All posts by skatzsaravana

Value Investor, Entrepreneur and Founder of Varthaga Madurai, Rich Investing iDEAS

இந்தியாவின் பணக்கார பெண்களில் முதலிடம் – ரோஷ்ணி – எச்.சி.எல்

இந்தியாவின் பணக்கார பெண்களில் முதலிடம் – ரோஷ்ணி – எச்.சி.எல்.

Top Rich woman in India – Roshni Nadar of HCL Technologies

தொழில்முனைவோர்களில் பெண்களின் பங்களிப்பு முக்கியத்துவமானது. வளரும் மற்றும் வளர்ந்த நாடுகளில் நாகரீக மாற்றங்கள் ஏற்பட்டு விட்டாலும், தொழில்முனைவில் பெண்கள் ஈடுபடுவது என்பது இன்றும் சவாலான விஷயமாக தான் இருந்து வருகிறது. அப்படியிருக்கும் நிலையில் பெண் தொழில்முனைவோர் ஒருவர் உயர்மட்ட அளவில் நிர்வகிப்பதும், போட்டி சூழலில் சாதிப்பதும் அந்த சமூகத்திற்கு சாதகமான அம்சமாக அமையும்.

இன்று நம் நாட்டில் தொழில்முனைவோர்களாக சாதிப்பதில் பெரும்பாலும் திருமணமான பெண்களே உள்ளனர். படித்து முடித்தவுடன் தொழில்முனைவில் ஈடுபடும் பெண்மணிகளின் விகிதம் அதிகமாகும் போது, அது தனிநபர் வளர்ச்சி மட்டுமில்லாமல் வரக்கூடிய சந்ததிகளின் வளர்ச்சியை பிரதிபலிக்க கூடும்.

நம்மூரில் சேமிப்பு மற்றும் பண நிர்வாகத்தில் இன்றும் வீட்டு பெண்களின் பங்களிப்பு அளப்பரியது. சிட் பண்டு, அஞ்சலக சிறு சேமிப்பு முதல் வீட்டிலிருந்தே தொழில்முனைவை ஏற்படுத்துவது வரை அவர்களது நிதி சார்ந்த பண்பு மேம்பட்டு காணப்படுகிறது.

கோடக் வெல்த்(Kotak Wealth) மற்றும் கரூன் இந்தியா(Hurun India) நிறுவனம் இணைந்து நடத்தும் நாட்டின் பணக்கார பெண்மணிகளின் பட்டியல் நேற்று(03-12-2020) வெளியிடப்பட்டது. இந்த பட்டியல் தனிநபர் ஒருவரின் நிகர சொத்து மதிப்பு அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளது. இதற்காக சில நெறிமுறைகளையும் இந்த நிகழ்வு கொண்டுள்ளது. அதாவது இந்த பட்டியலில் இடம் பெறுவோர் ஒரு நிறுவனத்தின் முழுநேர இயக்குனர் அல்லது நிர்வாக இயக்குனராக இருக்க வேண்டும், அவர் ஊதியம் பெறும் நபராக இருக்க வேண்டும், நிர்வாகத்தின் முக்கிய பதவிகளை வகிப்பவராக இருத்தல் வேண்டும் என சில கட்டுப்பாடுகளை கொண்டுள்ளது.

பட்டியலில் அடையாளம் காணப்பட்ட பெண்கள் கல்வி மற்றும் சுகாதார பராமரிப்புக்காக தங்களது பங்களிப்பை எவ்வாறு அளிக்கின்றனர் என்பதனையும் இந்த தரவு தெரிவிக்கிறது. சொல்லப்பட்ட பணக்கார பெண்மணிகளின் பட்டியலில் முதலிடம் பிடித்தவர் எச்.சி.எல். தொழில்நுட்ப நிறுவனத்தை(HCL Technologies) சேர்ந்த ரோஷ்ணி ஆவார். இவர் தற்போது நிறுவனத்தின் தலைவராக உள்ளார். எச்.சி.எல். நிறுவனத்தை துவங்கிய சிவ நாடாரின்(Shiv Nadar) புதல்வி தான் ரோஷ்ணி.

10 பில்லியன் டாலர் வருவாயை கொண்டிருக்கும் எச்.சி.எல். நிறுவனம் நாட்டின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமாகவும், இதன் கிளைகள் 40க்கும் மேற்பட்ட நாடுகளில் தனது சேவையை கொண்டிருக்கிறது. ரோஷ்ணி அவர்களின் செல்வ மதிப்பு ரூ.54,850 கோடி. இரண்டாம் இடத்தில் பயோகான்(Biocon) நிறுவனத்தின் தலைவரான பிரபல கிரண் மசும்தார் உள்ளார். இவரது செல்வ மதிப்பு 36,600 கோடி ரூபாயாக சொல்லப்பட்டுள்ளது.

மூன்றாவதாக மருந்து துறையில் உள்ள யு.எஸ்.வி.(USV) நிறுவனத்தின் தலைமை பதவியில் உள்ள லீனா காந்தி உள்ளார். இவரது செல்வ மதிப்பு ரூ.21,340 கோடி. நான்காம் இடத்தில் டிவிஸ் லேப் நிறுவனத்தின் நீலிமா அவர்களும், ஐந்தாம் இடத்தில் மீண்டும் தமிழகத்தை சேர்ந்த பெண்மணி, ராதா வேம்பு (Zoho) அவர்களும் உள்ளனர். சொல்லப்பட்ட செல்வத்தின் மதிப்பு செப்டம்பர் 2020 காலாண்டுடன் முடிவடையும் நிலையில் கணக்கிடப்பட்டுள்ளது.

நூறு பேர் கொண்ட பணக்கார பெண்மணிகளின் பட்டியலில் 19 பெண்கள் நாற்பது வயதுக்கு குறைவானவர்கள், நகரங்கள் அடிப்படையில் மும்பை 32 பெண் பணக்காரர்களையும், டெல்லி 20 நபர்களையும், ஹைதராபாத் 10 நபர்களையும் உள்ளடக்கியுள்ளது. 15 சதவீத பெண்மணிகள் மெட்ரோ அல்லாத நகரங்களிலிருந்து வந்தவர்கள்.

39 வயதாகும் திருமதி. ரோஷ்ணி, சந்தையில் பட்டியலிடப்பட்ட தொழில்நுட்ப நிறுவனத்தின் முதல் பெண் தலைவர் என்ற சாதனையையும் கொண்டுள்ளார். உலகின் மிகவும் சக்தி வாய்ந்த 100 பெண்களில் 54வது இடத்தை பிடித்துள்ளார் ரோஷ்ணி (போர்ப்ஸ் பட்டியல்). இவரது கணவர் ஷிகர் மல்ஹோத்ரா, எச்.சி.எல். சுகாதார பிரிவில் துணை தலைவராக உள்ளார். ரோஷ்ணிக்கு இரு புதல்வர்கள் உள்ளனர்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

பிக் பேஸ்கட் நிறுவனத்தை வாங்கும் டாட்டா

பிக் பேஸ்கட் நிறுவனத்தை வாங்கும் டாட்டா 

Tata Group to buy Big Basket with a majority Stake

பெங்களூரு நகரத்தை தலைமையிடமாக கொண்டு கடந்த 2011ம் ஆண்டு துவங்கப்பட்ட நிறுவனம் பிக் பேஸ்கட்(Bigbasket). இணையம் வழியாக மளிகை பொருட்களை விநியோகம் செய்யும் சேவையை இந்த நிறுவனம் செய்து வருகிறது. வீட்டுக்கு தேவையான அத்தியாவசிய மற்றும் உணவு பொருட்கள் இதன் மளிகை பொருட்களாக இருந்து வருகிறது.

உலகளவில் காணப்படும் சில பெரு நிறுவனங்களுடன் இணைந்து தனது சந்தைப்படுத்துதலை விரிவாக்கம் செய்தது பிக் பேஸ்கட். சுமார் 18,000 க்கும் மேற்பட்ட பொருட்கள் மற்றும் 1000 பிராண்டுகளுக்கு மேலாக தனது மளிகை அட்டவணையில் கொண்டிருந்த இந்நிறுவனம் பெங்களூரு மட்டுமில்லாமல், சென்னை, ஹைதராபாத், மும்பை, புனே, கோவை, கொல்கத்தா, டெல்லி மற்றும் மைசூரு என பல மாநிலங்களின் முக்கிய நகரங்களில் தனது சேவையை அளித்து வருகிறது.

ஸ்டார்ட் அப் நிறுவனமாக வலம் வந்த பிக் பேஸ்கட் நிறுவனத்தில் 17 முதலீட்டாளர்கள் முதலீடு செய்துள்ளனர். சொல்லப்பட்ட முதலீட்டாளர்களிடம் இருந்து சுமார் ஒரு பில்லியன் டாலர்கள் அளவுக்கு முதலீட்டை ஈர்த்துள்ளது இந்தநிறுவனம். முதன்மை முதலீட்டாளர்களாக சீனாவை சேர்ந்த அலிபாபா குழுமம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

பிக் பேஸ்கட் நிறுவனத்தை கையகப்படுத்த சில பெரு நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டிருந்தாலும், கடந்த சில வாரங்களுக்கு முன்பு டாட்டா குழுமம் சார்பில் பிக் பேஸ்கட் நிறுவனத்தின் 51 சதவீத பங்குகளை வாங்க பேச்சு வார்த்தை நடப்பதாக செய்திகள் வெளிவந்தன.

மளிகை விற்பனையில் ஏற்கனவே அனுபவம் கொண்டிருக்கும் டாட்டா குழுமத்திற்கு இந்த நிறுவன கையகப்படுத்துதல் வெற்றிகரமாக முடிந்தால், சந்தையில் புதிய போட்டியை ஏற்படுத்தும். இந்நிலையில் சமீபத்திய செய்தி ஒன்று, பிக் பேஸ்கட் நிறுவனத்தின் 80 சதவீத பங்குகளை டாட்டா குழுமம் வாங்க உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே ரிலையன்ஸ் நிறுவனம் மளிகை வணிகத்தில் கால்பதித்துள்ள நிலையில், டாட்டா குழுமத்தின் இந்த கையகப்படுத்தல் சந்தையில் சவாலாக இருக்கும்.

டாட்டா குழுமம்(Tata Group) பிக் பேஸ்கட் நிறுவனத்தை வாங்கும் நிலையில், அதன் மதிப்பு சுமார் 1.3 பில்லியன் டாலர்களாக இருக்கலாம் என சொல்லப்பட்டுள்ளது. இணைய வழி மளிகை வணிகத்தில் நாட்டின் 50 சதவீத பங்களிப்பை பிக் பேஸ்கட் கொண்டுள்ளது. நஷ்டத்தில் செயல்பட்டு கொண்டிருக்கும் இந்நிறுவனத்தின் மதிப்பு 1.6 பில்லியன் டாலர்கள்.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஊரடங்கின் போது, இந்த நிறுவனம் இரண்டே நாட்களில் தனது 80 சதவீத வேலையாட்களை இழந்தது. எனினும் அவற்றிலிருந்து மீண்டு வந்த நிறுவனம் 16 நாட்களில் 12,000 பணியாளர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளதாக சொல்லப்படுகிறது. 2019-20ம் நிதியாண்டின் முடிவில் நிறுவனத்தின் வருவாய் 5,200 கோடி ரூபாயாகவும், ரூ. 920 கோடியை நிகர நஷ்டமாகவும் சந்தித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹேக்கர்களால் பிக் பேஸ்கட் நிறுவன வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாயின.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

சக்தி குழும நிறுவனங்கள் – நம்ம ஊரு பங்கு கதை

சக்தி குழும நிறுவனங்கள்  – நம்ம ஊரு பங்கு கதை 

Sakthi Group of companies – Chocolate Investing analysis

பங்குச்சந்தையில் பணம் சம்பாதிப்பது எளிமையாக தெரிந்தாலும், சந்தையில் வர்த்தகமாகும் நிறுவனங்களின் வரலாறு, தொழில் கொள்கை மற்றும் நிதி அறிக்கைகளை நம்மால் புரிந்து கொண்டால் மட்டுமே நீண்டகாலத்தில் செல்வத்தை ஏற்படுத்த முடியும். இல்லையெனில், முதலீடு செய்த பணத்தை இழந்து விட்டு, பங்குச்சந்தை ஒரு சூதாட்டம், அது பணக்காரர்களுக்கு மட்டுமே  என பொத்தாம் பொதுவாக சொல்லி விட்டு தான் போக முடியும்.

நம்ம பக்கத்துக்கு வீட்டுக்காரர் நம்மிடம் அவசரத்திற்கு பணம் கேட்டால் நாம் பலவாறு யோசிக்கும் காலமிது. அப்படியிருக்கையில் நிறுவனத்தை பற்றி எதுவும் தெரிந்து கொள்ளாமல் (ஆழம் தெரியாமல்) பங்குகளில் பணம் பண்ண முடியாது. அதிர்ஷ்டம் எப்போதும் கை கொடுப்பதில்லை, கற்று கொள்ள ஆர்வமாக இருப்பவர்களுக்கு மட்டுமே அது செயல்படும் படைக்கலமாக உள்ளது.

கடந்த 1931ம் ஆண்டு பொள்ளாச்சியை சேர்ந்த திரு. நாச்சிமுத்து அவர்களால் துவங்கப்பட்டது சக்தி நிறுவனம். பின்னர் அவரது புதல்வர் திரு. நாச்சிமுத்து மகாலிங்கம் அவர்களால் சக்தி குழுமம் விரிவாக்கம் செய்யப்பட்டது. இன்று சக்தி குழுமம் இந்திய பன்னாட்டு நிறுவனமாக உருவாகியுள்ளது. உள்நாடு மட்டுமில்லாமல் சீனா, ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் அமெரிக்காவில் தனது தொழிலை பரவலாக்கம் செய்துள்ளது.

ஆரம்பத்தில் போக்குவரத்து சார்ந்த தொழிலை துவங்கிய இந்த குழுமம், ஆனைமலைஸ் பஸ் டிரான்ஸ்போர்ட் (ABT) என்ற நிறுவனத்தை துவக்கியது. பின்னர் இந்த நிறுவனம் பார்சல் சேவையில் நுழைந்தது. தளவாடங்கள்(Logistics) தொழிலில் இந்த நிறுவனத்தின் பங்களிப்பு நாடு முழுவதும் பரவியிருந்தது. பின்னர் வாகன தயாரிப்பில் உள்ள பெரிய நிறுவனங்களான மாருதி சுசூகி, டாட்டா, மஹிந்திரா போன்றவற்றுடன் கைகோர்த்து தனது சேவையை அளித்து வந்தது.

21 பேருந்துகளை கொண்டு துவங்கப்பட்ட சக்தி குழுமம், மகாலிங்கம் அவர்களின் தொழில் வருகைக்கு பின்னர் பில்லியன் டாலர் நிறுவனமாக வளர்த்தெடுக்கப்பட்டது. இன்று தனது தொழிலை சர்க்கரை ஆலை, பால் பொருட்கள், காபி, சோயா, வாகன விநியோகம் மற்றும் உதிரி பாகங்கள், குளிர் பானங்கள், எரிசக்தி, தொழில்நுட்பம், ஆடைகள், தொழில்துறைக்கு தேவையான ஆல்கஹால், பத்திரிகை வெளியீடு, கல்வி மற்றும் சுகாதார பராமரிப்பு என பெரிய குழுமமாக மாற்றியுள்ளது.

நிதித்துறையில் சக்தி பைனான்ஸ் முக்கிய அங்கம் வகிக்கிறது. தென்னிந்தியாவில் சேவையை கொண்டிருக்கும் சக்தி பைனான்ஸ் வங்கி அல்லாத நிதி நிறுவனமாக(NBFC) செயல்பட்டு வருகிறது. கோவையில் குமரகுரு தொழில்நுட்ப பொறியியல் கல்லூரி, பொள்ளாச்சியில் டாக்டர். மகாலிங்கம் பொறியியல் கல்லூரி, தமிழகத்தின் பல மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரி நிலையங்களை இந்த குழுமம் ஏற்படுத்தியுள்ளது. இந்திய வாகன உற்பத்தி (Car Manufacturers) நிறுவனங்களுக்கு தேவையான பிரேக் கூறுகளை உற்பத்தி செய்து வழங்கிய முதல் இந்திய நிறுவனமும் இந்த குழுமத்தை சேர்ந்த நிறுவனம்(Sakthi Automotive) தான்.

சுமார் 730 ஏக்கர் பரப்பளவில் காபி, தேயிலை மற்றும் ஏலக்காய் தோட்டத்தினை பராமரித்து உற்பத்தி செய்து வருகிறது. மருத்துவத்திலும் இதன் சேவை தன்னார்வ சுகாதார அடிப்படையில் இயங்கி வருகிறது. பிரபல குளிர்பான நிறுவனங்களுக்கான தயாரிப்பிலும் சக்தி குழுமத்தின் ஏ.பி.டி. இண்டஸ்ட்ரீஸ்(ABT Industries) ஈடுபட்டு வருகிறது. பேருந்து கட்டமைப்புக்கான(Bus Body Building) பணியில் ஆனைமலைஸ் இன்ஜினியரிங் நிறுவனமும், காபி, தேயிலை உற்பத்தியில் சக்தி எஸ்டேட்ஸ் நிறுவனமும் உள்ளது. 90 வருடங்களுக்கு மேலாக தொழில் அனுபவம் கொண்டிருக்கும் சக்தி குழுமத்தின் நிறுவனங்கள் இந்திய பங்குச்சந்தையிலும் தடம் பதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சந்தையில் சக்தி குழுமத்தின் நிறுவனங்கள் சில…

  • சக்தி சுகர்ஸ்
  • சக்தி பைனான்ஸ்
  • சக்தி சோயாஸ் (Merged)
  • ஸ்ரீ சாமுண்டீஸ்வரி சுகர்ஸ் (Not Traded)

சக்தி சுகர்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.110 கோடி. நிறுவனர்களின் பங்களிப்பு 60 சதவீதமாக உள்ளது. நிறுவனர்கள் சார்பில் 15 சதவீத பங்குகள் அடமானம் வைக்கப்பட்டுள்ளது. கடந்த பத்து வருட காலத்தில் 2017ம் ஆண்டு தவிர்த்து மற்ற அனைத்து வருடங்களிலும் நிறுவனம் நஷ்டத்தை மட்டுமே சந்தித்துள்ளன.

சக்தி பைனான்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 90 கோடி ரூபாய். வங்கிகள் அல்லது நிதி நிறுவனமாக செயல்படும் சக்தி பைனான்ஸ்(Sakthi Finance) குறிப்பிடத்தக்க வருவாயை கொண்டுள்ளன. நிறுவனர்கள் சார்பில் 67 சதவீத பங்குகள் உள்ளன. பங்குகள் அடமானம் எதுவும் வைக்கப்படவில்லை. இந்த நிறுவனத்தில் ஏ.பி.டி. தனியார் முதலீட்டு நிறுவனம் தன்வசம் 14 சதவீத பங்குகளை கொண்டுள்ளது.

விவசாய துறையை சார்ந்துள்ள சக்தி சுகர்ஸ் நிறுவனம் காலநிலை மற்றும் அரசின் கொள்கை மாற்றங்களால் பாதிக்கப்படும் நிலை உள்ளது. நிறுவனத்திற்கான கடனும் சற்று அதிகரித்து காணப்படுகிறது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

நாட்டின் பொருளாதார வளர்ச்சி – 7.5 சதவீத வீழ்ச்சி

நாட்டின் பொருளாதார வளர்ச்சி – 7.5 சதவீத வீழ்ச்சி 

India technically enters into Recession – Q2FY21 – GDP

கொரோனா பெருந்தொற்றுக்கு பின் உலகளவில் பெரும்பாலான வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சி பின்னடைவை சந்தித்திருந்தது. நம் நாட்டில் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக இருந்து வந்த மந்தநிலை, மார்ச் 2020 க்கு பிறகு மிகவும் பாதிப்படைந்தது.

ஊரடங்கின் காரணமாக வேலைவாய்ப்பு இல்லாமை, உற்பத்தி குறைவு, ஏற்றுமதி-இறக்குமதியில் ஏற்பட்ட தடை ஆகியவை பொருளாதாரத்திற்கு பாதகமாக இருந்தது. எனினும் அரசு சார்பில் பல ஊக்கமளிக்கும் நிதி சலுகைகள் கொரோனா காலத்தில் அறிவிக்கப்பட்டது. 2020-21ம் நிதியாண்டின் முதலாம் காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 23.9 சதவீதம் வீழ்ச்சி கண்டது.

நேற்று(27-11-2020) நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி குறியீடு சார்ந்த தகவல்கள் வெளியிடப்பட்டது. சொல்லப்பட்ட காலத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP) 7.5 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது  குறிப்பிடத்தக்கது. எனினும் சந்தை எதிர்பார்த்த 8.8 சதவீத வீழ்ச்சி என்ற அளவை விட இது குறைவாக உள்ளது.

ஜூன் மாதத்திற்கு பிறகான ஊரடங்கில் தளர்வு, வேலைவாய்ப்பு சற்று மீண்டது மற்றும் பண்டிகை காலத்தை ஒட்டி நாட்டின் பொருளாதாரம் மீண்டு வருகிறது. எனினும் பொருளாதாரத்தை முழுவதுமாக மீட்க இன்னும் சில மாதங்கள் ஆகலாம் என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு பாரத ரிசர்வ் வங்கி(RBI) சார்பில் நாட்டின் பொருளாதார வீழ்ச்சி சார்ந்த குறிப்பு சொல்லப்பட்டிருந்தது. இதனை உறுதி செய்யும் வகையில் இரண்டாம் காலாண்டில் 7.5 சதவீத வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில், வரலாற்றின் முதல் பொருளாதார மந்தநிலையாகவும்(First Recession) தற்போது சொல்லப்பட்டுள்ளது.

2013ம் ஆண்டுக்கு பின்னர் ஏற்பட்ட மிகப்பெரிய தொய்வு நிலையாக நடப்பாண்டு இருந்துள்ளது. பொருளாதாரத்தை மீட்க பெரும்பாலான நாடுகள் பணத்தை அச்சடித்து பண புழக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. இதன் காரணமாக பொருளாதார வளர்ச்சி விரைவில் எட்டப்படும் என ஒவ்வொரு அரசும் எதிர்பார்த்து கொண்டிருக்கிறது. நாட்டின் பொருளாதாரம், முதலாம் காலாண்டு வீழ்ச்சியை காட்டிலும் இரண்டாம் காலாண்டில் சிறிய அளவில் வீழ்ச்சியை சந்தித்துள்ளது கவனிக்கத்தக்கது. பண்டிகை காலத்திற்கு பிறகு ஏற்படும் நுகர்வு தன்மை(Consumption) தான் சந்தைக்கு அடுத்தகட்ட நகர்வை ஏற்படுத்தும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

டாட்டா குழும நிறுவனங்களின் சந்தை மதிப்பு என்ன ?

டாட்டா குழும நிறுவனங்களின் சந்தை மதிப்பு என்ன ?

Market Capitalization of Tata Group of Companies 

புதிய தொழில்முனைவு புகுதலும், பழையன கழிதலுமாக இருந்தாலும், தொழில்களில் நெறிமுறைகளை ஏற்படுத்தி நீண்டகாலம் பின்பற்றுபவர்கள் சிலரே. அப்படிப்பட்டவர்கள் சிறந்த தொழிலதிபர்களாகவும், மாபெரும் பணக்காரர்களாகவும் உருவெடுக்கின்றனர். உலக பணக்காரர்கள் வரிசையில் உள்ளவர்களின் மதிப்பு என்னவோ முதலீட்டாளர்களை உள்ளடக்கிய (நம்மையும் சேர்த்து) சொத்து மதிப்பாக தான் சொல்லப்படுகிறது. உண்மையில் உலக பணக்காரர்களில் முதலிடம் பிடித்த நபரிடம் உள்ள மதிப்பு அவருடைய சொந்த மதிப்பாக இருப்பதில்லை.

ஆம், அவருடைய நிறுவனத்தின் சந்தை மதிப்பாக தான் உள்ளது. நாம் நினைப்பது போல சந்தை மதிப்பை அவ்வளவு எளிதாக அடைந்து விட முடியாது. அப்படியே பெருமளவிலான சந்தை மதிப்பை பெற்றிருந்தாலும் அதனை பல வருடங்களுக்கு தக்க வைப்பது சவாலான விஷயம் தான். ஒவ்வொரு நாட்டின் அரசுக்கு மக்களின் வரி பணம் எப்படி தேவையோ, அது போல மக்களின் நம்பிக்கையும், முதலீடும் சந்தையில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு தேவை.

பாரம்பரிய தொழிலாக இருந்தாலும், நாணயமாக நீண்டகாலம் தொழில் செய்யும் நிறுவனங்களை தான் சந்தை வரவேற்கிறது. புதிய சிந்தனைகள் மற்றும் தொழில்நுட்பங்களை கொண்டு எளிமையான ஸ்டார்ட் அப் நிறுவனமாக வலம் வந்தாலும், மக்களுக்கு அளிக்கப்படும் சேவை சிறப்பாக இருக்கும் நிலையில் சந்தை அதனை வரவேற்க தயங்குவதில்லை.

ஒவ்வொரு வருடமும் துவங்கப்படும் நிறுவனங்கள் பல, அதனை காட்டிலும் மூடப்படும் தொழில்களின் எண்ணிக்கை சற்று அதிகமாக தான் உள்ளது. இதற்கான காரணங்கள் பலவாக இருந்தாலும், நெறிமுறைகளை வகுத்து தொழில் புரிபவர்களை நுகர்வோர் சந்தை எப்போதும் எதிர்பார்த்து கொண்டு தான் இருக்கிறது. அதுவும் நீண்டகாலம் தொழில் புரியும் நிறுவனங்கள் என்றால், மக்களுக்கு அதன் மீதான நம்பிக்கை அதிகம். அப்படிப்பட்ட ஒரு நிறுவனம் தான் டாட்டா குழுமம்(Tata Group).

1868ம் ஆண்டு துவங்கப்பட்ட நிறுவனம் தான் டாட்டா எனும் தனியார் நிறுவனம். இன்று லட்சங்களில் பணியாளர்களையும், பில்லியன் டாலர்களில் வருவாயையும் கொண்டிருக்கிறது. பெரும்பாலும் அனைத்து துறைகளிலும் கால்பதித்த இந்த குழுமத்தின் நிறுவனங்கள் டாட்டா என்ற பிராண்டுடன்(Brand) பெயரை குறிக்கும். உலகளவில் பல நிறுவனங்களை கையகப்படுத்தலும் டாட்டா குழுமத்தின் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. இந்திய தொழிற்துறையில் டாட்டா என்ற பெயரை கொண்டிருக்காமல் பல நிறுவனங்கள் டாட்டா குழுமத்திற்கு சொந்தமாக உள்ளன.

பங்குச்சந்தையில் டாட்டா குழும நிறுவனங்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. சந்தையின் முக்கிய குறியீடுகளில்(Index) தவிர்க்க முடியாத இடத்தை டாட்டா குழும நிறுவனங்கள் பெற்றுள்ளது. அப்படிப்பட்ட சில டாட்டா குழும நிறுவனங்களின் தற்போதைய சந்தை மதிப்பை காண்போம்.

நவம்பர் 26ம் தேதியின் படி (ரூபாய் மதிப்பில்),

  • டி.சி.எஸ்.(Tata Consultancy Services) –  10.21 லட்சம் கோடி
  • டைட்டன் கம்பெனி – 1.18 லட்சம் கோடி
  • டாட்டா ஸ்டீல் – 65,000 கோடி
  • இன்டெர்குளோப் (இண்டிகோ) – 59,500 கோடி
  • டாட்டா மோட்டார்ஸ் – 58,000 கோடி 
  • டாட்டா கன்ஸ்யூமர் – 48,000 கோடி
  • டாடா கம்யூனிகேஷன்ஸ் – 30,500 கோடி
  • வோல்டாஸ் – 25,500 கோடி
  • ட்ரென்ட் லிமிடெட் – 25,200 கோடி
  • டாட்டா பவர் – 20,000 கோடி 
  • இந்தியன் ஹோட்டல்ஸ் – 13,400 கோடி
  • டாட்டா கெமிக்கல்ஸ் – 9,800 கோடி
  • டாட்டா எல்எக்ஸி – 9,400 கோடி
  • டாட்டா இன்வெஸ்ட்மென்ட் – 4,700 கோடி 
  • டாட்டா ஸ்டீல் பிஎஸ்எல் – 3,800 கோடி 
  • டாட்டா ஸ்டீல் லாங் (Sponge Iron) – 2,000 கோடி 
  • டாட்டா காபி – 1,900 கோடி
  • டாட்டா மெட்டாலிக்ஸ் – 1,600 கோடி 
  • டின்பிளேட்(Tinplate) கம்பெனி – 1,500 கோடி
  • தாஜ் GVK – 900 கோடி
  • நெல்கோ – 425 கோடி

இன்னும் இங்கு சொல்லப்படாத நிறுவனங்களும் சந்தையில் வர்த்தகமாகி கொண்டிருக்கிறது. இந்திய பங்குச்சந்தையில், சந்தை மதிப்பு அடிப்படையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் (ரூ.12.83 லட்சம் கோடி) முதலிடத்தில் இருந்தாலும், ஒட்டுமொத்த சந்தை மதிப்பில் கணிசமான பங்களிப்பை டாட்டா குழுமம் மட்டுமே கொண்டுள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

தனிநபர் காப்பீடு, ஒரு நாட்டின் பாதுகாப்பு !

தனிநபர் காப்பீடு, ஒரு நாட்டின் பாதுகாப்பு !

Insurance is the fundamental of the Country’s economy

கொரோனா பெருந்தொற்று காரணமாக வேலைவாய்ப்பு இல்லாதது, தொழில்களில் காணப்படும் மந்தநிலை ஒரு புறம் இருந்தாலும், மீண்டும் அடுத்த அலை நம் நாட்டில் அதிக பாதிப்பை ஏற்படுத்தி விடுமோ என்ற ஐயமும் அனைவரிடத்திலும் உள்ளது. மாற்று இயல்பு(New normal) என சொல்லக்கூடிய புதியதொரு வாழ்வை கொரோனா பாதிப்பின் காரணமாக எடுக்கப்பட்ட நடவடிக்கை மூலம் தெரிந்து கொள்ளலாம்.

கொரோனா காலத்தில் வேலைவாய்ப்பு விகிதம் குறைந்திருந்தாலும் சுய தொழில்களின் வரவு அதிகரித்துள்ளது. அதே வேளையில் பெரும்பாலானோரின் செலவுகள் குறைந்து சேமிப்பும் அதிகரித்து வருகிறது. அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலம் பண்டிகை காலம் என்பதால் பொதுவாக நுகர்வோர் செலவு அதிகரிக்கக்கூடும். இருப்பினும் எதிர்காலத்தில் இது போன்ற எதிர்பாராத நிகழ்வுகள் ஏற்பட கூடும் என்ற எச்சரிக்கை உணர்வால், சேமிப்பின் அளவும் அதிகரித்து  வருவது குறிப்பிடத்தக்கது.

ஜூன் 2020 காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 21 சதவீதம் சேமிப்புக்காக இருந்துள்ளது. இது கடந்த 2019ம் ஆண்டின் ஜூன் காலாண்டில் 8 சதவீதமாக இருந்துள்ளது. நம்மில் பெரும்பாலோருக்கு சேமிப்புக்கும், முதலீடுக்குமான வேறுபாடு தெரியவில்லை என்றாலும் பாரம்பரியமாக சேமிப்பது நமது அடிப்படை கடமையாக உள்ளது.

சேமிக்கிறேன் என காப்பீடு திட்டங்களை தேர்ந்தெடுப்பது, குழந்தைகளின் பெயரில் காப்பீடு என தவறான அணுகுமுறையை நாம் செய்து வருகிறோம். அப்படி இருந்தாலும், காப்பீடு தனிநபர் மற்றும் குடும்பத்தினருக்கு அவசியமான ஒன்று. தனிநபர் ஒருவரின் வருவாயை சார்ந்திருக்கும் குடும்பம், அந்த குறிப்பிட்ட நபருக்கான காப்பீட்டை உறுதி செய்து கொள்வது அவசியம். எதிர்பாராத சூழ்நிலையில் அந்த தனிநபர் ஏதேனும் ஒரு நிகழ்வால் இறந்து விட்டால், அதனால் பொருளாதார ரீதியாக சிரமப்படும் குடும்பத்தினருக்கு காப்பீட்டின் மூலம் கிடைக்கப்பெறும் தொகை உதவும்.

சேமிப்பது ஒரு நாட்டிற்கு எந்தளவு நன்மை அளிக்குமோ, அது போன்று காப்பீடும் ஒரு நாட்டிற்கான முழுமையான பாதுகாப்பு எனலாம். தனிநபர் காப்பீட்டின் மூலம் தன்னை சார்ந்து வாழும் குடும்பத்தினருக்கு மட்டுமில்லாமல், அது நாட்டிற்கான கடமையாகவும் பார்க்கப்படுகிறது. இதன் மூலம் அரசுக்கு ஏற்படும் நிதி சுமை குறையும். குடும்பமும் பொருளாதார தன்னிறைவை நோக்கி நகரும்.

நாகரீக மாற்றத்தினால், இயற்கை வளங்கள் அழிந்து வரும் நிலையில் மனிதனுக்கு உள்ள ஒரே பாதுகாப்பான பலம் நிதி சார்ந்த தன்மைகள் மட்டுமே. வெறுமென வேலை மற்றும் அதனை சார்ந்த சம்பளம் என்று இல்லாமல், வருவாயில் சேமிப்பு மற்றும் எதிர்பாராத நிகழ்வை சரி செய்யும் காப்பீடு போன்ற நடவடிக்கையை மேற்கொள்வது அவசியமான ஒன்று. காப்பீட்டின் மூலம் ஒரு நாடு தன்னிறைவை அடைவதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. இதன் மூலம் கிடைக்கப்பெறும் பயன்கள் சில,

  • போதுமான சேமிப்பு
  • சேமிப்பின் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துதல்
  • தனிநபர் மற்றும் வணிகங்களுக்கான பாதுகாப்பு
  • அவசர காலம் மற்றும் மருத்துவம் சார்ந்த தேவையை நிறைவு செய்தல்
  • நீண்ட கால நிதி ஆதாரங்களை உருவாக்குதல்
  • தொழிற்துறைக்கு சாதகமான அம்சம்
  • அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்குதல்
  • காப்பீட்டின் மூலம் ரிஸ்க் தன்மையை பரவலாக்குதல் அல்லது குறைத்தல்
  • வரி செலுத்துதல் மற்றும் வரி சேமிப்பு மூலம் அரசாங்கத்திற்கு தேவையான பணப்புழக்கத்தை ஏற்படுத்துதல்.

சொல்லப்பட்ட விஷயங்கள் அனைத்தும் குடிமக்கள் மற்றும் அதனை சார்ந்த அரசுக்கும் நிதி சுதந்திரத்தை அளிக்கும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

சன் டி.வி. நிறுவன காலாண்டு லாபம் – ரூ.335 கோடி

சன் டி.வி. நிறுவன காலாண்டு லாபம் – ரூ.335 கோடி 

Sun TV Network reported a Net Profit of Rs.335 Crore – Q2FY21

தமிழகத்தை தலைமையிடமாக கொண்டு கடந்த 1992ம் ஆண்டு துவங்கப்பட்ட நிறுவனம் தான் சன் குழுமம்(Sun Group). ஊடக துறையில் உள்ள இந்நிறுவனம் நாளிதழ் வெளியீடு, ஒளிபரப்பு, வானொலி, படம், கேபிள் தொலைக்காட்சி, விளையாட்டு உரிமம் ஆகியவற்றில் தொழில் புரிந்து வருகிறது. தமிழ் உட்பட தென்னிந்திய மொழிகளில் முப்பதுக்கும் மேற்பட்ட டி.வி. சேனல்களையும், பல துணை நிறுவனங்களையும் கொண்டிருக்கிறது.

விமான போக்குவரத்து துறையில் தனது சேவையை கொண்டிருந்த இந்நிறுவனம், கடந்த சில வருடங்களுக்கு முன்பு அந்த நிறுவனத்தில் (Spicejet) உள்ள அனைத்து பங்குகளையும் விற்று வெளியேறியது. நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.17,500 கோடி. கடனில்லா நிறுவனமாக(Debt Free) வலம் வந்து கொண்டிருக்கும் சன் டி.வி. பங்கின் புத்தக மதிப்பு 160 ரூபாயாகவும், வட்டி பாதுகாப்பு விகிதம் 138 மடங்குகளிலும் உள்ளது.

நிறுவனர்களின் பங்களிப்பு 75 சதவீதமாக இருக்கிறது. நிறுவனர்கள் சார்பில் ஒரு சதவீதத்திற்கு குறைவான பங்குகள் அடமானமாக இருந்துள்ளது. இந்திய டி.வி. துறையில் முக்கிய இடத்தை வகிக்கும் இந்த நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு(Reserves) 6,100 கோடி ரூபாயாக உள்ளது. பணவரத்தும், பங்கு மூலதனத்தின் மீதான வருவாயும் நிறுவனத்திற்கு சாதகமாக உள்ளது.

2020-21ம் நிதியாண்டின் இரண்டாம் காலாண்டு முடிவுகளை நேற்று(12-11-2020) வெளியிட்டது இந்த நிறுவனம். நிறுவனத்தின் வருவாய் 769 கோடி ரூபாயாகவும், செலவினம் ரூ.274 கோடியாகவும்(Quarterly results) சொல்லப்பட்டுள்ளது. இதர வருமானமாக 54 கோடி ரூபாய் இருந்துள்ளது. இரண்டாம் காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.335 கோடி.

சொல்லப்பட்ட நிகர லாபம், ஜூன் காலாண்டை காட்டிலும் 23 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது. அதே வேளையில், முந்தைய வருடத்தின் செப்டம்பர் காலாண்டுடன் ஒப்பிடுகையில் தற்போதைய லாபம் 10 சதவீத குறைவாகும். விற்பனை வளர்ச்சி கடந்த ஐந்து வருடங்களில் 8 சதவீதமாகவும், இதுவே 10 வருட காலத்தில் 9 சதவீதமாகவும் உள்ளது.

லாபம், கடந்த ஐந்து மற்றும் பத்து வருட காலங்களில் 10 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த பங்கின் விலை கடந்த ஒரு வருடத்தில் இறக்கம் கண்டிருந்தாலும், மார்ச் மாத வீழ்ச்சியில் பங்கு ஒன்றுக்கு 300 ரூபாய்க்கு குறைவாக வர்த்தகமானது. அப்போதைய நிலையில், பணப்பாய்வு முறைப்படி(Discounted Cash Flow) பங்கின் விலையும் மலிவாக காணப்பட்டது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

பங்குகளை மதிப்பீடு செய்யும் போது தவிர்க்க வேண்டிய நான்கு விஷயங்கள்

பங்குகளை மதிப்பீடு செய்யும் போது தவிர்க்க வேண்டிய நான்கு விஷயங்கள் 

Four things to avoid when valuing a Stock – Value Investing

பங்குச்சந்தையில் வர்த்தகமாகும் ஒரு நிறுவன பங்கை வாங்குவதற்கு இரு வகையான முறைகளில் மதிப்பீடு செய்யலாம். அடிப்படை முறையாக சொல்லப்படுவது பண்டமென்டல் அனாலிசிஸ், மற்றொரு முறை டெக்னிக்கல் அனாலிசிஸ். ஒரு நிறுவனத்தின் தொழில் சார்ந்த தன்மைகளை ஆராய்ந்து பங்குகளை அலசுவது பண்டமென்டல் அனாலிசிஸ். சந்தையில் வர்த்தகமாகும் பங்கின் கடந்த கால விலைகளை கொண்டு அலசுவது டெக்னிக்கல் அனாலிசிஸ் எனப்படும். இந்த இரண்டில் ஏதேனும் ஒன்றை சந்தையில் ஈடுபடுபவர்கள் தங்களது ஆயுதமாக கொள்வர்.

சொல்லப்பட்ட இரு முறைகளில் ஏதேனும் ஒன்றை கடைபிடிப்பது அவசியம். நீண்டகால முதலீட்டாளர்களுக்கு அடிப்படை பகுப்பாய்வு(Fundamental Analysis) என்பது முக்கியமான அம்சமாகும். குறுகிய காலத்தில் செயல்படுபவர்களுக்கு அடிப்படை பகுப்பாய்வும், தொழில்நுட்ப பகுப்பாய்வும் பயனளிக்கும். நாள் வணிகருக்கு தொழில்நுட்ப பகுப்பாய்வு(Technical Analysis) பயன்பட்டாலும், தொழில் சார்ந்த அடிப்படை தன்மைகளை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

நீங்கள் எந்த முறையில் அலசுவதாக இருந்தாலும், சொல்லப்போகும் நான்கு விஷயங்களை தவிர்த்து விட்டு பங்குகளை காண வேண்டும். அப்போது தான் உங்களது மதிப்பீடு தவறாக போகாது.

  • பங்குகளை நேசிக்க வேண்டாம் (Don’t love the Stock always):

பங்குச்சந்தையில் நீங்கள் வாங்க போகும் பங்கு மீது அதிக பற்று வைத்து நேசிக்க வேண்டாம். ‘நான் வேலை பார்க்கும் நிறுவனத்தின் பங்கு, எனக்கு அந்த நிறுவனத்தின் பெயர் ரொம்ப பிடிக்கும், நல்ல பிராண்டு’ என்ற காரணங்களை மட்டும் கொண்டு பங்குகளை வாங்க வேண்டாம். பங்குகளை வாங்குவதற்கு முன்னர், மதிப்பீடு(Valuation) செய்வதன் மீது கவனம் செலுத்துங்கள். பங்குச்சந்தையை பொறுத்தவரை நிறுவனத்தின் தொழில் நன்றாக நடைபெற்றால் மட்டுமே அது முதலீட்டாளர்களுக்கு லாபத்தை சம்பாதித்து கொடுக்கும். இல்லையெனில், கடந்த காலத்தில் ஜாம்பவானாக இருந்த நிறுவனங்களும், பிற்காலத்தில் காணாமல் போகலாம். எனவே பங்குகளின் மதிப்பீட்டை உற்று நோக்குங்கள்.

  • உங்களது சிந்தனையை பங்குகளின் மீது திணிக்காதீர்கள் (Don’t like your Idea on Stock):

நீங்கள் கடந்த காலங்களில் எந்தவொரு மதிப்பீட்டையும் செய்யாமல் பங்குகளை வாங்கி குவித்திருக்கலாம். சில பங்குகள் நல்ல லாபத்தை கொடுத்திருக்கும். இருப்பினும், அதனை ஒரு சிறந்த முறையாக நீங்கள் எடுத்து கொண்டு பங்குகளை வாங்காதீர்கள். உங்களது கடந்த கால பங்கு வாங்கும் தவறான சிந்தனையை, புதிய பங்குகளை வாங்கும் போது திணிக்க வேண்டாம்.

‘நான் வாங்கிய 2 ரூபாய் விலையுள்ள பங்கு 10 ரூபாய் சென்று விட்டது, பெருத்த லாபம் ‘ என எந்தவொரு அடிப்படை தொழில் சார்ந்த விஷயமும் இல்லாமல் சூதாட வேண்டாம்.

  • மந்தை கூட்ட மனப்பான்மையை தவிர்க்க வேண்டும் (Avoid Herd Mentality):

நண்பர்கள் சொன்னார்கள், தரகர் சொன்ன தகவலில் வந்தது, டி.வியில் பரிந்துரைத்தார்கள் என பங்குகளை வாங்க வேண்டாம். நீங்களாகவே ஒவ்வொரு பங்குகளையும் மதிப்பீடு செய்து, ஆராய்ந்து வாங்குங்கள். இது பங்குகளை விற்கும் போதும் தேவையான ஒன்று. உங்களுக்கு நேரம் இல்லையென்றால், பங்குகளை அலச நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் துணை கொண்டு முதலீட்டு முடிவை எடுங்கள்.

மற்றவர்கள் வாங்குகிறார்கள், குறிப்பிட்ட பங்கு ஒன்று சந்தையில் இன்று அதிக விலைக்கு வர்த்தகமாகிறது அல்லது ஊடக செய்தியில் வந்த தகவல் என அவசரப்பட்டு மந்த கூட்ட மனப்பான்மையில் பங்குகளை வாங்காதீர்கள். உங்களுக்கு லாபம் மட்டுமே சொந்தமல்ல, நட்டமும் தான்.

  • மதிப்பீட்டிற்கு முன்னுரிமை அளியுங்கள் (Don’t Compromise – Stock vs Valuation):

‘நான் இந்த பங்கினை பல காலங்களாக பார்த்து வருகிறேன், இது இப்படி தான் ஏறும், இறங்கும்’ என வெறும் விலைகளை மட்டும் பார்க்காமல் அதன் நிதி சார்ந்த தன்மைகளை கவனியுங்கள். நிறுவனத்தின் நிதி அறிக்கை எப்படி உள்ளது, கடன் ஏதும் உள்ளதா, பொருளாதார மந்தநிலை காலங்களில் நிறுவனம் எவ்வாறு செயல்படுகிறது, அதன் தொழில் போட்டி என்ன என்பதை அறிந்து வைத்திருப்பது அவசியம்.

பங்குச்சந்தையில் ஒரு நிறுவன பங்கு வர்த்தகமானாலும், உண்மையில் அந்த நிறுவனத்திற்கு தொழில் சரியாக நடைபெற்றாக வேண்டும். வெறுமென பங்கு விலையை மட்டும் கவனிக்காமல், மதிப்பீட்டுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். மதிப்பீடு சில சமயங்களில் தவறாக போனாலும், அதனால் வரக்கூடிய இழப்பு குறைவே, அது ஏற்றுக்கூடியதாகவும் இருக்கும்.

சில சமயங்களில் நல்ல நிறுவன பங்குகளும், மதிப்பீடு செய்யாமல் தவறான விலையில் வாங்கும் போது உங்களுக்கு நட்டத்தை ஏற்படுத்தலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

இன்சூரன்ஸ் பிரீமியத்தை கட்டுவதற்கு சிரமப்படுகிறீர்களா, இது உங்களுக்கான மாத்தி யோசி வழி !

இன்சூரன்ஸ் பிரீமியத்தை கட்டுவதற்கு சிரமப்படுகிறீர்களா, இது உங்களுக்கான மாத்தி யோசி வழி !

Smart way to pay your annual premium – Financial Burden

நம்மில் பலருக்கு மாதச்சம்பளம் சரியான தேதியில் வந்து கொண்டிருந்தாலும், மாத நடுவில் இரண்டாம் சம்பளம் தேவைப்படுகிறது என்ற நிலைமை ஏற்பட தான் செய்கிறது. குழந்தைகளுக்கு பள்ளிக்கட்டணம் செலுத்தி விட வேண்டும் என நாம் யோசித்தால், அந்த மாதம் தான் எதிர்பாராத செலவுகள் எகிறி கொண்டிருக்கும். மாதம் ஆரம்பித்தவுடன் 5ம் தேதி வாகன இ.எம்.ஐ.(EMI) கட்டணம், 10ம் தேதி வீட்டு கடன் தவணை, அதே பத்தாம் தேதி கைபேசிக்கு போஸ்ட் பெய்டு கட்டணம், 15ம் தேதி மாத காப்பீடு பிரீமியம்(Insurance Premium). இதற்கு நடுவில் பால், கேபிள் டிவி, மின் கட்டணம், பலசரக்கு கடைக்கு, கிரெடிட் கார்டு, ஆன்லைன் ஷாப்பிங். அப்பப்பா, என்ன ஒரு மாதாந்திர செலவுகள் !

நடுத்தர குடும்பத்திற்கு மட்டுமே என இல்லாமல் ஏழை முதல் பணக்காரர்கள் வரை மாத செலவு பட்ஜெட் போடுவதற்கு என தனி வருமானம் வேண்டுமென எல்லோரையும் நினைக்க வைக்கிறது. சரிவிகித பட்ஜெட் திட்டமிடலை நாம் பராமரிக்காமல் விட்டால் வரவுக்கு மேல் கடன் வாங்க நேரிடும். கடன் அதிகமானால் கத்தி மேல் நடப்பது போல தினசரி வாழ்க்கை மாறி விடும். அப்புறம் எங்கே நாம் நிதி இலக்குகளை பற்றி திட்டமிடுவது, போதிய காப்பீட்டை பெறுவது.

முன்னொரு காலத்தில் இருந்த நமது பாரம்பரிய சேமிப்பு பழக்கவழக்கம் இன்று வழக்கொழிந்து எதற்கெடுத்தாலும் பொருட்களை வாங்கி குவிக்கும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். இது போன்ற நவீன வாழ்வியல் சூழ்நிலையில், நாம் திறம்பட பட்ஜெட் திட்டமிடலை செய்தால் மட்டுமே, நமக்கு அடுத்த சந்ததியினருக்கு ஏதாவது நன்மை செய்திட முடியும். இன்றைய காலத்தில் பெரும்பாலோனோரின் பிரச்சனை நிதி சார்ந்த இலக்குகள் மற்றும் தேவையான காப்பீட்டு தொகையை சரியான நேரத்தில் செலுத்த முடியாத நிலை தான்.

நிதி இலக்குகளுக்கு தேவையான மாத தொகையும், முறையான காப்பீட்டு தொகையையும் குறிப்பிட்ட தேதியில் செலுத்தாமல் விட்டால், பின்னால் அது சார்ந்து ஏற்படும் பிரச்சனை மிகப்பெரிய நிதி இழப்பை ஏற்படுத்தும். இவற்றில் முக்கியமானது காப்பீட்டு தொகையை உரிய நேரத்தில் செலுத்துவது. சரியான காப்பீடு எனும் போது டேர்ம் இன்சூரன்ஸ், மருத்துவ காப்பீடு, விபத்து காப்பீடு ஆகியவற்றை சொல்லலாம். இது போக வாகன காப்பீடு தனிநபர் சார்ந்தது.

நம்மில் பெரும்பாலோர் ஆண்டு காப்பீட்டை(Annual Premium) செலுத்த முடியாமல், அதனை மாதாந்திர தொகையாக மாற்றி கொள்கின்றனர். இருப்பினும், பலர் மாதாந்திர தொகையை சரியான நேரத்தில் செலுத்த முடியாமல் உள்ளனர். நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பலர் காப்பீட்டு பிரீமியம் அதிகமாக இருப்பதாக எண்ணி, போதிய காப்பீட்டு பாதுகாப்பை பெறாமல் உள்ளனர். நம் நாட்டை பொறுத்தவரை காப்பீட்டை முழுவதுமாக பெறாமல் இருப்பவர்களின்(Not Sufficient Coverage) எண்ணிக்கையும், காப்பீட்டில் உரிமை கோரப்படாத தொகையின் மதிப்பும்(Unclaimed amount) அதிகம் எனலாம். காலம் தவறிய பிரீமிய தொகை, அபராத கட்டணமாக மட்டுமில்லாமல், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் காப்பீடு தொகை உரிமை கோருவதை நிராகரிக்கும் நிலைக்கு தள்ளப்பட வேண்டியுள்ளது. எனவே சரியான வேளையில் அதற்கான தொகையை செலுத்தி விடுவது நல்லது. பொதுவாக மாதாந்திர காப்பீட்டு தொகையை காட்டிலும், ஆண்டு பிரீமியத்தில் சலுகை உண்டு. மேலும் அதனை எளிதாக செலுத்துவதற்கான யோசனையும் உள்ளது.

  • முதலில் உங்களது மாதாந்திர காப்பீட்டு தொகையை, ஆண்டு பிரிமியமாக மாற்றி கொள்ளுங்கள். (உங்களுக்கு மாதாந்திர தொகை செலுத்துவது சிரமமாக இருந்தால்)
  • ஆண்டு பிரீமியமாக செலுத்தும் போது, கட்டணத்தில் சிறிய அளவில் சலுகை பெற வாய்ப்புண்டு. ( ஏற்கனவே ஆண்டு பிரிமியம் செலுத்துபவர்களுக்கும் இது உதவும்)
  • ஒரு வருடத்திற்கு செலுத்த வேண்டிய காப்பீட்டு பிரீமியத்தை கணக்கிட்டு கொள்ளுங்கள். பின்பு அதனை 12 மாதங்களாக கணக்கில் எடுத்து கொள்ளுங்கள். சொல்லப்பட்ட 12 மாத தொகையை, மியூச்சுவல் பண்டில் கிடைக்கப்பெறும் குறைந்த ரிஸ்க் கொண்ட திட்டத்தில்(Monthly SIP – Liquid or Debt Funds) மாத எஸ்.ஐ.பி. முறையில் முதலீடு செய்யுங்கள்.
  • உங்களது பிரீமியம் செலுத்தும் காலம் வருவதற்கு ஒரு வாரம் முன்னர், மியூச்சுவல் பண்டு திட்டத்தில் உள்ள தொகையை எடுத்து அதற்கான பிரீமியத்தை செலுத்துங்கள். பிரீமிய தேதியை மறந்து விடலாம் என நினைப்பவர்கள், செலுத்த வேண்டிய தொகையை வங்கிக்கணக்கில் போட்டு விட்டு, இன்சூரன்ஸ் திட்டத்தில் தானியங்கி(Auto Debit – ECS) முறையை தேர்ந்தெடுக்கலாம்.
  • அஞ்சலக மற்றும் வங்கி ஆர்.டி.(Recurring Deposit) திட்டங்களை இதற்கு பயன்படுத்தலாம். எனினும் மியூச்சுவல் பண்டுகளில் ஆர்.டி. ஐ போன்று முதிர்வு காலம் என்ற வரம்பும், அபராதமும் கிடையாது. எனவே, நீங்கள் எப்போது வேண்டுமானாலும் முதலீடு செய்து பின்னர் உங்களுக்கு தேவையான ஆண்டு பிரிமியத்துக்கு எடுத்து கொள்ளலாம்.
  • ஒரு வருட டேர்ம் பிளான்(Term Plan), மருத்துவ காப்பீடு(Health Insurance), விபத்து காப்பீடு(Accident Policy) மற்றும் வாகன காப்பீடு போன்றவற்றை செலுத்த சிரமப்படுபவர்கள் இது போன்ற மாதாந்திர எஸ்.ஐ.பி. முறையை தேர்ந்தெடுத்து தங்கள் தேவைக்கேற்ப அதனை மாற்றி கொள்ளலாம்.

இதனை ஒரு உதாரணம் மூலம் நாம் பார்க்கலாம். ராஜன் தனது குடும்பத்தை நிதி சார்ந்த இழப்புகளிலிருந்து பாதுகாக்க 1 கோடி ரூபாய்க்கு டேர்ம் இன்சூரன்ஸ் (பிரீமிய தொகை – ஆண்டுக்கு ரூ.12,500), 5 லட்ச ரூபாய்க்கு மருத்துவ காப்பீடு (பிரிமியம் ஆண்டுக்கு – ரூ. 15,400) மற்றும் விபத்து காப்பீடு ரூ.40 லட்சத்திற்கு (பிரீமியம் ஆண்டுக்கு ரூ. 9,600) எடுத்துள்ளார். இவற்றில் டேர்ம் இன்சூரன்ஸ் மற்றும் மருத்துவ காப்பீட்டுக்கான பிரீமிய தொகை ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதத்தின் வெவ்வேறு தேதிகளில் வருகிறது. விபத்து காப்பீட்டுக்கான பிரீமியத்தை அவர் ஒவ்வொரு ஆண்டின் டிசம்பர் மாதத்தில் செலுத்தி வருகிறார்.

ராஜனுக்கு ஒவ்வொரு ஆண்டின் ஜூன் மாதத்தில் மட்டும் காப்பீடு கட்டணத்திற்காக செலுத்த வேண்டிய தொகை ரூ.28,000. டேர்ம் காப்பீடுக்கான பிரீமியம் பொதுவாக மாறாது, எனினும் மருத்துவ காப்பீடுக்கான பிரீமியம் வயது அதிகரிக்கும் நிலையில் அதற்கான பிரீமியமும் அதிகமாக செல்லும். ராஜனின் மாத வருவாய் ரூ.50,000 ஆக இருக்கும் நிலையில், ஜூன் மாதத்தில் வேறு ஏதேனும் எதிர்பாராத செலவுகள் ஏற்படுமாயின், அவர் சிரமப்பட நேரிடும். இதனை தவிர்க்கும் பொருட்டு, அவர் மியூச்சுவல் பண்டு திட்டத்தில்(Mutual Funds) மாத எஸ்.ஐ.பி. முறையில் ரூ.2500 ஐ முதலீடு செய்து வருகிறார். இதனை கொண்டு ஜூன் மாதத்திற்கான டேர்ம் மற்றும் மருத்துவ காப்பீடு பிரீமியத்தை செலுத்தி விடுவார். இது போக மற்றொரு திட்டத்தினை(Low Risk Debt or Liquid Funds) துவங்கி மாதம் ரூ.1500 ஐ எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்து வருகிறார். இந்த திட்டத்தில் கிடைக்கப்பெறும் தொகையை கொண்டு விபத்து காப்பீட்டு பிரீமியம் மற்றும் தனது மகளின் பிறந்தநாள் செலவுகளை சமாளித்து விடுகிறார்.

மாதாந்திர எஸ்.ஐ.பி. முறையில் 12 மாதங்களுக்கு ரூ. 2500 ஐ முதலீடு செய்யும் நிலையில், எதிர்பார்க்கும் வட்டி விகிதம் 7 சதவீதம் எனும் போது, ஒரு வருடத்தின் முடிவில் கிடைக்கப்பெறும் தொகை ரூ.31,150. நாம் காப்பீடுக்கு கட்ட வேண்டிய தொகையோ ரூ.28,000. மீதத்தொகையை மற்ற செலவுகளுக்கு வேண்டுமானால் பயன்படுத்தி கொள்ளலாம்.

மாதாமாதம் ரூ.1500 ஐ எஸ்.ஐ.பி. முறையில் முதலீடு செய்தால், ஒரு வருடத்திற்கு பிறகு(எதிர்பார்க்கும் வட்டி – 7 %)  18,700 ரூபாயை பெறலாம். ஆண்டு பிரீமிய தேவைகளுக்கு எஸ்.ஐ.பி. முறையில் முதலீடு செய்யும் போது, பாலிசி காலம் முடியும் வரை முதலீட்டை தொடரும் படி வைத்து கொள்ளுங்கள். மற்ற எதிர்பாராத செலவுகளுக்கும் இந்த மாத்தி யோசி முறை பயன்தரும். மியூச்சுவல் பண்டு திட்டத்தில் ஒரு முறை மட்டும் முதலீடு செய்பவர்கள்(Lumpsum Invest in Debt Funds) அல்லது வங்கி ஒரு வருட டெபாசிட் திட்டத்தில்(Fixed Deposit) சேமிப்பவர்கள், அவற்றிலிருந்து கிடைக்கபெறும் ஆண்டு வட்டி வருவாய் உடனடியாக தேவைப்படாத நிலையில், அதனை  கொண்டு உங்களது ஆண்டு பிரீமியத்தை செலுத்தி கொள்வது கூடுதல் சிறப்பம்சமாக இருக்கும். 

இந்த மாத்தி யோசி திட்டம் வெறும் காப்பீட்டுக்கு மட்டுமல்ல. உங்கள் குழந்தை பிறந்தநாள் செலவுகள், திருவிழா காலங்கள், ஆண்டு கல்வி கட்டணம் என எந்தவொரு இலக்கிற்கும் பயன்படுத்தி கொள்ளலாம். இதன் மூலம் எதிர்பாராத நிதி சிக்கல்களை சமாளிக்கலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

ஐ.டி.சி. நிறுவன காலாண்டு லாபம் – ரூ.3,368 கோடி

ஐ.டி.சி. நிறுவன காலாண்டு லாபம் – ரூ.3,368 கோடி 

ITC reported a Net Profit of Rs.3,368 Crore – Q2FY21

இந்திய பன்னாட்டு நிறுவனமான ஐ.டி.சி. துவங்கப்பட்டு நூறு வருடங்களுக்கு மேலாகிறது. ஆரம்ப நிலையில் புகையிலை சார்ந்த நிறுவனமாக சொல்லப்பட்டாலும், இன்று எப்.எம்.சி.ஜி.(FMCG) என அழைக்கப்படும் நுகர்வோர் பொருட்கள் துறையில் முக்கிய நிறுவனமாக பங்கு வகிக்கிறது. பில்லியன் டாலர் வருவாயை கொண்ட இந்நிறுவனம் நுகர்வோர் பொருட்கள், புகையிலை, விடுதிகள், ஆடைகள், பேப்பர் மற்றும் பேக்கேஜிங், விவசாயம் மற்றும் தொழில்நுட்ப பிரிவில் தொழில் செய்து வருகிறது.

ஐ.டி.சி. நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 2.14 லட்சம் கோடி. இதன் புத்தக மதிப்பு 53 ரூபாய். கடனில்லா நிறுவனமாக வலம் வரும் இந்நிறுவனத்தின் வட்டி பாதுகாப்பு விகிதம்(ICR) 330 மடங்குகளில் உள்ளது. நிறுவனர்கள் சார்பில் பங்குகள் நேரடியாக இல்லையென்றாலும், எல்.ஐ.சி. காப்பீடு நிறுவனத்திடம் 16 சதவீத பங்குகளும், இந்திய யூனிட் டிரஸ்ட் கட்டுப்பாட்டில் 8 சதவீத பங்குகளும் உள்ளது. அந்நிய முதலீட்டாளர்களிடம் சுமார் 13 சதவீத பங்குகளும், பொதுவெளியில்(Public holding) உள்ள பங்குகளில் பிரிட்டிஷ் அமெரிக்க புகையிலை நிறுவனங்கள் சுமார் 30 சதவீத பங்குகளை கொண்டுள்ளன.

செப்டம்பர் காலாண்டுக்கான(Quarterly results) முடிவுகள் நேற்று(06-11-2020) வெளியிடப்பட்டது. நிறுவனத்தின் வருவாய் ரூ.13,148 கோடியாகவும், செலவினம் 8,747 கோடி ரூபாயாகவும் உள்ளது. இயக்க லாப விகிதம்(Operating Profit Margin) கடந்த ஆண்டை காட்டிலும் தற்போது குறைந்துள்ளது. இருப்பினும் பேப்பர், எழுது பொருட்கள் மற்றும் விடுதி மூலம் குறிப்பிடத்தக்க விற்பனை இல்லாமல் நிறுவனத்தின் வருவாய் அதிகரித்து இருப்பது கவனிக்கத்தக்கது. இதர வருமானமாக ரூ.582 கோடி சொல்லப்பட்டுள்ளது.

வரிக்கு முந்தைய லாபம் ரூ.4,565 கோடியாகவும், சொல்லப்பட்ட காலாண்டில் நிகர லாபமாக ரூ.3,368 கோடியை நிறுவனம் ஈட்டியுள்ளது. 2019-20ம் நிதியாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.49,388 கோடியாகவும், நிகர லாபம் ரூ.15,306 கோடியாகவும் இருந்தது. நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு ரூ.64,044 கோடி என சொல்லப்பட்டுள்ளது.

நிறுவனத்திற்கான பணவரத்து(Cash Flow) நன்றாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த பங்கின் விலை கடந்த ஒரு வருடத்தில் 33 சதவீதம் இறக்கம் கண்டுள்ளது. அடிப்படை பகுப்பாய்வை பூர்த்தி செய்யும் இந்நிறுவனம் பங்கு ஒன்றுக்கு ரூ.160க்கு குறைவாக வர்த்தகமாகும் நிலையில், முதலீட்டாளர்களுக்கு ஒரு அரிய  முதலீட்டு வாய்ப்பாக அமையும்.

கவனிக்க: முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கும் முன் தகுந்த நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் முன்னிலையில் தங்களது முதலீட்டு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலே சொன்ன தகவல்கள் பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வுக்கான கற்றல் மட்டுமே.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com