நேர்மறை சிந்தனையை கைவிடுங்கள் – கொரோனா வைரஸ் பாதுகாப்பு
Don’t think Positive – Precautions to protect yourself and family from Covid-19
வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என வீட்டில் யாராவது சொன்னாலே கேட்க மாட்டோம், அதுவும் நமக்கே அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இல்லாத காலத்தில், அரசு சொல்லும் எச்சரிக்கையை நாம் கேட்டு விடுவோமா – என்ன ?
https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
நடந்து கொண்டிருப்பது ஒரு போர்க்கால அடிப்படை நிகழ்வு, ஒரு உலக போர் நடைபெறுவது போன்ற நிகழ்வு, அதுவும் உங்களை சுற்றி ஜாம்பிகளும், வெள்ளமும் சூழ்ந்திருக்கும் நிலை. ஆம், வேலைக்கு செல்ல முடியாதது தான், தொழில் புரிய முடியாது. சொந்த பந்தங்களை காண முடியாது. அரசாங்கம் உங்களை பாதுகாக்க முடியாது என சொன்னால் நீங்கள் என்ன செய்து விட முடியும்.
நீங்களாக தானே, பாதுகாத்து கொள்ள முடியும் – அது தான் Survival of the Fittest.
நாம் தேசப்பற்றை கொண்டாடுகிறோம், நமது ஜாதி, மத கொள்கைகளை பெருமையாக நினைக்கிறோம். பல சாகசங்களை புரிய எண்ணுகிறோம். இந்த உலகம் அழிவதில்லை, மாறாக தீய மனிதம் அழிய போகிறது. உங்களை நீங்களே காத்து கொள்ள நேர்மறை எண்ணங்களை கொண்டிருக்காதீர்கள், எதிர்மறை நிகழ்வை கவனியுங்கள்.
உங்களுக்கு இப்போது நேர்மறை எண்ணம் தேவையில்லை, பாதகமான நிகழ்வை உணருங்கள், உண்மையில் இப்போதைய தேவை விழிப்புணர்வும், அதனை சார்ந்த தன்னம்பிக்கையும் தான். இந்த உலகில் பல்வேறு காலகட்டங்களில் வெற்றி பெற்ற சமுதாயமும், சாதித்தவர்களும் கொண்டிருந்தது விழிப்புணர்வுடன் கூடிய தன்னம்பிக்கையே தவிர, நேர்மறை எண்ணங்கள் அல்ல.
- வீட்டை விட்டு வெளியே வராதீர்கள் என சொன்னால், வாக்கிங் – ஜாக்கிங் என செல்ல கூடாது. கூட்டம் சேர கூடாது, கொரோனா வைரஸ் காற்றில் பரவ கூடும். நீங்கள் நடைப்பயிற்சி செல்லும் பாதையில் தொற்று இல்லை என்பதை உங்களால் கண்டறிய முடியாது.
- இது ஒரு போர்க்கால நிகழ்வு, விடுமுறை அல்ல. இன்றைய காலத்தில் உங்களுக்கான வசதி வீட்டில் தான் உள்ளது. தொலைக்காட்சி, கைபேசி, இணையம், தூக்கம் இவை தான் எப்போதும் வீட்டில் உள்ளதே. வேறென்ன வேண்டும். வேலைக்கு சென்றாலும் அங்கே நாம் என்ன செய்து விட போகிறோம் (சில உண்மையான உழைப்பாளிகள் தவிர). மனித நேயம் செலுத்த வேண்டிய நேரத்தில், நாம் கைபேசியை பயன்படுத்தி கொண்டிருந்தோம். இப்போது உறவு வேணும் என்கிறோம் ?
- சுகமான வாழ்க்கையை இப்போது எதிர்பார்க்காதீர்கள். நீங்கள் இருக்கும் இடத்தில் ஏற்கனவே மகிழ்ச்சி உள்ளது. தொலைக்காட்சி பார்ப்பவர்கள் அதனை காணுங்கள், கைபேசி மற்றும் இணையம் உள்ளது. முக்கியமாக இது போன்ற சமயங்களில் மின்சாரம் தடைபடாமல் வந்து சேர்கிறது.
- மற்ற காலங்களில் நாம் தேவையில்லாத பொருட்களை வாங்கி குவிப்போம். இப்போதும் அதனை செய்து விடாதீர்கள். நமக்கு தேவை அத்தியாவசிய உணவு மட்டுமே, அதுவும் ஆடம்பர உணவு அல்ல. கஞ்சியோ, கூழோ – தக்கன பிழைத்து வாழ்வதற்கான(Survival) சூழ்நிலையை தேர்ந்தெடுங்கள். வருங்காலங்களில் இதனை விட நாம் மோசமாக வாழும் நிலை வரும். எனவே, அவசரகால நிலையை புரிந்து கொண்டு இப்போது வாழ்வது நலம்.
- இதுவரை வீட்டில் சமைத்து பழகாதவர்கள் இப்போது முயற்சிக்கலாம். ஆனால், நன்றாக சமையல் செய்பவரின் ஆலோசனையுடன் மட்டுமே. விபரீதமாக சமையலை செய்து சாப்பிட்டு விட்டு, அப்புறம் இது போன்ற காலங்களில் மருத்துவமனைக்கு சென்று விட வேண்டாம்.
- ‘ நான் எப்போதும் வேலை செய்து கொண்டே இருப்பது எனது இயல்பு, நான் எப்படி இப்போது வீட்டிற்குள் முடங்கி கிடைக்க முடியும் ‘ – இப்போது நீங்கள் ஒரு ஆணியையும் புடுங்க தேவையில்லை. சும்மா இருப்பது தான் மனிதத்தின் இயல்பு. நாம் தான் நிறைய சிந்தனைகளை தலையில் ஏற்றி கொண்டு மூடர்களாக வலம் வருகிறோம். அதெல்லாம், உலக நிகழ்வு நன்றாக இருக்கும் போது பார்த்து கொள்வோம். இப்போதைய தேவை, சும்மா இருப்பது மட்டுமே.
- சிந்தனைகளை மெருகேற்றுவதற்கான காலமிது – உலக வைரஸ் தாக்கங்களை பற்றி படியுங்கள், உங்களுக்கு பிடித்தமான புத்தகங்களை இப்போது திருப்பி பாருங்கள், அவசர காலங்களில் எவ்வாறு வாழ வேண்டும் என்ற சிந்தனையை உங்கள் மனதில் ஏற்படுத்துங்கள். பிற்காலங்களில் அது உங்கள் குழந்தைகளுக்கு உதவலாம்.
- எதற்கெடுத்தாலும் அரசாங்கத்தை நம்பியிருக்க வேண்டாம், அதே வேளையில் அரசு சொல்லும் எச்சரிக்கையை உதாசீனப்படுத்த வேண்டாம். கொரோனா நிகழ்வுக்கு எந்த நாட்டையும், ஜாதி – மதத்தையும் நிலை நிறுத்த வேண்டாம். இல்லுமினாட்டி(illuminati) என சொல்லிக்கொண்டு நாம் குதர்க்கமாக சிந்திக்க வேண்டாம். இப்போது நாம் நம்மை தற்காத்து கொள்வதே.
- நம் நாட்டில் வீடு இல்லாமல், ஒரு வேளை உணவு கூட கிடைக்க முடியாமல் சாலையில் பலர் போராடி கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு தான் உதவி தேவை. மற்றவர்கள் அவர்கள் வீட்டில் அமைதியாக இருக்கலாம்.
- அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரு வாரங்களுக்கு முன்பு வரை, தங்கள் நாட்டில் எந்த பிரச்னையும் இல்லை. வேலைவாய்ப்பு நன்றாக இருக்கிறது. கொரோனா வைரஸ் தாக்கம் எங்கள் நாட்டில் பெரிய அளவில் இல்லை. எங்கள் பொருளாதாரத்திற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றார். ஆனால், இன்று அமெரிக்க பொருளாதாரமும், அதன் மக்களும் ஆட்டம் கண்டுள்ளனர். அதிபர் டிரம்ப், ‘ இது உண்மையிலே ஒரு தொற்று நோய் தான். நான் ஏற்கனவே இதனை பற்றி எண்ணி கொண்டிருந்தேன். அமெரிக்காவில் ஊரடங்கு உத்தரவு வருகிறது. இது அவசரகால நிலை தான்’ என கடந்த வாரம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இது அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும்.
- சில நாடுகளில் அவசரம் அவசரமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், நம் நாட்டில் அது போன்ற நிகழ்வும் நடைபெறவில்லை. நாம் அடுத்த சில நாட்களுக்கோ அல்லது வாரங்களுக்கோ தேவையான உணவுப்பொருட்களை வாங்கி கொள்ள வேண்டிய நேரமும் இருந்தது. இப்போதும் சில இடங்களில் அந்த வாய்ப்பு உள்ளது. சந்தைக்கு சென்று தான் வாங்க வேண்டுமென்ற அவசியமில்லை.
- 50, 100 ரூபாயை மிச்சப்படுத்துகிறேன் என கூட்ட நெரிசலில் சென்று விட்டு, உங்கள் குடும்பத்திற்கு கொரோனா வாய்ப்பை கொடுத்து விட வேண்டாம். நான் ஏற்கனவே சொல்லியிருப்பது போல, இது போர்க்கால நிகழ்வு தான். சென்னையில் வெள்ளம் வந்த போது இருந்த நிலை நமக்கு தெரிந்திருக்கலாம். சிக்கனமாக இருந்து, நமக்கு கிடைக்கக்கூடிய பொருட்களை கொண்டு அடுத்த சில நாட்களுக்கு நமது வாழ்வை நகர்த்துவது ஒன்றும் பெரிய விஷயமில்லை. முடிந்தால், உங்கள் அருகில் உள்ள வசதி இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவி செய்யுங்கள்.
- தற்போது 144 தடை மட்டுமே உள்ளது. அதாவது அவசர தேவைக்கு பொருட்களை வாங்கி கொள்ளலாம். பொது இடங்களில் கூட்டம் மட்டுமே கூட கூடாது என்பது சட்டம். மீண்டும் அரசாங்கத்தின் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டால், நாம் வீட்டை விட்டு வெளியேற முடியாது.
- நாம் தொழில்நுட்பத்தில் முன்னேறி இருந்தாலும், உண்மையில் மனிதர்கள் இன்றளவிலும் சுகாதாரத்தில் முன்னேற்றம் பெறவில்லை எனலாம். தனிமனிதர்களிடம் ஏற்படும் சுகாதாரமின்மை தான் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு காரணம். இது முந்தைய காலரா, மலேரியா போன்றவற்றிற்கும் பொருந்தும்.
- எனக்கு எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது, எங்கள் ஊருக்கு கொரோனா எல்லாம் வருவதில்லை என சொல்பவரா நீங்கள் ? நீங்கள் தான் மற்றவர்களுக்கு இந்த நோயை பரப்புவதற்கான தூதராக இயற்கையால் நியமிக்கப்பட்டுள்ளீர்கள் 🙂
- இது சாதாரண காய்ச்சல் தான் எனினும், நமது சமூக கூட்டம் மற்றும் முறையில்லாத பழக்க வழக்கங்களால் இது மிகப்பெரிய விளைவை ஏற்படுத்துகிறது. உலகமயமாக்கலில் வளரும் நாடுகள், கொரோனா வைரஸ் தாக்குதலால் தங்கள் பெயருக்கு(சுற்றுலா துறை, முதலீடு, தொழில்) களங்கம் ஏற்படும் என சில புள்ளிவிவரங்களை மறைக்கலாம். ஆனால் நமக்கு மட்டுமே தெரியும், நமது உயிரும், குடும்பமும் எவ்வளவு முக்கியமென்று.
- வெளியே செல்லாதீர்கள், மற்ற சில நாடுகளை போன்று அவர்கள் காவல் துறை மற்றும் ராணுவத்தை கொண்டு நம்மை அடக்கும் நிலைக்கு நாம் வர வேண்டாம். உண்மையில் இதன் காரணமாக அரசு சார்பில் செல்லும் அவசர ஊழியர்கள் தான் பாதிக்கப்படுவர். காவல் துறைக்கும் யார் மருத்துவர், அரசு சார்பில் செல்லும் அவசரமானவர் என தெரிய வாய்ப்பில்லை. அதற்கான நேரமும் இப்போது இல்லை.
அரசியல்வாதிகளை நம்ப வேண்டாம், அரசின் மீதும் நம்பிக்கை வைக்க வேண்டாம். இது நம் வாழ்க்கை, நம் சந்ததிகளின் எதிர்கால வாழ்க்கை. எச்சரிக்கையாக இருங்கள். பஞ்சம் பட்டினியால் இறப்பு விகிதங்கள், பல நோய்களால் பாதிப்புகள், சாலை விபத்துகள் என பல கூறுகளால் தினந்தோறும் இறந்தவர்களின் எண்ணிக்கையை கொரோனா வைரஸ் பாதிப்புடன் ஒப்பிட வேண்டாம்.
இந்த கொரோனா (Covid-19) குழந்தை பிறந்து மூன்று மாதங்கள் தான் முடிந்துள்ளது. இதுவரை உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் 4.71 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களின் எண்ணிக்கை 21,283. கடந்த மூன்று நாட்களில் 10 சதவீதமாக இருந்த இறப்பு விகிதம் இன்று 16 சதவீதமாக அதிகரித்துள்ளது. 15,000 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். இந்த கொரோனா பாதிப்பு அடுத்த ஆறு மாதங்கள் இருந்தால் என்னவாகும் ? இது ஒரு பேரழிவு என்றே சொல்லலாம். இந்த இயற்கை நிகழ்வை சரி செய்ய நாம் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.
வரும் முன் காப்போம் என்பதும் ஒரு விழிப்புணர்வுடன் கூடிய எதிர்மறை சிந்தனையே(Negative Thought). அடுத்த சில வாரங்கள் நாம் வீட்டில் பாதுகாப்பாக, நம்மை தனிமைப்படுத்தி இருக்கும் பட்சத்தில், நாமும் இந்நாட்டின் தேச தலைவர்களாக வலம் வரலாம்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை