Tag Archives: Electric Vehicle

மின்சார வாகனப் பிரிவில் கவனம் செலுத்தி வரும் கிரீவ்ஸ் காட்டன் நிறுவனம்

மின்சார வாகனப் பிரிவில் கவனம் செலுத்தி வரும் கிரீவ்ஸ் காட்டன் நிறுவனம் 

Greaves Cotton Limited – Fundamental Analysis – Stocks

கடந்த 1859ம் ஆண்டு ஜேம்ஸ் கிரீவ்ஸ் மற்றும் ஜார்ஜ் காட்டன் ஆகிய இருவரால் துவங்கப்பட்ட நிறுவனம் தான் கிரீவ்ஸ் காட்டன்(Greaves Cotton). பொறியியல் மற்றும் உற்பத்தித் துறையில் உள்ள இந்நிறுவனம் 1947ம் ஆண்டு வாக்கில் இந்தியத் தொழிலதிபரான திரு. லாலா கரம் சந்த் தப்பார் (தப்பார் குழுமம்) அவர்களால் வாங்கப்பட்டது. 1950ம் ஆண்டில் கிரீவ்ஸ் காட்டன் பொது நிறுவனமாக(Public Ltd) பதிவு செய்யப்பட்டது. தற்போது மகாராஷ்டிர மாநிலம் மும்பையை தலைமையிடமாக கொண்டு நிறுவனம் தனது தொழிலை செய்து வருகிறது.

நிறுவனத்தின் தலைவராக திரு. கரண் தப்பார் உள்ளார். வாகனங்களுக்கான இன்ஜின்கள், உதிரி பாகங்கள், வாகன கட்டுப்பாட்டு அமைப்புகள், பண்ணை உபகரணங்கள், துணை சக்தி(Auxiliary Power) மற்றும் மின்சார வாகனங்களை தயாரித்து விற்பனையில் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாயில் இன்ஜின் பிரிவு 62 சதவீதத்தையும், மின்சார வாகனப் பிரிவு 30.5 சதவீதத்தையும் கொண்டிருப்பது கவனிக்கத்தக்கது. 

வருவாயில் உள்நாட்டு பங்களிப்பு 97 சதவீதமாகவும், ஏற்றுமதி 3 சதவீத பங்களிப்பையும் கொண்டுள்ளது. நிறுவனத்தின் துணை நிறுவனங்களாக Greaves Electric Mobility (இரு மற்றும் மூன்று சக்கர மின்சார வாகன உற்பத்தி), Greaves Retail(உதிரி பாகங்கள், மின்சார வாகன ஏற்றுமதி, பராமரிப்பு), Greaves Engineering(எரிபொருளுக்கான தீர்வு, இயக்க கட்டுப்பாட்டு அமைப்புகள், இன்ஜின் பிரிவு, ஜென்செட்டுகள் மற்றும் பம்பு செட்டுகள்), Greaves Technologies(பொறியியல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, டிஜிட்டல் சேவைகள்) மற்றும் Greaves Finance(மின்சார வாங்கனங்களுக்கான நிதி சேவைகள்) ஆகியவை உள்ளன.  

விவசாயம், கட்டுமானம், சக்தி மற்றும் பிற தொழிற்துறைக்கு தேவையான பொருட்களையும் உற்பத்தி செய்து விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. நிறுவனத்திற்கு நாடு முழுவதும் சுமார் 6500கும் மேற்பட்ட சில்லறை விற்பனை நிலையங்களும், 350க்கும் மேற்பட்ட விநியோகச் சேவைகளும்(Dealers) உள்ளது. உதிரிப் பாகங்களுக்கான பிரிவில் நாடு முழுவதும் சுமார் 400க்கும் மேற்பட்ட பெரிய மற்றும் 6000க்கும் மேற்பட்ட சிறிய சில்லறை விற்பனை நிலையங்களையும் இந்நிறுவனம் கொண்டுள்ளது.

நிறுவனத்தின் தயாரிப்பு சேவை உள்நாட்டில் மட்டுமில்லாமல் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியனில் முக்கிய பங்கை கொண்டுள்ளது. நிறுவனம் இந்திய குழுமத்தால் கையகப்படுத்தப்பட்டிருந்தாலும், இன்றும் அனுபவம் கொண்ட பன்னாட்டு நிறுவனங்கள் ஒப்பந்த அடிப்படையில் மற்றும் திறமையான தலைமைத்துவத்தை கொண்டு இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

மின்சார வாகனப் பிரிவில் இரு மற்றும் மூன்று சக்கர வாகனங்களை தயாரித்து விற்பனை செய்து வரும் நிறுவனம் இப்பிரிவில் இந்திய அளவில் பெரும்பான்மையான பங்களிப்பை தன்னகத்தே கொண்டு ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மின்சார வாகனங்களில் மூன்று முக்கிய பிரிவுகளில் பிராண்டுகளை உற்பத்தி செய்து(Ampere, ele, Greaves Eltra) இந்நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இரு சக்கர மின்னணு வாகனப் பிரிவில் 6 வகைகளையும், மூன்று சக்கர மின்னணு வாகனப் பிரிவில் 10க்கும் மேற்பட்ட வகைகளிலும் உள்ளன.

நிறுவனத்தின் கீழ் பல பிராண்டு உதிரி பாகங்கள், மின்சார வாகனங்களுக்கான உதிரி பாகங்கள், பேட்டரிகள், சார்ஜிங், பிற கருவிகள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனையில் உள்ளது. கோவையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும், ‘Ampere Vehicles’ நிறுவனத்தில் கிரீவ்ஸ் காட்டன் நிறுவனம் 81 சதவீத பங்குகளை வாங்கி கையகப்படுத்தியுள்ளது. 

‘E-Rickshaw’ பிரிவில் பெஸ்ட்வே நிறுவனத்தின் 74 சதவீத பங்குகளை கையகப்படுத்தியுள்ளது கிரீவ்ஸ் காட்டன். இது போக வாகனங்களுக்கான இயக்க கட்டுப்பாட்டு(Motion Control Systems) பிரிவில் தொழில் செய்து வரும் எக்சல் கண்ட்ரோலிங்கேஜ்(Excel Controlinkage Pvt Ltd) நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும், எம்.எல்.ஆர். ஆட்டோ லிமிடெட் நிறுவனத்தின் 26 சதவீத பங்குகளையும் வாங்கியுள்ளது. ஐக்கிய ராச்சியத்தை(United Kingdom) சேர்ந்த ஈட்டா கிரீன் பவர் நிறுவனத்துடன் இணைந்து எலக்ட்ரிக் டிரைவ் சிஸ்டம் வடிவமைப்பில் ஈடுபட்டு வருகிறது.

மஹிந்திரா நிறுவனம் காட்டன் கிரீவ்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பிஎஸ்.6 வாகனப் பிரிவுக்கான பவர் ட்ரெயின்(Powertrain) தீர்வுகளை செய்து வருகிறது. மூன்று மற்றும் நான்கு சக்கர வணிக வாகனங்களுக்கான இன்ஜின்களை(Petrol, Diesel, CNG/LPG) உற்பத்தி செய்து விற்பனையிலும் காட்டன் கிரீவ்ஸ் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

மின்சார வாகனப் பிரிவில் தனது விற்பனையை அதிகரிக்க சவுதியை சேர்ந்த ஏ.எல்.ஜே(ALJ) குழும நிறுவனத்துடன் இணைந்து மேம்பாடுகளை செய்து வருகிறது. கடந்த 1945ம் ஆண்டு துவங்கப்பட்ட ALJ(Abdul Latif Jameel) நிறுவனம் வாகனப் பிரிவில் 30க்கும் மேற்பட்ட நாடுகளில் தனது தொழிலை செய்து வருகிறது.   

மூன்று சக்கர வாகனப் பிரிவில் உலகின் சிறந்த பிராண்டாக காணப்படும், ‘Piaggio’ நிறுவனம் ஐரோப்பாவில் பெரும்பான்மையான சந்தை பங்களிப்பை கொண்டுள்ளது. இந்நிறுவனத்திற்கு தேவையான இன்ஜின் மற்றும் பிற உதிரி பாகங்களை கடந்த 1998ம் வருடம் முதல் கிரீவ்ஸ் காட்டன் செய்து வழங்கி வருகிறது. சொல்லப்பட்ட வருடத்தில் பியாஜியோ – கிரீவ்ஸ் கூட்டு நிறுவனங்களாக செயல்பட்டு இந்தியாவில் மூன்று சக்கர வாகனங்களை விற்பனை செய்து வந்தது. பின்னர் 2001ம் ஆண்டு வாக்கில் பியாஜியோ நிறுவனத்தின் தலைமைக் குழும நிறுவனமான P&C முழு பங்குகளையும் வாங்கி கொண்டது.

நிறுவனத்தின் முதலீட்டை பொறுத்தவரை, கடந்த 2021ம் ஆண்டில் ஆண்டுக்கு ஒரு லட்சம் மின்சார வாகனங்களை தயாரிக்கும் இலக்கை கொண்டு, தமிழ்நாட்டில் அடுத்த பத்து வருடங்களில் சுமார் 700 கோடி ரூபாய் முதலீட்டை செய்ய உள்ளதாக கிரீவ்ஸ் காட்டன், தமிழ்நாடு அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. மின்சார வாகன உற்பத்திக்காக நாடு முழுவதும் ஆறு ஆலைகளை கொண்டுள்ளது இந்நிறுவனம்.

நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக மொத்த வருவாயில் 1.6 சதவீதம் வரை செலவிடப்படுகிறது. மின்சார வாகனங்கள் வாங்குவதற்கான கடன் வழங்கும் சேவையை வாடிக்கையாளர்களுக்கு கிரீவ்ஸ் பைனான்ஸ்(Greaves Finance) நிறுவனம் மூலம் அளிக்கப்பட்டு வருகிறது.

கிரீவ்ஸ் காட்டன் நிறுவனத்தின் நிதிநிலையை பொறுத்தவரை இதன் சந்தை மூலதன மதிப்பு ரூ.3,830 கோடி. நிறுவனத்திற்கு கடன் எதுவும் பெரிதாக இல்லை. வட்டி பாதுகாப்பு விகிதம்(ICR) 16 மடங்குகளிலும், நிறுவனர்களின் பங்களிப்பு 56 சதவீதமாகவும் உள்ளது. 

கடந்த 2020-21 மற்றும் 2021-22ம் நிதியாண்டு முறையே ரூ.19 கோடி மற்றும் ரூ.35 கோடியை நிறுவனம் நட்டமாக சொல்லியுள்ளது. 2022-23ம் நிதியாண்டில் நிறுவனத்தின் வருவாய் 2,699 கோடி ரூபாயாகவும், செலவினம் ரூ.2,573 கோடியாகவும் சொல்லப்பட்டுள்ளது. இயக்க லாப விகிதம் 4 சதவீதமாக உள்ளது.

சொல்லப்பட்ட நிதியாண்டில் நிறுவனம் 70 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. எனினும் கடந்த நான்கு காலாண்டுகளில் டிசம்பர் 2023 காலாண்டை தவிர்த்து மற்ற மூன்று காலாண்டுகளிலும் நிறுவனம் நட்டத்தை சந்தித்துள்ளது. இதற்கு காரணமாக சமீபத்தில் ஏற்பட்ட நிதிச் செலவின அதிகரிப்பு மற்றும் மின்சார வாகன மானியத்தில் அரசுக்கு செலுத்த வேண்டிய அபாரதத் தொகையும் அடங்கும்.  

கடந்த சில வருடங்களாக இந்நிறுவனம் மின்சார வாகன உற்பத்தி மற்றும் மேம்பாட்டில் கவனம் செலுத்தி வருவதால், முதலீடும் அது சார்ந்த செலவினமும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக சந்தையிலும் இந்தப் பங்கின் விலை அதிக ஏற்ற-இறக்கத்தை சந்தித்து வருகிறது. நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு செப்டம்பர் 2023 காலத்தின் படி ரூ.1,328 கோடி என சொல்லப்பட்டுள்ளது. 

2022-23ம் நிதியாண்டில் என்ஜின் பிரிவு மூலம் நிறுவனத்திற்கு ரூ.1,425 கோடியும், மின்சார வாகனப் பிரிவின் மூலம் ரூ.1,124 கோடியும், பிற விற்பனை மூலம் 150 கோடி ரூபாயும் வருவாயாக கிடைத்துள்ளது. இருப்பினும் வட்டி மற்றும் வரிக்கு முந்தைய லாபத்தில்(PBIT) இன்ஜின் பிரிவு 165 கோடி ரூபாயையும், மின்சார வாகனப் பிரிவு ஒரு கோடி ரூபாயையும் நிறுவனம் பெற்றுள்ளது. 

கடன்-பங்கு விகிதம் 0.06 மடங்கு, வட்டி பாதுகாப்பு விகிதம் மற்றும் இருப்புநிலை கையிருப்பு தொகை இந்நிறுவனத்திற்கு சாதகமாக இருந்தாலும், மின்னணு வாகனப் பிரிவில் இந்நிறுவனம் செய்த முதலீடு, அதன் முறிவு புள்ளியை(Breakeven) கடக்கும் வரை நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கையில் அதிக மாறுபாடுகளை காணலாம்.

கவனிக்க: முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கும் முன் தகுந்த நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் முன்னிலையில் தங்களது முதலீட்டு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலே சொன்ன தகவல்கள் பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வுக்கான கற்றல் மட்டுமே.  

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

மின்னணு வாகனங்கள் – வாய்ப்புகளும், சவால்களும் – பங்குச்சந்தை பகுப்பாய்வு

மின்னணு வாகனங்கள் – வாய்ப்புகளும், சவால்களும் – பங்குச்சந்தை பகுப்பாய்வு 

EV – Opportunities & Challenges – Fundamental Aspect

தொழில்நுட்ப உலகில் தனிநபர் ஒவ்வொருக்கும் கருத்து வேறுபாடுகள் உண்டு. சிலர் அறிவியல் முன்னேற்றத்தில் விருப்பம் காட்டுவதில்லை. மற்ற சிலரோ அறிவியலின் ஏணிப்படியில் நடைபோட்டு கொண்டு தான் இருக்கின்றனர். மனிதனின் தேவைகள் இருக்கும் வரை அதற்கான வசதிகளை புதுமையாக கொண்டு வருவதில் அறிவியல் முன்னிலை வகிக்கிறது.

மின்னணு வாகனங்கள் மற்றும் 5 ஜி தொழில்நுட்ப பயன்பாட்டில் முழுமை பெறும் போது, மனித அறிவியல் வாழ்வில் அது மேம்பட்ட நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இதுவரை இவ்வுலகம் பார்த்திராத தொழில்நுட்ப ஆளுமைகள் இருக்கக்கூடும் எனவும் சொல்லப்படுகிறது.

அந்த வகையில், சமீபத்திய வருடங்கள் மின்னணு வாகனம் சார்ந்த விஷயங்களில் முக்கியத்துவம் பெறுகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்து கொள்வது, நடப்பில் உள்ள எரிபொருட்களுக்கான மாற்றம், மேம்பட்ட ஆற்றல் சேமிப்பை உருவாக்குதல் என அதன் தடம் நீண்டு கொண்டிருக்கிறது.

வாகனங்களுக்கான அரசு கொள்கைகளும் மாற்றமடைந்து வருகிறது. எந்தவொரு நிகழ்விலும் சாதகமான தன்மைகள் மட்டுமே இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. அவ்வாறு ஒரு முதலீட்டாளராக நாம் காணும் போது, மின்னணு வாகன(Electric Vehicle) பிரிவில் வாய்ப்புகளும், சவால்களும் சில உள்ளன. இதனை நாம் பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வு நிகழ்வாகவும் பார்க்கலாம்.

பொதுவாக மின்னணு வாகனங்கள் எனும் போது சாலை வழி, ரயில், கப்பல்கள், மின் விமானம் மற்றும் மின்சார விண்கலம் என பலவகைகளில் பயன்பாடு  இருக்கலாம். மின்னணு வாகனங்களுக்கு தேவையான மின் ஆதாரங்கள் – உள் சேமிப்பு(Onboard Storage), ஜெனரேட்டர்கள், மின் உற்பத்தி ஆலைகள் மற்றும் கலப்பின வழிமுறை(Hybrid).

வாய்ப்புகள் பல…

  • குறைந்த கார்பன் அளவு
  • மீள்நிரப்பு செலவு குறைவு (Recharging Cost)
  • ஆற்றல் திறன்
  • குறைந்த சத்தம் மற்றும் காற்று மாசுபாடு
  • எளிய வழிமுறை (Simple Mechanism)

சவால்கள் சில…

  • சுற்றுச்சூழல் பாதுகாப்பு
  • அணுசக்தி மற்றும் புதைபடிவ ஆற்றல்(Fossil Energy)
  • கனரக வாகன தயாரிப்பில் உள்ள இடர்பாடு
  • மின்சார உற்பத்தி மற்றும் செலவினம்
  • நீண்ட பயணத்துக்கான மீள்நிரப்பு (Longer Recharge Time)
  • பேட்டரிகளை மாற்றுதல் – மறுசுழற்சி

மின்சார வாகனங்கள் என்ற வகையில் காணும் போது, பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் ஏதும் உள்ளதா, மின் ஆதாரங்கள் மற்றும் பேட்டரி தொழில்நுட்பத்தை கொண்டிருக்கும் நிறுவனங்களை கண்டறிவது, பேட்டரிக்கு தேவையான மூலப்பொருட்கள் என்னென்ன, அதனை தயார் செய்யும் நிறுவனங்கள் எங்கே உள்ளது என்ற அடிப்படை கேள்விகள் ஒரு முதலீட்டாளருக்கு தேவையான விஷயமாகும்.

நடப்பில் டாட்டா மோட்டார்ஸ், மஹிந்திரா, அசோக் லேலண்ட் நிறுவனங்கள் பெரு வாகன பிரிவில் மின்னணு வாகனங்களை தயாரித்து வருகிறது. இருசக்கர வாகன பிரிவில் டி.வி.எஸ். மோட்டார்ஸ் மற்றும் பஜாஜ் நிறுவனங்களும் உள்ளது. பேட்டரி தயாரிப்பு என பார்க்கும் போது அமரராஜா பேட்டரிஸ்(Amararaja Batteries), எக்சைட் இண்டஸ்ட்ரீஸ்(Exide), இஸ்ரோ, பெல் நிறுவனங்கள் பங்காற்றுகிறது.

மூலப்பொருட்களில் மாங்கனீசு, அலுமினியம், காப்பர், ஜிங்க், அலாய், லித்தியம் மற்றும் கிராப்பைட் போன்ற பிரிவில் பல நிறுவனங்கள் உள்ளன. இவை இரும்பு அல்லாத உலோகங்கள்(Non-ferrous Metals) என கூறப்படுகிறது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

2020ம் ஆண்டுக்கு பிறகான புதிய முதலீட்டு வாய்ப்புகளும், சவால்களும் – நிகழ்ச்சி நிரல்

2020ம் ஆண்டுக்கு பிறகான புதிய முதலீட்டு வாய்ப்புகளும், சவால்களும் – நிகழ்ச்சி நிரல் 

EV – Road for Automation – Challenges & Opportunities on Stocks

வரக்கூடிய காலகட்டங்கள் தொழில் ரீதியாகவும், வேலைகளிலும் புதிய சவால்களை எதிர்நோக்கும் வகையில் அமைய உள்ளது. நடப்பில் வெறும் கோவிட்-19(Coronavirus) தாக்கமாக மட்டுமில்லாமல், உலகளவில் ஒரு மிகப்பெரிய மாற்றத்திற்கு தயாராகும் நிலையில் உள்ளது.

மின்சார வாகனங்கள், தானியங்கி புரட்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, புதிய தொழில் கொள்கைகள் மற்றும் மனிதர்கள் என மாற்றம் நடைபெற உள்ளது. புதிய தொழில்நுட்பத்தின் குப்பைகளை எந்த நாடுகள் ஏற்று கொள்ளப்போகிறது, எவையெல்லாம் தொழில்நுட்ப அதிகாரத்தை ஆரோக்கியமாக பயன்படுத்த உள்ளது.

முதலீடுகள் மற்றும் அதனை சார்ந்த புதிய வாய்ப்புகளை கண்டறிதல், உண்மையான தொழிலில் முதலீடு செய்வதன் அனுகூலம் என பல விஷயங்களை விவாதிக்க உள்ளோம். மின்சார வாகனங்களுக்கான மின்கலன்களை(Batteries) அமைக்கும் நிறுவனங்கள் மற்றும் அவற்றின் பங்குச்சந்தை வாய்ப்புகள் ஆகியவற்றை பற்றியும் நாம் காண இருக்கிறோம்.

EV - Webinar Varthaga Madurai

பரஸ்பர நிதிகளில் காணப்படும் கடன் பத்திரங்கள் மற்றும் பங்கு சார்ந்த முதலீடுகளை எளிய முறையில் புரிந்து கொள்ளலாம். மேலும் அவற்றில் உள்ள சாதக – பாதகங்களும் இந்நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட உள்ளது. பணத்தை இரட்டிப்பாக்கும் எளிய பணவளக்கலைகள் உங்களுக்காக காத்திருக்கிறது.

வாருங்கள், இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை அன்று – இணைய வழியாக தொடர்பு கொள்வோம். பதிவு கட்டணம் – ரூ. 100 மட்டும். உங்களுடைய பதிவை உறுதி செய்து கொள்ள..

https://imjo.in/9XSM9R

பதிவை உறுதி செய்தவுடன், உங்களுக்கான நிகழ்ச்சி நிரலின் இணைப்பு மின்னஞ்சல் மற்றும் கைபேசிக்கு அனுப்பி வைக்கப்படும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com