Tag Archives: ATM Withdrawal

இனி ஏ.டி.எம். மூலம் பணம் எடுக்க OTP அவசியம், நாளை முதல் அமல் – பாரத ஸ்டேட் வங்கி

இனி ஏ.டி.எம். மூலம் பணம் எடுக்க OTP அவசியம், நாளை முதல் அமல் – பாரத ஸ்டேட் வங்கி 

OTP based cash withdrawal to all SBI ATMs from 18th September, 2020

நாடு முழுவதும் நாளை முதல் OTP முறையிலான பண பரிவர்த்தனை(Withdrawal) அமலுக்கு வருவதாக பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது. வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் பணத்தை ஏ.டி.எம். வாயிலாக எடுக்கும் போது, பாதுகாப்பு சார்ந்த சில சிக்கல்களை சந்திக்க வேண்டியுள்ளது. வாடிக்கையாளர்களின் ஏ.டி.எம். கடவுச்சொல்(ATM PIN) கசிந்து விட்டால், அவரின் கணக்கில் உள்ள பணத்தை திருடுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

இதனை தடுக்கும் வகையில் வாடிக்கையாளர்களின் கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பும் கூடுதல் பாதுகாப்பு அம்சத்தை பாரத ஸ்டேட் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. OTP முறையிலான இந்த நடைமுறை ஏற்கனவே பெரும்பாலான வங்கிகளில் இருந்து வந்தாலும், தற்போது 24 மணிநேர சேவையாக இதனை எஸ்.பி.ஐ. மாற்றியுள்ளது.

இந்த சேவை நாடு முழுவதும் உள்ள அனைத்து பாரத ஸ்டேட் வங்கி ஏ.டி.எம். மையங்களுக்கும் பொருந்தும். எஸ்.பி.ஐ.(State Bank of India) வங்கி வாடிக்கையாளர்கள் ஏதேனும் ஸ்டேட் வங்கி ஏ.டி.எம். மையத்தில் ஒரு முறை பரிமாற்றமாக ரூ.10,000 மற்றும் அதற்கு மேற்பட்ட தொகையை எடுக்கும் நிலையில், கூடுதலாக அவருடைய கைபேசி எண்ணுக்கு வரும் OTP எண்களையும் பதிவிட(Debit Card PIN போக) வேண்டும்.

சொல்லப்பட்ட சேவையின் மூலம் ஏ.டி.எம். மோசடி மற்றும் பண பரிவர்த்தனை அட்டையை தவறாக பயன்படுத்துதல் தடுக்கப்படும் என பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது. முன்னர் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே இருந்த பாதுகாப்பு சேவை, நாளை (18-09-2020) முதல் 24 மணிநேர சேவையாக அனைத்து எஸ்.பி.ஐ. ஏ.டி.எம். மையங்களுக்கு வர உள்ளது.

அதே வேளையில் எஸ்.பி.ஐ. அல்லாத மற்ற வங்கி ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்கும் போது, இந்த OTP முறை வேலை செய்யாது. புதிய சேவை, வங்கி வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டதாக வங்கி நிர்வாகம் கூறியுள்ளது. எனவே இனி பாரத ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம். பரிவர்த்தனையின் போது, வங்கி கணக்கில் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணை வைத்திருப்பது அவசியமாகிறது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை

www.varthagamadurai.com

Advertisement