மத்திய வங்கியின் சமீபத்திய வட்டி விகிதம் – சிறு பார்வை
Recent Bank Interest rates – RBI Policy review
நாட்டின் ஜனவரி மாத சில்லரை விலை பணவீக்கம் 4.06 சதவீதமாக இருந்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டின் அக்டோபர் மாதத்தில் அதிகபட்சமாக 7.61 சதவீதமாக பணவீக்க விகிதம் இருந்தது. பாரத ரிசர்வ் வங்கியின் குறுகிய கால இலக்காக 2-6 சதவீதம் என்ற அளவில் சில்லரை விலை பணவீக்கம் சொல்லப்பட்டுள்ளது.
பணவீக்கத்தை அடிப்படையாக கொண்டு தான் பாரத ரிசர்வ் வங்கியின் வட்டி விகித மாற்றமும் அறிவிக்கப்படுகிறது. சமீபத்திய மத்திய நிதிக்கொள்கை குழு கூட்டம்(RBI Monetary Policy) இரு வாரங்களுக்கு முன்பு நடைபெற்றிருந்தது. வட்டி விகிதங்களில் எந்த மாற்றமுமில்லை எனவும், அதற்கு முந்தைய காலத்தில் சொல்லப்பட்ட வட்டி விகிதங்கள் தொடரும் எனவும் ரிசர்வ் வங்கி சார்பில் சொல்லப்பட்டிருந்தது.
வங்கிகளுக்கான ரெப்போ(REPO) வட்டி விகிதம் தற்போது 4 சதவீதமாக உள்ளது. பாரத ரிசர்வ் வங்கியிடமிருந்து, நாட்டில் உள்ள வணிக வங்கிகள் கடன் பெறும் விகிதம் தான் ரெப்போ வட்டி விகிதமாக சொல்லப்படுகிறது. பொதுவாக நாட்டில் நிலவும் பணவீக்கத்தை(விலைவாசி) கட்டுப்படுத்த, ரெப்போ வட்டி விகிதத்தை மத்திய வங்கி ஒரு கருவியாக பயன்படுத்தும்.
ரிவர்ஸ் ரெப்போ(Reverse REPO) வட்டி விகிதம் 3.35 சதவீதமாக உள்ளது. நாட்டில் உள்ள வங்கிகளிடம் இருந்து மத்திய வங்கி கடன் வாங்கும் விகிதத்தை, ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் என்கிறோம். விளிம்பு நிலை விகிதம்(Marginal Standing Facility Rate) 4.25 சதவீதமாகவும், வங்கி விகிதம் 4.25 சதவீதமாகவும் உள்ளது.
வங்கிகள், மத்திய ரிசர்வ் வங்கியிடம் வைத்திருக்க வேண்டிய ரொக்க கையிருப்பு விகிதம்(Cash Reserve Ratio – CRR) 3 சதவீதமாகவும், எஸ்.எல்.ஆர்.(SLR) விகிதம் 18 சதவீதமாகவும் உள்ளது. ரொக்கம், தங்கம், பத்திரங்கள் மற்றும் பிற அங்கீகரிக்கப்பட்ட வடிவில் வங்கிகள் பராமரிக்க வேண்டிய குறைந்தபட்ச வைப்புத்தொகை விகிதம் தான் எஸ்.எல்.ஆர். விகிதம்.
இது வங்கிகளின் செயல்பாட்டை மட்டுமில்லாமல், நாட்டின் கடன் வளர்ச்சியை ஒழுங்குபடுத்த உதவும். வங்கிகளின் அடிப்படை வட்டி விகிதம்(Base Rate – Lending / Deposit) 7.30% – 8.80% என்ற அளவில் சொல்லப்பட்டுள்ளது. வங்கி சேமிப்பு கணக்குக்கான வட்டி விகிதம் 2.70% – 3.00% என்ற அளவில் உள்ளது. ஒரு வருடத்திற்கு மேலான வைப்பு நிதி திட்டத்திற்கான வட்டி விகிதம் 4.90 சதவீதத்திலிருந்து 5.50 சதவீதம் வரை சொல்லப்பட்டிருக்கிறது.
2030ம் ஆண்டுடன் முடிவடையும் அரசு கடன் பத்திரங்களின் வருவாய்(5.85% GS 2030) ஆறு சதவீதத்திற்கு அருகாமையில் வர்த்தகமாகி வருகிறது. பணவீக்கம் மற்றும் பாரத ரிசர்வ் வங்கியின் கொள்கை குழு முடிவின் அடிப்படையில் தான் சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதமும், வங்கிகளின் வட்டி விகிதமும் மாறுபடும். பணவீக்கம் உயர்ந்தால் வங்கிகளின் வட்டி விகிதமும் உயர்த்தப்படும். எனவே, மத்திய வங்கி இதனை எச்சரிக்கையாக கையாளும்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை