Tag Archives: power of compounding

உங்கள் பணத்தை பல மடங்காக பெருக்குவது எப்படி ?

உங்கள் பணத்தை பல மடங்காக பெருக்குவது எப்படி ?

How to multiple your money in Easy steps ?

உலகின் எட்டாவது அதிசயம் கூட்டு வட்டி(Power of Compounding) என்றால், உங்களது முதலீட்டை இரட்டிப்பாக்குவது என்பது இன்று ஏமாற்று வேலையாக மாறியுள்ளது. கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை பல மடங்காக மாற்றி தருகிறேன் என சில கும்பல்கள் இன்று உலகம் முழுவதும் திரிந்து கொண்டு தான் இருக்கிறது.

போன்சி(Ponzi) என சொல்லப்பட்ட ஏமாற்று திட்டங்களும் அவ்வப்போது வந்தவண்ணம் தான் உள்ளது. நம்மில் பலரும் அவற்றில் பணத்தை கட்டி விட்டு, பின்பு தான் ஏமாற்றப்பட்டதாக புலம்புவதும் அடிக்கடி நிகழ்ந்த வண்ணம் உள்ளன.

அரசு சார்பில் எச்சரிக்கையும், விழிப்புணர்வு செய்தியும் வந்து கொண்டிருந்தாலும் நமக்கு நாமே கவனமுடன் இருப்பது அவசியமாகும். “உங்கள் பணத்தை சில மாதங்களில் இரட்டிப்பாக தருகிறோம், எங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்யுங்கள் ‘ என்ற விளம்பரத்தை பார்த்திருப்போம். எப்படி இரட்டிப்பாக்க முடியும் என கேட்டால், பங்குச்சந்தையில் போடுகிறோம், டாலர்களில் வர்த்தகம் புரிகிறோம், தங்கத்தை வாங்கி வைக்கிறோம் அல்லது வீட்டுமனையில் முதலீடு செய்கிறோம் என்பார்கள்.

உண்மையில் அப்படி ஒரு எளிய வாய்ப்பு இருந்தால், சாமானிய மக்களுக்கு சுலபமாக கிடைத்து விடுமா என்ன ? அப்புறம் எதற்கு பெரு நிறுவனங்களும், பண முதலைகளும் இருக்கிறார்கள். அம்பானியும், அதானியும் எதற்கு தொழில் செய்ய வேண்டும், டாட்டா நிறுவனத்திற்கு வேறு வேலை இல்லையா என்ன ?

ஏமாற்று பேர்வழிகளிடம் உண்மையில் சிக்கி கொள்வது நடுத்தர வருவாயை கொண்டிருப்பவர்கள் தான். குறுகிய காலத்தில் விரைவாக பணம் சம்பாதிக்கிறேன் என மாட்டிக்கொள்பவர்கள் இவர்கள் தான். எந்தவொரு முதலீட்டு சாதனமும் நிரந்தரமான, அதுவும் அளவில்லாத முதலீட்டு பெருக்கத்தை உடனடியாக ஏற்படுத்தும் என சொல்லவில்லை.

வங்கி வட்டி விகிதத்திலும் ஏற்ற-இறக்கம் நிலவும், தங்கம் மற்றும் ரியல் எஸ்டேட் முதலீட்டிலும் இது நடந்து கொண்டு தான் இருக்கிறது. பங்குச்சந்தைக்கு சொல்ல தேவையில்லை. நீண்டகாலத்தில் முதலீடு செய்து விட்டு காத்திருந்தால், பணவீக்கத்தை தாண்டிய வருவாயை பெறலாம். உங்களை விரைவாக பணக்காரராக்கும் என்று எங்கும் உத்தரவாதம் தரவில்லை, அப்படி சொல்லவும் இல்லை.

அதே வேளையில், உங்கள் முதலீட்டை பல மடங்காக மாற்றலாம். இரட்டிப்பாக, மூன்று மடங்காக அல்லது நான்கு மடங்காக, எப்படி வேண்டுமானாலும் செய்யலாம். ஆம், அடிப்படை கணிதம் தான் இது. இதற்கு நீங்கள் இரு வேலைகளை செய்தாக வேண்டும்.

 • எதிர்பார்க்கும் வருவாய் அல்லது வட்டி விகிதம்(Expected Returns %)
 • முதலீட்டு காலம் 

மேலே சொன்ன இரண்டு காரணிகள் உங்கள் பணம் பல மடங்குகள் உயர்வதற்கு காரணமாக இருக்கும். நீங்கள் செய்யும் முதலீடு ஒரு தொழிலாகவோ(Business) அல்லது முதலீட்டு சாதனமாகவோ(Investment Avenue) இருக்கலாம். உங்கள் பணம் வேலை செய்தால் மட்டுமே, உங்களுக்காக சம்பாதிக்க முடியும். அது தொடர்ச்சியாக தனது வேலையை செய்யும் போது தான் கூட்டு வட்டியின் பலனும் நமக்கு கிடைக்கப்பெறும்.

உதாரணமாக உங்கள் முதலீடு இரட்டிப்பாக,

விதி எண் – 72:

72 / எதிர்பார்க்கும் வட்டி விகிதம் %

உங்களிடம் ஒரு லட்சம் ரூபாய் உள்ளது. அதனை நீங்கள் இரட்டிப்பாக மாற்ற மேலே சொன்ன இரண்டு காரணிகளும் அவசியம். உதாரணமாக நாம் எதிர்பார்க்கும் அல்லது கிடைக்கும் வட்டி விகிதம் 8 சதவீதம் எனில், விதி எண் – 72ன் படி, ஒன்பது வருடங்களில் நமது பணம் இரட்டிப்பாக மாறும். ஆம், இது கணிதம் தான்.

72 / 8 = 9 வருடங்கள்

வட்டி விகிதம் 12 சதவீதம் எனில் ஆறு வருடங்களில் இரட்டிப்பாகும், வட்டி விகிதம் 6 சதவீதம் எனில் உங்கள் பணம் இரட்டிப்பாக 12 வருடங்கள் எடுத்து கொள்ளும்.

விதி எண் – 114: (மூன்று மடங்காக)

114 / எதிர்பார்க்கும் வட்டி விகிதம் %

விதி எண் – 144 (நான்கு மடங்காக)

144 / எதிர்பார்க்கும் வட்டி விகிதம் %

நமக்கு தேவையான காரணிகள் கிடைக்கப்பெறும் வட்டி விகிதமும், முதலீட்டு காலமும் தான். எனவே நமது இலக்கை உறுதி செய்யும் முதலீட்டு சாதனத்தை தேடுவது தான் முதலீட்டின் சிறப்பம்சமாக இருக்கும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

வாடகையா, ஒத்தியா (குத்தகை) ?

 

வாடகையா, ஒத்தியா (குத்தகை)   ?

SIP(Systematic Investment Planning)  vs Lumpsum Investment

 

இன்று நாம் அனைவரும் நம் வருமானத்தில் சேமிக்கிறோமோ இல்லையோ, ஆனால் நமக்கான கவுரவுமாக சில செலவுகளை கொண்டிருக்கிறோம். நாம் சம்பாதிப்பதை ஒரு கவுரவமாக நினைக்கிறமோ இல்லையோ, ஆனால் சில விஷயங்களை மதிப்புடன் வைத்துள்ளோம். நமது கவுரமாக (ஆடம்பரத்துடன்) கார் வாங்குவது, வீடு கட்டுவது (அ) வாங்குவது, அழகுக்கு, தொழில்நுட்ப சாதனங்களை வாங்கி சேர்ப்பது… இவற்றில் ஏழை – பணக்கார பாகுபாடின்றி எல்லாரும் மதிப்புடன் விரும்புவது ஒரு சொந்த வீடு வைத்திருப்பது தான். ஏனெனில் நமது நாட்டில் சொந்த வீடுகள் அதிகமாக இருப்பினும் ஒவ்வொரு தனி நபரும் தனக்காக சொந்த வீடு இருப்பதையே கவுரவ செலவாக கொண்டுள்ளோம் (அதனாலே சிலருக்கு தங்குவதற்கு கூட வீடும் இல்லை). நாம் வாடகை வீட்டில் இருப்பதாய் பெரும்பாலும் விரும்புவதில்லை. அதற்கு நமது காரணங்களாக,

‘வாடகை வீடு சௌகரியமாக இல்லை, வீட்டுக்காரரின் கெடுபிடிகள்’ போன்றவை. சரி வாடகை வீடு தான் என்றாலும், அதிலும் மற்றொரு விவாதம் – வாடகைக்கு இருப்பதா, ஒத்திக்கு இருப்பதா ?

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

வாடகை என்றால் மாதா மாதம் நமது வருமானத்திலிருந்து ஒரு தொகையை இதற்காக செலவு செய்ய வேண்டும். ஒத்தி வீடு எனில், வீட்டு சொந்தக்காரருக்கு ஒரு முழுத்தொகையை கொடுத்து விட்டு, வீட்டை காலி செய்யும் பொது அந்த தொகையை பெற்று கொள்வது;  அதாவது வீட்டுக்காரரிடம் ஒரு தொகையை டெபாசிட் செய்து விட்டு சில வருடங்களுக்கு பிறகு அதே தொகையை எந்த வட்டியும் பெறாமல் பெற்று கொள்வது; வேண்டுமானால் வீட்டுக்காரர் தான் பெற்ற தொகையை அந்த குறிப்பிட்ட காலத்திற்கு முதலீடு செய்திருக்கலாம் (அ) தனது பிற செலவுகளுக்கு பயன்படுத்தியிருக்கலாம். இந்த இரண்டிலும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு வசதி. சில மாதங்களுக்கு மட்டும் ஒரு பகுதியில் குடியிருக்க நினைப்போர் வாடகை கொடுத்து விட்டு போவோம், அது தான் நமக்கு வசதி என்பார்கள். சிலர், நாம் தான் இந்த பகுதியில் அடுத்த சில வருடங்களுக்கு இருந்தாக வேண்டுமே, அதனால் எதற்கு இந்த வாடகை செலவு, ஒத்திக்கு இருந்து விட்டு முடிவில் நமது முதல் தொகையை பெற்று செல்வோம் என்பார்கள். வாடகையா, ஓத்தியா ? இது ஒரு விவாதமாகவே எப்போதும் இருக்கிறது.

 

இது போல தான் முதலீட்டிலும், நான் மாதா மாதம் (Recurring Deposit -RD) சேமிப்பதா, (அ) ஒரு முறை மட்டும்(Fixed Deposit -FD) முதலீடு செய்து விட்டு செல்வதா… எது சிறந்தது என கேட்பதுண்டு.

 

மாதாந்திர முதலீடு (Systematic Investment Planninng -SIP)  vs  ஒரு முறை மட்டும் மொத்த முதலீடு (Lumpsum):

 

 

சுருக்கமாக நம் வீட்டில் இந்த நிகழ்வு எப்போதும் நடப்பதுண்டு; என் பெற்றோரை நான் எப்போதும் கவனித்து கொண்டிருக்கிறேன்; ஆனால் என் அண்ணன் எப்போதாவது என் பெற்றோருக்கு உதவி செய்து விட்டு நல்ல பெயர் வாங்கி செல்கிறான், இது என்ன நியாயம் என பலர் சொல்வதுண்டு. விநாயக – முருகப்பெருமான் பழக்கதை தான் 🙂 இந்த முதலீடு விஷயம் அவ்வாறு மட்டுமல்ல…

 

உதாரணத்திற்கு:

 

ராம்குமார் என்பவர் ஒரு தொழில் முனைவோர், தனது வங்கி வைப்பு கணக்கில் இன்று ஒரு முறை மட்டும் மொத்த முதலீடாக ரூ. 1,00,000 /- ஐ (வருடங்கள் – 5, ஆண்டு வட்டி விகிதம் – 7 %) வைத்துள்ளார். நமது ராம்குமாரின் அருமை தம்பி கோபி அவர்கள் தன் அண்ணனை போல தொழில் செய்யா விட்டாலும் மாத சம்பளக்காரராக உள்ளதால் அவர் தனது மாத சம்பளத்திலிருந்து சேமித்து மாதம் ரூ. 1667 /- (அதாவது வருடத்திற்கு ரூ. 20,000 /-) அஞ்சலக RD ல் போட்டு வருகிறார்(இவருக்கும் வருடங்கள் – 5, ஆண்டு வட்டி – 7 %) ஆக மொத்தம் இவரும் 5 வருடத்திற்கு மொத்தமாக ரூ. 1 லட்சம்.

 

5 வருட முடிவில் இருவர் பெறும் முதிர்வுத்தொகை:

                      

 • ராம் குமார் –    ரூ. 1,40,300 /-
 • கோபி           –    ரூ. 1,19,300 /-

 

என்னடா இருவரும் ஒரே தொகையை, ஒரே காலத்திற்கு தான் முதலீடு செய்தார்கள்; ஆனால் தம்பி கோபியை விட ராம்குமார் அப்படி என்ன செய்து விட்டார் ? இது ஒன்றும் சிதம்பர ரகசியமல்ல; அது தான் கூட்டு வட்டியின் ரகசியம். இதனை புரிந்து கொள்ள நம் பள்ளியில் 6 ம் வகுப்பு கணக்கே போதும். எளிதாக புரிய வேண்டுமானால் ராம்குமாரின் ஒரு முறை முதலீடான ரூ. 1 லட்சம், 5 வருடத்திற்கு கூட்டு வட்டியில் தான் அந்த ரூ. 1,40,300 முதிர்வு தொகையை கொடுத்தது. அதாவது தான் முதலீடு செய்த முதல் நாளிலிருந்து ஐந்தாம் வருட முடிவு நாள் வரையில் முழுத்தொகைக்கும் கூட்டு வட்டி வேலை செய்தது. ஆனால் கோபி விஷயத்தில் அப்படியல்ல. கோபியின் முதல் மாத முதலீடாக ரூ. 1667 /- மட்டுமே கூட்டு வட்டி 5 வருடமாக வேலை செய்தது. முதலீட்டு மாதங்கள் அதிகமாக கூட்டு அதற்கான கூட்டு வட்டி காலமும் குறைந்தது. அது தான் கூட்டு வட்டியின் ரகசியம், நீண்ட காலத்தில் பிரமாதமாக செயல்படும்.

 

நமது பள்ளி வகுப்பின் கூட்டு வட்டி (Compound Interest) Formula:

 

                         FV = PV  X  (1+r) ^n   

 

 • FV = Future Value (எதிர்கால மதிப்பு /தொகை)
 • PV = Present Value (தற்போதைய மதிப்பு /தொகை)
 •  r  = Annual interest rate (ஆண்டு வட்டி விகிதம்)
 •  n = Number of periods (காலங்கள் / வருடங்கள் )

அப்படியெனில் ராம்குமார் செய்வது தான் சிறந்தது என முடிவுக்கு வருவதா ? அது தான் இல்லை. ஒரு நல்ல முதலீடு என்பது காலத்தை சார்ந்தே உள்ளது. அது வெறும் பணத்தை கொண்டு மட்டுமல்ல. சிறு துளி பெருவெள்ளம் போல… நீங்கள் எத்தனை துளிகள் சேர்வதற்காக காத்து கொண்டிருக்கிறீர்களோ, அது தான் பெருவெள்ளமாகும். காலத்தினூடே பொறுமையும் அவசியம் (Power of Compounding).

 

உதாரணமாக ராம்குமாரால் ஒரு முறை மட்டுமே முதலீடு செய்யும்படியும், கோபியால் அடுத்த 10 வருடங்களுக்கு மாத முதலீடு செய்ய முடியுமானால்…  

 

 • 10 வருடங்களுக்கு பிறகு, ராம்குமார் பெறுவது – ரூ. 1,96,700 /-
 • 10 வருடங்களுக்கு பிறகு, கோபி பெறுவது – ரூ. 2,86,750 /-

 

இப்போது புரிகிறதா !

சமீபத்தில் நானும் என் நண்பர் ஒருவரும் பிரபல வார இதழின் (நிதி சார்ந்த) முதலீட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டோம். அப்போது ஒரு பரஸ்பர நிதியின் மேலாளர் அவர்கள் ஒரு வரைபடத்தை காண்பித்தார், ‘ நீங்கள் 2002 ல் ஒரு பிரபல கம்பெனியின் வாகனத்தை (Car) வாங்கியிருந்தால் அதன் மதிப்பு அன்று ரூ. 5 லட்சம் என்றும் அதன் இப்போதைய மதிப்பு குறைந்திருப்பதுடன், வாகனத்தின் தேய்மான செலவு, காப்பீடு செலவும் தான் அதிகமாயிருக்கும். ஆனால் அதே 2002 ல் நீங்கள் ஒரு பரஸ்பர நிதித்திட்டத்தில் ரூ. 5 லட்சத்தை முதலீடு செய்திருந்தால் இன்று 2017 ல் அதே காரையும், உங்கள் குழந்தைகளின் மேற்படிப்பு செலவு மற்றும் ஒரு ஆடம்பர திருமணத்தையும் செய்திருக்கலாம். ஏனெனில் நீங்கள் 2002 ல் செய்த ரூ. 5 லட்ச முதலீடு இப்போது (June, 2017) ரூ. 2.60 கோடியாக (பரஸ்பர நிதியில்) இருந்திருக்கும் ‘ என்றார். மற்றொரு படத்தில் நீங்கள் இளமையில் (25 வயது) முதலீடு செய்தால் உங்கள் ஓய்வு காலத்தில் (60 வயது) இவ்வளவு தொகை பெறுவீர்கள், அதனால் இளமையில் முதலீடு செய்யுங்கள் என காண்பிக்கப்பட்டது. இதை பார்த்த என் நண்பர் என்னிடம், ‘ நல்லா படத்தை காண்பித்து ஏமாற்றுகிறார்கள், ஏன் 35 வயதில் சேர்த்தாலும் 70 வயதில் இவ்வளவு கிடைக்கும் என சொல்லலாமே. எல்லாம் 35 வருட கணக்கு தானே ‘ என்றார். ஆனால் நாம் முதலீடு சார்ந்த விஷயத்தில் சற்று நடைமுறைகளுடன் சிந்திக்க பழக வேண்டும்.

25 வயதில் உங்களால் முதலீடு செய்து 60 வயதில் ஓய்வு பெறலாம். அதை தான் அரசாங்கமும் விரும்புகிறது. உங்களை அவர்கள் 70, 80 வயதில் வேலை செய்வதை விரும்பவில்லை. 35 வயதில் உங்களால் முதலீடு செய்ய முடியும், ஆனால் உங்களால் 70 வயது வரை தொடர முடியுமா ? அதற்கான வருமான வாய்ப்பு எளிதா ?

 

தற்போதெல்லாம் எல்லோரும்,  ‘இளமையில் ஓய்வு பெற போகிறேன் ‘ என்ற  சிந்தனை கொண்டவர்கள். நீங்கள் 70, 80 வயதுகளில் எப்படி நன்றாக சம்பாதித்து இருக்க முடியும். அந்த வயதில் நமது உடல் ஆரோக்கியமும் மிக முக்கியம் (பணத்தை விட). ஆதலால் நாம் நடைமுறைக்கு ஒத்து வரும் நம்மால் இயன்ற முதலீடை மேற்கொள்ளலாம். தேவை இருப்பின் முதலீட்டினை அதிகரித்தும் பயன் பெறலாம்.

 

வாடகையும், ஒத்தியும் நமக்கு அவ்வப்போது தேவை தான். குறுகிய கால மற்றும் நீண்ட கால தேவைகளுக்கு தகுந்தாற் போல் நாம் வாடகையையும் (SIP), ஒத்தியையும் (Lumpsum Investing) தேர்ந்தெடுக்கலாம். சொந்த வீடு தேவையுள்ளவர்கள் இப்போது தான் கடன் வாங்கி வீடு கட்ட வேண்டுமென்ற அவசியமில்லை; EMI கட்டுவதற்கு பதில் மாதாந்திர SIP ஐ தொடங்கியும் பிற்காலத்தில் ஒரு நல்ல வீட்டை வாங்கலாம் (அ) கட்டலாம்.

 

கடனில்லாமல் வாழ்வதும் ஒரு பெரும்பேறு தான் !

 

வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன் !

http://www.varthagamadurai.com

(Slide Image Source: dreamstime.com)

பழுத்த இலை விழக்கண்டு பச்சையிலை சிரித்தாற் போல – Secret of Young Investing

 

பழுத்த இலை விழக்கண்டு பச்சையிலை சிரித்தாற் போல…

SECRET OF YOUNG (EARLY) INVESTING

 

 

உங்களுக்கான மூன்று கேள்விகள் :

 

 • நீங்கள் எந்த பகுதியை அதிகமாக நேசிக்கிறீர்கள் மற்றும் எப்போதும் அனுபவிக்க விரும்புகிறீர்கள்… இளமையில் / முதுமையில்  ?
 • நீங்கள் எப்போது அதிகமாக கற்று கொள்ள மற்றும் உற்சாகமாக வேலை செய்ய விரும்புகிறீர்கள்… இளமையில் / முதுமையில்  ?
 • உங்களுக்கு நீச்சல் பயிற்சி பயில ஆசை… அதன் தொடக்க பயிற்சியை எப்போதும் ஆரம்பிக்க விரும்புகிறீர்கள்… 10-20 வயது / 50-60 வயது ?

 

 

எல்லாமே உங்கள் விருப்ப தேர்வு தான்; இந்த மூன்று கேள்விகளுக்கு உங்களுடைய விருப்பங்கள் (விடைகள்) 1. இளமையில்  2. இளமையில் 3.  10-20 வயது என்றால், நீங்கள் மேற்கொண்டு இந்த கட்டுரையை படிக்க அவசியமில்லை; தலைப்பை மட்டும் ஞாபகத்தில் கொள்ளுங்கள்… எனக்காக 🙂

 

இனி மற்றவர்களுக்கான கட்டுரை இதோ…

 

என் அலுவலக நண்பருடன் நான் ஒரு முறை பரஸ்பர நிதி நிறுவனம் நடத்தும் முதலீட்டாளர் விழிப்புணர்வு  நிகழ்ச்சி ஒன்றிற்கு புதுச்சேரி சென்றிருந்தேன்; நிகழ்ச்சியின் முடிவில் நான் என் நண்பரிடம் சொன்னேன், “ 25 வயதிலே நாம் மாதா மாதம் ரூ. 5000 /- (SIP) முதலீடு செய்தால் 50 வயதிலே நமக்கு ரூ. 93, 00,000 /- (93 லட்சம்) [12 % வட்டியில் ] கிடைக்குமென்று” நண்பரும், ஆமோதித்தார். மேலும் அவர் சொன்னார், “ 25 வருடத்திற்கு மாதாமாதம் ரூ. 5000 /- முதலீடு செய்தால் 12 % வட்டியில் முதிர்வில் ரூ. 93 லட்சம் கிடைக்கும்; அது தான் கணக்கு. ஆனால் இந்த பரஸ்பர நிதி நிறுவனங்கள் சும்மா 25 வயதிலே முதலீடு செய்தால் என்று படம் காண்பிக்கின்றன; நாம் வேண்டுமானாலும் முதலீடு செய்தால், முடிவில் இந்த கணக்கு தானே”  என்று தனது புத்திசாலித்தனத்தை சொன்னார்.  

 

அவர் சொல்லும் கணக்கு சரி தான்;

 

நான் சொன்னேன், “ 25 வயதிலே முதலீடு செய்வது நல்லதா (அல்லது) 50 வயதிலே நல்லதா ?” என்று கேட்டேன்; அதற்கு அவர் அதை அப்புறம் பார்த்து கொள்ளலாம்; காபி சாப்பிட போவோம் என்கிறார் 🙂

 

வேண்டுமானால் அவர் வீட்டில் போய் யோசித்திருக்கலாம் 🙂

இதை தான் நம்மில் பெரும்பாலோர் செய்கிறோம், “அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் !”

 

முதலீட்டு மற்றும் பரஸ்பர நிதி நிறுவனங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லி விட்டு போகட்டும்; ஆனால் அவை சொல்லும், ‘எண்களும், பாதுகாப்புத்தன்மையும்’ நமக்கு அவசியம். அதை நாம் அலட்சியப்படுத்த தேவையில்லை; இன்று நாம் இளமையில் முதலீடு / சேமிக்கும் வாய்ப்பு முதுமை காலத்தில் உறுதியாக மற்றும் நம்பகமாக கிடைக்க போவதில்லை. இளமையில் இருக்கும் நமது உழைப்பு மற்றும் நம்பிக்கை, முதுமையில் எதிர்பார்க்க முடியாது; அது தான் இயற்கை…

 

அதனால் இளமையில் கல் !

இளமையில் நாம் முதலீடு செய்யாமல் இருப்பதற்கான மனத்தடைகள்:

 

 • இளமை காலத்தை அனுபவித்து கொள்ளலாம் மற்றும் பிற்பகுதியில் சேமித்து / முதலீட்டை மேற்கொள்ளலாம் என்ற எண்ணம். [ உங்கள் இளமை காலத்தை அனுபவிப்பதற்கும், சேமிப்பதற்கான காலத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை; இளமை நமக்கு தேவையானது போல, சேமிப்பதற்கும் இளமை வேண்டுமல்லவா ! ]

 

 • எப்போதும் நம் கையில் நிரந்தர தொழில் / வேலை இருக்கும் போது, இளமையில் சேமிப்பு / முதலீடு எதற்கு என எண்ணுவது.        [ தாராளமயமாக்கல் மற்றும் உலக பொருளாதார சந்தை போட்டியில் நீங்கள் இப்போது பார்க்கும் வேலையும், தொழிலும் நிரந்தரமல்ல ! ]

 

 • சேமிப்பு / முதலீடு பற்றிய கல்வி இல்லாமை மற்றும் மண்ணும்,பொன்னும் தான் சொத்து என்று நம்புவது. [ விவசாயத்தை திறம்பட செய்பவர்களுக்கு தான் மண்ணும், நகை வியாபாரத்தில் ஈடுபடுவோருக்கு தான் பொன்னும் சொத்து ! ]

 

 • முதலீடு பற்றிய அறிவு இருந்தும் காலத்தே முதலீடு செய்யாமல் இருப்பது. [ வெறும் கல்வியினால் பயனொன்றும் இருப்பதில்லை; செயல்பட்டு பயனை அடைவது தான் அவசியம். ]

 

இளமை கால முதலீட்டின் வாய்ப்புகள் மற்றும் நன்மைகள்:

 

 • காலம் / நேரம் உங்கள் கையில்… உங்களுக்கு நீண்ட காலம் முதலீடு செய்ய வாய்ப்பு இருப்பதால், நீங்கள் செய்யும் முதலீட்டு தவறுகளையும், பாதுகாப்பு தன்மையினையும் மாற்றுவதற்கு நேரமுண்டு.

 

 • இளமை கால கற்றல்… உங்களுக்கு ஒரு நிதி சார்ந்த அனுபவத்தை நீண்ட காலத்திற்கு கொடுக்கும்; உங்களுக்கான தரமான பிற்கால வாழ்க்கையை திட்டமிட உதவும்; தேவையறிந்து செலவு செய்யும் பழக்க வழக்கத்தை தரும்.

 

 • எட்டாம் அதிசயமான ‘கூட்டு வட்டி’ – Power of Compounding பலனை பெறலாம்;  உங்களுக்கு தேவையான இலக்கினில் வெற்றியும் பெறலாம்.

 

 • பரபரப்பான வாழ்க்கை நிலையிலிருந்து சற்று தள்ளி நிற்கலாம்; நிம்மதியான வாழ்க்கையை அனுபவிக்கலாம்; ஓய்வு காலமும் சுகமாகும்.

 

நீங்கள் தினமும் டீ, காபி அருந்தினாலும் சரி, புகைபிடிப்பவராக இருந்தாலும் சரி உங்கள் பழக்க வழக்கத்திலிருந்து தினசரி ஒரு சிறிய தொகையை இளமையிலே சேமிக்க / முதலீடை தொடங்குங்கள்; முதுமையில்  டீ / காபி / புகை உங்களோடு இல்லாவிட்டாலும் , உங்கள் இளமை கால சேமிப்பு நிச்சயம் உங்களுடைய நண்பனாக இருக்கும்.

 

இளமையில் கற்றவரும், செல்வம் சேர்த்தவருமே முதுமையிலும் இளமை காலத்தை அனுபவிக்கின்றனர் என்பதே நிதர்சன உண்மை; நீங்கள் 25 வயதில் தோற்றால் பரவாயில்லை, கற்று கொள்ளலாம், முயற்சிக்கலாம், முன்னேறலாம் !

 

60 வயதில்  ????

 

வெல்வதற்கான வாய்ப்புகள் குறைவு;  நம்மை பொருளாதாரத்தில் பலவீனப்படுத்தும் !

 

25 வயதில் முயற்சிக்கவில்லையா ? கடந்து விட்டீர்களா ?

 

கவலையை விடுங்கள்; உங்கள் வயதுக்கேற்ற முதலீட்டினை செய்யுங்கள்.

 

வாழ்த்துக்கள்; வாழ்க வளமுடன்

எட்டுத்திக்கும் எட்டாம் அதிசயம் – Power of Compounding

எட்டுத்திக்கும் எட்டாம் அதிசயம் – கூட்டு வட்டி (Power Of Compounding)

கூடி வாழ்ந்தால் தான் கோடி நன்மை;
கூட்டு வட்டியினால் தான் கோடிகள் (கோடி ரூபாய்) சாத்தியம் !
“Compound interest is the eighth wonder of the world. He who understands it, earns it … he who doesn’t, pays it….”
உலகத்தின் எட்டாம் அதிசயம் “கூட்டு வட்டி – Compound Interest” என்றார் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் (Albert Einstein).
கூட்டு வட்டியின் பலனை பற்றி, நாம் நமது பள்ளிக்காலங்களில் படித்திருப்போம். நமது பள்ளிக்கல்வியில் கணித பாடத்தில் வட்டி விகிதம், கூட்டு வட்டி மற்றும் தனி வட்டி என்பது போன்ற வார்த்தைகளை பயன்படுத்தியிருப்போம். அதன் பலனை நாம் அறியவே, நமது பள்ளிகளில் (1990 களில்) அஞ்சலக சேமிப்பான “Sanchayika” திட்டம் மிகவும் பிரபலம். அது கூட்டு வட்டியின் மகிமையையே வெளிப்படுத்துகிறது. இவ்வாறு நமது பள்ளியிலும், கல்லூரியிலும் மற்றும் வேலை பார்க்கும் அலுவலகத்திலும் கூட இந்த கூட்டு வட்டி பற்றிய விஷயங்களை பயன்படுத்தியிருப்போம்; ஆனால் அது எழுத்து பூர்வமாகவே ! அந்த கூட்டு வட்டியின் தன்மை நம்மை எவ்விதத்திலும் மாற்றவில்லையே ! நாம் சற்று ஆழமாக சிந்தித்தால், இந்த கூட்டு வட்டியின் ரகசியத்தை அறியலாம்; அனுபவிக்கவும் செய்யலாம். இதை தான் ஒவ்வொரு வங்கிகளும் செய்கின்றன. பெருத்த முதலாளிகளை(RD, FD, Stocks) உருவாக்குவதும், கடன்கார ஏழைகளை(EMI, Loan) உருவாக்குவதும் இந்த கூட்டு வட்டியின் ரகசியம் !
கூட்டு வட்டி அப்படி என்ன சாதித்து விட போகிறது ?
நீங்கள் ஒரு வங்கியிலோ (அ) அஞ்சலக சேமிப்பிலோ, மாதம் ரூ.100 ஆக ஒரு வருடத்திற்கு சேமிக்கிறீர்கள் என்று வைத்து கொள்வோம். உங்களுக்கான வட்டி 8 % (மாத கூட்டு வட்டியில்)
ஒரு வருட முடிவில், உங்களுக்கு கிடைப்பது ரூ. 1253 /- (கூட்டு வட்டி)
நீங்கள் சேமித்த / முதலீடு செய்த மொத்த தொகை: ரூ. 1200 /-
நீங்கள் பெற்ற வருமானம் :   (1253-1200) = ரூ. 53 /-
அதாவது உங்களின் ஒவ்வொரு மாத 100 ரூபாயும், தங்களுக்கென்று, ரூ. 4.40 /- வருமானத்தை தந்துள்ளன.
இதை போல நீங்கள் 5 வருடங்கள் சேமிக்க முடிவு செய்தால், உங்களுக்கு கிடைக்க கூடிய மொத்த தொகை ரூ. 7397 /-  10 வருடங்களில் மொத்த தொகை ரூ. 18417 /-
5 வருடங்களில் வருமானம் ரூ. 1397 /-  அதாவது உங்களின் ஒவ்வொரு மாத 100 ரூபாயும்,  5 வருட முடிவில் ரூ. 23.30 /- ஐ உங்களுக்காக சம்பாதித்து கொடுத்துள்ளன.
10 வருடங்களில் உங்களின் வருமானம் ரூ. 6417 /- உங்களின் ஒவ்வொரு 100 ரூபாயும், முடிவில் ரூ. 53.50 /- சம்பாதித்து கொடுத்துள்ளன.
ஆக, கூட்டு வட்டியின் மூலம் உங்களின் ஒவ்வொரு ரூபாயும் உங்களுக்காக வேலை பார்த்து கணிசமான வருமானத்தை தந்துள்ளன. இதற்காக நீங்கள் எந்த மெனக்கெடுத்தும் வேலை செய்யவில்லை.
இதனையே, நீங்கள் ஒரு முறை மட்டும் (முதல் மாதம் மட்டும்) ரூ. 100 ஐ சேமித்து விட்டு போகிறீர்கள். உங்களுக்கு ஒரு வருடத்திற்கு பிறகு கிடைக்கும் மொத்த தொகை ரூ. 108,  5 வருடங்களில் ரூ. 149 /- 10 வருடங்களில் ரூ. 222 /-
இதனை நீங்கள் உங்கள் வீட்டில், ஏதேனும் ஒரு மூலையில்  ஒவ்வொரு மாதமும், 100 ரூ. வைத்திருந்தால், ஒரு வருட / 5 / 10 வருட முடிவில் உங்களுக்கு கிடைப்பதோ பழைய 100 ரூ. நோட்டுக்களும், சிறிது கறை படிந்த அழுக்குகளும் ! ஆகவே, கூட்டு வட்டியை பயன்படுத்துங்கள். உங்கள் மாத தவணைகளும்(EMI, Loan) இதன் மூலமே கணக்கிடப்படுகிறது என்பதனை மறக்க வேண்டாம்.
100 ரூபாயின் உழைப்பு :
100-rs.-compounding
இது தான் பணம், பணம் பண்ணும் ரகசியம். இதன் மூலமே பணக்காரர்களும், முதலாளிகளும் உருவாகிறார்கள்; விழிப்புணர்வு இல்லதாவர்களே ஏழைகளாகவும், கடனாளிகளாகவும் மாறுகிறார்கள். இந்த பூமியில் படைக்கப்பட்ட எல்லா மனிதர்களும், பொருளார ரீதியாக சமமாகவே படைக்கபட்டார்கள்; மனித இனத்தின் சிந்தனை  தான் ஏற்ற தாழ்வுகளை ஏற்படுத்துகிறது.
பத்து பேரை ஒருங்கிணைத்து, ஒரு நிறுவனத்தை உருவாக்கி அதன் வளர்ச்சியையும், கிடைக்கும் பலனையும் அனுபவிப்பது கூடி வாழ்ந்தால் தான் ! இதனை நமக்கு யாரும் சொல்லி கொடுக்க வேண்டியதில்லை. அதே போல தான் கூட்டு வட்டியும் !

இப்போதே நகருங்கள்… கூட்டு வட்டியின் Formula ஐ தேடி… பதிவிறக்கம் செய்யுங்கள் ஒரு வட்டி(Bank Interest App) விகித செயலியை…

சேமியுங்கள் / முதலீடு செய்யுங்கள் ஒரு 100 ரூபாயை…

உங்களுடைய பகிர்வுகளுக்கு:
 contact@varthagamadurai.com
–  நன்றி, வர்த்தக மதுரை