Tag Archives: trade deficit

நாட்டின் வர்த்தக பற்றாக்குறை – சிறு பார்வை

நாட்டின் வர்த்தக பற்றாக்குறை – சிறு பார்வை 

India’s Balance of Trade – Trade Deficit July 2022

நாட்டின் வர்த்தக பற்றாக்குறை கடந்த ஜூலை மாதத்தின் முடிவில் 30 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்துள்ளது. நாட்டின் இறக்குமதி 43 சதவீதம் அதிகரித்தும், ஏற்றுமதி 2.5 சதவீதம் அதிகரித்தும் காணப்படுகிறது. ஏற்றுமதியின் அளவு 66.27 பில்லியன் அமெரிக்க டாலர்களாகவும், இறக்குமதி அளவு 36.27 பில்லியன் அமெரிக்க டாலர்களாவும் இருந்துள்ளது.

பொதுவாக, ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்குமான இடைவெளியே வர்த்தக பற்றாக்குறையாக சொல்லப்படுகிறது. கனிம எரிபொருட்கள், எண்ணெய், இரும்பு மற்றும் எஃகு, முத்துக்கள், விலையுயர்ந்த கற்கள், நகைகள் ஆகியவற்றை நாம் பெரும்பாலும் இறக்குமதியாக கொண்டிருக்கிறோம். ஏற்றுமதியில் பெட்ரோலிய பொருட்கள், ஆபரணங்கள், வாகனங்கள், தானியங்கள், இயந்திரங்கள், மருந்துகள் மற்றும் ரசாயனங்களை அதிகமாக கொண்டுள்ளோம்.

இறக்குமதியில் நாம் பெரும்பாலும் சீனாவிடமிருந்து தான் பொருட்கள் மற்றும் சேவைகளை பெறுகிறோம். 2021ம் ஆண்டில் நாட்டின் இறக்குமதியில் சீனாவின் பங்களிப்பு 16 சதவீதமாகவும், ஐக்கிய அரபு நாட்டிலிருந்து 7.6 சதவீதமும் மற்றும் அமெரிக்காவில் 7.3 சதவீதத்தையும் கொண்டுள்ளோம். சீனாவின் பங்களிப்பு மட்டும் சுமார் 87.50 பில்லியன் அமெரிக்க டாலர்கள். சீனாவிடமிருந்து மின் மற்றும் மின்னணு உபகரணங்கள், இயந்திரங்கள், கொதிகலன்கள், அணு உலை, ரசாயனம், பிளாஸ்டிக் மற்றும் உரங்களை பெறுகிறோம்.

ஏற்றுமதியில் நாம் அமெரிக்காவிற்கு அதிகமாக அனுப்பி கொண்டிருக்கிறோம். நாட்டின் ஏற்றுமதி பங்களிப்பில் அமெரிக்கா 18 சதவீதம், ஐக்கிய அரபு நாடு 6.5 சதவீதம் மற்றும் சீனா 5.9 சதவீதமாக இருந்துள்ளது. முத்துக்கள் விலையுயர்ந்த கற்கள், உலோகங்கள், நாணயங்கள், மருந்துகள் மற்றும் துணிமணிகளை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்து வருகிறோம். 

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ஏற்றுமதி 121 பில்லியன் அமெரிக்க டாலர்களும், இறக்குமதி 190 பில்லியன் டாலர்களாகவும் உள்ளது. இது கடந்த வருடத்தின் முதல் காலாண்டை ஒப்பிடுகையில், ஏற்றுமதி 26.82 சதவீதமும், இறக்குமதி 49.76 சதவீதமுமாக வளர்ச்சி பெற்றுள்ளது. ஏற்றுமதியை காட்டிலும் இறக்குமதியின் அளவு உயர்ந்து வருவது நாட்டின் வர்த்தக பற்றாக்குறையை மேலும் அதிகரிக்க செய்துள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

நாட்டின் விலைவாசி உயர்வு(பணவீக்கம்) 2022 – சிறு பார்வை

நாட்டின் விலைவாசி உயர்வு(பணவீக்கம்) 2022 – சிறு பார்வை 

India’s rising Retail Inflation 2022 – Economy Insights

நாட்டின் ஏப்ரல் மாத நுகர்வோர் விலை பணவீக்கம் கடந்த எட்டு வருடங்களில் காணப்பட்ட அதிகபட்ச அளவாக 7.79 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது. கடந்த ஏழு மாதங்களாக பணவீக்க விகிதம் தொடர்ச்சியாக உயர்ந்து வருவது கவனிக்கத்தக்கது. ஏப்ரல் மாத பணவீக்கம், சந்தை வல்லுநர்கள் எதிர்பார்த்த அளவை காட்டிலும் அதிகமாக சென்றுள்ளது.

உணவுப்பொருட்கள் மற்றும் எரிபொருட்களின் விலையில் ஏற்பட்ட மாற்றத்தால், பணவீக்க விகிதம் அதிகரித்து வந்துள்ளது. எண்ணெய் மற்றும் கொழுப்பு வகைகள் 17.28 சதவீதமும், காய்கறிகள் 15.41 சதவீதமும் உயர்ந்துள்ளது. இது போல மசாலா பொருட்களின்(Spices) விலை எதிர்பாராத விதமாக 10.56 சதவீதம் என அதிகரித்து காணப்படுகிறது.

பாரத ரிசர்வ் வங்கியின் குறுகிய கால இலக்காக பணவீக்க விகிதம், இரண்டு சதவீதம் முதல் ஆறு சதவீதம் வரை சொல்லப்பட்டுள்ளது. ஆனால், கடந்த நான்கு மாதங்களாக இந்த இலக்கை கடந்து தான் பணவீக்க விகிதம் இருந்துள்ளது. 

நாட்டின் நுகர்வோர் விலை பணவீக்க விகிதத்தில்(Consumer Price Index) உணவுப்பொருட்களின் பங்களிப்பு மட்டும் 45.86 சதவீதமாக உள்ளது. இதற்கடுத்தாற் போல் வீட்டுமனை 10.07 சதவீத பங்களிப்பையும், போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு 8.59 சதவீத பங்களிப்பையும், சுகாதாரம் 5.89 சதவீதமும், ஒளி மற்றும் எரிபொருட்கள் 6.84 சதவீதமாக உள்ளது.

பொதுவாக எரிசக்தியில் இறக்குமதியை சார்ந்து இருப்பது, பருவமழையின் நிச்சயமற்ற தன்மை, உட்கட்டமைப்பு சார்ந்த மேம்பாடு நிகழாதிருத்தல், உணவுப்பொருட்கள் விநியோக சங்கிலியில் அத்தியாவசியமான பொருட்களை கொண்டு செல்வதில் சிரமம் மற்றும் நிதி பற்றாக்குறை ஆகியவை நாட்டின் பணவீக்க விகித மாற்றத்திற்கு காரணமாக அமைந்துள்ளன.

இதற்கு முன்பு சில்லரை விலை பணவீக்கம் அதிகமாக காணப்பட்ட காலமாக 2013ம் வருடத்தின் நவம்பர் மாதம் இருந்துள்ளது. சொல்லப்பட்ட வருடத்தின் மே மாதத்தில் 9.38 சதவீதமாக இருந்த பணவீக்க விகிதம் தொடர்ச்சியாக அதிகரித்து நவம்பர் மாதத்தில் 12.17 சதவீதமாக முடிவடைந்தது. 2013ம் ஆண்டு முதல் சில்லரை விலை பணவீக்கம் கடைபிடிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு, மொத்த விலை(Wholesale price index -WPI) அடிப்படையில் தான் நாட்டின் பணவீக்கம் கணக்கிடப்பட்டு வந்தது.

india-inflation-cpi-5 yrs - april - 2022

நடப்பில் மொத்த விலை பணவீக்கம் மற்றும் சில்லரை விலை பணவீக்கம் என இரு கணக்கீடுகளும் இருக்கும் நிலையில், சில்லரை விலை பணவீக்க விகிதம் தான் பொருளாதார முன்னுதாரணத்திற்கு எடுத்து கொள்ளப்படுகிறது. 

ஒரு நாட்டின் பணவீக்கம் அதிகரிக்கும் போது, வங்கி வட்டி விகிதங்கள் உயர்த்தப்படுவது பொருளாதாரத்தின் அடிப்படை நிகழ்வு. அதாவது உயரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த வட்டி விகிதங்களில் மாற்றம் செய்யப்படும். இது தொழில் சார்ந்த பங்குச்சந்தைக்கு பாதகமாகவும், வங்கிகளில் டெபாசிட் செய்பவர்களுக்கு சற்று சாதகமாகவும் அமையும். எப்போதெல்லாம் அரசு கடன் பத்திரங்களின் வருவாய்(தேவை) குறைகிறதோ, அப்போது வங்கி டெபாசிட்க்கான வருவாய் அதிகரித்துள்ளது எனலாம்.  

2013-14ம் ஆண்டு காலத்தில் கடனுக்கான வங்கி வட்டி விகிதம் பத்து சதவீதத்திற்கு மேல் இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த வட்டி விகிதம் ஒன்பது சதவீதத்திற்கு குறைவாக உள்ளது. 2013ம் ஆண்டில் நாட்டின் பொருளாதாரத்திற்கு அரசின் கடன்(Debt to GDP) 67 சதவீதமாக இருந்த நிலையில், நடப்பில் இது 74 சதவீதமாக உள்ளது. வளர்ந்த நாடுகளை ஒப்பிடுகையில், நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி-கடன் விகிதம் சற்று குறைவாக இருப்பது சாதகமான ஒன்று.

இருப்பினும் நாட்டின் வர்த்தக பற்றாக்குறை அதிகமாக உள்ளது. ஏப்ரல் 2022 கால நிலவரப்படி, நாட்டின் வர்த்தக பற்றாக்குறை 20.11 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. ஏற்றுமதியை காட்டிலும், இறக்குமதி அளவு அதிகரித்து காணப்படுகிறது. நாட்டின் இறக்குமதியில் கனிம எரிபொருட்கள், எண்ணெய், முத்துக்கள், விலை உயர்ந்த கற்கள் மற்றும் நகைகளின் பங்களிப்பு பெரும்பான்மையாக உள்ளது.

சீனா, சவுதி அரேபியா, ஈராக், இந்தோனேஷியா மற்றும் ஸ்விட்சர்லாந்து நாடுகளிடம் வர்த்தக பற்றாக்குறையும், அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம்(UAE), இங்கிலாந்து மற்றும் வியட்நாம் நாடுகளிடம் உபரியாகவும் உள்ளது கவனிக்கத்தக்கது.

மிதமான பணவீக்க விகிதம், ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு கைகொடுக்கும். பணவாட்டத்தை(Deflation) காட்டிலும் பணவீக்கம் பெரும்பாலும் நாட்டின் பொருளாதாரத்திற்கு நல்லது. அதே வேளையில், அதிகப்படியான பணவீக்க விகிதம் சேமிப்பையும், வாங்கும் திறனையும் குறைத்து விடும். 

பணவீக்க விகிதம் அதிகரிக்க அதிகரிக்க, அதனை சமாளிக்கும் வகையில் வருவாய் மற்றும் முதலீடுகள் இருந்தால் பரவாயில்லை. ஆனால், விலைவாசி உயர்வு பொதுவாக சந்தையில் போட்டியை மழுங்க செய்யும். இதன் மூலம் முதலீட்டின் அளவும் குறைந்து, பொருளாதார மந்தநிலையை ஏற்படுத்த நேரிடும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

  

அதிகரித்து வரும் தங்கத்தின் கையிருப்பு, மீண்டும் பற்றாக்குறையில் வர்த்தகம்

அதிகரித்து வரும் தங்கத்தின் கையிருப்பு, மீண்டும் பற்றாக்குறையில் வர்த்தகம் 

Rising Gold Reserves, expanding Trade Deficit – Indian Economy

சமீப காலமாக தங்கத்தின் விலை அதிக ஏற்ற-இறக்கத்திற்கு உட்பட்டு இருந்தாலும், அரசு சார்பில் தங்கத்தின் கையிருப்பு அதிகரித்து வருகிறது. பொதுவாக நாட்டின் பொருளாதாரம் நல்ல நிலையில் இருக்கும் போது, பங்குச்சந்தை குறியீடுகள் ஏற்றம் பெறுவதும், அதுவே பொருளாதார மந்தநிலை காணும் போது, தங்கத்தின் மீதான கையிருப்பு அதிகரித்தும் காணப்படுகிறது.

பங்குச்சந்தைகள் தொடர்ச்சியாக ஏற்றம் பெறும் நிலையில், தங்கத்தில் முதலீடு குறையும். கடந்த 2018ம் ஆண்டின் துவக்கம் முதல் நாட்டின் பொருளாதாரம் மந்தநிலையில் உள்ளது. இதற்கு பொருத்தமாக உலகளவிலும் பொருளாதார குறியீடுகள் சாதகமான நிலையில் இல்லை.

சுமார் எட்டு ஆண்டுகளாக ஏற்றம் பெறாத தங்கத்தின் விலை, கடந்த ஒன்றரை வருடங்களில் பெருத்த ஏற்றத்தை அடைந்துள்ளது. தங்க இ.டிஎப்.(Gold ETF) திட்டத்தில் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் கிடைத்துள்ள வருவாய் 38 சதவீதமாக உள்ளது. அதே வேளையில் பங்குச்சந்தை சென்செக்ஸ் குறியீடு கடந்த ஒரு வருடத்தில் 6 சதவீதம் மட்டுமே வளர்ச்சியடைந்துள்ளது.

நடப்பாண்டில் இந்திய பங்குச்சந்தை இதுவரை 6 சதவீத இழப்பை சந்தித்துள்ளது. இருப்பினும், மார்ச் மாதத்திற்கு பிறகான ஆறு மாதத்தில் 50 சதவீதம் ஏற்றம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அதே நேரம் பொருளாதாரம் இன்னும் சரிசெய்யப்படவில்லை என்பது கவனிக்க வேண்டிய விஷயமாக உள்ளது.

நாட்டின் வர்த்தக பற்றாக்குறை(Trade Deficit) மீண்டும் அதிகரித்து வருகிறது. கொரோனா காலத்தில் ஏற்றுமதி இல்லையென்றாலும், நாட்டின் இறக்குமதியும் குறைந்திருந்தது. இதன் காரணமாக முதன்முறையாக 790 மில்லியன் டாலர்கள் உபரியாக இருந்தது. ஆகஸ்ட் மாதத்தின் முடிவில் நாட்டின் வர்த்தக பற்றாக்குறை 6.77 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.

ஏற்றுமதி அளவு 13 சதவீதம் குறைந்து 22.7 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. ஏற்றுமதியில் கற்கள் மற்றும் நகைகள், பெட்ரோலிய பொருட்கள் மற்றும் முந்திரி ஆகியவற்றின் அளவு ஆகஸ்ட் மாதத்தில் கணிசமாக குறைந்துள்ளது. இறக்குமதி அளவு 26 சதவீதம் குறைந்து 29.47 பில்லியன் டாலர்களாக இருந்தது. இறக்குமதியில் பெட்ரோலியம் மற்றும் கச்சா எண்ணெய் பொருட்கள், எந்திரங்கள் ஆகியவற்றின் தேவை குறைந்துள்ளது.

வர்த்தக பற்றாக்குறை அதிகரித்து வரும் அதே நேரத்தில், தங்கத்தின் கையிருப்பு(Gold Reserves) பல மாதங்களாக அதிகரித்து வருகிறது. 2019ம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் தங்கத்தின் இறக்குமதி 1.4 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த நிலையில், நடப்பாண்டின் ஆகஸ்ட் மாதத்தில் 3.7 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது. பொதுவாக பொருளாதார மந்தநிலை காலங்களில் மத்திய வங்கி தங்கத்தின் கையிருப்பு அளவை அதிகரிப்பதுண்டு. 2020ம் ஆண்டின் முதல் காலாண்டில் தங்கத்தின் கையிருப்பு 642 டன்கள், இது இரண்டாம் காலாண்டில் 658 டன்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 25 வருட கால அளவில், 2008-2010 மற்றும் 2018ம் ஆண்டுக்கு பிறகான காலத்தில் தங்கத்தின் கையிருப்பு அதிகரித்து காணப்படுகிறது. இது பொருளாதார மந்தநிலை நீடித்து வருவதை மத்திய வங்கியின் அணுகுமுறை மூலம் தெரியப்படுத்துகிறது.

ஆகஸ்ட் மாதத்தில் நாட்டின் சில்லரை விலை பணவீக்கம்(Retail Inflation) 6.69 சதவீதமாகவும், நடப்பு நிதியாண்டில் இது 10 சதவீதம் வரை செல்லலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

நாட்டின் வர்த்தக பற்றாக்குறை 11.01 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரிப்பு

நாட்டின் வர்த்தக பற்றாக்குறை 11.01 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரிப்பு

India’s Balance of Trade (Trade Deficit) to USD 11.01 Billion in October 2019

நாட்டின் வர்த்தக பற்றாக்குறை கடந்த அக்டோபர் மாதத்தின் முடிவில் 11.01 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்துள்ளது. இது கடந்த செப்டம்பர் மாதத்தில் 10.86 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 2018ம் ஆண்டின் அக்டோபர் காலத்தில் வர்த்தக பற்றாக்குறை 18 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்துள்ளது.

தற்போது சொல்லப்பட்ட வர்த்தக பற்றாக்குறை(Trade Deficit) சந்தை எதிர்பார்த்த 12.05 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்பதனை விட குறைவாக தான் உள்ளது. பெட்ரோலியம் மற்றும் கச்சா எண்ணெய் இறக்குமதி அளவு குறைந்ததை அடுத்து நாட்டின் அக்டோபர் மாத இறக்குமதி விகிதம் 16 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.

கச்சா எண்ணெய் மற்றும் அதனை சார்ந்த பொருட்களின் இறக்குமதி அளவு 31 சதவீத வீழ்ச்சியும், மின்னணு பொருட்கள் மற்றும் போக்குவரத்து உபகரணங்கள் முறையே 8.5 சதவீதம் மற்றும் 14.70 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது. தங்கத்தின் இறக்குமதி அக்டோபர் மாதத்தில் 4.7 சதவீதம் அதிகரித்துள்ளது.

ஏற்றுமதியை பொறுத்தவரையில் அக்டோபர் மாத முடிவில் ஒரு சதவீதம் வரை வீழ்ச்சியை சந்தித்துள்ளது. பெட்ரோலிய பொருட்களின் ஏற்றுமதி 14.60 சதவீதம் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் 11 சதவீதமும் சரிவை கண்டுள்ளது. இது போல ஜவுளி மற்றும் பருத்தி வகை பொருட்களின் ஏற்றுமதியும் குறைந்துள்ளது.

மருந்துகள் மற்றும் மின்னணு பொருட்களும் ஏற்றுமதியில் பெருமளவிலான சரிவை சந்தித்துள்ளது. நாட்டின் தேவை பெரும்பாலும் இறக்குமதியை சார்ந்தே உள்ளதால் வர்த்தக பற்றாக்குறையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது.

இந்தியாவின் பெரும்பாலான வர்த்தக பற்றாக்குறை சீனா, சுவிஸ், சவூதி அரேபியா, ஈராக் மற்றும் இந்தோனேஷியா போன்ற நாடுகளுடன் தான் ஏற்பட்டுள்ளது. நாட்டின் இறக்குமதியில் அதிக இடத்தை தக்க வைத்திருப்பது கனிம எரிபொருட்கள்(Mineral Fuels), எண்ணெய் வகைகள், முத்துக்கள் மற்றும் நகைகள் ஆகியவை ஆகும்.

நாட்டின் அதிகபட்ச பற்றாக்குறையாக கடந்த 2012ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் சுமார் 20,210 மில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்துள்ளது. வர்த்தக உபரியாக(Trade Surplus) கடந்த 1977ம் ஆண்டின் மார்ச் மாதத்தில் 258 மில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

வர்த்தக போர் – இந்தியாவின் ஏற்றுமதி சரிந்தது

வர்த்தக போர் – இந்தியாவின் ஏற்றுமதி சரிந்தது 

India’s Exports Plummet – Trade war Impact

 

நடப்பு 2019ம் வருடத்தில் முதல் முறையாக நாட்டின் வணிக ஏற்றுமதி(Exports) அளவு சரிவடைந்துள்ளது. வர்த்தக அமைச்சகம் வெளியிட்ட தகவலில் கடந்த ஜூன் மாதம் வணிக ஏற்றுமதியின் மதிப்பு 25.01 பில்லியன் அமெரிக்க டாலர்கள் எனவும், இது கடந்த 2018ம்  வருடத்துடன் ஒப்பிடும் போது 9.71 சதவீத வீழ்ச்சி எனவும் சொல்லப்பட்டுள்ளது.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

கடந்த ஒன்பது மாதங்களில் காணப்பட்ட குறைந்த அளவாக ஜூன் மாதத்திற்கான ஏற்றுமதி உள்ளது. இதனை போல நாட்டின் இறக்குமதியும்(Imports) 9 சதவீத அளவிற்கு குறைந்துள்ளது. ஜூன் மாதத்தில் வணிக ஏற்றுமதியின் மதிப்பு சுமார் 40.29 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.

 

ஏற்றுமதியில் பெட்ரோலிய பொருட்கள் 33 சதவீதமும், ரத்தினங்கள் மற்றும் அணிகலன்கள்(Gems & Jewellery) 11 சதவீதமும், அரிசி 28 சதவீதமும், பொறியியல் பொருட்கள் சுமார் 3 சதவீத அளவிலும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. அதே வேளையில் இரும்பு தாது(Iron ore) ஏற்றுமதி 155 சதவீதம், மின்னணு பொருட்கள் 44 சதவீதம், மட்பாண்டம் மற்றும் கண்ணாடி பொருட்களின் ஏற்றுமதி 20 சதவீதமும் ஜூன் மாதத்தில் வளர்ச்சியை கண்டுள்ளன.

 

ஏற்றுமதி பொருட்களில் மசாலா மற்றும் மருந்து பொருட்கள் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பெற்றுள்ளன. ஏப்ரல்-ஜூன் மாத காலத்தில் இந்தியாவின் ஏற்றுமதி அளவு 1.69 சதவீதம் சரிந்து 81.08 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. ஜூன் மாதத்தில் நாட்டின் வர்த்தக பற்றாக்குறை(Trade Deficit) 15.28 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.

 

இந்தியாவிற்கு இறக்குமதியாகும் பொருட்களின் மதிப்பு ஜூன் மாதத்தில் 9 சதவீத சரிவை சந்தித்துள்ள நிலையில், முத்துக்கள் மற்றும் விலை மதிப்பற்ற கற்கள், பெட்ரோலிய பொருட்கள் மற்றும் எந்திரங்கள், மின்சார பொருட்கள் ஆகியவை காரணமாக அமைந்துள்ளன. ஏப்ரல்-ஜூன் மாத காலத்தில் இறக்குமதி அளவு 0.29 சதவீதம் குறைந்து 127.04 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது.

 

நாட்டின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சரிவிற்கு பெரும்பாலும் அமெரிக்க – சீன வர்த்தக போர்(Trade war) தான் காரணமாக இருந்துள்ளது. அமெரிக்க நாட்டிற்கான இறக்குமதியை அதிகமாக கொண்டிருக்கும் நாடு சீனா. கடந்த ஜூன் மாதத்தில் சீனாவின் ஏற்றுமதி 1.3 சதவீதமும், இறக்குமதி 7.3 சதவீதமும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. 

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com

 

 

மே மாதத்தில் நாட்டின் ஏற்றுமதி – 20 % வளர்ச்சி

மே மாதத்தில் நாட்டின் ஏற்றுமதி – 20 % வளர்ச்சி

20 Percent rise in Exports on May 2018

 

கடந்த மே மாதத்தில் நாட்டின் மொத்த ஏற்றுமதி விற்பனை 20 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது. பொறியியல் சாதனங்கள், ரசாயனங்கள் மற்றும் மருந்து பொருட்கள் இந்த ஏற்றுமதி வளர்ச்சிக்கு துணை புரிந்துள்ளன.

 

கச்சா எண்ணெய் விலை உயர்வால், வெளியே செல்லும் போக்குவரத்தின் மதிப்பும் அதிகரித்ததால் ஏற்றுமதிக்கான வளர்ச்சியை அதிகப்படுத்தியுள்ளது. 20 சதவீத வளர்ச்சியானது கடந்த 6 மாத காலத்தில் அதிகபட்ச வளர்ச்சியாகும். ஏப்ரல் 2018 ல் ஏற்றுமதி வளர்ச்சி 5.7 சதவீதமாகும்.

 

சமீபத்தில் வெளியிடப்பட்ட பணவீக்க அறிக்கையில், நடந்து முடிந்த மே மாதத்தின் பணவீக்கம் 4.43 % ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. இது ஒரு வருடத்தில் இல்லாத அதிகபட்ச பணவீக்கமாகும். இந்நிலையில் அந்த மாதத்தில் ஏற்றுமதி வளர்ச்சி விகிதம் சற்று நிறைவை கொடுத்துள்ளது.

 

மே மாதத்தில் ஏற்றுமதி 28.80 பில்லியன் அமெரிக்க டாலராகவும், அதே நேரத்தில் இறக்குமதி 43.40 பில்லியன் டாலராகவும் உள்ளது கவனிக்கத்தக்கது. வர்த்தக பற்றாக்குறை(Trade Deficit) நான்கு மாத உயர்வாக 14.60 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது.

 

ஆடை ஏற்றுமதி சரிந்திருந்த போதிலும், ஜவுளித்துறை இரட்டை இலக்க வளர்ச்சியை கொண்டிருக்கிறது. பொறியியல் சாதனங்கள் 14 சதவீதத்தையும், மருந்து பொருட்கள் 25 சதவீதத்தையும், பால் மற்றும் இறைச்சி 14 சதவீத வளர்ச்சியையும் கொண்டுள்ளன. ஆனால் பெட்ரோலிய ஏற்றுமதி வளர்ச்சி 100 % க்கு மேலாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 

வர்த்தக பற்றாக்குறை அதிகரிப்புக்கு, இறக்குமதி சதவீதம் அதிகரித்ததே பெரும் காரணமாக அமைந்தது. கடந்த ஏப்ரலில் 4.60 % ஆக இருந்த இறக்குமதி வளர்ச்சி சதவிகிதம், மே மாதத்தில் 15 % ஆக அதிகரித்தது. இதனால் முதல் காலாண்டில் (2018-19) நடப்பு கணக்கு பற்றாக்குறை(Current Account Deficit – CAD) பாதிக்கப்படும். கடந்த நிதியாண்டின்(2017-18)  நான்காம் காலாண்டில் நடப்பு கணக்கு பற்றாக்குறை GDP ல் 1.9 சதவீதமாகும்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com