சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் – அக்டோபர் 2020
Small Savings Scheme interest rate for the Period – October to December 2020
சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை காலாண்டுக்கு ஒரு முறை மத்திய அரசு அறிவித்து வருகிறது. பரஸ்பர நிதி திட்டங்கள், பங்குகள் மற்றும் பத்திரங்கள் ஆகியவற்றின் முதலீடு அதிகரித்து வரும் நிலையில், இன்றளவும் நம் நாட்டில் சிறு சேமிப்புக்கான மதிப்பு குறையவில்லை எனலாம். ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தில் இருப்பவர்களுக்கு அஞ்சலக மற்றும் வங்கி சிறு சேமிப்பு திட்டங்கள் ஒரு வரப்பிரசாதமாக உள்ளன.
சேமிப்பு கணக்குக்கான வட்டி விகிதங்கள் வங்கியில் குறைந்து வரும் நிலையில், சிறு சேமிப்பு திட்டத்தின் கீழ் அடிப்படை சேமிப்பு கணக்குக்கு 4 சதவீதம் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. பொதுவாக சிறு சேமிப்பு திட்டத்தில் மூத்த குடிமக்கள் மற்றும் செல்வ மகள் திட்டத்திற்கு(Sukanya Samriddhi), மற்ற திட்டங்களை காட்டிலும் வட்டி விகிதம் சற்று அதிகமாக காணப்படும்.
நடப்பு 2020-21ம் நிதியாண்டின் தொடக்கத்தில் சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் பெருமளவு குறைக்கப்பட்டிருந்தது. ஜனவரி-மார்ச் 2020 காலாண்டில் வழங்கப்பட்டிருந்த வட்டி விகிதத்தை விட குறைவான வட்டி விகிதமே ஏப்ரல்-ஜூன் காலாண்டில் காணப்பட்டது. இது கடந்த ஜூலை-செப்டம்பர் காலாண்டிலும் மாற்றமின்றி தொடர்ந்தது.
அக்டோபர்-டிசம்பர் காலாண்டுக்கான சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகித அறிக்கையை கடந்த செப்டம்பர் 30ம் தேதியன்று மத்திய அரசு அறிவித்திருந்தது. இவற்றில் எந்த மாற்றமும் இல்லாமல் ஜூலை-செப்டம்பர் காலாண்டுக்கான வட்டி விகிதம் தொடரும் எனவும் சொல்லப்பட்டுள்ளது.
சேமிப்பு கணக்குக்கு 4 சதவீதம் வட்டி எனவும், ஒரு வருட, இரண்டு வருட மற்றும் மூன்று வருட வைப்பு தொகைக்கான(Time Deposit) வட்டி விகிதம் 5.5 சதவீதத்தில் தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 5 வருட டெபாசிட் தொகைக்கு 6.7 சதவீதமும், ஐந்து வருட தொடர் வைப்பு (RD) தொகைக்கு 5.80 சதவீதமும் சொல்லப்பட்டுள்ளது.
மூத்த குடிமக்களுக்கான(Senior Citizen Savings Scheme) 5 வருட திட்டத்தில் எந்த மாற்றமுமின்றி 7.40 சதவீதமும், 5 வருட மாத வருவாய்(MIS) திட்டத்தில் 6.6 சதவீதமுமாக உள்ளது. வரி சலுகை அளிக்கும் தேசிய சேமிப்பு பத்திரத்திற்கான வட்டி விகிதம் 6.80 சதவீதம். இதன் முதிர்வு காலம் ஐந்து வருடமாகும்.
பொது வருங்கால வைப்பு (PPF) நிதி திட்டத்தில் வழங்கப்படும் வட்டி விகிதம் 7.10 சதவீதம் மற்றும் கிசான் விகாஸ் பத்திர(KVP) வட்டி 6.90 சதவீதம். பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் திட்டத்திற்கான வட்டி விகிதம் அதிகபட்சமாக 7.60 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது.
சொல்லப்பட்ட வட்டி விகிதம் அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31 வரையுள்ள காலத்திற்கு பொருந்தும். நாட்டின் சில்லரை விலை பணவீக்கம் சராசரியாக 6 சதவீதமாக இருக்கும் நிலையில், சிறு சேமிப்பு திட்டங்களின் கீழ் கிடைக்கப்பெறும் வட்டி விகிதம் நீண்ட கால இலக்குகளுக்கு பயன் தராது. சேமிப்பு பாதுகாப்பாக இருப்பது அவசியம். எனினும் பணவீக்கத்தை தாண்டிய வருவாய் ஈட்டவில்லை எனில், பிற்காலத்தில் பெறப்படும் முதிர்வு தொகையால் தேவைக்கு பெருமளவில் பயன்தராமல் போகும்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை