிலான காலத்தில் எதிர்மறை அளவாக இருந்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் அதிகபட்சமாக 72 சதவீதம் இழப்பு ஏற்பட்டுள்ளது. செப்டம்பர் 2020க்கு பின்னர் இதன் வருவாய் ஓரளவு அதிகரித்து வந்துள்ளது. அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வருவாய் அளவு 10 சதவீதத்திற்கு மேல் இருந்துள்ளது.
தொழிற்துறை உற்பத்தி குறியீடு(IIP):
தொழில் துறையில் உள்ள நுகர்வோர் சாதனங்களின் விற்பனை கொரோனா ஊரடங்கு காலத்தில் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 50 சதவீதத்திற்கு மேல் வீழ்ச்சியடைந்துள்ளது. அதே வேளையில் நுகர்வோர் அல்லாத சாதனங்கள் பிரிவில் பெரிய அளவில் சரிவு ஏற்படவில்லை. ஏப்ரல் மாதத்தில் மட்டுமே அதிகபட்சமாக 36 சதவீதம் குறைந்துள்ளது.
ஏப்ரல் மாதத்தில் ஸ்டீல்(எஃகு) உற்பத்தி 83 சதவீதமும், சிமெண்ட் உற்பத்தி 85 சதவீதமும் இழப்பாக சந்தித்துள்ளது. ஸ்டீல் மற்றும் சிமெண்ட் துறைகள் பெரும்பாலும் மந்தநிலையில் தான் 2020ம் ஆண்டு முழுவதும் இருந்துள்ளது.
நிலக்கரி மற்றும் உரங்கள் ஓரளவு ஏற்ற-இறக்கத்தில் தான் வர்த்தகமாகியுள்ளது. ஜூன் காலாண்டு தவிர்த்து நிலக்கரி தேவை ஓரளவு அதிகரித்து வந்துள்ளது. அதே நேரத்தில் உரங்கள் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் மட்டுமே வீழ்ச்சியடைந்துள்ளது.
சொல்லப்பட்ட வருடம் முழுவதும் இயற்கை எரிவாயு துறை இறக்கத்தில் மட்டுமே இருந்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் அதிகபட்சமாக எரிவாயு 20 சதவீதம் இழப்பு ஏற்பட்டுள்ளது.
பணவீக்க விகிதம்:
2020ம் ஆண்டின் ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் நாட்டின் சில்லரை விலை பணவீக்க(Retail Inflation) விகிதம் சராசரியாக 6-8 சதவீதம் என்ற அளவில் இருந்துள்ளது. அதிகபட்சமாக ஜனவரி மற்றும் அக்டோபர் மாதங்களில் 7.6 சதவீதமும், குறைந்த அளவாக டிசம்பர் மாதத்தில் 4.6 சதவீதமும் உள்ளது. உணவுப்பொருட்கள் மற்றும் குளிர்பானங்களின் விலைவாசி கணிசமாக உயர்ந்து காணப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் ஏற்பட்ட எதிர்பாராத தேவையால் உணவு பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. இதன் அளவு சராசரியாக 8 சதவீதத்திற்கு மேல் இருந்தது குறிப்பிடத்தக்கது.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை