Category Archives: Investopedia

வர்த்தக மதுரையின் நிதி அறிவு துளிகள் – பாகம் 2

வர்த்தக மதுரையின் நிதி அறிவு துளிகள் – பாகம் 2

Personal Finance – Survey / Polling

நமது வர்த்தக மதுரை தளத்தின் சார்பாக நிதி அறிவு துளிகள் என்ற தலைப்பில் நிதி சார்ந்த கேள்விகளும், அதற்கான பதில்களும் பெறப்படும். இது ஒரு வாக்கு பதிவு முறையில் அமையப்பெற்றது. உங்களுக்கான நிதி அறிவை நீங்கள் தற்சோதனை செய்து கொள்ள ஒரு தமிழ் களம்.

 

முதல் பாகத்திற்கான கேள்விகளும், அதற்கான விடைகளும் இங்கே…

 

  • சேமிப்பு, முதலீடு  – இரண்டும் ஒன்றா ?

 

விடை:       இல்லை

 

விளக்கம்:  சேமிப்பு என்பது வெறுமனே உண்டியலில் பணம் சேர்ப்பது போன்று. அது வளர்ச்சியை பெறுவதில்லை. உதாரணத்திற்கு நமது சேமிப்பு வங்கி கணக்கு போல, பணவீக்கத்தை விட குறைவான வட்டி விகிதம் வழங்கப்படும். முதலீடு என்பது வளர்ச்சியையும், தொடர்  வருமானத்தையும் கொடுக்கக்கூடியது. உதாரணமாக நிலம், தங்கம், பங்குகள், பரஸ்பர நிதிகள், தொழிலில் முதலீடு.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

  • அரசு வெளியிடும் பட்ஜெட் தாக்கல் பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?

 

விளக்கம்: ஒரு நாட்டின் அல்லது மாநிலத்தின் அரசு வெளியிடும் பட்ஜெட் தாக்கல் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். தனிநபருக்கான சலுகைகள், தொழிலுக்கான புதிய கொள்கைகள் மற்றும் மாற்றங்கள் ஆகியவை பட்ஜெட்டில் விவாதிக்கப்படும். நமது வரவு-செலவை பாதிக்கும் காரணிகள் பட்ஜெட்டில் இடம்பெறும், அவை நமக்கு சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ அமையலாம்.

 

  • உங்கள் குடும்பத்தில் நீங்கள் பட்ஜெட் திட்டமிடுவது உண்டா ?

 

விளக்கம்: அரசின் பட்ஜெட்டை போலவே ஒரு குடும்பத்தின் பட்ஜெட்டும் அவசியமாகும். வரவு-செலவு அறிக்கையை முறையாக நாம் பராமரிப்பதால் கடன் சிக்கலில் மாட்டிக்கொள்ளாமல் தவிர்க்க பட்ஜெட் திட்டமிடல் உதவும். நமது தளத்தில் பட்ஜெட் திட்டமிடல் எவ்வாறு அமைப்பது என்பதை எளிமையாக விளக்கியுள்ளோம் –

 

பட்ஜெட் திட்டமிடலை உருவாக்குவது எப்படி ?

 

  • முதலீடு செய்வதின் நோக்கம் என்ன ?

 

விடை: பணத்தை பெருக்க (Capital Appreciation)

 

விளக்கம்: முதலீடு என்பது பொதுவாக வளர்ச்சியையும், அதனை சார்ந்து தொடர் வருமானத்தையும் தருவதாக இருக்க வேண்டும். நிலம், பங்குகள், பரஸ்பர நிதிகள் போன்றவற்றை முதலீடாக சொல்லலாம்.

 

  • காப்பீடு என்பது ஒரு சிறந்த மற்றும் பாதுகாப்பான முதலீட்டு சாதனம் ?

 

விடை: இல்லை

 

விளக்கம்: காப்பீடு என்பது ஒரு முதலீட்டு சாதனமாக கருத முடியாது. காப்பீட்டின் நோக்கமே எதிர்பாராத நிதி இழப்பினை சரி செய்வதற்கான பாதுகாப்பு அம்சம் தான். இதனை ஒரு முதலீடாக எடுத்து கொள்ள கூடாது. முழுமையான காப்பீடு திட்டத்திற்கு டேர்ம் பாலிசிகளை வாங்கி கொள்ளலாம். காப்பீட்டு நிறுவனங்களில் விற்கப்படும் காப்பீட்டுடன் முதலீடு என்று கூறப்படும் சாதனங்கள் குறிப்பிடத்தக்க வருவாய் தராது.

 

ஒவ்வொரு பாகத்திலும் ஐந்து கேள்விகள் கேட்கப்படும், அதற்கான பதில்கள் கருத்து கணிப்பின் வடிவில் அமையப்பெறும். கேள்விகளின் சரியான பதில்கள் நமது இணைய தளத்தில் வாக்கு பதிவு நாள் முடிந்தவுடன் வெளியிடப்படும். கருத்து கணிப்பின் முடிவில் வாசகர்கள் தங்கள் நிதி சார்ந்த அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளலாம்.

 

இந்த வார கேள்விகள்:

 

  1. வருமான வரியை சேமிக்க இன்சூரன்ஸ்(காப்பீடு) என்ற திட்டம் மட்டுமே உள்ளது ?
  2. நமது நாட்டில் தங்கத்தின் விலை மதிப்பு எதனை சார்ந்து மாறுகிறது ?
  3. பங்குச்சந்தையும், பரஸ்பர நிதிகளும்(Mutual Funds) ஒன்றா ?
  4. நிதி சார்ந்த கல்வியினை பெற நீங்கள் எவ்வளவு தொகையை செலவிட தயாராக உள்ளீர்கள் ?
  5. பங்குச்சந்தை(Share Market) ஒரு ___________ ?

 

குறிப்பு:

நீங்கள் வாக்கு பதிவு செய்வதற்கான இணைப்பை காண முடியவில்லை என்றால், கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பதிவிடவும்.

 

Personal Finance – Survey 2

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

ரூ. 1444 /- மாத முதலீட்டில் நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்

ரூ. 1444 /- மாத முதலீட்டில் நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்

Become a Millionaire / Crorepati with a monthly investment of 1444 rupees in SIP

 

சிலருக்கு செல்வம் சேர்ப்பது ஒரு கலையாக இருந்தாலும், பலருக்கு அது ஒரு எட்டாக்கனியாக தான் இருந்து வருகிறது. செல்வம் சேர்ப்பதின் முதல் ரகசியமே சரியான பட்ஜெட் திட்டமிடல்(Budget Planning) தான். நாம் தினசரி மேற்கொள்ளும் வரவு-செலவுகளை எழுதி வைத்து பழக்கப்படுத்தினாலே நமக்கான செல்வ மகள் தானாக வருவாள். கூட்டு குடும்பத்தின் பலம் நம் அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் கூட்டு வட்டியின் பலனை நீங்கள் அனுபவித்தது உண்டா ?

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

உலகின் எட்டாவது அதிசயம், ‘கூட்டு வட்டி (Power of Compounding)’ என்றார் மாபெரும் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். ஏழு அதிசயங்களை நாம் வரலாற்றில் அவ்வப்போது மாற்றி கொண்டாலும், இன்றும் மாறாதது கூட்டு வட்டியின் ரகசியமே. கூட்டு வட்டியின்(Compound Interest) பலனை அறிய நாம் புத்தகங்கள் எதனையும் வாங்கி படிக்க வேண்டாம். சிறு துளி பெருவெள்ளம் போல, நமது பாரம்பரிய அஞ்சலக சேமிப்பு, மாத சீட்டு கட்டும் முறை, பி.எப்.(Provident Fund) தொகையினை சொல்லலாம்.

 

நாம் சேமிக்கும் மாதாந்திர சீட்டு அல்லது பி.எப். தொகையை நாம் உற்று நோக்கினால் அதற்கான பலன் நமக்கு தெரிய வரும். நாம் சிறுக சிறுக சேமித்து வைத்த பணம் பின்னொரு காலத்தில் மிக பிரமாண்டமான தொகையை நமக்கு கொடுத்திருக்கும். இது கூட்டு வட்டியின் பலனே இன்றி வேறு எதுவுமில்லை. இந்த கூட்டு வட்டியின் பலத்தை நாம் முழுவதுமாக அறிய அல்லது வாழ்நாள் முழுவதும் இதன் பலனை அனுபவிக்க பல முதலீட்டு சாதனங்கள் உள்ளன. இவற்றில் மிகவும் எளிமையான மற்றும் நம்பகமான சாதனம் எனில், அது பங்குச்சந்தையும், பரஸ்பர நிதிகளும்(Mutual Funds) தான்.

 

தங்கம் மற்றும் நிலத்தில் நமது முதலீடுகள் இருப்பினும் நாம் அவற்றில் ஒவ்வொரு மாதமும் அல்லது நம்மிடம் உள்ள சிறு தொகைக்கு வாங்கி வைக்க முடியாது. ஆனால், பரஸ்பர நிதி திட்டங்கள் மற்றும் பங்குச்சந்தையில் எவ்வளவு தொகையை வேண்டுமானாலும் நாம் முதலீடு செய்யலாம். பொதுவாக செல்வம் சேர்ப்பதற்கு தொடர்ச்சியான முதலீடு(Regular Investing) அவசியமாகும். நாம் முதலீடு செய்யும் பணம் சிறு தொகையாக இருப்பினும், தொடர் முதலீடு நமக்கான செல்வத்தை சேர்த்து தரும்.

 

பங்குச்சந்தையில் தொடர் முதலீடு நீண்ட காலத்தில் பெரும் செல்வதை கொடுக்கும். அதே வேளையில் பங்குச்சந்தை போன்ற முதலீட்டில் அடிப்படை நிதி கல்வி அவசியமாகும்(Stock Market Analysis). ஏனென்றால் பங்குச்சந்தை முதலீடுகள் குறுகிய காலத்தில் ரிஸ்க் தன்மை அதிகம் கொண்டவை. இதற்கு மாற்றாக நாம் பரஸ்பர நிதி முதலீடுகளை தேர்ந்தெடுக்கலாம். பங்குச்சந்தையை பற்றிய நிதி கல்வியை பெற முடியாதவர்கள், நேரம் இல்லாதவர்கள் பரஸ்பர நிதி திட்டங்களில் பங்குச்சந்தை போன்ற நீண்ட கால கூட்டு வட்டியின் பலனை பெறலாம்.

 

உதாரணத்திற்கு, உங்களுக்கு ஒரு கோடி ரூபாய் தொகையை பெற வேண்டுமென்றால் உங்களுக்கான கால அளவும்(Investment Period), முதலீடு செய்வதற்கான பணமும்(Minimum Investment) முக்கியம். உங்களுக்கு ஐந்து வருடங்களில் ரூ. 1 கோடி வேண்டுமென்றால், நீங்கள் ஒவ்வொரு மாதமும் ரூ. 1,22,444 பணத்தை அடுத்த ஐந்து வருடங்களுக்கு முதலீடு செய்தாக வேண்டும். இதன் மூலம் 12 சதவீத வட்டி வருமானத்தை கொடுக்கும் பட்சத்தில், உங்களுக்கு ஐந்து வருடத்திற்கு பிறகு ரூ. 1.06 கோடி தொகை கிடைக்கும். இதுவே 15 சதவீத வட்டி எனும் போது, நீங்கள் மாதாமாதம் ரூ. 1,12,899 ஐ அடுத்த ஐந்து வருடங்களுக்கு முதலீடு செய்தால் மட்டுமே, உங்களுக்கான ஒரு கோடி ரூபாய் இலக்கை அடைய முடியும்.

 

மாதாமாதம் ரூ. 1 லட்சம் ரூபாய் முதலீடா என மலைப்பாக இருக்கிறதா ?

 

இன்றும், இது போன்ற முதலீட்டு தொகையை சிலர் சாத்தியமாக்கி பயனடைந்து வருகின்றனர். சரி வாருங்கள், சிறிய தொகையை கொண்டு பெரிய விஷயங்களை செய்து பார்க்கலாம். உங்களுக்கு தேவையான ஒரு கோடி ரூபாய் இலக்கை நீங்கள் விரைவாக அடைய வேண்டுமெனில், உங்களுக்கான மாத முதலீடு அதிகமாக தான் இருக்கும். அதற்கு பதிலாக, மாதம் ஒரு குறிப்பிட்ட சிறு தொகையை முதலீடு செய்து விட்டு, இலக்கிற்கான காலத்தை நீட்டிக்கலாம்(Time). இதன் வாயிலாக நமக்கான நிதி இலக்கை எளிமையாக பெறலாம்.

 

மாதாமாதம் ரூ.36,335 ஐ அடுத்த பத்து வருடங்களுக்கு சேமிக்கும் பட்சத்தில் நாம் ஒரு கோடி ரூபாய் இலக்கை அடையலாம். இல்லையெனில், 20 வருடங்களுக்கு மாதம் ரூ.6,679/- ஐ முதலீடு(Systematic Investment Plan -SIP)  செய்தாலும் அதன் பலனை பெறலாம். இதனை விட ஒரு எளிமையான முறை உள்ளது, இது ஒரு வெற்றி பெற்றவர்களின் முதலீட்டு முறை என்றும் கூறலாம். அதாவது மாதாமாதம் ரூ.1,444 ஐ நீங்கள் அடுத்த 30 வருடங்களுக்கு முதலீடு செய்தால் கோடீஸ்வரர் ஆகலாம் என்பது தான். நாள் ஒன்றுக்கு 50 ரூபாய்க்கும் குறைவாக (48 ரூபாய்) நீங்கள் முதலீடு செய்ய பழகும் போது, 30 வருடங்களில் உங்கள் கனவு இலக்கு சாத்தியமாகும்.

 

ஒரு முறை முதலீடாக(One Time Investment) 1,50,000 ரூபாயை முதலீடு செய்து விட்டு, அடுத்த 30 வருடங்களுக்கு காத்திருக்கும் பட்சத்தில், 15 சதவீத வட்டி வருமானத்தில் உங்களுக்கான ஒரு கோடி ரூபாயை பெறலாம். முப்பது வருடங்களுக்கு பிறகு கிடைக்கும் ஒரு கோடி ரூபாயின் இன்றைய மதிப்பு (Present Value of Future Cash) எவ்வளவு என்று உங்களுக்கு தெரியுமா ?

 

30 வருடங்களுக்கு பின்பு கிடைக்கக்கூடிய ஒரு கோடி ரூபாய், இன்றைய சராசரி பணவீக்கமாக 5 சதவீதம் என எடுத்து கொண்டால், இன்று அதன் மதிப்பு ரூ. 23,13,774. பரஸ்பர நிதி திட்டங்களில் இன்றும் இது போன்ற முதலீட்டு வருமானம் சாத்தியமாக தான் இருக்கிறது. ஏன் மற்ற முதலீடுகளில் கிடைப்பதில்லையா என கேட்கலாம். நிலம், தங்கம் போன்ற முதலீடுகளில் நாம் ஏற்ற-இறக்கத்தில் முதலீடு செய்யும் வாய்ப்பு எப்போதும் கிடைப்பதில்லை. ஆனால் பங்குச்சந்தை மற்றும் பரஸ்பர நிதி திட்டங்களில் அந்த வாய்ப்பு ஒவ்வொரு காலத்திலும் அமைந்து கொண்டு தான் இருக்கிறது. தங்கத்தில் வருமானம் கடந்த 20 வருடங்களாக வங்கி வட்டி விகிதத்தை ஒட்டியே அமைந்துள்ளது எனலாம். தங்கத்தின் விலை அதிகரிப்பது டாலர் மதிப்பு உயர்வதால் தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பணவீக்கம் குறைந்து வருவதால் வங்கி வைப்பு நிதிகள் மற்றும் சிறு சேமிப்பு திட்டங்களில் கிடைக்கப்பெறும் வட்டி விகிதம் போதுமானதாக இருப்பதில்லை.

 

பரஸ்பர நிதி திட்டங்களில் மாதம் ரூ. 290 ஐ முதலீடு செய்து 30 வருடங்களில் 20 லட்ச ரூபாயை பெறலாம். இது போன்று, மாதாமாதம் 722 /- ரூபாயை முதலீடு செய்து அடுத்த 30 வருடத்தின் முடிவில் 15 சதவீத வட்டி வருமானத்தில் ரூ. 50 லட்சம் கிடைக்கும். பங்குச்சந்தை மற்றும் பரஸ்பர நிதி திட்டங்களில் நீண்ட காலத்தில் 15 சதவீத வட்டி என்பது சராசரியாக பெறக்கூடிய வருமானமாகும்.

 

அப்புறம் என்ன, உங்கள் இலக்குகளுக்காக, உங்கள் குழந்தைகளின் தேவைக்காக இப்போதே ஒரு சிறு தொகையை முதலீடு செய்ய ஆரம்பியுங்கள் – கூட்டு வட்டியின் பலனை பெறுங்கள் !

 

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

 

குறைந்தபட்ச முதலீடு ரூ. 100 மற்றும் இலவச காப்பீடு – பரவலாகும் பரஸ்பர நிதித்திட்டங்கள்

குறைந்தபட்ச முதலீடு ரூ. 100 மற்றும் இலவச காப்பீடு – பரவலாகும் பரஸ்பர நிதித்திட்டங்கள்

Minimum Investment amount of 100 rupees and Free Term Insurance – Mutual Funds Schemes

இந்தியாவில் மியூச்சுவல் பண்ட் என்று சொல்லப்படும் பரஸ்பர நிதி துறை(Mutual Fund Industry) 1963ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பரஸ்பர நிதி திட்டங்களுக்கான சட்டம் நாடாளுமன்றத்தில் உருவாக்கப்பட்டு பாரத ரிசர்வ் வங்கியின் ஒழுங்குமுறை மற்றும் நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வந்தது.

1987-1993 ம் வருட காலங்களில் அரசு சார்ந்த நிறுவனங்கள் மட்டுமே மியூச்சுவல் பண்ட் திட்டங்களை வழங்கி வந்த நிலையில், பின்னர் தனியார் துறை நிறுவனங்களும் பரஸ்பர நிதி துறையில் நுழைந்தன. அரசு சார்பில் துவங்கப்பட்ட பரஸ்பர நிதிகளில் முதன்முறையாக பொதுத்துறை வங்கிகளும், எல்.ஐ.சி. நிறுவனமும்(LIC India) திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தின. 1992ம் ஆண்டு பரஸ்பர நிதிக்கான ஒழுங்குமுறை செபியிடம்(SEBI) வந்த பிறகு, முதல் தனியார் மியூச்சுவல் பண்ட் நிறுவனமாக கோத்தாரி பயோனியர்(Kothari Pioneer) நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் இந்நிறுவனம் பிராங்கிளின் டெம்பிள்டன்(Franklin Templeton) நிறுவனத்துடன் இணைக்கப்பட்டது கவனிக்கத்தக்கது.

ஆரம்ப காலத்தில் மியூச்சுவல் பண்ட் சார்ந்த விழிப்புணர்வு குறைவாக இருப்பினும், தற்போது பரஸ்பர நிதி திட்டங்கள் வங்கி மற்றும் அஞ்சலக சேமிப்புக்கு மாற்றாக செயல்பட்டு வருகிறது. இன்றும் சிலருக்கு பரஸ்பர நிதி திட்டங்கள் என்றாலே பங்குச்சந்தை தான் என்ற ஐயம் உள்ளது. சமீப காலங்களில் மியூச்சுவல் பண்ட் சார்ந்த விழிப்புணர்வும், திட்டங்களில் உள்ள வடிவமைப்பும் எளிமையாக்கப்பட்டுள்ளன. அரசு சார்பிலும் இது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் பொது கருத்தரங்குகள் நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது.

பரஸ்பர நிதி சார்ந்த விழிப்புணர்வை நமது ஊரில் பரவலாக விகடன் குழுமம் (நாணயம் விகடன் – Nanayam Vikatan) சேர்த்து வருவது நல்ல விஷயம். சேமிப்பு மற்றும் முதலீடு சார்ந்த அடிப்படை கல்வி நமக்கு பள்ளி, கல்லூரி காலங்களில் கிடைப்பதில்லை என்றாலும், இன்று அதற்கான தளங்கள் அமைய பெற்றிருப்பது மக்களுக்கு நலன் பயக்கும்.

பரஸ்பர நிதி திட்டங்களில் லிக்விட் பண்டுகள்(Liquid Funds) என்று சொல்லப்படும் பாதுகாப்பான சேமிப்பு திட்டங்கள் முதல் பங்குச்சந்தை சார்ந்த திட்டங்கள்(Equity oriented Funds) வரை பல்வேறு வகையான திட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு முதலீட்டாளரின் நிதி இலக்குகள், கால அளவுகளை கொண்டு மற்றும் ரிஸ்க் தன்மையை பொறுத்து பரஸ்பர நிதி திட்டங்கள் வேறுபடும். நீண்டகாலத்தில் பரஸ்பர நிதித்திட்டங்கள் பணவீக்கத்தை காட்டிலும் நல்ல வருமானத்தை கொடுத்து வருகிறது. அதே வேளையில் வங்கி மற்றும் அஞ்சலக சேமிப்பை காட்டிலும் பெறக்கூடிய நீண்டகால வருமானம் பல மடங்கு லாபத்தை தரக்கூடியவையாக உள்ளது.

இன்றைய நிலையில், வரி சலுகையை பெற மிகவும் குறைந்த லாக் இன் காலம்(Lock in Period) கொண்ட மற்றும் அதிக வருமானத்தை தரும் திட்டமாக மியூச்சுவல் பண்ட் டாக்ஸ் சேவர் திட்டங்கள்(Tax Saving Mutual Funds) உள்ளன. முன்னர் பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு செய்ய ஒரு குறிப்பிட்ட தொகையை (ரூ.500-5000) முதலீடு செய்ய வேண்டும் என்ற நிலையிலிருந்து, தற்போது குறைந்தபட்ச முதலீடாக 100 ரூபாய் என சொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் குறைந்த வருமானம் உள்ளவர்களும் அஞ்சலக சேமிப்பை போல, மியூச்சுவல் பண்டு திட்டங்களில் முதலீடு செய்யலாம்.

பரஸ்பர நிதி திட்டங்களில் செய்யப்பட்ட முதலீட்டு தொகையை, நாம் விரும்பும் எந்த நேரத்திலும் பெற்று கொள்ளலாம் என்பது மற்றுமொரு சிறப்பம்சம். சில மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் நாம் மாதாமாதம் முதலீடு செய்யும் எஸ்.ஐ.பி.(Systematic Investment Plan -SIP) தொகைக்கு இலவச டேர்ம் பாலிசியையும் வழங்குவது ஆதாயமான விஷயம். நாம் செய்யும் முதலீடு தொகைக்கு ஏற்றாற் போல் மற்றும் கால அளவுகளை பொறுத்து, நமக்கான டேர்ம் காப்பீடு தொகையும்(Term Policy Insurance) அதிகரிக்கும். இதற்காக அந்த நிறுவனங்கள் நம்மிடம் இருந்து எந்தவித கட்டணத்தையும் வசூலிப்பதில்லை.

இருப்பினும், இலவசமாக காப்பீடு கிடைக்கிறது என்பதற்காக மட்டுமே முதலீடு செய்ய வேண்டாம். குறிப்பிட்ட காலத்துக்கு முன்பு, நீங்கள் உங்கள் முதலீட்டை வெளியே எடுக்கும் நிலையில் உங்களது காப்பீடு ரத்து செய்யப்படலாம். சில பரஸ்பர நிதி நிறுவனங்கள் குறைந்தபட்சம் 25 வருடங்கள் முதலீடு செய்தால் மட்டுமே, உங்களுக்கு காப்பீட்டை வழங்கும். எனவே காப்பீடு இலவசமாக கிடைக்கப்பெற்றாலும், தனியாக டேர்ம் இன்சூரன்ஸ் எடுத்து வைத்து கொள்வது நல்லது.

வரும் காலங்களில் வங்கி வைப்பு தொகை மற்றும் அஞ்சலக திட்டங்களுக்கு மாற்றாக மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் முதலீடு முழுமையாக இருக்கலாம் என்பது தான் உண்மை. அதனால் தான் என்னவோ, சில வங்கிகள் தாமாக முன்வந்து வாடிக்கையாளர்களுக்கு பரஸ்பர நிதி திட்டங்களை பரிந்துரைக்கின்றன.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை

www.varthagamadurai.com

வர்த்தக மதுரையின் நிதி அறிவு துளிகள் – பாகம் 1

வர்த்தக மதுரையின் நிதி அறிவு துளிகள் – பாகம் 1

Personal Finance – Survey / Polling

 

வர்த்தக மதுரை சார்பாக வாசகர்கள் சிலர் நிதி கல்வியில் தாங்கள் கற்ற, தெரிந்த, அறியாத விஷயங்களை பகிர்ந்து கொள்வதற்கு வாய்ப்பளிக்கும் படி கேட்டு கொண்டிருந்தனர். ஒரு புறம் மட்டுமே தகவல் வெளிச்செல்ல கூடாது, மறுபுறம்  இருந்தும் நமக்கு தகவல்கள் கிடைப்பது அனுபவம் தானே.

 

எனவே, நமது வர்த்தக மதுரை தளத்தின் சார்பாக நிதி அறிவு துளிகள் என்ற தலைப்பில் நிதி சார்ந்த கேள்விகளும், அதற்கான பதில்களும் பெறப்படும். இது ஒரு வாக்கு பதிவு முறையில் அமையப்பெற்றது. உங்களுக்கான நிதி அறிவை நீங்கள் தற்சோதனை செய்து கொள்ள ஒரு தமிழ் களம்(Financial Blog in Tamil).

 

ஒவ்வொரு பாகத்திலும் ஐந்து கேள்விகள் கேட்கப்படும், அதற்கான பதில்கள் கருத்து கணிப்பின் வடிவில் அமையப்பெறும். கேள்விகளின் சரியான பதில்கள் நமது இணைய தளத்தில் வாக்கு பதிவு நாள் முடிந்தவுடன் வெளியிடப்படும். கருத்து கணிப்பின் முடிவில் வாசகர்கள் தங்கள் நிதி சார்ந்த அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளலாம்.

 

  1. சேமிப்பு, முதலீடு  – இரண்டும் ஒன்றா ?
  2. அரசு வெளியிடும் பட்ஜெட் தாக்கல் பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?
  3. உங்கள் குடும்பத்தில் நீங்கள் பட்ஜெட் திட்டமிடுவது உண்டா ?
  4. முதலீடு செய்வதின் நோக்கம் என்ன ?
  5. காப்பீடு என்பது ஒரு சிறந்த மற்றும் பாதுகாப்பான முதலீட்டு சாதனம் ?

குறிப்பு:

நீங்கள் வாக்கு பதிவு தகவல்களை காண முடியவில்லை என்றால், கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பதிவிடவும்.

Personal Finance – Survey 1

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

எது சிறந்த முதலீடு – தங்க நகைகள் vs தங்க பண்டுகள் ?

எது சிறந்த முதலீடு – தங்க நகைகள் vs தங்க பண்டுகள் ?

Which is the best Investment – Physical Gold or Gold Funds

 

நமது வர்த்தக மதுரை இணையதளத்தில் கடந்த சில கட்டுரைகளுக்கு முன், தங்கத்தின் விலை இன்னும் அதிகரிக்கலாம் மற்றும் அதற்கான காரணங்களையும் சொல்லியிருந்தோம். கடந்த பத்து வருட கால அளவில் மதிப்பீடும் போது, தங்கத்தின் மீதான வருமானம் பெரும்பாலும் வங்கிகள் அளிக்கும் வைப்பு நிதிக்கான(Fixed Deposits) வட்டி விகிதத்தை ஒட்டியே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

தங்கத்தை நகைகளாக(Jewels) வாங்குவதை காட்டிலும் அதனை ஒரு முதலீட்டு சாதனமாக மாற்றுவதே நமக்கான புத்திசாலித்தனமாகும். நாம் ஏற்கனவே சொன்னது போல, தங்க ஆபரணங்கள் என்பது ஒரு தேய்மான பொருளாகவும், வருமானம் எதுவும் தராமல் போகும் அணிகலனாக மட்டுமே (Liability) உள்ளது. நம்முடைய பெரும்பாலான சேமிப்பு தொகை தங்க நகைகள் வாங்குவதற்காக மட்டுமே செலவிடப்படுகிறது. மாறாக நமக்கான நிதி இலக்குகளுக்கு(Financial Goals) அது துணைபுரிவதில்லை.

 

எந்த ஒரு முதலீட்டு சாதனத்திற்கும் வருமான வாய்ப்பு மற்றும் நீண்ட காலத்தில் வளர்ச்சியும் உண்டு. அந்த வகையில் காணும் போது, நாம் நமது நகைகளை கொண்டு எவ்வளவு சம்பாதித்தோம் என பார்த்தால், தேய்மான செலவும்(Depreciation), தங்கத்தை பரிமாற்றம் செய்த செலவுகள்(Exchange) தான் மிஞ்சும். நமக்கு தேவையான சிறிதளவு நகைகளை மட்டும் வைத்து கொண்டு, தங்கத்தில் வருமானம் ஈட்டுவதற்கான வாய்ப்பை கண்டறிவது நல்லது.

 

தங்க நகைகளுக்கு மாற்றாக தங்க பண்டுகள் (அ) தங்க இ.டி.எப்.(Gold ETF) என்று சொல்லக்கூடிய பரஸ்பர நிதி திட்டங்களில் நமது முதலீடு இருக்கும் போது, நாம் போதுமான வருமானத்தை பெறலாம். தங்க நகைகளுக்கும், கோல்டு இ.டி.எப். திட்டங்களுக்கும் உள்ள வேறுபாட்டை பின்வரும் படத்தில் பாருங்கள்.

Gold vs Gold Fund

பொதுவாக நாம் தங்க நகைகளாக வைத்திருக்கும் போது, அவற்றில் ரிஸ்க் அதிகம். அது ஒரு பாதுகாப்பான முதலீடு என்று நாம் கூறினாலும், நகைகளை பாதுகாத்து கொள்ள வேண்டியது அவசியம். நாம் வாங்கும் தங்கம் சுத்தமான தங்கமா என்பதை நாம் தான் உறுதி செய்து கொள்ள வேண்டும். பெரும்பாலும் 91.6 சதவீத சுத்தமான தங்கத்தை மட்டுமே நாம் வாங்கும் வாய்ப்புண்டு. அதே வேளையில் பரஸ்பர நிதி திட்டங்கள் அளிக்கும் கோல்டு பண்டுகளில்(Gold Mutual Funds) 99.5 சதவீத மதிப்பிலான சுத்த தங்கத்தின் அடிப்படையில் நமது முதலீடு அமையும்.

 

வெறும் தங்க நகைகளாக மட்டுமே நாம் இப்போது வைத்திருக்கும் போது, பிற்காலத்தில் அந்த நகைகள் தேய்மானம் அடைவதும், மீண்டும் நாம் அதற்கான மாற்று பொருளாக புதிய நகைகளை வாங்குவதும் நமக்கு வீண்செலவு தான். அதற்கு பதிலாக இது போன்ற தங்க பண்டுகளில் நாம் முதலீட்டை மேற்கொள்ளும் போது, தேவைப்படும் காலத்தில் நமக்கான புதிய நகைகளை வாங்கி கொள்ளலாம், நமக்கும் இதன் மூலம் வருவாயும் கிடைத்திருக்கும்.

 

நாம் வைத்திருக்கும் தங்க நகைகளை அவ்வளவு எளிதாக பணமாக மாற்ற முடியாது. நகைகளை அடகு வைக்கவோ அல்லது விற்கவோ மட்டுமே நம்மால் முடியும். மேலும் நகைகளின் மதிப்பில் குறைவான பணமே நமக்கு கிடைக்கும். ஆனால் இ.டி.எப்.(Exchange Traded Fund) திட்டங்களில் நாம் எப்போது வேண்டுமானாலும் நமக்கு தேவையான தொகையை பெற்றுக்கொள்ளலாம். பாதுகாப்பான முதலீடும் மட்டுமில்லாமல் இதனை வாங்குவதற்கான செலவும் மிக குறைவு.

 

தங்க இ.டி.எப். திட்டங்களில் குறைந்தபட்ச முதலீடாக(Minimum Investment) ஒரு கிராம் தங்கத்தின் மதிப்பை கூட நாம் வாங்கலாம் என்பது கவனிக்கத்தக்கது. குறுகிய கால மற்றும் நீண்ட கால மூலதன ஆதாய வரி அடிப்படையில் தங்க நகைகளுக்கு உள்ள காலங்களே இ.டி.எப். பரஸ்பர நிதி திட்டத்திற்கும் பொருந்தும். நாம் தங்க நகைகளை விற்பனை செய்வதன் மூலம் நமக்கு கிடைக்கும் லாபத்திற்கு செல்வ வரி(Wealth Tax) உண்டு. ஆனால் தங்க பண்டுகளுக்கு இது போன்ற வரிகள் இல்லை.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

பங்குச்சந்தை பரிந்துரைகளா, அழைப்புகளா ? – எச்சரிக்கை தேவை

பங்குச்சந்தை பரிந்துரைகளா, அழைப்புகளா ? – எச்சரிக்கை தேவை

The Ugly truth about Stock Market recommendations

 

இந்த கட்டுரை பங்குச்சந்தையில் புதிதாக நுழைபவர்களுக்கானது மட்டுமல்ல, சந்தையில் கடந்த சில காலங்களாக இருக்கும் தின வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு தான். பங்குச்சந்தை என்பது ஒரு தொழில்(Share Market is a Business) சார்ந்த விஷயம் என்று நாம் ஏற்கனவே சொல்லி கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையில் சந்தையில் நடப்பது என்னவென்று ஆராய்ந்தால், சந்தையில் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலம் இது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

பங்குச்சந்தை அதலபாதாளத்திற்கு சென்று விடுமா என சந்தையில் புதிதாக உள்ளவர்கள் பயம் கொள்ள வேண்டாம். இது பங்குகளின் பரிந்துரைகள்(Stock Recommendations) மற்றும் பங்குச்சந்தை சார்ந்து வரும் அழைப்புகளின்(Trade recommending calls) எச்சரிக்கை மணி. பங்குச்சந்தையில் தின வர்த்தகர்கள், குறுகிய கால மற்றும் நீண்ட கால முதலீட்டாளர்களுக்கென தனித்தனி அடையாளங்கள் உண்டு. அவர்களுக்கென்று ஆய்வும் வேறுபடுகிறது (அடிப்படை பகுப்பாய்வு(Fundamental Analysis) மற்றும் தொழில்நுட்ப பகுப்பாய்வு(Technical Analysis)). அல்காரித வர்த்தகம்(Algorithm Trading) மற்றும் அதிக அதிர்வெண் வர்த்தகம்(High Frequency Trading -HFT) மேற்கொண்டிருக்கும் காலம் இது.

 

நீங்கள் ஒரு பங்கினை வாங்க அதற்கான கட்டளையை இயக்கும் முன்(Ordering), இந்த அதிர்வெண் மென்பொருள் பயன்பாடுகள் தங்களுக்கான கட்டளையை முடித்து விட்டு, உங்களை சந்தையின் எதிர்திசையில் பயணிக்க வைக்கும், முடிவில் உங்களுக்கு ஏற்படுவது நஷ்டம் தான். இந்த தாக்கம் தின வர்த்தகர்களுக்கு மட்டுமில்லாமல், சில சமயங்களில் குறுகிய கால வர்த்தகர்களையும் பாதிக்கும். சந்தையில் உள்ள பங்குகள் ஒரே நாளில் 20 சதவீதத்திற்கு மேல் ஏறுவதும், இறங்குவதும் இதன் காரணமாகவே.

 

சில்லறை முதலீட்டாளர்களை(Retail Investors) தவிர்த்து, மனித தொடர்பு இல்லாத கணினி சார்ந்த தானியங்கி செயல்பாடுகள் பங்குச்சந்தையில் இருப்பதை யாரும் மறக்க வேண்டாம். இது போன்ற காலங்களில் மற்றுமொரு வருந்தத்தக்க விஷயம் சந்தையில் ஈடுபடுபவர்கள் ஊடக பரிந்துரைகள் மற்றும் அழைப்புகளை ஏற்பது தான். நீங்கள் ஒரு தின வர்த்தகராக இருக்கலாம் அல்லது முதலீட்டாளராக சந்தையில் வளம் வரலாம். சந்தையில் உங்களுக்கான கொள்கைகள் மற்றும் கோட்பாடுகள் இருக்கலாம். அதனை நன்றாக அறிந்து கொண்டு, உங்களுக்கான முதலீட்டு தாரக மந்திரங்களை(Trading and Investment Rules) உருவாக்கினால் போதும். நீண்ட காலத்தில் சந்தை வர்தகருக்கும், முதலீட்டாளருக்கும் நன்மை அளிக்கும்.

 

இன்று ஊடகங்களில் பங்குச்சந்தை சார்ந்த பங்கு பரிந்துரைகள்(Buy or Sell) ஒரு பக்கம் இருந்து வந்தாலும், பங்குச்சந்தையில் ஈடுபடுபவர்களுக்கு அவ்வப்போது அழைப்புகள் வந்த வண்ணம் இருக்கும். ‘நாங்கள் உங்களுக்கு தினமும் ரூ. 2000 முதல் 5000 ரூபாய் வரை பங்குச்சந்தையில் சம்பாதிக்க வாய்ப்பளிக்கிறோம். இதற்கான கட்டணம் மாதம் ரூ. 5000/- மட்டுமே. நீங்கள் மாதத்திற்கு ரூ. 1 லட்சம் வரை (20 வர்த்தக நாட்கள் X ரூ.5000) சம்பாதிக்கலாம் ‘ என்று சில அழைப்புகள் வரும்.

 

மற்றொரு அழைப்பு, ‘ பங்குச்சந்தையில் நாங்கள் கடந்த பல வருடங்களாக பங்குகளை பரிந்துரைத்து வருகிறோம். எங்கள் மூலம் பல முதலீட்டாளர்கள் 100 சதவீதத்திற்கு மேல் வருமானம் பெற்றுள்ளனர். நீங்கள் எங்களுக்காக எந்த கட்டணத்தையும் செலுத்த வேண்டாம். உங்களுக்கான லாபத்தில் சில சதவீதம் மாதத்திற்கு ஒரு முறை அளித்தால் போதும் (Scam)‘ என வருவதுண்டு.

 

பங்குச்சந்தையில் ஒரு நிறுவனத்தின் வருவாய்(Business Earnings) தன்மையை குறுகிய காலத்திலோ அல்லது நீண்ட காலத்திலோ கணிக்கலாம். ஆனால் ஒரு பங்கின் விலையை உங்களால் எதிர்காலத்தில் கணிப்பது சாத்தியமல்ல. பங்குச்சந்தையில் உள்ள சில வல்லுநர்கள் நிறுவனத்தின் கடந்த கால வருவாயை கொண்டு, எதிர்காலத்தில் இதன் வருமானம் இவ்வாறு இருக்கலாம் மற்றும் அடுத்த ஒரு வருடத்திற்கான பங்கு விலை இலக்கு இவ்வளவு என்று சொன்னாலும், அது அவருடைய சொந்த மதிப்பீடு தான். சொல்லப்பட்ட பங்கின் இலக்கு எதிர்காலத்தில் வெற்றி பெறலாம், தோல்வியும் உண்டு. அதனால் தான் ஆராயப்பட்ட பங்குகளுக்கான இலக்கு விலையை(Target Price) நிர்ணயிக்கும் போது, அந்த பங்கிற்கான இழப்பு நிறுத்ததையும்(Stop loss) அவர்கள் சொல்வதுண்டு. ஏனெனில் பங்குச்சந்தையில் யாராலும் விலையை எதிர்காலத்தில் கணிக்க முடியாது. பத்து வருடங்களுக்கு முன்பு 50 ரூபாய் இருந்த ஒரு பங்கின் விலை இன்று 5000 ரூபாயாக இருக்கலாம். அதே வேளையில் ரூ. 3000 விலையை கொண்ட ஒரு பங்கு இன்று வெறும் 2 ரூபாயில் வர்த்தகமாகி கொண்டிருப்பதும் பங்குச்சந்தையில் இயல்பது தான்.

 

பங்குச்சந்தையில் இலக்கு விலைகளை கணிப்பதை விட்டு விட்டு, ஒரு நிறுவனத்தின் அல்லது துறையின் ஆய்வுகளை நாம் மேற்கொள்ளலாம்.  பங்குச்சந்தை ஏற்ற-இறக்கத்திற்கான காரணங்களை நாம் கண்டறியலாம். அதனை நாம் மேற்கொள்ளாமல் பங்குச்சந்தை பரிந்துரைகள்(Stock Recommendations) மற்றும் அழைப்புகளின் பின்னால் ஓடினால் கோடிகளை கொட்டி கொடுப்பதற்கான தீனி நாம் தான். பங்குச்சந்தையில் யாவரும் சம்பாதிக்கலாம். அதற்கு தேவை சிறு முதலீடும், பங்குச்சந்தை பற்றிய அடிப்படை கல்வியும் தான்.

 

ஒருவர் தனது பட்டப்படிப்பில் இன்ஜினியரிங்(Engineering Graduate) படிக்க முனைகிறார் என வைத்து கொள்வோம். இன்ஜினியரிங் படிப்பிற்கான மொத்த செலவு என பார்க்கும் போது, 5-10 லட்சம் ரூபாய் வரை ஆகும். இதற்கான காலம் 4 வருடங்கள். தனது இன்ஜினியரிங் பட்டப்படிப்பை முடித்த ஒரு இளைஞர் அதனை தகுதியாக கொண்டு ஒரு நிறுவனத்தில் பணிபுரிவார். ஆரம்பத்தில் அவருக்கு தொழில் அனுபவம் இல்லாததால் குறைந்த அல்லது மிதமான சம்பளத்தில் வேலை செய்வார். பின்பு சில காலங்களுக்கு பிறகு அவரது அனுபவமும், வருமானமும் அதிகரிக்கும். இது போன்று தான் மற்ற படிப்புகளுக்கும். உங்களுக்கான வருமானம் அதிகம் தேவையென்றால், அதற்கான படிப்பு செலவும், படிக்கும் காலமும் அதிகமாக இருக்கலாம். மருத்துவர்களின் மாத வருமானம் கணக்காளர்களின் வருமானத்திலிருந்து வேறுபடுகிறது. அதே போன்று விண்வெளி ஆராய்ச்சியில் பணிபுரிபவர்களின் சம்பளம் விற்பனையாளர்களிடம் இருந்து வேறுபடும். தொழிலாளர்களின் வருமானம், தொழில் புரிபவர்களின் லாபத்திற்கு ஈடாகாது.

 

இப்படியிருக்கும் போது, பங்குச்சந்தையில் நாம் எந்த அடிப்படை அறிவையும் பெறாமல் குறுகிய காலத்தில் நமது சம்பளத்தை விட பல மடங்கு லாபத்தை எதிர்பார்ப்பது எவ்வாறு சாத்தியம் ? பங்குச்சந்தையில் வருமானம் பார்க்க அதற்கான விலை மதிப்பும் மற்றும் காலமும் மிகவும் அவசியம். அனுபவமே வெற்றியாளர்களை உருவாக்கும். வெற்றி பெற்றவர்களின் அனுபவங்களில் இருந்து நாம் கற்க முயன்றாலும், நமக்கான வெற்றி பாதை தெளிவாகும்.

 

பங்கு பரிந்துரைகள் மற்றும் அழைப்புகள் நூறு சதவீதம் வெற்றி பெற்றிருந்தால், ஏன் இன்று பல தொழிலதிபர்கள் கோடிகளை முதலீடு செய்து விட்டு, ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை கொண்டு நிறுவனங்களை இயக்க வேண்டும், பங்குச்சந்தையிலே அவர்கள் சம்பாதிக்கலாமே ?  பங்குச்சந்தை என்பது ஒரு தொழில், அது மற்ற தொழில்களை போன்று தான். சந்தை இறக்கத்தில் போர்ட்போலியோ(Portfolio Management Services -PMS) என்று சொல்லப்படும் முதலீட்டு சேவையை கொண்டிருப்போருக்கும் அவர்களது முதலீட்டு மதிப்பில் சில நேரங்களில் சறுக்கல் ஏற்படலாம், அப்படியிருக்கும் போது நாம் எம்மாத்திரம். நீண்டகாலத்தில் பணவீக்கத்தை தாண்டிய வருமானத்தை தரும் முதலீடு பங்குச்சந்தை. இது போன்று ஏமாற்று விஷயங்களில் பங்குச்சந்தை அமைப்பு என்ன செய்து கொண்டிருக்கிறது என்பது வேறு விஷயம். ஆனால் நாம் ஒரு தின வர்த்தகராக, முதலீட்டாளராக எப்படி செயல்படுகிறோம் என்பது தான் அவசியம். ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதற்கான சரியான விலையை நாம் பெறலாம். ஆனால் அதனை விற்பதற்கான இலக்கு விலை ஒரு முதலீட்டாளரை சார்ந்தது, பங்கு பரிந்துரைகள் மற்றும் அழைப்புகளின் பின்னால் அல்ல !

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

5 சிறந்த வரி சேமிப்பு பரஸ்பர நிதித்திட்டங்கள் – ELSS – 2019

5 சிறந்த வரி சேமிப்பு பரஸ்பர நிதித்திட்டங்கள் – ELSS – 2019

Best 5 Tax Saving Mutual Funds – ELSS – 2019

 

நடப்பு நிதி வருடத்திற்கான(2018-19) காலம் முடிவடைவதற்கு இன்னும் ஏழு வாரங்களே உள்ளன. 2018-19ம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் வரும் ஏப்ரல் மாதம் முதல் ஆரம்பமாகும். இந்த மாதத்தின் தொடக்கத்தில் பட்ஜெட் வாயிலாக தனி நபர் வருமான வரியில் தள்ளுபடிகள் மற்றும் இதர சலுகைகள் கொடுக்கப்பட்டன. இந்த வரி தள்ளுபடிகளும், மற்ற சலுகைகளும் அடுத்து வரும் 2019-20ம் நிதியாண்டுக்கானது. இருப்பினும் நமக்கு நடப்பு வருடத்திற்கு கொடுக்கப்பட்ட சலுகைகளை கொண்டு நாம் வருமான வரி தாக்கல்(Income Tax filing) செய்ய போகிறோம். நடப்பு வருடத்தில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் வருமான வரி வரம்பில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை, வரி தள்ளுபடியாக மட்டுமே கொண்டுவரப்பட்டுள்ளது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

நம்மில் பெரும்பாலோர் வருமான வரியில் விலக்கு பெற(Income Tax exemption), கடைசி நேரத்தில் வரி சலுகை திட்டங்களில் முதலீடு செய்கின்றனர். வரி சலுகையை பெற ஒரு நிதி ஆண்டின் தொடக்கத்தில் முதலீட்டை துவங்குவதே நல்லது. நீங்கள் செய்யப்போகும் முதலீடு வரி சலுகைக்காக மட்டுமில்லாமல், உங்களின் நிதி இலக்குகளை(Financial Goals) சார்ந்து இருக்க வேண்டும். இன்னும் சிலரோ வருமான வரி சலுகைக்கு வெறும் காப்பீட்டு திட்டங்களை மட்டுமே கொண்டுள்ளனர் என்பது வருந்தத்தக்க விஷயம். வருமான வரி செலுத்தும் அளவுக்கு வருவாய் உள்ள ஒரு தனி நபர், தனக்கு போதுமான காப்பீட்டு தொகையை எடுத்து விட்டு பின்னர் மற்ற வரி சலுகை திட்டங்களை பற்றி யோசிக்கலாம். போதுமான காப்பீடு என்பது இன்று டேர்ம் பாலிசியில்(Term Insurance Policy) மட்டுமே குறைந்த விலையில் கிடைக்கிறது. காப்பீடு போக மீதமுள்ள தொகைக்கு நாம் வருமான வரிச்சட்டம் 80 சி பிரிவின் கீழ் மற்ற வரி சலுகை திட்டங்களை தேர்ந்தெடுக்கலாம். Income Tax Act – 80 சி பிரிவின் கீழ் தனி நபர் ஒருவர் அதிகபட்சமாக ரூ. 1.50 லட்சம் வரை வரிச்சலுகை பெறலாம்.

 

வரி சலுகைக்கான திட்டங்கள் எனும் போது, பொதுவாக அஞ்சலக மற்றும் வங்கிகளில் வழங்கப்படும் திட்டங்கள் ஞாபகம் வரலாம். பொது வருங்கால வைப்பு நிதி(PPF), தேசிய சேமிப்பு பத்திரம்(NSC), கிசான் விகாஸ் பத்திரம்(KVP), செல்வமகள் திட்டம்(Sukanya Samriddhi), காப்பீடு நிறுவனங்கள் வழங்கும் முதலீட்டு திட்டங்கள் மற்றும் பரஸ்பர நிதித்திட்டங்கள் அளிக்கும் வரிச்சலுகை முதலீடுகள்(Tax Saving Mutual Funds) ஆகியவை நமக்கான வாய்ப்புகளாக உள்ளன.

 

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து திட்டங்களும் வருமான வரி சட்டம் பிரிவு 80சி ன் கீழ் ரூ. 1.5 லட்சம் வரை (அனைத்துக்கும் சேர்த்து) வரி சலுகை பெறக்கூடியவை. வரி சலுகை திட்டங்களை பொறுத்தவரை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு(Lock-in Period) பிறகு தான் நாம் அந்த திட்டங்களில் இருந்து பணத்தை பெற வேண்டும். இதன் காரணமாக தான் நமக்கு வரிச்சலுகை கிடைக்க பெறுகிறது. அவ்வாறு பார்க்கும் போது, குறைந்த காலத்தில் முதலீட்டை எடுக்கக்கூடியதாகவும், ரிஸ்க்குடன் கூடிய நல்ல வருமானத்தை தருவதாக பரஸ்பர நிதி வரிச்சலுகை  திட்டங்கள்(ELSS -Equity linked Savings Scheme) உள்ளன. இவை மற்ற வரி சலுகை திட்டங்களை காட்டிலும் நீண்டகாலத்தில் பணவீக்கத்தை தாண்டிய வருமானத்தை கொடுப்பவை.

 

நடப்பு நிதியாண்டு 2019ல் சிறந்த மற்றும் வரி சலுகை அளிக்கக்கூடிய பரஸ்பர நிதி திட்டங்கள்(Tax Saving Mutual Funds),

 

  • Canara Robeco Equity Tax Saver
  • Axis Long Term Equity Fund
  • Mirae Asset Tax Saver Fund
  • Taurus Tax Shield Fund
  • Kotak Tax Saver Fund

 

இந்த ஐந்து திட்டங்களும் வருவாய் மற்றும் ரிஸ்க் விகிதத்தின் அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. Value Research Online மற்றும் Morningstar தளங்கள், சொல்லப்பட்டுள்ள ஐந்து பரஸ்பர நிதி திட்டங்களுக்கும் ஒன்று முதல் ஐந்து வரை தரவரிசை பட்டியலில் இடம் கொடுத்துள்ளது. ஒரு பரஸ்பர நிதி திட்டத்தினை தேர்ந்தெடுக்கும் போது, அதன் நிர்வாகம்(Fund Manager), வருவாய் மதிப்பீடு, துறை சார்ந்த மற்றும் பென்ச்மார்க் வருமானம்(Benchmark Returns), ரிஸ்க் விகிதங்கள்(Risk ratios) போன்றவற்றை ஆய்வு செய்வது அவசியம்.

 

மேலே சொல்லப்பட்டுள்ளன வரி சலுகை அளிக்கும் பரஸ்பர நிதி திட்டங்களில் குறைந்தபட்ச முதலீடு ரூ.500/- மட்டுமே. செலவின விகிதம்(Expense ratio) 2.0 – 2.75 % என்ற அளவிலும், பணத்தை திரும்ப பெறும் போது வெளியேறும் கட்டணம்(No exit load) எதுவுமில்லை. பண்டுகளின் ரிஸ்க் அளவு குறைந்தது முதல் மிதமானதாக(Low to Average) உள்ளது. நியமச்சாய்வு(Standard Deviation) 14லிருந்து 15 புள்ளிகள் வரை கொண்டுள்ளது. கடந்த ஒரு வருட கால வருவாய் என பார்க்கும் போது, சராசரியாக மூன்றிலிருந்து ஏழு சதவீத வருமானத்தை கொடுத்துள்ளது. கடந்த வருடத்தில் சந்தை மந்தமாக இருந்ததும், இந்த வருவாய் குறைவுக்கான காரணமாக சொல்லப்படுகிறது. எனினும் ஐந்து வருட காலத்தில் அனைத்து பண்டுகளும் 15 சதவீதத்திற்கும் மேல் வருமானத்தை தந்துள்ளது.

 

5 சிறந்த பரஸ்பர நிதி திட்டங்களில் ஒவ்வொரு பண்டின் சந்தை மூலதனமும் ரூ.50,000 கோடிக்கும் மேல் உள்ளது. நட்சத்திர மதிப்பீடை(Star Rating) மட்டுமே கருத்தில் கொள்ளாமல், மற்ற விஷயங்களையும் நாம் ஆராயும் போது சிறந்த பரஸ்பர நிதி திட்டங்கள் நமக்கு கிடைக்கும். சொல்லப்பட்ட வருமான விகிதங்கள் மற்றும் இதர விஷயங்கள் அனைத்தும் கடந்த கால செய்தியே. இனிவரும் காலத்தில் அவை நன்றாக செயல்படுமா என்பது சந்தை மற்றும் நிர்வாகத்தை சார்ந்தது.

 

மறவாதீர்கள், கடைசி நேர வரிச்சலுகை திட்டங்களை தவிருங்கள். உங்களுக்கான நிதி இலக்குகளை அல்லது தேவைகளை முதலில் தீர்மானியுங்கள். அதனை சார்ந்து வரி சலுகை திட்டங்கள் இருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள். செய்யப்படும் வரி சலுகை முதலீடு தகுந்த நிதி ஆலோசகரின் முன்னிலையில் நிதியாண்டின் (ஏப்ரல் மாதம்) தொடக்கத்தில் இருக்கட்டும்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

நிதி சுதந்திரத்தை விரைவாக அடைய வேண்டுமா ? உங்களுக்கான 8 தாரக மந்திரங்கள்

நிதி சுதந்திரத்தை விரைவாக அடைய வேண்டுமா  ? உங்களுக்கான 8 தாரக மந்திரங்கள்

The Eight Strategies to get Financial Freedom fast

 

இன்றைய நவீனத்துவ உலகில் பொருளாதார வாழ்க்கை என்பது அவசியமான ஒன்றாகி விட்டது. பணம் நமக்கு அதிகம் தேவையில்லை என்று சொன்னாலும், தொழில் வளர்ச்சியும், அதனை சார்ந்த தேவைகளும் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. அதனால் தான், ‘ சிறு துளி பெருவெள்ளம் ‘ என்ற வாசகம் இன்றும் பிரகாசமாகவே உள்ளது.

 

எளிய முறை வாழ்க்கையோ அல்லது நாம் விரும்பிய வாழ்க்கை முறையோ, எதுவென்றாலும் நாம் பொருளாதாரத்தை சார்ந்தே உள்ளோம். அப்படி இருக்கும் போது, பொருளாதார தேவைக்காக நம்மில் பலர் தங்கள் வாழ்க்கையையே அடமானம் வைக்கின்றனர். பணம் தேவை தான், அதற்காக வாழ்நாள் முழுவதும் பணத்தின் பின்னால் செல்வதில் என்ன மகிழ்ச்சி உள்ளது ?

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

சிறுகச்சிறுக சேர்த்து வைத்த பணத்தை சந்தோசமாக செலவழிப்பதற்கான காலம் இருந்தால் மட்டுமே, நாம் சேர்த்த பணத்திற்கான பயன் உண்டு. தொழில்நுட்பம் மேம்பட்டு கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில் நம்மில் சிலர் இளமை காலத்தில் ஓய்வு பெறுவது பற்றியும் (Early Retirement Plan), பொருளாதார சுதந்திரத்தை அடைய முயற்சிப்பதும்(Financial Freedom) நடந்து கொண்டு தான் இருக்கிறது. இதற்கான சாத்தியம் குறைவு தான் என்று சொல்ல வந்தாலும், இது போன்ற சிந்தனைகள் ஒரு ஆரோக்கியமான விஷயமே.

 

ஒரு காலத்தில் கம்ப்யூட்டர் (Computer) வேண்டாம் என்று சொன்னவர்கள் எல்லாம், இன்று தங்களது தேவைக்கு அதனையே சார்ந்துள்ளனர். இதனை போன்றே நிதி சுதந்திரம் பெறுவதும் ஒரு தேவையே. நிதி சுதந்திரம் அல்லது பொருளாதார சுதந்திரம்(Financially Free) என்பது நாம் நமக்கான தேவைக்காக வாழ்நாள் முழுவதும் உழைக்காமல், அதற்கான போதுமான செல்வத்தை முன்கூட்டியே சேர்த்து வைத்து கொள்வது. இதன் மூலம் நாம் நமது வாழ்க்கையில் பொருளாதார ரீதியாக சுதந்திரமாக செயல்படலாம்.

 

நிதி சுதந்திரத்தை பெற இன்று பல தகவல்கள் இணையத்தில் கிடைத்தாலும், வெற்றி பெற்றவர்கள் சிலரின் அனுபவங்கள், தோல்விகள் ஆகியவை நம்மை எளிதாக நிதி சுதந்திரம் பெற துணைபுரியும். அப்படியான ஒரு நபரின் சந்திப்பையும், அவரது வார்த்தைகளையும் தான், நான் சில நாட்களுக்கு முன் பெற்றிருந்தேன். கனடா நாட்டை சேர்ந்த ஹார்வ் எக்கர் (Harv Eker) ஒரு ஊக்கமூட்டும் பேச்சாளர், தொழிலதிபர் மற்றும் கோடீஸ்வரர். ‘ Secrets of the Millionaire Mind ‘ என்ற பிரபலமான புத்தகத்தின் ஆசிரியரும் ஹார்வ் எக்கர் ஆவார். அவரிடம் நான் கற்ற விஷயங்கள் சில,

 

நிதி சுதந்திரத்தை விரைவாக பெறுவதற்கான 8 தாரக மந்திரங்கள்:

 

  • சுதந்திரமான மனதை அமைத்து கொள்ளுதல்(Freedom Mindset) :

 

உங்கள்  எண்ணங்கள், நம்பிக்கை, வார்த்தைகள் மற்றும் கொள்கைகளில் நீங்கள் சுதந்திரமாக செயல்பட முனையுங்கள். உங்களுக்கான வாழ்க்கையை நீங்கள் தேர்ந்தெடுக்கும் போது, அதற்கான திட்டம் உங்களிடம் இருக்கும். அதுவே உங்களை முன்னேற்றத்தில் செல்ல துணைபுரியும்.

 

  • இலக்கு மற்றும் திட்டத்தை ஏற்படுத்தி கொள்ளுதல் (Goal and Plan):

 

நீங்கள் பொருளாதார சுதந்திரம் அடைய முடிவெடுத்தவுடன், உங்களுக்கான சரியான இலக்கையும், திட்டத்தையும் ஏற்படுத்துவது அவசியம். உங்களுக்கு என்ன வேண்டும், எங்கே செல்ல விரும்புகிறீர்கள், என்ன மாதிரியான வாழ்க்கை முறையை வாழ விரும்புகிறீர்கள் (What do you want) என்பதை தீர்மானித்து கொள்வது நன்று.

 

பொருளாதார ரீதியாக தேவைப்படும் பணத்தின் மதிப்பையும் குறித்து வைத்து கொள்வது, அடுத்த 10-15 வருடங்களுக்கு எனக்கும், எனது குடும்பத்திற்கும் என்ன தேவை உள்ளது என்பதையும் கணக்கிட்டு கொள்ள வேண்டும். இலக்கு மற்றும் திட்டமில்லாத சுதந்திரம் என்று எதுவும் கிடையாது. நீங்கள் நிதி சுதந்திரம் பெற வேண்டுமானால், இலக்கு மற்றும் திட்டம் என்பதும் அவசியமாகும்.

 

  • சம்பாதிப்பதை விட குறைவாக செலவழியுங்கள் (Spend less than you Earn):

 

தேவையற்ற செலவுகளை குறைத்தல் அல்லது அதனை தவிர்த்தல் என்பது நிதி சுதந்திரத்தின் முக்கிய பண்பாகும். உங்களிடம் என்ன உள்ளதோ, அதன் எல்லைக்குள் உங்கள் பொருளாதாரத்தை பாதுகாத்து கொள்ளுங்கள்.

 

அவசியமற்ற செலவுகளை தவிர்த்தல் என்பதை உங்கள் வாழ்வில் ஒரு பழக்கமாக்கி கொள்வதும், பின்னாளில் அது உங்களை பல சந்தர்ப்பங்களில் மகிழ்ச்சியடைய செய்யும்.

 

  • உங்கள் பணத்தை நிர்வகிக்க கற்று கொள்ளுங்கள் (Manage your money):

 

உங்களுக்கு தேவையான மாத அடிப்படை செலவுகள், சேமிப்பு மற்றும் முதலீடுகள், உங்களுக்கு பிரியமான இடத்திற்கு செல்ல தேவைப்படும் தொகை ஆகியவற்றை தனித்தனியாக ஒதுக்கீடு (Splitting) செய்ய பழகுங்கள். முடிந்தால் ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு வங்கி கணக்குகளை ஆரம்பியுங்கள்.

 

ஒவ்வொரு தேவைக்குமான தொகையை முன்னரே எடுத்து வைக்க பழகுங்கள். இதன் மூலம் நீங்கள் ஒவ்வொரு மாதமும் நிதி சிக்கல் இல்லாமல் பொருளாதார சுதந்திரத்தை எளிமையாக அடையலாம்.

 

  • அதிகப்படியான பணம் சம்பாதியுங்கள் (Earn a lot more money):

 

நீங்கள் உங்கள் இளமை காலத்தில் அதிகப்படியான வருமானத்தை பெறும் போது, உங்களுடைய சேமிப்பையும், முதலீட்டையும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இதனால் நிதி சுதந்திரம் பெறுவதை விரைவாகவும், எளிமையாகவும் அடையலாம்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

பணம் சம்பாதிப்பதின் ரகசியமே (Secret of Earning Money) , நாம் பெறும் வருமானம் எவ்வாறு நமக்கு கிடைக்கிறது என்பதில் தான் உள்ளது. நம்மை சுற்றியுள்ளவர்களின் பிரச்னைகளை தீர்ப்பதின் மூலமே நமக்கான வருமானம் கிடைக்கிறது. மக்களுடைய அதிகப்படியான பிரச்னைகளை கண்டறியுங்கள், அதனை தீர்க்க உதவுங்கள். பிரச்னைகளுக்கான தீர்வை அளிப்பவராக (Problem Solver) உங்களை மாற்றி கொள்ளுங்கள். உங்களுக்கான பணம் தானாக வந்து சேரும்.

 

  • மூலதனத்தின் சக்தி வாய்ந்த வாய்ப்புகள் (Investment Appreciation):

 

உங்களின் பணத்தை வெறும் முதலீடாக மட்டுமல்லாமல், முதலீட்டின் மூலம் பெறும் வருமானத்தின் மதிப்பையும் (Value to Increase) உயர்த்த முயலுங்கள். கையில் கிடைத்த லாபத்தை மறுமுதலீடு (Reinvesting) செய்வதால் உங்களுடைய செல்வத்தின் மதிப்பும் உயரும்.

 

பங்குகள் (Stocks), பரஸ்பர நிதிகள் (Mutual Funds), மனை விற்பனை (Real Estate), வாடகை வருமானம் (Rental Income) போன்ற மூலதன பெருக்குதலில் உங்கள் ஆர்வத்தை காட்டுங்கள். நீங்கள் ஒரு சொத்தினை வாங்கும் போது மட்டுமே உங்களுக்கான லாபத்தை பெறுகிறீர்கள், விற்கும் போது அல்ல.

 

  • மிகப்பெரிய செயலற்ற வருமானத்தை உருவாக்குங்கள் (Create Passive Income):

 

உங்கள் நேரம் மற்றும் ஆற்றலை அதிகமாக வீணாக்காமல், வருமானத்தை அதிகரிப்பதற்கான கற்றலை மேற்கொள்ளுங்கள். கற்றலின் மூலம் மிகப்பெரிய செயலற்ற வருமானத்தை பெறுங்கள். நீங்கள் இல்லாமல் செயல்படும் ஒரு தொழிலை அல்லது வணிக அமைப்பை (Business System) ஏற்படுத்துங்கள். அந்த தொழில் உங்களுக்காக வாழ்நாள் முழுவதும் சம்பாதித்து தரும்.

 

உங்களிடம் உள்ள சேமிப்பு சிறு தொகையாக இருந்தாலும், அதனை ஒரு தொழிலாக மாற்றுங்கள் (Converting liquid cash to Business Opportunity). அவை தோல்வியடைந்தாலும் பரவாயில்லை. உங்களுக்கான மற்றொரு வாய்ப்பை காட்டும்.

 

  • உங்களுடைய பங்களிப்பு அப்போதும் அவசியம் (Helping others):

 

நீங்கள் பொருளாதார சுதந்திரம் பெறுவது ஒரு புறம் இருந்தாலும், உங்களுடைய பங்களிப்பை மற்றவர்களுக்கும் அளியுங்கள். ஏழை, எளியவர்களின் கல்விக்கு உதவுவது, உங்களுக்கு தெரிந்த விஷயங்களை மற்றவர்களுக்கு சொல்லி கொடுப்பது, தொழிலில் ஆர்வமுள்ளவர்களை மேம்படுத்த துணைபுரிவது போன்ற செயல்களை எப்போதும் மேற்கொள்ளுங்கள்.

 

‘ என்னிடம் பணம் இருந்தால் மட்டுமே நான் மற்றவர்களுக்கு உதவுவேன் என்று நீங்கள் கூறினால், உங்களால் வாழ்நாள் முழுவதும் யாருக்கும் நன்மையை செய்ய முடியாது. ‘

 

பணத்தின் ரகசியமே மற்றவர்களுக்கு கொடுப்பதின் மூலம் தான் உள்ளது. உங்களுடைய ஒவ்வொரு உதவியும், உங்களை மேம்படுத்தும்.

 

அறிவே ஆற்றல்(Knowledge is Power). அறிவை நீங்கள் செயல்படுத்தவில்லை என்றால், அதனால் யாருக்கு என்ன பயன் ? செயல்படுத்தப்பட்ட அறிவே பயன்களை விளைவிக்கும். அதனால் தான் இன்று படித்தவர்கள் அதிகம் இருப்பினும், அவர்களுக்கான தேவையை பூர்த்தி செய்து கொள்ள முடிவதில்லை. அதற்கு காரணம் கற்ற கல்வியை முறையாக பயன்படுத்தவில்லை என்பது தான். அதே நேரத்தில் படிப்பறிவு குறைவாக இருந்தாலும், சிலர் தங்களின் செயல்களின் மூலம் பிரமாண்டமான வாழ்க்கையை வாழ்கின்றனர். சமுதாயத்திற்கும் பல நன்மைகளை செய்து கொண்டிருக்கின்றனர்.

 

நீங்கள் கற்கும் எந்தவொரு கல்வியையும் செயலில் கொண்டுவர பழகுங்கள். பின்பு, அதனை உங்களின் பழக்கமாக்கி கொள்ளுங்கள். வெற்றி உங்களின் பாதத்தில்…

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

 

இளமையில் முதலீட்டின் அவசியம் – வாரன் பப்பெட்

இளமையில் முதலீட்டின் அவசியம் – வாரன் பப்பெட்

The Neccessity of Investing at Young – Warren Buffet

 

வாரன் பப்பெட்(Warren Buffet) 1930 ம் ஆண்டு அமெரிக்காவின் ஒமாஹா நகரத்தில் பிறந்தவர். இவர் ஒரு முதலீட்டாளர் மற்றும் அமெரிக்க தொழிலதிபராக வலம் வருபவர். தொழிலின் மீதும், முதலீட்டின் மீதும் கொண்ட காதலால் தனது 11ம் வயதில் முதலீட்டை(Investing) தொடங்கினார். முதன்முதலில் ஒரு எண்ணெய் நிறுவனத்தில் முதலீடு செய்த இவர், ஒரு பங்கு 38 டாலர் வீதம் 6 பங்குகளை நியூயார்க் பங்குச்சந்தையில் வாங்கினார். அப்போதும் பகிர்ந்தளிப்பு முறையில், தனக்கு மூன்று பங்குகளையும், தனது சகோதரிக்கு 3 பங்குகள் என்றும் பிரித்து கொண்டார்.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

தனது 14ம் வயதில் செய்தித்தாள்களை விநியோகம் செய்ததன் மூலம் 200 அமெரிக்க டாலர்களை வருமானமாக பெற்றார் வாரன் பப்பெட். வருமான வரி செலுத்துவோர் பட்டியலில், உலகின் மூன்றாவது மிகப்பெரிய பணக்காரராக இடம் பெற்றார், அப்போது அவருக்கு வயது 14 மட்டுமே. உயர்நிலை கல்வியை முடித்த வாரன் தனது சிறு வயது சேமிப்பின் மூலமான பணத்தை கொண்டு ஒமாஹா (Omaha) நகரத்தில் 40 ஏக்கர் விவசாய நிலத்தை வாங்கினார். நிலத்தின் மதிப்பு அப்போது அதிக பண மதிப்பை கொண்டிருக்காவிட்டாலும், 15 வயது சிறுவன் வாங்குவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

 

தொழிலின் மீது கொண்ட ஈர்ப்பால், தன்னுடைய கல்லூரி படிப்பை தான் விரும்பிய ஹார்வர்டு வணிக பள்ளியில் (Harvard) பயில முயன்றார். ஆனால் அங்கே அவருக்கான கதவு திறக்கப்படவில்லை, அவரது வரவேற்பை நிராகரித்தது ஹார்வர்டு. பின்னர் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பயின்ற வாரன் பப்பெட், அங்கு தான் தனது குருவான பெஞ்சமின் கிரகாம் (Benjamin Graham) அவர்களை கண்டார். பின்னாளில் பெஞ்சமின் கிரகாம், ‘ முதலீட்டின் தந்தை (Father of Value Investing)‘ என்று வரலாற்றில் இடம் பிடித்தார்.

 

ஒரு சிறப்பான குருவிடம் கற்ற கல்வி வாரன் பப்பெட் அவர்களை மேலும் செதுக்கியது. தனது 31ம் வயதில் தான் விற்பனையாளராக பணிபுரிந்த நிறுவனத்தில் சிறுகச்சிறுக முதலீட்டை மேற்கொண்டார். பின்னர் அதனையே தனது சொந்த நிறுவனமாக்கி கொண்டார். அது தான் பெர்க்சயர் ஹாத்தவே (Berkshire Hathaway) என்ற நிறுவனம். முதலீட்டின் மூலம் வலம் வந்த வாரன் பல தொழில்களை துவங்கினார். 43ம் வயதில் வாரனின் சொத்து மதிப்பு 100 மில்லியன் அமெரிக்க டாலர்களை தாண்டியது. தனது 52ம் வயதில் போர்ப்ஸ்(Forbes) பத்திரிகையில் உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலில் இடம் பெற்ற பப்பெட் அதே காலத்தில் தனது சொத்து மதிப்பை மூன்று மடங்கு உயர்த்தினார். அப்போது அவரது சொத்து மதிப்பு 1000 மில்லியன் அமெரிக்க டாலர்களை நெருங்கி இருந்தது.

 

பெர்க்சயர் நிறுவனத்தில் வாரன் தனக்கான சம்பளமாக பெற்ற தொகையை சுமார் 15 வருட காலம் உயர்த்தி கொள்ளவில்லை. எந்த ஊதிய உயர்வோ, போனஸ் தொகையோ பெற்று கொள்ளாத வாரன் பப்பெட்டின் மாத சம்பளம், அங்கு பணிபுரியும் கடைநிலை ஊழியரின் சம்பளத்தை விட குறைவானதாகும். பெரும்பாலும் தனது சேமிப்பு மற்றும் முதலீட்டினை கொண்டே வாரன் தனது குடும்பத்திற்கான தேவைகளை பூர்த்தி செய்து கொள்வார். Duracell, Brooks, Clayton Homes ஆகிய பிராண்டுகள் வாரனின் நிறுவனங்களே.

 

உலகின் மூன்றாவது மிகப்பெரிய பணக்காரராக மற்றும் முதலீட்டாளராக இருக்கும் வாரனின் சொத்து மதிப்பு கடந்த வருட முடிவில் 80 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ($80 USD Billion), இந்திய மதிப்பில் 5.63 லட்சம் கோடி ரூபாயாகும். பணத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் தராத வாரன் ஒரு புத்தக வாசிப்பாளர் ஆவார். தினமும் 5 மணிநேரம் புத்தகங்களை வாசிப்பதற்காக நேரம் ஒதுக்கும் இவர், தனது சொத்தில் 90 சதவீதத்திற்கும் மேலான பணத்தை நன்கொடையாக கொடுத்துள்ளார். பண விஷயத்தில் மிகவும் கறாராக இருக்கும் வாரனிடம் ஆப்பிள் ஸ்மார்ட் போன் (Apple Smartphone) இல்லை என்பது சிறப்பம்சம். அவர் ஆப்பிள் நிறுவனத்தில் முதலீடு செய்ய மட்டுமே உள்ளதாக ஒரு முறை கூறியுள்ளார்.

 

நாம் விரும்பும் துறையில் சாதிக்க இளமையிலே கற்க முயலும் போது, நமக்கான வெற்றி எளிமையாக அமையும். அதே போன்று, நமது குடும்பத்திற்கான நிதி தேவைகளை நாம் இளமை காலத்திலே முடிவெடுக்க ஆரம்பித்தால், பின்னாளில் பண தேவைக்கான சிக்கல் இருக்காது. கடனும் வாங்காமல் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழலாம்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

பங்குச்சந்தை பரிவர்த்தனையில் வசூலிக்கப்படும் கட்டணங்கள் என்னென்ன ?

பங்குச்சந்தை பரிவர்த்தனையில் வசூலிக்கப்படும் கட்டணங்கள் என்னென்ன ?

What are the charges for Shares on Stock Exchange ?

 

பங்குச்சந்தை ஏற்ற – இறக்கமிருக்கும் காலம் இது. உலகளாவிய செய்திகள், பொருளாதார நிலைகள், உள்நாட்டு நிகழ்வுகள் என பல்வேறு விஷயங்கள் பங்குச்சந்தையை நகர்விக்கும் செயலாக உள்ளன. இன்று நம்மில் பலருக்கு பங்குச்சந்தை பற்றிய விழிப்புணர்வு இல்லாவிட்டாலும், அவற்றிலும் புகுந்து லாபம் பார்த்துவிட வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டுள்ளது.

 

பங்குச்சந்தை என்பது ஒரு நல்ல தொழில் சார்ந்த தன்மையாகும், இருப்பினும் சற்று ரிஸ்க் அதிகமுள்ள சந்தையாகும். ஒரு நாட்டின் பொருளாதார நாடியை அளந்து பார்க்கும் திறன் பங்குச்சந்தையிடத்தில் உள்ளது. தின வர்த்தகர், குறுகிய கால வர்த்தகர் மற்றும் நீண்ட கால முதலீட்டாளர் என பல்வேறு முகங்கள் பங்குச்சந்தைக்கு உள்ளன. பங்குச்சந்தையில் நாம் வாங்கும் மற்றும் விற்கும் பங்குகளுக்கு எவ்வாறு கட்டணங்கள் விதிக்கப்படுகின்றன என பார்ப்போம்.

 

பங்குகளை பொறுத்தவரை நாம் வாங்குவது (Buy Shares) என்பது ஒரு பரிவர்த்தனை (Trade) ஆகும். அதே போன்று, விற்பதும் ஒரு பரிவர்த்தனையாக கொள்ளப்படுகிறது. இந்த பரிவர்த்தனைகளுக்கு ஏற்றாற் போல், தரகு கட்டணம் (Brokerage) மற்றும் இதர சேவை கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. தினசரி வர்த்தகத்திற்கு (Equity Intra day) என ஒருவித கட்டண முறையும், பங்குகளை  இன்று வாங்கி விட்டு, மறுநாளோ அல்லது எதிர்வரும் காலங்களில் விற்பதன் (Equity Delivery) மூலமான பரிவர்த்தனைகளுக்கு மற்றொரு விதமாக கட்டணங்கள் விதிக்கப்படுகின்றன. டெரிவேட்டிவ்ஸ் (Derivatives – Futures & Options) என்ற சொல்லக்கூடிய ஆபத்தான வர்த்தகத்திற்கு என கட்டணங்கள் வேறுபடுகின்றன. பொதுவாக பங்கு பரிவர்த்தனைகளுக்கு தரகரின் (Stock Broker) தரகு கட்டணம், சந்தை அமைப்பின் பங்கு பரிவர்த்தனை கட்டணம் (Securities Transaction Tax – STT), பரிமாற்ற கட்டணம் (Exchange Transaction Charges), செபி கட்டணம் (SEBI Turnover), ஜி.எஸ்.டி மற்றும் முத்திரை வரி (Stamp Duty) வசூலிக்கப்படுகிறது.

( Read this post after the advertisement… )

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 

Securities Charges Stock Exchange

தினசரி வர்த்தகரா (Day Trader) நீங்கள் ?

மேலே உள்ள அட்டவணையில் ஒவ்வொரு வகையான பங்கு வர்த்தகத்திற்கும் அதற்குரிய கட்டணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள முத்திரை வரி நமது மாநிலத்திற்கு உரியது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் முத்திரை வரி வேறுபடும். தரகு கட்டணம் ஒவ்வொரு தரகு நிறுவனத்தினை பொறுத்து மாறுபடும். தரகு கட்டணத்தில் தள்ளுபடியை நாம் நமது தரகரிடம் கேட்டு பெறலாம். இது போக நாம் பங்குகள் மூலம் பெற்ற லாபங்களுக்கு வருமான வரிச்சட்டத்தில் சில வரிகளும், நீண்ட கால மூலதன ஆதாயத்திற்கு வரி விலக்கும் உண்டு. பங்குகள் மூலமான நஷ்டத்தை ஈடுகட்ட அதற்கான சலுகையும் வருமான வரி வரம்பின் அடிப்படையில் விலக்கினை பெறலாம்.

பங்குச்சந்தையில் நாம் பெறும் ஈவுத்தொகைக்கு (Dividend), பங்கு நிறுவனங்களே வரியை செலுத்தி விடும். அதே வேளையில் ஒரு நிதியாண்டில் பெறும் ஈவுத்தொகை ரூ. 10 லட்சத்தை தாண்டும் பட்சத்தில் 10 சதவீத வரி (Dividend Distribution Tax) செலுத்த வேண்டும். பங்குகள் சார்ந்த வருமான வரிச்சட்டத்தினை அடுத்து வரும் கட்டுரையில் நாம் பார்ப்போம். எனவே நாம் பங்குச்சந்தையில் வருமானம் ஈட்டும் போது, இது போன்ற கட்டணங்களை எல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com