பிக் பேஸ்கட் நிறுவனத்தை வாங்கும் டாட்டா
Tata Group to buy Big Basket with a majority Stake
பெங்களூரு நகரத்தை தலைமையிடமாக கொண்டு கடந்த 2011ம் ஆண்டு துவங்கப்பட்ட நிறுவனம் பிக் பேஸ்கட்(Bigbasket). இணையம் வழியாக மளிகை பொருட்களை விநியோகம் செய்யும் சேவையை இந்த நிறுவனம் செய்து வருகிறது. வீட்டுக்கு தேவையான அத்தியாவசிய மற்றும் உணவு பொருட்கள் இதன் மளிகை பொருட்களாக இருந்து வருகிறது.
உலகளவில் காணப்படும் சில பெரு நிறுவனங்களுடன் இணைந்து தனது சந்தைப்படுத்துதலை விரிவாக்கம் செய்தது பிக் பேஸ்கட். சுமார் 18,000 க்கும் மேற்பட்ட பொருட்கள் மற்றும் 1000 பிராண்டுகளுக்கு மேலாக தனது மளிகை அட்டவணையில் கொண்டிருந்த இந்நிறுவனம் பெங்களூரு மட்டுமில்லாமல், சென்னை, ஹைதராபாத், மும்பை, புனே, கோவை, கொல்கத்தா, டெல்லி மற்றும் மைசூரு என பல மாநிலங்களின் முக்கிய நகரங்களில் தனது சேவையை அளித்து வருகிறது.
ஸ்டார்ட் அப் நிறுவனமாக வலம் வந்த பிக் பேஸ்கட் நிறுவனத்தில் 17 முதலீட்டாளர்கள் முதலீடு செய்துள்ளனர். சொல்லப்பட்ட முதலீட்டாளர்களிடம் இருந்து சுமார் ஒரு பில்லியன் டாலர்கள் அளவுக்கு முதலீட்டை ஈர்த்துள்ளது இந்தநிறுவனம். முதன்மை முதலீட்டாளர்களாக சீனாவை சேர்ந்த அலிபாபா குழுமம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
பிக் பேஸ்கட் நிறுவனத்தை கையகப்படுத்த சில பெரு நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டிருந்தாலும், கடந்த சில வாரங்களுக்கு முன்பு டாட்டா குழுமம் சார்பில் பிக் பேஸ்கட் நிறுவனத்தின் 51 சதவீத பங்குகளை வாங்க பேச்சு வார்த்தை நடப்பதாக செய்திகள் வெளிவந்தன.
மளிகை விற்பனையில் ஏற்கனவே அனுபவம் கொண்டிருக்கும் டாட்டா குழுமத்திற்கு இந்த நிறுவன கையகப்படுத்துதல் வெற்றிகரமாக முடிந்தால், சந்தையில் புதிய போட்டியை ஏற்படுத்தும். இந்நிலையில் சமீபத்திய செய்தி ஒன்று, பிக் பேஸ்கட் நிறுவனத்தின் 80 சதவீத பங்குகளை டாட்டா குழுமம் வாங்க உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே ரிலையன்ஸ் நிறுவனம் மளிகை வணிகத்தில் கால்பதித்துள்ள நிலையில், டாட்டா குழுமத்தின் இந்த கையகப்படுத்தல் சந்தையில் சவாலாக இருக்கும்.
டாட்டா குழுமம்(Tata Group) பிக் பேஸ்கட் நிறுவனத்தை வாங்கும் நிலையில், அதன் மதிப்பு சுமார் 1.3 பில்லியன் டாலர்களாக இருக்கலாம் என சொல்லப்பட்டுள்ளது. இணைய வழி மளிகை வணிகத்தில் நாட்டின் 50 சதவீத பங்களிப்பை பிக் பேஸ்கட் கொண்டுள்ளது. நஷ்டத்தில் செயல்பட்டு கொண்டிருக்கும் இந்நிறுவனத்தின் மதிப்பு 1.6 பில்லியன் டாலர்கள்.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஊரடங்கின் போது, இந்த நிறுவனம் இரண்டே நாட்களில் தனது 80 சதவீத வேலையாட்களை இழந்தது. எனினும் அவற்றிலிருந்து மீண்டு வந்த நிறுவனம் 16 நாட்களில் 12,000 பணியாளர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளதாக சொல்லப்படுகிறது. 2019-20ம் நிதியாண்டின் முடிவில் நிறுவனத்தின் வருவாய் 5,200 கோடி ரூபாயாகவும், ரூ. 920 கோடியை நிகர நஷ்டமாகவும் சந்தித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹேக்கர்களால் பிக் பேஸ்கட் நிறுவன வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாயின.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை