தனிநபர் காப்பீடு, ஒரு நாட்டின் பாதுகாப்பு !
Insurance is the fundamental of the Country’s economy
கொரோனா பெருந்தொற்று காரணமாக வேலைவாய்ப்பு இல்லாதது, தொழில்களில் காணப்படும் மந்தநிலை ஒரு புறம் இருந்தாலும், மீண்டும் அடுத்த அலை நம் நாட்டில் அதிக பாதிப்பை ஏற்படுத்தி விடுமோ என்ற ஐயமும் அனைவரிடத்திலும் உள்ளது. மாற்று இயல்பு(New normal) என சொல்லக்கூடிய புதியதொரு வாழ்வை கொரோனா பாதிப்பின் காரணமாக எடுக்கப்பட்ட நடவடிக்கை மூலம் தெரிந்து கொள்ளலாம்.
கொரோனா காலத்தில் வேலைவாய்ப்பு விகிதம் குறைந்திருந்தாலும் சுய தொழில்களின் வரவு அதிகரித்துள்ளது. அதே வேளையில் பெரும்பாலானோரின் செலவுகள் குறைந்து சேமிப்பும் அதிகரித்து வருகிறது. அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலம் பண்டிகை காலம் என்பதால் பொதுவாக நுகர்வோர் செலவு அதிகரிக்கக்கூடும். இருப்பினும் எதிர்காலத்தில் இது போன்ற எதிர்பாராத நிகழ்வுகள் ஏற்பட கூடும் என்ற எச்சரிக்கை உணர்வால், சேமிப்பின் அளவும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஜூன் 2020 காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 21 சதவீதம் சேமிப்புக்காக இருந்துள்ளது. இது கடந்த 2019ம் ஆண்டின் ஜூன் காலாண்டில் 8 சதவீதமாக இருந்துள்ளது. நம்மில் பெரும்பாலோருக்கு சேமிப்புக்கும், முதலீடுக்குமான வேறுபாடு தெரியவில்லை என்றாலும் பாரம்பரியமாக சேமிப்பது நமது அடிப்படை கடமையாக உள்ளது.
சேமிக்கிறேன் என காப்பீடு திட்டங்களை தேர்ந்தெடுப்பது, குழந்தைகளின் பெயரில் காப்பீடு என தவறான அணுகுமுறையை நாம் செய்து வருகிறோம். அப்படி இருந்தாலும், காப்பீடு தனிநபர் மற்றும் குடும்பத்தினருக்கு அவசியமான ஒன்று. தனிநபர் ஒருவரின் வருவாயை சார்ந்திருக்கும் குடும்பம், அந்த குறிப்பிட்ட நபருக்கான காப்பீட்டை உறுதி செய்து கொள்வது அவசியம். எதிர்பாராத சூழ்நிலையில் அந்த தனிநபர் ஏதேனும் ஒரு நிகழ்வால் இறந்து விட்டால், அதனால் பொருளாதார ரீதியாக சிரமப்படும் குடும்பத்தினருக்கு காப்பீட்டின் மூலம் கிடைக்கப்பெறும் தொகை உதவும்.
சேமிப்பது ஒரு நாட்டிற்கு எந்தளவு நன்மை அளிக்குமோ, அது போன்று காப்பீடும் ஒரு நாட்டிற்கான முழுமையான பாதுகாப்பு எனலாம். தனிநபர் காப்பீட்டின் மூலம் தன்னை சார்ந்து வாழும் குடும்பத்தினருக்கு மட்டுமில்லாமல், அது நாட்டிற்கான கடமையாகவும் பார்க்கப்படுகிறது. இதன் மூலம் அரசுக்கு ஏற்படும் நிதி சுமை குறையும். குடும்பமும் பொருளாதார தன்னிறைவை நோக்கி நகரும்.
நாகரீக மாற்றத்தினால், இயற்கை வளங்கள் அழிந்து வரும் நிலையில் மனிதனுக்கு உள்ள ஒரே பாதுகாப்பான பலம் நிதி சார்ந்த தன்மைகள் மட்டுமே. வெறுமென வேலை மற்றும் அதனை சார்ந்த சம்பளம் என்று இல்லாமல், வருவாயில் சேமிப்பு மற்றும் எதிர்பாராத நிகழ்வை சரி செய்யும் காப்பீடு போன்ற நடவடிக்கையை மேற்கொள்வது அவசியமான ஒன்று. காப்பீட்டின் மூலம் ஒரு நாடு தன்னிறைவை அடைவதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. இதன் மூலம் கிடைக்கப்பெறும் பயன்கள் சில,
- போதுமான சேமிப்பு
- சேமிப்பின் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துதல்
- தனிநபர் மற்றும் வணிகங்களுக்கான பாதுகாப்பு
- அவசர காலம் மற்றும் மருத்துவம் சார்ந்த தேவையை நிறைவு செய்தல்
- நீண்ட கால நிதி ஆதாரங்களை உருவாக்குதல்
- தொழிற்துறைக்கு சாதகமான அம்சம்
- அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்குதல்
- காப்பீட்டின் மூலம் ரிஸ்க் தன்மையை பரவலாக்குதல் அல்லது குறைத்தல்
- வரி செலுத்துதல் மற்றும் வரி சேமிப்பு மூலம் அரசாங்கத்திற்கு தேவையான பணப்புழக்கத்தை ஏற்படுத்துதல்.
சொல்லப்பட்ட விஷயங்கள் அனைத்தும் குடிமக்கள் மற்றும் அதனை சார்ந்த அரசுக்கும் நிதி சுதந்திரத்தை அளிக்கும்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை