All posts by skatzsaravana

Value Investor, Entrepreneur and Founder of Varthaga Madurai, Rich Investing iDEAS

டி.சி.எஸ். நிறுவன பங்குகளை திரும்பப்பெறும் விலை ரூ.3000, டிவிடெண்ட் 12 ரூபாய்

டி.சி.எஸ். நிறுவன பங்குகளை திரும்பப்பெறும் விலை ரூ.3000, டிவிடெண்ட் 12 ரூபாய் 

Buyback Price of Rs.3000 and Rs.12 Dividend per Share – TCS Q2FY21 Results

இந்திய தொழில்நுட்ப துறையில் முதன்மையாக விளங்கும் நிறுவனம், டாட்டா குழுமத்தை சேர்ந்த டி.சி.எஸ்.(TCS) நிறுவனம். இதன் சந்தை மதிப்பு ரூ.10 லட்சம் கோடி. பில்லியன் டாலர் வருமானத்தை கொண்டிருக்கும் இந்நிறுவனம் சுமார் நான்கு லட்சத்திற்கு மேற்பட்ட பணியாளர்களை கொண்டு 46 நாடுகளில் தனது சேவையை அளித்து வருகிறது.

சந்தை மதிப்பிலும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு அடுத்தபடியாக இருக்கும் மிகப்பெரிய இந்திய நிறுவனமாக டி.சி.எஸ். உள்ளது. டி.சி.எஸ். நிறுவனத்தில் அதன் தாய் நிறுவனமான டாட்டா சன்ஸ் 72 சதவீத பங்குகளை வைத்திருக்கிறது. பொதுத்துறை காப்பீடு நிறுவனமான எல்.ஐ.சி.(LIC India) நான்கு சதவீத பங்குகளை கொண்டுள்ளது.

2020-21ம் நிதியாண்டுக்கான இரண்டாம் காலாண்டு முடிவுகளை டாட்டா கன்சல்டன்சி நிறுவனம் நேற்று வெளியிட்டிருந்தது. செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் 40,135 கோடி ரூபாயாகவும், செலவினம் 28,622 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. வரிக்கு முந்தைய லாபம் ரூ. 10,037 கோடியாகவும், இரண்டாம் காலாண்டில் நிகர லாபமாக ரூ.7,475 கோடி ரூபாயை ஈட்டியுள்ளது.

முதலாம் காலாண்டுடன் ஒப்பிடுகையில் இரண்டாம் காலாண்டின் வருவாய் 5 சதவீதமும், நிகர லாபம் 6 சதவீதமாகவும் வளர்ச்சியடைந்துள்ளது. அதே வேளையில் முந்தைய செப்டம்பர் (2019-20) காலாண்டுடன் ஒப்பிடும் போது, வருவாய் 3 சதவீதம் வளர்ச்சி பெற்றிருந்தாலும், நிகர லாப அடிப்படையில் 7 சதவீத வளர்ச்சி குறைந்துள்ளது.

நேற்றைய காலாண்டு முடிவு அறிவிப்பில் முதலீட்டாளர்களிடம் இருந்து பங்குகளை திரும்பப்பெறும் முறையில்(Buyback of Shares) 16,000 கோடி ரூபாயை டி.சி.எஸ். நிறுவனம் செலவிட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. 5.33 கோடி பங்குகளை, பங்கு ஒன்றுக்கு ரூ.3000 என்ற விலையில் நிறுவனம் திரும்பப்பெற உள்ளது. இதன் மதிப்பு ரூ.16,000 கோடி எனவும், மொத்த பங்குகளில் இதன் பங்களிப்பு 1.42 சதவீதம் எனவும் சொல்லப்பட்டுள்ளது.

டி.சி.எஸ். நிறுவன பங்களிப்பில், 72 சதவீத பங்குகள் நிறுவனர்களிடம் உள்ளது. 16 சதவீத பங்குகள் வெளிநாட்டு முதலீட்டாளர்களிடமும், 8 சதவீத பங்குகள் உள்நாட்டு வங்கி மற்றும் நிதி நிறுவனங்களிடமும் உள்ளது. சிறு முதலீட்டாளர்களிடம்(Resident individual and others) வெறும் 3.3 சதவீத பங்குகள் தான் கையிருப்பாக உள்ளது. அதாவது 8.98 லட்சம் சிறு முதலீட்டாளர்களிடம் 12.5 கோடி பங்குகள் உள்ளது.

மேலும் இரண்டாம் காலாண்டுக்கான டிவிடெண்ட் தொகையையும் நிறுவனம் அறிவித்துள்ளது. பங்கு ஒன்றுக்கு ரூ.12 என ஈவுத்தொகையை சொல்லியுள்ளது. அதற்கான பதிவு நாள்: அக்டோபர் 15,2020.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் – அக்டோபர் 2020

சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் – அக்டோபர் 2020

Small Savings Scheme interest rate for the Period – October to December 2020

சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை காலாண்டுக்கு ஒரு முறை மத்திய அரசு அறிவித்து வருகிறது. பரஸ்பர நிதி திட்டங்கள், பங்குகள் மற்றும் பத்திரங்கள் ஆகியவற்றின் முதலீடு அதிகரித்து வரும் நிலையில், இன்றளவும் நம் நாட்டில் சிறு சேமிப்புக்கான மதிப்பு குறையவில்லை எனலாம். ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தில் இருப்பவர்களுக்கு அஞ்சலக மற்றும் வங்கி சிறு சேமிப்பு திட்டங்கள் ஒரு வரப்பிரசாதமாக உள்ளன.

சேமிப்பு கணக்குக்கான வட்டி விகிதங்கள் வங்கியில் குறைந்து வரும் நிலையில், சிறு சேமிப்பு திட்டத்தின் கீழ் அடிப்படை சேமிப்பு கணக்குக்கு 4 சதவீதம் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. பொதுவாக சிறு சேமிப்பு திட்டத்தில் மூத்த குடிமக்கள் மற்றும் செல்வ மகள் திட்டத்திற்கு(Sukanya Samriddhi), மற்ற திட்டங்களை காட்டிலும் வட்டி விகிதம் சற்று அதிகமாக காணப்படும்.

நடப்பு 2020-21ம் நிதியாண்டின் தொடக்கத்தில் சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் பெருமளவு குறைக்கப்பட்டிருந்தது. ஜனவரி-மார்ச் 2020 காலாண்டில் வழங்கப்பட்டிருந்த வட்டி விகிதத்தை விட குறைவான வட்டி விகிதமே ஏப்ரல்-ஜூன் காலாண்டில் காணப்பட்டது. இது கடந்த ஜூலை-செப்டம்பர் காலாண்டிலும் மாற்றமின்றி தொடர்ந்தது.

அக்டோபர்-டிசம்பர் காலாண்டுக்கான சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகித அறிக்கையை கடந்த செப்டம்பர் 30ம் தேதியன்று மத்திய அரசு அறிவித்திருந்தது. இவற்றில் எந்த மாற்றமும் இல்லாமல் ஜூலை-செப்டம்பர் காலாண்டுக்கான வட்டி விகிதம் தொடரும் எனவும் சொல்லப்பட்டுள்ளது.

சேமிப்பு கணக்குக்கு 4 சதவீதம் வட்டி எனவும், ஒரு வருட, இரண்டு வருட மற்றும் மூன்று வருட வைப்பு தொகைக்கான(Time Deposit) வட்டி விகிதம் 5.5 சதவீதத்தில் தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 5 வருட டெபாசிட் தொகைக்கு 6.7 சதவீதமும், ஐந்து வருட தொடர் வைப்பு (RD) தொகைக்கு 5.80 சதவீதமும் சொல்லப்பட்டுள்ளது.

small saving scheme interest rate oct 2020

மூத்த குடிமக்களுக்கான(Senior Citizen Savings Scheme) 5 வருட திட்டத்தில் எந்த மாற்றமுமின்றி 7.40 சதவீதமும், 5 வருட மாத வருவாய்(MIS) திட்டத்தில் 6.6 சதவீதமுமாக உள்ளது. வரி சலுகை அளிக்கும் தேசிய சேமிப்பு பத்திரத்திற்கான வட்டி விகிதம் 6.80 சதவீதம். இதன் முதிர்வு காலம் ஐந்து வருடமாகும்.

பொது வருங்கால வைப்பு (PPF) நிதி திட்டத்தில் வழங்கப்படும் வட்டி விகிதம் 7.10 சதவீதம் மற்றும் கிசான் விகாஸ் பத்திர(KVP) வட்டி 6.90 சதவீதம். பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் திட்டத்திற்கான வட்டி விகிதம் அதிகபட்சமாக 7.60 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது.

சொல்லப்பட்ட வட்டி விகிதம் அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31 வரையுள்ள காலத்திற்கு பொருந்தும். நாட்டின் சில்லரை விலை பணவீக்கம் சராசரியாக 6 சதவீதமாக இருக்கும் நிலையில், சிறு சேமிப்பு திட்டங்களின் கீழ் கிடைக்கப்பெறும் வட்டி விகிதம் நீண்ட கால இலக்குகளுக்கு பயன் தராது. சேமிப்பு பாதுகாப்பாக இருப்பது அவசியம். எனினும் பணவீக்கத்தை தாண்டிய வருவாய் ஈட்டவில்லை எனில், பிற்காலத்தில் பெறப்படும் முதிர்வு தொகையால் தேவைக்கு பெருமளவில் பயன்தராமல் போகும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

வருமான வரி சரிபார்ப்பு தளர்வு – செப்டம்பர் 30ம் தேதியுடன் முடிவு

வருமான வரி சரிபார்ப்பு தளர்வு – செப்டம்பர் 30ம் தேதியுடன் முடிவு 

One time relaxation for verification of ITR – Deadline by 30 September, 2020

கொரோனா பெருந்தொற்று காரணமாக, கடந்த 2019-20ம் நிதியாண்டுக்கான வருமானத்திற்கு வரி தாக்கல்(AY 2020-21) செய்ய வேண்டிய காலம் நீட்டிக்கப்பட்டிருந்தது. பொதுவாக இதற்கான காலக்கெடு ஜூலை 31ம் தேதி வரை இருக்கும் நிலையில், இம்முறை செப்டம்பர் 30 வரை வருமான வரி தாக்கல் செய்யலாம் என சொல்லப்பட்டுள்ளது.

தனிநபர் வருமான வரி வரம்பில் ரூ.5 லட்சத்திற்கு குறைவாக உள்ள வருமானத்திற்கு வரி பிடித்தம் செய்யப்படவில்லை என்றாலும், ஆண்டு வருவாய் (நிதியாண்டு) ரூ. 2.5 லட்சத்திற்கு அதிகமாக இருந்தால் வரி தாக்கல் செய்வது அவசியமாகும். தவறும் போது, அதற்கான அபராத கட்டணம் விதிக்கப்படும்.

மதிப்பீட்டு ஆண்டுகளுக்கான (Assessment Year) 2015-16, 2016-17, 2017-18, 2018-19 மற்றும் 2019-20 ஆகிய வருடங்களுக்கான வருமான வரி தாக்கலை ஒருவர் செய்திருந்தாலும், அதனை சரி பார்த்தல்(Verification of ITR) மூலம் நிறைவு செய்வதற்கு, வரும் செப்டம்பர் 30ம் தேதி வரை சலுகை காலம் அளிக்கப்பட்டுள்ளது. வருமான வரி தாக்கல் செய்யும் ஒருவர், அதனை Verification of ITR – EVC என சொல்லப்படும் சரிபார்ப்பு முறையை நிறைவு செய்வது அவசியம். இதனை செய்தால் மட்டுமே, அது முழுமை பெற்றதாக வருமான வரி அலுவலகத்தால் கருதப்படும்.

அதாவது 2014-15ம் நிதியாண்டு(AY 2015-16) முதல் ஒருவர் வருமான வரி தாக்கல் செய்திருந்தும், சரிபார்ப்பு செய்யாத நிலையில் தற்போது ஒரு முறை சலுகையாக செப்டம்பர் 30 வரை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு எந்த கட்டணமும் செலுத்த தேவையில்லை. வரி தாக்கல் சரிபார்ப்பு செய்திருந்தால் மட்டுமே, நீங்கள் கோரிக்கை விடுத்த தொகை(Refund amount) திரும்ப கிடைக்கப்பெறும்.

சரிபார்ப்பு முறையை நிறைவு செய்ய கீழ்க்கண்ட ஏதேனும் ஒரு முறையை பயன்படுத்தலாம்:

வருமான வரி தாக்கல் செய்யும் இணையதளத்தில் உங்கள் பயனர்(Login Credentials) விவரங்களை கொண்டு உள்நுழைந்த பிறகு,

  • ஆதார் எண்ணுடன் இணைத்திருக்கும் கைபேசி எண்ணை பயன்படுத்தி OTP முறையில் சரிபார்ப்பு முறையை நிறைவு செய்யலாம். 
  • உங்களது வங்கி கணக்கு மூலம் (Net banking)
  • EVC முறை மூலம்
  • வருமான வரி அலுவலகத்திற்கு தபால் மூலம்(By Post), நீங்கள் தாக்கல் செய்த ஐ.டி.ஆர். படிவத்தை அனுப்பலாம்.

நம் நாட்டில் இருவகையான வரி விதிக்கப்படுகிறது. தனிநபர் வருமானத்திற்கான வரி, நேரடி வரி பிரிவில்(Direct Tax) உள்ளது. நீங்கள் ஈட்டிய வருமானத்திற்கு நேரடியாக அரசுக்கு வரி செலுத்தும் நிலையில், அவையனைத்தும் நேரடி வரி பிரிவில் வரும். மற்றவை மறைமுக வரி பிரிவில் உள்ளவை. உதாரணமாக நீங்கள் நுகரும் பொருட்கள் மற்றும் சேவை மூலம் வருபவை மறைமுக வரிகளாகும். 

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

   

நான் எவ்வளவு தொகைக்கு டேர்ம் இன்சூரன்ஸ் எடுக்க வேண்டும் ?

நான் எவ்வளவு தொகைக்கு டேர்ம் இன்சூரன்ஸ் எடுக்க வேண்டும் ?

How much Term insurance should I take out ?

பொதுவாக நம்மில் பலர் காப்பீட்டையும், முதலீட்டையும் போட்டு குழப்பி கொள்கின்றனர். காப்பீடு(Insurance) என்பது எதிர்பாராது ஏற்படும் நிகழ்வு அல்லது விபத்துகளினால் ஏற்படும் பொருளாதார இழப்புகளை ஈடுகட்டுவதற்கு தான். காப்பீட்டுக்காக நீங்கள் கட்டிய பணம், எந்த எதிர்பாராத நிகழ்வும் நடைபெறாமல் இருந்தால் அல்லது முதிர்வு தொகை என ஒரு தொகையை நீங்கள் பெறும் நிலையில், அது சரியான காப்பீடாக கருதப்படாது.

உதாரணமாக நீங்கள் உங்களது வாகனம், வீடு மற்றும் தொழிலுக்கு செய்யும் காப்பீட்டு தொகைக்கு முதிர்வு தொகை என்று எதுவும் இல்லை. மேலே சொன்னவற்றில் நமக்கு பொருளாதார இழப்பு ஏற்பட்டால் மட்டுமே காப்பீட்டின் மூலம் இழப்பு தொகை கிடைக்கப்பெறும். அதனை போல தான் மனித உயிருக்கும். 

உங்களது வாகனம் தொலைந்து விட்டால் அல்லது விபத்தால் சேதம் அடைந்திருந்தால், நீங்கள் காப்பீடு செய்திருக்கும் நிலையில் அதற்கான இழப்பீட்டு தொகையை கோரலாம். நான் வருடாவருடம் வாகன காப்பீட்டிற்கு பணம் கட்டுகிறேன், முதிர்வில் எனக்கு பணம் தாருங்கள் என கேட்க முடியாது. நீங்கள் மற்றொருவரின் வாகனத்தை எதிர்பாராது சேதப்படுத்தி விட்டாலும், அவருக்கான இழப்பு தொகைக்கு உங்கள் காப்பீடு தான் உதவக்கூடும்.

முதலீடு(Investing) என்பது இருவகை தன்மைகளை கொண்டது. உங்கள் முதலீட்டின் மூலம் தொடர் வருவாய்(Cash Flow) கிடைக்கலாம். அதே வேளையில் பின்னொரு காலத்தில் அந்த முதலீட்டை நீங்கள் விற்கும் போதும் அதற்கான மூலதன ஆதாயம்(Capital Gains – Appreciation) கிடைக்கப்பெறும். உதாரணமாக வீட்டு மனை, வணிக வளாகங்கள், பங்குகள் மற்றும் தொழில்கள். தங்கம் ஒரு முதலீட்டு சாதனம் அல்ல.

டேர்ம் இன்சூரன்ஸ்(Term Insurance) என்பது பொதுவாக நீங்கள் உங்கள் வாகனம், வீடு அல்லது தொழிலுக்கு காப்பீடு எடுப்பது போல. இது ஒரு சிறந்த காப்பீடு திட்டம் எனலாம். டேர்ம் இன்சூரன்ஸ் எடுக்கும் ஒருவருக்கு ஏதேனும் உயிரிழப்பு ஏற்பட்டால், அதன் காரணமாக அவர் குடும்பத்திற்கு ஏற்படும் பொருளாதார இழப்புகளை சரிசெய்ய உதவும். இங்கே இழப்பு ஏற்பட்டால் மட்டுமே அதற்குரிய தொகை கிடைக்கும், முதிர்வு தொகை என்பது அல்ல.

டேர்ம் காப்பீட்டை பொறுத்தவரை இளம் வயதில் எடுத்து கொள்வது மிக நன்று. ஏனெனில் இளம் வயதில் தான் அதற்கான பிரீமிய தொகை மிக குறைவு. டேர்ம் காப்பீட்டுக்கான காலத்தை நீங்களே நிர்ணயித்து கொள்ளலாம். எனினும் உங்களது ஓய்வு காலம் வரும் வரை எடுத்து வைத்து கொள்வது நல்லது. நீங்கள் ஆரம்ப நிலையில் கட்டிய தொகை தான் கடைசி வரை தொடரும். எனவே இளமை காலத்தில் டேர்ம் இன்சூரன்ஸ் எடுத்து வைத்து கொள்வது சிறந்தது. பொதுவாக டேர்ம் இன்சூரன்ஸ் என்பது வருமானம் ஈட்டும் ஒருவர் அல்லது தனிநபர் ஒருவரை சார்ந்திருக்கும் குடும்பம், அவருக்கு தான் காப்பீடு தேவை. வருவாய் ஈட்டும் அந்த நபருக்கு எதிர்காலத்தில் ஏதேனும் உயிரிழப்பு ஏற்பட்டு, அதனால் நம்பியிருக்கும் குடும்பம் பொருளாதாரம் சார்ந்து பாதிக்கப்படலாம். இதனை தவிர்க்க அந்த நபருக்கு டேர்ம் இன்சூரன்ஸ் எடுத்து வைக்க வேண்டும்.

எவ்வளவு தொகைக்கு டேர்ம் இன்சூரன்ஸ் எடுக்க வேண்டும் ?

மிகக்குறைந்த பிரீமிய தொகையில் அதிக மதிப்பிலான காப்பீடு செய்ய முடியுமென்றால், அது டேர்ம் இன்சூரன்ஸ் மட்டுமே. டேர்ம் காப்பீட்டுக்கான தொகை தனிநபர் ஒருவரின் வருமானத்திற்கு ஏற்ப மாறுபடும். இருப்பினும் காப்பீடு நிறுவனங்கள் இதற்கான சிறப்பு கணக்கீடுகளை கூறியுள்ளது. இயல்பு வாழ்க்கையில் உள்ள அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் சில கணக்கீடுகள் டேர்ம் பாலிசிக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

கணக்கீடு 1:

  • உங்களுடைய மாத வருமானத்தை ஆண்டு கணக்கில் எடுத்து கொள்ளுங்கள் (A).
  • உங்களது தற்போதைய கடன்கள் மற்றும் உங்கள் குழந்தைகளின் எதிர்கால கல்வி செலவுகள், திருமணம் ஆகியவற்றை கணக்கில் எடுத்து கொள்ளுங்கள் (B).
  • உங்களுடைய தற்போதைய சேமிப்பு / முதலீட்டு கையிருப்பை குறித்து கொள்ளவும் (C).

 

Insurance Coverage = A + B – C   X   15

கணக்கீடு 2:

Human Life Value (HLV) = (Annual Income – Self Expenses) ÷ Bank Interest Rate %
  • ஒரு வருடத்திற்கான உங்களது சொந்த செலவுகளை (உங்களின் தனிப்பட்ட செலவுகள் மட்டுமே), நீங்கள் சம்பாதிக்கும் ஆண்டு வருமானத்தில் கழித்து கொள்ளுங்கள்.
  • கிடைக்கப்பெறும் தொகையை, வங்கி வட்டி விகிதத்தில் வகுத்து கொள்ளுங்கள்.
  • வங்கி வட்டி விகிதம்(Bank Interest Rate) எனும் போது, ஒரு வருடத்திற்கான வைப்பு தொகை விகிதத்தை எடுத்து கொள்ளலாம். உதாரணமாக ஒரு வருடத்திற்கு 7 சதவீதம்.

உதாரணம்: 

ராமு, தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். அவருடைய  ஆண்டு வருவாய் ரூ. 6 லட்சம். அவரை சார்ந்து மனைவி மற்றும் இரு குழந்தைகள் உள்ளனர். 30 வயதாகும் ராமு, தனது தனிப்பட்ட செலவுக்காக மாத வருமானத்தில் 5000 ரூபாய் (மொபைல் ரீசார்ஜ், போக்குவரத்து, டீ மற்றும் வடை, சினிமா, வெளியூர் பயணம்) எடுத்து கொள்வார். ராமுவுக்கு நீண்டகால கடன் (வீட்டுக்கடன், வாகன கடன்) மற்றும் முதலீட்டு செலவாக (குழந்தைகள் மேற்படிப்பு மற்றும் திருமணம்) தனது மாத வருமானத்தில் ரூ. 30,000 செலவாகிறது. சேமிப்பு மற்றும் முதலீடாக ரூ. 1 லட்சம் (வங்கி டெபாசிட் மற்றும் பங்குகள்) உள்ளன.

கணக்கீடு 1ன் படி, ராமு எடுக்க வேண்டிய டேர்ம் இன்சூரன்ஸ் தொகை:

Insurance Coverage = ரூ. 6 லட்சம் (A +B) – ரூ. 1 லட்சம் (C)  X 15 = ரூ. 75 லட்சம் 

இங்கே அவரது கடன் மற்றும் எதிர்கால நிதி இலக்குகளுக்கான முதலீட்டு செலவு, மாத வருவாயிலிருந்து சென்று கொண்டிருக்கிறது. எனவே வருமானத்தை தாண்டிய கடன் அல்லது செலவுகள் எதுவுமில்லை.

கணக்கீடு 2ன் படி அவர் எடுக்க வேண்டிய இன்சூரன்ஸ் தொகை:

HLV = (ரூ. 6 லட்சம் – ரூ. 60,000 ) / .07 = ரூ. 77 லட்சம் 

மேலே சொன்ன இரண்டு கணக்கீடுகளில் எந்த தொகை பெரிதாக உள்ளதோ, அதுவே நீங்கள் எடுக்க வேண்டிய டேர்ம் காப்பீடு தொகை. 

இந்த இரு கணக்கீடுகள் உங்களுக்கு புரியவில்லையா ?

சுருக்கமாக, உங்களது ஆண்டு வருமானத்தை போல 15-20 மடங்கில் காப்பீடு தொகையை எடுத்து கொள்வது நல்லது.

காப்பீட்டையும், முதலீட்டையும் ஒருசேர செய்கிறேன் என குழப்பி கொள்ள வேண்டாம். காப்பீடு இழப்புகளுக்கு, முதலீடு இலக்குகளுக்கு !

குழந்தைகளுக்கு காப்பீடு திட்டத்தை எடுக்கிறேன் என தவறான நிதி செயல்களை செய்ய வேண்டும். உங்கள் குழந்தைகளுக்கு தேவை காப்பீடு அல்ல, நிதி இலக்குகளுக்கான முதலீடு மட்டுமே. அவர்களின் காப்பீடு தொகையை சார்ந்து நீங்கள் இல்லை. உங்களது வருமானத்தை எதிர்பார்த்து தான் அவர்களது எதிர்கால செலவு உள்ளது. 

வரிச்சலுகை பெறுகிறேன் என்று தவறான திட்டத்தில் பணத்தை செலவழிக்காதீர்கள். வரும் முன் காப்பதே நலம், வந்த பின் யோசிக்க நேரமில்லை. அன்றைய நாளில் அவசரத்திற்கு பணம் மட்டுமே தேவையாக இருக்கும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

 

 

  

பொதுத்துறை வங்கிகளில் சுமார் 20,000 கோடி ரூபாய் மோசடி

பொதுத்துறை வங்கிகளில் சுமார் 20,000 கோடி ரூபாய் மோசடி 

About 20K Crore rupees Fraud in Public Sector Banks – RTI query

வங்கிகள் மற்றும் நிதி சார்ந்த நிறுவனங்களில் அவ்வப்போது மோசடிகள் நடைபெற்று வருவது கவனிக்கத்தக்கது. நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 19,964 கோடி ரூபாய் அளவில் மோசடி நடைபெற்றுள்ளதாக தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் சொல்லப்பட்டுள்ளது.

சொல்லப்பட்ட 19,964 கோடி ரூபாய் முழுவதும் பொதுத்துறை வங்கிகளில் காணப்பட்ட மோசடி எனவும், இது தனிநபர் வாயிலாக வங்கிகளில் கொடுக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளதாக மத்திய ரிசர்வ் வங்கி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் வங்கிகளில் ஏற்பட்ட அனைத்து மோசடி சார்ந்த தகவலை இது தெரிவிக்கவில்லை.

2020-21ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்திய பொதுத்துறை வங்கிகளில் பதிவு செய்யப்பட்ட மோசடி வழக்குகளின் எண்ணிக்கை 2,867 மற்றும் அதன் மூலம் 19,964 கோடி ரூபாய் அளவில்  மோசடி நடந்துள்ளது. எஸ்.பி.ஐ.(SBI) வங்கியில் அதிகபட்சமாக பதிவு செய்யப்பட்ட மோசடிகளின் எண்ணிக்கை 2,050. அதன் மதிப்பு சுமார் 2,300 கோடி ரூபாய்.

மோசடி மதிப்பளவில், பேங்க் ஆப் இந்தியாவில் 5,124 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது. ஆனால் இந்த மதிப்பு வெறும் 47 வழக்குகளில் வந்துள்ளது. மோசடியில் சிக்கி தவித்த பஞ்சாப் தேசிய வங்கியில்(PNB) இம்முறை 240 வழக்குகளும், 270 கோடி ரூபாய் அளவில் மோசடியும் நடந்துள்ளது. இது கடந்த காலத்தை விட குறைவான மதிப்பாக சொல்லப்படுகிறது.

முதல் காலாண்டில் நடைபெற்றிருந்த மோசடியில்(Fraud in Banks) 12 பொதுத்துறை வங்கிகளின் தகவல்கள், ஆர்.டி.ஐ.(RTI act) சட்டத்தின் கீழ் பெறப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த தகவல் வங்கிகளில் ஏற்பட்ட மொத்த மோசடிகள் பற்றியோ அல்லது கடன் பெற்றவர்களின் நிலை பற்றியோ சொல்லவில்லை.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

அதிகரித்து வரும் தங்கத்தின் கையிருப்பு, மீண்டும் பற்றாக்குறையில் வர்த்தகம்

அதிகரித்து வரும் தங்கத்தின் கையிருப்பு, மீண்டும் பற்றாக்குறையில் வர்த்தகம் 

Rising Gold Reserves, expanding Trade Deficit – Indian Economy

சமீப காலமாக தங்கத்தின் விலை அதிக ஏற்ற-இறக்கத்திற்கு உட்பட்டு இருந்தாலும், அரசு சார்பில் தங்கத்தின் கையிருப்பு அதிகரித்து வருகிறது. பொதுவாக நாட்டின் பொருளாதாரம் நல்ல நிலையில் இருக்கும் போது, பங்குச்சந்தை குறியீடுகள் ஏற்றம் பெறுவதும், அதுவே பொருளாதார மந்தநிலை காணும் போது, தங்கத்தின் மீதான கையிருப்பு அதிகரித்தும் காணப்படுகிறது.

பங்குச்சந்தைகள் தொடர்ச்சியாக ஏற்றம் பெறும் நிலையில், தங்கத்தில் முதலீடு குறையும். கடந்த 2018ம் ஆண்டின் துவக்கம் முதல் நாட்டின் பொருளாதாரம் மந்தநிலையில் உள்ளது. இதற்கு பொருத்தமாக உலகளவிலும் பொருளாதார குறியீடுகள் சாதகமான நிலையில் இல்லை.

சுமார் எட்டு ஆண்டுகளாக ஏற்றம் பெறாத தங்கத்தின் விலை, கடந்த ஒன்றரை வருடங்களில் பெருத்த ஏற்றத்தை அடைந்துள்ளது. தங்க இ.டிஎப்.(Gold ETF) திட்டத்தில் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் கிடைத்துள்ள வருவாய் 38 சதவீதமாக உள்ளது. அதே வேளையில் பங்குச்சந்தை சென்செக்ஸ் குறியீடு கடந்த ஒரு வருடத்தில் 6 சதவீதம் மட்டுமே வளர்ச்சியடைந்துள்ளது.

நடப்பாண்டில் இந்திய பங்குச்சந்தை இதுவரை 6 சதவீத இழப்பை சந்தித்துள்ளது. இருப்பினும், மார்ச் மாதத்திற்கு பிறகான ஆறு மாதத்தில் 50 சதவீதம் ஏற்றம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அதே நேரம் பொருளாதாரம் இன்னும் சரிசெய்யப்படவில்லை என்பது கவனிக்க வேண்டிய விஷயமாக உள்ளது.

நாட்டின் வர்த்தக பற்றாக்குறை(Trade Deficit) மீண்டும் அதிகரித்து வருகிறது. கொரோனா காலத்தில் ஏற்றுமதி இல்லையென்றாலும், நாட்டின் இறக்குமதியும் குறைந்திருந்தது. இதன் காரணமாக முதன்முறையாக 790 மில்லியன் டாலர்கள் உபரியாக இருந்தது. ஆகஸ்ட் மாதத்தின் முடிவில் நாட்டின் வர்த்தக பற்றாக்குறை 6.77 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.

ஏற்றுமதி அளவு 13 சதவீதம் குறைந்து 22.7 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. ஏற்றுமதியில் கற்கள் மற்றும் நகைகள், பெட்ரோலிய பொருட்கள் மற்றும் முந்திரி ஆகியவற்றின் அளவு ஆகஸ்ட் மாதத்தில் கணிசமாக குறைந்துள்ளது. இறக்குமதி அளவு 26 சதவீதம் குறைந்து 29.47 பில்லியன் டாலர்களாக இருந்தது. இறக்குமதியில் பெட்ரோலியம் மற்றும் கச்சா எண்ணெய் பொருட்கள், எந்திரங்கள் ஆகியவற்றின் தேவை குறைந்துள்ளது.

வர்த்தக பற்றாக்குறை அதிகரித்து வரும் அதே நேரத்தில், தங்கத்தின் கையிருப்பு(Gold Reserves) பல மாதங்களாக அதிகரித்து வருகிறது. 2019ம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் தங்கத்தின் இறக்குமதி 1.4 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த நிலையில், நடப்பாண்டின் ஆகஸ்ட் மாதத்தில் 3.7 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது. பொதுவாக பொருளாதார மந்தநிலை காலங்களில் மத்திய வங்கி தங்கத்தின் கையிருப்பு அளவை அதிகரிப்பதுண்டு. 2020ம் ஆண்டின் முதல் காலாண்டில் தங்கத்தின் கையிருப்பு 642 டன்கள், இது இரண்டாம் காலாண்டில் 658 டன்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 25 வருட கால அளவில், 2008-2010 மற்றும் 2018ம் ஆண்டுக்கு பிறகான காலத்தில் தங்கத்தின் கையிருப்பு அதிகரித்து காணப்படுகிறது. இது பொருளாதார மந்தநிலை நீடித்து வருவதை மத்திய வங்கியின் அணுகுமுறை மூலம் தெரியப்படுத்துகிறது.

ஆகஸ்ட் மாதத்தில் நாட்டின் சில்லரை விலை பணவீக்கம்(Retail Inflation) 6.69 சதவீதமாகவும், நடப்பு நிதியாண்டில் இது 10 சதவீதம் வரை செல்லலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

இனி ஏ.டி.எம். மூலம் பணம் எடுக்க OTP அவசியம், நாளை முதல் அமல் – பாரத ஸ்டேட் வங்கி

இனி ஏ.டி.எம். மூலம் பணம் எடுக்க OTP அவசியம், நாளை முதல் அமல் – பாரத ஸ்டேட் வங்கி 

OTP based cash withdrawal to all SBI ATMs from 18th September, 2020

நாடு முழுவதும் நாளை முதல் OTP முறையிலான பண பரிவர்த்தனை(Withdrawal) அமலுக்கு வருவதாக பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது. வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் பணத்தை ஏ.டி.எம். வாயிலாக எடுக்கும் போது, பாதுகாப்பு சார்ந்த சில சிக்கல்களை சந்திக்க வேண்டியுள்ளது. வாடிக்கையாளர்களின் ஏ.டி.எம். கடவுச்சொல்(ATM PIN) கசிந்து விட்டால், அவரின் கணக்கில் உள்ள பணத்தை திருடுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

இதனை தடுக்கும் வகையில் வாடிக்கையாளர்களின் கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பும் கூடுதல் பாதுகாப்பு அம்சத்தை பாரத ஸ்டேட் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. OTP முறையிலான இந்த நடைமுறை ஏற்கனவே பெரும்பாலான வங்கிகளில் இருந்து வந்தாலும், தற்போது 24 மணிநேர சேவையாக இதனை எஸ்.பி.ஐ. மாற்றியுள்ளது.

இந்த சேவை நாடு முழுவதும் உள்ள அனைத்து பாரத ஸ்டேட் வங்கி ஏ.டி.எம். மையங்களுக்கும் பொருந்தும். எஸ்.பி.ஐ.(State Bank of India) வங்கி வாடிக்கையாளர்கள் ஏதேனும் ஸ்டேட் வங்கி ஏ.டி.எம். மையத்தில் ஒரு முறை பரிமாற்றமாக ரூ.10,000 மற்றும் அதற்கு மேற்பட்ட தொகையை எடுக்கும் நிலையில், கூடுதலாக அவருடைய கைபேசி எண்ணுக்கு வரும் OTP எண்களையும் பதிவிட(Debit Card PIN போக) வேண்டும்.

சொல்லப்பட்ட சேவையின் மூலம் ஏ.டி.எம். மோசடி மற்றும் பண பரிவர்த்தனை அட்டையை தவறாக பயன்படுத்துதல் தடுக்கப்படும் என பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது. முன்னர் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே இருந்த பாதுகாப்பு சேவை, நாளை (18-09-2020) முதல் 24 மணிநேர சேவையாக அனைத்து எஸ்.பி.ஐ. ஏ.டி.எம். மையங்களுக்கு வர உள்ளது.

அதே வேளையில் எஸ்.பி.ஐ. அல்லாத மற்ற வங்கி ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்கும் போது, இந்த OTP முறை வேலை செய்யாது. புதிய சேவை, வங்கி வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டதாக வங்கி நிர்வாகம் கூறியுள்ளது. எனவே இனி பாரத ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம். பரிவர்த்தனையின் போது, வங்கி கணக்கில் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணை வைத்திருப்பது அவசியமாகிறது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை

www.varthagamadurai.com

உங்கள் பணத்தை பல மடங்காக பெருக்குவது எப்படி ?

உங்கள் பணத்தை பல மடங்காக பெருக்குவது எப்படி ?

How to multiple your money in Easy steps ?

உலகின் எட்டாவது அதிசயம் கூட்டு வட்டி(Power of Compounding) என்றால், உங்களது முதலீட்டை இரட்டிப்பாக்குவது என்பது இன்று ஏமாற்று வேலையாக மாறியுள்ளது. கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை பல மடங்காக மாற்றி தருகிறேன் என சில கும்பல்கள் இன்று உலகம் முழுவதும் திரிந்து கொண்டு தான் இருக்கிறது.

போன்சி(Ponzi) என சொல்லப்பட்ட ஏமாற்று திட்டங்களும் அவ்வப்போது வந்தவண்ணம் தான் உள்ளது. நம்மில் பலரும் அவற்றில் பணத்தை கட்டி விட்டு, பின்பு தான் ஏமாற்றப்பட்டதாக புலம்புவதும் அடிக்கடி நிகழ்ந்த வண்ணம் உள்ளன.

அரசு சார்பில் எச்சரிக்கையும், விழிப்புணர்வு செய்தியும் வந்து கொண்டிருந்தாலும் நமக்கு நாமே கவனமுடன் இருப்பது அவசியமாகும். “உங்கள் பணத்தை சில மாதங்களில் இரட்டிப்பாக தருகிறோம், எங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்யுங்கள் ‘ என்ற விளம்பரத்தை பார்த்திருப்போம். எப்படி இரட்டிப்பாக்க முடியும் என கேட்டால், பங்குச்சந்தையில் போடுகிறோம், டாலர்களில் வர்த்தகம் புரிகிறோம், தங்கத்தை வாங்கி வைக்கிறோம் அல்லது வீட்டுமனையில் முதலீடு செய்கிறோம் என்பார்கள்.

உண்மையில் அப்படி ஒரு எளிய வாய்ப்பு இருந்தால், சாமானிய மக்களுக்கு சுலபமாக கிடைத்து விடுமா என்ன ? அப்புறம் எதற்கு பெரு நிறுவனங்களும், பண முதலைகளும் இருக்கிறார்கள். அம்பானியும், அதானியும் எதற்கு தொழில் செய்ய வேண்டும், டாட்டா நிறுவனத்திற்கு வேறு வேலை இல்லையா என்ன ?

ஏமாற்று பேர்வழிகளிடம் உண்மையில் சிக்கி கொள்வது நடுத்தர வருவாயை கொண்டிருப்பவர்கள் தான். குறுகிய காலத்தில் விரைவாக பணம் சம்பாதிக்கிறேன் என மாட்டிக்கொள்பவர்கள் இவர்கள் தான். எந்தவொரு முதலீட்டு சாதனமும் நிரந்தரமான, அதுவும் அளவில்லாத முதலீட்டு பெருக்கத்தை உடனடியாக ஏற்படுத்தும் என சொல்லவில்லை.

வங்கி வட்டி விகிதத்திலும் ஏற்ற-இறக்கம் நிலவும், தங்கம் மற்றும் ரியல் எஸ்டேட் முதலீட்டிலும் இது நடந்து கொண்டு தான் இருக்கிறது. பங்குச்சந்தைக்கு சொல்ல தேவையில்லை. நீண்டகாலத்தில் முதலீடு செய்து விட்டு காத்திருந்தால், பணவீக்கத்தை தாண்டிய வருவாயை பெறலாம். உங்களை விரைவாக பணக்காரராக்கும் என்று எங்கும் உத்தரவாதம் தரவில்லை, அப்படி சொல்லவும் இல்லை.

அதே வேளையில், உங்கள் முதலீட்டை பல மடங்காக மாற்றலாம். இரட்டிப்பாக, மூன்று மடங்காக அல்லது நான்கு மடங்காக, எப்படி வேண்டுமானாலும் செய்யலாம். ஆம், அடிப்படை கணிதம் தான் இது. இதற்கு நீங்கள் இரு வேலைகளை செய்தாக வேண்டும்.

  • எதிர்பார்க்கும் வருவாய் அல்லது வட்டி விகிதம்(Expected Returns %)
  • முதலீட்டு காலம் 

மேலே சொன்ன இரண்டு காரணிகள் உங்கள் பணம் பல மடங்குகள் உயர்வதற்கு காரணமாக இருக்கும். நீங்கள் செய்யும் முதலீடு ஒரு தொழிலாகவோ(Business) அல்லது முதலீட்டு சாதனமாகவோ(Investment Avenue) இருக்கலாம். உங்கள் பணம் வேலை செய்தால் மட்டுமே, உங்களுக்காக சம்பாதிக்க முடியும். அது தொடர்ச்சியாக தனது வேலையை செய்யும் போது தான் கூட்டு வட்டியின் பலனும் நமக்கு கிடைக்கப்பெறும்.

உதாரணமாக உங்கள் முதலீடு இரட்டிப்பாக,

விதி எண் – 72:

72 / எதிர்பார்க்கும் வட்டி விகிதம் %

உங்களிடம் ஒரு லட்சம் ரூபாய் உள்ளது. அதனை நீங்கள் இரட்டிப்பாக மாற்ற மேலே சொன்ன இரண்டு காரணிகளும் அவசியம். உதாரணமாக நாம் எதிர்பார்க்கும் அல்லது கிடைக்கும் வட்டி விகிதம் 8 சதவீதம் எனில், விதி எண் – 72ன் படி, ஒன்பது வருடங்களில் நமது பணம் இரட்டிப்பாக மாறும். ஆம், இது கணிதம் தான்.

72 / 8 = 9 வருடங்கள்

வட்டி விகிதம் 12 சதவீதம் எனில் ஆறு வருடங்களில் இரட்டிப்பாகும், வட்டி விகிதம் 6 சதவீதம் எனில் உங்கள் பணம் இரட்டிப்பாக 12 வருடங்கள் எடுத்து கொள்ளும்.

விதி எண் – 114: (மூன்று மடங்காக)

114 / எதிர்பார்க்கும் வட்டி விகிதம் %

விதி எண் – 144 (நான்கு மடங்காக)

144 / எதிர்பார்க்கும் வட்டி விகிதம் %

நமக்கு தேவையான காரணிகள் கிடைக்கப்பெறும் வட்டி விகிதமும், முதலீட்டு காலமும் தான். எனவே நமது இலக்கை உறுதி செய்யும் முதலீட்டு சாதனத்தை தேடுவது தான் முதலீட்டின் சிறப்பம்சமாக இருக்கும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

மின்னணு வாகனங்கள் – வாய்ப்புகளும், சவால்களும் – பங்குச்சந்தை பகுப்பாய்வு

மின்னணு வாகனங்கள் – வாய்ப்புகளும், சவால்களும் – பங்குச்சந்தை பகுப்பாய்வு 

EV – Opportunities & Challenges – Fundamental Aspect

தொழில்நுட்ப உலகில் தனிநபர் ஒவ்வொருக்கும் கருத்து வேறுபாடுகள் உண்டு. சிலர் அறிவியல் முன்னேற்றத்தில் விருப்பம் காட்டுவதில்லை. மற்ற சிலரோ அறிவியலின் ஏணிப்படியில் நடைபோட்டு கொண்டு தான் இருக்கின்றனர். மனிதனின் தேவைகள் இருக்கும் வரை அதற்கான வசதிகளை புதுமையாக கொண்டு வருவதில் அறிவியல் முன்னிலை வகிக்கிறது.

மின்னணு வாகனங்கள் மற்றும் 5 ஜி தொழில்நுட்ப பயன்பாட்டில் முழுமை பெறும் போது, மனித அறிவியல் வாழ்வில் அது மேம்பட்ட நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இதுவரை இவ்வுலகம் பார்த்திராத தொழில்நுட்ப ஆளுமைகள் இருக்கக்கூடும் எனவும் சொல்லப்படுகிறது.

அந்த வகையில், சமீபத்திய வருடங்கள் மின்னணு வாகனம் சார்ந்த விஷயங்களில் முக்கியத்துவம் பெறுகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்து கொள்வது, நடப்பில் உள்ள எரிபொருட்களுக்கான மாற்றம், மேம்பட்ட ஆற்றல் சேமிப்பை உருவாக்குதல் என அதன் தடம் நீண்டு கொண்டிருக்கிறது.

வாகனங்களுக்கான அரசு கொள்கைகளும் மாற்றமடைந்து வருகிறது. எந்தவொரு நிகழ்விலும் சாதகமான தன்மைகள் மட்டுமே இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. அவ்வாறு ஒரு முதலீட்டாளராக நாம் காணும் போது, மின்னணு வாகன(Electric Vehicle) பிரிவில் வாய்ப்புகளும், சவால்களும் சில உள்ளன. இதனை நாம் பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வு நிகழ்வாகவும் பார்க்கலாம்.

பொதுவாக மின்னணு வாகனங்கள் எனும் போது சாலை வழி, ரயில், கப்பல்கள், மின் விமானம் மற்றும் மின்சார விண்கலம் என பலவகைகளில் பயன்பாடு  இருக்கலாம். மின்னணு வாகனங்களுக்கு தேவையான மின் ஆதாரங்கள் – உள் சேமிப்பு(Onboard Storage), ஜெனரேட்டர்கள், மின் உற்பத்தி ஆலைகள் மற்றும் கலப்பின வழிமுறை(Hybrid).

வாய்ப்புகள் பல…

  • குறைந்த கார்பன் அளவு
  • மீள்நிரப்பு செலவு குறைவு (Recharging Cost)
  • ஆற்றல் திறன்
  • குறைந்த சத்தம் மற்றும் காற்று மாசுபாடு
  • எளிய வழிமுறை (Simple Mechanism)

சவால்கள் சில…

  • சுற்றுச்சூழல் பாதுகாப்பு
  • அணுசக்தி மற்றும் புதைபடிவ ஆற்றல்(Fossil Energy)
  • கனரக வாகன தயாரிப்பில் உள்ள இடர்பாடு
  • மின்சார உற்பத்தி மற்றும் செலவினம்
  • நீண்ட பயணத்துக்கான மீள்நிரப்பு (Longer Recharge Time)
  • பேட்டரிகளை மாற்றுதல் – மறுசுழற்சி

மின்சார வாகனங்கள் என்ற வகையில் காணும் போது, பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் ஏதும் உள்ளதா, மின் ஆதாரங்கள் மற்றும் பேட்டரி தொழில்நுட்பத்தை கொண்டிருக்கும் நிறுவனங்களை கண்டறிவது, பேட்டரிக்கு தேவையான மூலப்பொருட்கள் என்னென்ன, அதனை தயார் செய்யும் நிறுவனங்கள் எங்கே உள்ளது என்ற அடிப்படை கேள்விகள் ஒரு முதலீட்டாளருக்கு தேவையான விஷயமாகும்.

நடப்பில் டாட்டா மோட்டார்ஸ், மஹிந்திரா, அசோக் லேலண்ட் நிறுவனங்கள் பெரு வாகன பிரிவில் மின்னணு வாகனங்களை தயாரித்து வருகிறது. இருசக்கர வாகன பிரிவில் டி.வி.எஸ். மோட்டார்ஸ் மற்றும் பஜாஜ் நிறுவனங்களும் உள்ளது. பேட்டரி தயாரிப்பு என பார்க்கும் போது அமரராஜா பேட்டரிஸ்(Amararaja Batteries), எக்சைட் இண்டஸ்ட்ரீஸ்(Exide), இஸ்ரோ, பெல் நிறுவனங்கள் பங்காற்றுகிறது.

மூலப்பொருட்களில் மாங்கனீசு, அலுமினியம், காப்பர், ஜிங்க், அலாய், லித்தியம் மற்றும் கிராப்பைட் போன்ற பிரிவில் பல நிறுவனங்கள் உள்ளன. இவை இரும்பு அல்லாத உலோகங்கள்(Non-ferrous Metals) என கூறப்படுகிறது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

வரலாற்றில் தடம் பதிக்காத பொருளாதார வீழ்ச்சி – ஜூன் 2020

வரலாற்றில் தடம் பதிக்காத பொருளாதார வீழ்ச்சி – ஜூன் 2020

Unprecedented Economic Downturn in the Historical Data – GDP June 2020

நேற்று மாலை தேசிய புள்ளியியல் அலுவலகம்(NSO) சார்பில் நாட்டின் ஏப்ரல்-ஜூன் 2020 காலாண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி(GDP growth) குறியீடு வெளியிடப்பட்டது. ஊரடங்கு காலத்தில் நாட்டின் பொருளாதார மந்தநிலை ஏற்படும் என்பது பொருளாதார வல்லுநர்கள் எதிர்பார்த்து வந்தது தான். ஆனால் சந்தை எதிர்பார்த்த (-18) சதவீதம் என்ற அளவை காட்டிலும் தற்போது (-23.9) சதவீதம் என சொல்லப்பட்டுள்ளது.

சுதந்திரத்திற்கு பின்னர் (அதாவது பொருளாதார குறியீடு அளவை பெற்ற) ஏற்பட்ட மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சியாக தற்போது பார்க்கப்படுகிறது. நாட்டில் உள்ள அனைத்து துறைகளும் ஏப்ரல்-ஜூன் 2020 காலத்தில் உற்பத்தியை பெருக்க முடியாமல் சிரமப்பட்டுள்ளன.

ஸ்டீல் பயன்பாட்டு அளவு 57 சதவீதமும், நிலக்கரி உற்பத்தி 15 சதவீதமும் மற்றும் சிமெண்ட் உற்பத்தி 38 சதவீதமும் வீழ்ச்சி கண்டுள்ளது. அதிகபட்ச வீழ்ச்சியாக வணிக வாகன விற்பனை 85 சதவீதமும், பயணிகள் விமான சேவை 94 சதவீதமும் குறைந்துள்ளது. ரயில்வே துறையிலும் நிகர டன் கிலோமீட்டருக்கு 27 சதவீதம் குறைந்து காணப்படுகிறது.

இது போல விமான சேவையின் சரக்கு போக்குவரத்து, துறைமுக சேவை மற்றும் தொலைபேசி சந்தாதார்களின் எண்ணிக்கையிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் தனிநபர் செலவினம் மற்றும் தனியார் முதலீட்டை காட்டிலும் அரசு சார்பில் அதிகம் செலவிடப்பட்டுள்ளது. நாட்டின் வர்த்தகத்தில் (ஏற்றுமதி-இறக்குமதி) எதிர்பாராத உபரி தொகையும் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் நடந்துள்ளது. அதன் காரணமாக மிக மோசமான நிலைக்கு செல்ல வேண்டிய பொருளாதாரம் தடைபட்டு சற்று ஆறுதலை தந்துள்ளது.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறியீட்டில் உள்ள கட்டுமானம்(Construction) 50 சதவீதமும், விடுதிகள் மற்றும் போக்குவரத்து(Hotels & Transportation) 47 சதவீதமும் மற்றும் உற்பத்தி துறை(Manufacturing) 39 சதவீதமும் வீழ்ச்சியடைந்துள்ளது. அரசு செலவினம் 16 சதவீதமும், விவசாய துறை 3.5 சதவீதமும் வளர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

சுரங்கம் மற்றும் குவாரி, நிதி, வீட்டுமனை மற்றும் இதர தொழில் துறைகளின் வளர்ச்சியும் குறைந்துள்ளது. 1992ம் ஆண்டுக்கு பின்பு ஏற்பட்ட புதிய பொருளாதார கொள்கைக்கு பிறகான, மிகப்பெரிய சரிவாக ஜூன் 2020 காலாண்டு வளர்ச்சி சொல்லப்படுகிறது. வேகமாக வளரும் நாடுகளில் அதிகம் காணப்பட்ட வீழ்ச்சியாகவும் இந்த குறியீட்டு எண்கள் எடுத்து கொள்ளப்பட்டுள்ளது.

ஜூன் காலாண்டுக்கு பிறகான தளர்வுகள் ஓரளவு பொருளாதார முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும். இருப்பினும், நடப்பு 2020-21ம் நிதியாண்டு முடிவில் அது வளர்ச்சி குறைந்ததாகவே காணப்படும் என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com