டி.சி.எஸ். நிறுவன பங்குகளை திரும்பப்பெறும் விலை ரூ.3000, டிவிடெண்ட் 12 ரூபாய்
Buyback Price of Rs.3000 and Rs.12 Dividend per Share – TCS Q2FY21 Results
இந்திய தொழில்நுட்ப துறையில் முதன்மையாக விளங்கும் நிறுவனம், டாட்டா குழுமத்தை சேர்ந்த டி.சி.எஸ்.(TCS) நிறுவனம். இதன் சந்தை மதிப்பு ரூ.10 லட்சம் கோடி. பில்லியன் டாலர் வருமானத்தை கொண்டிருக்கும் இந்நிறுவனம் சுமார் நான்கு லட்சத்திற்கு மேற்பட்ட பணியாளர்களை கொண்டு 46 நாடுகளில் தனது சேவையை அளித்து வருகிறது.
சந்தை மதிப்பிலும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு அடுத்தபடியாக இருக்கும் மிகப்பெரிய இந்திய நிறுவனமாக டி.சி.எஸ். உள்ளது. டி.சி.எஸ். நிறுவனத்தில் அதன் தாய் நிறுவனமான டாட்டா சன்ஸ் 72 சதவீத பங்குகளை வைத்திருக்கிறது. பொதுத்துறை காப்பீடு நிறுவனமான எல்.ஐ.சி.(LIC India) நான்கு சதவீத பங்குகளை கொண்டுள்ளது.
2020-21ம் நிதியாண்டுக்கான இரண்டாம் காலாண்டு முடிவுகளை டாட்டா கன்சல்டன்சி நிறுவனம் நேற்று வெளியிட்டிருந்தது. செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் 40,135 கோடி ரூபாயாகவும், செலவினம் 28,622 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. வரிக்கு முந்தைய லாபம் ரூ. 10,037 கோடியாகவும், இரண்டாம் காலாண்டில் நிகர லாபமாக ரூ.7,475 கோடி ரூபாயை ஈட்டியுள்ளது.
முதலாம் காலாண்டுடன் ஒப்பிடுகையில் இரண்டாம் காலாண்டின் வருவாய் 5 சதவீதமும், நிகர லாபம் 6 சதவீதமாகவும் வளர்ச்சியடைந்துள்ளது. அதே வேளையில் முந்தைய செப்டம்பர் (2019-20) காலாண்டுடன் ஒப்பிடும் போது, வருவாய் 3 சதவீதம் வளர்ச்சி பெற்றிருந்தாலும், நிகர லாப அடிப்படையில் 7 சதவீத வளர்ச்சி குறைந்துள்ளது.
நேற்றைய காலாண்டு முடிவு அறிவிப்பில் முதலீட்டாளர்களிடம் இருந்து பங்குகளை திரும்பப்பெறும் முறையில்(Buyback of Shares) 16,000 கோடி ரூபாயை டி.சி.எஸ். நிறுவனம் செலவிட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. 5.33 கோடி பங்குகளை, பங்கு ஒன்றுக்கு ரூ.3000 என்ற விலையில் நிறுவனம் திரும்பப்பெற உள்ளது. இதன் மதிப்பு ரூ.16,000 கோடி எனவும், மொத்த பங்குகளில் இதன் பங்களிப்பு 1.42 சதவீதம் எனவும் சொல்லப்பட்டுள்ளது.
டி.சி.எஸ். நிறுவன பங்களிப்பில், 72 சதவீத பங்குகள் நிறுவனர்களிடம் உள்ளது. 16 சதவீத பங்குகள் வெளிநாட்டு முதலீட்டாளர்களிடமும், 8 சதவீத பங்குகள் உள்நாட்டு வங்கி மற்றும் நிதி நிறுவனங்களிடமும் உள்ளது. சிறு முதலீட்டாளர்களிடம்(Resident individual and others) வெறும் 3.3 சதவீத பங்குகள் தான் கையிருப்பாக உள்ளது. அதாவது 8.98 லட்சம் சிறு முதலீட்டாளர்களிடம் 12.5 கோடி பங்குகள் உள்ளது.
மேலும் இரண்டாம் காலாண்டுக்கான டிவிடெண்ட் தொகையையும் நிறுவனம் அறிவித்துள்ளது. பங்கு ஒன்றுக்கு ரூ.12 என ஈவுத்தொகையை சொல்லியுள்ளது. அதற்கான பதிவு நாள்: அக்டோபர் 15,2020.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை