ரூ. 1444 /- மாத முதலீட்டில் நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்
Become a Millionaire / Crorepati with a monthly investment of 1444 rupees in SIP
சிலருக்கு செல்வம் சேர்ப்பது ஒரு கலையாக இருந்தாலும், பலருக்கு அது ஒரு எட்டாக்கனியாக தான் இருந்து வருகிறது. செல்வம் சேர்ப்பதின் முதல் ரகசியமே சரியான பட்ஜெட் திட்டமிடல்(Budget Planning) தான். நாம் தினசரி மேற்கொள்ளும் வரவு-செலவுகளை எழுதி வைத்து பழக்கப்படுத்தினாலே நமக்கான செல்வ மகள் தானாக வருவாள். கூட்டு குடும்பத்தின் பலம் நம் அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் கூட்டு வட்டியின் பலனை நீங்கள் அனுபவித்தது உண்டா ?
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
உலகின் எட்டாவது அதிசயம், ‘கூட்டு வட்டி (Power of Compounding)’ என்றார் மாபெரும் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். ஏழு அதிசயங்களை நாம் வரலாற்றில் அவ்வப்போது மாற்றி கொண்டாலும், இன்றும் மாறாதது கூட்டு வட்டியின் ரகசியமே. கூட்டு வட்டியின்(Compound Interest) பலனை அறிய நாம் புத்தகங்கள் எதனையும் வாங்கி படிக்க வேண்டாம். சிறு துளி பெருவெள்ளம் போல, நமது பாரம்பரிய அஞ்சலக சேமிப்பு, மாத சீட்டு கட்டும் முறை, பி.எப்.(Provident Fund) தொகையினை சொல்லலாம்.
நாம் சேமிக்கும் மாதாந்திர சீட்டு அல்லது பி.எப். தொகையை நாம் உற்று நோக்கினால் அதற்கான பலன் நமக்கு தெரிய வரும். நாம் சிறுக சிறுக சேமித்து வைத்த பணம் பின்னொரு காலத்தில் மிக பிரமாண்டமான தொகையை நமக்கு கொடுத்திருக்கும். இது கூட்டு வட்டியின் பலனே இன்றி வேறு எதுவுமில்லை. இந்த கூட்டு வட்டியின் பலத்தை நாம் முழுவதுமாக அறிய அல்லது வாழ்நாள் முழுவதும் இதன் பலனை அனுபவிக்க பல முதலீட்டு சாதனங்கள் உள்ளன. இவற்றில் மிகவும் எளிமையான மற்றும் நம்பகமான சாதனம் எனில், அது பங்குச்சந்தையும், பரஸ்பர நிதிகளும்(Mutual Funds) தான்.
தங்கம் மற்றும் நிலத்தில் நமது முதலீடுகள் இருப்பினும் நாம் அவற்றில் ஒவ்வொரு மாதமும் அல்லது நம்மிடம் உள்ள சிறு தொகைக்கு வாங்கி வைக்க முடியாது. ஆனால், பரஸ்பர நிதி திட்டங்கள் மற்றும் பங்குச்சந்தையில் எவ்வளவு தொகையை வேண்டுமானாலும் நாம் முதலீடு செய்யலாம். பொதுவாக செல்வம் சேர்ப்பதற்கு தொடர்ச்சியான முதலீடு(Regular Investing) அவசியமாகும். நாம் முதலீடு செய்யும் பணம் சிறு தொகையாக இருப்பினும், தொடர் முதலீடு நமக்கான செல்வத்தை சேர்த்து தரும்.
பங்குச்சந்தையில் தொடர் முதலீடு நீண்ட காலத்தில் பெரும் செல்வதை கொடுக்கும். அதே வேளையில் பங்குச்சந்தை போன்ற முதலீட்டில் அடிப்படை நிதி கல்வி அவசியமாகும்(Stock Market Analysis). ஏனென்றால் பங்குச்சந்தை முதலீடுகள் குறுகிய காலத்தில் ரிஸ்க் தன்மை அதிகம் கொண்டவை. இதற்கு மாற்றாக நாம் பரஸ்பர நிதி முதலீடுகளை தேர்ந்தெடுக்கலாம். பங்குச்சந்தையை பற்றிய நிதி கல்வியை பெற முடியாதவர்கள், நேரம் இல்லாதவர்கள் பரஸ்பர நிதி திட்டங்களில் பங்குச்சந்தை போன்ற நீண்ட கால கூட்டு வட்டியின் பலனை பெறலாம்.
உதாரணத்திற்கு, உங்களுக்கு ஒரு கோடி ரூபாய் தொகையை பெற வேண்டுமென்றால் உங்களுக்கான கால அளவும்(Investment Period), முதலீடு செய்வதற்கான பணமும்(Minimum Investment) முக்கியம். உங்களுக்கு ஐந்து வருடங்களில் ரூ. 1 கோடி வேண்டுமென்றால், நீங்கள் ஒவ்வொரு மாதமும் ரூ. 1,22,444 பணத்தை அடுத்த ஐந்து வருடங்களுக்கு முதலீடு செய்தாக வேண்டும். இதன் மூலம் 12 சதவீத வட்டி வருமானத்தை கொடுக்கும் பட்சத்தில், உங்களுக்கு ஐந்து வருடத்திற்கு பிறகு ரூ. 1.06 கோடி தொகை கிடைக்கும். இதுவே 15 சதவீத வட்டி எனும் போது, நீங்கள் மாதாமாதம் ரூ. 1,12,899 ஐ அடுத்த ஐந்து வருடங்களுக்கு முதலீடு செய்தால் மட்டுமே, உங்களுக்கான ஒரு கோடி ரூபாய் இலக்கை அடைய முடியும்.
மாதாமாதம் ரூ. 1 லட்சம் ரூபாய் முதலீடா என மலைப்பாக இருக்கிறதா ?
இன்றும், இது போன்ற முதலீட்டு தொகையை சிலர் சாத்தியமாக்கி பயனடைந்து வருகின்றனர். சரி வாருங்கள், சிறிய தொகையை கொண்டு பெரிய விஷயங்களை செய்து பார்க்கலாம். உங்களுக்கு தேவையான ஒரு கோடி ரூபாய் இலக்கை நீங்கள் விரைவாக அடைய வேண்டுமெனில், உங்களுக்கான மாத முதலீடு அதிகமாக தான் இருக்கும். அதற்கு பதிலாக, மாதம் ஒரு குறிப்பிட்ட சிறு தொகையை முதலீடு செய்து விட்டு, இலக்கிற்கான காலத்தை நீட்டிக்கலாம்(Time). இதன் வாயிலாக நமக்கான நிதி இலக்கை எளிமையாக பெறலாம்.
மாதாமாதம் ரூ.36,335 ஐ அடுத்த பத்து வருடங்களுக்கு சேமிக்கும் பட்சத்தில் நாம் ஒரு கோடி ரூபாய் இலக்கை அடையலாம். இல்லையெனில், 20 வருடங்களுக்கு மாதம் ரூ.6,679/- ஐ முதலீடு(Systematic Investment Plan -SIP) செய்தாலும் அதன் பலனை பெறலாம். இதனை விட ஒரு எளிமையான முறை உள்ளது, இது ஒரு வெற்றி பெற்றவர்களின் முதலீட்டு முறை என்றும் கூறலாம். அதாவது மாதாமாதம் ரூ.1,444 ஐ நீங்கள் அடுத்த 30 வருடங்களுக்கு முதலீடு செய்தால் கோடீஸ்வரர் ஆகலாம் என்பது தான். நாள் ஒன்றுக்கு 50 ரூபாய்க்கும் குறைவாக (48 ரூபாய்) நீங்கள் முதலீடு செய்ய பழகும் போது, 30 வருடங்களில் உங்கள் கனவு இலக்கு சாத்தியமாகும்.
ஒரு முறை முதலீடாக(One Time Investment) 1,50,000 ரூபாயை முதலீடு செய்து விட்டு, அடுத்த 30 வருடங்களுக்கு காத்திருக்கும் பட்சத்தில், 15 சதவீத வட்டி வருமானத்தில் உங்களுக்கான ஒரு கோடி ரூபாயை பெறலாம். முப்பது வருடங்களுக்கு பிறகு கிடைக்கும் ஒரு கோடி ரூபாயின் இன்றைய மதிப்பு (Present Value of Future Cash) எவ்வளவு என்று உங்களுக்கு தெரியுமா ?
30 வருடங்களுக்கு பின்பு கிடைக்கக்கூடிய ஒரு கோடி ரூபாய், இன்றைய சராசரி பணவீக்கமாக 5 சதவீதம் என எடுத்து கொண்டால், இன்று அதன் மதிப்பு ரூ. 23,13,774. பரஸ்பர நிதி திட்டங்களில் இன்றும் இது போன்ற முதலீட்டு வருமானம் சாத்தியமாக தான் இருக்கிறது. ஏன் மற்ற முதலீடுகளில் கிடைப்பதில்லையா என கேட்கலாம். நிலம், தங்கம் போன்ற முதலீடுகளில் நாம் ஏற்ற-இறக்கத்தில் முதலீடு செய்யும் வாய்ப்பு எப்போதும் கிடைப்பதில்லை. ஆனால் பங்குச்சந்தை மற்றும் பரஸ்பர நிதி திட்டங்களில் அந்த வாய்ப்பு ஒவ்வொரு காலத்திலும் அமைந்து கொண்டு தான் இருக்கிறது. தங்கத்தில் வருமானம் கடந்த 20 வருடங்களாக வங்கி வட்டி விகிதத்தை ஒட்டியே அமைந்துள்ளது எனலாம். தங்கத்தின் விலை அதிகரிப்பது டாலர் மதிப்பு உயர்வதால் தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பணவீக்கம் குறைந்து வருவதால் வங்கி வைப்பு நிதிகள் மற்றும் சிறு சேமிப்பு திட்டங்களில் கிடைக்கப்பெறும் வட்டி விகிதம் போதுமானதாக இருப்பதில்லை.
பரஸ்பர நிதி திட்டங்களில் மாதம் ரூ. 290 ஐ முதலீடு செய்து 30 வருடங்களில் 20 லட்ச ரூபாயை பெறலாம். இது போன்று, மாதாமாதம் 722 /- ரூபாயை முதலீடு செய்து அடுத்த 30 வருடத்தின் முடிவில் 15 சதவீத வட்டி வருமானத்தில் ரூ. 50 லட்சம் கிடைக்கும். பங்குச்சந்தை மற்றும் பரஸ்பர நிதி திட்டங்களில் நீண்ட காலத்தில் 15 சதவீத வட்டி என்பது சராசரியாக பெறக்கூடிய வருமானமாகும்.
அப்புறம் என்ன, உங்கள் இலக்குகளுக்காக, உங்கள் குழந்தைகளின் தேவைக்காக இப்போதே ஒரு சிறு தொகையை முதலீடு செய்ய ஆரம்பியுங்கள் – கூட்டு வட்டியின் பலனை பெறுங்கள் !
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை