Tag Archives: term insurance

டேர்ம் இன்சூரன்ஸ்க்கான காப்பீட்டு அளவு (HLV) எவ்வாறு கணக்கிடப்படுகிறது ?

டேர்ம் இன்சூரன்ஸ்க்கான காப்பீட்டு அளவு (HLV) எவ்வாறு கணக்கிடப்படுகிறது ?

How is the Sum assured(HLV) calculated for Term Insurance Plans ?

நாட்டில் இருபதுக்கும் மேற்பட்ட ஆயுள் காப்பீட்டு(Life Insurance) நிறுவனங்கள் தற்போது உள்ளன. எல்.ஐ.சி. இந்தியா நிறுவனம் தவிர அனைத்து ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களும் தனியார் நிறுவனங்களாகும். இன்றைய பொருளாதார வாழ்வில் காப்பீட்டின் தேவை குறித்து பலர் புரிந்து கொண்டிருந்தாலும், 2022ம் ஆண்டின் பொருளாதார ஆய்வறிக்கை படி, 100ல் மூன்று பேர் மட்டுமே காப்பீட்டை எடுத்துள்ளனர். இந்த மூன்று பேர்களும் தங்களது வருமானத்திற்கு ஏற்ப(Income Replacement) காப்பீட்டு அளவை எடுத்துள்ளார்களா என கேட்டால், அது தான் இல்லை.

நம்மில் பெரும்பாலோர் காப்பீட்டு திட்டத்தை சேமிப்பாக கருதுவதால் தான், தங்களது வருமானத்தை போல பல மடங்குகளில் காப்பீட்டு அளவை தேர்ந்தெடுப்பதில்லை. குறைந்த தொகையில்(Premium) அதிக காப்பீட்டு அளவை ஏற்படுத்த இன்றைய நிலையில் டேர்ம் காப்பீட்டு திட்டத்தை தவிர்த்து வேறு எந்த திட்டமும் அமையவில்லை எனலாம். 

காப்பீடு என்பது ஒரு சேமிப்பல்ல, அது ஒரு செலவு. நமது வாகனத்திற்கு, வீட்டிற்கு, தொழிலுக்கு எடுக்கப்படும் காப்பீட்டை போல தான் டேர்ம் காப்பீடு திட்டமும். “நான் கட்டிய ப்ரீமியத்தொகைக்கு முடிவில் என்ன கொடுப்பீர்கள் என டேர்ம் காப்பீட்டை நீங்கள் கேட்டால், நீங்கள் இல்லாத நிலையில் உங்களது வருமானத்திற்கு மாற்றாக உங்களது குடும்பத்தை பொருளாதார ரீதியாக நான் பாதுகாப்பேன்” என்பது தான்.

டேர்ம் இன்சூரன்ஸ்(Term Insurance) நாம் நினைப்பது போல அவ்வளவு எளிதில் கிடைக்கப்பெறுவதில்லை. கொரோனா பெருந்தொற்றுக்கு பின்பு டேர்ம் காப்பீடு திட்டத்தின் ப்ரீமியத்தொகையும் அதிகரித்து விட்டது, டேர்ம் காப்பீட்டை பெறுவதற்கான நிபந்தனைகளும் கடுமையாக்கப்பட்டது. இருப்பினும், அதன் தேவையை நாம் புரிந்து கொண்டு நமது வருமானத்திற்கு ஏற்றாற் போல, தேவையான காப்பீட்டு அளவை பெறுவது அவசியம். 

சமீபத்திய தரவின் படி, ஆயுள் காப்பீட்டை பெறுவோரில் மூன்றில் ஒருவர் மட்டுமே டேர்ம் காப்பீட்டு திட்டத்தை எடுத்துள்ளனர். டேர்ம் காப்பீடு திட்டத்தை எந்தளவில் பெறலாம் என்பதை காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையத்தின்(IRDAI) ஒப்புதல் படி, இன்சூரன்ஸ் நிறுவனங்கள் நிர்ணயித்துள்ளது. பொதுவாக நமது வயது மற்றும் ஆண்டு வருமானத்தின் அடிப்படையில் இது அமையும்.

வருமானத்திற்கான மாற்று முறை – Human Life Value(HLV):

ஒரு தனிநபரின் எதிர்கால வருவாயின் தற்போதைய மதிப்பு தான் HLV(Human Life Value). எதிர்காலத்தில் ஒரு தனிநபர் ஆண்டுக்கு எவ்வளவு சம்பாதிக்கலாம் மற்றும் அவர் இல்லாத காலத்தில் தனது குடும்பத்தில் உள்ளோரை பொருளாதாரம் சார்ந்து பாதுகாக்க தேவையான தொகையை இன்றைய மதிப்பில் கணக்கிட வேண்டும். 

HLV = (1 + Investment rate) / (1 + Increment or Income growth rate) – 1

Alternative and Simple in terms, HLV = (Annual Income of an Individual) / (ROI in the Market)

*ROI – Rate of Interest 

இதனை சுருக்கமாக, அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் ஒருவரின் தற்போதைய ஆண்டு வருமானத்தின் மடங்குகளில் சொல்லப்படுகிறது. இதனை டேர்ம் காப்பீட்டை வழங்கும் நிறுவனங்களும் தங்களது தரவு அறிக்கையில் வெளியிட்டுள்ளது. மடங்குகளின் எண்ணிக்கை நிறுவனத்திற்கு நிறுவனம் மாறுபடலாம். ஆனால் பெரும்பாலும் அவை ஒத்த அளவில் தான் இருந்துள்ளது. 

டேர்ம் காப்பீட்டு அளவை பெற தேவையான இரண்டு முக்கிய காரணிகள்:

  • ஒருவரின் வயது 
  • ஆண்டு வருமானம் (சில நேரங்களில் கடந்த மூன்று ஆண்டுகளின் சராசரி வருமானம்)
  • இதர காரணிகள் – கடனையும் சேர்த்து ஆகும் ஆண்டு செலவு, முன்னர் எடுத்திருக்கும் காப்பீட்டின் அளவு(Existing Life Cover)

உதாரணத்திற்கு 30 வயது நிரம்பிய குமார் என்பவர் ஆண்டுக்கு 8 லட்ச ரூபாயை வருமானமாக கொண்டுள்ளார். 55 வயதில் பணியிலிருந்து ஓய்வு பெற விரும்பும் குமார், ஓய்வுக்கு முன்னரே தான் இறந்து விட்டால் தனது வருமானத்திற்கு நிகரான காப்பீட்டு அளவை தனது குடும்பத்திற்கு அளிக்க விரும்புகிறார். அப்படியெனில் தோராயமாக அவர் எடுத்து கொள்ள வேண்டிய டேர்ம் காப்பீட்டின் அளவு 1.15 கோடி ரூபாய்(Sum Assured or Coverage).

இங்கே நாம் குமாருக்கான கடன் தொகை எவ்வளவு, தனது குடும்ப உறுப்பினர்களின் நிதி இலக்குகளுக்கான எதிர்கால தொகை எவ்வளவு என்பதனை கணக்கில் கொள்ளவில்லை. இதனை கணக்கில் எடுக்கும் போது, காப்பீட்டு அளவு அதிகரிக்கலாம். 

HLV முறையை கொண்டு நாம் கணக்கிட்டாலும், காப்பீட்டு நிறுவனங்கள் தங்களுக்கென ஒருவருக்கு அதிகபட்சம் அனுமதிக்கப்பட வேண்டிய தொகையை கூறியுள்ளது. இந்த தொகை தனிநபர் ஒருவரின் வயது மற்றும் வருமானத்திற்கு தகுந்தாற் போல மாறுபடும்.

டேர்ம் காப்பீட்டுக்கு அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச அளவு (மடங்குகளில்):

வயது வரம்பு  மடங்குகள்* 
18 முதல் 35 வயது வரை  25
36 முதல் 40 வயது வரை  20
41 முதல் 45 வயது வரை  15
46 முதல் 50 வயது வரை  12
51 முதல் 55 வயது வரை  10
56 முதல் 65 வயது வரை  5

 

(* ஒவ்வொரு இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கும் மாறுபடலாம்)

மேலே உள்ள தரவின் படி, குமாருக்கு அதிகபட்சமாக அவரது ஆண்டு வருமானத்தை போல, 25 மடங்குகளின் அளவில் காப்பீடு கிடைக்க கூடும். ( ரூ. 8 லட்சம் X 25 மடங்குகள் = 2 கோடி ரூபாய்)

கவனிக்க:

  • டேர்ம் காப்பீட்டை பெற இன்று பெரும்பாலான இன்சூரன்ஸ் நிறுவனங்கள், தனிநபர் ஒருவரின் வருமான ஆதாரத்தை அவசியமான ஒன்றாக பார்க்கிறது. இதற்கான முக்கிய ஆவணமாக கடந்த சில வருடங்களின் வருமான வரி தாக்கல்(Income Tax Returns) ஆவணங்கள், கடந்த சில மாதங்களின் சம்பள விவரங்கள்(Pay Slips) மற்றும் கடந்த ஒரு வருடத்திற்கான வங்கி அறிக்கை(Bank Statement).
  • புகைப்பிடித்தல் / மதுப்பழக்கம் இருக்கும் நிலையில் அதற்கான ப்ரீமியத்தொகை அதிகரிக்கலாம். சில சமயங்களில் காப்பீட்டை பெறுவதில் சிக்கல் ஏற்படலாம்.
  • டேர்ம் காப்பீட்டை பெறுவதற்கு மருத்துவ பரிசோதனை அவசியமாகிறது. உடல்நலத்தில் ஏதேனும் சிக்கல் இருந்தால் ப்ரீமியத்தொகை அதிகரிக்கப்படலாம் அல்லது காப்பீடு நிராகரிக்கப்படலாம்.
  • ஏற்கனவே வேறொரு இன்சூரன்ஸ் நிறுவனத்தில் டேர்ம் காப்பீட்டை பெற்றிருந்தாலோ அல்லது காப்பீடு நிராகரிக்கப்பட்டிருந்தாலோ, தற்போதைய இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பரிசீலனைக்கு பின்பு தான் காப்பீடு வழங்கலாமா, வேண்டாமா என்பதனை முடிவெடுக்கும்.
  • இன்று மாத சம்பளதாரர்களை விட, பெரும்பாலும் சுய தொழில் செய்பவர்களுக்கே டேர்ம் காப்பீடு நிராகரிக்கப்படுகிறது. இதற்கான காரணமாக சொல்லப்படுவது வருமானத்தின் விவரங்களை சரியாக பராமரிக்காமை அல்லது அதிக வருவாய் இருந்தும் முறையாக வருமான வரி தாக்கல் செய்யாதிருப்பது. 
  • டேர்ம் காப்பீட்டை இளவயதில்(சம்பாதிக்க ஆரம்பித்த சில வருடங்களில்) எடுக்கும் போது, அதற்கான ப்ரீமியத்தொகையும் அதிகரிக்கும். சரியான காப்பீட்டு அளவை சரியான நேரத்தில் அதிகரித்து கொள்வது அவசியம். தாமதமாக எடுக்கும் போது, உடல்நலம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படும் நிலையில் நமக்கான காப்பீட்டு அளவு கிடைக்காமல் போகலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

நாட்டில் காப்பீட்டுக்கான தேவை அதிகரித்து வரும் நிலை

நாட்டில் காப்பீட்டுக்கான தேவை அதிகரித்து வரும் நிலை

Increasing Demand for Insurance in the Current Scenario – Covid-19 impact

சேமிப்பும், முதலீடும் ஒரு குடும்பத்திற்கு எந்தளவு முக்கியமோ, அதே போன்று நிதி பாதுகாப்பும்(Financial Protection) அவசியம். நிதி பாதுகாப்பு எனும் போது டேர்ம் இன்சூரன்ஸ், மருத்துவ காப்பீடு, விபத்து காப்பீடு மற்றும் அவசர கால நிதி ஆகியவற்றை சொல்லலாம். நமது சேமிப்பை எதிர்பாராத வேலையிழப்பு, தொழில் மந்தம் மற்றும் விபத்து காலங்களில் விரயம் செய்ய விடாமல் தடுக்க இந்த நிதி பாதுகாப்பு உதவும்.

டேர்ம் காப்பீடு எனில் குடும்பத்தில் வருவாய் ஈட்டும் நபருக்கு தான்(Breadwinner) எடுக்க வேண்டும். அதுவும் அவரது வருவாயை சார்ந்து மற்ற குடும்ப உறுப்பினர்கள் இருக்கும் போது, ஏதோவொரு சூழ்நிலையில் வருவாய் ஈட்டும் நபர் மறைந்து விட்டால் குடும்ப உறுப்பினர்களின் நிதி நலனை பாதுகாக்க டேர்ம் காப்பீடு பலனளிக்கும். பொதுவாக டேர்ம் காப்பீடு(Term Insurance) ஒருவரது ஆண்டு வருமானத்தை போல குறைந்தபட்சம் 10-15 மடங்கில் இருப்பது நல்லது.

மருத்துவ காப்பீடு எனும் போது நடைமுறையில் காணப்படும் கொரோனா பெருந்தொற்றினால் ஏற்படும் மருத்துவ செலவுகளை நாம் கேட்டிருப்போம் அல்லது கண்டிருப்போம், மருத்துவ காப்பீடு எவ்வளவு அவசியமென்று. ஆனால், உண்மையில் கொரோனா பெருந்தொற்றை காட்டிலும் மற்ற நாள்பட்ட நோய்களுக்கான மருத்துவ செலவுகள் தான் அதிகம். கொரோனா பெருந்தொற்று மூலம் உடல்நலம் பேணுவது, இயற்கையை பாதுகாப்பது மற்றும் மருத்துவ காப்பீட்டின்(Health Insurance) தேவையை நாம் உணர்ந்துள்ளோம்.

நகரமயமாக்கல் துவங்கிய பின்பு, வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வந்துள்ளது. இன்று கிராமப்புறங்களிலும் நாம் குறிப்பிடத்தக்க வாகன போக்குவரத்தை காணலாம். குறிப்பிட்ட நேரத்தில் ஒரு இடத்திற்கு செல்லலாம் என்றாலும், இன்று வாகன விபத்துகளை தவிர்ப்பது எளிதான காரியமல்ல. விபத்தினால் ஏற்படும் மரணங்கள் நம்மை போன்ற மக்கள் தொகை அதிகம் கொண்ட நாட்டில் சற்று அதிகமே. எனவே, விபத்துகளினால் ஏற்படும் இறப்புகள் மூலம் பல குடும்பங்கள் நிதி சிக்கலில் மாட்டி கொள்கின்றன. இதனை தவிர்க்க விபத்து காப்பீடும்(Standalone Accidental Policy) அவசியம். விபத்து காப்பீட்டை பொறுத்தவரை ரைடர் பாலிசியாக(Rider) எடுத்து கொள்ளாமல், தனிநபர் விபத்து காப்பீடு திட்டமாக எடுத்து கொள்வது சிறந்தது.

வேலையிழப்பு, வேலையிலிருந்து தொழில் முனைவுக்கு செல்லுதல், நிதி நெருக்கடி காலங்கள் என அவசர காலத்திற்கு தேவையான நிதியை உருவாக்கி வைத்து கொள்வது இன்று அவசியமாக உள்ளது. உங்களது மாத வருமானத்தை போல குறைந்தபட்சம் ஆறு முதல் 12 மாதங்களுக்கான தொகையை இருப்பாக வைத்து கொள்வது நல்லது. இந்த தொகையை ஒரு குறிப்பிட்ட வங்கி சேமிப்பு கணக்கு அல்லது பரஸ்பர நிதிகளின் லிக்விட் பண்டு(Liquid Funds) திட்டங்களில் சேமித்து வரலாம். உண்மையில் அவசர கால தேவை மற்றும் நிதி நெருக்கடி என்றால் மட்டுமே இந்த தொகையை எடுக்க வேண்டும். திருவிழா, திருமணம், வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்க அல்லது சுற்றுலா என செலவுகளுக்கு அவசர கால நிதியை பயன்படுத்த கூடாது.

கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை, காப்பீட்டின் அவசியத்தை அதிகமாகவே உணர்த்தியுள்ளது எனலாம். கடந்த சில மாதங்களாக ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவ காப்பீட்டு திட்டங்களை பெறுவோர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக காப்பீட்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ளது. குறிப்பாக 35 வயதிற்கு குறைவாக உள்ளவர்கள் டேர்ம் காப்பீடு மற்றும் மருத்துவ காப்பீட்டு திட்டங்களை வாங்குவதில் ஆர்வமாக இருந்துள்ளனர்.

முதலாம் அலைக்கு பின்னர் சில காப்பீட்டு திட்டங்களின் பிரீமிய தொகை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கப்படலாம். டேர்ம் காப்பீட்டு திட்டங்களை பெறுவதற்கு கொரோனா தடுப்பூசி(Vaccine) போட்டிருக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டையும் சில காப்பீட்டு நிறுவனங்கள் விதித்துள்ளது.

நடப்பாண்டில் காப்பீட்டு திட்டங்களை பெற்றுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் அதே வேளையில் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் உரிமை கோரல் தீர்வும்(Claim Settlement) அதிகரித்து வருகிறது. இறப்பு விகிதத்தில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக இன்சூரன்ஸ் நிறுவனங்களின் லாபமும் குறைந்துள்ளது.

சமீபத்தில் கோடக் காப்பீட்டு நிறுவனம் வெளியிட்ட ஒரு அறிக்கையில், இரண்டாம் அலை காரணமாக ஏற்பட்ட அதிகப்படியான இறப்பு விகிதத்தால்  ஜூன் 2021 காலாண்டில் நிறுவனம் சுமார் 275 கோடி ரூபாய் வரை நஷ்டமாக கொண்டிருக்கும் என கூறியுள்ளது.

இந்தியாவில் மக்களிடையே காணப்படும் ஆயுள் காப்பீட்டின் பங்களிப்பு 2.82 சதவீதம் மட்டுமே. மருத்துவம் மற்றும் சுகாதாரத்திலும் அரசின் பங்களிப்பு, நாட்டின் பொருளாதாரத்தில் இரண்டு சதவீதத்திற்கு குறைவாக தான் உள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

நான் எவ்வளவு தொகைக்கு டேர்ம் இன்சூரன்ஸ் எடுக்க வேண்டும் ?

நான் எவ்வளவு தொகைக்கு டேர்ம் இன்சூரன்ஸ் எடுக்க வேண்டும் ?

How much Term insurance should I take out ?

பொதுவாக நம்மில் பலர் காப்பீட்டையும், முதலீட்டையும் போட்டு குழப்பி கொள்கின்றனர். காப்பீடு(Insurance) என்பது எதிர்பாராது ஏற்படும் நிகழ்வு அல்லது விபத்துகளினால் ஏற்படும் பொருளாதார இழப்புகளை ஈடுகட்டுவதற்கு தான். காப்பீட்டுக்காக நீங்கள் கட்டிய பணம், எந்த எதிர்பாராத நிகழ்வும் நடைபெறாமல் இருந்தால் அல்லது முதிர்வு தொகை என ஒரு தொகையை நீங்கள் பெறும் நிலையில், அது சரியான காப்பீடாக கருதப்படாது.

உதாரணமாக நீங்கள் உங்களது வாகனம், வீடு மற்றும் தொழிலுக்கு செய்யும் காப்பீட்டு தொகைக்கு முதிர்வு தொகை என்று எதுவும் இல்லை. மேலே சொன்னவற்றில் நமக்கு பொருளாதார இழப்பு ஏற்பட்டால் மட்டுமே காப்பீட்டின் மூலம் இழப்பு தொகை கிடைக்கப்பெறும். அதனை போல தான் மனித உயிருக்கும். 

உங்களது வாகனம் தொலைந்து விட்டால் அல்லது விபத்தால் சேதம் அடைந்திருந்தால், நீங்கள் காப்பீடு செய்திருக்கும் நிலையில் அதற்கான இழப்பீட்டு தொகையை கோரலாம். நான் வருடாவருடம் வாகன காப்பீட்டிற்கு பணம் கட்டுகிறேன், முதிர்வில் எனக்கு பணம் தாருங்கள் என கேட்க முடியாது. நீங்கள் மற்றொருவரின் வாகனத்தை எதிர்பாராது சேதப்படுத்தி விட்டாலும், அவருக்கான இழப்பு தொகைக்கு உங்கள் காப்பீடு தான் உதவக்கூடும்.

முதலீடு(Investing) என்பது இருவகை தன்மைகளை கொண்டது. உங்கள் முதலீட்டின் மூலம் தொடர் வருவாய்(Cash Flow) கிடைக்கலாம். அதே வேளையில் பின்னொரு காலத்தில் அந்த முதலீட்டை நீங்கள் விற்கும் போதும் அதற்கான மூலதன ஆதாயம்(Capital Gains – Appreciation) கிடைக்கப்பெறும். உதாரணமாக வீட்டு மனை, வணிக வளாகங்கள், பங்குகள் மற்றும் தொழில்கள். தங்கம் ஒரு முதலீட்டு சாதனம் அல்ல.

டேர்ம் இன்சூரன்ஸ்(Term Insurance) என்பது பொதுவாக நீங்கள் உங்கள் வாகனம், வீடு அல்லது தொழிலுக்கு காப்பீடு எடுப்பது போல. இது ஒரு சிறந்த காப்பீடு திட்டம் எனலாம். டேர்ம் இன்சூரன்ஸ் எடுக்கும் ஒருவருக்கு ஏதேனும் உயிரிழப்பு ஏற்பட்டால், அதன் காரணமாக அவர் குடும்பத்திற்கு ஏற்படும் பொருளாதார இழப்புகளை சரிசெய்ய உதவும். இங்கே இழப்பு ஏற்பட்டால் மட்டுமே அதற்குரிய தொகை கிடைக்கும், முதிர்வு தொகை என்பது அல்ல.

டேர்ம் காப்பீட்டை பொறுத்தவரை இளம் வயதில் எடுத்து கொள்வது மிக நன்று. ஏனெனில் இளம் வயதில் தான் அதற்கான பிரீமிய தொகை மிக குறைவு. டேர்ம் காப்பீட்டுக்கான காலத்தை நீங்களே நிர்ணயித்து கொள்ளலாம். எனினும் உங்களது ஓய்வு காலம் வரும் வரை எடுத்து வைத்து கொள்வது நல்லது. நீங்கள் ஆரம்ப நிலையில் கட்டிய தொகை தான் கடைசி வரை தொடரும். எனவே இளமை காலத்தில் டேர்ம் இன்சூரன்ஸ் எடுத்து வைத்து கொள்வது சிறந்தது. பொதுவாக டேர்ம் இன்சூரன்ஸ் என்பது வருமானம் ஈட்டும் ஒருவர் அல்லது தனிநபர் ஒருவரை சார்ந்திருக்கும் குடும்பம், அவருக்கு தான் காப்பீடு தேவை. வருவாய் ஈட்டும் அந்த நபருக்கு எதிர்காலத்தில் ஏதேனும் உயிரிழப்பு ஏற்பட்டு, அதனால் நம்பியிருக்கும் குடும்பம் பொருளாதாரம் சார்ந்து பாதிக்கப்படலாம். இதனை தவிர்க்க அந்த நபருக்கு டேர்ம் இன்சூரன்ஸ் எடுத்து வைக்க வேண்டும்.

எவ்வளவு தொகைக்கு டேர்ம் இன்சூரன்ஸ் எடுக்க வேண்டும் ?

மிகக்குறைந்த பிரீமிய தொகையில் அதிக மதிப்பிலான காப்பீடு செய்ய முடியுமென்றால், அது டேர்ம் இன்சூரன்ஸ் மட்டுமே. டேர்ம் காப்பீட்டுக்கான தொகை தனிநபர் ஒருவரின் வருமானத்திற்கு ஏற்ப மாறுபடும். இருப்பினும் காப்பீடு நிறுவனங்கள் இதற்கான சிறப்பு கணக்கீடுகளை கூறியுள்ளது. இயல்பு வாழ்க்கையில் உள்ள அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் சில கணக்கீடுகள் டேர்ம் பாலிசிக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

கணக்கீடு 1:

  • உங்களுடைய மாத வருமானத்தை ஆண்டு கணக்கில் எடுத்து கொள்ளுங்கள் (A).
  • உங்களது தற்போதைய கடன்கள் மற்றும் உங்கள் குழந்தைகளின் எதிர்கால கல்வி செலவுகள், திருமணம் ஆகியவற்றை கணக்கில் எடுத்து கொள்ளுங்கள் (B).
  • உங்களுடைய தற்போதைய சேமிப்பு / முதலீட்டு கையிருப்பை குறித்து கொள்ளவும் (C).

 

Insurance Coverage = A + B – C   X   15

கணக்கீடு 2:

Human Life Value (HLV) = (Annual Income – Self Expenses) ÷ Bank Interest Rate %
  • ஒரு வருடத்திற்கான உங்களது சொந்த செலவுகளை (உங்களின் தனிப்பட்ட செலவுகள் மட்டுமே), நீங்கள் சம்பாதிக்கும் ஆண்டு வருமானத்தில் கழித்து கொள்ளுங்கள்.
  • கிடைக்கப்பெறும் தொகையை, வங்கி வட்டி விகிதத்தில் வகுத்து கொள்ளுங்கள்.
  • வங்கி வட்டி விகிதம்(Bank Interest Rate) எனும் போது, ஒரு வருடத்திற்கான வைப்பு தொகை விகிதத்தை எடுத்து கொள்ளலாம். உதாரணமாக ஒரு வருடத்திற்கு 7 சதவீதம்.

உதாரணம்: 

ராமு, தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். அவருடைய  ஆண்டு வருவாய் ரூ. 6 லட்சம். அவரை சார்ந்து மனைவி மற்றும் இரு குழந்தைகள் உள்ளனர். 30 வயதாகும் ராமு, தனது தனிப்பட்ட செலவுக்காக மாத வருமானத்தில் 5000 ரூபாய் (மொபைல் ரீசார்ஜ், போக்குவரத்து, டீ மற்றும் வடை, சினிமா, வெளியூர் பயணம்) எடுத்து கொள்வார். ராமுவுக்கு நீண்டகால கடன் (வீட்டுக்கடன், வாகன கடன்) மற்றும் முதலீட்டு செலவாக (குழந்தைகள் மேற்படிப்பு மற்றும் திருமணம்) தனது மாத வருமானத்தில் ரூ. 30,000 செலவாகிறது. சேமிப்பு மற்றும் முதலீடாக ரூ. 1 லட்சம் (வங்கி டெபாசிட் மற்றும் பங்குகள்) உள்ளன.

கணக்கீடு 1ன் படி, ராமு எடுக்க வேண்டிய டேர்ம் இன்சூரன்ஸ் தொகை:

Insurance Coverage = ரூ. 6 லட்சம் (A +B) – ரூ. 1 லட்சம் (C)  X 15 = ரூ. 75 லட்சம் 

இங்கே அவரது கடன் மற்றும் எதிர்கால நிதி இலக்குகளுக்கான முதலீட்டு செலவு, மாத வருவாயிலிருந்து சென்று கொண்டிருக்கிறது. எனவே வருமானத்தை தாண்டிய கடன் அல்லது செலவுகள் எதுவுமில்லை.

கணக்கீடு 2ன் படி அவர் எடுக்க வேண்டிய இன்சூரன்ஸ் தொகை:

HLV = (ரூ. 6 லட்சம் – ரூ. 60,000 ) / .07 = ரூ. 77 லட்சம் 

மேலே சொன்ன இரண்டு கணக்கீடுகளில் எந்த தொகை பெரிதாக உள்ளதோ, அதுவே நீங்கள் எடுக்க வேண்டிய டேர்ம் காப்பீடு தொகை. 

இந்த இரு கணக்கீடுகள் உங்களுக்கு புரியவில்லையா ?

சுருக்கமாக, உங்களது ஆண்டு வருமானத்தை போல 15-20 மடங்கில் காப்பீடு தொகையை எடுத்து கொள்வது நல்லது.

காப்பீட்டையும், முதலீட்டையும் ஒருசேர செய்கிறேன் என குழப்பி கொள்ள வேண்டாம். காப்பீடு இழப்புகளுக்கு, முதலீடு இலக்குகளுக்கு !

குழந்தைகளுக்கு காப்பீடு திட்டத்தை எடுக்கிறேன் என தவறான நிதி செயல்களை செய்ய வேண்டும். உங்கள் குழந்தைகளுக்கு தேவை காப்பீடு அல்ல, நிதி இலக்குகளுக்கான முதலீடு மட்டுமே. அவர்களின் காப்பீடு தொகையை சார்ந்து நீங்கள் இல்லை. உங்களது வருமானத்தை எதிர்பார்த்து தான் அவர்களது எதிர்கால செலவு உள்ளது. 

வரிச்சலுகை பெறுகிறேன் என்று தவறான திட்டத்தில் பணத்தை செலவழிக்காதீர்கள். வரும் முன் காப்பதே நலம், வந்த பின் யோசிக்க நேரமில்லை. அன்றைய நாளில் அவசரத்திற்கு பணம் மட்டுமே தேவையாக இருக்கும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

 

 

  

நடுத்தர பட்ஜெட் திட்டமிடல் – பகுதி 1

நடுத்தர பட்ஜெட் திட்டமிடல் – பகுதி 1

Budget Planning for Middle Class Family – Part 1

 

வர்த்தக மதுரை தளத்தில் நாம் பொருளாதாரம் மற்றும் நிதி சார்ந்த பல விஷயங்களை பதிவிட்டு வந்தாலும், நமது வாசகர்கள் சிலர், நிகழ்கால அடிப்படையில் வாழ்க்கைக்கு தேவையான ஒரு பட்ஜெட் திட்டமிடலை (Budget Planning) கேட்டிருந்தனர். இதன் காரணமாக நமது நகரின் தற்போதைய விலைவாசியை அடிப்படையாக கொண்டு, பட்ஜெட் திட்டமிடல்  என்ற குறுந்தொடரை (Miniseries) ஆரம்பித்துள்ளோம்.

 

திரு. ராம்குமார்  மதுரையில் உள்ள தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். 29 வயதாகும் ராம்குமார் தனது தாய்  மற்றும் மனைவியுடன் மதுரை மாநகரில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். அவரது வீட்டிற்கும், அலுவலகத்திற்குமான தூரம் சுமார் 10 கி.மீ. ஒரு நபர் வருமானம் மட்டுமே கொண்டுள்ள ராம்குமார் தனது மனைவி மற்றும் இன்னும் ஆறு மாதத்தில் பிறக்கக்கூடிய குழந்தை நலனையும், தனது தாயின் முதுமை காலத்தையும் பாதுகாக்க வேண்டும். இனி அவருக்கான, மாதாந்திர பட்ஜெட் திட்டமிடலை பார்ப்போம்.

 

Budget Planning

 

மாதம் ரூ. 25,000 /- ஐ சம்பளமாக (பிடித்தம் போக) பெறும் ராம்குமாரின் மாத செலவுகளை நாம் மேலே உள்ள அட்டவணையில் காணலாம். மாத வீட்டு வாடகை ரூ. 5000 /- என்பது மதுரை நகருக்குள் நடுத்தர மக்களுக்கு எளிமையாக (1 BHK) கிடைப்பதாகும். நகருக்கு சற்று தொலைவில் (10 கி.மீ.) வசிக்கும் பட்சத்தில் 5000 ரூபாய்க்கு வசதியான வாடகை வீடு அமையலாம்.

 

பெரியவர்கள் மூன்று பேர் மற்றும் ஒரு மழலை இருக்கும் குடும்பத்திற்கான சராசரி உணவுச்செலவு மாதம் ரூ. 7250 /- ஆக கணக்கிடப்பட்டுள்ளது. இது ஒரு நடுத்தர குடும்பத்திற்கான திட்டமிடல் என்பதை நினைவில் கொள்ளவும்.

 

 

மருத்துவம் மற்றும் காப்பீடு செலவுகள் மாதத்திற்கு ரூ. 4500 /- என  ஒதுக்கப்பட்டுள்ளது. இவற்றில் தான் நம்மில் பெரும்பாலோர் அலட்சியம் காட்டி வருகிறோம். ஒரு சரியான பட்ஜெட் திட்டமிடல் என்பது வருவாய்க்குள் செலவு மட்டுமல்ல; உங்கள் எதிர்பாராத செலவுகளையும் குறைப்பதாக இருக்க வேண்டும். இன்றையளவில் மருத்துவம் மற்றும் எதிர்பாராத மருத்துவ செலவுகள் என்பது யாராலும் எளிதாக கணக்கிட முடியாத நிலையாக உள்ளது. இருப்பினும் நாம் காப்பீடு எடுப்பதன் மூலம், நமது எதிர்பாராத மருத்துவ செலவுகளை குறைக்கலாம்.

 

ராம்குமாருடைய தாய் மற்றும் பிறக்க போகும் குழந்தைக்கான மருத்துவ செலவுகள் பெரும்பான்மையாக அமையும். அதனால் இவருடைய தாய்க்கு மருத்துவ காப்பீடு (Health Insurance) ரூ. 3 லட்சத்திற்கும், ராம்குமார், மனைவி மற்றும் பிறக்கும் குழந்தை மூவருக்கும் சேர்த்து ரூ. 5 லட்சத்திற்கும் கவரேஜ் எடுக்கப்பட்டுள்ளது. ராம் குமார் தனக்கான தனிநபர் விபத்து காப்பீடு ரூ. 10 லட்சத்திற்கு பதிவு செய்துள்ளார். மேலும் ராம் குமார் மட்டுமே தனது குடும்பத்தில் சம்பாதிக்கும் நபராக இருப்பதால், அவருக்கான டேர்ம் இன்சூரன்ஸ் ரூ. 50 லட்சத்திற்கு (Term Insurance) பாலிசி கவரேஜ் எடுத்துள்ளார்.

 

10 கி.மீ தூரமுள்ள தனது அலுவலகத்திற்கு ராம்குமார் இரு சக்கர வாகனத்தில் செல்கிறார். மாத போக்குவரத்து செலவிற்காக ரூ. 1000 /- ஒதுக்கப்பட்டுள்ளது. உடை மற்றும் பொழுதுபோக்கிற்கு மாதம் ரூ. 1250 ம், இதர செலவுகளுக்கு ரூ. 1500 ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதர செலவுகளில் கைபேசி – இணைய கட்டணம், கேபிள் டிவி, மின்சாரம் போன்றவையும் உள்ளடக்கம்.

 

ராம்குமாருக்கு பிற வருமானம் எதுவுமில்லை. அவருடைய மாத செலவுகள் மொத்தம் ரூ. 20,500 /- ஆக உள்ளது. இப்போது அவரிடம் உபரியாக ரூ. 4,500 /- உள்ளது. இந்த தொகையை கொண்டு அவரது குடும்பத்தின் எதிர்கால நிதி இலக்குகளை பூர்த்தி செய்யலாம். நிதி இலக்குகள் பொதுவாக குழந்தைக்கான மேற்படிப்பு, திருமணம், ஓய்வு கால நிதி, சுற்றுலா, வீடு வாங்குவது  போன்றவையாக இருக்கலாம்.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 

நினைவில் கொள்க:

 

  • ராம்குமார்  தனது மொத்த சம்பளத்தில், பி.எப். காக (Provident Fund) 12 % பங்களிப்பு அளித்து வருகிறார். நிறுவன காப்பீடு மற்றும் பி.எப். பிடித்தம் போக தான் மாதம் ரூ. 25,000 /- ஐ சம்பளமாக பெறுகிறார்.

 

  • ராம்குமாருக்கு தற்சமயம் எந்த கடனும் இல்லை. அதனால் அவர் கடனில்லா நபராக (Debt free) உள்ளார். இதுவரை அவருக்கு சொந்தமாக வீடு இல்லை, ஆனால் தனது பூர்வீகத்தில் சொந்தமான நிலம் உள்ளது.

 

  • தனது குடும்ப உணவிற்கான மளிகை பொருட்களை மாதத்திற்கு ஒரு முறை தேர்முட்டி, கீழ மாரட் வீதிகளில் வாங்குவார். காய்கறி மற்றும் பழ வகைகளை அருகில் இருக்கும் சந்தையில் வாரத்திற்கு ஒரு முறை தனது மனைவி வாங்கி வருகிறார்.
  • அலுவலகத்திற்கு இரு சக்கர வாகனத்தில் மட்டுமில்லாமல், சில சமயங்களில் பொது போக்குவரத்தையும் (Bus, Share Auto) ராம்குமார் பயன்படுத்தி கொள்வார்.
  • தனக்கும், தனது குடும்பத்திற்கு தேவையான துணிமணிகளை பண்டிகை மற்றும் சலுகை காலங்களில் மொத்தமாக வாங்கும் பழக்கமுண்டு.
  • ராம்குமாரின் மனைவி எம்.எஸ்சி (M.Sc) வரை  படித்திருந்தாலும் தனது மாமியார் மற்றும் வருங்கால மழலைச்செல்வத்திற்காக வேலைக்கு செல்லவில்லை. அதே நேரத்தில் தனது படிப்பை கொண்டு, குடும்பத்திற்கான  கூடுதல் வருமானத்தை ஈட்டுவதற்கு (Additional / Secondary Income) திட்டமிட்டு வருகிறார்.
  • ராம்குமாரும் தனது  மாத உபரி தொகையை கொண்டு நிதி இலக்குகளை நிர்ணயித்துள்ளார். இரண்டாம் வருமானத்திற்கும் (Passive Income) வாய்ப்புகளை ஆராய்ந்து வருகிறார்.
  • அட்டவணையில் சொல்லப்பட்ட எண்கள் (Expenses) அனைத்தும் தற்போதைய விலைவாசியை கொண்டு கணக்கிடப்பட்டவை.

 

கடனில்லாமல் இருப்பதும் சுகமே…

கடனிருந்து அதனை குறைப்பதும், பெருஞ்சுகமே…

 

வாழ்க  வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com