Tag Archives: kothari pioneer

குறைந்தபட்ச முதலீடு ரூ. 100 மற்றும் இலவச காப்பீடு – பரவலாகும் பரஸ்பர நிதித்திட்டங்கள்

குறைந்தபட்ச முதலீடு ரூ. 100 மற்றும் இலவச காப்பீடு – பரவலாகும் பரஸ்பர நிதித்திட்டங்கள்

Minimum Investment amount of 100 rupees and Free Term Insurance – Mutual Funds Schemes

இந்தியாவில் மியூச்சுவல் பண்ட் என்று சொல்லப்படும் பரஸ்பர நிதி துறை(Mutual Fund Industry) 1963ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பரஸ்பர நிதி திட்டங்களுக்கான சட்டம் நாடாளுமன்றத்தில் உருவாக்கப்பட்டு பாரத ரிசர்வ் வங்கியின் ஒழுங்குமுறை மற்றும் நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வந்தது.

1987-1993 ம் வருட காலங்களில் அரசு சார்ந்த நிறுவனங்கள் மட்டுமே மியூச்சுவல் பண்ட் திட்டங்களை வழங்கி வந்த நிலையில், பின்னர் தனியார் துறை நிறுவனங்களும் பரஸ்பர நிதி துறையில் நுழைந்தன. அரசு சார்பில் துவங்கப்பட்ட பரஸ்பர நிதிகளில் முதன்முறையாக பொதுத்துறை வங்கிகளும், எல்.ஐ.சி. நிறுவனமும்(LIC India) திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தின. 1992ம் ஆண்டு பரஸ்பர நிதிக்கான ஒழுங்குமுறை செபியிடம்(SEBI) வந்த பிறகு, முதல் தனியார் மியூச்சுவல் பண்ட் நிறுவனமாக கோத்தாரி பயோனியர்(Kothari Pioneer) நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் இந்நிறுவனம் பிராங்கிளின் டெம்பிள்டன்(Franklin Templeton) நிறுவனத்துடன் இணைக்கப்பட்டது கவனிக்கத்தக்கது.

ஆரம்ப காலத்தில் மியூச்சுவல் பண்ட் சார்ந்த விழிப்புணர்வு குறைவாக இருப்பினும், தற்போது பரஸ்பர நிதி திட்டங்கள் வங்கி மற்றும் அஞ்சலக சேமிப்புக்கு மாற்றாக செயல்பட்டு வருகிறது. இன்றும் சிலருக்கு பரஸ்பர நிதி திட்டங்கள் என்றாலே பங்குச்சந்தை தான் என்ற ஐயம் உள்ளது. சமீப காலங்களில் மியூச்சுவல் பண்ட் சார்ந்த விழிப்புணர்வும், திட்டங்களில் உள்ள வடிவமைப்பும் எளிமையாக்கப்பட்டுள்ளன. அரசு சார்பிலும் இது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் பொது கருத்தரங்குகள் நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது.

பரஸ்பர நிதி சார்ந்த விழிப்புணர்வை நமது ஊரில் பரவலாக விகடன் குழுமம் (நாணயம் விகடன் – Nanayam Vikatan) சேர்த்து வருவது நல்ல விஷயம். சேமிப்பு மற்றும் முதலீடு சார்ந்த அடிப்படை கல்வி நமக்கு பள்ளி, கல்லூரி காலங்களில் கிடைப்பதில்லை என்றாலும், இன்று அதற்கான தளங்கள் அமைய பெற்றிருப்பது மக்களுக்கு நலன் பயக்கும்.

பரஸ்பர நிதி திட்டங்களில் லிக்விட் பண்டுகள்(Liquid Funds) என்று சொல்லப்படும் பாதுகாப்பான சேமிப்பு திட்டங்கள் முதல் பங்குச்சந்தை சார்ந்த திட்டங்கள்(Equity oriented Funds) வரை பல்வேறு வகையான திட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு முதலீட்டாளரின் நிதி இலக்குகள், கால அளவுகளை கொண்டு மற்றும் ரிஸ்க் தன்மையை பொறுத்து பரஸ்பர நிதி திட்டங்கள் வேறுபடும். நீண்டகாலத்தில் பரஸ்பர நிதித்திட்டங்கள் பணவீக்கத்தை காட்டிலும் நல்ல வருமானத்தை கொடுத்து வருகிறது. அதே வேளையில் வங்கி மற்றும் அஞ்சலக சேமிப்பை காட்டிலும் பெறக்கூடிய நீண்டகால வருமானம் பல மடங்கு லாபத்தை தரக்கூடியவையாக உள்ளது.

இன்றைய நிலையில், வரி சலுகையை பெற மிகவும் குறைந்த லாக் இன் காலம்(Lock in Period) கொண்ட மற்றும் அதிக வருமானத்தை தரும் திட்டமாக மியூச்சுவல் பண்ட் டாக்ஸ் சேவர் திட்டங்கள்(Tax Saving Mutual Funds) உள்ளன. முன்னர் பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு செய்ய ஒரு குறிப்பிட்ட தொகையை (ரூ.500-5000) முதலீடு செய்ய வேண்டும் என்ற நிலையிலிருந்து, தற்போது குறைந்தபட்ச முதலீடாக 100 ரூபாய் என சொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் குறைந்த வருமானம் உள்ளவர்களும் அஞ்சலக சேமிப்பை போல, மியூச்சுவல் பண்டு திட்டங்களில் முதலீடு செய்யலாம்.

பரஸ்பர நிதி திட்டங்களில் செய்யப்பட்ட முதலீட்டு தொகையை, நாம் விரும்பும் எந்த நேரத்திலும் பெற்று கொள்ளலாம் என்பது மற்றுமொரு சிறப்பம்சம். சில மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் நாம் மாதாமாதம் முதலீடு செய்யும் எஸ்.ஐ.பி.(Systematic Investment Plan -SIP) தொகைக்கு இலவச டேர்ம் பாலிசியையும் வழங்குவது ஆதாயமான விஷயம். நாம் செய்யும் முதலீடு தொகைக்கு ஏற்றாற் போல் மற்றும் கால அளவுகளை பொறுத்து, நமக்கான டேர்ம் காப்பீடு தொகையும்(Term Policy Insurance) அதிகரிக்கும். இதற்காக அந்த நிறுவனங்கள் நம்மிடம் இருந்து எந்தவித கட்டணத்தையும் வசூலிப்பதில்லை.

இருப்பினும், இலவசமாக காப்பீடு கிடைக்கிறது என்பதற்காக மட்டுமே முதலீடு செய்ய வேண்டாம். குறிப்பிட்ட காலத்துக்கு முன்பு, நீங்கள் உங்கள் முதலீட்டை வெளியே எடுக்கும் நிலையில் உங்களது காப்பீடு ரத்து செய்யப்படலாம். சில பரஸ்பர நிதி நிறுவனங்கள் குறைந்தபட்சம் 25 வருடங்கள் முதலீடு செய்தால் மட்டுமே, உங்களுக்கு காப்பீட்டை வழங்கும். எனவே காப்பீடு இலவசமாக கிடைக்கப்பெற்றாலும், தனியாக டேர்ம் இன்சூரன்ஸ் எடுத்து வைத்து கொள்வது நல்லது.

வரும் காலங்களில் வங்கி வைப்பு தொகை மற்றும் அஞ்சலக திட்டங்களுக்கு மாற்றாக மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் முதலீடு முழுமையாக இருக்கலாம் என்பது தான் உண்மை. அதனால் தான் என்னவோ, சில வங்கிகள் தாமாக முன்வந்து வாடிக்கையாளர்களுக்கு பரஸ்பர நிதி திட்டங்களை பரிந்துரைக்கின்றன.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை

www.varthagamadurai.com

Advertisement