கொரோனா வைரஸ் – பொருளாதார மந்தநிலை – பங்குச்சந்தை சரிவு எப்போது முடிவுக்கு வரும் ?
Covid-19 – Financial Crisis – Global Stock Market Crash – When will it end ?
இரண்டு வருடங்களுக்கு முன்பிருந்தே, பங்குச்சந்தையில் வர்த்தகமாகும் பங்குகளின் விலையும், அதன் அடிப்படை பகுப்பாய்வும்(Fundamental Analysis) ஒத்துப்போகவில்லை. நிறுவனங்களின் வருவாய் குறைந்து வந்ததும், அதற்கு நேரெதிராக பங்குகளின் விலை உச்சத்தில் இருந்ததையும் நாம் காண முடிந்தது. பல வளரும் மற்றும் வளர்ந்த நாடுகளில் பங்குச்சந்தை குறியீடுகள் எங்கோ செல்ல போகிறது என்ற மாயை ஊடகத்தின் மூலம் செய்திகளை ஏற்படுத்தியது.
ஆனால், உண்மையில் அடிப்படை பகுப்பாய்வு கூறுகளை நிறைவு செய்யாத பங்கு வர்த்தகம் வெகுநாள் ஏற்றத்தில் நீடிப்பதில்லை. இதனை தான் நாம் சொல்லி கொண்டிருந்தோம். உச்சத்தில் பல பங்குகளை வாங்குமாறு தரகு நிறுவனங்களும், ஊடகங்களும் போட்டி போட்டு சொல்லி கொண்டிருந்தன. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மந்தநிலையில் இருந்த பொருளாதாரம் ஒரேயடியாக நடப்பு 2020ம் வருடத்தில் தூக்கி போட்டது.
சந்தையில் உள்ள பண முதலைகளுக்கு சாக்கு போக்காக கொரோனா வைரஸ் செய்தியும் சேர்ந்து கொண்டன. பிறகென்ன, பங்குகளை அடித்து நொறுக்கி கீழே இறக்க செய்வது தான். முடிவில் சிறு முதலீட்டாளர்கள் உச்சத்தில் வாங்கி விட்டு, இப்போது மீண்டும் வாங்கலாமா அல்லது இருக்கிற பங்குகளை விற்கலாமா என யோசித்து கொண்டிருக்கின்றனர். நம்மில் பலரின் கேள்வி, இந்த நிலை எப்போது சரியாகும் என்பதே… இதுவும் கடந்து போகும்.
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 14 வயது ஜோதிடர் அபிக்யா ஆனந்த்(Abhigya Anand). சிறு வயது முதலே வான சாஸ்திரத்தில் ஆர்வம் கொண்ட இவர், பிரபஞ்சத்தில் உள்ள சில கோள்களின் கணிதங்களை கொண்டு எதிர்கால கணிப்புகளை சொல்லி வருகிறார். என்னடா, கொரோனா வைரஸ் மற்றும் பங்குச்சந்தை சரிவு எப்போது முடிவுக்கு வரும் என கேட்டால், வானவியல் கணிப்புகளுக்கு நம்மை கொண்டு செல்கிறாரே என கேட்க வேண்டாம். அடுத்த இரு பத்திகளை படியுங்கள்… சில விஷயங்கள் புரியும்.
ஏழு மாதங்களுக்கு முன்பு, இந்த உலகம் ஒரு பேராபத்தை சந்திக்க உள்ளது என ஒரு காணொளியை(Conscience) வெளியிட்டுள்ளார். அதாவது வானவியல் கணிதத்தின் படி, ராகு மற்றும் கேது ஆகிய இரண்டிற்கும் இடையே நடக்கும் ஒரு நிகழ்வும், இதனை சார்ந்த கால சர்ப்ப யோகத்தின் விளைவும் ஏற்பட போவதாக சொல்கிறார். இந்த காலம் நவம்பர் 2019 முதல் ஏப்ரல் 2020 வரை இருக்கும் என கணித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தாக்கம் மற்றும் பங்குச்சந்தை சரிவை முன்னரே கணித்துள்ள அபிக்யா, இந்த வைரஸ் தாக்கம் மே மாதம் 29ம் தேதி முதல் மெல்ல மெல்ல குறையும் எனவும், மனிதர்கள் விலங்குகளை கொள்ள வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளார். பங்குச்சந்தை நடப்பு வருடம் முழுவதும் இறக்கத்தில் தான் நடைபெறும் எனவும் கூறியுள்ளார். இது ஒரு வானியல் கணிதத்தின் சுழற்சி முறையில் உள்ளதை தான் கூறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இப்போது, நமது தலைப்புக்கு வருவோம். மேலே சொன்ன விஷயங்களை ஏற்று கொள்பவர்கள் ஏற்று கொள்ளட்டும். பங்குச்சந்தையை போல, இது ஒரு புள்ளியியல் சார்ந்த கணிதமே. கொரோனா வைரஸ்(Coronavirus) தாக்கம் நம் நாட்டை பொறுத்தவரை தற்போது 4வது நிலையில் உள்ளது. நாம் இன்னும் செல்ல வேண்டிய காலங்கள் அடுத்த 3-6 வாரங்களாக இருக்கலாம். அதற்குள் மருந்து கண்டுபிடிப்பு நிகழ்ந்தாலும், அனைத்து நாடுகளுக்கும் தற்போதைய நிலையில் மருந்து அவ்வளவு எளிதாக சென்றடையாது.
மருந்து அல்லது தடுப்பூசி கிடைக்கப்பெற்றாலும், ஆரம்ப நிலையில் அது சுகாதார துறையில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மையாளர்களுக்கு மட்டுமே போய் சேரும் என வளர்ந்த நாடுகளின் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். எனவே, இப்போதைய நிலையில் நம்மை தனிமைப்படுத்தி கொள்வதே சிறந்தது. நடைமுறையில் உள்ள கோவிட்-19(Covid), கொரோனா குடும்பத்தின் ஏழாவது நிலை அல்லது தலைமுறையாகும். இதுவரை இந்த குடும்பத்தில் உள்ள வைரஸ்களுக்கு மருந்து அல்லது தடுப்பூசி மனித இனத்தால் கண்டுபிடிக்கப்பட வில்லை. கொரோனா குடும்பத்தின் வரலாறு சுமார் 60 வருடங்களுக்கு மேல் என்பதனை நினைவில் கொள்ளவும்.
ஒவ்வொரு நாடுகளும், சுகாதாரத்தை பேணி காத்து அடுத்து 2-3 மாதங்களில் இந்த நோய் தாக்கத்திலிருந்து விடுபடலாம். இதுவும் ஒரு ஊக கணிப்பாக தான் எடுத்து கொள்ள முடியும். கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்தாலும், உண்மையில் இங்கே பெரிய பிரச்சனை ஒன்று உள்ளது. அது தான் உலக பொருளாதார மந்தநிலை(Financial Crisis – Recession).
ஏற்கனவே மந்தநிலையில் காணப்பட்ட பொருளாதாரம் அடுத்த 2-3 காலாண்டுகளில் வருவாய் இழப்பை(Listed Companies) கொண்டிருக்கும். வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரித்து வருவது, அரசு கஜானாவில் பணம் இல்லாதது மற்றும் வணிக விநியோக சங்கிலி(Supply Chain) விலகியது ஆகியவற்றால், நாட்டின் பொருளாதாரம் அடுத்த இரண்டு காலாண்டுகளில் எதிர்மறையாக(Negative GDP) செல்லும். எப்படி பார்த்தாலும், நடப்பு 2020ம் வருடத்தில் உலக பொருளாதாரமும், பங்குச்சந்தையும் ஏற்றம் பெறுவதற்கான வாய்ப்பு குறைவு தான்.
அதே சமயத்தில் தனிநபர் ஒருவரின் ரிஸ்க் தன்மைக்கு ஏற்றவாறு, முதலீட்டு முடிவுகளை எடுப்பது சிறந்தது. நல்ல நிறுவன பங்குகளை அடையாளம் கண்டு, சந்தை வீழ்ச்சியின் போது, மலிவான விலையில் பங்குகளை வாங்கலாம். பிராண்டு பங்குகளின் மீது பற்று கொள்ளாதீர்கள். ரிஸ்க் தன்மையை பரவலாக்க பங்குச்சந்தை மற்றும் பரஸ்பர நிதியில் கிடைக்கப்பெறும் இ.டி.எப். மற்றும் கோல்டு பண்டுகளில்(Gold ETF, Gold Funds) முதலீடு செய்யலாம். பங்குகளில் வெறும் லார்ஜ் கேப் பங்குகளை தேர்ந்தெடுக்காமல், சிறு மற்றும் நடுத்தர பங்குகளில் முதலீடு செய்யலாம். நல்ல நிறுவனங்களை அடையாளம் காண முடியாதவர்கள் பரஸ்பர நிதிகளில் காணப்படும் மல்டி கேப்(Multicap) மற்றும் மல்டி அஸெட்(Mutli asset) போன்ற பண்டுகளில் முதலீடு செய்யலாம். உங்கள் வங்கி டெபாசிட்டை வெறும் சேமிப்பாக மட்டுமே கையாளுங்கள். அவை ஒன்றும் பெரிய முதலீட்டு சாதனமாக கருதப்படாது. வரவிருக்கும் காலங்களில் வங்கிகளுக்கான வட்டி விகிதம் மேலும் குறைய கூடும்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை