வாகனத்துறை விற்பனை வீழ்ச்சி – பொருளாதார மந்தநிலை – மார்ச் 2020
Automobile Sales in Economic Crisis – March 2020
அடுத்தடுத்த பிரச்சனைகளுடன் நகரும் இந்திய பொருளாதாரம், கடந்த வருடத்தில் வாகனத்துறையின் மூலம் மந்தம் கண்டது. தற்போது அதே நிலையில் வாகனத்துறையின் விற்பனையும் உள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தினால் கடந்த மாதத்தின் இறுதி வாரத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும், வாகனத்துறை விற்பனை குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டவில்லை.
மார்ச் மாதத்தின் முடிவில் நாட்டின் மிகப்பெரிய வாகன தயாரிப்பு நிறுவனமான டாட்டா மோட்டார்ஸ்(Tata Motors) விற்பனையில் பெருத்த சரிவை கண்டுள்ளது. கடந்த மாதம் உள்நாட்டு விற்பனை அளவு 11,012 ஆகவும், ஏற்றுமதியின் அளவு 1,787 வாகனங்களாக இருந்தது. 2019ம் ஆண்டின் மார்ச் காலத்துடன் ஒப்பிடும் போது உள்நாட்டு வாகன விற்பனை 84 சதவீதமும், ஏற்றுமதி 68 சதவீதமும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
டாட்டா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கடன் ரூ. 95,400 கோடி ஆகும். இந்நிறுவனம் கடந்த இரண்டு வருடங்களாக (6 காலாண்டுகள்) நஷ்டத்தை மட்டுமே சந்தித்து வருகின்றன. இந்த பங்கின் விலை கடந்த மூன்று வருடங்களில் 48 சதவீத வீழ்ச்சியை சந்தித்துள்ளன. மஹிந்திரா(M&M) நிறுவனம் தனது மார்ச் மாத வாகன விற்பனையில் 90 சதவீத வீழ்ச்சியை (உள்நாட்டு) கண்டுள்ளது. இது போல ஏற்றுமதியிலும்(Exports) 68 சதவீத சரிவை ஏற்படுத்தியுள்ளன.
மாருதி சுசூகி(Maruti Suzuki) நிறுவனம் மார்ச் மாதம் உள்நாட்டு விற்பனையில் 47 சதவீதமும், ஏற்றுமதியில் 55 சதவீதமும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. ஐஷர் மோட்டார்ஸ்(Eicher Motors) தனது வோல்வோ பிரிவில் 1,409 வாகனங்களை மார்ச் மாதத்தில் உள்நாட்டில் விற்பனை செய்துள்ளது. ஏற்றுமதியில் வெறும் 67 வாகனங்கள் மட்டுமே விற்றுள்ளது. இது கடந்த 2019ம் ஆண்டின் மார்ச் மாதத்தில் 1,216 வாகனங்களாக இருந்தது கவனிக்கத்தக்கது.
ஆக, இந்நிறுவனம் உள்நாட்டு விற்பனையில் 81 சதவீதமும், ஏற்றுமதி அளவில் 95 சதவீதமும் விற்பனை வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அசோக் லேலண்ட் அனைத்து ரக வாகனங்கள் பிரிவில் ஒட்டுமொத்தமாக 91 சதவீத வீழ்ச்சியை உள்நாட்டு(Domestic Sales) விற்பனையில் அடைந்துள்ளது. இது போல ஏற்றுமதியில் இம்முறை 61 சதவீத விற்பனை குறைவாக நடந்துள்ளது.
ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனம் தனது இரு சக்கர வாகன பிரிவில் உள்நாட்டு விற்பனையாக 3.16 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது, 42 சதவீத சரிவாகும். ஏற்றுமதியிலும் இந்நிறுவனம் 35 சதவீத வீழ்ச்சியை கண்டுள்ளது.
சொல்லப்பட்ட நிறுவனங்களின் விற்பனை வீழ்ச்சி நடப்பு ஏப்ரல் மாதத்திலும் தொடரலாம். இதன் விளைவாக நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP) அடுத்த இரு காலாண்டுகளில் பெரும்பாலும் சரிவை மட்டுமே கொண்டிருக்கும்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை