வரலாற்றில் தடம் பதிக்காத பொருளாதார வீழ்ச்சி – ஜூன் 2020
Unprecedented Economic Downturn in the Historical Data – GDP June 2020
நேற்று மாலை தேசிய புள்ளியியல் அலுவலகம்(NSO) சார்பில் நாட்டின் ஏப்ரல்-ஜூன் 2020 காலாண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி(GDP growth) குறியீடு வெளியிடப்பட்டது. ஊரடங்கு காலத்தில் நாட்டின் பொருளாதார மந்தநிலை ஏற்படும் என்பது பொருளாதார வல்லுநர்கள் எதிர்பார்த்து வந்தது தான். ஆனால் சந்தை எதிர்பார்த்த (-18) சதவீதம் என்ற அளவை காட்டிலும் தற்போது (-23.9) சதவீதம் என சொல்லப்பட்டுள்ளது.
சுதந்திரத்திற்கு பின்னர் (அதாவது பொருளாதார குறியீடு அளவை பெற்ற) ஏற்பட்ட மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சியாக தற்போது பார்க்கப்படுகிறது. நாட்டில் உள்ள அனைத்து துறைகளும் ஏப்ரல்-ஜூன் 2020 காலத்தில் உற்பத்தியை பெருக்க முடியாமல் சிரமப்பட்டுள்ளன.
ஸ்டீல் பயன்பாட்டு அளவு 57 சதவீதமும், நிலக்கரி உற்பத்தி 15 சதவீதமும் மற்றும் சிமெண்ட் உற்பத்தி 38 சதவீதமும் வீழ்ச்சி கண்டுள்ளது. அதிகபட்ச வீழ்ச்சியாக வணிக வாகன விற்பனை 85 சதவீதமும், பயணிகள் விமான சேவை 94 சதவீதமும் குறைந்துள்ளது. ரயில்வே துறையிலும் நிகர டன் கிலோமீட்டருக்கு 27 சதவீதம் குறைந்து காணப்படுகிறது.
இது போல விமான சேவையின் சரக்கு போக்குவரத்து, துறைமுக சேவை மற்றும் தொலைபேசி சந்தாதார்களின் எண்ணிக்கையிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் தனிநபர் செலவினம் மற்றும் தனியார் முதலீட்டை காட்டிலும் அரசு சார்பில் அதிகம் செலவிடப்பட்டுள்ளது. நாட்டின் வர்த்தகத்தில் (ஏற்றுமதி-இறக்குமதி) எதிர்பாராத உபரி தொகையும் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் நடந்துள்ளது. அதன் காரணமாக மிக மோசமான நிலைக்கு செல்ல வேண்டிய பொருளாதாரம் தடைபட்டு சற்று ஆறுதலை தந்துள்ளது.
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறியீட்டில் உள்ள கட்டுமானம்(Construction) 50 சதவீதமும், விடுதிகள் மற்றும் போக்குவரத்து(Hotels & Transportation) 47 சதவீதமும் மற்றும் உற்பத்தி துறை(Manufacturing) 39 சதவீதமும் வீழ்ச்சியடைந்துள்ளது. அரசு செலவினம் 16 சதவீதமும், விவசாய துறை 3.5 சதவீதமும் வளர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
சுரங்கம் மற்றும் குவாரி, நிதி, வீட்டுமனை மற்றும் இதர தொழில் துறைகளின் வளர்ச்சியும் குறைந்துள்ளது. 1992ம் ஆண்டுக்கு பின்பு ஏற்பட்ட புதிய பொருளாதார கொள்கைக்கு பிறகான, மிகப்பெரிய சரிவாக ஜூன் 2020 காலாண்டு வளர்ச்சி சொல்லப்படுகிறது. வேகமாக வளரும் நாடுகளில் அதிகம் காணப்பட்ட வீழ்ச்சியாகவும் இந்த குறியீட்டு எண்கள் எடுத்து கொள்ளப்பட்டுள்ளது.
ஜூன் காலாண்டுக்கு பிறகான தளர்வுகள் ஓரளவு பொருளாதார முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும். இருப்பினும், நடப்பு 2020-21ம் நிதியாண்டு முடிவில் அது வளர்ச்சி குறைந்ததாகவே காணப்படும் என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை