Tag Archives: trading activity

தேசிய பங்குச்சந்தை முடக்கம், அதிர்ச்சியளித்த அன்னிய முதலீடு, மத்திய அரசின் புதிய முடிவு

தேசிய பங்குச்சந்தை முடக்கம், அதிர்ச்சியளித்த அன்னிய முதலீடு, மத்திய அரசின் புதிய முடிவு 

NSE Shut down – Suspected FII Trading activity – No Business for the Govt

நேற்றைய இந்திய பங்குச்சந்தையில் பரபரப்புக்கு பஞ்சமில்லை எனலாம். எப்போதும் போல காலை ஒன்பது மணிக்கு துவங்கிய இந்திய பங்குச்சந்தை வர்த்தகத்தில் காலை 11:40 மணி வேளை தேசிய பங்குச்சந்தை அமைப்பிடம் இருந்து ஒரு அறிவிப்பு வெளியாகிறது. தொலைத்தொடர்பு இணைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் காலை 10:08 மணி முதல் சந்தை குறியீடுகள் மற்றும் நிறுவனங்களின் விலை மதிப்புகள் சரியான நேரத்திற்கு புதுப்பிக்கப்படவில்லை(Update) எனவும், இதன் காரணமாக 11:40 மணி முதல் தேசிய பங்குச்சந்தை குறியீடுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக சொல்லப்பட்டது.

பின்னர் மதியம் ஒரு மணிக்கு செயல்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முடக்கம் மீண்டும் மூன்று மணி வரை நீட்டிக்கப்பட்டது. பொதுவாக சந்தை மாலை 03:30 மணிக்கு முடியும். ஆனால் நேற்றைய தற்காலிக முடக்கத்தால் தேசிய பங்குச்சந்தை மாலை 03:45 மணிக்கு மீண்டும் துவங்கியது. மாலை ஐந்து மணி வரை வர்த்தகமான தேசிய பங்குச்சந்தை குறியீடு நிப்டி(Nifty50) 274 புள்ளிகள் உயர்ந்து, 14982 புள்ளிகள் என்ற அளவில் முடிவடைந்தது. மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ் சுமார் 1030 புள்ளிகள் உயர்ந்து, 50781 புள்ளிகள் என்ற அளவில் தனது வர்த்தகத்தை முடித்து கொண்டது.

தொழில்நுட்ப கோளாறு என சொல்லப்பட்டிருந்தாலும், ஒழுங்குமுறை அமைப்பான செபி(SEBI) இது சார்ந்த அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு தேசிய பங்குச்சந்தையிடம் கேட்டு கொண்டுள்ளது. வரக்கூடிய காலங்களில் பங்குச்சந்தை வர்த்தக நேரம் அதிகரிக்கப்படலாம், அதனை ஒட்டியே இது போன்ற நிகழ்வுகள் அமைக்கப்பட்டுள்ளது என்ற சலசலப்பும் சந்தை வர்த்தகர்களிடையே பேசப்பட்டது. ஆனால் இது சார்ந்த விவரங்கள் பங்குச்சந்தை அமைப்பிடம் தற்போது சொல்லப்படவில்லை.

நேற்றைய பங்குச்சந்தை நேரத்தில், மற்றொரு கூடுதல் தகவலாக அன்னிய முதலீட்டாளர்கள் ஒரே நாளில் 28,739 கோடி ரூபாயை இந்திய பங்குச்சந்தையில் முதலீடு செய்துள்ளனர். இதுவரை இல்லாத அளவாக அன்னிய முதலீட்டாளர்களின் வர்த்தக மதிப்பு சொல்லப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறின் காரணமாக, ஊக(Futures & Options trading) வணிகத்தில் பங்கு விற்பனையை மேற்கொண்டிருந்த பலர் தங்கள் பணத்தை நேற்று இழந்திருக்கலாம்.

நேற்றைய தேசிய பங்குச்சந்தையின் வர்த்தக மதிப்பு(Cash Turnover) ரூ.45,837 கோடி. கடந்த ஆறு மாதங்களின் சராசரி வர்த்தக மதிப்பு ரூ.64,796 கோடியாக இருப்பது கவனிக்கத்தக்கது. ஊக வணிகத்தின் ஆறு மாத சராசரி வர்த்தக மதிப்பு ரூ.30 லட்சம் கோடியாக இருந்த நிலையில், நேற்றைய ஊக வணிகத்தின் வர்த்தக மதிப்பு மட்டும் 30.6 லட்சம் கோடி ரூபாயாக நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரிப்பதற்கான வாய்ப்பு, உலகளாவிய மத்திய வங்கிகளின் அடுத்தகட்ட வட்டி விகித அணுகுமுறை, வளரும் மற்றும் வளர்ந்த நாடுகளில் மீண்டும் ஒரு பொருளாதார ஊக்குவிப்பு, அதனை சார்ந்த கடன் தன்மை அதிகரிப்பு ஆகியவை உலக பங்குச்சந்தை குறியீடுகளில் வரும் நாட்களில் தெரிய வரும்.

உலக சந்தையில் டாலர் மதிப்பு கடந்த மூன்று வருடங்களில் காணப்படாத குறைந்த அளவில் வர்த்தகமாகி கொண்டிருக்கிறது. அதே வேளையில் அமெரிக்க பங்குச்சந்தை குறியீடுகள் உச்சத்தில் வர்த்தகமாகி வருகிறது. ரிஸ்க் தன்மை அதிகம் கொண்ட மற்றும் புரிந்து கொள்ள முடியாத பரிவர்த்தனைகளிலும்  நடப்பு கால முதலீடுகள் சென்று கொண்டிருப்பதாக அமெரிக்க மத்திய வங்கி கூறியுள்ளது. வரும் நாட்களில் பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம்.

நாட்டில் உள்ள தனியார் வங்கிகள், அரசின் அனைத்து விதமான தொழில்களிலும் பங்கேற்கலாம். மத்திய அரசு நிறுவனங்களையும், தொழில்களையும் நடத்த தேவையில்லை எனவும், இனி தனியார் நிறுவனங்கள், நாட்டில் உள்ள தொழில்களையும், அது சார்ந்த நிறுவனங்களையும் நடத்தலாம் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கூறுகையில், அரசு நிறுவனங்களில் அரசு மட்டுமே உரிமையாளராக இருக்க வேண்டுமென்ற அவசியம் இனி இல்லை எனவும், அரசின் கவனம் மக்களின் நலத்திட்டங்கள் மற்றும் மேம்பாட்டு திட்டங்களில் மட்டுமே இனி இருக்கும் எனவும் சொல்லப்பட்டுள்ளது. நேற்றைய பங்குச்சந்தை ஏற்றத்திற்கு இந்த செய்தியும் சாதகமாக அமைந்திருந்தது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

மார்ச் மாதத்தில் அன்னிய முதலீட்டாளர்கள் என்ன செய்து விட்டார்கள் ?

மார்ச் மாதத்தில் அன்னிய முதலீட்டாளர்கள் என்ன செய்து விட்டார்கள் ? 

FII & DII Trading activity for the Period of March 2020 – Indian Stock Market

கடந்த மார்ச் மாதம் இந்திய பங்குச்சந்தைக்கு போதாத காலமாக அமைந்து விட்டது எனலாம். ஒரு வருடங்களுக்கு மேலாக இருந்து வந்த பொருளாதார மந்தநிலையை(Economy Slowdown) அடுத்து, கொரோனா வைரஸ் தாக்கமும் இந்திய பொருளாதாரம் மற்றும் பங்குச்சந்தையை வெகுவாக பாதித்தது.

மார்ச் 2020 காலத்தில் பங்குச்சந்தை பெரும்பான்மையான வீழ்ச்சியை சந்தித்தது. இந்த வீழ்ச்சி கடந்த 2008ம் ஆண்டின் உலக பொருளாதார வீழ்ச்சி நாட்களில் ஏற்பட்ட அளவை ஒத்திருந்தது. மார்ச் மாத முடிவில் அன்னிய முதலீட்டாளர்கள் மார்ச் 27ம் தேதி தவிர்த்து, மற்ற அனைத்து நாட்களிலும் பங்குகளை விற்று தள்ளியுள்ளனர்.

சொல்லப்பட்ட மாதத்தில் பங்குச்சந்தை 21 நாட்கள் வர்த்தகமாகி உள்ளன. 21 நாட்களில் அன்னிய முதலீட்டாளர்கள் கொள்முதல் செய்த பங்குகளின் மதிப்பு ரூ. 1,54,904 கோடி மற்றும் விற்ற பங்குகளின் மதிப்பு ரூ. 2,20,721 கோடி. ஆக, கடந்த மாதத்தில் அன்னிய முதலீட்டாளர்கள் மொத்தமாக ரூ. 65,816 கோடி மதிப்பில் பங்குகளை விற்றுள்ளனர்.

இருப்பினும், உள்ளூர் முதலீட்டாளர்கள்(Domestic Investors) மார்ச் 26ம் தேதி தவிர்த்து மற்ற அனைத்து நாட்களிலும் பங்குகளை வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. உள்ளூர் முதலீட்டாளர்களின் கொள்முதல் ரூ. 1,57,857 கோடி மற்றும் விற்பனை ரூ. 1,02,262 கோடி. மார்ச் மாதத்தில் ரூ. 55,595 கோடி மதிப்பில் உள்ளூர் முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கியுள்ளனர்.

நடப்பு 2020ம் வருடத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பனை மட்டுமே செய்துள்ளனர். ஜனவரி மாதத்தில் ரூ. 5,360 கோடி, பிப்ரவரி மாதம் ரூ. 12,684 கோடியும் மற்றும் மார்ச் மாதத்தில் ரூ. 65,816 கோடியும் நிகர விற்பனையாக அமைந்துள்ளது.

உள்ளூர் முதலீட்டாளர்களின் பங்களிப்பில் பரஸ்பர  நிதிகளின் எஸ்.ஐ.பி.(SIP Investing) முதலீடும் ஊக்கப்படுத்துகிறது. எனினும், அன்னிய முதலீட்டாளர்களின் விற்பனை பங்குச்சந்தை சரிவை ஏற்படுத்தியுள்ளது. பங்குச்சந்தைகள்  பெருத்த சரிவை ஏற்படுத்தி வரும் இச்சூழலில், அவ்வப்போது ஒரே நாளில் பெரிய ஏற்றத்தை அடைந்து வருவதும் இயல்பு தான்.

நீண்ட கால முதலீட்டாளர்கள், நல்ல நிறுவன பங்குகளை கண்டறிந்து எந்த அவசரமும் காட்டாமல், மலிவான விலை கிடைக்கும் போது மட்டும் முதலீடு செய்யும் மனப்பான்மையை கொண்டிருக்க வேண்டும். சந்தை ஏறுகிறது என பின்னால் சென்று வாங்கி விட்டு, பின்னர் பங்கு விலை இறங்குகிறது என கலங்க வேண்டாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

செப்டம்பர் மாதத்திலும் வெளியேறிய அந்நிய முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கிய உள்ளூர் முதலீட்டாளர்கள்

செப்டம்பர் மாதத்திலும் வெளியேறிய அந்நிய முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கிய உள்ளூர் முதலீட்டாளர்கள்

FII / DII Trading Activity – September 2019

கடந்த செப்டம்பர் மாதத்தின் இரண்டு வர்த்தக நாட்களில் இந்திய பங்குச்சந்தை பெரிய ஏற்றத்தை கண்டிருந்தது. நிதி அமைச்சரின் நிறுவனங்களுக்கான வரிச்சலுகை அறிவிப்பை அடுத்து, சந்தை ஏற்றம் பெற்றது நினைவிருக்கலாம். இருப்பினும், பொருளாதாரம் சார்ந்த காரணிகள் இன்னும் வளர்ச்சி பாதைக்கு திரும்பாததால் அந்நிய முதலீட்டாளர்களின் பங்களிப்பு குறைவாகவே காணப்படுகிறது.

செப்டம்பர் மாதத்தில் அந்நிய முதலீட்டாளர்கள் ரூ. 1.03 லட்சம் கோடிக்கு பங்குகளை வாங்கியும், ரூ. 1.10 லட்சம் கோடி மதிப்பிற்கு பங்குகளை விற்றும் உள்ளனர். அவர்களது நிகர விற்பனை கடந்த மாதத்தின் முடிவில் 6,624 கோடி ரூபாயாக இருந்துள்ளது.

அதே வேளையில், உள்ளூர் முதலீட்டாளர்கள் ரூ. 84,873 கோடி மதிப்பில் பங்குகளை வாங்கியும், 72,382 கோடி ரூபாய்க்கு பங்குகளை விற்றும் உள்ளனர். எனவே உள்ளூர் முதலீட்டாளர்களின் நிகர கொள்முதல் 12,490 கோடி ரூபாயாக இருந்தது. உள்ளூர் முதலீட்டாளர்கள் கடந்த 5 மாதங்களாக பங்குகளை வாங்கி குவித்துள்ளனர்.

சொல்லப்பட்ட மாதத்தில் 19 நாட்கள் வர்த்தகம் நடைபெற்றது. இவற்றில் அந்நிய முதலீட்டாளர்கள் 14 நாட்கள் பங்குகளை விற்றுள்ளனர். அதே சமயம் உள்ளூர் முதலீட்டாளர்கள் 17 நாட்கள் பங்குகளை வாங்கியுள்ளது கவனிக்கத்தக்கது.

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குச்சந்தையில் நடப்பாண்டு மே மாதம் முதல் பங்குகளை விற்று வருகின்றனர். இந்திய சந்தையில் நடுத்தர மற்றும் சிறு நிறுவனங்களின் பங்குகள் விலை பெருவாரியான வீழ்ச்சியை சந்தித்துள்ளன. அதே நேரத்தில் லார்ஜ் கேப்(Large Cap) என சொல்லப்படும் பெரு நிறுவன பங்குகளின் விலை அதிக மதிப்பில் காணப்படுகின்றன.

உலகளவில் காணப்படும் பொருளாதார மந்த நிலை தீர்வு பெறாமல் உள்ளது. இரு நாடுகளிடையேயான வர்த்தக போர், கச்சா எண்ணெய் நாடுகளில் காணப்படும் எல்லை பதற்றம், உள்நாட்டில் நிலவும் பொருளாதார வளர்ச்சி குறைவு ஆகியவை சந்தைக்கு பாதகமாக உள்ளன.

வரவிருக்கும் நாட்களில் நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள், பணவீக்கம், மொத்த உள்நாட்டு உற்பத்தி குறியீடு(GDP) மற்றும் வங்கி வட்டி விகிதம் போன்றவை சந்தையை நகர்த்தும். 

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

அக்டோபர் மாதத்தில் அன்னிய முதலீட்டாளர்களின் வெளியேற்றமும், உள்நாட்டு முதலீடு ஏற்றமும்

அக்டோபர் மாதத்தில் அன்னிய முதலீட்டாளர்களின் வெளியேற்றமும், உள்நாட்டு முதலீடு ஏற்றமும்

Mostly outflows of FII and the rise in Domestic Investments – Trading Activity for October 2018

கடந்த மாதம் (October 2018) முதலீட்டாளர்களை கலக்கத்தில் ஏற்படுத்தியது இந்திய பங்குச்சந்தை. நமது நாட்டின் பங்குச்சந்தை மட்டுமல்லாமல் மற்ற நாடுகளிலும் ஏற்ற-இறக்கம் அதிகமாக காணப்பட்டது. நாடுகளுக்கிடையே உள்ள வர்த்தக போர், கச்சா எண்ணெய் விலை மாற்றம், வங்கிகளின் செயல்பாடு போன்ற்வற்றால் பங்குச்சந்தை முதலீடு வெகுவாக பாதிக்கப்பட்டது.

 

அக்டோபர் மாதத்தில் மட்டும் நடந்த 21 வர்த்தக நாட்களில் அன்னிய முதலீட்டாளர்கள் (Foreign Institutional Investors) பெரும்பாலும் விற்பனையை மட்டும் கையாண்டிருந்தனர். அந்த மாதத்தின் மொத்த விற்பனையாக ரூ. 1,40,238 கோடியும், நிகர விற்பனையாக ரூ. 29,200 கோடியும் அன்னிய நாட்டு முதலீட்டாளர்களின் வர்த்தகமாக அமைந்தது. வெளிநாட்டு முதலீட்டாளர்களின் அக்டோபர் மாத மொத்த கொள்முதல் ரூ.111,037 கோடியாகவும், மொத்த விற்பனை ரூ.1,40,238 கோடியாகவும் இருந்தது கவனிக்கத்தக்கது.

 

இருப்பினும், உள்நாட்டு முதலீடு நல்ல ஏற்றம் பெற்றது. கடந்த மாதத்தில், உள்நாட்டு முதலீட்டாளர்கள் (Domestic Institutional Investors -DII) மொத்த கொள்முதலாக ரூ. 1,00,992 கோடியையும், மொத்த விற்பனையாக ரூ. 74, 958 கோடியையும் கொண்டிருந்தனர். அவர்களின் அக்டோபர் மாத நிகர கொள்முதல் ரூ. 26,033 கோடியாக முடிவடைந்தது.

 

அன்னிய நாட்டு முதலீட்டாளர்களை பொறுத்தவரை அக்டோபர் 15 மற்றும் 17 ம் தேதிகளில் மட்டும் நிகர கொள்முதலை பெற்றிருந்தனர். மற்ற நாட்கள் அனைத்தும் விற்பனையை மட்டுமே மேற்கொண்டிருந்தனர். அதே சமயத்தில், உள்நாட்டு முதலீட்டாளர்கள் அக்டோபர் 17 மற்றும் 19 தேதிகளில் விற்பனையையும், மற்ற வர்த்தக நாட்களில் நிகர கொள்முதலையும் வர்த்தகமாக்கினர்.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

கடந்த செப்டம்பர் மாதத்தினை பார்க்கும் பொழுது, வெளிநாட்டு முதலீடு நிகர விற்பனையாக ரூ.9,468 கோடியாகவும், உள்நாட்டு முதலீடு நிகர கொள்முதலாக ரூ. 12,500 கோடியாகவும் இருந்துள்ளது. இதனை கடந்த மாதத்துடன் ஒப்பிடும் போது, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அக்டோபர் மாதத்தில் 200 சதவீத விற்பனையையும், உள்நாட்டு முதலீட்டாளர்கள் 108 சதவீத கொள்முதலையும் கொண்டிருந்தனர்.

 

உள்நாட்டு முதலீட்டாளர்களின் அக்டோபர் நிகர கொள்முதல் கடந்த பத்து வருடத்தில் இல்லாத அளவாகும். இதற்கு முன்னர் செப்டம்பர் 2017 மாதத்தில் இருந்த ரூ. 21,025 கோடி நிகர கொள்முதல்  தான் அதிக அளவாக சொல்லப்பட்டது.  கடந்த ஒரு மாதத்தில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ்(Sensex) குறியீடு 2000 புள்ளிகளும், தேசிய பங்குச்சந்தை நிப்டி (Nifty50) 600 புள்ளிகளும் நிகரமாக இறங்கியுள்ளன.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com