மார்ச் மாதத்தில் அன்னிய முதலீட்டாளர்கள் என்ன செய்து விட்டார்கள் ?
FII & DII Trading activity for the Period of March 2020 – Indian Stock Market
கடந்த மார்ச் மாதம் இந்திய பங்குச்சந்தைக்கு போதாத காலமாக அமைந்து விட்டது எனலாம். ஒரு வருடங்களுக்கு மேலாக இருந்து வந்த பொருளாதார மந்தநிலையை(Economy Slowdown) அடுத்து, கொரோனா வைரஸ் தாக்கமும் இந்திய பொருளாதாரம் மற்றும் பங்குச்சந்தையை வெகுவாக பாதித்தது.
மார்ச் 2020 காலத்தில் பங்குச்சந்தை பெரும்பான்மையான வீழ்ச்சியை சந்தித்தது. இந்த வீழ்ச்சி கடந்த 2008ம் ஆண்டின் உலக பொருளாதார வீழ்ச்சி நாட்களில் ஏற்பட்ட அளவை ஒத்திருந்தது. மார்ச் மாத முடிவில் அன்னிய முதலீட்டாளர்கள் மார்ச் 27ம் தேதி தவிர்த்து, மற்ற அனைத்து நாட்களிலும் பங்குகளை விற்று தள்ளியுள்ளனர்.
சொல்லப்பட்ட மாதத்தில் பங்குச்சந்தை 21 நாட்கள் வர்த்தகமாகி உள்ளன. 21 நாட்களில் அன்னிய முதலீட்டாளர்கள் கொள்முதல் செய்த பங்குகளின் மதிப்பு ரூ. 1,54,904 கோடி மற்றும் விற்ற பங்குகளின் மதிப்பு ரூ. 2,20,721 கோடி. ஆக, கடந்த மாதத்தில் அன்னிய முதலீட்டாளர்கள் மொத்தமாக ரூ. 65,816 கோடி மதிப்பில் பங்குகளை விற்றுள்ளனர்.
இருப்பினும், உள்ளூர் முதலீட்டாளர்கள்(Domestic Investors) மார்ச் 26ம் தேதி தவிர்த்து மற்ற அனைத்து நாட்களிலும் பங்குகளை வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. உள்ளூர் முதலீட்டாளர்களின் கொள்முதல் ரூ. 1,57,857 கோடி மற்றும் விற்பனை ரூ. 1,02,262 கோடி. மார்ச் மாதத்தில் ரூ. 55,595 கோடி மதிப்பில் உள்ளூர் முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கியுள்ளனர்.
நடப்பு 2020ம் வருடத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பனை மட்டுமே செய்துள்ளனர். ஜனவரி மாதத்தில் ரூ. 5,360 கோடி, பிப்ரவரி மாதம் ரூ. 12,684 கோடியும் மற்றும் மார்ச் மாதத்தில் ரூ. 65,816 கோடியும் நிகர விற்பனையாக அமைந்துள்ளது.
உள்ளூர் முதலீட்டாளர்களின் பங்களிப்பில் பரஸ்பர நிதிகளின் எஸ்.ஐ.பி.(SIP Investing) முதலீடும் ஊக்கப்படுத்துகிறது. எனினும், அன்னிய முதலீட்டாளர்களின் விற்பனை பங்குச்சந்தை சரிவை ஏற்படுத்தியுள்ளது. பங்குச்சந்தைகள் பெருத்த சரிவை ஏற்படுத்தி வரும் இச்சூழலில், அவ்வப்போது ஒரே நாளில் பெரிய ஏற்றத்தை அடைந்து வருவதும் இயல்பு தான்.
நீண்ட கால முதலீட்டாளர்கள், நல்ல நிறுவன பங்குகளை கண்டறிந்து எந்த அவசரமும் காட்டாமல், மலிவான விலை கிடைக்கும் போது மட்டும் முதலீடு செய்யும் மனப்பான்மையை கொண்டிருக்க வேண்டும். சந்தை ஏறுகிறது என பின்னால் சென்று வாங்கி விட்டு, பின்னர் பங்கு விலை இறங்குகிறது என கலங்க வேண்டாம்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை