ஐ.டி.சி. நிறுவன காலாண்டு லாபம் – ரூ.3,368 கோடி
ITC reported a Net Profit of Rs.3,368 Crore – Q2FY21
இந்திய பன்னாட்டு நிறுவனமான ஐ.டி.சி. துவங்கப்பட்டு நூறு வருடங்களுக்கு மேலாகிறது. ஆரம்ப நிலையில் புகையிலை சார்ந்த நிறுவனமாக சொல்லப்பட்டாலும், இன்று எப்.எம்.சி.ஜி.(FMCG) என அழைக்கப்படும் நுகர்வோர் பொருட்கள் துறையில் முக்கிய நிறுவனமாக பங்கு வகிக்கிறது. பில்லியன் டாலர் வருவாயை கொண்ட இந்நிறுவனம் நுகர்வோர் பொருட்கள், புகையிலை, விடுதிகள், ஆடைகள், பேப்பர் மற்றும் பேக்கேஜிங், விவசாயம் மற்றும் தொழில்நுட்ப பிரிவில் தொழில் செய்து வருகிறது.
ஐ.டி.சி. நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 2.14 லட்சம் கோடி. இதன் புத்தக மதிப்பு 53 ரூபாய். கடனில்லா நிறுவனமாக வலம் வரும் இந்நிறுவனத்தின் வட்டி பாதுகாப்பு விகிதம்(ICR) 330 மடங்குகளில் உள்ளது. நிறுவனர்கள் சார்பில் பங்குகள் நேரடியாக இல்லையென்றாலும், எல்.ஐ.சி. காப்பீடு நிறுவனத்திடம் 16 சதவீத பங்குகளும், இந்திய யூனிட் டிரஸ்ட் கட்டுப்பாட்டில் 8 சதவீத பங்குகளும் உள்ளது. அந்நிய முதலீட்டாளர்களிடம் சுமார் 13 சதவீத பங்குகளும், பொதுவெளியில்(Public holding) உள்ள பங்குகளில் பிரிட்டிஷ் அமெரிக்க புகையிலை நிறுவனங்கள் சுமார் 30 சதவீத பங்குகளை கொண்டுள்ளன.
செப்டம்பர் காலாண்டுக்கான(Quarterly results) முடிவுகள் நேற்று(06-11-2020) வெளியிடப்பட்டது. நிறுவனத்தின் வருவாய் ரூ.13,148 கோடியாகவும், செலவினம் 8,747 கோடி ரூபாயாகவும் உள்ளது. இயக்க லாப விகிதம்(Operating Profit Margin) கடந்த ஆண்டை காட்டிலும் தற்போது குறைந்துள்ளது. இருப்பினும் பேப்பர், எழுது பொருட்கள் மற்றும் விடுதி மூலம் குறிப்பிடத்தக்க விற்பனை இல்லாமல் நிறுவனத்தின் வருவாய் அதிகரித்து இருப்பது கவனிக்கத்தக்கது. இதர வருமானமாக ரூ.582 கோடி சொல்லப்பட்டுள்ளது.
வரிக்கு முந்தைய லாபம் ரூ.4,565 கோடியாகவும், சொல்லப்பட்ட காலாண்டில் நிகர லாபமாக ரூ.3,368 கோடியை நிறுவனம் ஈட்டியுள்ளது. 2019-20ம் நிதியாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.49,388 கோடியாகவும், நிகர லாபம் ரூ.15,306 கோடியாகவும் இருந்தது. நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு ரூ.64,044 கோடி என சொல்லப்பட்டுள்ளது.
நிறுவனத்திற்கான பணவரத்து(Cash Flow) நன்றாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த பங்கின் விலை கடந்த ஒரு வருடத்தில் 33 சதவீதம் இறக்கம் கண்டுள்ளது. அடிப்படை பகுப்பாய்வை பூர்த்தி செய்யும் இந்நிறுவனம் பங்கு ஒன்றுக்கு ரூ.160க்கு குறைவாக வர்த்தகமாகும் நிலையில், முதலீட்டாளர்களுக்கு ஒரு அரிய முதலீட்டு வாய்ப்பாக அமையும்.
கவனிக்க: முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கும் முன் தகுந்த நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் முன்னிலையில் தங்களது முதலீட்டு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலே சொன்ன தகவல்கள் பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வுக்கான கற்றல் மட்டுமே.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை