நான் எவ்வளவு தொகைக்கு டேர்ம் இன்சூரன்ஸ் எடுக்க வேண்டும் ?
How much Term insurance should I take out ?
பொதுவாக நம்மில் பலர் காப்பீட்டையும், முதலீட்டையும் போட்டு குழப்பி கொள்கின்றனர். காப்பீடு(Insurance) என்பது எதிர்பாராது ஏற்படும் நிகழ்வு அல்லது விபத்துகளினால் ஏற்படும் பொருளாதார இழப்புகளை ஈடுகட்டுவதற்கு தான். காப்பீட்டுக்காக நீங்கள் கட்டிய பணம், எந்த எதிர்பாராத நிகழ்வும் நடைபெறாமல் இருந்தால் அல்லது முதிர்வு தொகை என ஒரு தொகையை நீங்கள் பெறும் நிலையில், அது சரியான காப்பீடாக கருதப்படாது.
உதாரணமாக நீங்கள் உங்களது வாகனம், வீடு மற்றும் தொழிலுக்கு செய்யும் காப்பீட்டு தொகைக்கு முதிர்வு தொகை என்று எதுவும் இல்லை. மேலே சொன்னவற்றில் நமக்கு பொருளாதார இழப்பு ஏற்பட்டால் மட்டுமே காப்பீட்டின் மூலம் இழப்பு தொகை கிடைக்கப்பெறும். அதனை போல தான் மனித உயிருக்கும்.
உங்களது வாகனம் தொலைந்து விட்டால் அல்லது விபத்தால் சேதம் அடைந்திருந்தால், நீங்கள் காப்பீடு செய்திருக்கும் நிலையில் அதற்கான இழப்பீட்டு தொகையை கோரலாம். நான் வருடாவருடம் வாகன காப்பீட்டிற்கு பணம் கட்டுகிறேன், முதிர்வில் எனக்கு பணம் தாருங்கள் என கேட்க முடியாது. நீங்கள் மற்றொருவரின் வாகனத்தை எதிர்பாராது சேதப்படுத்தி விட்டாலும், அவருக்கான இழப்பு தொகைக்கு உங்கள் காப்பீடு தான் உதவக்கூடும்.
முதலீடு(Investing) என்பது இருவகை தன்மைகளை கொண்டது. உங்கள் முதலீட்டின் மூலம் தொடர் வருவாய்(Cash Flow) கிடைக்கலாம். அதே வேளையில் பின்னொரு காலத்தில் அந்த முதலீட்டை நீங்கள் விற்கும் போதும் அதற்கான மூலதன ஆதாயம்(Capital Gains – Appreciation) கிடைக்கப்பெறும். உதாரணமாக வீட்டு மனை, வணிக வளாகங்கள், பங்குகள் மற்றும் தொழில்கள். தங்கம் ஒரு முதலீட்டு சாதனம் அல்ல.
டேர்ம் இன்சூரன்ஸ்(Term Insurance) என்பது பொதுவாக நீங்கள் உங்கள் வாகனம், வீடு அல்லது தொழிலுக்கு காப்பீடு எடுப்பது போல. இது ஒரு சிறந்த காப்பீடு திட்டம் எனலாம். டேர்ம் இன்சூரன்ஸ் எடுக்கும் ஒருவருக்கு ஏதேனும் உயிரிழப்பு ஏற்பட்டால், அதன் காரணமாக அவர் குடும்பத்திற்கு ஏற்படும் பொருளாதார இழப்புகளை சரிசெய்ய உதவும். இங்கே இழப்பு ஏற்பட்டால் மட்டுமே அதற்குரிய தொகை கிடைக்கும், முதிர்வு தொகை என்பது அல்ல.
டேர்ம் காப்பீட்டை பொறுத்தவரை இளம் வயதில் எடுத்து கொள்வது மிக நன்று. ஏனெனில் இளம் வயதில் தான் அதற்கான பிரீமிய தொகை மிக குறைவு. டேர்ம் காப்பீட்டுக்கான காலத்தை நீங்களே நிர்ணயித்து கொள்ளலாம். எனினும் உங்களது ஓய்வு காலம் வரும் வரை எடுத்து வைத்து கொள்வது நல்லது. நீங்கள் ஆரம்ப நிலையில் கட்டிய தொகை தான் கடைசி வரை தொடரும். எனவே இளமை காலத்தில் டேர்ம் இன்சூரன்ஸ் எடுத்து வைத்து கொள்வது சிறந்தது. பொதுவாக டேர்ம் இன்சூரன்ஸ் என்பது வருமானம் ஈட்டும் ஒருவர் அல்லது தனிநபர் ஒருவரை சார்ந்திருக்கும் குடும்பம், அவருக்கு தான் காப்பீடு தேவை. வருவாய் ஈட்டும் அந்த நபருக்கு எதிர்காலத்தில் ஏதேனும் உயிரிழப்பு ஏற்பட்டு, அதனால் நம்பியிருக்கும் குடும்பம் பொருளாதாரம் சார்ந்து பாதிக்கப்படலாம். இதனை தவிர்க்க அந்த நபருக்கு டேர்ம் இன்சூரன்ஸ் எடுத்து வைக்க வேண்டும்.
எவ்வளவு தொகைக்கு டேர்ம் இன்சூரன்ஸ் எடுக்க வேண்டும் ?
மிகக்குறைந்த பிரீமிய தொகையில் அதிக மதிப்பிலான காப்பீடு செய்ய முடியுமென்றால், அது டேர்ம் இன்சூரன்ஸ் மட்டுமே. டேர்ம் காப்பீட்டுக்கான தொகை தனிநபர் ஒருவரின் வருமானத்திற்கு ஏற்ப மாறுபடும். இருப்பினும் காப்பீடு நிறுவனங்கள் இதற்கான சிறப்பு கணக்கீடுகளை கூறியுள்ளது. இயல்பு வாழ்க்கையில் உள்ள அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் சில கணக்கீடுகள் டேர்ம் பாலிசிக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
கணக்கீடு 1:
- உங்களுடைய மாத வருமானத்தை ஆண்டு கணக்கில் எடுத்து கொள்ளுங்கள் (A).
- உங்களது தற்போதைய கடன்கள் மற்றும் உங்கள் குழந்தைகளின் எதிர்கால கல்வி செலவுகள், திருமணம் ஆகியவற்றை கணக்கில் எடுத்து கொள்ளுங்கள் (B).
- உங்களுடைய தற்போதைய சேமிப்பு / முதலீட்டு கையிருப்பை குறித்து கொள்ளவும் (C).
Insurance Coverage = A + B – C X 15
கணக்கீடு 2:
Human Life Value (HLV) = (Annual Income – Self Expenses) ÷ Bank Interest Rate %
- ஒரு வருடத்திற்கான உங்களது சொந்த செலவுகளை (உங்களின் தனிப்பட்ட செலவுகள் மட்டுமே), நீங்கள் சம்பாதிக்கும் ஆண்டு வருமானத்தில் கழித்து கொள்ளுங்கள்.
- கிடைக்கப்பெறும் தொகையை, வங்கி வட்டி விகிதத்தில் வகுத்து கொள்ளுங்கள்.
- வங்கி வட்டி விகிதம்(Bank Interest Rate) எனும் போது, ஒரு வருடத்திற்கான வைப்பு தொகை விகிதத்தை எடுத்து கொள்ளலாம். உதாரணமாக ஒரு வருடத்திற்கு 7 சதவீதம்.
உதாரணம்:
ராமு, தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். அவருடைய ஆண்டு வருவாய் ரூ. 6 லட்சம். அவரை சார்ந்து மனைவி மற்றும் இரு குழந்தைகள் உள்ளனர். 30 வயதாகும் ராமு, தனது தனிப்பட்ட செலவுக்காக மாத வருமானத்தில் 5000 ரூபாய் (மொபைல் ரீசார்ஜ், போக்குவரத்து, டீ மற்றும் வடை, சினிமா, வெளியூர் பயணம்) எடுத்து கொள்வார். ராமுவுக்கு நீண்டகால கடன் (வீட்டுக்கடன், வாகன கடன்) மற்றும் முதலீட்டு செலவாக (குழந்தைகள் மேற்படிப்பு மற்றும் திருமணம்) தனது மாத வருமானத்தில் ரூ. 30,000 செலவாகிறது. சேமிப்பு மற்றும் முதலீடாக ரூ. 1 லட்சம் (வங்கி டெபாசிட் மற்றும் பங்குகள்) உள்ளன.
கணக்கீடு 1ன் படி, ராமு எடுக்க வேண்டிய டேர்ம் இன்சூரன்ஸ் தொகை:
Insurance Coverage = ரூ. 6 லட்சம் (A +B) – ரூ. 1 லட்சம் (C) X 15 = ரூ. 75 லட்சம்
இங்கே அவரது கடன் மற்றும் எதிர்கால நிதி இலக்குகளுக்கான முதலீட்டு செலவு, மாத வருவாயிலிருந்து சென்று கொண்டிருக்கிறது. எனவே வருமானத்தை தாண்டிய கடன் அல்லது செலவுகள் எதுவுமில்லை.
கணக்கீடு 2ன் படி அவர் எடுக்க வேண்டிய இன்சூரன்ஸ் தொகை:
HLV = (ரூ. 6 லட்சம் – ரூ. 60,000 ) / .07 = ரூ. 77 லட்சம்
மேலே சொன்ன இரண்டு கணக்கீடுகளில் எந்த தொகை பெரிதாக உள்ளதோ, அதுவே நீங்கள் எடுக்க வேண்டிய டேர்ம் காப்பீடு தொகை.
இந்த இரு கணக்கீடுகள் உங்களுக்கு புரியவில்லையா ?
சுருக்கமாக, உங்களது ஆண்டு வருமானத்தை போல 15-20 மடங்கில் காப்பீடு தொகையை எடுத்து கொள்வது நல்லது.
காப்பீட்டையும், முதலீட்டையும் ஒருசேர செய்கிறேன் என குழப்பி கொள்ள வேண்டாம். காப்பீடு இழப்புகளுக்கு, முதலீடு இலக்குகளுக்கு !
குழந்தைகளுக்கு காப்பீடு திட்டத்தை எடுக்கிறேன் என தவறான நிதி செயல்களை செய்ய வேண்டும். உங்கள் குழந்தைகளுக்கு தேவை காப்பீடு அல்ல, நிதி இலக்குகளுக்கான முதலீடு மட்டுமே. அவர்களின் காப்பீடு தொகையை சார்ந்து நீங்கள் இல்லை. உங்களது வருமானத்தை எதிர்பார்த்து தான் அவர்களது எதிர்கால செலவு உள்ளது.
வரிச்சலுகை பெறுகிறேன் என்று தவறான திட்டத்தில் பணத்தை செலவழிக்காதீர்கள். வரும் முன் காப்பதே நலம், வந்த பின் யோசிக்க நேரமில்லை. அன்றைய நாளில் அவசரத்திற்கு பணம் மட்டுமே தேவையாக இருக்கும்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை