இன்சூரன்ஸ் பிரீமியத்தை கட்டுவதற்கு சிரமப்படுகிறீர்களா, இது உங்களுக்கான மாத்தி யோசி வழி !
Smart way to pay your annual premium – Financial Burden
நம்மில் பலருக்கு மாதச்சம்பளம் சரியான தேதியில் வந்து கொண்டிருந்தாலும், மாத நடுவில் இரண்டாம் சம்பளம் தேவைப்படுகிறது என்ற நிலைமை ஏற்பட தான் செய்கிறது. குழந்தைகளுக்கு பள்ளிக்கட்டணம் செலுத்தி விட வேண்டும் என நாம் யோசித்தால், அந்த மாதம் தான் எதிர்பாராத செலவுகள் எகிறி கொண்டிருக்கும். மாதம் ஆரம்பித்தவுடன் 5ம் தேதி வாகன இ.எம்.ஐ.(EMI) கட்டணம், 10ம் தேதி வீட்டு கடன் தவணை, அதே பத்தாம் தேதி கைபேசிக்கு போஸ்ட் பெய்டு கட்டணம், 15ம் தேதி மாத காப்பீடு பிரீமியம்(Insurance Premium). இதற்கு நடுவில் பால், கேபிள் டிவி, மின் கட்டணம், பலசரக்கு கடைக்கு, கிரெடிட் கார்டு, ஆன்லைன் ஷாப்பிங். அப்பப்பா, என்ன ஒரு மாதாந்திர செலவுகள் !
நடுத்தர குடும்பத்திற்கு மட்டுமே என இல்லாமல் ஏழை முதல் பணக்காரர்கள் வரை மாத செலவு பட்ஜெட் போடுவதற்கு என தனி வருமானம் வேண்டுமென எல்லோரையும் நினைக்க வைக்கிறது. சரிவிகித பட்ஜெட் திட்டமிடலை நாம் பராமரிக்காமல் விட்டால் வரவுக்கு மேல் கடன் வாங்க நேரிடும். கடன் அதிகமானால் கத்தி மேல் நடப்பது போல தினசரி வாழ்க்கை மாறி விடும். அப்புறம் எங்கே நாம் நிதி இலக்குகளை பற்றி திட்டமிடுவது, போதிய காப்பீட்டை பெறுவது.
முன்னொரு காலத்தில் இருந்த நமது பாரம்பரிய சேமிப்பு பழக்கவழக்கம் இன்று வழக்கொழிந்து எதற்கெடுத்தாலும் பொருட்களை வாங்கி குவிக்கும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். இது போன்ற நவீன வாழ்வியல் சூழ்நிலையில், நாம் திறம்பட பட்ஜெட் திட்டமிடலை செய்தால் மட்டுமே, நமக்கு அடுத்த சந்ததியினருக்கு ஏதாவது நன்மை செய்திட முடியும். இன்றைய காலத்தில் பெரும்பாலோனோரின் பிரச்சனை நிதி சார்ந்த இலக்குகள் மற்றும் தேவையான காப்பீட்டு தொகையை சரியான நேரத்தில் செலுத்த முடியாத நிலை தான்.
நிதி இலக்குகளுக்கு தேவையான மாத தொகையும், முறையான காப்பீட்டு தொகையையும் குறிப்பிட்ட தேதியில் செலுத்தாமல் விட்டால், பின்னால் அது சார்ந்து ஏற்படும் பிரச்சனை மிகப்பெரிய நிதி இழப்பை ஏற்படுத்தும். இவற்றில் முக்கியமானது காப்பீட்டு தொகையை உரிய நேரத்தில் செலுத்துவது. சரியான காப்பீடு எனும் போது டேர்ம் இன்சூரன்ஸ், மருத்துவ காப்பீடு, விபத்து காப்பீடு ஆகியவற்றை சொல்லலாம். இது போக வாகன காப்பீடு தனிநபர் சார்ந்தது.
நம்மில் பெரும்பாலோர் ஆண்டு காப்பீட்டை(Annual Premium) செலுத்த முடியாமல், அதனை மாதாந்திர தொகையாக மாற்றி கொள்கின்றனர். இருப்பினும், பலர் மாதாந்திர தொகையை சரியான நேரத்தில் செலுத்த முடியாமல் உள்ளனர். நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பலர் காப்பீட்டு பிரீமியம் அதிகமாக இருப்பதாக எண்ணி, போதிய காப்பீட்டு பாதுகாப்பை பெறாமல் உள்ளனர். நம் நாட்டை பொறுத்தவரை காப்பீட்டை முழுவதுமாக பெறாமல் இருப்பவர்களின்(Not Sufficient Coverage) எண்ணிக்கையும், காப்பீட்டில் உரிமை கோரப்படாத தொகையின் மதிப்பும்(Unclaimed amount) அதிகம் எனலாம். காலம் தவறிய பிரீமிய தொகை, அபராத கட்டணமாக மட்டுமில்லாமல், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் காப்பீடு தொகை உரிமை கோருவதை நிராகரிக்கும் நிலைக்கு தள்ளப்பட வேண்டியுள்ளது. எனவே சரியான வேளையில் அதற்கான தொகையை செலுத்தி விடுவது நல்லது. பொதுவாக மாதாந்திர காப்பீட்டு தொகையை காட்டிலும், ஆண்டு பிரீமியத்தில் சலுகை உண்டு. மேலும் அதனை எளிதாக செலுத்துவதற்கான யோசனையும் உள்ளது.
- முதலில் உங்களது மாதாந்திர காப்பீட்டு தொகையை, ஆண்டு பிரிமியமாக மாற்றி கொள்ளுங்கள். (உங்களுக்கு மாதாந்திர தொகை செலுத்துவது சிரமமாக இருந்தால்)
- ஆண்டு பிரீமியமாக செலுத்தும் போது, கட்டணத்தில் சிறிய அளவில் சலுகை பெற வாய்ப்புண்டு. ( ஏற்கனவே ஆண்டு பிரிமியம் செலுத்துபவர்களுக்கும் இது உதவும்)
- ஒரு வருடத்திற்கு செலுத்த வேண்டிய காப்பீட்டு பிரீமியத்தை கணக்கிட்டு கொள்ளுங்கள். பின்பு அதனை 12 மாதங்களாக கணக்கில் எடுத்து கொள்ளுங்கள். சொல்லப்பட்ட 12 மாத தொகையை, மியூச்சுவல் பண்டில் கிடைக்கப்பெறும் குறைந்த ரிஸ்க் கொண்ட திட்டத்தில்(Monthly SIP – Liquid or Debt Funds) மாத எஸ்.ஐ.பி. முறையில் முதலீடு செய்யுங்கள்.
- உங்களது பிரீமியம் செலுத்தும் காலம் வருவதற்கு ஒரு வாரம் முன்னர், மியூச்சுவல் பண்டு திட்டத்தில் உள்ள தொகையை எடுத்து அதற்கான பிரீமியத்தை செலுத்துங்கள். பிரீமிய தேதியை மறந்து விடலாம் என நினைப்பவர்கள், செலுத்த வேண்டிய தொகையை வங்கிக்கணக்கில் போட்டு விட்டு, இன்சூரன்ஸ் திட்டத்தில் தானியங்கி(Auto Debit – ECS) முறையை தேர்ந்தெடுக்கலாம்.
- அஞ்சலக மற்றும் வங்கி ஆர்.டி.(Recurring Deposit) திட்டங்களை இதற்கு பயன்படுத்தலாம். எனினும் மியூச்சுவல் பண்டுகளில் ஆர்.டி. ஐ போன்று முதிர்வு காலம் என்ற வரம்பும், அபராதமும் கிடையாது. எனவே, நீங்கள் எப்போது வேண்டுமானாலும் முதலீடு செய்து பின்னர் உங்களுக்கு தேவையான ஆண்டு பிரிமியத்துக்கு எடுத்து கொள்ளலாம்.
- ஒரு வருட டேர்ம் பிளான்(Term Plan), மருத்துவ காப்பீடு(Health Insurance), விபத்து காப்பீடு(Accident Policy) மற்றும் வாகன காப்பீடு போன்றவற்றை செலுத்த சிரமப்படுபவர்கள் இது போன்ற மாதாந்திர எஸ்.ஐ.பி. முறையை தேர்ந்தெடுத்து தங்கள் தேவைக்கேற்ப அதனை மாற்றி கொள்ளலாம்.
இதனை ஒரு உதாரணம் மூலம் நாம் பார்க்கலாம். ராஜன் தனது குடும்பத்தை நிதி சார்ந்த இழப்புகளிலிருந்து பாதுகாக்க 1 கோடி ரூபாய்க்கு டேர்ம் இன்சூரன்ஸ் (பிரீமிய தொகை – ஆண்டுக்கு ரூ.12,500), 5 லட்ச ரூபாய்க்கு மருத்துவ காப்பீடு (பிரிமியம் ஆண்டுக்கு – ரூ. 15,400) மற்றும் விபத்து காப்பீடு ரூ.40 லட்சத்திற்கு (பிரீமியம் ஆண்டுக்கு ரூ. 9,600) எடுத்துள்ளார். இவற்றில் டேர்ம் இன்சூரன்ஸ் மற்றும் மருத்துவ காப்பீட்டுக்கான பிரீமிய தொகை ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதத்தின் வெவ்வேறு தேதிகளில் வருகிறது. விபத்து காப்பீட்டுக்கான பிரீமியத்தை அவர் ஒவ்வொரு ஆண்டின் டிசம்பர் மாதத்தில் செலுத்தி வருகிறார்.
ராஜனுக்கு ஒவ்வொரு ஆண்டின் ஜூன் மாதத்தில் மட்டும் காப்பீடு கட்டணத்திற்காக செலுத்த வேண்டிய தொகை ரூ.28,000. டேர்ம் காப்பீடுக்கான பிரீமியம் பொதுவாக மாறாது, எனினும் மருத்துவ காப்பீடுக்கான பிரீமியம் வயது அதிகரிக்கும் நிலையில் அதற்கான பிரீமியமும் அதிகமாக செல்லும். ராஜனின் மாத வருவாய் ரூ.50,000 ஆக இருக்கும் நிலையில், ஜூன் மாதத்தில் வேறு ஏதேனும் எதிர்பாராத செலவுகள் ஏற்படுமாயின், அவர் சிரமப்பட நேரிடும். இதனை தவிர்க்கும் பொருட்டு, அவர் மியூச்சுவல் பண்டு திட்டத்தில்(Mutual Funds) மாத எஸ்.ஐ.பி. முறையில் ரூ.2500 ஐ முதலீடு செய்து வருகிறார். இதனை கொண்டு ஜூன் மாதத்திற்கான டேர்ம் மற்றும் மருத்துவ காப்பீடு பிரீமியத்தை செலுத்தி விடுவார். இது போக மற்றொரு திட்டத்தினை(Low Risk Debt or Liquid Funds) துவங்கி மாதம் ரூ.1500 ஐ எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்து வருகிறார். இந்த திட்டத்தில் கிடைக்கப்பெறும் தொகையை கொண்டு விபத்து காப்பீட்டு பிரீமியம் மற்றும் தனது மகளின் பிறந்தநாள் செலவுகளை சமாளித்து விடுகிறார்.
மாதாந்திர எஸ்.ஐ.பி. முறையில் 12 மாதங்களுக்கு ரூ. 2500 ஐ முதலீடு செய்யும் நிலையில், எதிர்பார்க்கும் வட்டி விகிதம் 7 சதவீதம் எனும் போது, ஒரு வருடத்தின் முடிவில் கிடைக்கப்பெறும் தொகை ரூ.31,150. நாம் காப்பீடுக்கு கட்ட வேண்டிய தொகையோ ரூ.28,000. மீதத்தொகையை மற்ற செலவுகளுக்கு வேண்டுமானால் பயன்படுத்தி கொள்ளலாம்.
மாதாமாதம் ரூ.1500 ஐ எஸ்.ஐ.பி. முறையில் முதலீடு செய்தால், ஒரு வருடத்திற்கு பிறகு(எதிர்பார்க்கும் வட்டி – 7 %) 18,700 ரூபாயை பெறலாம். ஆண்டு பிரீமிய தேவைகளுக்கு எஸ்.ஐ.பி. முறையில் முதலீடு செய்யும் போது, பாலிசி காலம் முடியும் வரை முதலீட்டை தொடரும் படி வைத்து கொள்ளுங்கள். மற்ற எதிர்பாராத செலவுகளுக்கும் இந்த மாத்தி யோசி முறை பயன்தரும். மியூச்சுவல் பண்டு திட்டத்தில் ஒரு முறை மட்டும் முதலீடு செய்பவர்கள்(Lumpsum Invest in Debt Funds) அல்லது வங்கி ஒரு வருட டெபாசிட் திட்டத்தில்(Fixed Deposit) சேமிப்பவர்கள், அவற்றிலிருந்து கிடைக்கபெறும் ஆண்டு வட்டி வருவாய் உடனடியாக தேவைப்படாத நிலையில், அதனை கொண்டு உங்களது ஆண்டு பிரீமியத்தை செலுத்தி கொள்வது கூடுதல் சிறப்பம்சமாக இருக்கும்.
இந்த மாத்தி யோசி திட்டம் வெறும் காப்பீட்டுக்கு மட்டுமல்ல. உங்கள் குழந்தை பிறந்தநாள் செலவுகள், திருவிழா காலங்கள், ஆண்டு கல்வி கட்டணம் என எந்தவொரு இலக்கிற்கும் பயன்படுத்தி கொள்ளலாம். இதன் மூலம் எதிர்பாராத நிதி சிக்கல்களை சமாளிக்கலாம்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை