அதிகரித்து வரும் தங்கத்தின் கையிருப்பு, மீண்டும் பற்றாக்குறையில் வர்த்தகம்
Rising Gold Reserves, expanding Trade Deficit – Indian Economy
சமீப காலமாக தங்கத்தின் விலை அதிக ஏற்ற-இறக்கத்திற்கு உட்பட்டு இருந்தாலும், அரசு சார்பில் தங்கத்தின் கையிருப்பு அதிகரித்து வருகிறது. பொதுவாக நாட்டின் பொருளாதாரம் நல்ல நிலையில் இருக்கும் போது, பங்குச்சந்தை குறியீடுகள் ஏற்றம் பெறுவதும், அதுவே பொருளாதார மந்தநிலை காணும் போது, தங்கத்தின் மீதான கையிருப்பு அதிகரித்தும் காணப்படுகிறது.
பங்குச்சந்தைகள் தொடர்ச்சியாக ஏற்றம் பெறும் நிலையில், தங்கத்தில் முதலீடு குறையும். கடந்த 2018ம் ஆண்டின் துவக்கம் முதல் நாட்டின் பொருளாதாரம் மந்தநிலையில் உள்ளது. இதற்கு பொருத்தமாக உலகளவிலும் பொருளாதார குறியீடுகள் சாதகமான நிலையில் இல்லை.
சுமார் எட்டு ஆண்டுகளாக ஏற்றம் பெறாத தங்கத்தின் விலை, கடந்த ஒன்றரை வருடங்களில் பெருத்த ஏற்றத்தை அடைந்துள்ளது. தங்க இ.டிஎப்.(Gold ETF) திட்டத்தில் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் கிடைத்துள்ள வருவாய் 38 சதவீதமாக உள்ளது. அதே வேளையில் பங்குச்சந்தை சென்செக்ஸ் குறியீடு கடந்த ஒரு வருடத்தில் 6 சதவீதம் மட்டுமே வளர்ச்சியடைந்துள்ளது.
நடப்பாண்டில் இந்திய பங்குச்சந்தை இதுவரை 6 சதவீத இழப்பை சந்தித்துள்ளது. இருப்பினும், மார்ச் மாதத்திற்கு பிறகான ஆறு மாதத்தில் 50 சதவீதம் ஏற்றம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அதே நேரம் பொருளாதாரம் இன்னும் சரிசெய்யப்படவில்லை என்பது கவனிக்க வேண்டிய விஷயமாக உள்ளது.
நாட்டின் வர்த்தக பற்றாக்குறை(Trade Deficit) மீண்டும் அதிகரித்து வருகிறது. கொரோனா காலத்தில் ஏற்றுமதி இல்லையென்றாலும், நாட்டின் இறக்குமதியும் குறைந்திருந்தது. இதன் காரணமாக முதன்முறையாக 790 மில்லியன் டாலர்கள் உபரியாக இருந்தது. ஆகஸ்ட் மாதத்தின் முடிவில் நாட்டின் வர்த்தக பற்றாக்குறை 6.77 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.
ஏற்றுமதி அளவு 13 சதவீதம் குறைந்து 22.7 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. ஏற்றுமதியில் கற்கள் மற்றும் நகைகள், பெட்ரோலிய பொருட்கள் மற்றும் முந்திரி ஆகியவற்றின் அளவு ஆகஸ்ட் மாதத்தில் கணிசமாக குறைந்துள்ளது. இறக்குமதி அளவு 26 சதவீதம் குறைந்து 29.47 பில்லியன் டாலர்களாக இருந்தது. இறக்குமதியில் பெட்ரோலியம் மற்றும் கச்சா எண்ணெய் பொருட்கள், எந்திரங்கள் ஆகியவற்றின் தேவை குறைந்துள்ளது.
வர்த்தக பற்றாக்குறை அதிகரித்து வரும் அதே நேரத்தில், தங்கத்தின் கையிருப்பு(Gold Reserves) பல மாதங்களாக அதிகரித்து வருகிறது. 2019ம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் தங்கத்தின் இறக்குமதி 1.4 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த நிலையில், நடப்பாண்டின் ஆகஸ்ட் மாதத்தில் 3.7 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது. பொதுவாக பொருளாதார மந்தநிலை காலங்களில் மத்திய வங்கி தங்கத்தின் கையிருப்பு அளவை அதிகரிப்பதுண்டு. 2020ம் ஆண்டின் முதல் காலாண்டில் தங்கத்தின் கையிருப்பு 642 டன்கள், இது இரண்டாம் காலாண்டில் 658 டன்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 25 வருட கால அளவில், 2008-2010 மற்றும் 2018ம் ஆண்டுக்கு பிறகான காலத்தில் தங்கத்தின் கையிருப்பு அதிகரித்து காணப்படுகிறது. இது பொருளாதார மந்தநிலை நீடித்து வருவதை மத்திய வங்கியின் அணுகுமுறை மூலம் தெரியப்படுத்துகிறது.
ஆகஸ்ட் மாதத்தில் நாட்டின் சில்லரை விலை பணவீக்கம்(Retail Inflation) 6.69 சதவீதமாகவும், நடப்பு நிதியாண்டில் இது 10 சதவீதம் வரை செல்லலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை