All posts by skatzsaravana

Value Investor, Entrepreneur and Founder of Varthaga Madurai, Rich Investing iDEAS

மார்ச் மாதத்தில் அன்னிய முதலீட்டாளர்கள் என்ன செய்து விட்டார்கள் ?

மார்ச் மாதத்தில் அன்னிய முதலீட்டாளர்கள் என்ன செய்து விட்டார்கள் ? 

FII & DII Trading activity for the Period of March 2020 – Indian Stock Market

கடந்த மார்ச் மாதம் இந்திய பங்குச்சந்தைக்கு போதாத காலமாக அமைந்து விட்டது எனலாம். ஒரு வருடங்களுக்கு மேலாக இருந்து வந்த பொருளாதார மந்தநிலையை(Economy Slowdown) அடுத்து, கொரோனா வைரஸ் தாக்கமும் இந்திய பொருளாதாரம் மற்றும் பங்குச்சந்தையை வெகுவாக பாதித்தது.

மார்ச் 2020 காலத்தில் பங்குச்சந்தை பெரும்பான்மையான வீழ்ச்சியை சந்தித்தது. இந்த வீழ்ச்சி கடந்த 2008ம் ஆண்டின் உலக பொருளாதார வீழ்ச்சி நாட்களில் ஏற்பட்ட அளவை ஒத்திருந்தது. மார்ச் மாத முடிவில் அன்னிய முதலீட்டாளர்கள் மார்ச் 27ம் தேதி தவிர்த்து, மற்ற அனைத்து நாட்களிலும் பங்குகளை விற்று தள்ளியுள்ளனர்.

சொல்லப்பட்ட மாதத்தில் பங்குச்சந்தை 21 நாட்கள் வர்த்தகமாகி உள்ளன. 21 நாட்களில் அன்னிய முதலீட்டாளர்கள் கொள்முதல் செய்த பங்குகளின் மதிப்பு ரூ. 1,54,904 கோடி மற்றும் விற்ற பங்குகளின் மதிப்பு ரூ. 2,20,721 கோடி. ஆக, கடந்த மாதத்தில் அன்னிய முதலீட்டாளர்கள் மொத்தமாக ரூ. 65,816 கோடி மதிப்பில் பங்குகளை விற்றுள்ளனர்.

இருப்பினும், உள்ளூர் முதலீட்டாளர்கள்(Domestic Investors) மார்ச் 26ம் தேதி தவிர்த்து மற்ற அனைத்து நாட்களிலும் பங்குகளை வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. உள்ளூர் முதலீட்டாளர்களின் கொள்முதல் ரூ. 1,57,857 கோடி மற்றும் விற்பனை ரூ. 1,02,262 கோடி. மார்ச் மாதத்தில் ரூ. 55,595 கோடி மதிப்பில் உள்ளூர் முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கியுள்ளனர்.

நடப்பு 2020ம் வருடத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பனை மட்டுமே செய்துள்ளனர். ஜனவரி மாதத்தில் ரூ. 5,360 கோடி, பிப்ரவரி மாதம் ரூ. 12,684 கோடியும் மற்றும் மார்ச் மாதத்தில் ரூ. 65,816 கோடியும் நிகர விற்பனையாக அமைந்துள்ளது.

உள்ளூர் முதலீட்டாளர்களின் பங்களிப்பில் பரஸ்பர  நிதிகளின் எஸ்.ஐ.பி.(SIP Investing) முதலீடும் ஊக்கப்படுத்துகிறது. எனினும், அன்னிய முதலீட்டாளர்களின் விற்பனை பங்குச்சந்தை சரிவை ஏற்படுத்தியுள்ளது. பங்குச்சந்தைகள்  பெருத்த சரிவை ஏற்படுத்தி வரும் இச்சூழலில், அவ்வப்போது ஒரே நாளில் பெரிய ஏற்றத்தை அடைந்து வருவதும் இயல்பு தான்.

நீண்ட கால முதலீட்டாளர்கள், நல்ல நிறுவன பங்குகளை கண்டறிந்து எந்த அவசரமும் காட்டாமல், மலிவான விலை கிடைக்கும் போது மட்டும் முதலீடு செய்யும் மனப்பான்மையை கொண்டிருக்க வேண்டும். சந்தை ஏறுகிறது என பின்னால் சென்று வாங்கி விட்டு, பின்னர் பங்கு விலை இறங்குகிறது என கலங்க வேண்டாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

தங்கத்தில் முதலீடு செய்யலாமா – தற்போதைய நிலை எப்படி ?

தங்கத்தில் முதலீடு செய்யலாமா – தற்போதைய நிலை எப்படி ?

Investing in Gold – Is it the right time now ?

நடப்பு காலத்தில் ஏற்பட்டுள்ள சில பிரச்சனைகள் – உலக பொருளாதார மந்தநிலை, கச்சா எண்ணெய் விலை மாற்றம், போர் பதற்றம், வணிக விநியோக சங்கிலி விலகியது(Supply Chain) மற்றும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஆகியவை. இவற்றால் வரவிருக்கும் நாட்களில் பொருளாதார ரீதியாக பெரும்பாலான பாதிப்பை ஏற்படுத்தலாம். இந்த நிலை எப்போதும் முடிவுக்கு வரும் என உறுதியாக சொல்ல முடியாது.

https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

கொரோனா வைரஸ் பாதிப்பு(Covid-19) சில மாதங்களுக்கு பின், குறைவதற்கான வாய்ப்பு இருந்தாலும் நாட்டின் உள்நாட்டு உற்பத்தி குறியீடு(GDP) வீழ்ச்சியை நோக்கி சென்றுள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் அறிக்கை படி, நேற்று இரவு 9 மணி வரை, நாட்டில் ஒட்டுமொத்தமாக 89,534 சோதனை மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது. கோவிட்-19 தளத்தின் அதிகாரபூர்வ அறிக்கையின் படி, இதுவரை 4,289 பேர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 118 பேர் இறந்துள்ளனர் மற்றும் 328 பேர் குணமடைந்துள்ளனர்.

கடந்த மார்ச் 22ம் தேதி 400 ஆக இருந்த பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 10 மடங்கு அளவில் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. பங்குச்சந்தை குறியீடுகளில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ்(BSE Sensex) நடப்பு வருடத்தில் 28 சதவீதம் வீழ்ச்சியை கண்டுள்ளது. இது போல தேசிய பங்குச்சந்தை குறியீடு நிப்டி(Nifty50) 30 சதவீத வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

ஒரே காலத்தில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியால், அனைத்து நாடுகளின் பங்கு சந்தைகளும் கடந்த மூன்று மாதங்களாக இறக்கத்தை சந்தித்து வருகின்றன. இந்த நிலை அடுத்த ஒரு வருடத்திற்கு பொருளாதாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும். பரஸ்பர நிதிகளில் மாத முதலீட்டை தொடர்பவர்கள், இது போன்ற சூழ்நிலையில் மாத முதலீட்டில் கூடுதல் தொகையை சேர்த்து கொண்டு தொடரலாம்.

பங்குகளில் நேரிடையாக முதலீடு செய்து வருபவர்கள், நீண்ட காலத்திற்கான முதலீட்டை தற்போது ஏற்படுத்தலாம். குறுகிய காலத்தில் முதலீடு செய்வதற்கான காலம் தற்போது இல்லை. நல்ல நிறுவன பங்குகளை கண்டறிந்து, மலிவான விலையில் முதலீடு செய்வது அவசியம். பொருளாதார மந்தநிலை காலங்களில் பெரும்பாலான நிறுவன பங்குகள் மலிவாக கிடைப்பது போல தோற்றமளிக்கும். இவற்றில் எச்சரிக்கையை கடைபிடிப்பது அவசியமாகும்.

நிறுவனங்கள்  தங்கள் தொழிலை தொடர முடியாமலும், நிதி நிறுவனங்கள் திவால் நிலைக்கு செல்வதும் இது போன்ற(Recession – Financial Crisis 2020 ) காலங்களில் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக காணப்படுகிறது. பங்குச்சந்தை மற்றும் அதனை சார்ந்த பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்ய வாய்ப்பு உள்ள நிலையில், தங்கம் மற்றும் வெள்ளியில் முதலீடு அடுத்த சில காலங்களுக்கு ஏற்றமாக இருக்கும்.

பொதுவாக தங்கத்தில் முதலீடு என்பது பொருளாதர மந்தநிலை காலங்களில் பாதுகாப்பான முதலீடாக(Safe Haven – Hedging) கருதப்படுகிறது. தங்கத்தில் முதலீடு செய்கிறேன் என ஆபரண தங்கத்தை வாங்கி வைப்பதில் எந்த பயனும் இல்லை. தங்கத்தில் முதலீடு செய்ய தங்க இ.டி.எப்.(Gold ETF), பரஸ்பர நிதிகளில் கிடைக்கப்பெறும் தங்க பண்டுகள்(Gold Funds) மற்றும் அரசாங்கம் மூலம் கிடைக்கும் தங்க பத்திரங்களில்Gold Bond Scheme) முதலீடு செய்யலாம்.

கடந்த 2016ம் ஆண்டு முதல் தங்கம் ஏற்றத்தில் மட்டுமே இருந்துள்ளது. 2013-15 வருட காலங்களில் அது முதலீட்டில் இழப்பை சந்தித்துள்ள நிலையில், கடந்த ஒரு வருடத்தில் மட்டும் தங்க இ.டி.எப். திட்டங்கள் 35 சதவீதத்திற்கு மேல் வருவாயை தந்துள்ளது. வெள்ளியில் முதலீடு கடந்த ஒரு வருடத்தில் 22 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது.

பரஸ்பர நிதிகளில் காணப்படும் தங்க பண்டுகள், கடந்த மூன்று வருட காலமாக 14 சதவீதத்திற்கு மேல் லாபத்தை (HDFC Gold Fund, ABSL Gold Fund, SBI & AXIS Gold, ICICI Pru Gold Savings) அளித்துள்ளது. தங்கத்தில் நீண்ட கால அடிப்படையில் பங்குச்சந்தையை காட்டிலும் வருவாய் குறைவாக இருந்தாலும், பொருளாதார  மந்தநிலை ஏற்படும் சமயங்களில் இது மட்டுமே உயர்வதற்கான வாய்ப்பு உள்ளது.

தங்கம் ஒரு முதலீடாக பங்குச்சந்தை மற்றும் பரஸ்பர நிதிகளில் கிடைக்கப்பெற்றாலும், நம் நாட்டில் வெள்ளி முதலீடு அவ்வாறாக வர்த்தகமாகவில்லை. வெள்ளி காசுகளாகவோ, இல்லையெனில் பிஸ்கட் போன்ற வடிவில் தான் முதலீட்டு முறை கிடைக்கும். எனவே, தங்கத்தை தற்போதைய சிறு முதலீடாக எடுத்து கொள்ளலாம். பொருளாதாரம் சரிவை நோக்கி செல்லும் காலங்களில், ஒரு முதலீட்டு முறையை மட்டுமே நம்பியிருக்காமல் முதலீட்டை பரவலாக்குவதும்(Asset Allocation) அவசியமாகும். அந்த முறையில் தங்கத்திலும் உங்கள் முதலீடு சிறிய அளவில் இருப்பது சிறந்தது. வங்கி வட்டி விகிதங்கள் குறைந்து வரும் நிலையில், கடன் பத்திரங்களிலும் சிறிய முதலீட்டை கொண்டிருக்கலாம்.

தற்போது சென்னையில், 10 கிராம் – 24 காரட் (99.9 % Purity) தங்கத்தின் விலை ரூ. 42,400 மற்றும் வெள்ளி(Silver Price) கிராம் ஒன்றுக்கு ரூ. 40.36 – குறித்து வைத்து கொள்ளுங்கள்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வு – 14 வகுப்புகள் – விரைவான இணைப்புகள்

பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வு – 14 வகுப்புகள் – விரைவான இணைப்புகள் 

Fundamental Analysis – 14 Days Free Course – Quick Links to read

பங்குச்சந்தை சார்ந்த அடிப்படை பகுப்பாய்வு வகுப்புக்களை நாம் கடந்த மூன்று வருடங்களாக வர்த்தக மதுரை தளத்தில் இலவசமாக வழங்கி வருகிறோம். இதுவரை 1000க்கும் மேற்பட்ட பயனாளர்கள், அடிப்படை பகுப்பாய்வு கற்றலின் மூலம் தங்கள் பங்குகளை அலசுவதற்கான முயற்சியை நாம் கொடுத்துள்ளோம்.

14 இலவச வகுப்புக்களை கொண்ட இந்த இணைப்பு நமது தளத்தில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கட்டண வகுப்புகளை பதிவு செய்வதற்கான இணைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. இலவச வகுப்புகள் அனைத்தும் உங்களது மின்னஞ்சலில் தானியங்கி முறையில் செயல்படும்.

இதுவரை பயன்பெற்றவர்கள் மற்றும் புதிதாக பதிவு செய்யும் பயனாளர்களுக்கு வசதியாக விரைவான இணைப்பு ஒன்றினை இங்கே கொடுத்துள்ளோம். இதன் மூலம் நீங்கள் குறைந்த நேரத்தில், பங்குச்சந்தையில் நல்ல பங்குகளை கண்டறிவதற்கான வாய்ப்பு கிட்டும்.

14 இலவச வகுப்புகளின் விரைவான இணைப்புக்கள்…

மேலே குறிப்பிட்டுள்ள 14 இலவச வகுப்புகளின் இணைப்பை கிளிக் செய்து அடிப்படை பகுப்பாய்வை கற்கலாம். அடிப்படை பகுப்பாய்வில் சந்தேகம் அல்லது இணைப்பை கிளிக் செய்வதில் சிரமம் இருந்தால், நீங்கள் பார்த்து கொண்டிருக்கும் அதே பக்கத்தில் உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.

இல்லையெனில், contact@varthagamadurai.com  என்ற மின்னஞ்சலுக்கு உங்கள் செய்தியை அனுப்பவும்.

14 இலவச வகுப்புக்களை மின்னஞ்சலில் பெற…

Fundamental Analysis – 14 Days Free Course 

சிறப்பு  கட்டண வகுப்புகளுக்கு…

Premium Courses – Fundamental Analysis – Stocks | Mutual Funds | Money Education

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthamadurai.com

வாகனத்துறை விற்பனை வீழ்ச்சி – பொருளாதார மந்தநிலை – மார்ச் 2020

வாகனத்துறை விற்பனை வீழ்ச்சி – பொருளாதார மந்தநிலை – மார்ச் 2020 

Automobile Sales in Economic Crisis – March 2020

அடுத்தடுத்த பிரச்சனைகளுடன் நகரும் இந்திய பொருளாதாரம், கடந்த வருடத்தில் வாகனத்துறையின் மூலம் மந்தம் கண்டது. தற்போது அதே நிலையில் வாகனத்துறையின் விற்பனையும் உள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தினால் கடந்த மாதத்தின் இறுதி வாரத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும், வாகனத்துறை விற்பனை குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டவில்லை.

மார்ச் மாதத்தின் முடிவில் நாட்டின் மிகப்பெரிய வாகன தயாரிப்பு நிறுவனமான டாட்டா மோட்டார்ஸ்(Tata Motors) விற்பனையில் பெருத்த சரிவை கண்டுள்ளது. கடந்த மாதம் உள்நாட்டு விற்பனை அளவு 11,012 ஆகவும், ஏற்றுமதியின் அளவு 1,787 வாகனங்களாக இருந்தது. 2019ம் ஆண்டின் மார்ச் காலத்துடன் ஒப்பிடும் போது உள்நாட்டு வாகன விற்பனை 84 சதவீதமும், ஏற்றுமதி 68 சதவீதமும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

டாட்டா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கடன் ரூ. 95,400 கோடி ஆகும். இந்நிறுவனம் கடந்த இரண்டு வருடங்களாக (6 காலாண்டுகள்) நஷ்டத்தை மட்டுமே சந்தித்து வருகின்றன. இந்த பங்கின் விலை கடந்த மூன்று வருடங்களில் 48 சதவீத வீழ்ச்சியை சந்தித்துள்ளன. மஹிந்திரா(M&M) நிறுவனம் தனது மார்ச் மாத வாகன விற்பனையில் 90 சதவீத வீழ்ச்சியை (உள்நாட்டு) கண்டுள்ளது. இது போல ஏற்றுமதியிலும்(Exports) 68 சதவீத சரிவை ஏற்படுத்தியுள்ளன.

Auto Sales India March 2020

மாருதி சுசூகி(Maruti Suzuki) நிறுவனம் மார்ச் மாதம் உள்நாட்டு விற்பனையில் 47 சதவீதமும், ஏற்றுமதியில் 55 சதவீதமும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. ஐஷர் மோட்டார்ஸ்(Eicher Motors) தனது வோல்வோ பிரிவில் 1,409 வாகனங்களை மார்ச் மாதத்தில் உள்நாட்டில் விற்பனை செய்துள்ளது. ஏற்றுமதியில் வெறும் 67 வாகனங்கள் மட்டுமே விற்றுள்ளது. இது கடந்த 2019ம் ஆண்டின் மார்ச் மாதத்தில் 1,216 வாகனங்களாக இருந்தது கவனிக்கத்தக்கது.

ஆக, இந்நிறுவனம் உள்நாட்டு விற்பனையில் 81 சதவீதமும், ஏற்றுமதி அளவில் 95 சதவீதமும் விற்பனை வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அசோக் லேலண்ட் அனைத்து ரக வாகனங்கள் பிரிவில் ஒட்டுமொத்தமாக 91 சதவீத வீழ்ச்சியை உள்நாட்டு(Domestic Sales) விற்பனையில் அடைந்துள்ளது. இது போல ஏற்றுமதியில் இம்முறை 61 சதவீத விற்பனை குறைவாக நடந்துள்ளது.

ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனம் தனது இரு சக்கர வாகன பிரிவில் உள்நாட்டு விற்பனையாக 3.16 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது, 42 சதவீத சரிவாகும். ஏற்றுமதியிலும் இந்நிறுவனம் 35 சதவீத வீழ்ச்சியை கண்டுள்ளது.

சொல்லப்பட்ட நிறுவனங்களின் விற்பனை வீழ்ச்சி நடப்பு ஏப்ரல் மாதத்திலும் தொடரலாம். இதன் விளைவாக நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP) அடுத்த இரு காலாண்டுகளில் பெரும்பாலும் சரிவை மட்டுமே கொண்டிருக்கும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் குறைப்பு – ஏப்ரல் 2020

சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் குறைப்பு – ஏப்ரல் 2020

Declining Small Savings scheme Interest rates for the Period – April to June 2020

அஞ்சலக மற்றும் வங்கிகளின் சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் ஒவ்வொரு காலாண்டிலும் மாற்றியமைக்கப்படும். சமீபத்தில் பாரத ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்தது. இதனை தொடர்ந்து தற்போது சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதமும் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது.

சொல்லப்பட்டுள்ள புதிய வட்டி விகிதம் ஏப்ரல் முதல் ஜூன் 2020 காலத்திற்கு உரியதாகும். கடந்த ஒரு வருடமாக சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தில் பெரிய மாற்றம் ஏதும் இல்லாமல் இருந்த நிலையில், தற்போது வட்டி விகிதம் அதிகளவில் குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மூத்த குடிமக்களுக்கான திட்டத்தில்(Senior Citizen Savings Scheme) முன்னர் வட்டி விகிதம் 8.60 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது 7.40 சதவீதமாக சொல்லப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது. தேசிய சேமிப்பு பத்திரத்தின்(NSC) வட்டி விகிதம் 7.90 சதவீதத்திலிருந்து 6.80 சதவீதமாக  குறைக்கப்பட்டுள்ளது. ஐந்து வருட மாத வருமான(MIS) சேமிப்பு திட்டத்தின் வட்டி விகிதம் 6.6 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த முறை இது 7.6 சதவீதமாக சொல்லப்பட்டிருந்தது.

small savings interest april 2020

செல்வ மகள் சேமிப்பு(Sukanya Samriddhi) திட்டத்திற்கு இதற்கு முன்னர் 8.40 சதவீதமாக இருந்த வட்டி விகிதம் தற்போது 7.60 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. கிசான் விகாஸ் பத்திரத்தின்(KVP) வட்டி விகிதம் ஜனவரி – மார்ச் 2020 காலத்தில் 7.60 சதவீதமாக இருந்தது. இது தற்போது 6.90 சதவீதமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

ஒரு வருட கால வைப்பு திட்டத்திற்கான வட்டி விகிதம் 6.90 சதவீதத்திலிருந்து 5.50 சதவீதமாக குறைந்துள்ளது. இது இரண்டு வருட மற்றும் மூன்று வருட கால திட்டத்திற்கும் பொருந்தும். ஐந்து வருட கால வைப்பு திட்டத்தில் 6.70 சதவீதமாக வட்டி விகிதம் சொல்லப்பட்டுள்ளது. பொது வருங்கால வைப்பு(PPF) நிதி திட்டத்திற்கு 7.10 சதவீதமாக வட்டி விகிதம் குறைந்துள்ளது.

சேமிப்பு கணக்கிற்கான வட்டி விகிதத்தில் மாற்றம் எதுவுமில்லாமல் முன்னர் இருந்த 4 சதவீதம் சொல்லப்பட்டுள்ளது. எனினும், வங்கிகளில் இதன் வட்டி விகிதம் குறைவாக தான் காணப்படும். பொதுவாக வங்கிகளின் வட்டி விகிதம் குறையும் போது, பத்திரங்களில்(Bonds) காணப்படும் வட்டி விகிதம் அதிகரிக்கும்.

அடுத்தடுத்த காலங்களில் வட்டி விகிதங்கள் குறைக்கப்படலாம். எனவே, இது டெபாசிட்தாரர்களுக்கு சாதகமாக இருக்காது. இருப்பினும், வங்கிகளில் கடன் பெறுவோரின் வட்டி விகிதங்கள் குறைவாக இருக்கும். ஐந்து வருட கால டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்வோர், இது போன்ற சமயங்களில் ரிஸ்க் குறைவாக காணப்படும் கடன் பத்திரங்களை நாடலாம். இல்லையெனில், பரஸ்பர நிதிகளில்(Debt Mutual Funds) கிடைக்கப்பெறும் முதலீட்டு திட்டங்களை தேர்ந்தெடுக்கலாம். ரிஸ்க் அதிகம் கொண்ட பங்குகள் சார்ந்த(Equity Mutual Funds) முடிவினை தேர்ந்தெடுப்போர், தற்சமயத்தில் முதலீடு செய்ய மிகவும் ஏற்ற காலம் எனலாம்.

பங்குச்சந்தை சரிவடைந்து வரும் நிலையில், மியூச்சுவல் பண்டுகளில் பங்கு  சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்வோருக்கு அதிகப்படியான யூனிட்கள் பெறுவதற்கான வாய்ப்பு தற்போது உள்ளது. அதே போல ஏற்கனவே எஸ்.ஐ.பி. முதலீட்டை மேற்கொண்டு வரும் முதலீட்டாளர்கள், தற்சமயத்தில் கூடுதலான எஸ்.ஐ.பி.(SIP Investing) தொகையை குறுகிய காலத்தில் முதலீடு செய்து விட்டு, நீண்டகாலத்தில் நல்ல வருவாயை பெறலாம். இதனை போன்ற ஒரு முதலீட்டு வாய்ப்பு, சந்தை ஏற்ற காலங்களில் கிடைக்கப்பெறாது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

கொரோனா வைரஸ் – பொருளாதார மந்தநிலை – பங்குச்சந்தை சரிவு எப்போது முடிவுக்கு வரும் ?

கொரோனா வைரஸ் – பொருளாதார மந்தநிலை – பங்குச்சந்தை சரிவு எப்போது முடிவுக்கு வரும் ?

Covid-19 – Financial Crisis – Global Stock Market Crash – When will it end ?

இரண்டு வருடங்களுக்கு முன்பிருந்தே, பங்குச்சந்தையில் வர்த்தகமாகும் பங்குகளின் விலையும், அதன் அடிப்படை பகுப்பாய்வும்(Fundamental Analysis) ஒத்துப்போகவில்லை. நிறுவனங்களின் வருவாய் குறைந்து வந்ததும், அதற்கு நேரெதிராக பங்குகளின் விலை உச்சத்தில் இருந்ததையும் நாம் காண முடிந்தது. பல வளரும் மற்றும் வளர்ந்த நாடுகளில் பங்குச்சந்தை குறியீடுகள் எங்கோ செல்ல போகிறது என்ற மாயை ஊடகத்தின் மூலம் செய்திகளை ஏற்படுத்தியது.

ஆனால், உண்மையில் அடிப்படை பகுப்பாய்வு கூறுகளை நிறைவு செய்யாத பங்கு வர்த்தகம் வெகுநாள் ஏற்றத்தில் நீடிப்பதில்லை. இதனை தான் நாம் சொல்லி கொண்டிருந்தோம். உச்சத்தில் பல பங்குகளை வாங்குமாறு தரகு நிறுவனங்களும், ஊடகங்களும் போட்டி போட்டு சொல்லி கொண்டிருந்தன. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மந்தநிலையில் இருந்த பொருளாதாரம் ஒரேயடியாக நடப்பு 2020ம் வருடத்தில் தூக்கி போட்டது.

சந்தையில் உள்ள பண முதலைகளுக்கு சாக்கு போக்காக கொரோனா வைரஸ் செய்தியும் சேர்ந்து கொண்டன. பிறகென்ன, பங்குகளை அடித்து நொறுக்கி கீழே இறக்க செய்வது தான். முடிவில் சிறு முதலீட்டாளர்கள் உச்சத்தில் வாங்கி விட்டு, இப்போது மீண்டும் வாங்கலாமா அல்லது இருக்கிற பங்குகளை விற்கலாமா என யோசித்து கொண்டிருக்கின்றனர். நம்மில் பலரின் கேள்வி, இந்த நிலை எப்போது சரியாகும் என்பதே…  இதுவும் கடந்து போகும்.

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 14 வயது ஜோதிடர் அபிக்யா ஆனந்த்(Abhigya Anand). சிறு வயது முதலே வான சாஸ்திரத்தில் ஆர்வம் கொண்ட இவர், பிரபஞ்சத்தில் உள்ள சில கோள்களின் கணிதங்களை கொண்டு எதிர்கால கணிப்புகளை சொல்லி வருகிறார். என்னடா, கொரோனா வைரஸ் மற்றும் பங்குச்சந்தை சரிவு எப்போது முடிவுக்கு வரும் என கேட்டால், வானவியல் கணிப்புகளுக்கு நம்மை கொண்டு செல்கிறாரே என கேட்க வேண்டாம். அடுத்த இரு பத்திகளை படியுங்கள்… சில விஷயங்கள் புரியும்.

ஏழு மாதங்களுக்கு முன்பு, இந்த உலகம் ஒரு பேராபத்தை சந்திக்க உள்ளது என ஒரு காணொளியை(Conscience) வெளியிட்டுள்ளார். அதாவது வானவியல் கணிதத்தின் படி, ராகு மற்றும் கேது ஆகிய இரண்டிற்கும் இடையே நடக்கும் ஒரு நிகழ்வும், இதனை சார்ந்த கால சர்ப்ப யோகத்தின் விளைவும் ஏற்பட போவதாக சொல்கிறார். இந்த காலம் நவம்பர் 2019 முதல் ஏப்ரல் 2020 வரை இருக்கும் என கணித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கம் மற்றும் பங்குச்சந்தை சரிவை முன்னரே கணித்துள்ள அபிக்யா, இந்த வைரஸ் தாக்கம் மே மாதம் 29ம் தேதி முதல் மெல்ல மெல்ல குறையும் எனவும், மனிதர்கள் விலங்குகளை கொள்ள வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளார். பங்குச்சந்தை நடப்பு வருடம் முழுவதும் இறக்கத்தில் தான் நடைபெறும் எனவும் கூறியுள்ளார். இது ஒரு வானியல் கணிதத்தின் சுழற்சி முறையில் உள்ளதை தான் கூறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இப்போது, நமது தலைப்புக்கு வருவோம். மேலே சொன்ன விஷயங்களை ஏற்று கொள்பவர்கள் ஏற்று கொள்ளட்டும். பங்குச்சந்தையை போல, இது ஒரு புள்ளியியல் சார்ந்த கணிதமே. கொரோனா வைரஸ்(Coronavirus) தாக்கம் நம் நாட்டை பொறுத்தவரை தற்போது 4வது நிலையில் உள்ளது. நாம் இன்னும் செல்ல வேண்டிய காலங்கள் அடுத்த 3-6 வாரங்களாக இருக்கலாம். அதற்குள் மருந்து கண்டுபிடிப்பு நிகழ்ந்தாலும், அனைத்து நாடுகளுக்கும் தற்போதைய நிலையில் மருந்து அவ்வளவு எளிதாக சென்றடையாது.

மருந்து அல்லது தடுப்பூசி கிடைக்கப்பெற்றாலும், ஆரம்ப நிலையில் அது சுகாதார துறையில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மையாளர்களுக்கு மட்டுமே போய் சேரும் என வளர்ந்த நாடுகளின் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். எனவே, இப்போதைய நிலையில் நம்மை தனிமைப்படுத்தி கொள்வதே சிறந்தது. நடைமுறையில் உள்ள கோவிட்-19(Covid), கொரோனா குடும்பத்தின் ஏழாவது நிலை அல்லது தலைமுறையாகும். இதுவரை இந்த குடும்பத்தில் உள்ள வைரஸ்களுக்கு மருந்து அல்லது தடுப்பூசி மனித இனத்தால் கண்டுபிடிக்கப்பட வில்லை. கொரோனா குடும்பத்தின் வரலாறு சுமார் 60 வருடங்களுக்கு மேல் என்பதனை நினைவில் கொள்ளவும்.

ஒவ்வொரு நாடுகளும், சுகாதாரத்தை பேணி காத்து அடுத்து 2-3 மாதங்களில் இந்த நோய் தாக்கத்திலிருந்து விடுபடலாம். இதுவும் ஒரு ஊக கணிப்பாக தான் எடுத்து கொள்ள முடியும். கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்தாலும், உண்மையில் இங்கே பெரிய பிரச்சனை ஒன்று உள்ளது. அது தான் உலக பொருளாதார மந்தநிலை(Financial Crisis – Recession).

ஏற்கனவே மந்தநிலையில் காணப்பட்ட பொருளாதாரம் அடுத்த 2-3 காலாண்டுகளில் வருவாய் இழப்பை(Listed Companies) கொண்டிருக்கும். வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரித்து வருவது, அரசு கஜானாவில் பணம் இல்லாதது மற்றும் வணிக விநியோக சங்கிலி(Supply Chain) விலகியது ஆகியவற்றால், நாட்டின் பொருளாதாரம் அடுத்த இரண்டு காலாண்டுகளில் எதிர்மறையாக(Negative GDP) செல்லும். எப்படி பார்த்தாலும், நடப்பு 2020ம் வருடத்தில் உலக பொருளாதாரமும், பங்குச்சந்தையும் ஏற்றம் பெறுவதற்கான வாய்ப்பு குறைவு தான்.

அதே சமயத்தில் தனிநபர் ஒருவரின் ரிஸ்க் தன்மைக்கு ஏற்றவாறு, முதலீட்டு முடிவுகளை எடுப்பது சிறந்தது. நல்ல நிறுவன பங்குகளை அடையாளம் கண்டு, சந்தை வீழ்ச்சியின் போது, மலிவான விலையில் பங்குகளை வாங்கலாம். பிராண்டு பங்குகளின் மீது பற்று கொள்ளாதீர்கள். ரிஸ்க் தன்மையை பரவலாக்க பங்குச்சந்தை மற்றும் பரஸ்பர நிதியில் கிடைக்கப்பெறும் இ.டி.எப். மற்றும் கோல்டு பண்டுகளில்(Gold ETF, Gold Funds) முதலீடு செய்யலாம். பங்குகளில் வெறும் லார்ஜ் கேப் பங்குகளை தேர்ந்தெடுக்காமல், சிறு மற்றும் நடுத்தர பங்குகளில் முதலீடு செய்யலாம். நல்ல நிறுவனங்களை அடையாளம் காண முடியாதவர்கள் பரஸ்பர நிதிகளில் காணப்படும் மல்டி கேப்(Multicap) மற்றும் மல்டி அஸெட்(Mutli asset) போன்ற பண்டுகளில் முதலீடு செய்யலாம். உங்கள் வங்கி டெபாசிட்டை வெறும் சேமிப்பாக மட்டுமே கையாளுங்கள். அவை ஒன்றும் பெரிய முதலீட்டு சாதனமாக கருதப்படாது. வரவிருக்கும் காலங்களில் வங்கிகளுக்கான வட்டி விகிதம் மேலும் குறைய கூடும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

மூன்று மாத தவணைத்தொகை (EMI) சலுகை – யார் யாருக்கு ?

மூன்று மாத தவணைத்தொகை (EMI) சலுகை – யார் யாருக்கு ?

Moratorium of 3 Months EMI – Who will get this benefit ?

2019-20ம் நிதியாண்டுக்கான ஏழாவது மத்திய நிதிக்கொள்கை குழு கூட்டம், பாரத ரிசர்வ் வங்கியின் சார்பில் நேற்று நடைபெற்றது. ஏற்கனவே மந்தநிலையில் சென்று கொண்டிருந்த நாட்டின் பொருளாதாரம், கொரோனா வைரஸ்(Covid-19) பாதிப்பால் மேலும் மந்தமடைந்தது. 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு மற்றும் 144 தடை போன்றவற்றால் கொரோனா பாதிப்பை தடுக்கும் நிலையில், சொல்லப்பட்ட காலத்தில் நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம் மேலும் அதிகரிக்க கூடும்.

நேற்றைய கூட்டத்தில் வங்கிகளுக்கான ரெப்போ(REPO Rate) வட்டி விகிதத்தை 5.15 சதவீதத்திலிருந்து 4.40 சதவீதமாக குறைக்க முடிவு செய்யப்பட்டது. சுமார் 75 அடிப்படை புள்ளிகள் வரை குறைக்கப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது. இதனால் வங்கிகளின் கடனுக்கான வட்டி விகிதம் குறையும். அதே வேளையில் வங்கி டெபாசிட் முதலீட்டிற்கு வட்டி வருவாய் குறையும்.

கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு பின், உலகளாவிய வளர்ச்சியும் பெரிதும் மந்தமடைந்துள்ளது. தொற்று நோய் மற்றும் அதன் பரவலை தொடர்ந்து அதிக காலம் எடுத்து கொள்ளும் நிலையில் இந்த நிலை பெரும் பொருளாதார வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என பாரத ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

பொருளாதார வீழ்ச்சி சார்ந்த பதற்றத்தால் நிதி சந்தையில் அதிக இழப்புகள் ஏற்பட்டுள்ளது. மேலும் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரித்து வருவது, பொருளாதார வளர்ச்சி குறைவு ஆகியவற்றிலிருந்து பாதுகாக்க பல பொருளாதார ஊக்குவிப்புகள் சொல்லப்பட்டு வருகிறது. இது போன்ற காலங்களில் ஊக்குவிப்புகள் நடைபெறுவது இயல்பான ஒன்று தான்.

நேற்றைய கூட்டத்தில் முக்கிய அம்சமாக வங்கி வாடிக்கையாளர்களின் கடன் தவணை தொகை(EMI) அடுத்த மூன்று மாதங்களுக்கு தள்ளி வைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த அமல் மார்ச் 1,2020 முதல் நிலுவையில் உள்ள தவணை தொகைக்கு என சொல்லப்பட்டுள்ளது. அனைத்து வணிக வங்கிகளுக்கும் (கிராமப்புற வங்கிகள், நிதி வங்கிகள், உள்ளூர் பகுதி வங்கிகள்), கூட்டுறவு வங்கிகள், அகில இந்திய நிதி நிறுவனங்கள், வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள் (வீட்டு நிதி நிறுவனங்கள் மற்றும் நுண் நிதி நிறுவனங்கள் உட்பட) மற்றும் கடன் வழங்கும் நிறுவனங்கள் என அனைத்திற்கும் இந்த விதி பொருந்தும்.

சொல்லப்பட்ட தவணை சலுகை அனைத்து வங்கிகளிலும் உள்ள  வாடிக்கையாளர்களுக்கு அளிக்க பாரத ரிசர்வ் வங்கியின் சார்பில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனை அந்தந்த வங்கிகள் தான் வாடிக்கையாளர்களுக்கு அதன் பலனை அளிக்க வேண்டும். தவணை காலம் மார்ச் 1 முதல் மே 31ம் தேதி வரை உள்ள காலமாக எடுத்து கொள்ளப்பட்டுள்ளது. தாமதமாக துவங்கும் தவணை தொகையால் (EMI) வாடிக்கையாளர்களின் சிபில்(CIBIL Score) மதிப்பில் எந்த மாற்றமும் இருக்காது எனவும், வங்கிகளின் வாராக்கடன்(NPA) அளவிலும் எந்த மாற்றமுமில்லை எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

யார் யாருக்கு தவணை தொகை சலுகை ?

பாரத ரிசர்வ் வங்கியின்(RBI) கீழ் பதிவு செய்யப்பட்டிருக்கும் அனைத்து வங்கிகளும்  மூன்று மாத தவணை சலுகையை வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் படி, ரிசர்வ் வங்கி கேட்டு கொண்டுள்ளது. இது  ஒரு அனுமதி கடிதம் தான் தவிர, வங்கிகள் தான் இதனை நடைமுறையில் கொண்டு வர வேண்டும். பொதுவாக பாரத ரிசர்வ் வங்கி வட்டி விகித குறைப்பை அறிவித்தால், சில வங்கிகள் மட்டுமே அந்த பலனை வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும். இதுவும் அது போன்று நடந்து விட கூடாது.

வரவிருக்கும் வாரங்களில் வங்கி வாடிக்கையாளர்களும் தொலைபேசியில் தொடர்பு  கொண்டு, வங்கிகளிடம் செயல்முறையை கேட்டு தெரிந்து கொள்ளலாம். இருப்பினும் சில வாடிக்கையாளர்கள் தவணைத்தொகையை செலுத்த இருக்கும் பட்சத்தில், அதற்கான வங்கிகளின் முடிவும் மாறுபடலாம். வங்கிக்கு செலுத்த வேண்டிய தவணை தொகைக்கான(Loan EMI) காலம் தான் தள்ளி வைக்கப்பட்டுள்ளதே தவிர, தவணை தொகை கழித்து கொள்ளப்படுகிறது என சொல்லப்படவில்லை. எனவே இது ஒரு கடன் தள்ளுபடி என நினைத்து கொள்ள வேண்டாம்.

தவணை தொகைக்கான காலம் மார்ச் 1, 2020 முதல் என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. அப்படி இருக்கையில் பெரும்பாலானோர் தங்கள் மார்ச் மாத தவணை தொகையை கட்டியிருக்கலாம். இது சம்மந்தமான சந்தேகங்களை உங்கள் வங்கி மேலாளரிடம் அல்லது அலுவலரிடம் கேட்டு தெரிந்து கொள்வது அவசியம். தவணைத்தொகை எனும் போது, அசலுடன் வட்டியும் சேர்த்து தான் சொல்லப்பட்டுள்ளது.

வீட்டு கடன், கல்வி கடன், தனிநபர் கடன், விவசாய கடன், வாகன கடன், வீட்டு பொருட்களை தவணை முறையில் பெற்றதற்கான கடன் மற்றும் இதர சில்லறை வகையிலான கடன்களுக்கு சொல்லப்பட்ட மூன்று மாத தவணை தொகை சலுகை பொருந்தும். கிரெடிட் கார்டுகள் என்பது ஒரு சுழலக்கூடிய கடன்(Revolving Credit) என சொல்லப்படுகிறது. இருப்பினும், ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல் படி கிரெடிட் கார்டுக்கான நிலுவை தொகைக்கு இந்த சலுகை பொருந்தும்.

பாரத ரிசர்வ் வங்கி கூறியுள்ள சலுகை அனைத்தும் சில்லறை கடன்களுக்கானது. இவற்றில் வணிக கடன் பற்றி சொல்லப்படவில்லை. எனினும், வணிக நிறுவனங்களால் வாங்கப்பட்ட அனைத்து மூலதன கடன்களுக்கும் வட்டி தொகையை செலுத்துவதற்கு காலத்தை நீட்டித்துள்ளது. இவற்றை செலுத்துவதற்கான காலம் (மார்ச் 1 முதல்) மூன்று மாதம் தள்ளிவைக்கப்பட்டிருக்கும் நிலையில், அதன் பின்பு வட்டித்தொகை அனைத்தும் சேர்க்கப்பட்டு செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தாமதமாக செலுத்தப்படும் தவணைத்தொகையால் வாடிக்கையாளர்களின் சிபில் மதிப்பில் எந்த மாற்றமும் இருக்காது. இதன் காரணமாக வருங்காலங்களில் புதிய கடன் பெறுவதில் எந்த சிக்கலும் இருக்காது என பாரத ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

நினைவில் கொள்க: உங்கள் வங்கி கிளையை தொடர்பு கொண்டு, முறையான தகவலை பெறுவது அவசியமாகும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

நேர்மறை சிந்தனையை கைவிடுங்கள் – கொரோனா வைரஸ் பாதுகாப்பு

நேர்மறை சிந்தனையை கைவிடுங்கள் – கொரோனா வைரஸ் பாதுகாப்பு

Don’t think Positive – Precautions to protect yourself and family from Covid-19

வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என வீட்டில் யாராவது சொன்னாலே கேட்க மாட்டோம், அதுவும் நமக்கே அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இல்லாத காலத்தில், அரசு சொல்லும் எச்சரிக்கையை நாம் கேட்டு விடுவோமா – என்ன ?

https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

நடந்து கொண்டிருப்பது ஒரு போர்க்கால அடிப்படை நிகழ்வு, ஒரு உலக போர் நடைபெறுவது போன்ற நிகழ்வு, அதுவும் உங்களை சுற்றி ஜாம்பிகளும், வெள்ளமும் சூழ்ந்திருக்கும் நிலை. ஆம், வேலைக்கு செல்ல முடியாதது தான், தொழில் புரிய முடியாது. சொந்த பந்தங்களை காண முடியாது. அரசாங்கம் உங்களை பாதுகாக்க முடியாது என சொன்னால் நீங்கள் என்ன செய்து விட முடியும்.

நீங்களாக தானே, பாதுகாத்து கொள்ள முடியும் – அது தான் Survival of the Fittest.

நாம் தேசப்பற்றை கொண்டாடுகிறோம், நமது ஜாதி, மத கொள்கைகளை பெருமையாக நினைக்கிறோம். பல சாகசங்களை புரிய எண்ணுகிறோம். இந்த உலகம் அழிவதில்லை, மாறாக தீய மனிதம் அழிய போகிறது. உங்களை நீங்களே காத்து கொள்ள நேர்மறை எண்ணங்களை கொண்டிருக்காதீர்கள், எதிர்மறை நிகழ்வை கவனியுங்கள்.

உங்களுக்கு இப்போது நேர்மறை எண்ணம் தேவையில்லை, பாதகமான நிகழ்வை உணருங்கள், உண்மையில் இப்போதைய தேவை விழிப்புணர்வும், அதனை சார்ந்த தன்னம்பிக்கையும் தான். இந்த உலகில் பல்வேறு காலகட்டங்களில் வெற்றி பெற்ற சமுதாயமும், சாதித்தவர்களும் கொண்டிருந்தது விழிப்புணர்வுடன் கூடிய தன்னம்பிக்கையே தவிர, நேர்மறை எண்ணங்கள் அல்ல.

  • வீட்டை விட்டு வெளியே  வராதீர்கள் என சொன்னால், வாக்கிங் – ஜாக்கிங் என செல்ல கூடாது. கூட்டம் சேர கூடாது, கொரோனா வைரஸ் காற்றில் பரவ கூடும். நீங்கள் நடைப்பயிற்சி செல்லும் பாதையில் தொற்று இல்லை என்பதை உங்களால் கண்டறிய முடியாது.
  • இது ஒரு போர்க்கால நிகழ்வு, விடுமுறை அல்ல. இன்றைய காலத்தில் உங்களுக்கான வசதி வீட்டில் தான் உள்ளது. தொலைக்காட்சி, கைபேசி, இணையம், தூக்கம் இவை தான் எப்போதும் வீட்டில் உள்ளதே. வேறென்ன வேண்டும். வேலைக்கு சென்றாலும் அங்கே நாம் என்ன செய்து விட போகிறோம் (சில உண்மையான உழைப்பாளிகள் தவிர). மனித நேயம் செலுத்த வேண்டிய நேரத்தில், நாம் கைபேசியை பயன்படுத்தி கொண்டிருந்தோம். இப்போது உறவு வேணும் என்கிறோம் ?
  • சுகமான வாழ்க்கையை இப்போது எதிர்பார்க்காதீர்கள். நீங்கள் இருக்கும் இடத்தில் ஏற்கனவே மகிழ்ச்சி உள்ளது. தொலைக்காட்சி பார்ப்பவர்கள் அதனை காணுங்கள், கைபேசி மற்றும் இணையம் உள்ளது. முக்கியமாக இது போன்ற சமயங்களில் மின்சாரம் தடைபடாமல் வந்து சேர்கிறது.
  • மற்ற காலங்களில் நாம் தேவையில்லாத பொருட்களை வாங்கி குவிப்போம். இப்போதும் அதனை செய்து விடாதீர்கள். நமக்கு தேவை அத்தியாவசிய உணவு மட்டுமே, அதுவும் ஆடம்பர உணவு அல்ல. கஞ்சியோ, கூழோ – தக்கன பிழைத்து வாழ்வதற்கான(Survival) சூழ்நிலையை தேர்ந்தெடுங்கள். வருங்காலங்களில் இதனை விட நாம் மோசமாக வாழும் நிலை வரும். எனவே, அவசரகால நிலையை புரிந்து கொண்டு இப்போது வாழ்வது நலம்.
  • இதுவரை வீட்டில் சமைத்து பழகாதவர்கள் இப்போது முயற்சிக்கலாம். ஆனால், நன்றாக சமையல் செய்பவரின் ஆலோசனையுடன் மட்டுமே. விபரீதமாக சமையலை செய்து சாப்பிட்டு விட்டு, அப்புறம் இது போன்ற காலங்களில் மருத்துவமனைக்கு சென்று விட வேண்டாம்.
  • ‘ நான் எப்போதும் வேலை செய்து கொண்டே இருப்பது எனது இயல்பு, நான் எப்படி இப்போது வீட்டிற்குள் முடங்கி கிடைக்க முடியும் ‘ – இப்போது நீங்கள் ஒரு ஆணியையும் புடுங்க தேவையில்லை. சும்மா இருப்பது தான் மனிதத்தின் இயல்பு. நாம் தான் நிறைய சிந்தனைகளை தலையில் ஏற்றி கொண்டு மூடர்களாக வலம் வருகிறோம். அதெல்லாம், உலக நிகழ்வு நன்றாக இருக்கும் போது பார்த்து கொள்வோம். இப்போதைய தேவை, சும்மா இருப்பது மட்டுமே.
  • சிந்தனைகளை மெருகேற்றுவதற்கான காலமிது – உலக வைரஸ் தாக்கங்களை பற்றி படியுங்கள், உங்களுக்கு பிடித்தமான புத்தகங்களை இப்போது திருப்பி பாருங்கள், அவசர காலங்களில் எவ்வாறு வாழ வேண்டும் என்ற சிந்தனையை உங்கள் மனதில் ஏற்படுத்துங்கள். பிற்காலங்களில் அது உங்கள் குழந்தைகளுக்கு உதவலாம்.
  • எதற்கெடுத்தாலும் அரசாங்கத்தை நம்பியிருக்க வேண்டாம், அதே வேளையில் அரசு சொல்லும் எச்சரிக்கையை உதாசீனப்படுத்த வேண்டாம். கொரோனா நிகழ்வுக்கு எந்த நாட்டையும், ஜாதி – மதத்தையும் நிலை நிறுத்த வேண்டாம். இல்லுமினாட்டி(illuminati) என சொல்லிக்கொண்டு நாம் குதர்க்கமாக சிந்திக்க வேண்டாம். இப்போது நாம் நம்மை தற்காத்து கொள்வதே.
  • நம் நாட்டில் வீடு இல்லாமல், ஒரு வேளை உணவு கூட கிடைக்க முடியாமல் சாலையில் பலர் போராடி கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு தான் உதவி தேவை. மற்றவர்கள் அவர்கள் வீட்டில் அமைதியாக இருக்கலாம்.
  • அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரு வாரங்களுக்கு முன்பு வரை, தங்கள் நாட்டில் எந்த பிரச்னையும் இல்லை. வேலைவாய்ப்பு நன்றாக இருக்கிறது. கொரோனா வைரஸ் தாக்கம் எங்கள் நாட்டில் பெரிய அளவில் இல்லை. எங்கள் பொருளாதாரத்திற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றார். ஆனால், இன்று அமெரிக்க பொருளாதாரமும், அதன் மக்களும் ஆட்டம் கண்டுள்ளனர். அதிபர் டிரம்ப், ‘ இது உண்மையிலே ஒரு தொற்று நோய் தான். நான் ஏற்கனவே இதனை பற்றி எண்ணி கொண்டிருந்தேன். அமெரிக்காவில் ஊரடங்கு உத்தரவு வருகிறது. இது அவசரகால நிலை தான்’ என கடந்த வாரம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இது அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும்.
  • சில நாடுகளில் அவசரம் அவசரமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், நம் நாட்டில் அது போன்ற நிகழ்வும் நடைபெறவில்லை. நாம் அடுத்த சில நாட்களுக்கோ அல்லது வாரங்களுக்கோ தேவையான உணவுப்பொருட்களை வாங்கி கொள்ள வேண்டிய நேரமும் இருந்தது. இப்போதும் சில இடங்களில் அந்த வாய்ப்பு உள்ளது. சந்தைக்கு சென்று தான் வாங்க வேண்டுமென்ற அவசியமில்லை.
  • 50, 100 ரூபாயை மிச்சப்படுத்துகிறேன் என கூட்ட நெரிசலில் சென்று விட்டு, உங்கள் குடும்பத்திற்கு கொரோனா வாய்ப்பை கொடுத்து விட வேண்டாம். நான் ஏற்கனவே சொல்லியிருப்பது போல, இது போர்க்கால நிகழ்வு தான். சென்னையில் வெள்ளம் வந்த போது இருந்த நிலை நமக்கு தெரிந்திருக்கலாம். சிக்கனமாக இருந்து, நமக்கு கிடைக்கக்கூடிய பொருட்களை கொண்டு அடுத்த சில நாட்களுக்கு நமது வாழ்வை நகர்த்துவது ஒன்றும் பெரிய விஷயமில்லை. முடிந்தால், உங்கள் அருகில் உள்ள வசதி இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவி செய்யுங்கள்.
  • தற்போது 144 தடை மட்டுமே உள்ளது. அதாவது அவசர தேவைக்கு பொருட்களை வாங்கி கொள்ளலாம். பொது இடங்களில் கூட்டம் மட்டுமே கூட கூடாது என்பது சட்டம். மீண்டும் அரசாங்கத்தின் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டால், நாம் வீட்டை விட்டு வெளியேற முடியாது.
  • நாம் தொழில்நுட்பத்தில் முன்னேறி இருந்தாலும், உண்மையில் மனிதர்கள் இன்றளவிலும் சுகாதாரத்தில் முன்னேற்றம் பெறவில்லை எனலாம். தனிமனிதர்களிடம் ஏற்படும் சுகாதாரமின்மை தான் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு காரணம். இது முந்தைய காலரா, மலேரியா போன்றவற்றிற்கும் பொருந்தும்.
  • எனக்கு எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது, எங்கள் ஊருக்கு கொரோனா எல்லாம் வருவதில்லை என சொல்பவரா நீங்கள் ?  நீங்கள் தான் மற்றவர்களுக்கு இந்த நோயை பரப்புவதற்கான தூதராக இயற்கையால் நியமிக்கப்பட்டுள்ளீர்கள் 🙂
  • இது சாதாரண காய்ச்சல் தான் எனினும், நமது சமூக கூட்டம் மற்றும் முறையில்லாத பழக்க வழக்கங்களால் இது மிகப்பெரிய விளைவை ஏற்படுத்துகிறது. உலகமயமாக்கலில் வளரும் நாடுகள், கொரோனா வைரஸ் தாக்குதலால் தங்கள் பெயருக்கு(சுற்றுலா துறை, முதலீடு, தொழில்) களங்கம் ஏற்படும் என சில புள்ளிவிவரங்களை மறைக்கலாம். ஆனால் நமக்கு மட்டுமே தெரியும், நமது உயிரும், குடும்பமும் எவ்வளவு முக்கியமென்று.
  • வெளியே செல்லாதீர்கள், மற்ற சில நாடுகளை போன்று அவர்கள் காவல் துறை மற்றும் ராணுவத்தை கொண்டு நம்மை அடக்கும் நிலைக்கு நாம் வர  வேண்டாம். உண்மையில் இதன் காரணமாக அரசு சார்பில் செல்லும் அவசர ஊழியர்கள் தான் பாதிக்கப்படுவர். காவல் துறைக்கும் யார் மருத்துவர், அரசு சார்பில் செல்லும் அவசரமானவர் என தெரிய வாய்ப்பில்லை. அதற்கான நேரமும் இப்போது இல்லை.

அரசியல்வாதிகளை நம்ப வேண்டாம், அரசின் மீதும் நம்பிக்கை வைக்க வேண்டாம். இது நம் வாழ்க்கை, நம் சந்ததிகளின் எதிர்கால வாழ்க்கை. எச்சரிக்கையாக இருங்கள். பஞ்சம் பட்டினியால் இறப்பு விகிதங்கள், பல நோய்களால் பாதிப்புகள், சாலை விபத்துகள் என பல கூறுகளால் தினந்தோறும் இறந்தவர்களின் எண்ணிக்கையை கொரோனா வைரஸ் பாதிப்புடன் ஒப்பிட வேண்டாம்.

இந்த கொரோனா (Covid-19) குழந்தை பிறந்து மூன்று மாதங்கள் தான் முடிந்துள்ளது. இதுவரை உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் 4.71 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களின் எண்ணிக்கை 21,283. கடந்த மூன்று நாட்களில் 10 சதவீதமாக இருந்த இறப்பு விகிதம் இன்று 16 சதவீதமாக அதிகரித்துள்ளது. 15,000 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். இந்த கொரோனா பாதிப்பு அடுத்த ஆறு மாதங்கள் இருந்தால் என்னவாகும் ? இது ஒரு பேரழிவு என்றே சொல்லலாம். இந்த இயற்கை நிகழ்வை சரி செய்ய நாம் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.

வரும் முன் காப்போம் என்பதும் ஒரு விழிப்புணர்வுடன் கூடிய எதிர்மறை சிந்தனையே(Negative Thought). அடுத்த சில வாரங்கள் நாம் வீட்டில் பாதுகாப்பாக, நம்மை தனிமைப்படுத்தி இருக்கும் பட்சத்தில், நாமும் இந்நாட்டின் தேச தலைவர்களாக வலம் வரலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

கொரோனா வைரஸ் – 144 தடை – இணைய வேகம் எப்படி இருக்கும் ?

கொரோனா வைரஸ் – 144 தடை – இணைய வேகம் எப்படி இருக்கும் ?

Internet Speed during the Curfew – Coronavirus – Covid-19

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை உலகளவில் (இந்திய நேரப்படி காலை 8 மணி) 3.78 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களின் எண்ணிக்கை 16,514 மற்றும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1.02 லட்சம் பேர். நம் நாட்டில் இதுவரை 499 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றில் முக்கியமானது நமது மதுரை மாநகரிலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நேற்றைய பங்குச்சந்தையில் மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தை இரண்டு குறியீடுகளும் சுமார் 13 சதவீத வீழ்ச்சியை சந்தித்தன. நாட்டின் இரு சந்தைகளும் நடப்பு வருடத்தில் 37 சதவீத இறக்கத்தை கண்டுள்ளன. கொரோனா வைரஸ்(Coronavirus) எதிரொலியால் பெரும்பாலான மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் தினசரி வணிகத்தை மேற்கொள்ள முடியாமல் நோயின் பரவலை தடுக்க, தொழில் புரிவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. ரயில்களும், பேருந்துகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. சில  நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்த படியே, தொழில் சேவைகளை அளிக்கும் படி கேட்டு கொண்டுள்ளது.

வீட்டிலிருந்து தொழில் சேவைகளை அளிக்கும் ஊழியர்களுக்கு பெரும்பாலும் தேவைப்படுவது இணைய பயன்பாடு மட்டுமே. நாட்டில் சுமார் 6 கோடிக்கும் அதிகமான இணைய பயன்பாட்டாளர்கள் உள்ளனர். சில ஊழியர்கள் தங்கள் நிறுவன சேவைக்காக பிராண்ட் பேண்ட் சேவைகளுக்கும் விண்ணப்பித்துள்ளனர்.

நமது நாட்டை பொறுத்தவரை கைபேசி வழியிலான இணைய பயன்பாட்டாளர்கள் எண்ணிக்கை தான் அதிகமாக காணப்படுகிறது. தற்போதைய நிலையில் 3 ஜி மற்றும் 4 ஜி பயன்பாட்டு சேவை திருப்திகரமாக இருந்தாலும், வீட்டிலிருந்து வேலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், இணைய சேவை வழங்கும் நிறுவனங்களும் தங்கள் இணைய வேகத்தை(Data Speed) அதிகரிக்க வேண்டிய சூழல் உள்ளது.

பொது ஐ.டி. சேவை, இணைய வழியிலான வங்கி மற்றும் நிதி சேவை, மருத்துவ சேவை, இதர கட்டாய தேவைகளுக்கு துரிதமான இணையம் அவசியமாகிறது. வரவிருக்கும் நாட்களில் இணைய பயன்பாட்டுக்கான சலுகைகளும் அறிவிக்கப்படலாம். தேவை அதிகரிக்கும் நிலையில், இணைய பயன்பாட்டுக்கான கட்டணத்தை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் உயர்த்துவதற்கான வாய்ப்பும் உள்ளது. இது போன்ற அவசர காலங்களில் கட்டணம் அதிகரிக்கப்படுமா என்பதனை காட்டிலும், ஏற்கனவே தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தாங்கள் செலுத்த வேண்டிய தொகைக்கு வழக்கு ஒன்றில் உள்ளது.

அனைவரும் வீட்டில் அமர்ந்திருக்கும் இது போன்ற காலங்களில் இணைய பயன்பாடு மற்றும் தொலைக்காட்சியை தான் பெரிதும் எதிர்பார்த்துள்ளனர். எனவே, அவசியமில்லாத இணைய பயன்பாட்டை சிலர் தவிர்க்கும் பட்சத்தில், அத்தியாவசிய தேவைக்கு பயன்படுத்துபவர்களால் சரியான நேரத்தில் சேவைகளை அளிக்க இயலும். இதனை நாம் மீறும் பட்சத்தில், டெலிகாம் நிறுவனங்களின் புதிய கட்டணத்திற்கு தள்ளப்பட வேண்டியிருக்கும்.

உங்கள் வீட்டில் உள்ள யாருக்கெல்லாம் இணைய சேவை அவசியமாகிறதோ அவர்களுக்கு முன்னுரிமை கொடுங்கள். பொழுது போகவில்லை என்றால், உங்களுக்கு பிடித்த விஷயங்களை வீட்டிலிருந்தே செய்ய பழகுங்கள். உங்கள் வீட்டு தோட்டத்தை பராமரிப்பது, புதிய புத்தகங்களை படிப்பது, சில திட்டங்களை வடிவமைப்பது(Home based Online Business), ஏற்கனவே செய்ய வேண்டிய வீட்டு வேலைகள் சில இருப்பின் அவற்றை இப்போது செய்யுங்கள். அதே வேளையில் இணையம் வழியாக சம்பாதிக்கிறேன் என மோசடி பேர்வழிகளிடம் மாட்டி கொள்ளாதீர்கள்.

நேரத்திற்கு சாப்பிடுங்கள். போதுமான உறக்கம் அவசியம். நோயினை எதிர்கொள்ள பாரம்பரிய உணவுகளை எடுத்து கொள்ளுங்கள். சமைக்க பழகுவதற்கான நேரமும் இப்போது உள்ளது.

வீட்டில் இருங்கள், அதனை விட தனிமையில் இருப்பது அவசியமாகும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

செபியின் புதிய கட்டுப்பாடுகள்: பங்குச்சந்தை மீண்டும் ஏற்றம் பெறுமா ?

செபியின் புதிய கட்டுப்பாடுகள்: பங்குச்சந்தை மீண்டும் ஏற்றம் பெறுமா ?

SEBI’s New Restrictions – will the Indian Stock Market rebound ?

கடந்த வெள்ளிக்கிழமை அன்று (20-03-2020) இந்திய பங்குச்சந்தை குறியீட்டில் நிப்டி(Nifty50) 482 புள்ளிகளும், சென்செக்ஸ்(Sensex) 1628 புள்ளிகளும் ஏற்றம் பெற்றது. இரண்டு சந்தைகளும் 5 சதவீதத்திற்கு மேல் கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அன்னிய முதலீட்டாளர்கள் கடந்த ஒரு மாதத்தில் 8 பில்லியன் டாலர்கள் அளவில் தங்கள் பங்குகளை விற்று வெளியேறியுள்ளனர்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

இரண்டு நாட்களுக்கு முன்பு 2.76 லட்சம் பேர் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்துள்ள நிலையில், இன்று காலை நிலவரப்படி சுமார் 3.37 லட்சத்தை தாண்டி விட்டது. இறப்பு விகிதம் மூன்று நாட்களில் 10 சதவீதத்திலிருந்து 13 சதவீதமாக அதிகரித்துள்ளது. அமெரிக்க சந்தையில் அரசு மற்றும் மத்திய வங்கியின் சார்பில் நாட்டின் பொருளாதார சரிவை தவிர்க்க பல பில்லியன் டாலர்கள் முதலீடு செய்யப்பட்டிருந்தது. இவை அனைத்தும் தற்போது பலனளிக்கவில்லை.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்(ICMR) அறிக்கையின் படி, இந்தியாவில் இதுவரை 17,237 பேருக்கு மட்டுமே கொரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சகத்தின் சார்பில் சொல்லப்பட்ட அறிக்கையில் இதுவரை விமான நிலையத்தில் 15.17 லட்சம் பயணிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

பங்குச்சந்தை சரிவை தடுக்க செபி(SEBI) கடந்த சில நாட்களாக பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அதிக ஏற்ற – இறக்கம் கொண்ட மற்றும் வலுவில்லாத சில பங்குகளில் மார்ஜின் அளவை குறைத்துள்ளது. அதே வேளையில் சில பங்குகளில் தினசரி வர்த்தகம் மற்றும் ஊக வணிகத்தை தடை செய்துள்ளது. மீறி வர்த்தகம் புரிபவர்களுக்கு அபராத கட்டணம் விதிக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.

இருப்பினும், பங்குகளை டெலிவரி முறையில் வாங்குபவர்களுக்கு மார்ஜின் அளவை அதிகரித்து சொல்லியுள்ளது செபி. சந்தை அளவிலான வரம்பிலும்(Free Floating) ஒரு குறிப்பிட்ட பங்கின் சந்தை மூலதனத்தில் 10 சதவீதமாக குறைத்துள்ளது. இது முன்னர் 20 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. சந்தை மூலதன வரம்பில் ஒவ்வொரு நாளின் வர்த்தக முடிவிலும் 10 சதவீத அளவில் அதிகரித்து சொல்லப்படும் என செபி தெரிவித்துள்ளது.

உலகளவில் காணப்படும் பொருளாதார மந்தநிலை அடுத்த சில காலங்களுக்கு நீடிக்கும் என்பதால், இந்திய சந்தையும் அதனை பின்பற்றியே செயல்படும். எனவே தற்போதைய நிலையில் சந்தையில் பங்குகளை வர்த்தகம் புரிவோரின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவை எட்டவில்லை. மேலும் இது சந்தை நகர்வுக்கு சாதகமாக இருக்காது. குறுகிய காலத்தில் சந்தை சில நாட்கள் ஏற்றம் பெற்றாலும், அடுத்த சில மாதங்களுக்கு கொரோனா வைரஸ் மற்றும் வணிக இணைப்பு பாதிப்பு ஆகியவை சந்தையை மந்தநிலையில் தான் வைத்திருக்கும். நீண்ட கால முதலீட்டாளர்கள் தற்போதைய சந்தையில் கொக்கு போல ஒற்றை காலில் நின்று சரியான மீன்களை (பங்குகள்) பிடிக்கலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com