All posts by skatzsaravana

Value Investor, Entrepreneur and Founder of Varthaga Madurai, Rich Investing iDEAS

கொரோனா வைரஸ் எதிரொலி – சில சமீபத்திய சந்தை புள்ளிவிவரங்கள்

கொரோனா வைரஸ் எதிரொலி – சில சமீபத்திய சந்தை புள்ளிவிவரங்கள் 

Recent Market & Economy numbers – Coronavirus – Covid-19

தற்போதைய நிலவரப்படி உலகளவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை (இந்திய நேரப்படி காலை 08.00, மார்ச் 21,2020) – 2,76,007. இறந்தவர்களின் எண்ணிக்கை – 11,401 மற்றும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 91,952 ஆகும். நடப்பில் சிகிச்சை எடுத்து கொண்டிருப்பவர்களில் 5 சதவீதம் பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

நம் நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 249 மற்றும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக உள்ளது. இதுவரை 5 பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சீனாவில் அதிகப்படியான மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதும், இத்தாலியில் அதிகமான இறப்பு விகிதமும் ஏற்பட்டுள்ளது. அடுத்த இரு வாரங்கள் நம் நாட்டிற்கு சவாலான காலமாக பார்க்கப்படுகிறது. முடிந்தவரை நம்மை நாமே தனிமைப்படுத்தி கொள்வது, கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும்.

கொரோனா வைரஸ் என்பது அம்மை, டெங்கு போன்ற சாதாரண பாதிப்பு தான் எனினும், இன்றைய காலத்தில் மக்கள் அடிக்கடி பயணத்தை மேற்கொள்வது மற்றும் பொது இடங்களில் அதிகமான கூட்டம் கூடுவதால் தான் பெரும்பாலும் இதன் தாக்கம் ஏற்பட்டுள்ளது. முறையான சுகாதார விழிப்புணர்வும் மற்றும் ஆரோக்கிய ஆர்வமும் தான் இதனை குறைக்க இயலும். கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக காணப்பட்ட பொருளாதார மந்தநிலை தற்போது மேலும் அதிகரித்துள்ளது. வரவிருக்கும் காலாண்டுகள் நாட்டின் பொருளாதார நிலைக்கு சவாலாக இருக்க கூடும்.

இதன் காரணமாக அரசு சார்பிலும் பொருளாதாரம் சார்ந்த மாற்றங்கள் ஏற்படலாம். அமெரிக்க கச்சா எண்ணெய் பேரலுக்கு 22.63 டாலர்களாகவும், ப்ரெண்ட் கச்சா எண்ணெய் 29 டாலர்களுக்கு குறைவாகவும் வர்த்தகமாகி வருகிறது. இது நமது பொருளாதாரத்திற்கு சாதகமாக இருந்தாலும், தற்போதைய நிலையில் பெரிய நுகர்வு தேவை எதுவுமில்லை. கொரோனா செய்திகளால், மற்ற பொருளாதார காரணிகள் சரிவர வெளியிடப்படவில்லை.

மீண்டும் எண்ணெய் வள நாடுகளில் பதற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. நடப்பாண்டின் நவம்பர் மாதத்தில் அமெரிக்க தேர்தல் நடைபெற இருப்பதால், அமெரிக்காவும் அதற்கான உத்தியை உலகளவில் ஏற்படுத்தும். நேற்றைய பங்குச்சந்தையில் தேசிய பங்குச்சந்தை குறியீடு நிப்டி(Nifty50) மற்றும் மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ்(Sensex) இரண்டும் 5 சதவீதத்திற்கு மேல் ஏற்றம் பெற்றுள்ளது. SGX Nifty குறியீடு தற்போது 7 சதவீத இறக்கத்தில் வர்த்தகமாகி வருகிறது.

நடப்பு மார்ச் மாதத்தில் இதுவரை அந்நிய முதலீட்டாளர்கள் சுமார் 51,000 கோடி ரூபாய் அளவிலான பங்குகளை விற்று தள்ளியுள்ளனர். அதே நேரத்தில் உள்ளூர் முதலீட்டாளர்கள் சுமார் 44,000 கோடி ரூபாய் அளவிலான பங்குகளை வாங்கியுள்ளனர். அமெரிக்க பங்குச்சந்தை கடந்த ஒரு மாதத்தில் 30 சதவீத வீழ்ச்சியையும், இந்திய பங்குச்சந்தை ஒரு மாத அளவில் 31.50 சதவீத இறக்கத்தையும் கண்டுள்ளது.

சந்தையில் அதிகப்படியான இறக்கம் ஏற்படுத்துவதை தடுக்க செபி(SEBI) பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இருப்பினும், தற்போதைய சந்தை நிலவரம் உலக பொருளாதார செய்திகளால் தான் பெரும்பாலும் நகர்ந்து கொண்டிருக்கிறது. சென்னையில் நேற்று 22 காரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 3,952 ஆகவும், 24 காரட் கிராம் ஒன்றுக்கு ரூ. 4,150 என்ற விலையிலும் வர்த்தகமானது.

நீண்ட கால மூலதன ஆதாயத்திற்கான(LTCG Tax) வரிகளை நீக்குதல் மற்றும் டிவிடெண்ட் தொகைக்கான(Dividend Distribution Tax) வரி கொள்கையில் மாற்றம் கொண்டு வரும் பட்சத்தில், அது நம் சந்தைக்கு சாதகமாக இருக்கும். அடுத்த சில காலங்களுக்கு பொருளாதார பின்னடைவை தொடர்ந்து பலர் வேலை இழக்கும் நிலை ஏற்படலாம். நாட்டில் உள்ள பெரு நிறுவனங்கள் சில தங்கள் ஊழியர்களின் சம்பளத்தை இது போன்ற காலங்களில் குறைக்க மாட்டோம் என கூறியுள்ளது நல்ல விஷயம். அதே வேளையில் குறுகிய காலத்தில் சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள் இந்த பொருளாதார வீழ்ச்சியை சமாளிக்குமா என்பதும் ஒரு கேள்வியாக உள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்ட துறைக்கு நிவாரணம் அளிக்கப்படும் என திருமதி. நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

எதிர்பாராத பொருளாதார மந்தநிலையில் தனிநபர் மற்றும் குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு நபரும் சிக்கன நடவடிக்கையை மேற்கொள்வது அவசியமாகும். இது ஒரு தற்காலிகமான நிகழ்வே. பொருளாதாரம் மீண்டு எழும் போது, நமக்கான வாய்ப்புகளும், வருமானங்களும் சிறப்பாக அமையும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

உங்கள் முதலீடு சிவப்பு நிறத்தில் உள்ளதா ? வாருங்கள் நண்பர்களே !

உங்கள் முதலீடு சிவப்பு நிறத்தில் உள்ளதா ? வாருங்கள் நண்பர்களே !

Things to do when your Investment Portfolio is in Red 

மும்பை பங்குச்சந்தை நடப்பு வருடத்தில் மட்டும் 30 சதவீதத்தை இறக்கமாக கண்டுள்ளது. ஒரு வாரத்தில் மட்டும் 14 சதவீதமும், கடந்த மூன்று வருட சராசரி வருவாய் மூன்று சதவீதத்திற்கு குறைவாகவும் உள்ளது கவனிக்கத்தக்கது. நமது தளத்தில் கடந்த ஒரு வருடமாக உலக பொருளாதார மந்தநிலை காரணிகளை சொல்லி வருகிறோம். நாட்டின் பொருளாதாரம் தொடர்ச்சியாக ஏழு காலாண்டுகளாக சரிவை சந்தித்துள்ளது. இது அடுத்த சில காலாண்டுகள் தொடரும் என்பதே உண்மை.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

உலகம் முழுவதும் காணப்படும் வர்த்தக விநியோக சங்கிலி(Supply Chain) வெட்டப்பட்டுள்ளது. இது சரியாவதற்கான காலம் சில மாதங்கள் ஆகலாம். நடப்பு 2020ம் வருடம் பொருளாதார வீழ்ச்சிக்கான காலமாகவே நாம் எடுத்து கொள்ளலாம். இவற்றில் பயப்பட எந்த நிலையும் இல்லை. மீண்டு வருவதே நமக்கான அடுத்த இலக்கு. பங்குச்சந்தை தான் வீழ்ச்சியடைகிறது, எனக்கென்ன என சிலர் கேட்கலாம். உண்மையில் இங்கு பங்குச்சந்தைக்கு பிரச்சனை எதுவுமில்லை. வீழும் பங்குச்சந்தை எப்போதும் அசுரபலமாக மீண்டும் எழுந்து விடும். 2008ம் ஆண்டு பொருளாதார வீழ்ச்சியிலும் இது தான் நடந்தது.

அடுத்த சில வாரங்கள் மற்றும் மாதங்கள் பொருளாதார ரீதியாக ஏற்படும் விஷயங்களை நாம் சமாளித்தாக வேண்டும். இங்கே குறிப்பிடுவது இன்னும் பல நாடுகளுக்கு குறிப்பிட்ட நேரத்தில் பொருட்கள் மற்றும் சேவைகள் சென்றடையவில்லை. துறைமுகங்களிலும், சாலைகளிலும் பல அத்தியாவசிய பொருட்கள் தேக்கமடைந்திருக்கலாம். கால தாமதம் தான் நமது தொழிலையும், நாம் வேலை பார்க்கும் நிறுவனத்தையும் பாதிக்கும். நமது அன்றாட வாழ்க்கை மாறுபட்டு காணப்படும். வேலைவாய்ப்பின்மை விகிதம் குடும்ப பட்ஜெட்டிலும் துண்டு விழ செய்யும்.

முதலீடு என எடுத்து கொள்ளும் போது, பங்குச்சந்தை மற்றும் பரஸ்பர நிதி திட்டங்களில் உள்ள உங்கள் முதலீடு சிவப்பு நிறத்தில் உள்ளதா ? கவலையடைய வேண்டாம். சரியான நிகழ்வை தான் நீங்கள் சந்தித்து வருகிறீர்கள். உலக பொருளாதாரம் வீழ்ந்தால்(Recession), நம் முதலீடும் குறைய தானே செய்யும். பாதுகாப்பான வங்கி டெபாசிட் என அங்கே சென்றால், வங்கிகளில் ஏற்பட்ட சமீபத்திய நிகழ்வுகள் மற்றும் வங்கி வட்டி விகித குறைவு ஆகியவை சந்தையை விட பெரிய பிரச்னையாக உள்ளது.

வங்கிகளில் காணப்படும் டெபாசிட்டுக்கான வட்டி விகிதம்(Interest Rates) குறைவாக இருப்பதும், பணவீக்கத்தை தாண்டிய வருவாயை ஏற்படுத்தாதும், பங்குச்சந்தையை காட்டிலும் மிக பெரிய ரிஸ்க் என்றே சொல்லலாம். குறுகிய காலத்தில் அவசர கால தேவைக்கு உங்கள் சேமிப்பு கணக்கில் வரவை வைத்து கொள்ளுங்கள். நீண்ட காலத்திற்கு பங்குச்சந்தை மற்றும் பரஸ்பர நிதிகளை தேர்ந்தெடுங்கள். சரி விஷயத்திற்கு வருவோம்…

உங்கள் பங்குச்சந்தை மற்றும் பரஸ்பர நிதி முதலீடு சிவப்பு நிறத்தில் இருப்பதற்கான காரணம் பங்குச்சந்தையில் காணப்பட்ட வீழ்ச்சி தான். அதற்காக இப்போது அந்த முதலீடுகளை நஷ்டத்தில் வெளியே எடுத்து விடாதீர்கள். பின்பு, நீங்கள் மிகப்பெரிய ஒரு வாய்ப்பை தவற விடுகிறீர்கள்  என்று அர்த்தம். பங்குச்சந்தை வீழ்ச்சி இப்படியே செல்லாது. சில மாதங்கள் ஆகலாம், இந்த வருடம் முழுவதும் இப்படி இருக்கலாம். மீண்டு எழும், பல மடங்குகளில் – ஆம், நீங்கள் சந்தையை நகர்த்த வேண்டாம். இறக்கத்திற்கு காரணமான பண முதலைகள் மீண்டும் முதலீடு செய்வர். அவர்கள் தான் சந்தையை அடுத்த இடத்திற்கு மீட்டு செல்வர். உங்களது முதலீடு 5,000 ரூபாய் அல்லது 5 லட்சம் ரூபாயாக இருந்தாலும் பரவாயில்லை. என்ன, ஐந்து கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளீர்களா ? அட, பண முதலைகள் டிரில்லியன் டாலர்களில் முதலீடுகளை வைத்துள்ளனர். அவர்கள் தான் சந்தை நகர்வை தீர்மானிப்பது.

சிவப்பு நிறத்தில் இருக்கும் போது செய்ய வேண்டிய காரியங்கள்(பரிகாரங்கள்):

நான் எதற்கு பரிகாரம் செய்ய வேண்டும் என்கிறீர்களா ? எனது முன்னோர் செய்த காரியத்தை நான் தான் ஏற்று கொள்ள வேண்டுமல்லவா. அதனை போல தான் முதலீடுகளிலும். நாம் செய்த சிறு சிறு முதலீட்டு தவறு தான் இவை. பரவாயில்லை, சரி செய்து கொள்ளலாம்.

முதலில் பங்குச்சந்தைக்கு(Equity Investors) வருவோம், அப்புறம் பரஸ்பர நிதிகள். பங்குச்சந்தையில் உள்ளவர்கள் நடப்பு காலத்தில் முடிந்தவரை தாங்கள் வாங்கிய பங்குகளில் நிதி நலன்களை(Financial Health) சரி செய்து கொள்வதற்கான அருமையான தருணம் இது. அடிப்படை பகுப்பாய்வை பூர்த்தி செய்யும் நிறுவனங்களை மட்டும் உங்கள் முதலீட்டு போர்ட்போலியோ சாதனத்தில் வைத்திருப்பது நன்று. இங்கே நீங்கள் இதுவரை வாங்கிய பங்குகளின் விலை முக்கியமல்ல. நிறுவனத்தின் நிர்வாகமும், நிதி அறிக்கையும் தான்.

சரியான நிர்வாகம் இல்லாத மற்றும் திவால் ஆகப்போகும் நிறுவனங்களின் பங்குகளை வெளியேற்றுங்கள். காளை சந்தையில் எந்த பங்குகளும் எவெரெஸ்ட் சிகரம் போன்று விலையேறும். ஆனால், கரடி சந்தை தான் உண்மையான நிலையை விவரிக்கும். நீங்கள் கஷ்டப்படும் போது உங்கள் உறவு மற்றும் நட்புகளை பற்றி தெரிந்து கொள்ளலாம் – இது சந்தைக்கும் பொருந்தும்.

நல்ல நிர்வாகம் மற்றும் நிதி அறிக்கையை கொண்டிருக்கும் நிறுவனங்களின் பங்குகளை அதன் உண்மையான விலையில் வாங்குங்கள். மலிவான விலை கண்டிப்பாக கிடைக்கும். அதற்காக ஊடகங்களில் வரும் விளம்பரத்தை பார்த்து பங்குகளை வாங்கிய பின்பு மாட்டி கொள்ள வேண்டாம். அடிப்படை பகுப்பாய்வுக்கான இலவச வகுப்புக்களை நம் தளத்தில் கொடுத்துள்ளோம். படித்து பயன் பெறுங்கள், முடிந்தால் சந்தேகம் கேளுங்கள்.

Fundamental Analysis – Share Market Free Course Registration

உங்களுக்கு நேரம் இல்லையெனில்,  சரியான நிதி ஆலோசகரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கான கட்டணத்தை வழங்கி முதலீட்டு முடிவுகளை எடுங்கள்.

முடிந்தவரை இப்போதைய நிலையில் P/E மற்றும் P/B விகிதங்களை  தனிப்பட்ட பங்குகளில் தவிருங்கள். இந்த விகிதங்கள் அடிப்படை முறை மட்டுமே, அவை நல்ல நிறுவனங்களை  பிரதிபலிக்காது. ஏற்கனவே நீங்கள் முதலீடு செய்திருக்கும் நிறுவனங்கள் நன்றாக உள்ளது, ஆனால் விலை மட்டும் பெருத்த சரிவை சந்தித்துள்ளதா ?  கவலை வேண்டாம், இப்போது மலிவான விலையில் சிறிய அளவில் பங்குகளை வாங்குங்கள். மொத்தமாக முதலீடு செய்வதை தவிர்ப்பது நலம். ஒவ்வொரு 10-20 % வீழ்ச்சியில் பங்குகளை வாங்க தயாராகுங்கள். அதற்காக காலம் தாழ்த்தியும் முதலீடு செய்ய வேண்டாம். இங்கே யாருக்கும் தெரியாது, குறைந்தபட்ச விலை இது தான் என்று. நீங்கள் செய்துள்ள முதலீட்டு அளவை பார்த்து சராசரி செய்து கொள்ளுங்கள்.

புதிய பங்குகளில் வாய்ப்பு கிடைக்கிறது என்றால், துவக்கத்தில் சிறிய அளவிலான பங்குகளை வாங்குங்கள். பின்பு அதன் விலை தன்மையை கண்டறிந்து கணிசமான தொகையை முதலீடு செய்யுங்கள். உங்களால் நம்ப முடியாவிட்டாலும் பரவாயில்லை, பங்குச்சந்தையின் ஒவ்வொரு வீழ்ச்சியிலும் செய்யப்படும் முதலீடு, அதற்கடுத்த 5 வருடங்களில் 10-15 மடங்குகளில் வருவாயை அளித்துள்ளது. இதற்கு மேல் வேறொரு நேர்மையான வாய்ப்பு கிட்டுமா என தெரியவில்லை.

நினைவில் கொள்ளுங்கள்: உங்கள் முதலீடு சிவப்பு நிறத்தில் காண்பித்தாலும், நீங்கள் அதனை விற்று விட்டால் மட்டுமே, அது உங்களுக்கான நட்டம். இல்லையென்றால் அது சில மாதங்களுக்கு பிறகு பசுமையான பச்சை நிறத்தில் இருக்கும்.

பரஸ்பர நிதி முதலீட்டாளருக்கு(Mutual Funds Investors):

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

  • உங்களை தான் எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன். பங்குச்சந்தையில் நேரிடையாக உள்ளவர்களுக்கு ரிஸ்க் தன்மை பற்றி ஓரளவுக்கு தெரியும். ஆனால், பரஸ்பர நிதியில் உள்ளவர்களுக்கு ?  நண்பர் சொன்னார், ஏஜென்ட் சொன்னார், நிதி ஆலோசகர் பரிந்துரைத்தார் மற்றும் விளம்பரம் (மியூச்சுவல் பண்ட் சரியானது !) பார்த்து முதலீடு செய்தேன் என சொல்பவரா நீங்கள் ?
  • இந்த உலகில் முதலீடு என வரும் போது, எந்தவொரு முதலீட்டிற்கும் ரிஸ்க் தன்மை என்பது இல்லாமல் இல்லை. வங்கிகளிலும் வட்டி விகித மாற்றங்கள் ரிஸ்க் தன்மை கொண்டவை தான். குறைவான வட்டி வருவாய் இருப்பின், நீண்ட காலத்தில் உங்களால் பணவீக்கத்தை தாண்டிய நிதி இலக்குகளை அடைய முடியாது.
  • நீங்கள் ஏற்கனவே செய்துள்ள முதலீடு சிவப்பு நிறத்தில் இருந்தால், முதலில் நீங்கள் செய்துள்ள முதலீட்டு திட்டத்தை பற்றி யாரிடமாவது கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். அது பங்கு சார்ந்த திட்டமாக இருக்கும் பட்சத்தில், தற்போதைய சூழ்நிலையில் இறங்க தான் செய்யும். முதலீட்டை எடுத்து விடாதீர்கள், அது தான் பெருத்த நஷ்டம்.
  • இதனை சமாளிக்க நீங்கள் இரு விஷயங்களை செய்தாக வேண்டும் – முதலில் நீங்கள் மாத எஸ்.ஐ.பி.(SIP Investing) முறையில் முதலீடு செய்து வந்தால், உங்கள் எஸ்.ஐ.பி. தொகையை அதிகரித்து அடுத்த ஒரு வருடத்திற்கு முதலீடு செய்யுங்கள். உதாரணமாக உங்களது மாத எஸ்.ஐ.பி. ரூ. 10,000 எனில் இதனை அடுத்த ஒரு வருடத்திற்கு ரூ. 15,000 அல்லது ரூ. 20,000 என மாற்றி கொள்ளுங்கள்.
  • கையில் ரொக்கமாக அதிக தொகையை கொண்டிருப்பவர்கள், சந்தையின் ஒவ்வொரு சரிவிலும் ஒரு முறை முதலீட்டை(Lumpsum) செய்யுங்கள் அல்லது வாராந்திர எஸ்.ஐ.பி.(Weekly SIP) முறையை தேர்ந்தெடுங்கள். தற்போதைய உங்களது பழைய முதலீட்டை எக்காரணத்திற்காகவும் கடன் பத்திரங்களுக்கு(Debt Funds) மாற்றி கொள்ள வேண்டாம் (அவசர காலத்திற்கு தவிர்த்து). அதற்கான உத்தி சில மாதங்களுக்கு முன்பே முடிந்து விட்டது.
  • உங்களுடைய வேலை அடுத்த ஒரு வருடத்திற்கு பரஸ்பர நிதிகளில் முதலீட்டை அதிகப்படுத்தி கொள்வது தான். உங்கள் தேவை குறுகிய காலம் எனில், அதற்கான முதலீட்டு திட்டத்தை தேர்ந்தெடுத்து கொள்ளலாம். பரஸ்பர நிதிகளில் அடுத்த ஒரு வருடத்தில் கோடிகளை அள்ளுவேன் என தவறான முதலீட்டு உத்தியை பயன்படுத்த வேண்டாம்.
  • உங்களது முதலீட்டு இலக்கு நீண்ட காலமாக இருப்பது நலம். தற்போது சந்தையில் அமைந்திருக்கும் வாய்ப்பு, அடுத்து எந்த காலத்தில் கிடைக்கப்பெறும் என யாருக்கும் தெரியாது. இந்த சமயத்தில் செய்யப்படும் முதலீடு அதிக யூனிட்களை கைப்பற்றும். இதனால் பிற்காலத்தில் உங்கள் நிதி இலக்கிற்கான தொகையும் எளிமையாகும்.

தற்போது நடந்து கொண்டிருப்பது ஒரு நீர்க்குமிழி(Bubble) உடைந்திருப்பது தான். இது 2008ம் ஆண்டிலும் நடைபெற்றது. அப்போது வேறொரு காரணம், இப்போது கொரோனா வைரஸ் மீது பழியை போட்டு விட்டார்கள். எது நடந்தாலும், இந்த நிலை அடுத்த ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தி விட்டு செல்லும்.

எச்சரிக்கை:  பங்குச்சந்தை மற்றும் பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்வோர் (அஞ்சலக மற்றும் வங்கி டெபாசிட்தாரர்களுக்கும்) கவனத்திற்கு, கீழே சொல்லப்படும் நான்கு விஷயங்களை செய்து விட்டு முதலீடு செய்ய புறப்படுங்கள். இல்லையெனில், நெஞ்சு வலியை வைத்து கொண்டு, பங்குச்சந்தைக்கு வர வேண்டாம் என தாழ்மையாக கேட்டு கொள்ளப்படுகிறது.

எந்தவொரு முதலீட்டை மேற்கொள்ளும் முன்(Precaution):
  • டேர்ம் பாலிசியை(காப்பீடு) பெறுவது அவசியம்
  • தனிநபர் விபத்து காப்பீடு இன்றையளவில் கட்டாயம்.
  • குடும்பத்திற்கான மருத்துவ காப்பீடு
  • அவசர கால தேவைக்கான நிதி

Term Insurance Plan | Personal Accident Insurance | Mediclaim Policy | Emergency Fund

வாருங்கள் நண்பர்களே, சிவப்பு நிறத்தை பச்சையாக்குவோம்….

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

பொருளாதார மந்தநிலை – கச்சா எண்ணெய் வீழ்ச்சி – பெட்ரோல் மட்டும் ஏன் குறையவில்லை ?

பொருளாதார மந்தநிலை – கச்சா எண்ணெய் வீழ்ச்சி – பெட்ரோல் மட்டும் ஏன் குறையவில்லை ?

Economic Recession – Crude Oil Fall below $30 – Why not just Fuel Prices ?

நாட்டின் வர்த்தக பற்றாக்குறை பிப்ரவரி மாதத்தின் முடிவில் 9.85 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. இது கடந்த ஜனவரி மாதத்தில் 9.72 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஏற்றுமதி(Exports) 27,650 மில்லியன் அமெரிக்க டாலர்களாகவும், இறக்குமதியில்(Imports) 37,500 மில்லியன் அமெரிக்க டாலர்களாகவும் உள்ளது. சொல்லப்பட்ட 9.85 பில்லியன் டாலர்கள் என்பது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ. 72,850 கோடி !

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

நாட்டின் இறக்குமதியில் சீனாவின் பங்களிப்பு முக்கியத்துவம் பெறுகிறது. நாம் சீனாவிலிருந்து 15 சதவீத இறக்குமதியை மேற்கொள்கிறோம். இதன் மதிப்பு சுமார் 73 பில்லியன் டாலர்களுக்கு மேல். அமெரிக்காவிலிருந்து 6.5 சதவீதமும், சவூதி அரேபியாவிலிருந்து 5.7 சதவீதமும் மற்றும் ஐக்கிய அரபு நாட்டிலிருந்து 5.4 சதவீத இறக்குமதியை கையாள்கிறோம்.

ஈராக் மற்றும் இரான் நாட்டின் பங்களிப்பு முறையே 4.9 சதவீதம் மற்றும் 3 சதவீதமாக உள்ளது. நம் நாட்டின் மொத்த இறக்குமதியில் எரிபொருட்களின் பங்கு மட்டும் 33 சதவீதமாகும். இதன் மதிப்பு சுமார் 169 பில்லியன் டாலர்கள். இதற்கு அடுத்தாற் போல், முத்துக்கள், விலை உயர்ந்த உலோகங்கள், கற்கள் ஆகியவற்றின் பங்களிப்பு 13 சதவீதமாக உள்ளது. மின் மற்றும் மின்னணு உபகரணங்களின் இறக்குமதி 10 சதவீத பங்களிப்புடன் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

நமது இறக்குமதியில் பெரும்பாலும் கச்சா எண்ணெய் மற்றும் அதனை சார்ந்த பொருட்களின் மதிப்பு தான் அதிகமாக உள்ளது. கடந்த மூன்று மாதங்களாக பேசப்பட்டு வரும் கொரோனா வைரஸ் தாக்குதலின் இடையே, பெரும்பாலானோர் கச்சா எண்ணெய் விலை(Crude Oil Prices) நிலவரங்களை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. தற்போது அமெரிக்க கச்சா எண்ணெய்(WTI Crude) பேரலுக்கு 27 டாலர்களுக்கு குறைவாகவும், மற்றொரு சந்தையில் ப்ரெண்ட் குறியீடு பேரலுக்கு 31 டாலர்களுக்கு குறைவாக வர்த்தகமாகி கொண்டிருக்கிறது.

நடப்பு வருடத்தில் மட்டும் கச்சா எண்ணெயின் விலை 50 சதவீதத்திற்கு மேல் வீழ்ச்சி கண்டுள்ளது கவனிக்கத்தக்கது. இது கடந்த நான்கு வருடங்களில் காணப்பட்ட குறைந்த அளவாக சொல்லப்படுகிறது. உண்மையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி, நம் நாட்டிற்கு சாதகமாக இருந்திருக்க வேண்டும். உண்மையில் இங்கு உள்ள சாமானியனுக்கு இது நன்மையை அளித்ததா ?

கடந்த 2008ம் ஆண்டின் பொருளாதார வீழ்ச்சியின் போது, கச்சா எண்ணெய் விலை 70 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்தது. 2008ம் ஆண்டில் பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ.45 – 50  என்ற அளவில் இருந்தது. அப்போது கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 92 டாலர்களுக்கு அருகில் வர்த்தகமாகி கொண்டிருந்தது.

நம் நாட்டில் அரசின் வருவாய் பெரும்பாலும் வரிகளை சார்ந்து தான் உள்ளது. அதே வேளையில் ஈட்டப்படும் வரி வருவாய் முறையாக செலவழிக்கப்படுகிறதா, அது அடித்தட்டு மக்கள் மற்றும் வரியை செலுத்துபவருக்கு பயனளிக்கிறதா என்பதே நடுத்தர மக்களின் கேள்வி ? அரசும் நிதி பற்றாக்குறையை(Fiscal Deficit) காரணம் காட்டி, எரிபொருட்களின் விலையை ஜி.எஸ்.டி. வரி விகிதத்தில் கொண்டு வரவில்லை. நடப்பில் கச்சா எண்ணெய் விலை குறைந்திருந்தாலும், அரசு எரிபொருட்களுக்கான சுங்க வரியை (Excise Duty) லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தி உள்ளது. இதன் மூலம் அரசின் வருவாய் 39,000 கோடி ரூபாயாக அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது.

கச்சா எண்ணெய் விலை 50 சதவீதத்திற்கும் மேல் வீழ்ச்சியடைந்தும், அதன் பலன் சாமானியனை அடையவில்லை என்பது உண்மையில் வருத்தமளிக்க கூடிய விஷயம் தான். உதாரணமாக கடந்த வாரம் சனிக்கிழமை அன்று (14, மார்ச், 2020) கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 35 அமெரிக்க டாலர்களாக இருந்தது. ஒரு பேரல் 159 லிட்டர் எனும் போது, இந்திய ரூபாய் மதிப்பில் ரூ. 2,588 ஆக உள்ளது. அன்றைய டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ரூ. 73.96. அப்படி பார்க்கும் போது, ஒரு லிட்டர் கச்சா எண்ணெய் விலை ரூ. 16.27 !

ஒரு லிட்டர் கச்சா எண்ணெய்க்கு ஆகும் உற்பத்தி செலவு ரூ. 12.20. (அடிப்படை வரி, இறக்குமதி செலவு, போக்குவரத்து, எண்ணெய் நிறுவனங்களின் லாபம் உட்பட) எனவே, ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை அனைத்து செலவுகளையும் உள்ளடக்கி ரூ. 28.47 ஆக உள்ளது. இதற்கு அடுத்தாற் போல், மத்திய அரசு தனது வரியாக சுங்க வரி மற்றும் சாலை வரியை விதிக்கிறது. இதன் செலவு லிட்டருக்கு ரூ. 23. பெட்ரோல் பம்புகளின் கமிஷன் ரூ. 3.50 ஆகும். இவை அனைத்தையும் சேர்த்து இப்போது பெட்ரோல் லிட்டர் ஒன்றின் விலை 55 ரூபாயாக வந்து சேரும். இந்த விலை சாமானியனுக்கு கிடைத்திருந்தால் பரவாயில்லை.

சொல்லப்பட்ட பெட்ரோலின் விலைக்கு மாநில அரசு சார்பில் அதிகபட்சமாக 27 சதவீதம் வரை வரி விதிக்கப்படும். இது போக மாசு வரி 25 பைசா என கணக்கிடப்படுகிறது. ஆக மொத்தம் 14 மார்ச் அன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 70 ஆக உள்ளது. அப்போதைய கணக்கீட்டின் படி, டீசல் விலை லிட்டருக்கு ரூ. 62.58. இது நாட்டின் தலைநகரமான டெல்லியின் விலை நிலவரம்.

கடந்த 2014ம் ஆண்டில் ரூ. 9.20 ஆக இருந்த சுங்க வரி, நடப்பில் 22.98 ரூபாயாக உள்ளது குறிப்பிடத்தக்கது. அதாவது நாம் செலுத்தும் ஒரு லிட்டருக்கான பெட்ரோல் விலையில் 54 சதவீதம் வரி மட்டுமே உள்ளது. எரிபொருட்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் வரி இந்த நாட்டின் வளர்ச்சிக்கு உதவுமா ?

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

யெஸ் வங்கியை புனரமைக்கும் அரசின் திட்டம் – ஒன்று கூடிய தனியார் வங்கிகள்

யெஸ் வங்கியை புனரமைக்கும் அரசின் திட்டம் – ஒன்று கூடிய தனியார் வங்கிகள் 

Govt’s Plan to restructuring Yes Bank – Private Banks Participation

நேற்றைய அமைச்சரவையில் முதலீட்டை பெற முடியாமல் கடனில் தத்தளித்து கொண்டு இருக்கும் யெஸ் வங்கியை மீட்டெடுக்க புனரமைப்பு திட்டம் சொல்லப்பட்டிருந்தது. இதன் ஒரு பகுதியாக அதற்கான ஒப்புதலும் மத்திய அரசின் சார்பில் கூறப்பட்டுள்ளது. யெஸ் வங்கியின் 49 சதவீத பங்குகளை பாரத ஸ்டேட் வங்கியும், மற்ற பங்குகளை தனியார் வங்கிகள் மற்றும் நிறுவனங்கள் வாங்கி கொள்வதற்கும் திட்டம் சொல்லப்பட்டது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

நிறுவனர் திரு. ராணா கபூர் பதவியிலிருந்து விலகிய பின்னர், புதிய தலைவராக திரு. ரவ்நீத் கில் வந்தார். இவர் வங்கிக்கான முதலீட்டை பெறும் நோக்கில், யெஸ் வங்கி தனது செயல்பாட்டில் சுணக்கத்தை சந்தித்தது. இதனையடுத்து கடந்த வாரம் யெஸ் வங்கியை பாரத ரிசர்வ் வங்கி(RBI) தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. பணமோசடி சம்மந்தமாக நிறுவனரும் கைது செய்யப்பட்டார்.

ஆரம்ப நிலையில் ஐ.சி.ஐ.சி. வங்கி, யெஸ் வங்கியில் ரூ. 1000 கோடி முதலீட்டை மேற்கொள்ள உள்ளது. பங்கின் முகமதிப்பு(Facevalue) விலை ரூ. 2 ஆக இருக்கும் நிலையில், கூடுதலாக 8 ரூபாயை கொண்டு 100 கோடி பங்குகளை (பங்கு ஒன்றுக்கு 10 ரூபாய்) வாங்க உள்ளது ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி. பாரத ஸ்டேட் வங்கி ஏற்கனவே தனது முதலீடாக ரூ. 7,250 கோடியை சொல்லியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதாவது பங்கு ஒன்றுக்கு பத்து ரூபாய் வீதம் 725 கோடி பங்குகளை கையகப்படுத்த உள்ளது.

இது போல எச்.டி.எப்.சி. வங்கி(HDFC Bank) தனது முதலீடாக ரூ. 1000 கோடியும், ஆக்ஸிஸ் வங்கி ரூ. 600 கோடி முதலீட்டையும் யெஸ் வங்கியில் மேற்கொள்ள உள்ளது. ‘ யெஸ் வங்கியை புனரமைப்பதன் மூலம், வங்கி வாடிக்கையாளர்களின் நலன் பாதுகாக்கப்படும். மேலும் நாட்டில் ஒரு நிலையான நிதி சூழல் நிலவும் எனவும், வங்கியமைப்பு முறையை ஒழுங்காக வைத்திருக்க இது போன்ற நடவடிக்கை உதவும் எனவும் நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார் ‘.

யெஸ் வங்கியின் புதிய தலைவரை பாரத ஸ்டேட் வங்கி(SBI) தேர்ந்தெடுக்கும் என தெரிகிறது. கோடக் மஹிந்திரா வங்கியும் யெஸ் வங்கியில் குறிப்பிடத்தக்க முதலீட்டை மேற்கொள்ள உள்ளது. இது போக முதலீட்டாளர் திரு. ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, விப்ரோ நிறுவனத்தின் டிரஸ்ட் மற்றும் டி மார்ட்(Dmart) நிறுவனத்தின் நிறுவனர் திரு. ராதா கிஷன் தமானி ஆகியோரும் யெஸ் வங்கியில் முதலீடு செய்ய உள்ளனர்.

பாரத ஸ்டேட் வங்கி 49 சதவீத பங்குகளை யெஸ் வங்கியில் வாங்கினாலும், ரிசர்வ் வங்கி திட்டத்தின் படி அடுத்த மூன்று வருடங்களுக்கு யெஸ் வங்கியில் 26 சதவீத பங்குகளை வைத்திருக்கும் என சொல்லப்படுகிறது. மற்ற முதலீடுகளையும் யெஸ் வங்கிக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிரம் காட்டியுள்ளது.

நாட்டின் 4வது மிகப்பெரிய தனியார் வங்கியான யெஸ் வங்கியை மீட்டெடுக்கும் பட்சத்தில் அது இந்திய பொருளாதாரத்தில் நல்ல ஒரு மாற்றத்தை ஏற்படுத்தலாம். டிஜிட்டல் இந்தியா சேவைக்கு பெயர் போனது இந்த யெஸ் வங்கி, நிறுவனரின் முறைகேட்டுக்கு பின்னரும், பல வங்கிகளின் மூலம் முதலீட்டை பெற உள்ளது வங்கியின் நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளது. இருப்பினும், சிறு முதலீட்டாளர்களுக்கு வரவிருக்கும் முதலீடுகளால் பெரிதான பலன் எதுவுமில்லை. வங்கிகள் தங்கள் பணத்தை பெறுவதற்காகவே இது போன்ற புனரமைப்பு என்ற குற்றச்சாட்டும் பங்குதாரர்களிடையே ஏற்பட்டுள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

நாட்டின் பிப்ரவரி மாத சில்லரை விலை பணவீக்கம் 6.58 சதவீதம்

நாட்டின் பிப்ரவரி மாத சில்லரை விலை பணவீக்கம் 6.58 சதவீதம் 

India’s Retail CPI Inflation to 6.58 Percent in February 2020

உணவுப்பொருட்களின் விலை பிப்ரவரி மாதத்தில் சற்று குறைந்ததால், நாட்டின் சில்லரை விலை பணவீக்கம் 6.58 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது. இது கடந்த ஜனவரி மாதத்தில் 7.59 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 12 மாதங்களாக அதிகரித்து வந்த பணவீக்க விகிதம் இம்முறை ஒரு சதவீத அளவில் குறைந்துள்ளது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

2019ம் ஆண்டின் மார்ச் மாதத்தில் இருந்த 2.86 சதவீத சில்லரை விலை பணவீக்கம் ஜனவரி 2020ல் உச்சமாக 7.59 சதவீதத்தை அடைந்தது. ஜனவரி மாதத்தில் உணவு பொருட்களின் பணவீக்க விகிதம் 11.8 சதவீதமாக இருந்த நிலையில், பிப்ரவரி மாதத்தில் 9.5 சதவீதமாக குறைந்து காணப்படுகிறது. இது போல தானிய வகைகள் 5.3 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது பெரிய மாற்றம் ஏதுமில்லாமல் 5.2 சதவீதமாக உள்ளது.

காய்கறிகள், பழங்கள் மற்றும் பருப்பு வகைகளும் கடந்த மாதம் குறைந்துள்ளது. 50 சதவீதமாக இருந்த காய்கறிகளின் பணவீக்கம், பிப்ரவரி மாதத்தில் 31.6 சதவீதமாக காணப்படுகிறது. அதே வேளையில் பால் பொருட்களின் விலை 5.6 சதவீதத்திலிருந்து 6.1 சதவீதமாக அதிகரித்துள்ளது.

பிப்ரவரி மாதத்தில் ஒளி மற்றும் எரிபொருட்களின்(Fuel & Light) விலை அதிகரித்துள்ளது கவனிக்கத்தக்கது. 3.7 சதவீதமாக இருந்த எரிபொருட்களின் பணவீக்க விகிதம், கடந்த மாதத்தில் 6.4 சதவீதமாக அதிகரித்து காணப்படுகிறது. நடப்பு மாதத்தில் காணப்படும் கச்சா எண்ணெய் வீழ்ச்சி மாற்றங்கள், அடுத்து வரவிருக்கும் வாரங்களில் பணவீக்க விகிதங்களிலும் தெரிய வரும்.

துணிமணிகள் மற்றும் காலணிகள், புகையிலை பொருட்கள் ஆகியவற்றின் விலையும் கடந்த பிப்ரவரி மாதத்தில் சற்று விலை உயர்ந்து காணப்படுகிறது. ஜனவரி 2020ம் காலத்தில் சொல்லப்பட்ட சில்லரை விலை பணவீக்க விகிதம்(Consumer Price Index) கடந்த ஆறு வருடங்களில் காணப்பட்ட அதிகபட்ச அளவாக இருந்தது.

பிப்ரவரி மாத நுகர்வோர்(சில்லரை) விலை பணவீக்கம் நகர்ப்புறங்களில் 6.57 சதவீதமாகவும், கிராமப்புறங்களில் 6.67 சதவீதமாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

அனைத்து சுற்றுலா விசாக்களும் நிறுத்தி வைப்பு – மத்திய அரசு

அனைத்து சுற்றுலா விசாக்களும் நிறுத்தி வைப்பு – மத்திய அரசு 

Govt of India Suspends all Tourist Visas till April 15,2020 – COVID – 19

அமெரிக்காவின் டவ் ஜோன்ஸ் தொழில்துறை குறியீடு நேற்று(11-03-2020) சந்தையில் 6 சதவீத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இது போல நாஷ்டாக்(NASDAQ) குறியீடும் 4 சதவீத அளவில் இறக்கம் கண்டுள்ளது. கொரோனா வைரஸ் என்றாலே தற்போது அனைத்து நாடுகளும் குட்டிக்கரணம் போடும் நிலை தான் உள்ளது. பெரும்பாலான நாடுகள் பொருளாதார ரீதியான வீழ்ச்சியை சந்தித்து வருவது நம் நாட்டிற்கும் சாதகமான விஷயமாக அமையவில்லை.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

சீனாவில் பிரச்சனை ஏற்பட்டால், அது இந்திய பொருளாதாரத்திற்கு சாதகம் என ஒப்புக்கு சொல்லிக்கொண்டாலும், உலக மயமாக்கலுக்கு பிறகு, அனைத்து பொருளாதாரமும் பின்னலை போன்று தான் உள்ளன. அமெரிக்காவில் ஒரு பிரச்சனை என்றால் அது நம் நாட்டையும் பாதிக்க தான் செய்யும்.

மத்திய அரசு சார்பில் நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்வில் வெளிநாட்டு பயண ஆலோசனையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பை தொடர்ந்து, தற்போது வரை பெறப்பட்டுள்ள விசாக்கள் (மின்னணு விசா உட்பட) அனைத்தும் வரும் ஏப்ரல் 15ம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது.

இந்த அறிக்கை நாளை முதல் அமலாகும் எனவும், இவற்றில் அரசு அதிகாரிகள், அரசு சார்பில் செல்லும் தனிநபர்கள், ஐக்கிய நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் விசாக்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. அவசியமற்ற வெளிநாட்டு பயணங்களை தவிர்க்கும்படியும், தவிர்க்க முடியாத காரணங்களால் வெளிநாடு செல்ல நேர்ந்தோர், திரும்பும் போது 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர். இது போல நம் நாட்டிற்கு வருபவர்களுக்கும் இதே நடைமுறை பின்பற்றப்படும் எனவும் சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

உலக சுகாதார அமைப்பு(WHO) கடந்த இரு வாரங்களுக்கு முன்பு, கொரோனா வைரஸ் நிகழ்வை அவசர நிலை பிரகடனமாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது. கொரோனா வைரஸ் தாக்குதலால் உலகளவில் இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். கொரோனா வைரஸ் தாக்கம் சுமார் 100 நாடுகளுக்கும் மேல் பரவி உள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

உலக பொருளாதார நெருக்கடி பதற்றம் – முதலீட்டாளராக நாம் என்ன செய்யலாம் ?

உலக பொருளாதார நெருக்கடி பதற்றம் – முதலீட்டாளராக நாம் என்ன செய்யலாம் ?

Global Financial Crisis  – What can an investor do ?

கடந்த இரண்டு வருடங்களாக சொல்லி கொண்டிருந்த பொருளாதார மந்தநிலை இப்போது உறுதியாகி விட்டது என்றே சொல்லலாம். பிரெக்ஸிட் ஒப்பந்தம், கச்சா எண்ணெய் விலை மாற்றங்கள், அமெரிக்க-சீன வர்த்தக போர், அமெரிக்க-ஈரான் போர் பதற்றம், வாகனத்துறை விற்பனை மந்தம், உலக வெப்பமயமாதல், சீனாவின் அதிகப்படியான கடன், கொரோனா வைரஸ், சவூதி அரேபியாவின் எண்ணெய் போர் என கடந்த சில மாதங்களாக உலக பொருளாதார செய்திகள் இப்படி தான் இருந்துள்ளன.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

இது தவிர உள்நாட்டில் அரசின் புதிய கொள்கைகள் மற்றும் சட்டங்களில் மாற்றங்கள், பொருளாதார வளர்ச்சி குறைந்து வருவது, வேலைவாய்ப்பின்மை விகிதம், வங்கி திவால் மற்றும் கட்டுப்பாடுகள் என அனைத்தும் வைரல் செய்திகளாக இருந்துள்ளது. இவற்றிற்கான காரணத்தை சராசரி மனிதர்கள் புரிந்து கொள்ள முடியவில்லை என சொன்னாலும், உண்மையில் இந்த பொருளாதாரம் அவர்களை தான் பாதித்துள்ளது.

கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத அளவில் குறைந்தாலும், அரசின் நடப்பு கணக்கு பற்றாக்குறையில்(CAD) வேண்டுமானால் மாற்றம் ஏற்படலாம். என் வாழ்க்கை தரம் என்ன உயரவா போகிறது என சாமானியன் கேட்கலாம். இது தான் உலக அரசியல் நடப்பாக தற்போது உள்ளது. நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் திரு. பால் க்ரெக்மேன் கூறும் போது, ‘ நாம் நிரந்தர பொருளாதார மந்தநிலையை நோக்கி சென்று கொண்டிருப்பதை இப்போது சந்தை தெரிவிக்கிறது ‘ என தெரிவித்துள்ளார்.

இது போல உலகின் மிகப்பெரிய முதலீட்டு வங்கியான ஜே.பி.மோர்கன்(JP Morgan) தெரிவிக்கும் போது, ‘ உலக மந்தநிலை ஆபத்து உண்மையாகவே இருக்கிறது. கொரோனோ வைரஸ் பற்றிய செய்திகள் சந்தையை வெகுவாக பாதித்து வருவதை காண்கிறோம். அமெரிக்காவின் அரசு கடன் பத்திரங்கள் விகிதம் குறைவாக இருப்பது நாட்டின் பொருளாதாரத்திற்கு சாதகமான விஷயமாக இல்லை ‘ என கூறியுள்ளது.

இந்த செய்திகள் எல்லாம் பொருளாதார வீழ்ச்சிக்கு வழிவகுக்கிறதா என்றால் அது தான் இல்லை. முதலீட்டு ஜாம்பவான்களுக்கும், பல்வேறு நாடுகளின் அரசுக்கும் இந்த நிலை பல மாதங்களுக்கு முன்பே தெரிந்திருக்கலாம். ஆனால், இந்த நிலையை உறுதி செய்ய முன்வருவது யார் என்பதே கேள்வி. எனவே தான் தற்போது இந்த நிகழ்வு நடந்து கொண்டிருக்கிறது. பொருளாதார மந்தநிலை அல்லது வீழ்ச்சி என்றால் நாம் அச்சம் அடைய தேவையில்லை. இவை பொருளாதார உலகில் ஒரு சுழற்சி முறையே. எப்போதெல்லாம் நாம் இயற்கையை மீறுகிறோமோ அப்போதெல்லாம் நம்மை எச்சரிக்கை செய்ய சில சமிக்ஞைகள் வரும். அது போல தான் இதுவும்.

பொருளாதார மந்தநிலையை சிறு முதலீட்டாளராக நாம் சரி செய்ய முடியாது. ஏன், பெரிய முதலீட்டாளர்களாலும் முடியாது தான், ஆனால் தொழிலில் இருக்கும் பெரு நிறுவனங்கள் அரசுடன் ஆலோசனை செய்யும். அவற்றால் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். சிறு முதலீட்டாளராக நாம் செய்ய வேண்டியது எச்சரிக்கையுடன் கூடிய முதலீட்டு முறை தான். இது போன்ற சமயங்களில்  அதிக கடனை வாங்காதீர்கள், முடிந்தவரை கடனை குறைத்து கொள்ளுங்கள்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்பவர்களின் கவனத்திற்கு:
  • உங்கள் நிதி இலக்குகளை(Financial Goals) சார்ந்து தான் உங்கள் முதலீடு எப்போதும் இருக்க வேண்டும். உங்கள் இலக்கிற்கான காலம் 15 வருடங்கள் எனில், நீங்கள் அதனை மட்டும் தான் கவனிக்க வேண்டும். பொருளாதார மந்தநிலை அல்லது வீழ்ச்சி என்பது வந்து போக கூடிய ஒன்று. அது ஒரு தற்காலிகமான நிலையே.
  • பொதுவாக பரஸ்பர நிதிகளை பொறுத்தவரை, எஸ்.ஐ.பி. முதலீடு(SIP Investing) எப்போதும் சிறந்தது. பொருளாதார மந்தநிலை காலங்களில் சந்தை அதிகப்படியான இறக்கம் காண்பதால், நீங்கள் செய்யும் முதலீட்டிற்கு அதிகமான யூனிட்கள் கிடைக்கப்பெறுவது கவனிக்கத்தக்கது.
  • உபரித்தொகை(Surplus Cash) ஏதேனும் இருப்பின், ஒரு முறை முதலீட்டையும்(Lumpsum) மேற்கொள்ளலாம். அதே வேளையில், இதற்கு அடுத்து இறக்கம் காணாது என யாராலும் கணிக்க முடியாது. வாய்ப்பை பயன்படுத்துங்கள், இல்லையெனில் இது போன்ற காலங்களில் உங்கள் எஸ்.ஐ.பி. தொகையை அதிகப்படுத்தி கொள்ளுங்கள்.
  • பொருளாதார மந்தநிலை காலங்களில், நஷ்டத்தை தவிர்க்கிறேன் என மியூச்சுவல் பண்ட் தொகையை வெளியே எடுத்து விடாதீர்கள். அது தான் உண்மையில் நஷ்டம். நீங்கள் ஏற்கனவே முதலீடு செய்த தொகை மற்றும் மீண்டும் முதலீடு செய்யப்போகும் தொகை, உங்கள் கூட்டு வட்டியின் பலனை அதிகரிக்க செய்யும். இது தான் பணம் பண்ணும் மகத்துவம்.
பங்குச்சந்தையில் நேரடியாக முதலீடு செய்பவர்களுக்கு:
  •  மியூச்சுவல் பண்டையும், நேரடி சந்தையையும் ஒப்பிட்டு பார்க்காதீர்கள். பரஸ்பர நிதிகள் உங்கள் நிதி இலக்குகளை பூர்த்தி செய்ய உதவும். ஆனால் நேரடி பங்குச்சந்தை என்பது உங்களுக்கான செல்வ வளத்தை ஏற்படுத்துவதற்கு. என் பிள்ளைகள் மேற்படிப்பு கல்விக்கு சேர்க்கிறேன், மகள் திருமணத்திற்கு, ஓய்வுகால சேமிப்பு என்பவர்கள் தயவு செய்து பரஸ்பர நிதிகளை மட்டும் தேர்ந்தெடுங்கள். பரஸ்பர நிதிகளில் உங்கள் ரிஸ்க் தன்மைக்கு ஏற்றவாறு பல திட்டங்கள் உள்ளன.
  • ஆனால், பங்குச்சந்தை அவ்வாறு கிடையாது, நீங்கள் தான் நீந்த வேண்டும். உங்களுக்கு நீச்சல் கற்று கொடுக்க வேண்டுமானால் ஒரு பயிற்சியாளர் தேவைப்படலாம். நீங்கள் மட்டுமே பங்குகளை ஆராய்ந்து கிடைக்கப்பெறும் லாப-நட்டத்தை ஏற்று கொண்டு நீண்டகாலத்தில் செல்வத்தை(Wealth Creation) ஏற்படுத்த முடியும்.
  • பங்குகளில் முதலீடு செய்ய உள்ளோர், உபரி தொகையை மட்டுமே முதலீடு செய்ய வேண்டும். வங்கிகளில் கடன் வாங்கி முதலீடு செய்வது கூடாது. அவ்வாறான சூழ்நிலை சந்தையில் ஏற்பட்டாலும், அப்போது வங்கிகள் உங்களுக்கு கடன் கொடுக்க முன்வராது. வங்கிகளே அதிகப்படியான பங்குகளை வாங்கி குவிக்கும்.
  • பொருளாதார மந்தநிலை காலங்களில் சந்தை வாரந்தோறும் அதிகப்படியான சரிவை ஏற்படுத்தும். உங்களுக்கு தேவையான உத்தி – சரியான பங்குகளை கண்டறிவது. இதற்கு அடிப்படை பகுப்பாய்வை(Fundamental Analysis) தான் பின்பற்ற வேண்டும். அங்கே டெக்னிக்கல்கள் வேலை செய்யாது. தினம் தினம் சந்தைக்கு எதிர்மறையான செய்திகள் வந்து சேரும். பெரிய முதலைகள் பங்குகளை விற்று தள்ளும். சில முதலைகள் குறிப்பிட்ட பங்குகளை கீழே இறங்க செய்து, அடிமட்ட விலையில் முதலீடு செய்யும்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

  • இது போன்ற காலங்களில் உங்களுக்கான முதலீட்டு தொகையை சிறிய அளவிலாவது ஏற்படுத்தி கொள்ளுங்கள். உங்களிடம் ரூ. 5000 அல்லது  15,000 அல்லது ரூ. 50,000 அல்லது 5 லட்சம் என ஏதாவது ஒரு தொகையை ரொக்கமாக வைத்திருங்கள். நீங்கள் அலசி ஆராய்ந்த பங்குகள் 10-20 சதவீதம் வீழ்ச்சியடைந்தால், சிறுக சிறுக வாங்குங்கள். மறுமுறை வீழ்ச்சியடையும் போது மீண்டும் வாங்குவதற்கான தொகையை கையிருப்பாக வைத்திருப்பது நன்று.
  • நீங்கள் வாங்கும் பங்குகளின் குறைந்த விலை எது என்பதை யாராலும் சொல்ல முடியாது. எனவே ஒவ்வொரு வீழ்ச்சியையும் வாய்ப்பாக மாற்றி கொள்ளுங்கள். துவக்கநிலையில் சிறிய அளவில் பங்குகளை வாங்குவதும், இறக்கம் காண காண அதே முறையில் செய்வது தான் சாமர்த்தியம். ஒரே முழுங்காக முழுங்குகிறேன் என பெரிய மீனை விழுங்கி விடாதீர்கள்.
  • உதாரணமாக உங்களிடம் ரூ. 50,000 என்ற உபரி தொகை இருந்தால் ஆரம்ப நிலையில் 10-20 சதவீத தொகையை முதலீடு செய்யுங்கள். பின்பு அடுத்த இறக்கத்தில் அதே முறையை கடைபிடியுங்கள். சந்தை ஏற்றம் கண்டால், கவலைப்படாதீர்கள். மேலே சென்று முதலீடு செய்ய முயற்சிக்காதீர்கள். விலை மலிவாக இருக்கிறது என அனைத்து பங்குகளையும் ஒரே மாதிரியாக புரிந்து கொள்ளாதீர்கள். தரமான நிறுவனத்தின் உண்மையான பங்கு விலை தான் நமக்கு இப்போது தேவை.
  • நீங்கள் செய்யக்கூடிய முதலீடு அடுத்த 5 வருடங்களுக்கானது. அது உடனடியாக ஏற்றத்தை பெறாது. நாட்டின் வளர்ச்சி மேம்படும் நிலையில், தொழிலில் வளர்ச்சியும் கூடும். அப்போது உங்கள் பங்கின் விலையை காணுங்கள்.

சந்தை வீழ்ச்சி என்பது பொதுவாக தன்னை தானே சந்தை சரி செய்து கொள்வது தான். இந்த சூழ்நிலையில் தாக்குபிடிப்பவர்கள் காலத்தை வென்றுவிடுவார்கள். என்னிடம் பணம் இல்லை, நான் எப்படி முதலீடு செய்ய வேண்டும் என எண்ணுபவர்கள், இது அவசர காலம்(Emergency) என கருதி உங்கள் அனாவசிய செலவுகளை குறைத்து சந்தையில் முதலீடு செய்ய பணத்தை சேமியுங்கள். இதனையும் செய்ய முடியாதவர்கள், சந்தையின் போக்கை கவனியுங்கள். வேறு எதுவும் சொல்வதற்கில்லை.

நினைவில் கொள்ள வேண்டியவை:

  • தரகு நிறுவனங்கள் அளிக்கும் பங்கு பரிந்துரைகளை(Trading Tips & Calls) பின்பற்றி முதலீடு செய்யாதீர்கள். மோசடி பேர்வழிகளும் இந்த சமயத்தில் உலா வருவார்கள். நிப்டி50 பங்குகள் பாதுகாப்பானவை என நினைத்து முதலீடு செய்ய வேண்டாம் – யெஸ் வங்கி, டாட்டா மோட்டார்ஸ் ஆகிய பங்குகளும் நிப்டி தான்.
  • பொருளாதார மந்தநிலை என்று யார் சொன்னார்கள் என கேட்க வேண்டாம். யாரும் சொல்ல மாட்டார்கள், சில சமிக்ஞைகள் மட்டும் தான். நடைபெற்று முடிந்தவுடன் தான் அனைவரும் சொல்வார்கள். உங்களை பொறுத்தவரை இது தொடர்ச்சியான இறக்கம் மற்றும் வாய்ப்பு என எண்ணி கொள்ளுங்கள்.
  • இது போன்ற சமயங்களில் சந்தை தினந்தோறும் இறக்கம் காணுமா என சந்தேகிக்க வேண்டாம். பொருளாதார மந்தநிலை காலங்களில், சில நாட்கள் சந்தை ஏற்றம் காணவும் செய்யும். அமெரிக்க சந்தை கடந்த ஒரு மாதத்தில் 17 சதவீதமும், இந்திய சந்தை நடப்பு வருடத்தில் 14 சதவீதமும் இறக்கம் கண்டுள்ளது.
  • கடந்த 2008ம் ஆண்டில் இந்திய பங்குச்சந்தை 5 மாதங்கள் ஏற்றமும், 7 மாதங்கள் இறக்கமும் கண்டுள்ளது. நான்கு மாதங்கள் 10 சதவீதத்திற்கு மேல் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அதிகபட்சமாக அக்டோபர் 2008 மாதத்தில் 28 சதவீதம். ஏற்றத்தில் ஒரு முறை கூட சந்தை பத்து சதவீதத்தை தாண்டவில்லை.
  • நேர்மறையாக இருப்பது நன்று. அதனை விட எதிர்மறை நிகழ்வை புரிந்து கொண்டு, முன்னெச்சரிக்கையாக இருப்பது வெற்றிக்கு வழிவகுக்கும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

எல்.ஐ.சி. நிறுவனம் வாங்கிய பங்குகள் என்னென்ன ?

எல்.ஐ.சி. நிறுவனம் வாங்கிய பங்குகள் என்னென்ன ? 

LIC India’s Stock Portfolio and Shareholdings

நாட்டில் உள்ள பல சிறு காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் நாணய சங்கங்கள் ஆகியவை உள்ளடங்கிய 245 நிறுவனங்கள் 1956ம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் இணைக்கப்பட்டன. இவையே பின்னர் பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி.(LIC India) ஆக சொல்லப்பட்டது. நாட்டின் ஒரே பொதுத்துறை ஆயுள் காப்பீட்டு நிறுவனம் எல்.ஐ.சி. இந்தியா மட்டுமே. ஆயுள் காப்பீட்டு துறையில் 23 தனியார் நிறுவனங்கள் உள்ளன.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

எல்.ஐ.சி. காப்பீடு நிறுவனம் துவங்கியது முதல் தற்போது வரை ஏகபோக தனியுரிமை உள்ள பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமாகவே வலம் வந்துள்ளது. பொதுவாக எல்.ஐ.சி.யில் காப்பீட்டை பெற்றவர்கள் தங்கள் பணம் பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்படவில்லை என எண்ணி கொண்டிருக்கிறார்கள். காப்பீட்டு திட்டத்தை பொறுத்து அவை பங்குச்சந்தையிலும் முதலீடு செய்யப்பட்டு வருகிறது என்பதே உண்மை.

இன்றையளவில் அதன் வாடிக்கையாளர்கள் மற்றும் முகவர்கள் இந்த நிகழ்வை ஏற்று கொள்ளவில்லை என்றாலும், வரக்கூடிய நிதியாண்டில் எல்.ஐ.சி. இந்தியா பொதுத்துறை காப்பீடு நிறுவனம் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும் போது அவர்களுக்கு தெரிய கூடும். நம் நாட்டை பொறுத்தவரை பங்குச்சந்தையில் முதலீடு செய்யாத பொதுத்துறை நிறுவனங்கள் இல்லையென்றே சொல்லலாம்.

அரசு மற்றும் தனியார் துறையில் பிடித்தம் செய்யப்படும் பி.எப். (Provident Fund & NPS) தொகையும் சிறிய அளவில் பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்பட்டு வருகிறது. இதுபோக அரசின் ஒப்புதலுடன் நாட்டில் உள்ள பல பொதுத்துறை நிறுவனங்கள் சந்தையில் பல வருடங்களாக பட்டியலிடப்பட்டு வருகின்றன. எல்.ஐ.சி. காப்பீடு நிறுவனத்தின் சொத்து மதிப்பு சுமார் 32 லட்சம் கோடி ரூபாய்.

இதன் துணை நிறுவனங்களாக எல்.ஐ.சி. ஹௌசிங் பைனான்ஸ், எல்.ஐ.சி. மியூச்சுவல் பண்டு, ஐ.டி.பி.ஐ. வங்கி, எல்.ஐ.சி. கார்ட்ஸ், பென்ஷன் பண்டு நிறுவனம் மற்றும் எல்.ஐ.சி. இன்டர்நேஷனல். சொல்லப்பட்ட நிறுவனங்கள் எல்லாம் எல்.ஐ.சி. யின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளவை. இவை போக நாட்டில் உள்ள பல பொது பட்டியலிடப்பட்ட(Public Listed Companies) நிறுவனங்களில் எல்.ஐ.சி. நிறுவனம் முதலீடு செய்துள்ளது.

எல்.ஐ.சி. நிறுவனம் சுமார் 3 லட்சம் கோடி ரூபாய் அளவில் பங்குச்சந்தையில் முதலீடு செய்துள்ளது. மாருதி சுசூகி, ஐ.டி.சி., எல் & டி, மஹிந்திரா, பிரிட்டானியா, டைட்டன், ஏர்டெல், பஜாஜ் ஆட்டோ, அதானி போர்ட்ஸ், ரிலையன்ஸ் இன்ப்ரா, ஹீரோ மோட்டோகார்ப், இன்போசிஸ், சன் பார்மா, ரிலையன்ஸ் என பல பிராண்டுகள் கொண்ட நிப்டி(Nifty Stocks) பங்குகளை எல்.ஐ.சி. நிறுவனம் வைத்துள்ளது.

வங்கி துறையில் எஸ்.பி.ஐ., எச்.டி.எப்.சி., யெஸ் வங்கி, ஆக்ஸிஸ், ஐ.சி.ஐ.சி.ஐ, கோடக் மஹிந்திரா, கனரா வங்கி, சிண்டிகேட், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பேங்க் ஆப் இந்தியா ஆகிய நிறுவனங்களின் பங்குகளை வாங்கியுள்ளது. என்.டி.பி.சி., சீமென்ஸ், போஸ்ச்(Bosch), பவர் கிரிட், நேஷனல் அலுமினியம் கம்பெனி(NALCO), டாட்டா கெமிக்கல்ஸ், ஜி.இ. பவர்(GE Power) ஆகியவை இதன் முக்கிய பங்கு நிறுவனங்களில் ஒன்றாகும்.

எல்.ஐ.சி. நிறுவனம் பங்குச்சந்தையில் கால்பதிக்காத முக்கிய நிறுவனங்களே இல்லை எனலாம். அந்தளவுக்கு அதன் வாங்கும் திறன் எப்போதும் அதிகமாக உள்ளது. இதற்கு அதன் காப்பீட்டை பெறும் வாடிக்கையாளர்களும் ஒரு காரணம்.  ஐ.டி..சி. நிறுவனத்தில் இதன் பங்களிப்பு 16 சதவீதமும், எல் & டி நிறுவனத்தில் 14 சதவீதமும் உள்ளது. மாருதி மற்றும் பிரிட்டானியா நிறுவனத்தில் முறையே 7 சதவீதம் மற்றும் 6 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளது. இத்தாலி நிறுவனமான டெலிட்(Telit) கம்யூனிகேஷன் நிறுவனத்தில் 24 சதவீத பங்குகளை எல்.ஐ.சி. வைத்துள்ளது.

சமீபத்தில் அல்ட்ரா டெக் சிமெண்ட், நேஷனல் அலுமினியம், ஏர்டெல், குஜராத் பெட்ரோநெட், ஏர்டெல், எக்சைட்(Exide), ஹிந்துஸ்தான் ஜிங்க் ஆகிய நிறுவனத்தில் தனது பங்குகளை அதிகப்படுத்தியுள்ளது. நாட்டில் ஒரு வங்கியை கையகப்படுத்தியுள்ள ஒரே காப்பீடு நிறுவனம் எல்.ஐ.சி. தான். காப்பீடு ஒழுங்குமுறை விதிகளின்படி, ஒரு காப்பீட்டு நிறுவனம் தான் வாங்கிய எந்தவொரு நிறுவனத்திலும் 15 சதவீதத்திற்கு மேல் பங்குகளை வைத்திருக்க கூடாது. தற்போது எல்.ஐ.சி. இந்தியா ஐ.டி.பி.ஐ. வங்கியில் 51 சதவீதம், எல்.ஐ.சி. ஹௌசிங் பைனான்ஸ் நிறுவனத்தில் 40 சதவீதம் வைத்துள்ளது. இது வருங்காலத்தில் குறைக்கப்டும் எனவும் சொல்லப்பட்டுள்ளது.

அந்நிய முதலீட்டாளர்கள் நம் சந்தையில் பங்கு கொள்ளாவிட்டாலும், உள்ளூர் முதலீட்டாளர்களில் பரஸ்பர நிதிகள் தவிர்த்து, எல்.ஐ.சி. காப்பீடு நிறுவனம் தான் மிகப்பெரிய முதலீட்டாளராக உள்ளது கவனிக்கத்தக்கது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

மகளிர் தின முதலீட்டு சிந்தனைகள் – மார்ச் 8, 2020

மகளிர் தின முதலீட்டு சிந்தனைகள் – மார்ச் 8, 2020

International Women’s Day 2020 – Investment Thoughts

மார்ச் 8ம் தேதியான இன்று உலக மகளிர் தினமாக(Women’s Day T20) ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இது பெண்கள் உரிமைகளுக்கான மைய புள்ளியாகவும் பார்க்கப்படுகிறது. பெண்கள் இந்நாட்டின் கண்கள் – பொருளாதாரத்திலும் தான். பெண்கள் தொழில்முனைவிலும், முதலீட்டிலும் பங்கு பெறும் போது மட்டுமே, அது அவர்களின் எண்ணங்களும், அவர்களை சார்ந்த சமூகமும் மேம்படும்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

பெண் விடுதலை வேண்டும், அது நிதி சுதந்திரத்திலும் சாத்தியமே. வெறுமனே ஆண்களுக்கு நிகராக பெண்கள் வேலைக்கு செல்வதில் பெருமை அல்ல நம் உள்ளுணர்வு, மாறாக வேலைவாய்ப்புகளை தருவதிலும் பெண்கள் நேர் காண வேண்டும்.  ‘ சிறு சேமிப்பு ‘ என்ற ஒற்றை கூற்று பெண்களை மட்டுமே சேரும் என்பதனை மறுப்பதற்கில்லை.

பெண்கள் முன்னேற்றத்திற்கான என்னால் முடிந்த சிறு முயற்சி – சில சிந்தனைகளில்… இதோ

  • நீங்கள் கற்ற கல்வி உங்கள் குடும்பத்தை மட்டுமில்லாமல், பெண் சுதந்திரம் வேண்டும் அனைவருக்குமான துணையாக இருக்கட்டும். வெறும் ஏட்டுக்கல்வியாக இல்லாமல், உங்கள் அருகில் உள்ளவர்களை இணைத்து தொழில்முனைவை(Entrepreneurship) உருவாக்குங்கள். வேலையை தேடுவதற்கு பதிலாக, நீங்களே பலரை வேலைக்கு நியமிக்கும் அளவுக்கு முன்னேறுங்கள். இதோ இங்கு அனைத்தும் சாத்தியமே – இணையமும் உங்கள் மருதாணியிட்ட விரல்களில்.
  • சிறு சேமிப்பிலிருந்து சில்லரை வணிகம் வரை உனக்கான வாய்ப்பு இப்போது உள்ளது. ‘Whatsapp’ உன்னை போன்ற தோழிகளை தொழில் ரீதியாக இணைப்பதற்கே. முகநூலில் உன் எண்ணமுகம் பதிந்து, மற்றவர்களுக்கும் உதவ முன் வா (Social Networking) பெண்ணே.
  • முதலீட்டு உத்தியை உன் முன்னேற்றத்திற்கு பயன்படுத்து. சுருக்கு பையில் சில்லரை காசுகளை போடத்தெரிந்த என் அம்மாச்சி, அப்பத்தாவுக்கு பரஸ்பர நிதிகளும், பங்குச்சந்தையும்(Mutual Funds & Stock Market) பழக்கப்பட்டவை தான். பணவீக்கத்தை சரிசெய்ய உன் சேமிப்பை சிறப்பானதாக்கு.
  • உன் கணவனின் சரி பாதி நீ – வீட்டு பட்ஜெட் கணக்கிலும்(Budget Planning) உன் திறமையை காட்டு. பிள்ளைகளுக்கு சேமிப்பதற்கும், முதலீட்டிற்கும்(Savings vs Investing) உள்ள வித்தியாசத்தை சொல்லி தா. நீ இல்லாமல் ஒரு அணுவும் அசையாது – மாத எஸ்.ஐ.பி. முதலீட்டை நீயே துவக்கி வை. காப்பீட்டின் முக்கியத்துவத்தை உன் கணவனுக்கு புரிய வை, நமக்கும் பிள்ளைகள் இருக்கிறதென்று.
  • வேலை கொடுப்பதை பெருமையாக எண்ணு, வேலைக்கு செல்வதை வீணாக எண்ணாதே. உனக்கான சேமிப்பை இப்போதே உருவாக்கு, அதே வேளையில் நீ தான் உன் குடும்பத்தின் அவசர கால நிதி(Emergency Fund) என்பதை இப்போதே உணர்த்து.
  • வாழ்நாள் முழுவதும் நீ சுதந்திரமாக வாழ வேண்டுமா ? தலைமைப்பண்பே(Leadership) உனது தாரக மந்திரமாக கொள். குடும்பமும், சமுதாயமும் உனது இரு கண்கள். நீ இருந்தால் மட்டுமே அது சுகமாகும் சாத்தியம்.

சிறு வயதில், என்னுடன் விளையாடிய அவளது(தங்கை) தருணங்கள்… இப்போது நான் என் மகளுடன் விளையாடி கொண்டிருக்கும் மழலை எண்ணங்கள். மழலையின் அழகே அன்பின் அழகு, அதுவே பெண்ணின் அழகு !

  • நா. சரவணகுமார், நிதி மருத்துவர்(ஆலோசகர்), வர்த்தக மதுரை

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

யெஸ் வங்கியில் என்ன ஆனது ? – இந்திய பொருளாதாரத்தை அசைக்கும் குட்டி (உண்மை) கதை

யெஸ் வங்கியில் என்ன ஆனது ? – இந்திய பொருளாதாரத்தை அசைக்கும் குட்டி (உண்மை) கதை 

What happened to YES Bank ? – Banks that shook the Indian Economy

நடப்பு வாரத்தில் இந்திய பங்குச்சந்தைக்கு மட்டுமில்லாமல், நாட்டின் பொருளாதாரத்தை அசைக்க வைத்த விஷயங்களில் கொரோனா வைரஸ் அல்ல, இம்முறை யெஸ் வங்கி. ஆம், யெஸ் வங்கியின் நிறுவனர் மற்றும் முன்னாள் இயக்குனர் திரு. ராணா கபூரின் மீது அமலாக்க இயக்குனரகம் பணமோசடி வழக்கு ஒன்றினை பதிந்துள்ளது நேற்றைய இரவின் செய்தி.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

ஏற்கனவே ஓரிரு வருடங்களுக்கு முன்பு, யெஸ் வங்கியின் பிரமிப்பான வளர்ச்சி பற்றியும், நிறுவனர் ராணா கபூரை பற்றியும் எழுதியிருந்தோம். யெஸ் வங்கியில் குடும்ப சண்டை ஆரம்பித்து நிர்வாக சீர்கேட்டில் முடிந்துள்ளது. பொதுவாக பங்குச்சந்தையை பொறுத்தவரை நூறு சதவீதத்திற்கு மேல் ரிஸ்க் தன்மை கொண்ட ஒரு முதலீட்டு சாதனமாக கருதப்படுகிறது. அதனால் தான் உங்களின் உபரித்தொகையை மட்டும் முதலீடு செய்யுமாறு பரிந்துரைக்கப்படுகிறது.

அடுத்த மாதம் வீட்டில் விசேஷம், ஆறு மாதத்திற்கு பிறகு நான் வாகனம் வாங்க சேமித்து வைத்துள்ளேன், வீட்டுக்கடன் வாங்கிய தொகையில் சிறு தொகை கையில் உள்ளது என இருக்கும் பணத்தை எல்லாம் பங்குச்சந்தையில் போட்டு விட்டு, பின்பு நஷ்டமடைந்தவுடன் பங்குச்சந்தை சரியில்லை, நிறுவனம் ஏமாற்று பேர்வழிகள் என புலம்ப கூடாது. உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள நண்பர் ஒருவர் உங்களிடம் அவசரமாக ஒரு தொகையை கடனாக கேட்டாலே, நாம் யோசிக்க துவங்குவோம். ஆனால், பங்குச்சந்தையில் நமது பேராசை தான் பெரும்நஷ்டமாக செல்கிறது.

பங்குச்சந்தையில் பங்குகளை வாங்கும் முன் கவனிக்க வேண்டிய மூன்று விஷயங்களை சொல்லியிருந்தோம் – அவை நிறுவனர்கள், நிர்வாகம் மற்றும் நிதி அறிக்கைகள். இவற்றை  புரிந்து கொள்ளாமல் சந்தைக்கு வருவதில் எந்த பலனும் இல்லை. சார்ட்(Charts), 52 வார ஏற்றம், இறக்கம் – இவற்றை எல்லாம் அப்புறம் பார்த்து கொள்ளலாம். சந்தையில் உள்ள நிறுவனத்திற்கு உண்மையான தொழில் தன்மை இருக்க வேண்டும். முதலாளி எப்படியானவர், அவர்களின் நிறுவனத்திற்கு சென்றால் நமக்கு காபி, டீ ஏதும் தருவார்களா, நீங்கள் வாங்கிய பங்கு நிறுவனத்தின் ஆண்டு பொதுக்கூட்டத்திற்கு(AGM) இதுவரை சென்றுள்ளீர்களா, நிறுவனத்திற்கு கடன் தன்மை(Debt to Equity) எப்படி உள்ளது, கல்லாவில்(Cash Flow) பணம் தேறுமா என்பதனை எல்லாம் அலசி ஆராய வேண்டும்.

புரியவில்லை என்றால், உங்கள் நிதி இலக்குகளை சார்ந்து மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்யுங்கள். அங்கேயும் பிரச்சனை இருக்கத்தான் செய்யும் – வங்கியிலும், அஞ்சலகத்திலும் தான். இல்லையெனில் தகுந்த நிதி ஆலோசகரை கொண்டு முதலீட்டு முடிவை எடுங்கள். முடிவின் பலன் சரியில்லை என்றால், அவரை ஒரு வழி பண்ணுங்கள். நல்ல ஆலோசகர் என்றால், உங்கள் கையை பிடித்து எங்கு செல்ல வேண்டுமோ, அங்கு கூட்டி செல்வார். என்ன யெஸ் வங்கி என ஆரம்பித்து, அப்புறம் வேறு எங்கோ சென்று விட்டீர்கள் என்கிறீர்களா ? பிரச்சனை யெஸ் வங்கியில் மட்டுமல்ல. பங்கு வர்த்தகத்திலும் தான். சத்யம், யூனிடெக், ஜே.பி. அசோஸியேட்ஸ், கிங் பிஷர் ஏர்லைன்ஸ், ஆர்.காம், ஜெட் ஏர்வேஸ் இவை எல்லாம் அதன் துறையில் பிரபலமான மற்றும் கொடி கட்ட பறந்த நிறுவனங்கள் – இன்று என்ன ஆயிற்று. நிறுவனர்களும், பெரும் பண முதலைகளும் பங்குகளை விட்டு வெளியேறினாலும், சிறு முதலீட்டாளர்கள் ஈக்கள் மொய்ப்பது போன்று அந்த பங்குகளை ஆயிரக்கணக்கில், லட்சத்தில் வாங்குகின்றனர். சில காலத்திற்கு பின்னர் அந்த பங்கு, சந்தையில் வர்த்தகமாவதில்லை அல்லது நிறுவனம் காணாமல் போய்விடும். பொதுவாக திவாலாக போகும் நிறுவனங்களின் ஜாதகம் ஓரிரு வருடங்களுக்கு முன்பே தெரிய வரும். அப்போதே நாம் எச்சரிக்கையாக இருக்க பழக வேண்டும். 50 பைசா பங்கு 10 ரூபாய்க்கு செல்லும், நான் கோடீஸ்வரனாகி விடுவேன் என கற்பனை செய்து கொண்டிருக்க கூடாது.

நிர்வாகத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக ராணா கபூர்(Rana Kapoor) வலுக்கட்டாயமாக நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். ‘ என்னுடைய பங்குகள் அனைத்தும் வைரங்கள், நான் அதனை ஒரு போதும் விற்க மாட்டேன் ‘ என கூறியவர், பங்குகளை அடமானமும் வைத்தார், பின்பு விற்றும் விட்டார். பெரும் முதலைகளுக்கு தெரிந்திருக்கும், அரசுக்கும் தெரிந்திருக்கும். ஆனால் அவரது மனைவிக்கு தெரிய வாய்ப்பில்லை. புதிய தலைவராக திரு. ரவ்நீத் கில்(Ravneet Gill) வந்தார், யெஸ் வங்கி இனி மீண்டு விடும் என பலர் கூறினர்.

யெஸ் வங்கி தனது செயல்பாட்டில் பிரமிப்பான வளர்ச்சியை நோக்கி செல்கிறது என காட்ட பட்டாலும், வங்கியை செயல்படுத்த முதலீடு தேவைப்பட்டது. பல வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வந்தனர், பேசினர் மற்றும் சென்று விட்டனர். என்ன காரணமென்று வங்கி தலைமைக்கும், செபி மற்றும் ரிசர்வ் வங்கிக்கும் தெரிந்திருக்கலாம். நடப்பு வாரத்தில், வங்கி ஒழுங்குமுறை சட்டம் 45வது பிரிவின் கீழ் யெஸ் வங்கி அதன் அதிகாரங்களை பயன்படுத்த பாரத ரிசர்வ் வங்கி தடை விதித்தது. மேலும், வங்கியின் நிர்வாகத்தை தனது கட்டுப்பாட்டில் எடுத்து கொண்டது ரிசர்வ் வங்கி – மத்திய அரசின் துணையுடன்.

யெஸ் வங்கி(Yes Bank) அதிகமான கடன்களை கொண்டிருப்பதாகவும், ரிஸ்க் தன்மை அதிகம் கொண்ட கடன் நிலுவைகள் உள்ளதாகவும், எனவே இந்த வங்கியை சீரமைக்க வங்கிக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாகவும் சொல்லப்பட்டது. யெஸ் வங்கியின் பங்குகள் ஒரே நாளில் 85 சதவீதம் வரை சரிவை கண்டது. பங்கு ஒன்றுக்கு ரூ. 36.80 விலையிலிருந்த நிலையில், அது ஒரே நாளில் ரூ. 5.65 வரை சென்றது. நேற்று தேசிய பங்குச்சந்தையில் மட்டும் யெஸ் வங்கியில் வர்த்தகமான பங்குகளின் எண்ணிக்கை 126.50 கோடி பங்குகள் !

டெலிவரி பங்குகளின் அளவு 19 %. நேற்றைய வர்த்தகத்தில் யெஸ் வங்கியின் விற்றுமுதல்(Turnover) ரூ. 1866 கோடி. கடந்த வாரத்தின் ஒரு குறிப்பிட்ட நாளில், தலைவர் திரு. ரவ்நீத் கில், தங்களது வங்கியில் முதலீடு செய்ய ஒரு அந்நிய முதலீட்டு நிறுவனத்தை அழைத்துள்ளார். நீண்ட பேச்சுக்கு பின் அந்த நிறுவனத்தின் அதிகாரிகளை பாரத ரிசர்வ் வங்கியின் அலுவலகத்திற்கு அழைத்து சென்றுள்ளார். ரிசர்வ் வங்கியும் சில ஆலோசனைக்கு பின், அந்த குறிப்பிட்ட நிறுவனத்தை முதலீடுகளை வரவு வைக்கும் படி கேட்டு கொண்டுள்ளது. இந்த நிகழ்வு நடந்த மறுநாளே, மத்திய அரசு பாரத ஸ்டேட் வங்கியை(SBI), யெஸ் வங்கியில் முதலீடு செய்ய ஒப்புதலை அளித்துள்ளது. அதே நாளின் மாலை நேரத்தில் எஸ்.பி.ஐ. மற்றும் எல்.ஐ.சி. ஆகிய பொதுத்துறை நிறுவனங்கள் யெஸ் வங்கியின் 49 சதவீத பங்குகளை வாங்க உள்ளதாகவும், இயக்குனர் பதவியில் முன்னாள் எஸ்.பி.ஐ. அதிகாரி ஒருவர் நியமிக்கப்படுவார் எனவும் தகவல் வெளியானது.

கடந்த ஆறு மாதங்களாக பாரத ரிசர்வ் வங்கியும், மத்திய நிதி துறையும் யெஸ் வங்கியின் செயல்பாடுகளை கண்காணித்து வந்ததாக நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். இப்போது யெஸ் வங்கி மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில், மறுசீரமைப்பு(Reconstruction) நடவடிக்கையில் உள்ளது. பரஸ்பர நிதி நிறுவனங்களும் யெஸ் வங்கியில் முதலீடு செய்வதை கடந்த 2018-19ம் நிதியாண்டு முதலே குறைத்து வந்துள்ளதாக தெரிவித்துள்ளது. யெஸ் வங்கியின் வாடிக்கையாளர்கள், அடுத்த ஏப்ரல் 3ம் தேதி வரை தங்கள் சேமிப்பு மற்றும் நடப்பு கணக்கு, டெபாசிட் தொகையில் அதிகபட்சம் ரூ. 50,000 வரை மட்டும் பெற முடியும் எனவும் பாரத ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. அவசர தேவைகளுக்கு ரூ. 50,000க்கு மேல் பணத்தை பெற விரும்புவோர் அதன் ஒப்புதலை பெற வேண்டும்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

இந்த வங்கி பங்குகளுக்கு கடந்த இரண்டு வருடங்களாக இலக்கு விலைகளை(Target Price) நிர்ணயித்த தரகு நிறுவனங்களை என்னவென்று சொல்வது. ‘ இதற்கு தான் நான் பங்குச்சந்தையில் முதலீடு செய்வதே கிடையாது, பங்குச்சந்தை ஒரு சூதாட்டம். நல்ல வேளை, நான் தப்பித்து விட்டேன் ‘ என கூறும் நபர்களா நீங்கள் ? நீங்களும் இந்த வலையில் மாட்டிக்கொண்ட ஒருவர் தான். பொதுவாக உலகமயமாக்கலுக்கு பிறகு, உலகின் எந்த மூலையில் பிரச்சனை ஏற்பட்டாலும், அது பொருளாதார ரீதியாக பெருவாரியான மக்களை பாதிக்கும். சொல்லப்பட்ட வங்கியின் பிரச்சனை நாட்டின் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்.

அரசுக்கு தேவை வரி வருவாய் தான். வரி ஏய்ப்பு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகும் போது, அது நடுத்தர மக்களை தான் மேலும் பாதிக்கும். 20 சதவீத மக்கள் சரியாக இருந்தால், 80 சதவீத மக்கள் சுபிட்சமாக வாழ முடியும். நிறுவனங்கள் நேர்மையாக செயல்பட அரசும் தனது பங்களிப்பை அளிப்பது நன்று. அரசு தனது பங்காக சேவையை மட்டுமே அடிப்படையாக கொண்டு செயல்பட வேண்டும். பணம் பண்ணுவது அரசின் முக்கிய கொள்கையாக இருக்க கூடாது – அது தனியார் நிறுவனங்களின் வேலை. அவர்களை நேர்மையாக செயல்பட வைப்பதே அரசின் கொள்கை. வேலைவாய்ப்புகளை தனியார் நிறுவனங்கள் தான் அதிகப்படியாக உருவாக்க வேண்டும். பங்குச்சந்தையில் என்ன நடந்தால் என்ன, யெஸ் வங்கியில் பிரச்சனை நடந்தால் நமக்கென்ன என ஒருவர் நினைத்து கொண்டிருந்தாலும், இது தொடர் சங்கிலி தான். நிர்வாக சீர்கேட்டில் யெஸ் வங்கியாக இருந்தால் என்ன, டாட்டா நிறுவனமாக இருந்தால் என்ன – இங்கே பிராண்டுகளுக்கு வேலையில்லை, நல்ல நிர்வாகம் மட்டுமே ஒரு நிறுவனத்தின் பங்கை நீண்ட நாட்களுக்கு பங்குதாரர்களிடம் வைத்திருக்கும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com